“நாளைய உலகம் கறுப்பாகவும் சகோதரத்துவத்துடனும் இருக்கும்” – மால்கம் எக்ஸ்

சந்திப்பு: அலெக்ஸ் ஹேலி | தமிழாக்கம்: ஷஹிதா

1965 பிப்ரவரி 21 அன்று ஹார்லெமின் ஆடுபான் நடனக்கூடத்தில் மால்கம் எக்ஸ் சுட்டு வீழ்த்தப்பட்டார். மாபெரும் மதத் தலைவரும் அரசியல் ஆளுமையுமான மால்கம் எக்ஸைக் கொன்று வீழ்த்திய குண்டுமழையை நேரில் பார்த்த சாட்சிகளில் ஒருவர் அவருடைய மகள் கபீலா ஷாபாஷ். அப்போது அவருக்கு நான்கு வயது. பிற்பாடு அவர் தன்னுடைய தந்தையின் கடும் எதிரியான லூயிஸ் ஃபராகானைக் கொல்வதற்கான சதித் திட்டத்தில் சிக்கவைக்கப்பட்டார். மால்கம் எக்ஸின் வாழ்வும் மரணமும், மரணத்துக்குப் பிறகு அவர் குறித்த சர்ச்சைகளும் ஓய்ந்தபாடில்லை. இது, ப்ளேபாய் மே 1963இல் பதிவுசெய்யப்பட்ட மால்கம் எக்ஸின் புகழ்பெற்ற நேர்காணல். கேள்விகளைக் கேட்டவர் ஆப்பிரிக்க – அமெரிக்க இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பான ‘வேர்கள்’ நூலின் ஆசிரியரும், மால்கம் எக்ஸின் தன்வரலாற்று நூலின் துணையாசிரியருமான அலெக்ஸ் ஹேலி.

குடியுரிமைக்கான போராட்டத்தில் தீவிரப் பங்காற்றிவந்த அமெரிக்க நீக்ரோவின் வீரியம் இந்த ஐந்து வருடங்களுக்குள்ளாக நாளுக்கு நாள் அதிகமாகி வருவதைப் பார்க்கிறோம். நிபந்தனைகளற்ற சமத்துவமும் ஒன்றிணைப்புமே தங்கள் இலட்சியம் என்று உரக்கக் குரல் கொடுக்கும் இந்தக் கிளர்ச்சிக்காரர்கள் அவர்களுடைய எதிர் அணியினரான இனவொதுக்கவாதிகளை எதிர்த்துப் பேரணிகள் மற்றும் ஃப்ரீடம் ரைடுகளில்* தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர். இன்று இவர்கள் இனவெறி, பிரித்தல்வாதம் என்ற இரண்டடுக்குத் துவேஷங்களைக் கையில் பிடித்திருக்கும் வெள்ளை மேலாதிக்கவாதிகளையும் கறுப்பின முஸ்லிம்களையும் சேர்த்து எதிர்கொள்ள வேண்டியுள்ளது. சில வருடங்களுக்கு முன்புவரை பேரளவு அறியப்படாதிருந்ததும் கவனம் பெறாதிருந்ததுமான தீவிர மத நம்பிக்கைவாத மரபாக இருந்த நீக்ரோக்களின் ‘முஸ்லிம்கள்’ அமைப்பு, இன்று ஒழுங்கமைக்கப்பட்டதும் அர்ப்பணிப்புக் கூடியதுமான நாடுதழுவிய இயக்கமாக உருப்பெற்றிருக்கிறது. அவர்களுக்கென்றே ஆன பள்ளிகள், செய்திப் பத்திரிகை, கடைகள், நான்கு பெருநகரங்களில் உணவு விடுதிகள் என்று நடத்துவதுடன் நாடெங்கும் உள்ள 50 வானொலி நிலையங்களில் ஒலிபரப்பு நேரத்தையும் அவர்கள் வைத்திருக்கின்றனர். பிரிவினையை ஆதரிக்கும் 10,000 க்கும் அதிகமான மக்களோடு பேரணிகளையும் நடத்திவரும் இந்த அமைப்புக்கென்று ‘Fruit of Islam’ என்ற பெயரில் ஜூடோ பயிற்சி பெற்ற சிறப்புக் காவல் துறையும் இருக்கிறது.

‘சாத்தான்’ என்று இவர்களால் விளிக்கப்படும் வெள்ளையர்களை விட கறுப்பர்கள் ஒழுக்கரீதியாக, ஆன்மிக ரீதியாக, புத்தி ரீதியாக மேலானவர்கள் என்ற திட்டவட்டமான நம்பிக்கை கொண்டிருக்கும் முஸ்லிம்கள், வெகு அண்மையில் நிகழவிருக்கும் ஆர்மகெடான் எனப்படும் ஆக்க அழிவு சக்திகளுக்கிடையிலான இறுதி யுத்தத்தில் வெள்ளையர்கள் நாசமாவார்கள் என்கிறார்கள். ‘மரணத்துக்குப் பின்னான சுவர்க்கம்’ என்ற மயக்கத்தில் ஆழ்த்தும் வாக்குறுதியை நீக்ரோக்களுக்குக் கொடுத்து, சமூகத்தில் அவர்களின் பின்தங்கிய நிலையை ஏற்றுக்கொள்ள வைத்த போதைப் பொருளான கிறிஸ்தவமும் அழிந்துபோகும் என்பது முஸ்லிம்களின் சித்தாந்தம்.

