முன்னுரை
உலக அளவில் பல்வேறு சமயங்கள் கடவுள் கொள்கையை முனைப்போடு வலியுறுத்திவந்த நிலையில் பௌத்த சமயம் மட்டுமே கடவுள் கொள்கைகளுக்கு எதிரான பகுத்தறிவு வாதத்தினை முன்வைத்தது. சாதிகளையும் மூடநம்பிக்கைகளையும் களைந்து மனிதனைச் சிந்திக்க வைத்த சமயங்களுள் பௌத்தமே முதன்மையான சமயமாக விளங்கியது. தமிழகத்தில் பல்வேறு சமயங்கள் முனைப்போடு சமயத்தைப் பரப்பிய நிலையில் பௌத்தம் மட்டுமே மக்களிடம் செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்தது, அரச மதமாகவும் விளங்கியது. இவ்வகையில் கி.மு.2ஆம் நூற்றாண்டளவில் தமிழகத்தில் பரவத் தொடங்கிய பௌத்தம், புத்த விகாரைகளையும், கோயில்களையும், கல்வி நிறுவனங்களையும், தமிழ் இலக்கண இலக்கியங்களையும் படைத்துத் தொண்டாற்றியது. சைவம், வைணவம் தழைத்தோங்கிய பக்தி காலத்தில் பௌத்தம் மீதான காழ்ப்புணர்ச்சியின் காரணமாகப் பௌத்தக் கோயில்களையும் சிலைகளையும் அவர்களது இலக்கண இலக்கியங்களையும் வைதீகம் திட்டமிட்டு அழித்தொழித்தாலும் தமது சமயத்திற்குரியதாக உறிஞ்சுதல் செய்தாலும் பௌத்த அடையாளங்களும் பண்பாடுகளும் தமிழகத்தில் மிதமிஞ்சியே காணக்கிடைக்கின்றன. சைவ, வைணவம் இணைந்த புதியதோர் இந்துமத ஆக்கத்தில் பௌத்தம் அழிவினைக் கண்டாலும் இன்றளவும் பல தமிழக ஊர்ப்பெயர்கள் புத்தரின் பெயரினையே பறைசாற்றுகின்றன. பௌத்தக் கோயிலெல்லாம் சைவ, வைணவக் கோயிலாக மாறிய நிலைப்பாடுகளை அடையாளப்படுத்துகின்றன. பௌத்தம் பல்வேறு நாடுகளில் பரவியிருந்தாலும் தமிழகத்தில் பௌத்தம் பரவியதன் அடையாளங்களையும் பௌத்தப் பண்பாட்டினையும் அதன் தடயங்களையும் சோழர்களின் ஆட்சிப் பகுதியாகிய தென்தமிழகப் பகுதிகளே சான்று பகர்வனவாய் அமைந்துள்ளன.
குறிப்பாக காவிரிபூம்பட்டினம், நாகப்பட்டினம், திருவாரூர், மன்னார்குடி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் கிடைத்துள்ள புத்தர் சிலைகளும், கோயில்களும், கல்வெட்டுகளும் தமிழகத்தில் பௌத்தம் செழிப்புற்று விளங்கியதை அடையாளப்படுத்துகின்றன. இவ்வகையில் சோழர்களின் தலைநகரமாகவும் தென்தமிழகத்துக் கோயில் நகரமாகவும் விளங்கிய கும்பகோணத்தின் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பௌத்த தடயங்களை விவரிப்பதோடு, பகவத் விநாயகர் கோயிலில் உள்ள பகவத் முனிவர் என்று அழைக்கப்படும் புத்தர் மீதான வைதீகப் புனைவுகளை விளக்கவே இப்பகுதி முற்படுகின்றது.
பௌத்தம் செழித்த கும்பகோணம்
தென்தமிழகத்துக் கோயில் நகரங்களில் ஒன்றாகவும் காவிரியின் வளம்கொழிக்கும் பகுதிகளில் ஒன்றான கும்பகோணம், காவிரியின் தென்கரையில் அமைந்துள்ளதோடு நஞ்சையும், புஞ்சையும் சூழ்ந்த வளமிக்கப் பகுதியாகவே காணப்படுகிறது. திரும்பும் திசையெங்கும் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட பல சைவ, வைணவக் கோயில்களைக் கொண்டுள்ள கும்பகோணத்தின் சுற்றுப்புற ஊர்களாகிய தாராசுரம், பட்டீஸ்வரம், பழையாறை, திருநாகேஸ்வரம், சோழபுரம், சுவாமிமலை, திருவிடைமருதூர், திருப்பனந்தாள் போன்ற ஊர்களும் பல சைவ, வைணவக் கோயில்களால் சூழப்பட்டுள்ளன. சோழர்களின் ஆட்சிக்கு முன்பு இப்பகுதிகள் பௌத்தம் செழித்த பகுதியாக விளங்கியுள்ளது. கும்பகோணத்தின் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பல பௌத்தக் கோயில்களை அழித்து அதன் கற்பாறைகளைக் கொண்டே பல சைவ, வைணவக் கோயில்கள் சோழமன்னர்களால் கட்டியமைக்கப்பட்டுள்ளன. தஞ்சை பெரியகோயிலின் பௌத்த அடையாளத்தினை முன்வைக்கும் கு.சேதுராமன், “தஞ்சை பெரியகோயில் சோழ மன்னன் முதலாம் இராசராசனால் (கி.பி. 985 – 1014) கட்டப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. இக்கோயில் படிக்கட்டின் ஓரப்பகுதி ஒன்றில் ஒரு சிற்பத்தொகுதி உள்ளது. மூன்று கட்டங்களாக அதில் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றில் போதி மரத்தடியில் புத்தர் அமர்ந்துள்ளார். பக்தர்கள், கந்தர்வர்கள் ஆகியோர் உள்ளனர். புத்தருக்கு இடப்புறம் இந்துக் கடவுளரும் அவருக்கு வலதுபுறம் அரசக் காவலர்களும் நிற்கின்றனர். அருகில் அரசனும் அரசியும் கந்தர்வர்களும் இணைந்து புத்தக் கோயிலை வேறிடத்துக்கு மாற்ற வேண்டும் என வேண்டிக்கொள்கின்றனர். எனவே, தஞ்சை பெரியகோயில் கட்டப்படுவதற்கு முன்பு அங்கு ஒரு புத்தர் கோயில் இருந்து, அது அகற்றப்பட்ட பின் இக்கோயிலை முதலாம் இராசராசன் கட்டியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இக்காலக்கட்டமே பௌத்தச் சமயத்தின் அழிவின் தொடக்கக்காலம் என்று கருதுகின்றனர். இருப்பினும் தொடர்ந்து 16ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்த பௌத்தச் சிற்பங்கள் தமிழகத்தில் ஆங்காங்கே கிடைக்கின்ற காரணத்தால் இராசராசன் காலத்தைச் சமயபொறை மிக்க காலம் என்று கருதலாம்”1 என்கிறார். எனவே, சோழ மன்னர்களின் முன்னோடியான இராஜராஜ சோழனே பௌத்தக் கோயிலை அகற்றி அக்கற்களைக் கொண்டு சைவக்கோயில் நிறுவியதையடுத்து பௌத்த அழிவிற்கும் முன்னோடியாக இருந்திருக்கிறார். பௌத்தக் கோயிலை அழித்து சைவக்கோயில் கட்டும் நிலைப்பாடு என்பது இராஜராஜனின் வழித்தோன்றலாகிய பிற்கால சோழ மன்னர்களிடமும் காணப்படுகிறது. இதனடிப்படையில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள எலந்துறை என்னும் ஊரிலிருந்த பௌத்தக் கோயிலை இடித்து அதன் கற்களைக் கொண்டு கும்பேஸ்வரர் கோயிலின் வெளிப்பிரகார வாயில்கள் கட்டியமைக்கப்பட்டுள்ளன. சோழ மன்னர்களால் கட்டப்பட்ட கும்பேஸ்வரர் கோயிலில் காணப்படும் கல்வெட்டு, எலந்துறை என்னும் ஊரிலிருந்த பௌத்தக் கோயிலுக்குரியதாகும்.
