மேலவளவு படுகொலை (1997) நடந்த மேலூர் பகுதியின் சாதிய முறை நுட்பமானது; பிற பகுதிகளிலிருந்து வேறுபட்டது. இப்பகுதியின் சாதிய நுட்பங்கள் பற்றி விரிவான – ஆழமான ஆய்வுகள் ஏதும் நடக்கவில்லை. ஒன்றிரண்டு ஐரோப்பியர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். அவர்களும் எல்லாவற்றையும் கண்டதாகவோ, புரிந்துகொண்டதாகவோ தெரியவில்லை. இப்பகுதியில் நிலவும் நாடு என்னும் அமைப்பு பற்றி மட்டும் ஓரளவு எழுதியிருக்கிறார்கள். இன்றைக்கு நாடு என்னும் அமைப்பு பற்றி வெளியே பரவலாகத் தெரியவந்திருக்கிறது. இந்த முறை மேலூர் தொடங்கி சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் வரை பரவியிருக்கிறது. நாடு அமைப்பிற்குள் பல்வேறு வடிவங்கள் இருக்கின்றன. அவற்றுள் குடிகள்ளர் முறை முக்கியமானது.
மேலூர் பகுதியின் சாதியமைப்பில் இந்த முறை முக்கியப் பங்கு வகிக்கிறது. அதாவது கள்ளர்களில் ஒவ்வொரு குடும்பமும் தங்களுக்கென ஒரு தலித் குடும்பத்தைக் கொண்டிருப்பர். கள்ளர்களின் வீடுகளிலும் வயல்களிலும் பணியாளர்களாக இந்தக் குடும்பத்தினர் இருப்பர். இதில் ஒரு வரிசைக் கிரமம் நீடிக்கும். தலைமுறை தலைமுறையாக இது நீடிக்கும். அதேவேளையில் இதனை நேரடிப் பொருளில் ஆண்டான் அடிமை முறை என்றும் கூறிவிட முடியாது. ஒருவித உறவு முறை போல் அமைந்திருக்கும். குடிப்பறையர் வீட்டு நல்லது – கெட்டதற்கு அவர்களுக்கான குடிகள்ளர் குடும்பத்தினர் பாத்தியப்பட்டிருப்பர். குடிகள்ளர் வீட்டுக்கெனக் குடிபறையரின் பொறுப்புகளும் இருக்கும். இந்த முறையில் இரண்டு தரப்புக்குமிடையே இணக்கமும் உரிமையும் பயின்றிருக்கும். ஆனால், இந்த உறவு முறை நுட்பமான விதத்தில் ஒருவித வரையறையையும் தக்கவைத்திருக்கும். அந்த வரையறையைத் தாண்டாத விதத்தில், ரத்தக் கலப்பு வந்துவிடாத வகையில் குடிபறையருக்குக் குடிகள்ளர் பங்காளி உறவாகக் கருதப்படுவர். அதே வேளையில் இந்தப் பெயரிலான உடலுழைப்பைப் பண்பாட்டு நம்பிக்கையின் பேரில் தக்கவைக்கும் முறையாகவும் இது கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இப்பகுதியில் கள்ளர் சாதியை அடுத்த ஆதிக்க நிலையில் உள்ள யாதவர் உள்ளிட்ட சாதிகளும் தங்கள் ஊரில் உள்ள எண்ணிக்கைக்கேற்பக் குடிகோனார் என்ற முறையைக் கடைப்பிடித்து வருகின்றனர்.
இதைப்பற்றி யாரும் தனியாக ஆராய்ந்து எழுதியதில்லை. சு.சமுத்திரம் ‘எனது கதைகளின் கதைகள்’ நூலில் இதுகுறித்து குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதில், முஸ்லிம் குடும்பத்திற்கு ஒரு குடிகள்ளர் இருப்பர் எனவும், முஸ்லிம் குடும்பத்தின் நல்லது கெட்டதை அக்கள்ளர் குடும்பம் கவனித்துக் கொள்ளும் என்றும் கூறியிருக்கிறார். தொடர்ந்து அம்முறை நல்லதென்ற தொனியில் குறிப்பிட்டிருக்கிறார். அவரின் இந்தச் சிறிய குறிப்பும் அம்முறையைப் புரிந்துகொள்ளாமல் எழுதப்பட்டதாகவே இருக்கிறது.
