“பேசத்தொடங்கும்போது அணைந்து போகும் பீடி நெருப்புப் போல தூக்கமற்ற இரவுகளில், வார்த்தைகளின் பின்னால் புதைந்து கிடக்கும் வலி அணைந்து போவதில்லை. பரிதாபத்தையோ மகிழ்ச்சியையும் துக்கத்தையும் பகிர்ந்துகொள்வதையோ கண்டுகொள்ளாமல் சிறை இருட்டாக, அன்புக்கு இடமின்றி இருக்கிறது…”
– வரவர ராவ் எழுதிய இவ்வரிகளில் கசியும் துயரத்தில் கரைந்தபடி எண்ணற்ற அப்பாவிகள் இந்த நாட்டின் 1,400 சிறைகளில் அடைபட்டுக் கிடக்கிறார்கள். அவர்கள் இழைத்த குற்றம், அவரே அடுத்த வரியில் கேட்பதுபோல “சிறைக்கு வெளியிலும்தான் தனக்கு அறிவையும் ஞானத்தையும் தரக்கூடிய மனிதர்களுக்கு இந்தச் சமூக அமைப்பு என்னத்தைக் கொடுத்துவிடுகிறது?” என்கிற கேள்வியை எழுப்பியதுதான்.
தனது கருத்துக்காகவோ செயல்பாட்டுக்காகவோ ஒருவர் கைது செய்யப்படுவது உலகெங்கும் இருந்துவரும் ஒடுக்குமுறைதான். இந்தியாவிற்கும் இது புதிதல்ல. நாட்டையே திறந்தவெளிச் சிறைச் சாலையாக்கிய காலனியாட்சி, சிறைச்சாலை என்கிற அதிகாரப்பூர்வமான சித்திரவதைக் கூடங்களை நாடெங்கும் நிறுவியது. விடுதலைக்காகப் போராடியவர்களை அரசியல் எதிரிகளாகக் கருதி அவர்களைச் சிக்கவைப்பதற்கென்றே காலனியாட்சி சதிவழக்குகளைப் புனைந்தது.
நாட்டின் விடுதலைக்குப் பிறகு மூடப்பட்டிருக்க வேண்டிய இந்தச் சித்திரவதைக் கூடங்கள் முன்னிலும் அதிகமாக இந்திய ஆட்சியாளர்களுக்குத் தேவைப்பட்டன என்கிற உண்மை, நாம் அடைந்த விடுதலை முழுமையானதல்ல என்கிற மற்றோர் உண்மையை உணர்த்தியது. அரசியல் விடுதலையுடன் திருப்தியடைந்தவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ள, சமூக விடுதலையும் பொருளாதார விடுதலையும் ஊடிழைந்த விடுதலையை வாழ்விலக்காய் நம்பியவர்களோ எதிர் முகாமாகி தமது போராட்டத்தைத் தொடர்கிறார்கள். இவர்களை ஒடுக்கக் காலனியாட்சியின் ஆள்தூக்கிச் சட்டங்களும் அந்தகாரச் சிறைகளும் ஆட்சியாளர்களுக்குத் தேவையாயிருக்கின்றன. ஆனாலும், ஒடுக்குமுறைக்கு அஞ்சாமல் தொடரும் போராட்டங்களின் அழுத்தத்தால் ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ நோக்கி இந்நாடு எடுத்துவைத்த ஒவ்வோரடியையும் ஆழ்ந்த வெறுப்புடன் பின்னிழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுவந்த எதிர்மறைச் சக்திகள் ‘இந்துத்துவா’ என்கிற கருத்தாக்கத்தின் கீழ்த் திரண்டனர். சமூகத்தை மேல் கீழாக, தீட்டு, புனிதமாகக் கட்டமைத்து அதன் உச்சியில் பார்ப்பனர்களை இருத்தி அவர்களுக்குக் கீழே பன்மப்படிநிலைப் பாகுபாட்டுடன் மற்றவர்கள் ஒடுங்கியும் ஒடுக்கியும் வர்ணாஸ்ரம விதிகளுக்குத் திரும்பி வாழ்வதே சிறந்தது என்கிற பார்ப்பனீயமே இந்துத்துவா என்னும் திரைக்குள் ஒளிந்திருக்கிறது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then