இந்த ஆண்டு கொச்சி பினாலே (2022-2023) கலை விழாவை முன்னிட்டு மட்டாஞ்சேரியில் நடைபெற்ற ‘கடல் – ஒரு கொதிக்கும் பாத்திரம்’ என்னும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த சவுட்டு நாடகக் கலைஞர்களின் படங்கள் கலை ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. நாடகக் கலைஞர்களைத் தமது கேமராவில் பதிவுசெய்த கெ.ஆர்.சுனில், கேரள மாநிலம் கொடுங்கல்லூரைச் சேர்ந்தவர். சவுட்டு நாடகத்தைப் பற்றியும் சவுட்டு நாடகக் கலைஞர்களின் வாழ்வு குறித்தும் மாத்ருபூமி மலையாள வார இதழில் (05/03/2023) அவர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.
கொடுங்கல்லூருக்கு அருகில் பெரியாற்றின் கிளைத்தீவுகளில் ஒன்றான கோதுருத்தில் 2015ஆம் ஆண்டு சுவடி விழாவில்தான் (chuvadi fest 2015) முதன்முதலாகச் சவுட்டு நாடகத்தைப் பார்த்தேன். காயலின் அருகில் தேவாலயத்தை ஒட்டிச் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்த அரங்கில், ஐந்து நாட்களாக நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. ஐரோப்பிய ஓப்பரே (opera) நாடகத்தை நினைவுபடுத்துகிற உடையலங்காரமும், அசாதாரணமான உடல் மொழியும், வேகமான அடவுகளும் சவுட்டு நாடகத்தைப் புதிய அனுபவமாக்கின. பள்ளுருத்தி ஊரைச் சேர்ந்த சோமநாதன் என்பவர் நாடக ஒப்பனைக்காகத் தினமும் வந்துகொண்டிருந்தார். ஒப்பனையின்போது அவருக்கு முன்னால் இருப்பவர்கள் கதாபாத்திரங்களாக மாறிக்கொண்டிருப்பதை வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தேன். தொடக்கக் காலங்களில் கோதுருத்து, கொச்சி முதலான கடலோர மக்கள் சவுட்டு நாடகத்தில் ஆதிக்கம் செலுத்தியிருந்தார்கள். ஒப்பனைக்கு இடையே சவுட்டு நாடகத்தைக் குறித்துப் பல்வேறு விசயங்களை அவர் சொன்னார். முந்தைய கால பாலே கலைஞனும் குழுவை நடத்திக்கொண்டிருந்தவருமான அவர் கடந்த கால நாடக நினைவுகளில் சஞ்சரிக்கும்போது நானும் அவர் கூடவே பயணித்தேன்.
கொச்சிக்குத் தெற்கிலுள்ள செல்லானம் பகுதியைச் சேர்ந்த சவுட்டு நாடகக் கலைஞர்களின் வரவு ஒரு புதிய கொண்டாட்டத்தின் தொடக்கமாக இருந்தது. கடலிலும் காயலிலும் வேலை செய்கிற அவர்கள் உடல் வலிமையுள்ளவர்களாகவும் கபடமற்றவர்களாகவும் இருந்தார்கள். அவர்களுடன் நெருங்கிப் பழகுவதற்கு எனக்கு அதிக நேரமாகவில்லை. இறால் பண்ணையில் வேலை செய்கிற சிலோசும், மீன் வியாபாரி சேவியரும், பெயிண்டர் கிளீட்டசும், கொத்த வேலை செய்யும் வாப்பனும், கடலில் மீன் பிடிக்கச் செல்லும் பொனிப்பாசும், சினிமா பித்தனாக இருந்தாலும் நாடகத்திற்கு நேரம் ஒதுக்கும் மோளி கண்ணமாலியெல்லாம் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். செல்லானம் கடற்கரையின் மீனவர்களும் கூலித் தொழிலாளர்களும் நாடக மேடையில் இராஜாக்களாகவும் போர் வீரர்களாகவும் நின்று பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினர். அறுபது வயதைக் கடந்த மோளி கண்ணமாலி இராணியாக வந்து அற்புதப்படுத்தினார். அவர்களது நாடகத்தைப் பற்றிப் பேசுவதற்கு நிறைய அம்சங்கள் இருக்கின்றன. தலித் கிறிஸ்தவர்களாகயிருந்த அவர்களது நாடகக் காட்சிகள் மற்றவர்களைக் காட்டிலும் வேறுபட்டுத் தமிழ் மொழியில் இருந்தது. அவர்களின் மேடை மொழியும் உடல் பாவமும் வினோதமாக இருந்தன.