மேலவளவு சேறுசிறுகுடி நாடு அல்லது நடுநாடு என்றழைக்கப்படும் நாடு அமைப்பில் இருக்கிறது. அங்கும் குடிகள்ளர்முறை இருந்தது. இத்தகைய முறைகள் வலுவிழந்துவந்த நிலையில் தான் அது தலித்துகள் மீதான வன்முறைக்கும் காரணமாக அமைகிறது. மேலவளவு வன்முறை பற்றிப் பேசும்போது, பின்புலமாய் இருந்த இத்தகைய முறைகளையும் கணக்கிலெடுத்து விரிவாகப் பார்க்க வேண்டும். அந்த விதத்தில் குடிகள்ளர் முறை பற்றிய எதிர்பாராத பதிவொன்றைக் கவனப்படுத்துவதன் மூலம் அதுகுறித்த அறிமுகத்தை வழங்க இக்கட்டுரை முயற்சிக்கிறது.
இயக்குநர் சேரன் இயக்கிய முதல் படம் ‘பாரதி கண்ணம்மா’ (சனவரி 1997). இப்படம் வெளியானபோது பரவலான கவனத்தைப் பெற்றது. இன்றுவரையிலும் தமிழின் குறிப்பிடத்தக்க படங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. அதே வேளையில் வெளியான காலம் தொடங்கி இப்படம் மீது வெவ்வேறு விமர்சனப் பார்வைகளும் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இந்த வகையில் தமிழ்ச் சமூகத்தின் குறிப்பிட்ட வட்டாரத்தில் நிலவும் சாதி அமைப்பின் குறிப்பிட்ட அம்சம் ஒன்றைத் தன் கதையோட்டத்தினூடாக, நேரடியாகவும் மறைமுகமாகவும் பதிவு செய்திருக்கும் விதத்தில் இப்படத்தைச் சமூகவியல் ஆவணமாகவும் கொள்ள முடியும்.
மேல்-கீழ் சாதி வரிசை முறையைத் தமிழகத்தில் எங்கோ ஒரு கிராமத்தில் நிலவும் வழக்கமான பாகுபாடு என்று பார்க்காமல் இப்படம் காட்டும் களத்தின் குறிப்பான பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, மேலூர் தொடங்கி தஞ்சை வட்டாரம் வரையிலும் பரவியிருக்கும் குடிகள்ளர் என்ற முறை இந்தப் படத்தில் அந்தப் பெயரில் இல்லாமல் வேறு வடிவில் பயின்றிருக்கிறது. படத்தின் களம் தென்தமிழகம் என்றாலும் குறிப்பாக அது மேலூர் பகுதியாக இருக்கிறது. மேலூர் பகுதி என்பதற்கான குறிப்புகள் கதையில் கிடைக்கின்றன. தேவர் பாளையம் என்ற ஊரில் கதை நடக்கிறது. அந்த ஊரில் நிலவக்கூடிய செல்வாக்கு யாருடையதாக இருக்கும் என்பதை இப்பெயரே உணர்த்திவிடுகிறது. தேவர் பாளையம் என்ற பெயரில் நேரடியாக ஊர் இல்லை என்றாலும் தன்னுடைய கதையாடலைக் கூறுவதற்கேற்ற ஒரு கற்பிதப் பெயரை உருவாக்கிக் கொண்டிருக்கிறது படம். பெயர்தான் கற்பிதமே தவிர, அப்படியரு கிராமமே கற்பனை என்று கூறிவிட முடியாது. இந்தப் பெயரைத் தவிர இரண்டு ஊர்களைக் குறிக்கும் பெயர்கள் உரையாடலினூடே வெளிப்படுகின்றன. ஓரிடத்தில் “நான் வெள்ளலூர் பஞ்சாயத்துக்குப் போக வேண்டும்” என்று தன் மனைவியிடம் அம்பலக்காரர் குறிப்பிடுகிறார். வெள்ளலூர் என்பது மேலூர் வட்டத்தில் உள்ள ஓர் ஊர். அப்பகுதியில் இருக்கும் நாடு அமைப்பில் வெள்ளலூர் நாடு குறிப்பிடத்தக்க நாடாகும். படத்தில் அம்பலக்காரர் பங்கேற்கும் பஞ்சாயத்து வடிவமே வெள்ளலூர் பகுதியின் பஞ்சாயத்து வடிவம்தான். மற்றோரிடத்தில் நாயகிக்குத் திருமண ஏற்பாட்டில் இறங்குகிறார் தந்தையான அம்பலக்காரர். அப்போது சமையல்காரரை அழைக்க சிவகங்கை போகச் சொல்கிறார். இவ்விரண்டு ஊர்களும் மேலூர் பகுதியை ஒட்டியிருக்கின்றன. இவை எல்லாவற்றையும் விட படத்தின் இயக்குநர் சேரனின் சொந்த ஊர் இந்தப் பகுதியிலிருக்கும் பழையூர்பட்டி என்பது குறிப்பிடத்தக்கதாகும். முதல் படத்திலேயே தன்னுடைய வட்டாரத்தைக் கதைக்களமாகக் கொண்டிருக்கிறார் இயக்குநர்.
