சாதிக்கயிறு, பல்லக்கு, வன்கொடுமைகள் இன்ன பிற… – தலையங்கம்

ண்மையில் நெல்லை மாவட்டத்தில் ஜாதி அடையாளத்தைக் காட்டும் கயிறு கட்டி வருவது தொடர்பாக மாணவர்களிடையே பெரும் மோதல் நடந்துள்ளது. அம்மோதலில் ஒரு மாணவர் இறந்துள்ளார். மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டு இளவயது காரணமாகக் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இது கவலையளிக்கக் கூடிய விஷயம் மட்டுமல்ல ; கவனம் செலுத்த வேண்டிய விஷயமும் கூட. இதில் அரசு செய்திருக்கக் கூடிய காரியம் என்னவென்றால் சாதிக்கயிறு கட்டுவதைக் கட்டுப்படுத்துவதற்கான சுற்றறிக்கை ஒன்றை அனுப்ப உத்தரவிட்டிருப்பது தான். அதில் பள்ளித் தலைமையாசிரியர்களுக்குப் பள்ளிக்கல்வி இயக்குனரின் வழிகாட்டு நெறிகள் கூறப்பட்டிருக்கின்றன. கடந்த அதிமுக ஆட்சியின்போது இதே போன்ற பிரச்சினை ஏற்பட்டு, இதுபோன்ற சுற்றறிக்கை அனுப்பப்பட்டு வெளியே எழுந்த எதிர்ப்பு காரணமாகத் திரும்பப் பெற்றது. ஆனால், அதுபோல் இல்லாமல் இந்த திமுக அரசு சுற்றறிக்கை அனுப்பியிருப்பது ஆறுதல் அளிக்கிறது. அதேவேளையில் இப்பிரச்சினையைச் சுற்றறிக்கை மூலமே சரி செய்து விட முடியுமா? என்கிற கேள்வியையும் நாம் எழுப்பிப் பார்க்க வேண்டும். வேரினைக் கண்டுகொள்ளாமல் கிளைகளை மட்டுமே வெட்ட நினைக்கும் செயல் இது. இவற்றின் வேர் சமூகத்தில்தான் இருக்கிறது. இவற்றைக் களைவது பற்றிய சிந்தனை ஒட்டுமொத்தச் சமூக மாற்றத்தோடு தொடர்புடையதாகும் என்பதால் இதனை இன்னும் விரிவாக யோசிக்க வேண்டும்.

மாணவர்கள் சமூகத்தில் இருந்துதான் கல்விக்கூடங்களுக்கு வருகிறார்கள். சமூகத்தின் நன்மை தீமைகளால் பீடிக்கப்பட்டே அவர்கள் வருகிறார்கள். கல்விக்கூடங்களில் கற்றுத்தரப்படும் மதிப்பீடுகளுக்கு உதவி செய்வதாக வெளியே உள்ள சமூக நடைமுறைகள் இருக்க வேண்டும். எனினும் இதில் கல்வி மட்டுமே பொறுப்பேற்று விட முடியாது. ஆனால், சமூக நிலைமையோ கல்விக்கூடங்கள் காட்டும் மதிப்பீடுகளுக்கு உதவி செய்வதாக இல்லை என்பதுதான் உண்மை. அதனால் இத்தகைய சாதியப் பிரச்சனைகள் நீடிப்பதோடு வளரவும் வழி ஏற்படுகிறது. சாதியை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும் காரியங்களில் சமூகம் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. எனவே, அங்கிருந்து வரும் மாணவனும் அவற்றிலிருந்து விதிவிலக்கானவனாக இருப்பதில்லை. எனவே, இத்தகைய சிக்கல்களுக்கு மாணவர்கள் மட்டுமே பொறுப்பாக முடியாது. இன்றைய அரசு, அரசியல் கட்சிகள், ஊடகங்கள் என யாவற்றுக்கும் பலவற்றுக்கும் இதில் பங்கு இருக்கிறது. சாதிரீதியாக வேட்பாளர்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், துறைசார் அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள். அதில் எண்ணிக்கைப் பெரும்பான்மை சாதிகள் தங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடங்களைப் பெறுகிறார்கள். மற்றொருபுறம் சாதிக் கட்சிகளும் தீவிரமாகச் செயல்படுகின்றன. தங்களுக்கான திரட்சியை உருவாக்கிக்கொள்ளவும் – திரட்டவும் – மாநாடுகள் சிலைகள் கோரிக்கைகள் போன்றவற்றை எழுப்பவும் செய்கின்றன. வாக்கு வங்கியை மட்டுமே கணக்கில் கொள்ளக் கூடிய அரசியல் கட்சிகள் சிலைகள் மண்டபங்கள் கோரிக்கைகள் ஆகியவற்றை நிறைவு செய்து சாதிகளைத் திருப்தி செய்ய முற்படுகின்றனர். தமிழகத்தில் சாதி எதிர்ப்பு என்பது புறத்தோற்றமாகவும் சாதியைக் காப்பாற்றுவது – நியாயப்படுத்துவது உள்ளார்ந்த மெய்யாகவும் ஆகிவிட்டது. இந்த நிலைமையே இயல்பாகிவிட்டது.