எலந்துறை பௌத்தக் கோயிலை இடித்து அதன் கற்களைக் கொண்டுவரும்போது அதனுடன் சேர்த்து இக்கல்வெட்டும் கொண்டுவரப்பட்டுக் கும்பேஸ்வரர் கோயிலின் வாயில்கள் கட்டியமைக்கப்பட்டுள்ளன. இப்பௌத்தக் கல்வெட்டு உணர்த்தும் செய்திகளைக் குறிப்பிடும் பௌத்த ஆய்வாளரும் சோழநாட்டில் அறுபதுக்கு மேற்பட்ட பௌத்தச் சிலைகளைக் கண்டறிந்தவருமான பா.ஜம்புலிங்கம், “கும்பகோணம் காரைக்கால் நெடுஞ்சாலையில் திருநாகேஸ்வரம் திருநீலக்குடி ஆகிய ஊர்களுக்கு அருகில் உள்ள சிறுகிராமம் எலந்துறை. செவ்வப்பநாயக்கரின் ஆட்சிக்காலத்தில் இவ்வூர் திருவிளந்துறை என அழைக்கப்பெற்றது. இவ்வூரின் கிழக்கே அமைந்த ஊரான திருமலைராஜபுரம் அந்தணர்கள் கிராமமாகவும், எலந்துறை பௌத்தர்கள் கிராமமாகவும் திகழ்ந்தன. திருமலைராஜபுரத்திற்குப் புதிய பாசன வாய்க்கால் வெட்டியமையால் எலந்துறையிலிருந்த புத்தர் கோயிலின் நிலத்திற்கு இழப்பு ஏற்பட்டது. இதனை ஈடுசெய்ய திருமலைராஜபுரத்து ஊரார் தங்கள் ஊரில் உரிய அளவு நிலத்தைப் புத்தர் கோயிலுக்காக அளித்தததைக் கும்பகோணம் கல்வெட்டு கூறுகின்றது. கி.பி.1580இல் கும்பகோணத்திற்கு அருகேயுள்ள எலந்துறையில் புத்தர் கோயில் இருந்ததை இதன்மூலம் அறியமுடிகிறது” என்கிறார்.
இச்செய்தியைக் கீழ்வரும் கும்பேஸ்வரர் கோயிலின் பௌத்தக் கல்வெட்டுக் கொண்டு விளக்குகிறார். இது குறிக்கும் நாள் கி.பி.1580 ஆம் நூற்றாண்டு ஜூலை திங்கள் ஆகும் என்கிறார்.
‘விக்கிரம வருடம் ஆடிமாதம் 22ம் தேதி
செல்வப்ப நாயக்க ஐயன் தர்மமாக
திருவிலந்துறை புத்தர் கோயிலில்
தீத்தமா மருந்தார் விசேச
மகாசனங்கள் வாக்கால் வெட்டிப் போகையில்
திருமலைராசபுரத்தில் அகரத்தில்
திருப்பணி சேர்வையாக விட்ட நிலம்’2 (தினமணி பிப்.22, 2016).
இவ்வகையில் எலந்துறை என்னும் ஊரில் பௌத்தக் கோயில் இருந்திருப்பதையும் அக்கோயிலுக்குக்கென்று தனியே நிலம் இருந்திருப்பதையும் நிலம் வழங்கப்பட்டதையும் அறியமுடிகிறது. கி.பி.16ஆம் நூற்றாண்டளவில் கும்பகோணத்தைச் சுற்றிய பகுதிகளில் பௌத்தம் செழித்து வளர்ந்திருக்கிறது. இதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்தில் “வையச்சேரி, சோழன் மாளிகை, கோபிநாதப்பெருமாள் கோயில், கும்பகோணம், மதகரம், மானம்பாடி, மங்கநல்லூர், முழையூர், பட்டீஸ்வரம், பெரண்டாக்கோட்டை, திருநாகேஸ்வரம், திருவலஞ்சுழி, விக்ரமம் ஆகிய இடங்களிலும் புத்தர் சிலைகள் காணப்படுகின்றன”3 என்கிறார் பா.ஜம்புலிங்கம். சோழநாட்டில் பல ஊர்களில் பௌத்தம் செழித்திருந்ததை 1940களிலேயே ஆய்வு மேற்கொண்டவரான மயிலை சீனி.வேங்கடசாமி, “கும்பகோணம் ஒட்டிய பகுதிகளான திருவிளந்துறையில் புத்தக் கோயில் இருந்ததாகவும்; கும்பகோணம் பகவத் விநாயகர் கோயிலில் புத்த உருவம் இருப்பதாகவும்; திருவலஞ்சுழி சிவன் கோயிலுக்கு வெளியே புத்தர் சிலை உள்ளதாகவும்; பட்டீஸ்வரம் கிராமதேவதை ஆலயத்தில் புத்தர் உருவச்சிலை இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் (பௌத்தமும் தமிழும் பக். 43 – 44). திருநாகேஸ்வரம் முருக்கங்குடியின் அருகே புத்தரின் பெயரில் புத்தகரம் எனும் ஊர் வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. கலையியல் அறிஞரான சுரேஷ்பிள்ளை, சோழர்களின் தலைநகரமாக விளங்கிய பழையாறை, ஒருகாலத்தில் பௌத்தர்களின் தலைநகரமாகவும் பௌத்தம் செழித்த பகுதியாகவும் விளங்கியதைக் கோயில் கட்டடங்களைக் குறியீட்டு ரீதியில் பொருள்கொண்டு உறுதிப்படுத்தியுள்ளார். சோழர்கால கோயில்களின் கட்டடக்கலை குறித்தும் தாராசுரம் கோயில் குறித்தும் வரிவாக ஆராய்ந்துள்ள சுரேஷ்பிள்ளையின் சான்றாதாரத்தினை முன்வைக்கும் ரவிக்குமார், “திருவலஞ்சுழி கோயிலும் தாராசுரம் கோயிலும் பௌத்தத்தின் இருவேறு பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. திருவலஞ்சுழி கோயில் மகாயானப் பிரிவையும் தாராசுரம் கோயில் ஹீனயானப் பிரிவையும் சேர்ந்தவை. பழையாறையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சோழ மன்னர்கள் அந்தப் பகுதியில் இருந்த பௌத்த ஆலயங்களையெல்லாம் மாற்றி சிவாலயங்களாக உருவாக்கினார்கள். இவ்வாறு மாற்றப்பட்ட கோயில்களை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். நாயன்மார்களால் பாடல் பெற்றிருந்தால் அது இந்துக்கோயில். இல்லாவிட்டால் அது பௌத்தத்தோடு அல்லது சமணத்தோடு தொடர்புகொண்டதாயிருக்கும் என்னும் சுரேஷ்பிள்ளையின் கருத்து முக்கியத்துவம் மிக்கதாகும்”4 என்கிறார்.
இவ்வகையில் பல சைவ, வைணவக் கோயில்களைக் கட்டிய சோழ மன்னர்கள் அச்சமயங்களை வளர்க்கும் நோக்கில் பௌத்தச் சமயத்தினை அழித்தொழித்தாலும் சோழர் காலத்தில் புறந்தள்ளப்பட்ட பௌத்தச் சிலைகள் இன்று காணக்கிடைப்பதுடன் அக்காலத்திய பௌத்தச் செழிப்பினைப் பறைசாற்றியும் வருகின்றன. தமிழகத்தில் கி.பி.16ஆம் நூற்றாண்டு வரை பௌத்தம் செழித்து விளங்கியதை உறுதிப்படுத்தும் பல புத்தர் சிலைகள் தமிழகத்தில் காணக்கிடைப்பதிலிருந்து, பிற்காலத்திய சோழர்களும் பிற மன்னர்களும் பௌத்த சமயத்திற்கு ஆதரவு அளித்திருப்பதை ஊகிக்க முடிகிறது.