இவ்வட்டாரத்திலுள்ள குடிகள்ளர் முறையைச் சித்தரிப்பது இப்படத்தின் திட்டமிட்ட நோக்கமல்ல. சேரன், நுட்பங்களைச் சித்தரிப்பதில் பெயர் பெற்ற இயக்குநரும் அல்ல. ஆனால், சாதிப் பின்னணியைக் கதைக்களமாகக் கொண்ட விதத்தில் முறையைக் காட்டும் பதிவுகள் படத்தில் இடம்பிடித்துள்ளன. பொதுவாக, மேலூர் வட்டாரம் தமிழ்ப் புனைகதைகளிலும் திரைப்படங்களிலும் குறிப்பிடும்படியாக இடம்பெற்றதில்லை. நிலைமை இவ்வாறிருக்க இவ்வட்டாரத்தின் சாதியமைப்பைக் காட்டும் பதிவுகளுக்கு வாய்ப்பு இருக்கப் போவதில்லை. சாதி அமைப்பு பற்றிய பதிவுகளே இல்லாதபோது அதன் கூறான குடிகள்ளர் முறை பற்றிய பதிவு இடம்பெறவும் வாய்ப்பிருந்திருக்காது. தமிழ்நாட்டுச் சாதியமைப்பு பற்றி எழுதியவர், பேசியவர் யாருக்கும் இந்த அமைப்பு பற்றித் தெரிந்திருக்கவில்லை. இந்நிலையில்தான் குடிகள்ளர் முறையைத் தன்னுடைய கதையாடல் எல்லைக்குட்பட்டுக் காட்டியிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ படத்தை ஒரு ஆவணமாகக் கருத வேண்டியுள்ளது. அந்தவகையில் குடிகள்ளர் முறை பற்றிய முதல் பதிவு என்று கூட இப்படத்தைக் கூறலாம்.
படத்தின் நாயகன் பாரதி தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். அம்பலக்காரர் வீட்டில் பணியாளராக இருக்கிறார். எனினும் அது நேரடியாக அடிமை முறை போன்று தெரியாது. அது நச்சரிக்கும் கொடுமைமுறையாக இருப்பதில்லை. பாரதி இந்த வேலைகளை விரும்பியே செய்கிறார். பாரதி மட்டுமல்ல அவர் குடும்பமும் அவ்வாறுதான் இருந்திருக்கிறது. அந்த ஊரிலிருக்கும் ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு கள்ளர் குடும்பப் பணியாளர்களாக இருந்திருக்கிறார்கள். பணியைப் பெறுவதும் தருவதும் கொள்வினை கொடுப்பினை போல் இருக்கிறது. ஆனால் எல்லாவற்றிலும் வரையறையுடன் கூடிய உரிமையே நிலவுகிறது. இந்த வரையறை எதுவாக இருக்கிறது, எதுவரை இருக்கிறது என்பதில்தான் இந்த ‘உரிமை’க்கான அர்த்தம் தங்கியிருக்கிறது.