ஜார்ஜியாவில் பிறந்தவரும், முன்னாள் தொழிற்சாலை பணியாளரும், இன்று ஆயிரக்கணக்கான மக்களின் நிபந்தனைகளற்ற கீழ்ப்பணிவை அடைந்துகொண்டிருப்பவருமான, அல்லாஹ்வின் தூதர் என்று பிரகடனப்படுத்திக்கொண்டிருக்கும் எலிஜா பூலே யால், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தின் கூறுகளை ஒன்றிணைத்து (இரண்டு சமயங்களும் அதிகாரப் பூர்வமாகவும் முற்றுமுழுதாகவும் இதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டபோதும்), ஹிட்லரின் ஆரிய இனக் கொள்கையின் கறுப்பின – மீயுயர்வு ஒப்புருவாக உருவாக்கப்பட்ட முஸ்லிமிஸம், 1931இல் தோற்றுவிக்கப்பட்டது. இவரின் வலது கையாக நிற்பவர் 36 வயதான மால்கம் லிட்டில். உயர்ந்ததும் மெலிந்ததுமான உடல்வாகு கொண்ட இவர், ஒருகாலத்தில் இரயிலில் உணவு தயாரிக்கும் பெட்டி ஒன்றில் மேலாளராகப் பணிபுரிந்தவர். கள்ளச் சாராயம் காய்ச்சுபவராக, விபச்சாரத் தரகராக, போதைப் பொருள் கடத்தல்காரராக இருந்தவர். 1952இல் சிறையிலிருந்து வெளியான இவர், முஹம்மத் அவர்களின் தூதுரையைச் சிரமேற்கொண்டு தன்னுடைய அடிமைக் காலப் பெயரான லிட்டில் என்பதைத் துறந்து அதற்கு இடுகுறியான ஙீஐ (அறியப்படாதவர் எனும் பொருளில்) தன் பெயரோடு சேர்த்துக்கொண்டார். புகைத்தல், குடித்தல், சூதாட்டம், தெய்வ நிந்தனை, நடனம் இவற்றோடு ஒழுங்குகளுக்கு உட்படுத்தப்படாத காமம் ஆகியவற்றிலிருந்து விலகியிருந்து, முஸ்லிம்களுக்குக் கட்டாயமாக்கப்பட்ட விதிகளைப் பின்பற்றுவதாகச் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். துடிப்பான இந்த இளைஞர் வெகு சீக்கிரத்திலேயே எலிஜாவின் முதன்மைச் சீடர் என்ற இடத்துக்கு உயர்ந்தார். இன்று முஹம்மதுக்குச் சொந்தமான தொழில்களை நிர்வகிப்பவராகவும், அவருடைய பிரதான அமைச்சராகவும், அவருடைய அறிவிக்கப்படாத வாரிசாகவும் இருக்கிறார் மால்கம் எக்ஸ்.

அறிவும் விழிப்புணர்வுமே வெறுப்பு எனும் விஷத்துக்கு முறிவு மருந்தாகக் கூடியவை என்ற நம்பிக்கையில் மால்கம் எக்ஸிடம் அவருடைய இயக்கத்தின் குறிக்கோள்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த குறுக்காய்வை ப்ளேபாயோடு பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டோம். பின்வரும் நேர்காணல் ஹார்லெமில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஓர் உணவு விடுதியில் தனித்திருந்த ஒரு மேசையில் நிகழ்ந்தது. கேள்விகளுக்கான அவருடைய பதில்கள் அவர் அவ்வப்போது அருந்திய கறுப்பு ஆப்பிரிக்கக் காபியின் மிடறுகள் மற்றும் உதவியாளர்களுடனான ஆழ்ந்த உரையாடல்களால் ஒருசில நிமிடங்களுக்கு மட்டும் தடைபட்டது. ஹார்லெம் முஸ்லிம் டெம்பிள் எண் ஏழின் அமைச்சரும் அடர் நிற சூட் அணிந்திருந்தவருமான மால்கம் எக்ஸ், உணர்வு வயப்பட்டு வெள்ளையர்களை ஒட்டுமொத்தமாக வெறுத்துப் பேசிய சில தருணங்கள் தவிர, தன்னுறுதிமிக்க ஒரு கார்ப்பரேட் தலைவரைப் போன்ற, உணர்வுகளை வெளிப்படுத்தாத தொனியில் பேசினார்.

அவர் பேசியதைக் கேட்கும் பலர் அதிர்ச்சியடைவார்கள்; மற்றவர்கள் சீற்றங்கொள்வார்கள். இந்த நேர்காணல் காத்திரமிக்க வாக்குமூலமாக இருக்கும். அதே வேளையில் இனவெறியை அம்பலப்படுத்திக்கொள்ளும் – கண்டனத்துக்கு உட்படுத்தப்பட வேண்டிய – கருத்துக் கோவையாகவும் இருக்கும் என்றே நாங்கள் நினைக்கிறோம். இதற்கான தகுதிப்பாடு என்று நாங்கள் நினைப்பது பிரசுரித்தலையும் வாசிப்பையுமே.

