பாண்டவி படலம்
முந்தி பிறந்த
முதுநூல் தரித்த
சங்கெடுத்தவன்
சகலருக்கும் மூத்தவனென்றார்
நீரும் நெடுங்கடலும்
ஊரும் உலகும் தோன்றி
ஆல விருட்சத்தினடியில்
காராம்பசுவின்
காலைக் கட்டிக் கழுத்தையறுத்துத்
தோலை உரித்து
வாராக்கி
வடமாக்கி
வண்ணக் கயிறாக்கி
வாசிக்கப் பறையாக்கினான்
மதயானை மீதேறி
மேல்பாதியடைந்து
திரெளபதி திரெளபதியென்றான்
வெண்கலப் பறையெடுத்து
மங்கலம் பாடி வந்த
பரமனின் பிள்ளையே
வாரும் என்றாள் திரெளபதி
கால் பணம்
முழந்துண்டு
வாய்க்கரிசி
வழிப்பிண்டம்
வாங்கித் தின்று
வயிறு பிழைக்கும் வஞ்சகனாவெனச்
சோதனையிட்டுப்
பாருலகம் காக்க நானும்
பூவுலகம் காக்க நீயும்
பிறந்தோ மென்றீர்
எட்டுத் திக்கும் பதினாறு கோணம் சென்று
இரவென்றும் பகலென்றும் பாராமல்
வீரப் பறை சாற்ற வந்தேன்
இப்பூவுலகைக் காக்கப் பிறந்த
வீர சம்புகனான என் மக்கள்
உங்கள் சன்னிதிக்குள் வருவதற்குத்
தடையுண்டா காளி
பரமனின் பிள்ளாய்
சகலமும் தர்மத்தின்படியே
நடக்கிறதெனப் பிரகாரம்
சென்றமர்ந்தாள்
Art by Meenakshi Madan
அன்னையே பாஞ்சாலி
அக்கினியைத் தின்று பிறந்த
ஆங்காரி திரெளபதி
உங்கள் தர்மம்
எனக்கு அதர்மம்
எனக்கோர் தீங்கென்றாலும்
என் மக்கள் மீது பழியென்றாலும்
பாம்புக்குழி
பல்லிக்குழி
அரணக்குழி
அட்டக்குழியில் வீழ்வீராக
பூ உதிர
பிஞ்சியுதிர
காயுதிர
கனியுதிர
அக்கினி தேவி
அலறி விழ
ஐந்து தலை நாகனின்
குடல் அழுகி விழக்
கொம்பூதிப் பறை சாற்றினான்
தாய்க்கொடியறுக்கும் கத்தியால்
கோயில் தடையறுத்து
மல்லி முல்லை மந்தாரை
மலர்கள் கொண்டு வந்து
கருவறையில் வீற்றிருந்த
சாக்கிய முனிக்குச் சாற்றினான்.