பகவத் விநாயகர் எனும் புத்தக்கோட்டம்
காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள கும்பகோணத்தின் மடத்துத் தெருவில் (திருமஞ்சன வீதி) காளஹஸ்தீஸ்வரர் கோயில், பகவத் விநாயகர் கோயில், முச்சந்தி பாதாள காளியம்மன் கோயில், மாரியம்மன் கோயில், யானையடி அய்யனார் கோயில் போன்றவை ஒன்றன்பின் ஒன்றாகக் காவிரியின் கரையிலிருந்து வரிசையாக அமைந்துள்ளன. இக்கோயில்களெல்லாம் வரிசையாக அமைந்திருப்பதற்கேற்ப காவிரியானது யானையடி அய்யனார் கோயில் வரையிலும் கிழக்கே பாணபுரிஸ்வரர் கோயில்வரையிலும் விரிந்திருந்ததாகவும் மடத்துத்தெரு என்பது காவிரிக்கரையாக இருந்ததாகவும் அன்றளவில் பரந்துவிரிந்த காவிரி இன்றளவில் ஆக்கிரமிப்புகளால் சுருங்கி ஓடுவதாகவும் அவ்வூர் மக்களால் கூறப்படுகின்றன.
ஒருகாலத்தில் காவிரியின் கரையில் அமையப்பட்டிருந்த இக்கோயில்களெல்லாம் இன்று காவிரியில் இருந்து வெகுதூரத்தில் அமைந்துள்ளது. இதனடிப்படையில் பகவத் விநாயகர் கோயிலை ஒட்டியிருந்த பகவத் படித்துறை இன்று காவிரிக்கரையிலும் பாணபுரிஸ்வரர் கோயிலின் அருகே அமைந்த காவிரி படித்துறையான பாணாதுறை இன்று தெருக்களையும் குறித்து நிற்கிறது.
இன்று மடத்துத் தெரு என்றழைக்கப்படும் திருமஞ்சன வீதியில் பகவத் விநாயகர் எனும் பழமைமிக்க பிள்ளையார் கோயில் ஒன்று உள்ளது. இக்கோயிலின் மூலவராக ‘பகவத் விநாயகர்’ உள்ளார். கோயிலின் கருவறைக்கு வெளியே இடப்பக்கத்தில் பகவத் முனிவர் எனும் பெயரில் புத்தர் சிலை இருக்கிறது. இக்கோயிலானது தஞ்சை மராட்டிய மன்னனான சரபோஜி காலத்தில் கோணப்படுகை தொண்டைமான் என்ற மன்னனிடம் அமைச்சராக இருந்த அன்னாஜிராவ் என்பவரால் கி.பி.16ஆம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இக்கோயில் புதுப்பிக்கப்படுவதற்கு முன்பு இவ்விடத்தில் பெரிய அரசமரம் இருந்ததாகவும் இந்த அரசமரத்தின் கீழ் விநாயகர் சிலை இருந்ததாகவும் இவ்விநாயகருக்கு பகவர் எனும் முனிவரே முதன்முதலில் கோயில்கட்டி வழிபட்டார் என்றும் இம்முனிவரின் பெயராலேயே இக்கோயில் பகவத் விநாயகர் என்று அழைக்கப்படுவதாகவும் வாய்மொழி கதையாடல்கள் கூறப்படுகின்றன. சோழநாட்டில் உள்ள பௌத்தக் கோயில்களையும் புத்தர் சிலைகளையும் 1940களிலேயே அடையாளப்படுத்திய மயிலை.சீனி.வேங்கடசாமி, “கும்பகோணம் நாகேசுவரசுவாமி திருமஞ்சனவீதியில் உள்ள ஒரு விநாயகர் ஆலயத்தில் பகவரிக்ஷி என்னும் பெயருள்ள ஒரு புத்தர் உருவம் இருக்கிறது. பகவன் என்பது புத்தர் பெயர்களில் ஒன்று. புத்தருக்கு விநாயகன் என்னும் பெயர் உண்டென்று நிகண்டு நூல்கள் கூறுகின்றன. புத்தர் கோயில்கள் பல பிற்காலத்தில் விநாயகர் (பிள்ளையார்) கோயில்களாக்கப்பட்டன. இங்குள்ள விநாயகர் கோயிலும் அதில் உள்ள புத்தர் உருவமும் இதற்குச் சான்றாகும்”5 என்று இக்கோயில் ஒருகாலத்தில் பௌத்தக் கோயிலாக இருந்து பின்பு பிள்ளையார் கோயிலாக மாறியிருப்பதை உறுதிப்படுத்தி, பகவத் முனிவர் என்றழைக்கப்படும் சிலை புத்தர் சிலையே என்பதையும் குறிப்பிடுகிறார். இதனடிப்படையில் கி.பி.15ஆம் நூற்றாண்டளவில் கும்பகோணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சிலேடைக் கவிஞர் காளமேகப் புலவரின் கருத்தியலும் இங்கு கவனப்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும். கி.பி.15இல் காவிரியின் கரையில் அமைந்த கோயில்களையும் கும்பகோணம் நகரின் சில முக்கிய கோயில்களையும் அடையாளப்படுத்தும் புலவர்,
‘திருக்குடந்தை யாதிகும்பேசர் செந்தா
மரைக்குளம் கங்கை மகங்கா – விரிக்கரையின்
ஓரங்கீழ்க் கோட்டங்கா ரோணமங்கை நாயகியார்
சாரங்க பாணி தலம்’6 (தனி.பா. திரட்டு : 89)
எனும் பாடலின் மூலமாக ஆதிகும்பேஸ்வரர் கோயில், செந்தாமரைக்குளம், மகாமகக்குளம், மங்கைநாயகியார் கோயில், காரோனேஸ்வரர் கோயில், சாரங்கபாணி கோயில், போன்ற கோயில்களைக் குறிப்பிடுவதுடன் காவிரிக்கரையில் அமைந்துள்ள ‘கீழ்க்கோட்டம்’ எனும் தனிக்கோயிலையும் குறிப்பிடுகிறார். ‘கோட்டம்’ எனும் சொல்லானது கோயில்களைக் குறிக்கும் பொதுச்சொல்லாக அறியப்படினும் இது அவைதீக சமயத்திற்குரியதாகவே இலக்கியங்களில் காணப்படுகிறது. அதேவேளையில் தமிழ்மரபு சார்ந்த இனக்குழுத் தலைவனான முருகனின் கோயிலைக் குறிக்கவும் கோட்டம் எனும் சொல் தமிழ் இலக்கியங்களில் பயின்று வந்துள்ளது. புறனானூறு, முருகனின் கோயிலை ‘முருகன் கோட்டம்’ (புறம்: 229) என்கிறது. ஆனால், தமிழர் கடவுளர்களை வைதீகம் உறிஞ்சிக்கொண்டாலும் வைதீகம் சார்ந்த கடவுளர் உறையும் இடங்களைக் கோயில் என்றும் அவைதீக சமயங்களான சமண, பௌத்தக் கடவுளர்கள் உறையும் இடங்களைக் ‘கோட்டம்’ என்றும் தமிழ்க் காப்பியங்கள் வேறுப்படுத்திக்காட்டுகின்றன. பௌத்தக் காப்பியமான மணிமேகலை, சக்கரவாளக் கோட்டத்தில் பல பௌத்தக் கோட்டங்கள் நிறுவப்பட்டதை ‘காடமர் செல்வி கழிபெருங்கோட்டமும்’ (6:53) சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும் (6:59) என்றுரைக்கிறது. காவிரிப்பூம்பட்டினத்தில் சமண, பௌத்தக் கோட்டங்கள் இருந்ததையும் தமிழ் மரபின் வழிவந்த சில தெய்வங்களுக்கும் ‘கோட்டம்’ அமைக்கப்பட்டிருப்பதை சிலப்பதிகாரப் பாடலடிகள் (9:9-13) சான்று பகர்கின்றன. ஆனால், உரையாசிரியர்கள் தமிழ் மரபு சார்ந்த தெய்வக்கோட்டங்களையும் வைதீகம் சார்ந்து பார்ப்பது, தமிழ்க்கடவுளர்களையும் பிற்காலத்தில் வைதீகம் உறிஞ்சுக்கொண்டதின் அடிப்படையில் அமைந்ததாகும். வைதீகம் சார்ந்த கோயில் அடையாளங்களை முன்வைக்கும் சிலப்பதிகாரம், மன்னர்களின் அரண்மனைகளையும் வைதீகக் கடவுளர்கள் உறையும் இடங்களையும் கோயில் என்றே அடையாளப்படுத்துகிறது. இதனடிப்படையில் புகார் நகரில் நடைபெறும் இந்திரவிழாவில் நான்மறை மரபில் தீமுறை செய்யப்படுகிற கோயில்கள் வரிசையாகச் சொல்லப்படுகின்றன. இதனை,