கறுப்பின முஸ்லிம்களின் குறிக்கோள்தான் என்ன?

சுதந்திரம், சமநீதி, சமத்துவம். இவற்றோடு மதிப்புக்குரிய எலிஜா முஹம்மத் அவர்களைப் பற்றுறுதியுடன் பின்தொடர்வதுமே ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இலட்சியமாகும். எங்களைப் பற்றியும் எங்கள் இனத்தைக் குறித்தும் நாங்கள் சரியாகப் புரிந்துகொள்ள எங்களுக்குப் போதிப்பவர் திரு.முஹம்மத். அறரீதியாக, மனரீதியாக, ஆன்மீக ரீதியாக எங்களுக்குத் தெளிவு உண்டாகச் செய்கிறார். இந்த மேற்குலகில் எங்கள் கண்களைக் கட்டியிருந்த பட்டிகளை நீக்கி எங்களைத் திருத்துகிறார்; குடிக்கு அடிமையாவதிலிருந்து கறுப்பின ஆண்களைக் காக்கிறார்; போதைப் பழக்கத்திலிருந்து விடுபட வைக்கிறார்; நிக்கோட்டின் பழக்கத்திலிருந்தும், சூதாட்டம், திருட்டு, பொய், புரட்டு, முறைகேடான உறவுகள், விபச்சாரம், சிறுபிராயத்துத் தீச்செயல்கள் ஆகியவற்றிலிருந்தும் காக்கிறார். எங்களை விசாரணை செய்ய வேண்டுமென்று யாரும் சொல்லும்போது நான் இதையெல்லாம்தான் நினைத்துப் பார்ப்பேன். எலிஜா முஹம்மதை விசாரணை செய்வதா? வெள்ளையர்கள் குவித்து வைத்த குப்பைகளை எல்லாம் துப்புரவு செய்துகொண்டிருக்கும் இவருக்கு இவர்கள் ஆதரவல்லவா அளிக்க வேண்டும். அரசு நிதியுதவியை நம்பி வாழ்ந்த கறுப்பர்களைத் தற்சார்புடையவர்களாக மாற்றி அரசுக்குக் கோடிக்கணக்கான டாலர்களை மிச்சம் பிடித்துக்கொடுக்கிறார். எங்கள் இனத்தை நேசிக்க எங்களுக்குக் கற்றுத்தருகிறார். கறுப்பர்கள் தங்களைத் தாங்களே தாழ்வானவர்கள் எனக் கருதவும், ஒருவரையொருவர் வெறுக்கவும், தங்களுக்குள்ளாகவே பிளவுண்டு இருக்கவுமே இங்கு வெள்ளையர் பழக்கி வைத்திருந்தனர். முஹம்மத் எங்களுக்கிடையிலான அன்பை மீட்டுத் தருகிறார், அப்படியாக நாங்கள் ஒத்திசைவுடனும் ஒற்றுமையாகவும் பணிபுரிய முடிகிறது. எங்களுடைய திறமைகளையும் நிதியையும் ஒன்று குவித்து ஒரு பொதுவான குறிக்கோளினை அடைவதற்கு வழிகாட்டுகிறார். இப்போது எங்களுடைய மற்ற செயல்பாடுகளுக்கிடையில், இந்நாட்டின் பெருநகரங்களில் நாங்கள் தொழில் துவங்கி நடத்துகிறோம், இன்னமும் பல தொழில்களைத் துவங்க விரும்புகிறோம். எங்களின் பொருளாதார வளத்தை மேம்படுத்தி, சேமிப்பை அதிகரிப்பதே அதிமுக்கியமான செயல்பாடுகள் என்று முஹம்மத் எங்களுக்குப் போதிக்கிறார். ஆனால், இதைச் சாதிக்க எங்களுக்கென்று சொந்தமாக நிலம் வேண்டும். தொடர் மூளைச் சலவைக்கு ஆளாகியிருக்கும் கறுப்பர்களால் தற்சார்பு இருந்தாலேயொழிய தங்களுடைய சொந்தக் கால்களில் நிற்க முடியாது. எங்களுக்குத் தேவையானவற்றை நாங்களே உற்பத்தி செய்துகொள்ள வேண்டும். எங்களுக்கென்று சொந்தமான தொழிற்சாலைகள் இருந்தால்தான் எங்களுக்கு நாங்களே வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொள்ள முடியும். வெள்ளையர்கள் இதை எதிர்க்கிறார்கள். காரணம், எங்களை அவர்களுடைய கட்டை விரலுக்குக் கீழேயே அதாவது, ஆட்சி அதிகாரத்துக்கு உட்படுத்தியே வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான். வேலை, உணவு, உடுப்பு, குடியிருப்பு, கல்வி என எல்லாவற்றுக்கும் வெள்ளையர்களை அண்டியிருப்பவர்களாகவே எங்களை வைத்திருக்க விரும்புகிறார்கள். தாங்கள் மேலாதிக்கம் செய்யும் நிலையில் இருக்கும் ஒருவனை இழக்க வெள்ளையர்கள் விரும்புவதே இல்லை. வளர்ச்சிக்கு வாய்ப்பே இல்லாத இடத்திலும், தங்களுடைய கண்காணிப்பிலேயே கறுப்பர்களை வைத்திருக்க வேண்டுமென்று அவர்கள் நினைக்கிறார்கள். எப்படி எங்களுடைய இருப்பு அவர்களுக்கு ஒருபொருட்டே இல்லையோ அதேபோல அவர்களிடமிருந்து விலகும் கணமே எங்கள் வாழ்க்கைக்கும் அவர்கள் தேவை இல்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம் என்று முஹம்மத் எங்களுக்குக் கற்பிக்கிறார். வெள்ளையர்களிடமிருந்து பிரிந்து, தம் இனத்துக்காக என்னவெல்லாம் செய்துகொள்ள முடியும் என்பதை மட்டும் கறுப்பர்கள் உணர்ந்துகொண்டால், அவர்களுடைய முழு ஆற்றலும் வெளிப்படும். அப்படியாக அவர்கள் தங்களைத் தாண்டிச் சென்றுவிடுவார்கள் என்பதை வெள்ளையர்கள் நன்கு அறிவார்கள்.