வரலாற்றின் வழியே:
போர்த்துகீசியரின் ஆளுகைக்கு உட்பட்ட 16, 17 நூற்றாண்டுகளில் கொடுங்கல்லூர், கொச்சி முதலான கடல் பிரதேசங்களில் சவுட்டு நாடகக் கலை வடிவம் உருவானது. கேரளத்திலுள்ள கிறிஸ்தவ விசுவாசிகளை மத நம்பிக்கையில் ஆழப்படுத்தும்படியாகப் போர்த்துகீசிய மிசனரிகளால் உருவாக்கப்பட்டதே சவுட்டு நாடகமாகும். கடலோடு உழன்று வாழ்வை நகர்த்துகிற இலத்தீன் கத்தோலிக்கர்கள் இந்தக் கலை வடிவத்தைப் பரவலாக்கினர். 17ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் ‘காரல்மான் சரித்திரம்’ போன்ற நாடகங்கள், இரண்டு வார காலம் தொடர்ந்து இராத்திரிகளில் நடத்தும் வண்ணம் நீளம் கொண்டவையாக இருந்தன. போர்த்துகீஸ் ஓப்பரே மற்றும் களரி, யக்சகானம், நடுவா, தெருக்கூத்து முதலான உள்நாட்டுக் கலை வடிவங்களின் ஒருங்கிணைந்த தாக்கம் சவுட்டு நாடகத்தில் தெளிவாகத் தெரிகிறது. சங்கீத நாட்டிய நாடகப் பாணி இதனது மற்றொரு தனித்துவமாகும். ஐரோப்பிய புனிதர்கள், போர் வீரர்களின் வீரக் கதைகள் கேரளத்துக் கடற்கரைகளில் வாழும் சாமான்ய மக்களிடத்தில் வந்து சேருவதற்குச் சவுட்டு நாடகங்கள் முக்கிய காரணமாயிருந்தன. கொடுங்கல்லூரின் அருகிலுள்ள சாவக்காடு முதல் கொல்லம் வரையுள்ள போர்த்துகீசியரின் ஆளுகைக்கு உட்பட்ட கடற்கரைப் பகுதிகளில் சவுட்டு நாடகங்கள் அதிகமாக நிகழ்த்தப்பட்டன. ஏறக்குறைய முன்னூறு ஆண்டுகளுக்கு முன், தமிழ்நாட்டின் தென்காசியிலிருந்து வந்து கொச்சி, கொடுங்கல்லூர் முதலான பிரதேசங்களில் பதினேழு வருட காலம் தங்கியிருந்ததாகக் கருதப்படும் தமிழ்க்கவியும் பண்டிதருமான சின்னத்தம்பி அண்ணாவி, சவுட்டு நாடக ஆசிரியர்களில் மிகவும் முக்கியமானவர். எர்ணாகுளம் கோதுருத்தில் அவரை நினைவுகூரும் பொருட்டு அவருக்குச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
விடுதலைக்குப் பிந்தைய கலை:
நூற்றாண்டுகள் தொடர்ந்த வெளிநாட்டினரின் ஆக்கிரமிப்புகள் முடிவுக்கு வந்து அவர்கள் நாடு விட்டுப் போன பின்பும், அவர்களது செல்வாக்கினால் உருவான சவுட்டு நாடகம் இங்கே நிலைகொண்டது. கோதுருத்து, கொச்சி தொடங்கி ஆலப்புழை வரையுள்ள கடலோரப் பகுதிகளில் அக்கலையைத் தங்களது ஆன்மாவோடு சேர்த்துப் பிடித்திருந்த சிலர் எஞ்சியிருந்தார்கள். பின் நாட்களில் நாடகக் காட்சிகளின் நீளம் இரண்டு மூன்று மணி நேரமாகக் குறைந்தது. நவீன காலத்தில் பல்வேறு கலைகளைப் பார்ப்பதற்கான வாய்ப்புகள் உருவானபோது, சவுட்டு நாடகம் போலுள்ள பண்டையக் கலைகள் அதன் முக்கியத்துவத்தை இழக்கத் தொடங்கியிருந்தன.