‘பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வாள்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீலமேனி நெடியோன் கோயிலும்
(சிலம்பு : 5: 169-173)
என வரும் சிலப்பதிகார பாடலடிகள் வழியே அறியலாம். எனவே, கோயில் என்பது வைதீக அடையாளத்துடனும் ‘கோட்டம்’ என்பது சமண, பௌத்தச் சமயங்களுக்குரியதாகவே பிற்காலத்தை நோக்கி வளர்ந்துவந்துள்ளது. ‘கோட்டம்’ எனும் சொல்லின் பௌத்த அடையாளத்தினை எடுத்துரைக்கும் மயிலை. சீனி.வேங்கடசாமி, “நாகைப்பட்டினத்தில் இப்பொழுதும் ‘புத்தன்கோட்டம்’ என்னும் பெயருள்ள அக்கரகாரம் இருக்கிறதென்றும்; பண்டைக்காலத்தில் இந்த இடத்தில் பௌத்தக் கோயில் இருந்திருக்க வேண்டும் என்றும்; பௌத்தக் கோயில் அழிந்த பிறகு அந்த இடத்தில் அக்கரஹாரம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்றும் ஷி.கிருக்ஷ்ணசாமி அய்யங்கார்” கூறுவதாக குறிப்பிடுகின்றார்.7 தமிழகத்தில் இன்று காணக்கூடிய சைவ, வைணவக் கோயில்கள் அக்கடவுளர்களின் பெயருடன் கோயில் என்றே சிறப்பு பொருந்தி அழைக்கப்படுகின்றன. பக்திக்காலத்தில் தோற்றம் பெற்ற பல சைவ, வைணவக் கோயில்களைக் அடையாளப்படுத்தும் மா.இராசமாணிக்கனார் “கோயில் எனும் நிறுவனம் நாயன்மார்கள் காலத்தில் மட்டும் 335 சைவக் கோயில் தமிழகத்தில் இருந்தனவாகக் குறிப்பிடுகின்றார்.”8 எனவே, தற்காலத்தில் வழங்கிவரும் வைதீக, அவைதீக அடையாளங்களைக் கொண்டும் இலக்கியச் சான்றாதாரங்களைக் கொண்டும் கோட்டம் என்பது பௌத்தத்திற்கு உரியதாகவும் கோயில் என்பது வைதீகத்திற்கு உரியதாகவும் பிரித்துணர முடியும். இதனடிப்படையில் காளமேகப்புலவர் குறிப்பிடும் கீழ்க்கோட்டம் என்பது பௌத்தக் கோயில் என்பதுடன் இந்தப் பௌத்தக் கோயிலே இன்று வழங்கக்கூடிய பகவத் விநாயகர் கோயிலாக மாறியிருப்பதையும் அறியமுடிகிறது. பகவத் விநாயகர் கோயில் ஒரு பௌத்தக் கோயில் என்பதற்கு இக்கோயிலில் உள்ள புத்தர் சிலையே அடையாளமாய் அமைந்துள்ளது. காளமேகப்புலவர் அனைத்துக் கோயில்களையும் ‘கோட்டம்’ என்றழைக்காமல் சைவ, வைணவக் கோயில்களை மட்டுமே கோயில் என்று அடையாளப்படுத்துவதிலிருந்தே ‘கோட்டம்’ எனும் சொல் பௌத்த அடையாளத்தோடு உருவாகி வந்திருப்பதை ஊகிக்க முடிகிறது. காளமேகப்புலவரின் காலம் கி.பி.15ஆம் நூற்றாண்டு என்பதால் இப்பகவத் விநாயகர் எனும் பௌத்தக் கோயிலின் காலமும் பதினைந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாகக் கருதலாம்.
illustration : jeevan lal
புத்தர் சிலையின் ஒழுங்கமைவுகள்
பகவத் விநாயகர் கோயிலில் ‘பகவத் முனிவர்’ என்று புனைவாக்கம் செய்யப்படும் புத்தர் சிலையானது அமர்ந்த நிலையில் தியானக்கோலத்தில் அமைந்துள்ளது. தரையில் அமையாமல் பீடத்தின் மீது அமைக்கப்பட்ட இச்சிலையின் தலைமுடியானது சுருள் சுருளாக முடிக்கப்பட்டு அதன்மேல் ஞானத்தை உணர்த்தும் தீப்பிழம்பு காணப்படுகிறது. இரண்டு காதுகளும் இரண்டு தோள்களைத் தொடும் நிலையில் துளைகளுடன் நீண்டு தொங்கியபடியே உள்ளது. பிற புத்த சிலைகளின் முக பாவனைகளோடு ஒத்தமைந்த இச்சிலையின் முகமானது புன்முகத்துடன் அமைதியின் வெளிப்பாடாய் அமைந்துள்ளது. தியானத்தில் அமைந்த சற்றே மூடிய கண்களும் மூக்கின் நுனியைப் பார்த்தவண்ணம் உள்ளன.
அகண்ட நெற்றியில் திலகக்குறிக் காணப்படுகிறது. பருத்த தோள்களும் அகண்ட மார்பினையும் உடைய இச்சிலையின் வலப்பக்க மார்பில் பட்டை போன்ற சிறிய ஆடை தோளை மறைத்துச் செல்கிறது. வலக்கையானது அபயமுத்திரையிலும் இடக்கையானது மடியிலும் அமைந்துள்ளது. வலக்கையின் நடுவில் தர்மத்தினை உணர்த்தும் தர்மச்சக்கரக் குறி காணப்படுகின்றது. வலது காலானது இடதுகாலின் மேல் அமைந்த வண்ணம் தியான கோலத்தில் அமைந்திருக்கிறது. கும்பகோணம் வட்டத்தில் கி.பி.10,11ஆம் நூற்றாண்டில் கிடைத்த பல புத்தர் சிலைகள் தியானக் கோலத்தில் இரு கைகளும் மடியில் வைக்கப்பட்டிருக்கும் சிலைகளின் தியான நிலையில் இருந்து மாறி, இச்சிலையின் வலக்கையானது ஆசிர்வதிக்கும் நிலையில் அபயமுத்திரையிலும் இடக்கை மடியிலும் அமைந்துள்ளது. இதுபோன்ற சிலைகள் நாகப்பட்டினத்தில் கிடைத்த செப்புத்திருமேனிகளில் காணப்படுகின்றன. வலக்கை அபயமுத்திரையுடனும் இடக்கை மடியில் அமைந்ததுமான இச்சிலை, தற்போது அமெரிக்காவில் உள்ள அருங்கலை அருங்காட்சியகத்தில் (Fine Arts Musuem) உள்ளது.
