கவி.கோ.பிரியதர்ஷினி கவிதைகள்

- கவி.கோ.பிரியதர்ஷினி | ஓவியங்கள்: அமிர்தலிங்கம்

நீர் வரையும் டிஸ்யூ

டம்ளரின் அகலத்தில் நான்
எனது குண்டியைச்
சுருக்கிக் கொள்ளவியலாது
வாட்டர் பாட்டிலுக்குள்
திரவம் மூழ்க எனது உடலங்களை
வெட்டிக் கவிழ்த்திக்கொள்ள முடியாது
பாம்பைப் போல் உரிக்கப்பட்ட
ஆடையை எனதுடல் பெறவில்லை
வட்டாக்களின் சுற்றுவட்டம்
உச்சந்தலையிலிருந்து முலைகளின் விட்டத்தை அளந்தபடி
நீர்மட்டத்தைக் குறைத்துக்கொள்கிறது

பியூரி பயர் இருந்திருந்தால்
யூரினையும் மறுசுழற்சி செய்திருப்போம்
இறுதியாய்க் கடந்த நூற்றாண்டில் போயிருப்பதாய் ஒரு நனவு
நான்காவது மாடியிலிருந்தே
கொஞ்சம் இப்பெரு நிலத்தை ஆட்டி வைக்கிறேன்
மதகு உடைந்து புரவி வரும்
நீர்மையின் கிளைகளில்
புனிதம் நிறை என் உள்ளாடை
உதிரத்துடன் அடை பீடித்திருந்தது
குழாய்கள் இருப்பினும் வீடெட்டாத
நீர்மை டிஸ்யூ பேப்பரில் நனைகிறது

நன்னீரும் செந்நீரும் கரித்துப் போகட்டுமென
வெட்கித் தலைகுனிந்து இறைஞ்சும்படியாய்க் கேட்கிறோம்
ஊர் திரும்பு கடலே
ஊர் திரும்பு நதியே
ஊர் திரும்பு குளமே
காலனித் தெருவைக் கடக்கும் போது மட்டும்
பெயர் சொல்லாமல் கடந்துவிடு
எனதருமை நீர்மையே
காலத்தின் தழும்புகளை மறைக்க
நீயோர் உபாயம் சொல்கிறாய்
என் மீதுபட்ட காலத்தின் தீட்டிற்காக
இரு கசையடிகளோடு நீர் திரும்புகிறேன்.

செத்தவனின் இசைக் குறியீடு

ஒவ்வொருவராய் உள்ளே வந்தார்கள்
எல்லா இரவை விட சற்று மாறுபட்டிருந்தது
அவ்விரவு
கொஞ்சம் சந்தனச் சாந்து நிரப்பி
நடுவில் வட்ட ரூபாயை வைப்பதற்காகப்
பிடிமானத்திற்கு அதிகமாய்
வழியத் துவங்கியது
மரணக் குறியீடு

களை கட்டிய வீடுகளின் கன்னங்களில்
யார் யாரோவின் துயரக் கைகள்
மெல்ல சாற்றிக் கிடந்தன
விரசா ஓடிவந்த சின்னத்தம்பி
சூடு பறக்க விறுவிறுவென்று மெட்டின் ராகத்தோடு
ஓங்கி இழுத்தடித்தான்
செத்தவனுக்காகச் செத்த மாட்டுத் தோலை

நிறமிழந்த கண்ணீரில்
எடுத்துக்கொண்டிருந்த சொற்களில்
முடிந்த மட்டிலும் அவரவர்கள்
ஆற்றுப்படுத்திக்கொண்டார்கள்

கங்குலின் தீயில் மெல்ல
சுடப்பட்டுக்கொண்டிருந்த பறையின் வாசம்
சவமாலையைச் சற்று மறைத்திருந்தது

சர்ப்பமாய்ச் சுருண்டு கிடந்த
உறவுக்காரர்களில் நாலைந்து பேர்
பன்றிக்கறியுடன் தயாராகியிருந்த
போத்தலுடன் கிளம்பிவிட்டார்கள்

எல்லோரையும் ஒரு மழை
கழுவியிருந்தது
அடுத்த நாள் அரைவேக்காட்டுப் பிணமாகவோ
இல்லை நனைந்தாலே கரைந்துவிடும்
சாம்பலாக அந்த உடல் இருக்கலாம்
செத்த மாட்டுத் தோல் மீண்டும்
செத்தவர்களுக்காய் ஓங்கி இழுத்து அடிக்கப்படுகிறது
மாடும் அம்மனிதரும் வீடு நோக்கித் திரும்பவே இல்லை