வாழ்க்கையின் இரு முனைகளிலும் நின்று போராடுகிற சவுட்டு நாடகக் கலைஞர்கள், கலைக்கும் தங்கள் வாழ்க்கைப் போராட்டத்திற்குமிடையில் நின்று தவிக்கிறார்கள். 1999இல் மாநில அரசின் முயற்சியில் கொச்சியில் ஒருவார காலம் நடத்தப்பட்ட சவுட்டு நாடகக் கலை விழா, அந்தக் கலைஞர்களுக்குப் புதிய உத்வேகத்தைக் கொடுத்ததோடு பத்திரிகைகளும் சிறப்பான முறையில் அவற்றைச் செய்திகளாக்கின. கோதுருத்து கலை ஆர்வலர்களும் முசரீஸ் பினாலேயும் இணைந்து, 2012 டிசம்பரில் சுவடி விழாவை (chuvadi fest 2012) நடத்தியதும் இன்னொரு திருப்புமுனையாக அமைந்தது.
தமிழ்ச் சுவடிகளின் வழியே:
கண்ணமாலியில் புதிய சவுட்டு நாடகப் பயிற்சி துவங்கியது என்ற தகவலுடன் சிலோசின் அழைப்பு வந்ததும், சற்றும் தாமதிக்காமல் கேமராவையும் எடுத்துக்கொண்டு கிளம்பினேன். ஃபோர்ட் கொச்சிக்கு அருகிலுள்ள தோப்பும்படியிலிருந்து செல்லானத்துக்குச் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தேன். மீன் வியாபாரம் செய்யும் பெண்களும் சாமானியப் பயணிகளும் பேருந்தில் நிறைந்திருந்தார்கள். நீரோடைகளும், வள்ளங்களும், இறால் பண்ணைகளும், தேவாலயங்களும், குருசடிகளும் அமைந்திருந்த கடற்கரையோரமாகப் பேருந்து போய்க்கொண்டிருந்தது. கொச்சிக்கு மறுபுறத்தில் முற்றிலும் மாறுபட்ட வேறொரு நிலப்பரப்பு!
சாலையோரத்தில் இறால் கருவாடு விற்குமிடத்தின் அருகில் சிலோஸ் காத்துக்கொண்டிருந்தார். ஓடையோடு சேர்ந்த வழியோரமாக நடந்து சிலோஸின் வீட்டிற்கு முதலில் சென்றோம். முற்றத்தில் விரித்துப் போடப்பட்டிருந்த தார்ப்பாலில் இறால் மீன்கள் உலர்ந்துகொண்டிருந்தன. காலங்காலமாகக் குவிந்து கிடக்கும் குப்பைகள் நிறைந்த தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதி. உப்புத்தண்ணீரில் ஊறி சுவர்கள் இற்றுப் போன வீட்டில் குழந்தைகளும் வயோதிகர்களுமடங்கிய சிலோஸின் குடும்பம் வாழ்கிறது. சவுட்டு நாடகத்தைப் பற்றிப் பேசும்போது எல்லோர் முகங்களிலும் மகிழ்ச்சி. நாடகத்திற்காக சிலோஸ் சொந்தமாக உருவாக்கியிருந்த வாளையும், முத்துக்கள் ஒட்டி அலங்கரித்திருந்த கிரீடத்தையும் காட்டினார். அங்கு சற்று நேரத்தைச் செலவழித்தப் பிறகு, கண்ணமாலிக்கு அருகிலுள்ள கடற்கரையில் நடக்கும் சவுட்டு நாடக ஒத்திகைத் தளத்திற்குச் சென்றோம். மீனவர்கள் நெருங்கி வாழ்கின்ற வீடுகளின் இடையேயுள்ள சிறிய இடுக்குகள் வழியே நடந்தோம். கிளார்நெட் ஊதுகுழல் மற்றும் டிரம்ஸின் மேளச் சத்தமும் தூரத்தில் கேட்டுக்கொண்டிருந்தன. தாளத்திற்கு ஏற்றாற்போல் ஆடிக்கொண்டிருந்த சிறுவர்களை வழியோரத்தில் கண்டோம். ஊர்க்காரர்கள் சிலரும் இசை வந்த திசையை நோக்கி நடந்துகொண்டிருந்தார்கள். ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை நீளும் பயிற்சிக்குப் பிறகே இசைக்கருவிகளுடனான கடைசி ஒத்திகையை நடத்துவார்கள்.