இந்தியாவிலுள்ள பல பௌத்தக் கட்டடக்கலைக் கூறுகளையும் புத்தரின் சிலையமைதிகளையும் வெளிப்படுத்திய கு.சேதுராமன், “புத்தரின் சில சிற்பங்களில் அமர்ந்த நிலையிலான புத்தர் தனது வலது கையைத் தூக்கி அபயமுத்திரை காட்டுகிறார். இடதுகை மடியில் வைக்கப்பட்டிருக்கும்”9 என்கிறார். பகவத் விநாயகர் கோயிலில் அமைந்த புத்தர் சிலையின் அமைப்பும் கி.பி.12ஆம் நூற்றாண்டில் நாகப்பட்டினத்தில் கிடைத்த புத்தர் செப்புத் திருமேனிகளின் அமைப்பும் ஒத்துச்செல்வதால் பகவத் முனிவர் என்று அழைக்கப்படும் இப்புத்தர் சிலையும் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வடிக்கப்பட்டதாக இருக்கலாம். தமிழகத்தில் கிடைத்த பல புத்தர் சிலைகள் வலப்பக்கத் தோளினை முழுவதுமே மறைத்த நிலையில் ஆடை பரந்து விரிந்து காணப்படும் சிலை அமைப்பிலிருந்து மாறி, இச்சிலையானது சிறிய பட்டை போன்ற ஆடை அமைப்பில் காணப்படுகிறது. இதேபோல் கால்கள் முழுவதையும் மறைத்த நிலையில் ஆடையின் கோடுகள் மிக நேர்த்தியாக இச்சிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை பௌத்த சிலைகளில் ஏற்பட்ட பிற்காலத்திய மாற்றங்களில் ஒன்றாகும். நாகப்பட்டின புத்த சிலைகளும் போதிசத்துவர்களின் சிலைகளும் பல ஒப்பனைகளோடு வடிவமைக்கபட்டதைப் போன்று இப்பகவத் முனிவர் எனும் புத்தர் சிலையின் ஆடை அமைப்பும் ஒப்பனையோடு வடிவமைக்கப்பட்டுள்ளது.
சைவ, வைணவ நாயன்மார்கள், ஆழ்வார்கள் கடவுளர்களின் சிலைகள் போல் மொட்டை அடித்த நிலையிலும் கூந்தலுடனும் காணப்படும் சிலை அமைப்பில் அல்லாது, பகவர் எனும் இப்புத்த சிலையானது ஞான முடிச்சுகளுடனும் தர்மச்சக்கரத்துடனும் தியானக் கோலத்துடனும் நீண்டு தொங்கும் காதுகளுடனும் வலதுமார்பு ஆடையைக் கொண்டு அமைந்திருக்கும் நிலைப்பாடானது புத்தருக்கு மட்டுமே உரியதாகும். இத்தகைய பௌத்த உட்கூறுகளுடன் விளங்கும் இப்புத்தர் சிலையை ஆராய்ந்த பா.ஜம்புலிங்கம், “சோழநாட்டில் உள்ள புத்தர் கற்சிலைகளில் இவற்றில் அனைத்துக் கூறுகளையோ, சில கூறுகளையோ காணமுடியும். ஆனால், இக்கோயிலிலுள்ள சிலை புத்தரின் சிலைக்கான கலையமைதியைக் கொண்டிருக்கவில்லை”10 என்று மறுத்துரைக்கிறார். அனைத்துக் கூறுகளையும் இச்சிலையில் காணமுடியும் என்று கூறிய அவர், மறுத்துரைப்பதற்கான காரணங்களை விளக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
ஒருகாலத்தில் அமைந்த புத்தரின் சிலை அமைதி அடுத்த காலத்திலும் தொடர வேண்டிய அவசியமில்லை. காலத்திற்கேற்பவும் அரசியல் நிலைபாட்டிற்கேற்பவும் சிலைகளிலும் சிலை வடிவமைப்பவர்களிடமும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. பக்தி காலத் தொடக்கத்திலும் பத்தாம் நூற்றாண்டு வரையிலும் கிடைத்த புத்தர் சிலையமைதிகளில் இருந்து மாறி, கி.பி.12,14,15 நூற்றாண்டுகளில் கிடைத்த புத்தர் சிலைகள் ஆபரணங்கள் கொண்டு அலங்காரப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதனை நாகப்பட்டினத்தில் கிடைத்த செப்புத் திருமேனிகளும், கற்சிலைகளும் சான்று பகர்வனவாய் அமைந்துள்ளன. எனவே, பகவத் முனிவர் என்று வைதீகத்தால் புனைவாக்கம் செய்யப்படும் புத்தர் சிலையை மறுத்துரைப்பது என்பது வைதீகச் சார்பினை உறுதிப்படுத்திக்காட்டுகிறது.
புத்தரை பகவத் முனிவராக்கும் வைதீக தலவரலாற்றுப் புனைவுகள்
சைவ, வைணவக் கோயில்களின் தலவரலாறுகள் எதார்த்தத்திற்கு மீறிய வகையில் அமைந்திருப்பதுபோல் புத்தரை மறைப்பதற்கான தலவரலாறும் இப்பகவத் விநாயகரின் கோயிலில் புனையப்பட்டுள்ளது. இறைவனே நேரடியாக வந்து நிகழ்வினை நடத்திக்காட்டுவதாகவும் அற்புதங்களைப் புரிவதாகவும் கூறப்படும் வைதீக புராணங்கள், தலவரலாறுகள் போலவே இவ்விநாயகர் கோயிலுக்கும் தலவரலாறு கட்டமைக்கப்பட்டுள்ளது. இவ்வகையில் பகவர் எனும் முனிவர் வேதாரண்யத்திலிருந்து தனது சீடனுடன் கும்பகோணம் காவிரிக் கரைக்கு வந்ததாகவும் முனிவரின் தாய் ‘நான் இறந்த பிறகு எனது அஸ்தியைக் கலசத்தில் சேகரித்துப் புனித தலங்களுக்கு எடுத்துச்செல்; எங்கு என்னுடைய அஸ்தி மலர்களாக மாறி காட்சித்தருகிறதோ அங்கு ஓடும் நதியில் அஸ்தியைக் கரைத்துவிடு என்று கூறியதின் அடிப்படையில் முனிவரும் தன் தாய் இறந்தபிறகு அவளது விருப்பத்திற்கேற்பத் தனது சீடனுடன் காசி நோக்கிப் புறப்பட்டதாகவும்; கும்பகோணம் வந்தடைந்த முனிவர் காவிரிக்கரையில் தனது தாயின் அஸ்தியை வைத்துவிட்டு நீராடியதாகவும்; பசியால் துடித்த சீடர் குருவிற்குத் தெரியாமல் அஸ்தி மூட்டையைத் திறந்து பார்க்கையில் அவை மலர்களாக மாறியதாகவும்; பின்பு குருவான