கறுப்பு முஸ்லிம்களின் இலட்சியமான ‘பல மாநிலங்களை’ அடைந்துகொள்ளுதல் என்பதை நடைமுறைப்படுத்த முடியும் என்று நினைக்கிறீர்களா?

நடைமுறைப்படுத்த இயலாத எத்தனையோ விஷயங்களைச் சாத்தியமாக்கலாம் என்று நாம் முன்பும் கருதியிருக்கிறோம். இன்றளவும் ‘பிரித்துவைத்தலை ஒழிக்கும்’ சட்டத்தின் மீதான உடன்படல் என்பது வெறும் எட்டுச் சதவிகிதமாகவே இருக்கிறது. ஆனாலும், உச்ச நீதிமன்றத்தில் அந்தச் சட்டம் ஒன்பது வருடங்களுக்கு முன்பாகவே பிறப்பிக்கப்பட்டுவிடவில்லையா? உள்நாட்டுக் கலகம் நிகழ்ந்து நூறு வருடங்களுக்குப் பிறகும் கறுப்பின மக்களுக்கு விடுதலை கிடைக்கவில்லை என்பதுதானே இங்கு நடைமுறை. ஒன்றிணைவுக்கான ஆவணத்தில் குடியரசுத் தலைவர், காங்கிரஸ், உச்ச நீதிமன்றம் என்று எல்லோரின் ஒப்புதலும் இருக்கின்றன. ஆனாலும் ஒன்றிணைவு எங்கிருக்கிறது? உங்களால் காட்டிவிட முடியுமா? இதுதானே நடைமுறை. நடைமுறைக்குச் சாத்தியப்படக்கூடிய ஒன்றைத்தான் முஹம்மத் எங்களுக்குப் போதிக்கிறார். அதுதான் பிரிந்திருத்தல். அது இணைந்திருத்தலைக் காட்டிலும் இயற்கையானது.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கறுப்பின எழுத்தாளரும் பேராசிரியருமான லூயி லோமாக்ஸ் “வெள்ளை அதிகார மேலாதிக்கத்துக்கு எதிரான முஸ்லிம்களின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்காவின் 20,000,000 கறுப்பின மக்களில் எண்பது சதவிகிதத்தினராவது இசைவு தெரிவித்திருக்கிறோம்தான். ஆனால், அதற்காக, பிரிந்துபோதல் எனும் அவர்களுடைய சித்தாந்தத்திலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற அவர்களுடைய முன்வைப்புகளிலும் எங்களுக்கு ஒப்புதல் உண்டு என்று அர்த்தமில்லை” என்கிறார். நீக்ரோக்களின் ஒருமித்த அபிப்பிராயமாக இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளலாமா? ஆமென்றால், பிரிந்துபோதல் மற்றும் கிறிஸ்தவ எதிர்ப்பு ஆகிய உங்களுடைய கொள்கைகளால் உங்கள் இன மக்கள் தங்களுக்குள்ளாகவே அந்நியப்படும் நிலை உண்டாகுமே?