கடலுக்கருகில் தார்ப்பால் விரிப்பினை இழுத்துக் கட்டி தற்காலிக அரங்கத்தை உருவாக்கியிருந்தார்கள். வீடுகளின் சின்னத் திண்ணைகளிலும் மணற்பரப்பிலும் அமர்ந்துகொண்டு, குழந்தைகள் பெண்கள் முதலான ஊர் மக்கள் நாடக ஒத்திகையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். காட்டுப்பறம்பு சேவு ஆசான்தான் நாடக இயக்குநர். மீன் வியாபாரம் முடிந்த பிறகு அவர் கலைக்காக நேரத்தை ஒதுக்குகிறார். இசைக்கருவிகளை வாசிக்க வந்த கலைஞர்களிடமும் நான் அறிமுகமானேன். மழைக்காலமாக இருந்ததினால் கடல் அலைகளின் முழக்கம் அதிகமாகக் கேட்டுக்கொண்டேயிருந்தது.
பழைய காலச் சவுட்டு நாடகக் கலைஞர்கள் சிலரும் அங்கேயிருந்தார்கள். உண்மையில் அது ஒரு திருவிழாக் காட்சியாக இருந்தது. கடலை நம்பி வாழ்க்கையை நடத்துகிற சாதாரண கிறிஸ்தவர்களின் வாழ்வில், சவுட்டு நாடகம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனைக் கண்கூடாகக் காண முடிந்தது.
‘தியாக வீரன்’ என்கிற அந்த நாடகத்தில் சிலோஸுக்கு மந்திரிகுமாரனின் வேடம் கொடுக்கப்பட்டிருந்தது. நாடகத்தில் ஐம்பது வருடக்கால அனுபவமுள்ள உமாதேவி என்பவர் சிலோஸின் தாய் கதாபாத்திரத்தில் நடித்தார். புதிய தலைமுறைப் பெண்கள் நாடகம் நடிப்பதற்காக வருவது முற்றிலும் குறைந்து போனது. அதனால் பல நாடகங்களிலும் உமாதேவி, மோளி கண்ணமாலி போன்ற வயது முதிர்ந்த பெண்களே நடிக்கிறார்கள். அன்றைய நாடக ஒத்திகையில் வாச்சன் என்று அழைக்கப்படுகிற செபாஸ்ற்றியன் என்கிற நடிகர் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். மலையாள மொழியினுடைய பழைய வடிவம் செந்தமிழாக இருந்த காரணத்தினால், தொடக்கக் காலச் சவுட்டு நாடகப் பிரதிகளெல்லாம் முற்றிலும் தமிழிலேயே இருந்தன. சின்னத்தம்பி அண்ணாவியுடைய செல்வாக்கும் இதற்கொரு காரணமாக இருந்திருக்கலாம். ஃபோர்ட் கொச்சியில் வாழ்ந்த ஆயுர்வேத மருத்துவரும் சவுட்டு நாடக வசனகர்த்தாவுமான வி.ஜெ.ஜான் மாஸ்டர், 1950இல் ‘காரல்மான்ஸ் சரித்திரம்’ என்கிற தமிழ் சவுட்டு நாடகத்தை முதன்முதலாக மலையாள மொழியில் அரங்கேற்றினார். அதனைத் தொடர்ந்து மற்ற சவுட்டு நாடகப் பிரதிகளும் மலையாளத்திற்கு மாறத் தொடங்கின. இவ்வாறாக மலையாளப் பிரதிகள் வட கேரளத்திலும் பரவின. மேலும், கோதுருத்து போன்ற பகுதிகளில் பின்பாட்டு பாடுவதற்கு ஏற்றார்போல மேடையில் நடித்தால் போதும் என்கிற மாற்றமும் நிகழ்ந்தது. (முன்பு பாடிக்கொண்டே நடிக்கவும் செய்ய வேண்டும் என்கிற பாணி இருந்தது.) பாடக்கூடிய சிரமம் குறைந்ததும், அடவுகள் போட்டு நடிப்பது அவர்களுக்கு மிகவும் எளிதானதாக மாறியது. நவீன காலத்திற்கு ஏற்றார்போல் பல்வேறு மாற்றங்களை நாடகங்களில் புகுத்தினார்கள். ஆனால், ஆலப்புழை மாவட்டத்தின் பள்ளித்தோடு துவங்கி ஃபோர்ட் கொச்சி வரையுள்ள பகுதிகளில், தமிழ் மொழியில் அவர்களே பாடி ஆடி நடிக்கும் முறை இன்றும் தொடர்கிறது. சவுட்டு நாடகம் என்னும் பழங்கால கலையின் தனித்துவம் இப்பகுதி மக்களாலேயே பாதுகாக்கப்படுகிறது.