சின்னத்தம்பியின் பறை
அடுத்த நாள் வேப்பங்குளத்து முனியாண்டி சாமியைப்
பூடத்திலிருந்து எழுப்பத் தயாராகிக்கொண்டிருந்தது

ஆதியின் மூப்பொன்றை அழுத்தம்
திருத்தமாய் வாசித்து முடிக்கிறது
உயிர் ஆழத்திலொரு பறை
பாரபட்சமில்லாதவனின் பறை
சாமிக்கும் சவத்திற்கும் ஒரே இசையை
ஓங்கி அடித்தது.

போர்ட்ரெய்ட் பிம்பம்

போர்ட்ரெய்ட் பிம்பங்களை வடம் பிடித்திருக்கும்
என் கற்காலமதில்
அதிர்வுறுகிறது அச்சிறிய சொல்
எழுதிக்கொள்ளுமளவிற்கு
ஏற்புடையதல்ல
இந்த லிட்ரேச்சர் உலகத்திலிருந்துதான் தொடங்குகிறது
எங்கள் வாழ்வு பேதை பெதும்பை என்று
அதிர்வுறுகிறது அச்சிறிய சொல்
முலைகளிலிருந்து எழுந்து நிற்கும்படி
விரகத்தின் கால்களில் நசுங்கிய வாழ்வெங்களுடையது
உஜாலா மம்மிகளின் புறத்தோற்ற
ஒழுங்கை ரசித்து மழுங்கிய ஐரிஸ் காதலனே
வெளுத்துப் போ என உயிர்ச்சொல் கூட்டி
வெடிப்புற்ற பாதத்தைத் தோய்த்துக்கொண்டிருந்தது
உன் அழுக்குச் சட்டை என்னை
சொற்திறம்பான்மையைக் குத்தகைக்கு விட்டிருக்கிறேன்
நாளடைவில் பற்றாமல் போனது என் தெருக்களில் தீ
நான் கண்ணகியின் ஜீனில்லை
நானும் ஒப்புக்கொண்டேன்
கட்டி வைத்து அடிக்காத என் உடலங்களை
நறுக்கிக்கொண்டிருந்தது மென்ஸ் விழிகள்
ஆராய முடியாத உன் உடலங்களை
அளவெடுத்து அளவெடுத்து மாற்றிக்கொள்ள வைத்தது எங்களையே நாங்கள்
பிக்சல் காரிகளென்று
உங்களுக்கு நீட்டுவதிலும்
எங்களுக்குக் கொடுப்பதிலும் carrier பிடிகளின்|நடனமாய் என் பெரு வாழ்வு
அடுமனைச் சாவிகளை இறுகப் பற்றுமாறொரு பெல்ட் வாங்கித் தர
வசதியற்ற உயிரிக்குட்டியாய் நான்
தூலிப் மலர்களைத் துலாவிக்கொண்டிருந்த நகப்பூச்சி விரல்களுக்கு
டிடர்ஜென்ட் விடுதலை தேவை எனவும்
சுவைக்காகத் தொட்டுத் தொட்டு நக்கியதில்
அனல் வீசும் பாத்திரங்களிலிருந்தும் சில காலம்
அருகாமை வேண்டாமென விண்ணப்பம்
எழுதி முடித்திருந்தேன்
மறுபரிசீலனைக்குப் பின்பாக
மனுவின் நீதிக்குக்
கருணையோடு கிடைத்திருந்தது
போத்தல் நிறைய விம்களும்
எபோனைட் பாத்திரங்களும்
சொல்லாமலேயே வாங்கி வரப்பட்டிருந்தன
சலுகை விலையிலான
நெயில்பாலிஸ் ரிமூவரும்
அடியாழமாய் நெருங்கி விரியும்
இந்தச் சிகரெட் முத்தங்களுக்கு
இல்லவே இல்லை ஒரு விடுதலை
சிசுவிரலின் மேற்பரப்பில் செக்
செய்யப்படும் கன்னித்தன்மைகளில்
மலடனோடு புணரவே பெரும் வாய்ப்பு கிடைக்கிறது

என் அடிவயிற்றில் புழுக்கள் உண்டுபண்ணுவதைத்தான்
எங்கள் காலம் எழுதிக் கிழித்திருந்தது
பட்டென்று சாத்திக்கொண்டோம்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger