பூமி அனைவருக்கும் சொந்தம் என்றொரு பொதுவான கருத்து இந்தச் சமூகத்தில் பல ஆண்டுகளாக நிலவிவரும் நிலையில், அவை பொய்யென்பதே நிதர்சனம். பல நூறு ஆண்டுகளாக நிலம் என்பது எட்டாக் கனியாகவே இங்கு சில மானிட குழுக்களுக்கு இருப்பது வேதனைக்குரிய விடயம்.
இங்கே, நிலவுடைமை (உரிமை) பிரச்சினை என்பது இரு தனிநபர்களுக்கிடையே தொடங்கி இரு நாடுகளுக்கிடையேயான பிரச்சினை வரை தொடர்கிறது. எப்போது, மனிதன் தன்னுடைய நிலம் என்றும், தன்னுடைய நாடு என்றும் எல்லைகளை வரையறை செய்ய ஆரம்பித்தானோ அன்றைக்குத் தொடங்கிய நில உரிமைப் போராட்டம் இன்றுவரை முடிந்தபாடில்லை.
பல மன்னர்கள் ஆண்டனர், பல ஆட்சியாளர்கள் மாறினர், ஜமீன்தாரர் முறைகள் ஒழிக்கப்பட்டன. இருந்தும் மண்ணின் மைந்தர்களான பூர்வகுடிகள் மனுக் கொடுத்து, பட்டா கேட்டு மாய்ந்ததுதான் மிச்சம்.
ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்பு, பேரரசர்கள், சிற்றரசர்கள் என வரலாற்றாசிரியர்கள் எவ்வளவு ஆராய்ந்து பார்த்தாலும் சாதிய பாகுபாடும், உயர்வு தாழ்வும், ஐந்தாம் வர்ணம் என்று கூறப்பட்ட தலித் மக்கள் நிலவுடைமை, உரிமை பெற்றவராக இருக்கக் கூடாது என்ற நிலையே வற்புறுத்தப்பட்டது.
வாணிபத்திற்கென வந்து படிப்படியாக இங்கே சுமார் நூற்றைம்பது ஆண்டுகள் ஆட்சி செய்த ஆங்கிலேயர்களால் தலித் – பழங்குடியின மக்களுக்கு ஓரளவாவது சமூகநீதி கிடைத்தது என்றுதான் சொல்ல வேண்டும். அதிலொன்றுதான் பஞ்சமி நிலம். தலித் மக்களுக்குப் பஞ்சமி நிலங்களைக் கொடுத்தும், அவற்றை எந்தவித விற்கிரயமும் செய்யக் கூடாது என்று சட்டப்பூர்வமாகப் பதியவும் செய்தனர். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு பஞ்சமி நிலங்கள் பத்திரமாகவே இருந்தன. ஆனால், விடுதலைக்குப் பிறகு ‘ஆண்ட பரம்பரை’ என்று கருதிக்கொள்ளும் சாதி இந்துக்கள் சில அரசியல் கட்சிகளின் ஆதரவோடும், அரசு அதிகாரிகளின் அரவணைப்போடும் பஞ்சமி நிலங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். அத்தகைய ஆக்கிரமிப்புகள் தற்போதும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.
இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர், அய்யன்காளி, பிர்சா முண்டா, தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் போன்றோரின் தொண்டால் தங்களுக்கான கல்வி உரிமை, வேலைவாய்ப்புரிமை, நில உரிமை போன்ற பிரச்சினைகளுக்கு தலித் மக்கள் போராட ஆரம்பித்தனர். விளைவாக, தமிழ்நாட்டில் நில உரிமை போராட்டமென்பது இன்றளவும் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது. இப்போராட்டத்தின் வாயிலாக மீட்கப்பட வேண்டிய நிலங்கள் ஆயிரமாயிரம் ஏக்கர் கணக்கில் இருக்கின்றன. ஆனால், இச்சமூகத்தில் ஒருசில போராட்டங்களின் மூலமாக அங்கொன்றும், இங்கொன்றுமாக அரை ஏக்கர், ஒரு ஏக்கர் நிலங்களையே பெற முடிகிறதென்பதுதான் கசப்பான உண்மை.
m
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், ரெங்கநாதபுரம் கிராமத்தில் 1970 – 80 காலகட்டத்தில் பெரும் நிலவுடைமை முதலாளிகளின் பண்ணை விவசாய நிலங்களில் ஆண்டான் – அடிமை முறையில் விவசாயக் கூலிகளாக தலித் மக்கள் வேலை பார்த்துவந்தனர். அச்சமயம் தமிழ்நாடு அரசால் கொண்டுவரப்பட்ட நில உச்ச வரம்புச் சட்டத்தின் பேரில், நிலவுடைமையாளர்களிடமிருந்த விவசாய நிலங்களில் 50 ஏக்கர் முதல் 100 ஏக்கர் வரையிலான நிலங்கள் உபரி நிலங்களாகக் கணக்கிடப்பட்டு, அவற்றை அரசு மூலம் நிலமில்லா தலித் ஏழை மக்களுக்குக் கொடுக்கப்பட்டன.
‘எஜமான்’ திரைப்படத்தின் ஒரு காட்சியில் கதையின் நாயகன் மாவட்ட ஆட்சியரிடம் “என்னுடைய நிலத்தில் அதிக அளவு ஏதுமில்லை. நானே எங்கள் ஊரிலுள்ள குப்பன், சுப்பனுக்கு எழுதி வைத்துவிட்டேன்” என்று கூறுவார். உண்மையில் அதுதான் தமிழ்நாடு நில உச்சவரம்பு நிலங்களின் இன்றைய நிலை.
m
மேற்படி ரெங்கநாதபுரம் கிராமத்தில் பெரும் நிலவுடைமையாளராக இருந்த திரு.ராஜாராம் நாயுடு என்பவரின் நிலத்தை மேற்கூறிய சட்டத்தின்படி அரசு கையகப்படுத்தியிருந்தாலும், அவரது அரசியலதிகாரம் மற்றும் பண பலத்தால் அவரின் பண்ணையில் வேலை பார்த்த நாகப்பன், ஏழை முத்து, ராமலிங்கம் போன்ற தலித் கூலி விவசாயிகளின் பேரில் நிலத்தைப் பெற்றுக்கொண்டு மீண்டும் அவரே ஆண்டு அனுபவித்துவந்துள்ளார். அவரைத் தொடர்ந்து அவரது வாரிசுகளும் தற்போதுவரை தலித் ஏழை மக்களை ஏமாற்றி பயிர் செய்து உண்டு கொழுத்துவருகிறார்கள்.
நிலத்தின் உரிமையாளராக இருந்தும் தங்களின் நிலத்தில் வேறு யாரோ உண்டு கொழிக்க உறுதுணையாகவும், கேட்கத் திராணியில்லாமலும் தனக்குச் சொந்தமான நிலங்களில் பயிரிட முடியாமலும் தலித் கூலி விவசாயிகள் நிற்கிறார்கள்.
இருப்பினும், கடந்த 1980 காலகட்டத்தில் ராஜாராம் நாயுடுவின் சட்டவிரோதமான செயல்களைத் தெரிந்துகொண்ட அன்றைய தென்னாற்காடு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் விவசாய அணியில் முக்கியப் பொறுப்பு வகித்தவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஐயா. இளையபெருமாள் அவர்களிடத்தில் மிக நெருக்கமான தொடர்பில் இருந்தவருமான ஐயா.மதனசாமி என்பவர் பல்வேறு போராட்டத்திற்குப் பிறகு தன் பெயரில் மனு கொடுத்து ராஜாராம் நாயுடுவின் உபரி நிலத்தில் சுமார் 90 செண்ட் விவசாய நிலத்தைப் பெற்றுள்ளார். ஆனால், அரசியலதிகாரம் மற்றும் பண பலத்தால் ராஜாராம் நாயுடு மீண்டும் குத்தகை என்ற பெயரில் ஐயா மதனசாமியின் நிலத்தில் தானே பயிர் செய்துவந்துள்ளார்.
m
ராஜாராம் நாயுடு மறைவிற்குப் பிறகு அவரது வாரிசுகள் அந்நிலத்தைப் பயிரிட்டுவந்துள்ளனர். ஆனால், ஐயா மதனசாமியின் இளைய மகன் சிவக்குமார் என்பவர் தனது தந்தையின் பெயரிலுள்ள நிலத்தில் பயிர் செய்ய முற்பட்டபோது அதை ராஜாராம் நாயுடுவின் வாரிசுகள் தடுத்துள்ளனர். அதன்பின் சிவக்குமார் உரிமையியல் வழக்குத் தொடுத்து, அது நிலுவையிலுள்ளது. இந்நிலையில் ராஜாராம் நாயுடுவின் வாரிசுகள் குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் சிவக்குமார் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் பொய் புகாரளிக்க, அதிகாரிகளும் ஆதிக்கச் சாதி மனநிலையில் செயல்பட்டு, ஐயா மதனசாமி பெயரிலுள்ள சொத்தை அவரது வாரிசுகள் அனுபவிப்பதைத் தடுக்க சிவக்குமார் மீதும், அவரது குடும்பத்தார் மீதும் முதல் தகவலறிக்கை பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, ஐயா மதனசாமி பெயரிலுள்ள சொத்தைப் பொறுத்து அவரது வாரிசுகள் எவ்வித பதிவு நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாதென்று ராஜாராம் நாயுடுவின் வாரிசுகள் குறிஞ்சிப்பாடி சார் பதிவாளரிடம் மனு அளித்துள்ளனர். மேலும், ஐயா மதனசாமி பெயரிலுள்ள அந்த நிலத்திற்குண்டான பட்டாவை ரத்து செய்ய கடலூர் வருவாய்க் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.
இவற்றை எதிர்த்து ராஜாராம் நாயுடுவின் வாரிசுகள் மீது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் புகாரளித்தும் நடவடிக்கை ஏதுமில்லை.
கடைசி முயற்சியாகத் தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்திடம் இருமுறை முறையிட்டும் எவ்விதப் பலனுமில்லை. வேங்கைவயல் பிரச்சினையே இவர்களின் காதுக்கு எட்டவில்லை. இதையெல்லாம் ஒரு பிரச்சினையாகவா பார்க்கப் போகிறார்கள்!
m
இதுபோன்று ஓராயிரம் சிவக்குமார்கள் எங்கோ ஓர் மூலையில் தன் நில உரிமைத் தொடர்பாகப் போராடிக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கான தீர்வு என்ன? ஏழை தலித் விவசாயிகள் நிலமிருந்தும் இங்கே நிலமற்ற கூலி விவசாயத் தொழிலாளர்களாகவே தங்களின் வாழ்வை முடித்துக்கொள்கிறார்கள். அரசு நிலம் வழங்கியும் அதை உரிமை கொள்ள இயலாத சூழல் இன்றளவும் தொடர்வது அவலம்.