காலநிலை மாற்றத்தின் பலியாடுகள்:
கடலரிப்பு அல்லது கடல் ஆக்கிரமிப்பு என்றாலே மலையாளிகளுக்கு உடனே நினைவுக்கு வருவது செல்லானம் பகுதிதான் ஒவ்வொரு கடலரிப்புக் காலத்திலும் செல்லானத்தில் கடல் இடித்துத் தள்ளிய வீடுகளின் படங்களை நாம் பத்திரிகைகளில் பார்த்திருக்கிறோம். கடல் சீற்றக் காலத்தில் நிவாரண முகாம்களில் அவர்கள் அகதிகளாகத் தஞ்சமடைகிறார்கள். வருடந்தோறும் உப்புநீரில் ஊறி இற்றுப்போன வீடுகளில் கதியற்ற நிலையில் அவர்கள் வாழ்கிறார்கள். தலித் கிறிஸ்தவர்களாகிய அவர்களின் துயரங்களை அரசிற்கு மனுக்களாகக் கொடுக்கத் துவங்கி காலங்கள் கடந்துவிட்டன. செல்லானம் முதலான கடற்கரைக் கிராமங்களைக் கடல் விழுங்கத் துவங்கியபோது, சவுட்டு நாடகம் என்கிற பாரம்பரியக் கலையும் வெள்ளத்தில் மூழ்கத் துவங்கியது.
கடல் சீற்றம் காரணமாக வீட்டையும் ஊரையும்விட்டு வெளியேறிய, ஆன்றனி என்கிற சவுட்டு நாடகக் கலைஞனை ஒரு நாடக ஒத்திகையின்போது சந்தித்தேன். அவரைப் போலவே பலரது நிலையும் பரிதாபகரமாக உள்ளது. செல்லானத்தில் கடலோடியாக இருக்கும் டோல்பின் ஆசான் உருவாக்கிய ‘மாய வீரன்’ என்னும் சவுட்டு நாடகம், மேடை ஏறுவதற்கு இரண்டு வருடக் காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. நாடகம் போடுவதற்கான பணத்தைப் புரட்டுவதில் ஏற்பட்ட காலதாமதம் மட்டுமின்றி, எதிர்பாராமல் ஏற்பட்ட கடலரிப்புமே தாமதத்திற்குக் காரணமாயிருந்தன. நான் கேமராவுடன் சென்றபோது, வழக்கமாக அவர்கள் பயிற்சி எடுக்கும் இடம் முழுமையாகக் கடலடியில் இருந்தது. மக்கள் அத்தியாவசியப் பொருட்களைத் தூக்கிக்கொண்டு தூரத்திலுள்ள பள்ளிக்கூடத்திற்கு அடைக்கலம் தேடி ஓடினார்கள். உப்புநீர் ஏறி வீட்டு உபயோகப் பொருட்களெல்லாம் நசிந்துபோகும் என்பதே அவர்களின் கவலையாக இருந்தது. சவுட்டு நாடகத்திற்கு உடைகளை வாடகைக்குக் கொடுக்கும் ஜோசி என்கிற தையல் கலைஞனின் வீட்டிற்கு ஒருநாள் சென்றபோது, வீட்டுடன் இருந்த சிறிய அறையை அவர் திறந்து காட்டினார். நீண்ட நாட்கள் வேலை செய்து உருவாக்கிய, சித்திர வேலைப்பாடுகள் கொண்ட உடைகளெல்லாம், சகதி வெள்ளத்தில் நசிந்து போயிருந்தன.