எங்கள் நிலைப்பாடு கறுப்பினத்தவருக்குள்ளே அந்நியப்படுதலை உண்டாக்கும் என்று சொல்பவர்களின் பேச்சை நம்புவதில் அர்த்தமே இல்லை. என்னைப் பொறுத்தவரை கறுப்பின மக்களில் தொன்னூறு விழுக்காட்டினரின் ஆதரவு எங்களுக்கு உண்டு. அமெரிக்காவில் 20.000,000 செயலூக்கமற்ற முஸ்லிம்கள் இருக்கிறார்கள். எங்களுக்கு முஸ்லிமும் கறுப்பினத்தவரும் ஒன்றுதான். வாரத்தின் ஏழு நாட்களும் தேவாலயத்துக்குச் செல்பவராக அவர் இருந்தாலும் ஒரு வேறுபாடும் இல்லை. ஒரு கறுப்பினத்தவன் பிறக்கும்போது இயற்கையாகவே முஸ்லிமாகத்தான் பிறக்கிறான் என்று எலிஜா முஹம்மத் சொல்கிறார். கோடிக்கணக்கான முஸ்லிம்கள் இன்னமும் இதை அறிந்துகொள்ளவில்லை. ஆனால், அத்தனை பேரும் விழித்தெழும் வேளையில் முஸ்லிம்களாகவே எழுவார்கள். இறுதித் தீர்ப்பு நாள் என்பது அதுதான்.

உங்களுக்கோர் இரகசியத்தைச் சொல்லட்டுமா: வெள்ளையர்கள் நினைப்பதைக் காட்டிலும் கறுப்பர்கள் பன்மடங்கு புத்திசாலிகள். வெள்ளைக்காரனை முட்டாளாக அடித்து அவர்கள் இந்த மண்ணில் காலம் தள்ளியிருக்கிறார்கள். ஆடி திரிந்துகொண்டிருந்ததால் அவர்களுடைய திறமையை வெள்ளையர்கள் ஒருபோதும் அறிந்துகொள்ளவில்லை. அந்நியப்படுத்தப்படுகிறோம் என்று புலம்பும் நடுத்தர வர்க்கத்து நீக்ரோ, வெள்ளையனின் மேசையில் மீந்திருக்கும் ரொட்டித் துண்டுகளுக்காகத்தான் அப்படிப் பேசுகிறான். இந்த நீக்ரோ வெள்ளைக்காரனைப் போல பாவனை செய்வதிலேயே கவனம் செலுத்திக்கொண்டிருப்பதால் அவனுடைய சொந்த இன மக்களின் கூட்டு மனம் சிந்தித்துக்கொண்டிருப்பதை அறியமாட்டான். நல்ல காரும், வீடும், துணிமணிகளும், போதைப் பொருட்களும் கிடைத்திருப்பதாலேயே தன்னுடைய ஏழை கறுப்புச் சகோதரனிடமிருந்து தான் வேறுபட்டவன் என்று நினைத்துக்கொள்கிறான். ஆனால், நிச்சயமாக அல்லாஹ், கறுப்பின மக்களை விழித்தெழச் செய்து வெள்ளையன் உண்மையில் எப்படிப்பட்டவன் என்பதைப் பார்க்க வைப்பதுடன் கிறிஸ்தவம் அவர்களை எதற்கெல்லாம் ஆளாக்கியது என்பதையும் காணச் செய்வான் என்கிறார் முஹம்மத். விழித்துவிட்டிருக்கும் கறுப்பர்கள் யாரும் இனியும் கிறிஸ்தவத்தில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. கிருஸ்தவம் கறுப்பர்களுக்குச் செய்வதெல்லாம் அவர்களை அடிமைகளாய் வைத்திருப்பது மட்டும்தான். முஹம்மத் சொல்கிறார், கிறிஸ்தவம் வெள்ளையர்களுக்குப் பூமியிலேயே சுவர்கத்தைக் காண்பித்துவிடுகிறது. கறுப்பர்களுக்குத் தருவதென்னவோ நரகத்தை மட்டும்தான். கிறிஸ்தவத்தைப் பொறுத்தமட்டில் கறுப்பர்கள் கொள்ள வேண்டிய நம்பிக்கை: தாங்கள் இறந்த பிறகு தங்கச் சாலைகளையும், பாலும் தேனும் நிரம்பிய மேகங்களையும் கொண்ட ஒரு நகரத்துக்கு நீந்திச் செல்வோம் என்பது. “நாளைக்கு நாம் போவோம் பழம்பெரும் பியூலா நிலத்துக்கு” என்று கிறிஸ்தவப் பிரச்சாரகர்கள் கூவுவதை வட அமெரிக்காவின் கறுப்பர்கள் கேட்டிருப்பார்களே. ஆனால், சிந்திக்கும் ஆற்றலுள்ள கறுப்பர் கூட்டத்துக்கு முஹம்மதின் நிலத்தின் மீதே ஆர்வம். எலிஜா முஹம்மதின் போதனைகளில் வாக்களிக்கப்பட்டிருக்கும் அந்த நிலம் இங்கே இந்தப் பூமியில்தான் இருக்கிறது. புத்திக்கூர்மையுள்ள இன்றைய கறுப்பர்களுக்கு, அவர்களுடைய பிரச்சினைகளுக்கு அவர்கள் உயிரோடிருக்கும்போதே, இப்போதே, இந்தப் பூமியிலேயே தீர்வைத் தரக்கூடிய ஒரு சமய சித்தாந்தத்தின் மீதே ஆர்வம்.