சமூகத்தில் இயல்பாக உள்ளோடிக் கிடக்கும் சாதியைச் சாதிக் கட்சிகள் ஊக்குவிக்கின்றன. அதையட்டி மோதல்களும் அதிகரிக்கின்றன. இன்றைக்கு இந்தச் சூழலுக்கு அடிபணியாத அரசியல் கட்சிகளே இல்லை என்றாகிவிட்டது. இடதுசாரிக் கட்சிகளும் தலித் கட்சிகளும் கூட இந்தச் சூழலில் இருந்து மீள முடியவில்லை. இத்தகைய சாதியத் திரட்சியைப் பயன்படுத்தியே அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வருகின்றன. இவ்வாறு அவர்களால் வளர்க்கப்பட்ட அம்சங்கள் பிரச்சனையாக மாறும் போது, பிரச்சனை செய்பவர்களை மட்டுமே குறை சொல்வதில் என்ன நியாயம் இருக்க முடியும்? இதனை வளர விட்டு விட்டுத் திடீரெனத் தடுத்துவிட முடியாது. இதற்குச் சம்பந்தப்பட்ட ஜாதிகள் மட்டும் காரணமாவதில்லை.

இந்நிலையில்தான்அரசின் இன்றைய சுற்றறிக்கையை மரத்திலிருக்கும் கிளை மீது மட்டும் காட்டும் கோபமாகப் பார்க்க முடிகிறது. உண்மையில் கவனம் செலுத்த வேண்டிய சாதியாதிக்கத்தின் ஆணிவேரை விட்டுவிடுகிறோம். கிளையைக் குற்றஞ்சாட்டுவோராலும் தான் அந்த வேர் வலுவாக்கப்பட்டு வந்திருக்கிறது. எனவே, எல்லா அரசியல் கட்சிகளும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். அவையும் தங்கள் போக்கை மாற்றிக்கொண்டால்தான் இதில் மாற்றம் நிகழும். இல்லையெனில் சுற்றறிக்கை என்பதெல்லாம் வெறும் பெயரளவிலான மாற்றமாகவே இருக்கும்.

இதேபோல்தான் சைவ ஆதினங்கள் பல்லக்கில் போகும் பிரச்சினையை அரசு துணிச்சலாக எதிர்கொள்ளாத போக்கில் காண்கிறோம். சாதிக்கயிறு விசயத்தில் சுற்றறிக்கையாவது அனுப்ப முடிந்த அரசால், பல்லக்கு தூக்கும் விசயத்தில் மரபார்ந்த நம்பிக்கைகளுக்குப் பணிந்திருக்கிறது. பாஜகவின் அரசியலுக்கு இடமளிக்கக் கூடாது என்று கருதிக்கொண்டு இது போன்ற மனித உரிமைக்கு முற்றிலும் மாறான வழக்கத்தை அனுமதிப்பது பாஜக உருவாக்கும் அரசியலுக்கு ஏதோவொரு வகையில் பணிவதாக மாறிவிடுவதைப் பார்க்கலாம். சாதி – மதவாத எதிர்ப்பு என்பது அரசியல் தளத்திலானது மட்டுமல்ல பண்பாட்டுத் தளத்திலுமானதாக இருந்தால்தான் இத்தகு சிக்கல்களின் போது துணிச்சலாகச் செயல்பட முடியும். ஆனால், இங்கிருக்கும் அரசியல் கட்சிகளுக்குச் சாதி – மதவாத எதிர்ப்பு என்பது வெறும் அரசியல் தளத்திலான எதிர்ப்பாகவே இருக்கிறது.

இது மட்டுமல்லாமல் தமிழகத்தில் சாதி வன்கொடுமைகள் குறைவதற்குப் பதில் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. சமீபத்திய புள்ளிவிவரம் ஒன்று தமிழகத்தில் 445 கிராமங்களில் தீண்டாமை பாகுபாடு இருப்பதாகத் தெரிவிக்கிறது. இந்தப் புள்ளி விவரங்கள் வெளிப்படையான பாகுபாடுகளை மட்டுமே கணக்கில் எடுத்து இருக்கிறதே கண்ணுக்குத் தெரியாத பாகுபாடுகளைக் காட்டவில்லை. எனவே, புள்ளி விவரங்களையும் தாண்டியதாகப் பாகுபாடுகள் இருக்க முடியும் என்பதையும் கணக்கில் கொண்டு இவற்றைப் பார்க்க வேண்டியுள்ளது. இதுதான் இன்றைய தமிழகத்தின் மாடலாக இருக்கிறது. இவை மாற வேண்டுமெனில் மாற்றத்தக்க அரசியலும் அதற்கான கருத்தியலும் வேண்டும்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!