சமீபத்தில் நடந்த வரைகோடுகள் ஓவியக் கண்காட்சி வெளியிட்ட காணொலியில் ஓவியர் நடராஜ், கலையின் முக்கியமான பணி ஒடுக்கப்பட்டவர்கள் பின்னால் நிற்பது என்று குறிப்பிடுகிறார். இதுவொரு முக்கியமான கருத்து. எந்தவொரு மனிதனைப் போல கலைஞனுக்கும் தான் வாழும் சமூகத்திடம் கடப்பாடு இருக்கிறது. ஆனால், அதேநேரம் கலைஞன் என்ற அடையாளமும் ஒடுக்கப்பட்டவர் என்ற அடையாளமும் ஒரே நபரிடம் இருந்தாலும் கூட, அவை ஒரே நபருக்குள்ளும் தனித்தனியாகவும் இருக்கின்றன. அதனால்தான் கலைஞன் மக்களின் ‘பின்னால்’ நிற்க வேண்டியுள்ளது. இந்த இருமை நிலையைக் கடப்பது பல ஓவியர்களுக்குச் சாத்தியமாகியிருக்கிறது. நடராஜின் ஓவியங்களிலேயே அது நிகழ்வதைக் காணலாம். ஞானமடைந்த புத்தரிடம் ஞானத்திற்கான சாட்சி கேட்கப்படும்போது, அவர் விரலைப் பூமி நோக்கி நீட்டிப் பூமியைச் சாட்சியாக்குகிறார். அவ்வாறு நம்மைச் சுற்றியுள்ள முழு உலகையும் தேர்ந்துகொள்ளும் மீளுருவாக்கும் கலைஞர்களால் இதை எளிதாகக் கடந்துவிட முடிகிறது.
ஆனால், பல ஓவியர்களிடம் அது நிகழ்வதில்லை. அவர்கள் மிகச் சிறப்பான ஓவியர்களாக இருந்தாலும்கூட. அவர்கள் உழைப்பையோ, சுரண்டலையோ காட்சிப்படுத்தும்போது வெளிப்படும் புரிந்துணர்வோ, கோபமோ சுரண்டப்படும் அடையாளத்தை வெளியில் இருந்து புரிந்துகொள்வதாக இருக்கலாம். இல்யா ரெபினின் ஓவியங்கள் அத்தகையவை. ரெபின் மரபார்ந்த பயிற்சி பெற்ற, மனிதர்களின் உயர்வை வரையப் பயின்ற ஓவியன். மனிதர்களின் பிரமாண்டம் அலங்காரங்களிலும் அதிகாரங்களிலும் காணப்படுவதை வரைந்து, அதிலிருந்து முகங்களுக்கு நகர்ந்தவர் என்று சொல்லலாம்.
1844இல் முதலாம் நிக்கோலஸ் மன்னனுடைய படையில் வேலை பார்த்த ஒருவருக்குப் பிறந்து 1929இல் ரஷியப் புரட்சிக்குப் பின் இறந்தவர் இல்யா ரெபின். தன் காலத்தின் மிகத் திறன்வாய்ந்த ஓவியர்களுள் ஒருவர். தாஸ்தாயெவ்ஸ்கி, டால்ஸ்தாய் என இருவரையும் வரைந்தவர். ஓவியங்களின் சமூகப் பொறுப்பு, நோக்கம் போன்றவை குறித்துத் தொடர்ந்து யோசித்தவர். ஒருவகையில் தன்னை நாட்டுப்புறத்தின் குரலாகக் கருதி, கலையுலகு மீதான அதன் விமர்சனங்களைக் கொண்டு வரைந்தவர் இல்யா ரெபின். இம்ப்ரஷனிஸ்டுகள் போன்று ஐரோப்பாவின் அக்காலத்திய பிற நவீன ஓவிய மரபுகளை அறிந்திருந்தாலும், இல்யா எதார்த்தவாதத்தையே பின்பற்ற விரும்பினார். பின்னர் சோஷலிச எதார்த்தவாதம் என்றறியப்பட்ட கலைப் படைப்புகளுக்கு ரெபினின் ஓவியங்களும் முன்னோடி.
