புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த கவிஞர் மாலதி மைத்ரி தமிழின் தனித்துவம் மிக்கக் கவிஞர். ஆண் மைய அதிகாரத் தளங்களையும் இந்தியச் சாதிய வைதீகக் கட்டமைப்பையும் போர்க்குணத்துடன் ஊடறுக்கும் கோட்பாட்டாளர், கவிஞர், களச் செயல்பாட்டாளர் எனப் பன்முக ஆளுமை கொண்டவர்.
இவரது கவிதைகள் பெண்ணின் விடுதலையை மானுட விடுதலையின் நெறியாக முன்னெடுப்பவை. விளிம்பு நிலை இருப்புகளின் அடையாளங்களை வாழ்வியலைக் கவித்துவத்துடனும் உள்ளார்ந்த போராட்ட உணர்வோடும் வெளிப்படுத்துபவை. சமூகப் பண்பாட்டுப் புனைவுகளிலிருந்து விடுவித்துப் பெண்ணுடலை அதன் பிரபஞ்சத்தன்மையுடன் படைப்பூக்க விடுதலையுடன் மறுவார்ப்பு செய்பவை.
‘சங்கராபரணி’ இவரின் முதல் கவிதை நூல். இதைத் தொடர்ந்து ‘நீரின்றி அமையாது உலகு’, ‘நீலி’, ‘எனது மதுக்குடுவை’, ‘முள்கம்பிகளால் கூடு பின்னும் பறவை’, ‘கடல் ஒரு நீலச்சொல்’ ஆகிய கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன. மேலும் ‘விடுதலையை எழுதுதல்’, ‘நம் தந்தையரைக் கொல்வதெப்படி’, ‘வெட்டவெளிச் சிறை’, ‘மர்லின் மன்றோக்கள்’ ஆகிய முக்கியமான விமர்சன நூல்களையும் ‘பறத்தல் அதன் சுதந்திரம்’, ‘அணங்கு’ ஆகிய தொகுப்பு நூல்களையும் கொண்டுவந்துள்ளார். இதுவரை வெளிவந்த மொத்தக் கவிதை நூல்களையும் ‘பேய் மொழி’ என்னும் தலைப்பில் முழுத் தொகுப்பாக எதிர் வெளியிட்டுள்ளது. சிறந்த கவிதைத் தொகுப்பிற்கான திருப்பூர் தமிழ்ச் சங்க விருதும், புதுவை அரசின் கம்பன் புகழ் விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன. அணங்கு பெண்ணிய இதழ் மற்றும் அணங்கு பெண்ணியப் பதிப்பக உரிமையாளரான மாலதி மைத்ரி பெண் மொழி, உடலரசியல், சனாதன சாதிய ஒழிப்புடன் கூடிய விடுதலைப் பெண்ணியம் எனப் பல கருத்துநிலைகளின் முன்னோடிக் கோட்பாட்டாளர். தற்போது டெல்லியில் வசிக்கிறார்.
உங்களது இளம்பருவம் குடும்பச் சூழல் குறித்துச் சொல்லுங்கள்…
கல்வியறிவு, இலக்கியம், அரசியல், பொருளாதாரப் பின்புலம் இல்லாத, மிகவும் பின்தங்கிய மீனவக் குடும்பம் எங்களுடையது. முதல் வகுப்பில் அட்டை வாங்கக் காலணா இல்லாமல் அம்மா பள்ளிக்குப் போகல. வகுப்பில் எப்போதும் முதல் மாணவராக இருந்த அப்பா ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்த முதல்நாளே சக மாணவர்களின் சாதியக் கிண்டலைப் பொறுக்க முடியாமல் படிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு மீன்பிடித்துப் பிழைக்க வந்துட்டார். பிறகு இருபது வயதில் புதுவைக் காவல்துறையில் காவலராகச் சேர்ந்தார். அம்மா, அப்பா குடும்பங்களில் பாரம்பரியப் பச்சிலை வைத்தியம் செய்வது வழக்கம். கக்குவான் போன்ற குழந்தை நோய்களுக்கு அம்மா வீட்டிலும், நாய், பூனை, எலிக்கடிகளுக்கு அப்பா வீட்டிலும் மருந்து கொடுத்து வைத்தியம் செய்வார்கள். கட்டிகளுக்குப் புடம் வைத்தியமும் செய்வாங்க. சுற்றுப் பகுதி கிராமங்களிலிருந்து வைத்தியத்துக்கு ஆளுங்க வருவாங்க. ஊசியில் நூல்கோக்க முடியாமப் போனப்பத்தான் ஆயா வைத்தியம் செய்வதை நிறுத்தினாங்க. அப்ப அவுங்க தொண்ணூறு வயதைத் தொட்டிருந்தாங்க. அம்மா வீடு மஞ்சக்குப்பம் என்பதால் கடலூரில் பிறந்தேன். ஆனால் எனது பிறப்புப் பதிவு அப்பா ஊரான வில்லியனூரில்தான் இருக்கு. வீட்டுக்கு முதல் பிள்ளை, எனக்கு அடுத்து ஆறு பிள்ளைகள். நான்கு தம்பிகள் இரண்டு தங்கைகள். மூன்றாவது தம்பி அறிவா சுட்டியா பேசிச் சிரிக்க வைத்து எல்லோரையும் வசியப்படுத்தி வைத்திருந்தான். மூன்று வயதில் நிமோனியாவில் என் மடியில்தான் உயிர் விட்டான். அப்ப எனக்கு எட்டு வயசு. ஏற்கெனவே கடும் மன அழுத்தத்தில் இருந்த எங்கம்மா தீவிர மனப்பிறழ்வுக்கு ஆளானாங்க. சமையல், வீட்டு வேலைகள், தம்பி தங்கைகள் கல்வி அம்மாவின் சிகிச்சை, நல்லது பொல்லாதது எல்லாத்தையும் பத்து வயதிலேயே குருவித் தலையில் பாறாங்கல்லா எங்கப்பா என் தலையில் ஏத்திட்டார். பதினொன்றாவது காலாண்டு கணக்குத் தேர்வன்று எங்கள் குடிசை வீடு தீ விபத்தில் முற்றிலும் எரிந்து நாசமானது. அத்துடன் என் பள்ளி வாழ்க்கை முடிந்து போனது.’’
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then