பைபிளின் முன்னறிவித்தல் நிறைவேறிவிட்டதைக் காட்டும் பிரதிநிதியாகவே எங்களுக்கு எலிஜா முஹம்மத் திகழ்கிறார். பழைய ஏற்பாட்டில் தன்னுடைய எதிரி ஃபாரோ செங்கடலில் மூழ்குவதைக் காணப் பிழைத்திருந்தார் மோசஸ். முஹம்மதும் தன்னுடைய எதிரியைத் தன் வாழ்நாளிலேயே வெற்றிகொள்வார்.

உங்கள் அமைப்பின் செய்திப் பத்திரிகை முஹம்மத் ஸ்பீக்ஸ்இல் ‘முன்னறிவிக்கப்பட்டதும் அண்மையில் நிகழப் போவதும்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும் ஆர்மகெடான் எனும் இறுதிப் போராட்டத்தைத்தான் நீங்கள் குறிப்பிடுகிறீர்களா?

ஆர்மகெடான் என்பது இறைவனுக்கும் சாத்தானுக்குமான இறுதிப் போர். மூன்றாம் உலகப் போரே இறுதிப்போர் என்று பல வெள்ளை அரசியல் தலைவர்கள் பேசுகிறார்கள். அதற்குப் பிறகு போர்களே இருக்காது, ஏனென்றால், போர் புரியத்தக்க யாரும் இருக்கப்போவதில்லை. இறுதிப் போராட்டம் (ஆர்மகெடான்) எந்த வடிவத்தில் எப்போது வருமென்று எனக்குத் தெரியாது. ஆனால், வெள்ளையர்களின் அழிவுக்காலம் நெருங்கிவிட்டதென்று எனக்குத் தெரியும். எல்லா அறிகுறிகளும் இதோ நம்மிடையே இருக்கின்றன. பத்து வருடங்களுக்கு முன்பு தென் பகுதியைச் சேர்ந்த ஒரு நீக்ரோவுக்குப் பணம் கொடுத்தால்கூட உள்ளூரில் அனுசரிக்கப்படும் பழக்கங்களைக் கைவிடவே மாட்டான். ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. கறுப்பர்களின் ஆப்பிரிக்காவில் பிரிட்டிஷ் சிங்கத்தின் வால் ஒட்ட நறுக்கப்பட்டுவிட்டது. வருங்காலப் பேரரசாகி இருக்கக் கூடிய டச்சுகளை இந்தோனேஷியர்கள் ஓட ஓட விரட்டியடித்துவிட்டார்கள். அல்ஜீரியா தங்களுடையது என்று நூற்றாண்டுக் காலம் நம்பியிருந்த பிரென்சுக்காரர்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பிரான்சுக்கு ஓட வேண்டியதாயிற்று. சார், நான் சொல்ல வருவது இதைத்தான்: எல்லாம் வல்ல வெள்ளையர்களின் முன் பயத்தில் நடுங்கியபடி நின்றுகொண்டிருந்த பழைய காலமெல்லாம் மலையேறிவிட்டது.

நீங்கள் முன்னறிவிக்கிறார்போல் முஸ்லிம்கள் இறுதியில் அதிகாரத்தைக் கைப்பற்றியே விட்டார்களென்றால் வெள்ளையர்களை என்ன செய்வதாய் உத்தேசம்?

நாங்கள் என்ன செய்வோம் என்பதல்ல, இறைவன் வெள்ளையர்களை என்ன செய்யப் போகிறான் என்பதுதான் விஷயம். குற்றவாளிகளை நீதிபதி என்ன செய்வார்? ஒன்று குற்றவாளி மனம் வருந்தி பாவமன்னிப்புக் கேட்பான் அல்லது இறைவன் தண்டனையை நிறைவேற்றுவான்.

வெள்ளையர்களைக் ‘குற்றவாளிகள்’ என்றும் ‘எதிரி’ என்றும் விளிக்கிறீர்கள்; அவர்களை இறைவன் பழிதீர்ப்பான் என்று நம்புகிறீர்கள்; அதோடு முற்றுமுழுதாக வெள்ளை இனத்தவரிடமிருந்து பிரிந்துபோக வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறீர்கள். உங்கள் இயக்கம் இனத் துவேஷத்தின் பேரால் ஆனது என்பதைத்தானே இது நிரூபிக்கிறது?

400 வருடங்களில் இப்போதுதான், வெள்ளையர்கள் கறுப்பர்களை மூளைச்சலவை செய்து, உண்மையான வரலாற்றை மறைத்து, அவர்களுடைய தன்னம்பிக்கையைத் திருடிக்கொண்டார்கள் என்பதை எலிஜா முஹம்மத் வாயிலாக நாங்கள் அறிந்துகொள்கிறோம். வெள்ளை எதிர்ப்பு, கிறிஸ்தவ எதிர்ப்பு என்பது குறித்ததல்ல இது. வெள்ளையர்களின் உண்மையான முகத்தை அறிந்துகொள்வதைப் பற்றியது என்று கறுப்பர்கள் முதல்முறையாகப் புரிந்துகொள்கிறார்கள். நாங்கள் அநீதிக்கு எதிரானவர்கள், ஒடுக்கப்படுதலுக்கு எதிரானவர்கள். அடிமைத்தனத்துக்கு எதிராய் இருந்துகொண்டே அடிமைப்படுத்துபவர்களுக்கு ஆதரவளிக்க முடியாதே; குற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்துக்கொண்டே குற்றவாளிக்கு ஆதரவளிக்க முடியாதே. சொல்லப்போனால் எலிஜா முஹம்மதின் கூற்றுப்படி இளைய தலைமுறை வெள்ளையர்கள் தங்களுடைய உண்மை வரலாற்றை மட்டும் படித்தார்களானால் அவர்களே வெள்ளையர்களுக்கு எதிராகச் செயல்படுவார்கள்.