இத்தகைய வரையறைக்குட்பட்ட ‘உரிமை’க்குப் பெயர்தான் குடிகள்ளர் முறை. இதன் தனித்துவத்தைப் புரிந்துகொள்ளாமல் வழக்கமான ஆண்டான் அடிமை முறையாக இதனைக் கொண்டால் இப்பகுதி சாதியமைப்பின் முழுச் சித்திரம் கிடைக்காது. அம்பலக்காரர் அடையாளத்தையும் தலித் அடையாளங்களையும் திரைப்பிரதி துல்லியமாகப் பிரித்துக் காட்டுகிறது. அம்பலக்காரர் சாதிப் பெருமையையும் சாதிய வரையறையும் நினைவில் கொண்டவராகவே இருக்கிறார். பரம்பரை, மானம், மரியாதை, குடும்ப கௌரவம், தேவன் போன்ற சொற்களைக் கணந்தோறும் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார். இவற்றுக்கு எந்தப் பங்கமும் வரக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். இந்த வரையறைகளின்படி இருப்பதால் தலித்துகளையும் அவர் பரிவோடு நடத்துகிறார். சொந்தச் சாதியினரும் அதனை மீறக்கூடாது, மீறினால் தாங்க மாட்டார். ஏனெனில் இந்த வரையறைகளைக் கிராமத்தின் அமைப்பொழுங்கு என்று நம்புகிறார். கள்ளர் சாதியினன் ஒருவன் தலித் பெண்ணைச் சீண்டிய பிரச்சினைக்காகப் பஞ்சாயத்து கூடுகிறது. இந்தப் பஞ்சாயத்தில் தன் சொந்தச் சாதியினனை அம்பலக்காரர் இவ்வாறு கண்டிக்கிறார்: “பரம்பரை பரம்பரையாகக் கொடுத்த மரியாதை மாறாமல் வந்து நின்று கைகட்டி நியாயம் கேட்கிறானே அதனை நாம் மதிக்க வேண்டும்.”
இவ்விடத்தில் அம்பலக்காரர் தலித்துகளுக்கு நியாயம் வழங்குவது நிலவிவரும் வரையறையை அவர்களை மீறாததாலும், கள்ளர்களைக் கண்டிப்பது அதனை மீறுவதாலும்தான். எனவே குடிகள்ளர் முறையில் இந்த வரையறை முக்கியமானதாகிறது. இரண்டு தரப்புக்கும் சமமாக இல்லாவிட்டாலும் இந்த வரையறையை ஏற்க வேண்டும் என்பதே இம்முறையின் அடிப்படை. இந்த முறை மரபாகத் தொடர்வது எவ்வாறெனில் இது பண்பாட்டு முறையியலாகக் கட்டமைக்கப்பட்டிருப்பதால்.
அம்பலக்காரர் வேலைக்காரனை வாட விடுவதில்லை. அவனுக்கு உணவு அளிப்பார். ஆனால், அவனால் வீட்டுக்குள் வர முடியாது. பின்னால் வந்துதான் சோறு வாங்கிக்கொள்ள முடியும். பாத்தியப்பட்ட குடிகள்ளர் என்ற முறையில் அம்பலக்காரர் வீட்டுக்கும் பாரதிக்கும் ஒருவித உரிமை நிலவுகிறது. அம்பலக்காரரின் வயதான அம்மா கூட ஒருமுறை பாரதி வேலைக்குத் தாமதமாக வருவதை ஒட்டி, “வேலைக்காரனை வேலைக்காரனாக வைத்திருந்தால் சொன்ன நேரத்துக்கு வருவான். இப்ப பாரு வருவதில்லை” என்கிறாள். ஆனாலும் பாரதி மீது அவர்களுக்குக் கோபம் வருவதில்லை. ஏனெனில் இந்த முறைக்குள் ஒருவித ‘ஒப்பந்தம்’ இருக்கிறது. அதன்படி பாரதி முறைதவறி போகமாட்டான் என்ற நம்பிக்கை இருக்கிறது. கண்டித்தால் கூட அது ஒருவிதச் செல்லங்கொஞ்சலாகவே இருக்கிறது. இத்தகைய வரையறைதான் அம்பலக்காரரின் மகள் கண்ணம்மாவின் காதலை ஏற்பதில் பாரதிக்குத் தடையாகவும் இருக்கிறது. அதாவது குடிகள்ளர் முறையில் நிலவும் வரையறையே கதையின் மையமாக இருக்கிறது; ஒருவித பரஸ்பர நம்பிக்கையை வலியுறுத்துகிறது. அவர்கள் நம்மிடம் நடந்துகொள்வது போல, நாமும் நடந்துகொள்ள வேண்டும் என்கிற நம்பிக்கையே அது. நாயகன் பாரதியை அந்த வரையறையே படம் முழுவதும் வழி நடத்திச் செல்கிறது.