எதார்த்தவாதம் என்பது பெரும்பாலும் வெறுமனே ‘இருப்பதை எழுதுவது / வரைவது’ என்பதாகச் சுருக்கப்படுகிறது. விமர்சன யதார்த்தவாதம் என்பதற்கும் ஒரு மரபு இருக்கிறதென்றாலும் அக்கால ஐரோப்பிய ஓவியக் கலையில் இது ரெபினிடம்தான் மிகத் தெளிவாக வெளிப்படுகிறது எனலாம். கிட்டத்தட்ட நாடகீயத்தை ஒட்டிய ஓவியங்கள் ரெபினுடையவை. மனித முகங்களை வரைவதில் ரெபின் மிகவும் திறமை வாய்ந்தவர். அதேநேரம் ரெபின் தன் ஓவியங்கள் வழியாக உழைப்புச் சுரண்டல், சமூக ஏற்றத்தாழ்வுகள், அதிகாரத்தின் அசிங்கங்களைக் காட்சிப்படுத்த முயன்றார். இதை வைத்துச் சில விசயங்களை யோசித்துப் பார்க்கலாம்.
ரெம்ப்ராண்ட்டின் (Rembrandt Harmensz van Rijn) ‘ஊதாரி மகனின் மறுவருகை’ (Return of the Prodigal Son) எனும் பைபிள் கதை ஓவியத்தையும், ரெபினின் ‘அவனை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை’ (They Did Not Expect Him) ஓவியத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ரெம்ப்ராண்டின் ஓவியம் மிகுந்த அமைதி நிறைந்தது. கருணை, மன்னிப்புக் குறித்து யோசிக்கத் தூண்டுவது. என்றாலும் இப்போது திருப்பி நோக்கும்போது, எது கருணை, எது மன்னிப்பு, செல்வத்துக்குத் திரும்புதல் என்பதையெல்லாமும் யோசிக்கத் தூண்டுவது. லேசான பொன் பளபளப்பும் இருளும் நிறைந்தது. நேரெதிராக ரெபினின் ஓவியம் ஒளி நிறைந்த பகல்பொழுதில் நிகழ்கிறது. சைபீரியாவுக்கு அரசியல் காரணங்களால் நாடு கடத்தப்பட்ட போராளி மகன் வீட்டுக்குத் திரும்புகிறான், சமையல்காரர்களும் செல்வமும் இருக்கும் தன் வீட்டுக்கு. வீட்டில் அவன் பொருந்தாதவனாய் நிற்கிறான். அவன் இல்லாமலேயே வாழ்க்கையைக் கடந்து போயிருக்கும் குடும்பத்தினரும் வேலைக்காரர்களும் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர்.
Illustration : Rembrandt Harmensz
ரெபினின் ‘குர்ஸ்க் மாவட்டத்தில் ஈஸ்டர் ஊர்வலம்’ (Religious Procession in Kursk Governorate) ஓவியம் எனக்கு மிகப்பிடித்த ஒன்று. சமூக விமர்சனமாக யதார்த்தவாத முறையில் வரையப்பட்ட இந்த ஓவியத்தின் கற்பனை ஒரு கதை சொல்லலையும், ஒரு தத்துவக் கேள்வியையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. இந்த ஓவியத்தைப் பற்றி ரெபின் “எனது யோசனைகளுக்கு உண்மையான வடிவம் கொடுக்க என் எளிய ஆற்றல் முழுதையும் பயன்படுத்துகிறேன். என்னைச் சுற்றியுள்ள வாழ்க்கை என்னைப் பெருமளவு தொந்தரவு செய்கிறது. எனக்கு நிம்மதி அளிப்பதைக் கான்வாசில் காட்சிப்படுத்தப்பட வேண்டுமெனக் கெஞ்சுகிறதுஞ்” என்றிருக்கிறார். ஓவியத்தில் மேரி சொரூபத்தைச் சுமந்தபடி நம்மை நோக்கி வரும், நம்மைக் கடந்துசெல்லும் பெரும் கூட்டத்தில் செயல்படும் ஏற்றத்தாழ்வுகளை நாம் பார்க்கும்படி அமைத்திருக்கிறார் ரெபின். முகங்களையும் உணர்வுகளையும் காட்சிப்படுத்துவதில் ரெபின் அபார திறமைசாலி. முந்தைய ஓவியத்தில் சிறிய அறைக்குள் செயல்படும் இதே திறன், பெரிய கூட்டத்தைக் காட்சிப்படுத்தும்போதும் தெரிகிறது. அவர்கள் சோர்ந்திருக்கிறார்கள், அதிகார வெறியுடன் இருக்கிறார்கள்.
