எத்தனை நாட்கள் இப்படியே
செல்லுமென ஒருபோதும் நினைப்பதேயில்லை
எனக்கென்று எல்லாவற்றையும் கேட்டுக்கொள்வதுமில்லை
கோடைகாலத்தில் நீருக்கு அலையும்
பறவையைப் போல
தினமும் கதறிக்கொண்டிருக்கிறேன்
அந்தக் கதறலை
யாரிடமும் சொன்னதுமில்லை
கேட்க யாரும் வரப்போவதுமில்லை
என்ன செய்ய
என்னுடன் வெகுநாட்களாய் இருப்பவை
இந்த நான்கு சுவர்கள் மட்டுமே.
இனி வருந்துவதற்கு ஏதுமில்லை
இந்த வழியாக வந்துபோகும் அவர்கள்
என் வீட்டைப் பார்க்கக்கூட மாட்டார்கள்
வீட்டின்
கதவும் சன்னல்களும்
அவர்கள்மீது ஒருபோதும்
கோபம் கொண்டதில்லை
நீலம் சிவப்பு கருப்பு எனும்
அந்த மூன்று புகைப்படங்கள்
அவர்களை அமரச் செய்யவில்லையோ என்னவோ
எப்படியோ
திண்ணைக்குக் கீழே கிடக்கும்
என் தேய்ந்துபோன செருப்பை மட்டும்
அவர்கள் பார்த்துச் செல்வதுண்டு.