அம்பலக்காரரை எதிர்க்க முற்படும் தன் சொந்தச் சாதிக்காரனிடம் பாரதி பேசும்போது “ஒரு காலத்துல வயித்துப் பசியோட நின்ன நமக்கு இந்த வாழ்க்கையைக் கொடுத்தது இவங்கதான்… நமக்கு ரோசம் வரணும்னா ஒம் பாட்டனும் எம் பாட்டனும் சொத்துச் சேர்த்து வைத்திருக்கணும்” என்றெல்லாம் கூறி இந்த வரையறைகளுக்கான நியாயத்தைக் கட்டுகிறான். ஒரு ஊரின் உடைமை மரபினர், தன் உடைமையை அமைப்பாகத் தக்கவைக்க நிலம் இழந்தவர்களைச் சேவை சாதிகளாகக் கொணர்ந்து குடியேற்றுகிறது; வீடு தந்து வேலையும் தருகிறது. இதனைப் பண்பாட்டு ஒழுங்காக ஏற்றிருக்கும் குடிப்பறையரின் குரல்தான் நாயகன் பாரதியின் வெளிப்பாடு. அதேபோல இறுதியில் அம்பலக்காரருக்கு எதிரான தலித் கலகக்காரனோடு பாரதியே மோதுகிறான். படத்தின் முடிவில் அம்பலக்காரரின் சாதி உணர்வை இல்லாமலாக்க விரும்புகிற திரைப்பிரதி, பாரதி தன் சொந்தக்காரனோடுதான் மோதுகிறோம் என்பது தெரியாமலேயே மோதுவதாக ஒரு ‘சமாதானத்தை’ காட்டுகிறது. ஆனால், குடிகள்ளர் முறையில் ஒரு தலித், தன் சாதிக்காரனாக இருந்தாலும் தன் குடிகள்ளருக்கு எதிரானவன் என்று தெரிந்தால் சண்டை போடுவான். குடிகள்ளர் முறையில் ஒருவன் இதையே யோசிக்க முடியும்.
படத்தில் குடிகள்ளர் முறையின் பண்பாட்டு அம்சங்கள் அழுத்தம் பெறவில்லை. எனினும் ஆங்காங்கே சில சிதறல்கள் இருக்கின்றன. அம்பலக்காரர் தன் மகளுக்கு மணம் முடிப்பது என்று முடிவெடுத்தவுடனே மாப்பிள்ளை வீட்டுக்குப் போய்ச் சொல்லிவிட்டு வரவேண்டிய ஆளாகப் பாரதியையே அழைக்கிறார். இன்னமும் கூட சில உறவு முறைகள் உண்டு. அவை படத்தில் வரவில்லை.
படத்தின் முடிவு இதுவரை பலவாறு விமர்சிக்கப்பட்டிருக்கிறது. முகவாண்மை இல்லாத தலித் பாத்திரம், ஓர்மையுடைய தலித் பாத்திரத்தை எதிர்மறையாக்குதல் போன்ற பிரச்சினைகள் இப்படத்தில் உண்டு. ‘மேல் சாதி’க்காரர் மனம் மாறி மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்ற இறுதி முடிவைக் கட்டுவதற்காகப் படம் முழுவதும் எதிர்ப்பற்ற தலித் வாழ்வியலைக் காட்டியிருக்கிறது. அதேபோல குடிகள்ளர் முறையின் முழுமையைக் காட்டுவதும் படத்தின் நோக்கமல்ல. ஆனால், ஒரு குறிப்பிட்ட காலத்தின், குறிப்பிட்ட வட்டாரத்தின் களத்தை ஒட்டி கதையை நகர்த்திச் செல்லும் போக்கில் அப்பகுதியின் சமூக நடைமுறை தெரிந்தோ தெரியாமலோ இப்படத்தில் பதிவாகி உள்ளது. சமூக ஆவணமாகக் கருதி அவை மட்டும் இக்கட்டுரையில் தொகுத்துக் காட்டப்பட்டுள்ளன. அந்த முறைக்கும், அதைப் போன்ற சாதிய நடைமுறைகளின் சிதைவிற்கும் மேலவளவு வன்முறைக்கும் நுட்பமான தொடர்பிருக்கிறது. அதனைப் புரிந்துகொள்ளவே குடிகள்ளர் முறை குறித்த ஆவணம் ஒன்று இங்கு விவரிக்கப் பட்டது. கால மாற்றத்தின் காரணமாகத் தொண்ணூறுகளில் குடிகள்ளர் முறை சிதைவை நோக்கிச் சென்றது. ‘பாரதி கண்ணம்மா’ வெளியான அதே வருடத்தில்தான் (1997) மேலூர் வட்டாரத்தில் மேலவளவு கிராமத்தில் தேர்தலில் போட்டியிட்ட காரணத்திற்காக முருகேசன் உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டனர். மேலவளவு முருகேசன் குடும்பம் முந்தைய தலைமுறையிலேயே ஊரிலிருந்த அம்முறையிலிருந்து விடுபட்டு விட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.