முன் நாட்களில், பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் பல நாட்களாகத் தொடரும் சவுட்டு நாடகங்களில் பங்கெடுத்த பலரும் இன்றும் அந்தக் கடற்கரையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நம்மிடம் சொல்வதற்கு நிறைய அனுபவக் கதைகள் இருந்தன. பொதுவாகத் தங்களது ஆசான்களிடமிருந்தோ, மூத்தவர்களிடமிருந்தோ கிடைத்த சவுட்டு நாடகத்தின் எழுத்துப் பிரதியை யாருக்கும் கொடுக்கவோ, பிரதி எடுக்கவோ செய்வதில்லை. எனவே, ஒரு நாடகத்திற்கு ஒரு கையெழுத்துப் பிரதி மட்டுமே இருக்கும். இப்படிப்பட்ட விசித்திரமான நம்பிக்கைகளையும் இவர்கள் பின்பற்றுகிறார்கள். இந்தப் பயணத்தில் வயது முதிர்ந்தவர்களைத்தான் அதிகமும் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் தொழில்முறை நாடகக் கலைஞர்களைப் போல தங்களுக்கென ஓர் அமைப்பையோ சொந்தமாக ஒப்பனைப் பொருட்களையோ வைத்திருக்கவில்லை. ஊர்த் திருவிழாக்களை மட்டுமே நம்பி ஒருங்கிணைந்து செயல்படுகிறவர்களாக இருக்கிறார்கள். சவுட்டு நாடகம் நடத்துவதன் மூலம் வருவாய் ஒன்றும் கிடைப்பதில்லை என்றாலும், அதனை நிகழ்த்துவதற்கு அதிக பணம் செலவாகிறது. இருந்தபோதிலும் அக்கலையை மிகவும் நேசிக்கிறார்கள். வாழ்க்கையை நகர்த்துவதற்குப் பெரும் பாடுபடுகிற அவர்களுக்கு இறுதியில் மிஞ்சுவது வேதனைகள் மட்டுமே! எந்நேரம் வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருக்கும் அவர்களுடைய வீடுகளும், துன்பம் நிறைந்த வாழ்க்கைச் சூழல்களுமே அதற்கான சாட்சியங்கள். மேடையில் அரசனாகவும் அரசியாகவும் ஜொலிக்கின்றவர்களின் எதார்த்த வாழ்வு அழுக்கில் உழல்வது என்பது எந்த அளவிற்கு முரணானது!
ஒருமுறை செல்லானத்தின் வீட்டு முற்றங்களில் நடந்து, சவுட்டு நாடக ஒத்திகைக் காட்சிகளைப் படம் பிடித்த பிறகு பேருந்து நிறுத்த நிழற்குடையின் கீழ் அமர்ந்திருந்தேன், அப்போது கூடவே அமர்ந்திருந்த வாச்சன் வழக்கத்துக்கு மாறாக என்னோடு அதிகமாக உரையாடினார். அடுத்ததாக அரங்கேற்றப்போகிற நாடகத்தில் தான் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தார். கருத்து மெலிந்த தனது தேகத்தில் இராஜா வேடம் அணியும்போது உருவாகும் தன்னம்பிக்கை குறித்தும், தான் அந்தக் கதாபாத்திரமாக மாறும்போது கிடைக்கும் மகிழ்ச்சி குறித்தும் அவர் மனம் திறந்தார்.
மலையாளிகளின் மைய நீரோட்டத்திலிருந்து விளிம்பு நிலையில் ஒதுங்கியிருப்பவர்கள், சவுட்டு நாடகக் கலையை எந்த அளவிற்கு உயர்த்திப் பிடித்திருக்கிறார்கள் என்பதற்கு வாச்சன் சாட்சியாக இருக்கிறார். குடும்பத்தோடு வசிப்பதற்கு இடிந்து விழாத ஒரு வீடு வேண்டும் என்பது அவருடைய கனவுகளில் ஒன்றாக இருந்தது. அன்று இருட்டிய பிறகே அவரிடமிருந்து விடைபெற முடிந்தது. பின்னர் பெருமழையால் இருண்ட நாட்களிலும் அவருடன் செல்பேசியில் தொடர்புகொண்டு பேசினேன். எதிர்காலம் விடியுமென்றும் சவுட்டு நாடகங்கள் இனியும் மேடையேறுமென்றும் அவர் திடமாக நம்பினார். ஆனால், சிறிது நாட்களுக்குப் பிறகு செல்லானத்திலிருந்து சிலோஸின் அழைப்பு வந்தது; வாச்சனின் மரணச் செய்தியைச் சொல்வதற்கு…
வாச்சனின் மரணம் பத்திரிகைகளில் சிறு செய்தியாகக் கூட இடம்பெறவில்லை. அந்தக் கடலோரப் பயணங்களில் சந்தித்த, வெளி உலகம் அறியாத பெரும் கலைஞர்களின் முகங்கள் எனது மனக்கண் முன்னே வந்து போயின. இருள் நிறைந்த வாழ்க்கைச் சூழலில் நின்றுகொண்டு வண்ணமயமான உடைகள் அணிந்து இராஜாவும் இராணியுமாகத் தங்களைப் பாவித்து மேடையில் ஆடுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, “சவுட்டு நாடகம் என்பது நாங்கள் இங்கே வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதனைச் சமூகத்திற்கு உரக்கச் சொல்லும் ஒரு போராட்டக் களமாகவே இருக்கிறது!”