பகவத் முனிவர் கோபப்படுவார் என்றுணர்ந்த சீடர், குருவிற்குத் தெரியாமல் மூட்டையை மூடிவிட்டு இருவரும் காசிநோக்கிப் புறப்பட்டதாகவும்; காசியின் கங்கை நதியில் நீராடிய முனிவர் அஸ்தியானது மலர்களாக மாறவில்லையே என்று புலம்பியதைப் பார்த்த சீடன், கும்பகோணத்தில் அஸ்தியானது மலர்களாக மாறிய கதையினைக் கூறியதாகவும்; கும்பகோணம் நோக்கிப் புறப்பட்ட முனிவர் காவிரியில் நீராடிய பின்பு கரையில் வைத்திருந்த அஸ்தியானது மலர்களாக மாறியதைக் கண்டு வியப்புற்றதாகவும்; இதனால் கரையில் அமர்ந்திருந்த விநாயகரைக் கண்டு வணங்கியதோடு ‘காசியை விட வீசம்கொண்ட விநாயகர்’ என்று கருதி பகவத் முனிவர், விநாயகருக்குக் கோயில் எழுப்பி வழிபட்டதாகவும்; பகவத் முனிவர் கோயில் கட்டி வழிபட்டதால் இவரின் பெயராலேயே பகவத் விநாயகர் கோயில் என்று சிறப்பு பொருந்தி அழைக்கப்பட்டதாகவும் தலவரலாற்றுக் கதையாடல்கள் சொல்லப்படுகின்றன. பகவன், பகவான் என்று அழைக்கப்படும் புத்தரை மறைப்பதற்காகவே பகவத் முனிவர் எனும் தலவரலாற்றுக் கதையாடல் சைவ சமயத்திற்குத் தேவையான ஒன்றாக இருந்துவந்துள்ளது. எதார்த்தத்திற்கு மீறிய இத்தகைய தலவரலாற்றுக் கதையாடல் பௌத்தக் கோயிலின் அடையாளத்தை அழித்து சைவக்கோயிலாக மாற்றும் புனைவுகளின் அடிப்படையில் அமைந்ததாகும். ‘காசியை விட வீசம்கொண்ட விநாயகர்’ என்று ஒரு சைவக்கடவுளரைத் தாழ்த்தியும், மற்றொரு சைவக்கடவுளரை உயர்த்தியும் கூறும் நிலைப்பாடு என்பது ஒரு சமயத்திற்குள்ளான தலவரலாற்றுக் கதையாடல்களின் உண்மைத்தன்மையைச் செயலிழக்கச் செய்கிறது. ஒரு சமயம் மற்றொரு சமயத்தின் கடவுளரை தாழ்த்திக் கூறுவதும் தத்தம் சமயக் கடவுளரை உயர்த்திக் கூறுவதுமான நம்பகத்தன்மையில் இருந்து விலகிய பகவத் முனிவர் மீதான தலவரலாற்றுக் கதையாடல் ஏற்கெனவே கட்டமைக்கப்பட்டிருந்த பௌத்தக் கோயிலின் மீதான புத்தக் கதைகளின் திரிபாக்கம் என்பதைப் புலப்படுத்துகிறது.
‘காசியை விட வீசம் கொண்ட புத்தர்’ எனும் கருத்தியலே சைவ மரபிற்குள் மாற்றிக்கட்டமைக்கப்பட்டுள்ளது. பகவத் விநாயகர் எனும் புத்தக் கோயில் காவிரியின் கரையில் பெரிய அரசமரத்தின் கீழ் இருந்ததற்கேற்ப நீர்நிலையோடும் காவிரியோடும் தொடர்புபடுத்தும் நிலையில் தலவரலாறு புனைவாக்கம் செய்யப்பட்டுள்ளது. வைதீகத்தின் வக்கணைகளை விவரிக்கும் தி.சு.நடராசன், “ஆழ்வார்களும் நாயன்மார்களும் அரசுகளும் தீவிரமாகச் செயல்படுகிறபொழுது புனைவுகள், புராணிக மரபுகள் மற்றும் சமண, பௌத்தங்களை விழுங்குகிற அறிவுநிலைகள், உணர்ச்சி சூழல்கள், போர்க்கால தந்திரங்கள் என்று பலவும் வேண்டும். பலவும் இருந்தன. தமிழகத்தின் பின்னிடைக்காலத்தில் அவற்றை வழி நெடுகக் காணுகிறோம்”11 என்கிறார். இதனடிப்படையில் பௌத்தச் சமயத்தை அழிப்பதும் அதன் புராணிக மரபுகளையும் பரிவார தெய்வங்களையும் தனதாக்கிக்கொள்ளுதலுமாகிய நிலைப்பாடு என்பது சைவம், வைணவம் தழைத்தோங்கிய பிற்காலத்தில் நடைபெற்றிருப்பதை இப்பகவத் விநாயகர் மீதான புனைவாக்க நிலைப்பாடுகளிலிருந்து உய்த்துணர முடிகிறது. பக்திக் காலத்தில் தொடங்கிய அவைதீக அழிப்பு எனும் அரசியல் பயணம் பிற்காலத்திய சைவத்தின் எழுச்சியால் அதீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதனை பௌத்தக் கோட்டத்தினை அழித்து பிள்ளையார் கோயிலாக மாற்றிய கும்பகோணத்து பகவத் விநாயகர் கோயிலின் ஊடாக ஊகிக்கமுடிகிறது.
ஆதிபகவனே புத்தன்
பௌத்தம் பரப்பிய புத்தரை, மக்கள் ஆயிரம் பெயர்களைக் கொண்டு அழைத்துவந்திருப்பினும் பகவர், பகவான், பகவன் என்ற பெயர்கள் பௌத்தத்திலிருந்து வந்த பாலிமொழிப் பெயர்களாகும். பாலிமொழியில் பௌத்தம் பரப்பிய பௌத்த சமயத்தார், தமிழைக் கற்று இலக்கியங்கள் படைத்ததோடன்றி, பாலி மொழியில் வழங்கிய பௌத்தப் பெயர்களையும் பௌத்த அடையாளங்களையும் பயன்படுத்தவும் செய்தனர். இவ்வகையில் பாலிமொழிச் சொற்கள் பௌத்தர்களுக்குரிய அடையாளமாகத் திகழ்கிறது. தமிழ்ப் பௌத்தரான குறள் படைத்த வள்ளுவரும் பௌத்தமரபு பாலிமொழிச் சொற்களை, பௌத்தத் தத்துவங்களை உள்வாங்கியே திருக்குறளினைப் படைத்துள்ளார். கடவுள் வாழ்த்தில் புத்தனைப் போற்றியே ஆதிபகவன் என்று முன்னெடுத்திருக்கிறார். இவ்வகையில் ‘திரி’ எனும் பாலிமொழியில் வழங்கப்பட்ட ‘திரிக்குறளின்’ உண்மை முகம் அழிக்கப்பட்டு அவை ‘திரு’ எனும் சைவ அடையாளமிக்க நூலாக மாற்றப்பட்டுள்ளது. திரி எனும் பெயரில் அமைந்த திரிக்கடுகமும் பௌத்த நூலாகும். இதனடிப்படையில் பாலிமொழியில் எழுதப்பட்ட பௌத்த வேதமான திரிபிடகமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