அதேநேரம் இத்தனை ஒடுக்குமுறைகளைச் சுமந்தபடி நாம் ஏன் மாதா சொரூபத்தையும் சுமக்கிறோம் என்ற கேள்வியும் வருகிறது. ரெபின் இதில் சமூக ஏற்றத்தாழ்வுகளைக் காட்சிப்படுத்தும் அதேவேளை, அத்தனை மனிதர்களின் ஆன்மாவைத் தட்டையாக்கிவிடாமல் அவர்களை உணர்வுகளோடு காட்சிப்படுத்தியிருப்பதில் நமது சொந்த மத, ஆன்மீக உணர்வுகளைக் குறித்து யோசிக்கவும் உதவுகிறது இந்த ஓவியம்.
‘வோல்கா நதிக்கரையில் படகிழுப்பவர்கள்’ (Barge Haulers on the Volga) ஓவியம் தாஸ்தாயெவ்ஸ்கி உள்ளிட்ட பலரால் புகழப்பட்ட, ரெபினின் ஓவிய வாழ்வைத் துவங்கிவைத்த ஓவியம். சில நிஜ மனிதர்களைக் கொண்டு வரையப்பட்ட இந்த ஓவியத்திலும், தன்னைச் சுற்றி இருக்கும் உலகின் கஷ்டங்கள் தன்னைத் தொந்தரவு செய்வதே ரெபினை வரையத் தூண்டுகிறது. தான் வரைவோர் மீது ரெபினுக்குச் சற்றே கற்பனாவாத பார்வை இருக்கிறது எனலாம். “அதில் முன்னாலிருக்கும், முன்னாள் பாதிரியான கானின் ஒரு புனிதரைப் போல் இருந்தார்” என்று ரெபின் குறிப்பிட்டிருக்கிறார். தாஸ்தாயெவ்ஸ்கி, இந்த ஓவியம் நாம் மக்களுக்கு எவ்வளவு கடன்பட்டிருக்கோம் என்று காட்டுவதாக, அவர்கள் வெறுமனே பாருங்கள் எங்கள் வலியை என்று கதறாமல் நேர்மையாகக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாகப் புகழ்கிறார். இதிலும் வெறுமனே தட்டையான உடலுழைப்பு மீதான பரிதாபம், புனிதத்தன்மை ஏற்றுதல் என்பதிலிருந்து முன்னகர்த்துவது அவர்களது முகங்களே. நேரடியாகப் பார்வையாளனை எதிர்கொள்ளும், பார்வையாளனை மதிப்பிடும் பார்வை ஒன்றே நடுவிலிருக்கிறது.
ரெபின் போன்ற ஓவியர் தன்னைச் சுற்றியுள்ள உலகை, உழைப்பை, ஏற்றத்தாழ்வை வரைய முற்படும்போது எழும் கேள்விகளும் ரசவாதங்களும் முக்கியமானவை. கலைஞன் என்ற அடையாளம் உலகிடம், சமூகத்திடம் இருந்து எப்படி விலகுகிறது என்பதை இதில் காணலாம். இதில் காணாத ஒருங்கிணைவையும் புரிந்துகொள்ளலாம்.