நீங்களும் அப்படித்தானா?

‘போதும், நாங்கள் வெள்ளையர்களை நேசித்தவரைக்கும் போதும்’ என்று ஒரு கறுப்பர் சொல்வதைக் கேட்டுவிட்டாலே அவன் தன்னை வெறுப்பதாக வெள்ளைக்காரன் குற்றம் சாட்டக் கிளம்பிவிடுவான். எலிஜா முஹம்மத் எங்களுக்கு வெறுப்பைப் போதிப்பதில்லை. எலிஜா முஹம்மதும் அவரைப் பின்பற்றுகிறவர்களும் தங்களுடைய நேரத்தை வீணாக்கி வெறுக்கிற அளவுக்கெல்லாம் வெள்ளையன் முக்கியமானவன் அல்ல. உலகத்துக் கறுப்பர்கள் அத்தனை பேரும் அவனுக்கு அடுத்த இடத்தில் ஒண்டிக்கொள்ளத் துடிப்பதாக அவன் தன்னைத் தானே மூளைச் சலவை செய்துகொண்டிருக்கிறான். எங்கள் பேச்சைக் கேட்க நேர்ந்துவிட்டாலோ அவனால் அதை நம்பவே முடிவதில்லை, அவனில் உள்ள எல்லாக் காற்றையும் பிடுங்கிவிட்டது போல ஆகிவிடுகிறான். அவனுடன் இருக்க விரும்பவில்லை என்பதையும் அவனைப் போலச் செய்வதில் எங்களுக்கு விருப்பம் இல்லை என்பதையும் நாங்கள் சொன்னால் அவன் தடுமாறிப்போகிறான். தன்னுடைய 300 வருடகால கட்டுக்கதையை அவன் மீண்டும் பரிசீலிக்க வேண்டி வந்துவிடுகிறது. எனக்குத் தெரிய வேண்டியது இதுதான்: அவனுடைய விரல்களிலிருந்து கறுப்பர்களின் ரத்தம் வழிந்துகொண்டிருக்கும்போது கறுப்பர்கள் தன்னை வெறுக்கிறார்களா என்று கேட்கும் தைரியம் அவனுக்கு எங்கிருந்து வந்தது? இப்படிக் கேட்க அவனுக்கு எவ்வளவு நெஞ்சுரம் இருக்க வேண்டும்.

பாரிஸிலிருந்து அமெரிக்காவுக்குப் பறந்துகொண்டிருந்த விமானம் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த அட்லாண்டாவைச் சேர்ந்த 120 வெள்ளையர்கள் கொல்லப்பட்ட “நற்செய்தியை” அல்லாஹ் உங்களுக்கு அறிவித்தார் என்று பிரகடனம் செய்தீர்களே! அதையும், வெறுப்பில் விருப்பமில்லை எனும் உங்கள் சூளுரையையும் எப்படி விளக்குவீர்கள்?

அதை நீதியின் தீர்ப்பாய்ப் பார்க்கிறேன், எதை விதைத்தாயோ அதையே அறுப்பாய் எனும் தீர்ப்பாய். கறுப்பனின் கழுத்தைக் கயிறு இறுக்குவதைக் கண்டு வெள்ளையன் களிக்கொண்டாடியிருக்கிறான்; அநியாயமாக அடித்துத் தீயிலிடப்பட்ட கறுப்பனைச் சுற்றிவந்து களிக்கொண்டாடியிருக்கிறான். கறுப்பர்களின் ஒரே தெய்வமான அல்லாஹ் எங்களுக்கான நீதியை நிலைநாட்டத்தானே செய்வான். எங்கள் இறைவன் எங்கள் எதிரியின் மீது துன்பத்தை இறக்கித் தன் வல்லமையைக் காட்டும்போது நாங்கள் மகிழத்தானே வேண்டும். இங்கே எங்களை அடிமைப்படுத்தி, ஒடுக்கி, சுரண்டிய குற்றவாளிகளான வெள்ளை இனம் இறைவனின் எல்லாம் வல்ல கோபத்திற்கு ஆளாகும் என்று முஸ்லிம்களாகிய நாங்கள் நம்புகிறோம். பண்பட்ட சமூகங்கள் அத்தனையிலும் சமூக எதிரிகள் என்று பிரகடனம் செய்யப்பட்டவர்களான கொலைகாரர்கள் மற்றும் கடத்தல்காரர்களுக்குத் தீர்ப்பாக மரண தண்டனையை வழங்க நீதிமன்றங்கள் இருக்கும். அமெரிக்காவில் 20,000,000 கறுப்பர்கள் இருக்கிறார்கள் என்பதே அங்கிள் சாம் ஒரு கடத்தல் குற்றவாளி என்பதற்குப் போதுமான ஆதாரமாகிறது. மேஃப்ளவரில் நாங்களாக விரும்பி ஏறியா இங்கு வந்து சேர்ந்தோம்? அதோடு இங்கு ஒவ்வொரு வருடமும் அநியாயமான 400 படுகொலைகள் நிகழ்வது அங்கிள் சாம் ஒரு கொலைக்குற்றவாளி என்பதையும் உறுதிப்படுத்துகிறது.