பௌத்தத் தமிழ் நூலான திரிக்குறளின் (திருக்குறள்) கடவுள் வாழ்த்தில் அமைந்த ‘ஆதிபகவன்’ எனும் சொல்லின் உண்மை முகத்தினைப் பறைசாற்றும் அயோத்திதாசப் பண்டிதர், ‘அகரம் என்னும் எழுத்துப் பிற எழுத்துகளுக்கெல்லாம் முதலாக இருப்பது போல் பகவனாகிய புத்தபிரான் உலக உயிர்களுக்கெல்லாம் முதலாக இருப்பது போல் புத்தரே ஜகத்குருவும் ஆதியும் கடவுளாக ஆனதினாலும் நூலாசிரியரது மரபில் தொன்றுதொட்டு வழங்கிவரும் முதலாம் பதுமநிதியாகிய ஆதி பகவனாம் புத்தபிரானை தனது வழி நூலுக்குக் காப்பாகப் பத்துப் பாடலில் வாழ்த்திப் சிறப்பித்திருப்பதாகக் குறிப்பிடுகின்றார்.”12 பகவன் எனும் சொல் தோன்றிய காரணம் குறித்து எடுத்துரைக்கும் பண்டிதர், மக்களிடத்தில் உள்ள அறியாமை, அஞ்ஞானம் எனும் இருளை அகற்றி மெய்ஞானோதயம் செய்தபடியால் பகவன் எனும் காரணப்பெயரைப் புத்தர் பெற்றதாகக் குறிப்பிடுகிறார். அதாவது, இருளை விலக்கிய சூரியனுக்கு பகலவன் என்னும் காரணப்பெயர் உண்டானது போல் மக்களிடத்தில் உள்ள காமம், வெகுளி, மயக்கம், எனும் அஞ்ஞான இருளை அகற்றி சாந்தம், ஈகை, அன்பு எனும் மெய்ஞானத்தைச் செய்வித்தபடியால் புத்தருக்குள்ள சகஸ்திர நாமங்களில் பகவன், பகவான் என்னும் சிறப்புப் பெயரை மேலோர் வகுத்திருப்பதாகக் குறிப்பிடுகின்றார்.”13 அதுமட்டுமன்றிப் பாலிமொழியில் அமைந்த பகவன் எனும் சொல் புத்தனை அழைக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கும் நிலையை எடுத்துரைக்கும் பண்டிதர்,
“பாலி புத்தாகுணா இதிபிஸோ பகவா அறஹங்
ஸம் புத்தோ விஞ்ஞான சரண ஸம்ப்பன்னோ
ஸீகதோ லோகாவிது அநுத்தரோ
புரிஸதம் மகாரதி ஸ்ட்த்தா தேவம்
அனுஸ்ஸானங் புத்தோ பகவாதி”14
என பாலி மொழியில் அமையப்பட்ட பாடலை மேற்கோள் காட்டுவதிலிருந்தே தெளியலாம். இதனடிப்படையில் பாலி நிகண்டுகளும் புத்தனை ஆதிபகவா, பகவாமுனி, பகவாஸம்மா, ஸம்புத்தா, பகவாஜீனா, பகவாபுத்தர், பகவா மஹாமுனி என்று அழைப்பதிலிருந்து பகவான், பகவன் எனும் சொல் புத்தரைக் குறிக்கும் பெயர்களில் ஒன்று என்பது உறுதிபட விளங்குகிறது. ‘மண்டலபுருடன்’, ‘பகவனே ஈசன்’, ‘மாயோன் பங்கயன் சினனே புத்தன்’ என்றும் இடைக்காட்டுச் சித்தர், ‘ஆதிபகவனையே பசுவே அன்பாய்த் தொழுவாயேல் சோதி பரகதிதான் பசுவே சொந்த மதாகாதோ’ என்றும் திருத்தக்கத்தேவர் ‘பாடல் வண்டாற்றும் பிண்டி பகவனதானை போல்’ என்றும் குறிப்படுவது புத்தனையே என்பது தாசரின் முடிவாகும்.”15 தமிழ்ப் பௌத்தக் காப்பியமான மணிமேகலை, புத்தனை பகவன் என்று அழைப்பதைப் ‘பகவனது ஆணையின் பன்மரம் பூக்கும்’ (3:61), ‘பைந்தொடி தந்தையுடனே பகவன்’ (26:54), பைம்பூம்போதிப் பகவற்கு (28:174) எனும் மணிமேகலை பாடலடிகளும் சான்று பகர்கின்றன. ‘பகவன்’ எனும் சொல்லினைப் போன்றே ‘பகவதி’ எனம் பெண் தெய்வப் பெயர்களும் பௌத்தப் பிக்குணிகளைக் குறிக்கும் பெயராகும். பகவதி எனும் பெண் தெய்வங்களின் பௌத்த சார்பினை உறுதிப்படுத்தும் ஜே.ஆனந்தராசன், “பகவதி என்றால் பவுத்தப்பெண், பிக்குணி என்பது பொருள். ஆதலால், பகவதி அம்மன் கோயில்களும் பவுத்த கோயில்கள் ஆகும்”16 என்கிறார். எனவே, பாலி பௌத்த இலக்கியங்களும் பாலி நிகண்டுகளும் புத்தனைப் ‘பகவன்’ என்று அழைப்பதிலிருந்தே ‘பகவன்’ என்பது புத்தருக்கான பாலிமொழிச் சொல் என்பதை அறிய முடிகிறது. இதனடிப்படையில் கும்பகோணத்தில் வழங்கப்படும் பகவத் விநாயகர், பகவத் முனிவர் எனும் பெயர்களும் புத்தருக்கான பெயர் என்பதை இப்பகவத் விநாயகர் கோயிலில் அமைந்த புத்தர் சிலையைக் கொண்டே உறுதிப்படுத்தலாம். பகவனாகிய புத்தனையும் புத்தக் கோயிலையும் வைதீக சமயத்திற்குரியதாக மாற்றியமைத்தாலும் பகவன், பகவான், விநாயகர் எனும் புத்தப் பெயர்களே பௌத்தச் சமய அடையாளத்தினை வெளிப்படுத்துகிறது.
சைவ மரபில் புத்தன் (விநாயகன் பிள்ளையாராக மாறும் வைதீக புனைவுகள்)
தற்காலத்தில் வழங்கிவருகிற சைவ, வைணவக் கடவுளர்களில் விநாயகருடன் மட்டுமே புத்தர் இணைக்கப்பட்டுப் புதியதோர் வைதீக அடையாளமிக்க (பிள்ளையார்) கோயில் உருவாக்கம் என்பது விநாயகருக்கும் புத்தருக்குமான பொருத்தப்பாடுகளின் அடிப்படையில் அமைந்ததாகும். பகவன் எனும் பெயரினைப் போன்றே விநாயகர் எனும் பெயரும் புத்தருக்கான பெயர்களில் ஒன்றாகும். அஸ்வகோஸரின் ‘புத்தசரிதம்’, புத்தரை விநாயகர் என்று அழைக்கிறது (புத்தசரிதம் 56). அயோத்திதாசரின் ‘ஆதிவேதம்’ எனும் நூல் ‘விநாயகர் எனும் புத்தபிரான் பாரதத்தை மலையில் எழுதியுள்ளாரென்பதும்’ (ஆதிவேதம் – 49) என்று புத்தரை விநாயகர் என்று குறிப்பிடுகிறது.
