கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் மதுரை வன்கொடுமைத் தடுப்புச் சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகால போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி இது. பல்வேறு அரசியல் அழுத்தங்களைத் தாண்டியும் நீதித்துறை மீது எளிய மக்களுக்கிருக்கும் நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது இத்தீர்ப்பு. வழக்கம் போல் இவ்வெற்றியை முழுமையாக, சற்று ஆசுவாசத்தோடு கொண்டாட முடியாத அளவில் தலித் மக்களும் செயற்பாட்டாளர்களும் இருக்கின்றனர். அன்றாடம் நிகழக் கூடிய பிரச்சினைகளில் உழன்று தீர்ப்பதிலேயே நம் காலம் கரைகிறது. வேங்கைவயல் வன்செயலுக்கே இன்னும் தீர்வு கண்டபாடில்லை, அதற்குள் மேல்பாதி பிரச்சினை, மதுரை திருமோகூர் வன்முறை, உசிலம்பட்டி பொதுப் பாதை பிரச்சினை என அடுத்தடுத்து நீண்டுகொண்டே இருக்கிறது. இதனிடையே ஒரு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஆற்றிய உரையை வைத்துக்கொண்டு அடுத்த சர்ச்சையை உருவாக்கிவிட்டார்கள். இப்போது இதற்கும் முகங்கொடுத்தாக வேண்டும். இதுவும் நம் வெற்றி தொடர்பானதுதான் என்றாலும் வேறெந்தச் சமூகத்திற்கும் இல்லாத வகையில் பல்தரப்பு அழுத்தங்களையும் சுமந்துகொண்டு இணக்கமான வினையாற்றும் நெருக்கடியில் தலித் சமூகம் இருப்பதையும் பேசியாக வேண்டும்.
‘மாமன்னன்’ இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ் பேசும்போது, ‘தேவர் மகன்’ திரைப்படத்தின் இசக்கி கதாபாத்திரம்தான் மாமன்னன் என்றும், அத்திரைப்படம் உருவாக்கிய பாதிப்புகளில் விளைந்ததுதான் என் அரசியல் என்றும் பேசியிருந்தார். ‘மாமன்னன்’ விளம்பரத்திற்காகப் பல ஊடகங்களுக்கு அளித்த பேட்டியிலும் இக்கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இதுதான் சர்ச்சை ஆகியிருக்கிறது. முற்போக்குப் பேசும் எழுத்தாளர்கள், கலைஞர்கள் உட்பட பலரும் இதையொட்டித் தங்கள் கருத்துகளைக் கொட்டித் தீர்த்தனர். ‘தேவர் மகன்’ சாதிய படமல்ல என்றும், படத்தின் இரு பாடல்கள் மட்டுமே ஆட்சேபத்திற்குரியவை என்றும் பலவிதமான பொழிப்புரைகள். இன்னொரு பக்கம் சாதிய மனநிலையால் பாதிக்கப்பட்டவர்கள் மாரி செல்வராஜைக் ‘கேலி’யாக விமர்சிக்கும் வகையில் மீம்ஸ்கள் உருவாக்கிக்கொண்டிருக்கின்றனர். ஒடுக்கப்படுதல் என்பதை எந்தவகையிலும் உணர்ந்திராத இவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும். ஒருநாள் முதலமைச்சர் போல், ஒருநாள் தலித்தாக வாழ்ந்து பார்த்தால்தான் ஒடுக்கப்படுதல், ஒதுக்கப்படுதல், தவிர்க்கப்படுதல் என்பதை இவர்களால் உணர முடியும்.