புத்தரை விநாயகர் என்றழைப்பதற்கு ஆதாரமாய் பிங்கல நிகண்டு, ‘விரவு சாக்கையனே சைனன் விநாயகன் சினம் தவிர்த்தோன்’ என்கிறது. தமிழ் லெக்சிகன் அகராதியும், தமிழ் அகர முதலிகளும் விநாயகன் என்பதற்கு புத்தன் என்றே சான்று பகர்கிறது. விநாயகன் எனும் சொல்லின் அடியாக அமைந்த ‘நாயகன்’ எனும் சொல்லும் புத்தனைக் குறிப்பதற்குக் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளது. நாகப்பட்டினத்தில் கிடைத்த பல புத்தர் சிலைகளில் உள்ள கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்ட பெயர்களை அடையாளப்படுத்தும் T.N.ராமச்சந்திரன் ‘The Nagapatitnam and other Buddhist bronzes in the chennai museum’ எனும் நூலில் சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட புத்தர் சிலைகளில் காணப்படும் பெயர்களை வரிசைப்படுத்தியுள்ளார். அவற்றில் ‘புத்துடையான பெருமாள் நாயகர், திருமால் நாயனார், கணபதி நாயகர், கணபதி ஆழ்வார் நாயகர், புத்த உத்தமநாயகர், திருவரங்க நாயகர், அதிபுத்த நாயகர், அரியரா நாயகர், உமையர் திருவாலியாழ்வார் நாயகர், ஆளுடைய நாயகர், பெரியநாச்சி நாயகர்’17 போன்ற வாசகங்கள் காணப்படுகின்றன. இவற்றில் நாயகர், கணபதி, பெருமாள், திருமால், ஆழ்வார் போன்ற பெயர்கள் புத்தரைக் குறிப்பதற்கான பெயர்களாக இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு பௌத்தக் கல்வெட்டு வாசகங்களும் ‘நாயகர்’ என்றே முடிகிறது. பௌத்தர்களுக்குச் சிறந்த குருவாக, தலைவனாக (நாயகர்) அறியப்பட்ட புத்தர், உலக வாழ்க்கையே துன்பமயமானது என்று கருதி, துன்பத்திற்குக் காரணமான ஆசையை அகற்றி, மக்களை நல்வழிப்படுத்தி துன்பத்தை நீக்கியதாலேயே வினைதீர்த்தவன் என்னும் பொருளில் நாயகன், விநாயகனாக அழைக்கப்பட்டார். இவ்வாறு நாயகன், விநாயகன், கணபதி என்றழைக்கப்பட்ட மனித உருவத்தில் அமர்ந்த புத்தரை, யானை முகப் பிள்ளையாராக மாற்றும் அடையாள அரசியல் பிற்காலத்தில் வைதீக சமயத்தில் நிகழ்ந்துள்ளது. பெருமாள், திருமால், ஆழ்வார் போன்ற புத்தருக்கான பெயர்களெல்லாம் வைதீகக் கடவுளுக்கான பெயர்களாகப் புனையப்பட்டுள்ளன. பிற்காலத்தில் விநாயகர் என்னும் பெயருடைய புத்தக் கோயில்கள் விநாயகர் (பிள்ளையார்) ஆலயங்களாக மாற்றப்பட்டன. பழைய சைவ சமயத்தில் விநாயகர் வணக்கம் கிடையாதென்றும் கி.பி.6ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு விநாயகர் வணக்கம் சைவ சமயத்தில் புதிதாகப் புகுத்தப்பட்டதென்றும் சைவப் பெரியார் உயர்திரு.மறைமலையடிகள் போன்ற அறிஞர்கள் கூறுவதும் ஈண்டுக் கருத்தக்கது”18 என்கிறார். பௌத்த மதத்தின் அழிவினையும் சைவ சமயத்தின் வளர்ச்சியையும் பார்க்கிறபோது பௌத்தப் பெயர்களையும் பௌத்தப் பரிவார தெய்வங்களையும் தனதாக்கிக்கொள்ளும் சைவத்தின் உறிஞ்சுதல் திறனை ஊகிக்க முடிகின்றது. சைவ சமயத்தின் உறிஞ்சுதலை அடையாளப்படுத்தும் தி.சு.நடராசன், “சைவசமயம் முருகன், கொற்றவை முதலிய தெய்வங்களை மட்டுமல்ல புத்தர்களின் மற்றும் சமணர்களின் சில தெய்வங்களைக் கூட தனதாக்கிக்கொண்டுள்ளது. புத்தர்களின் சாஸ்தா அய்யனாராக – அய்யப்பனாக வடிவங்கொண்டுள்ளது. சமணர்களின் கோமுக யக்சா நந்திதேவனாகவும் அவர்களின் யக்சி இங்கு இசக்கியம்மாளாகவும் ஆகியிருக்கின்றனர். நாயன்மார்கள் அறுபத்துமூவர் என்று எண்ணிக்கையிட்டுச் சொல்வதும் சமணர் மரபிலிருந்து வந்ததே. இவ்வாறு புறச் சமய நெறிகளைக் கூட தனதாக்கிக்கொள்ளும்
உறிஞ்சித்திறன் சைவத்திற்கு அதிகம். இவற்றையெல்லாம் தனது புராண மரபு பரப்புக்குள் மிக எளிதாய் கொண்டுவருவது அதன் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்கது.”19 என்கிறார்.
இதனடிப்படையில் இன்று கும்பகோணத்தில் உள்ள பகவத் விநாயகர் என அழைக்கப்படும் கோயிலும் கி.பி.12, 13ஆம் நூற்றாண்டளவில் புத்தக்கோட்டமாக இருந்துவந்ததுடன் பிற்காலத்தில் சைவக் கோயிலாகவும் மாற்றப்பட்டுள்ளது. இதனை இக்கோயிலில் வழங்கப்படும் பகவன், பகவர், விநாயகர் எனும் புத்தப்பெயர்களைக் கொண்டும், இக்கோயிலில் உள்ள புத்தர் சிலையைக் கொண்டும் தெளியமுடிகிறது. கும்பகோணத்தை ஒட்டிய பல ஊர்களில் உள்ள சிவன் கோயில்களிலும் அவற்றுக்கு அருகிலும் புத்தர் சிலைகள் காணக்கிடைத்திருப்பதிலிருந்தும் மானம்பாடி, எலந்துறை போன்ற ஊர்களில் புத்தக் கோட்டம் இருந்திருப்பதிலிருந்தும் கும்பகோணம் ஒருகாலத்தில் பௌத்தம் செழித்த பகுதியாக விளங்கியிருப்பதை அறியமுடிகிறது. புத்தரின் பெயர்களையும் பௌத்த பரிவார தெய்வங்களையும் பௌத்தக் கோயில்களையும் வைதீக சமயங்கள் தனதாக்கிக்கொண்டாலும் சோழநாட்டில் கி.பி.16ஆம் நூற்றாண்டு வரை கிடைத்துள்ள பௌத்த சிற்பங்களும், பௌத்த தடயங்களும், தமிழ்ப் பௌத்த மரபைப் பறைசாற்றி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
அடிக்குறிப்புகள்
- கு.சேதுராமன், பௌத்த சமயக் கலை வரலாறு. பக்.229 – 2011.
- பா.ஜம்புலிங்கம், மகாமகம் காணும் கும்பகோணத்தில் பௌத்தம். தினமணி பிப்.22, 2016.
- பா.ஜம்புலிங்கம், மணலூரில் சோழர் கால புத்தர் சிலை – இந்து தமிழ்திசை – ஜன.31, 2015.
- ரவிக்குமார், தமிழ்ப் பௌத்த வரலாற்றுக்கான திறவுக்கோல் – நிறப்பிரிகை சூலை – 25 – 2014.
- மயிலை சீனி.வேங்கடசாமி – பௌத்தமும் தமிழும், ப.43, 1940.
- காளமேகப்புலவர், தனிப்பாடல் திரட்டு, ப.89.
- மயிலை சீனி.வேங்கடசாமி, மேலது, ப.48.
- தி.சு.நடராசன், தமிழகத்தில் வைதீக சமயம் (வரலாறும் வக்கணைகளும்), ப.223, 2008.
- கு.சேதுராமன், மேலது. ப. XII.
- ப.ஜம்புலிங்கம், மேலது, மகாமகக் கட்டுரை தினமணி பிப்.22, 2016.
- தி.சு.நடராஜன், மேலது.ப.15.
- ஞான.அலாய்சியஸ், அயோத்திதாசர் சிந்தனைகள். பக்.569.
- மேலது, ப.569.
- மேலது, ப.570.
- ப.மருதநாயகம், ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம். ப.96.
- ஜே.ஆனந்தரசன், பவுத்தமும் பழந்தமிழ் குடிமக்களும் ப.89.
- N.ராமச்சந்திரன், The Nagapattinam and other Buddhist bronzes in the chennai museum பக்.161-162, 2005.
- மயிலை சீனி.வேங்கடசாமி, மேலது, பக்.69.
- தி.சு.நடராசன், மேலது, பக்.209.