‘தேவர் மகன்’ எந்த மாதிரியான படம் என்பது பிரச்சினை இல்லை. மாரி செல்வராஜ் குறிப்பிட்டதும் அதுவல்ல. ‘தேவர் மகன்’ போன்ற திரைப்படங்கள் உருவாக்கிய தாக்கங்களே இங்கு பிரச்சினை. சாதிய பெருமிதங்களை ஆதரிக்கும் இத்தகைய படங்கள் வட்டார அளவில் எத்தகைய உளவியலை உருவாக்கியிருக்கிறது என்பதுதான் பிரச்சினை. இடைநிலைச் சாதியினருக்கோ உயர்த்தப்பட்ட சாதியினருக்கோ ‘தேவர் மகன்’ போன்ற திரைப்படங்கள் எந்தப் பதற்றத்தையும் கொடுக்காது. அத்தகைய படங்களைப் பார்க்கும் பட்டியலினத்தவர் என்ன மனநிலைக்கு ஆளாவார் என்பதைத்தான் மாரி செல்வராஜ் பேசியிருந்தார். ‘பரியேறும் பெருமாள்’ படத்தைப் பாராட்டிய முற்போக்காளர்கள் ‘கர்ண’னை விமர்சித்ததற்கும் இதுவே காரணம். ‘கர்ணன்’ இடைநிலையினருக்குப் பதற்றத்தைத் தந்திருக்கிறது. தலித்துகள் திருப்பித் தாக்கிய வரலாறுகளையெல்லாம் மறைத்து, அவர்கள் மீது அதிகபட்சம் பரிதாபத்தை மட்டுமே விதைத்தவர்களால் கர்ணன் தலையறுத்ததை எதிர்கொள்ள முடியவில்லை. ‘அது வெறும் ஹீரோயிஸம்’ என்று ஒதுக்க முற்பட்டனர்.
முன்னதாக இயக்குநர் பா.இரஞ்சித் மீதும் இத்தகைய விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ‘கர்ண’னுக்கு முன்னோடியான ‘மெட்ராஸ்’ திரைப்படம் உருவாக்கிய தாக்கம் குறித்துப் பலர் விரிவாக எழுதியிருக்கின்றனர். அப்போதும் ‘தேவர் மகன்’ படத்துடன் ஒப்பிட்டு, இரு படங்களும் சாதி பற்றிப் பேசிவிட்டுக் கடைசியில் பிள்ளைகளைப் படிக்கச் சொல்கிறது. இரண்டுக்கும் என்ன வேறுபாடு என்ற ரீதியில் விமர்சனங்கள் எழுந்தன. இதுவும் சாதியத்தின் தன்மையை உணராத, உணர விருப்பமில்லாதவர்களின் கூற்றுதான். மேலிருந்து கீழே பார்க்கும் பார்வையே சரியென்று நம்பும் மனநிலை இது. சாதிக்குள்ளேயே திருமணம் செய்துகொண்டு ‘இப்பல்லாம் யார் சாதி பாக்குறா’ என்று பேசுவார்கள். சரி, கமலுக்காக நேசக்கரம் நீட்டும் முற்போக்காளர்கள், ‘மருதநாயகம்’ படத்தை ஏன் அவர் கைவிட்டார் என்பதைச் சொல்வார்களா? பொருளாதாரம் மட்டும்தான் காரணமா? மருதநாயகம் முகமது யூசுப் கானின் கதையை அறிந்தவர்களுக்குத் தெரியும், யாருக்குப் பயந்து கமல் படத்தைக் கைவிட்டாரென்று.
இவற்றையெல்லாம் வெறும் திரைப்படம் தொடர்பான பிரச்சினைகளாக மட்டும் பார்க்க முடியாது. தலித்துகள் பற்றிய சமூக அறியாமை என்ற பார்வையிலிருந்தே அணுக வேண்டும். ஏன் தலித்துகளின் வாழ்க்கையும் நியாயங்களும் இவ்வளவு தொந்தரவுகளை ஏற்படுத்த வேண்டும்? சமூக அங்கீகாரம் அல்லது அரசியல் அதிகாரம் நோக்கிய அவர்களது நகர்வு ஏன் அவர்களுக்குப் பதற்றத்தைக் கொடுக்க வேண்டும்? இவை கிளைக் கேள்விகள். நாம் ஏன் தலித்துகளாக்கப்பட்டோம்? ஏன் தீண்டாமைக்குள்ளாக்கப்பட்டோம்? நம்மிடம் இருந்த நிலங்கள் எங்கே? இவை மூல கேள்விகள். பண்டிதர் அயோத்திதாசரும் அண்ணல் அம்பேத்கரும் இக்கேள்விகளுக்கான பதில்களை நமக்குச் சொல்லிவிட்டனர். ஆனால், இன்றும் இக்கேள்விகள் இருந்துகொண்டிருக்கின்றன. ஏன்?
இங்கு இன்னொன்றையும் பேசியாக வேண்டும், தலித் ஒற்றுமை. பொதுவெளிக்குள் தலித்துகள் பற்றிய பிம்பம் உருவாகியிருப்பதற்கு நம் அமைதியும் ஒரு காரணம். அம்பேத்கரிய இயக்கங்களின் போராட்டங்களும் செயற்பாடுகளும் எண்ணற்றவை. அவற்றின் அறுவடையைப் பெரிய கட்சிகள் தமதாக்கிக்கொண்டன. அண்ணல் அம்பேத்கர் உருவாக்க நினைத்த இந்தியக் குடியரசுக் கட்சியோ, கன்ஷிராம் உருவாக்கிய பகுஜன் சமாஜ் கட்சியோ பெரிய அளவில் வளராமல் போனதற்கு நம் ஒற்றுமையின்மையும் காரணம். தமிழகத்திலும் தலித் கட்சிகளிடையே போதிய ஒற்றுமை இல்லை. தேசியக் கட்சிகள் வலிமையாக இருந்த காலகட்டத்தில் தலித் தலைவர்கள் தம் ஆளுமையை வெளிப்படுத்தி சில வாய்ப்புகளை உருவாக்கித் தந்தனர். தேசியக் கட்சிகள் வலுவிழந்திருக்கும் சமகாலத்தில், மாநிலக் கட்சிகளில் இருக்கும் தலித் ஆளுமைகள் ஒற்றுமையாகச் செயல்படுவது முக்கியம். நமக்குள்ளே பிளவுகளை ஏற்படுத்தி, அதில் அரசியல் செய்யும் தந்திரத்தைத்தான் இவ்வளவு காலமும் செய்துகொண்டிருக்கிறார்கள். தமிழக அளவில் மூன்று பெரும் பிரிவுகளாகவும் பல உட்பிரிவுகளாகவும் பிரிந்திருக்கும் தலித்துகள் ஒன்றிணைவதில்தான் நம் அரசியல் வெற்றி இருக்கிறது. இஸ்லாமியர்களும் கிறிஸ்தவ தலித்துகளும் இதில் அடக்கம். தலித்துகள் பிரச்சினைகளில் முக்கியக் கட்சிகளில் இருக்கும் தலித் தலைவர்கள் ஒன்றிணைந்து குரல் கொடுப்பது கூட இன்னும் சாத்தியமாகவில்லை. வேங்கைவயல் மாதிரியான வன்செயல்களில் அனைத்து கட்சிகளில் உள்ள தலித் தலைவர்களும் கூட்டாகக் குரல் கொடுத்து அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்க வேண்டும். நமக்கான தனித்துவத்தோடு இருப்பது தவறல்ல, ஆனால் சமூகப் பிரச்சினையின்போது கட்சி கடந்த ஒற்றுமையோடு செயற்படாததுதான் தவறு.
நம்மை யாரும் வந்து மீட்கப் போவதில்லை. இத்தனை காலமும் அப்படித்தான் காத்துக்கொண்டிருந்தோம். இனி நமக்காகப் புதுக் கட்சியையோ இயக்கத்தையோ தொடங்க வேண்டியதில்லை. இருக்கும் கட்சிகளில் இருந்துகொண்டே நமக்கான குரலை உரக்கச் சொன்னாலே போதும். பாதை இருக்கிறது, தேரும் இருக்கிறது. அனைவரும் ஒன்றிணைந்து இழுத்துச் செல்லும் ஒற்றுமையை உருவாக்குவோம்.