நொறுங்கிய விமானம் குறித்த உங்கள் கூற்றுக்கு மீள்வோம், அதைக் கேள்விப்பட்ட டாக்டர் ரால்ப் பன்ச் உங்களை “மனநிலை பாதிக்கப்பட்டவர்” என்றார். உங்களுடைய பதில் என்ன?

டாக்டர் பன்ச் பேசியதெல்லாம்தான் எனக்குத் தெரியுமே. அவருடையது சர்வ தேசத்து வாய். அது எப்போதும் திறந்தேதான் இருக்கும். கறுப்பர்கள் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததும் அவர் ஐ.நா சபையில் மன்னிப்புக் கேட்டாரே. ஒரு கறுப்பன் முக்கியஸ்தனாக வளர வெள்ளைக்காரன் அனுமதிக்கிறான் என்றாலே அவனுக்கென்று ஒரு வேலையையும் இவன் வைத்திருப்பான் என்பது உங்களுக்கே தெரியும். டாக்டர் பன்ச் வெள்ளைக்காரர்களுக்குச் சிறப்பாகச் சேவகம் புரிகிறார், அவர்களுடைய பிரநிதியாகிறார், அவர்கள் சார்பாகப் பேசுகிறார், அவர்களுக்குக் காவல் காக்கிறார். இதில் எதையுமே அவர் கறுப்பர்களுக்குச் செய்வதில்லை. நீக்ரோக்களின் மீதான சர்வதேசக் கருத்துகளைத் தயாரிப்பதற்கான வெள்ளையரின் கருவியாக அவர் செயலாற்றுகிறார். வெள்ளையர்களுக்கு உள்ளூர் கருவிகள், வெளியூர் கருவிகள் என்று பல்வேறுபட்ட நீக்ரோ கருவிகள் உள்ளனர். டாக்டர் பன்ச் சர்வதேசக் கருவி.

உங்கள் கூற்றுக்குக் கண்டனம் தெரிவித்த பல முக்கிய நீக்ரோக்களில் டாக்டர் பன்ச் ஒருவர், அவ்வளவே. உங்கள் இனத்தைச் சேர்ந்த இவர்களுக்கு உங்களுடைய பதில் என்ன?

அவர்களிடமே கேளுங்கள், நீக்ரோக்களிடமிருந்து வெள்ளையர்கள் கேட்க விரும்பும் கருத்துகளால் உங்கள் ஏட்டை நீங்கள் நிரப்பிக்கொள்ளலாம். கறுப்பர்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் இவர்களை வகைப்படுத்திப் பார்ப்போம். அரசியல்வாதிகளிலிருந்து துவங்கலாம். அவர்கள் எப்போதுமே முஹம்மதைத் தனிப்பட்ட முறையில் தாக்கவே மாட்டார்கள். அவருக்குக் கறுப்பர்களின் ஆதரவு இருப்பது இவர்களுக்குத் தெரியும். பிறகு, தேவையான ஓட்டுகளை இழந்துவிட நேரிடும் என்பதை அறிவார்கள். மற்ற நீக்ரோ அதிகாரிகளும் தலைவர்களும் முஹம்மதை எதிர்ப்பார்கள். காரணம், அந்தப் பதவிகளில் அவர்களை அமர்த்தியதே வெள்ளைக்காரன் என்பதுதான். எங்களைத் தாக்குவதற்கு வெள்ளைக்காரன் அவர்களுக்குக் கூலி கொடுக்கிறான். எவ்வளவுக்கு முஹம்மதைத் தாக்குகிறார்களோ அவ்வளவுக்கு அதிகக் கூலி. அடுத்து, கறுப்பின மதத்தலைவர்களை எடுத்துக்கொள்வோம். அவர்கள் முஹம்மதைத் தாக்குவார்கள். இந்தப் பிரச்சாரகர்கள் தற்காப்புக் கருதியே பெரும்பாலும் இப்படிச் செய்கிறார்கள். அவர்களுக்குத் தெரியும் அவர் நீக்ரோக்களைத் தட்டி எழுப்புகிறார் என்று. உறக்கத்தில் இருப்பவர்களும், வட அமெரிக்காவின் பண்படாத மூலைகளில் வாழும் கறுப்பர்களின் உண்மை நிலையை உணராமல் அறியாமையின் இருளில் இருப்பவர்களும் தவிர வேறு யாரும் நீக்ரோ பிரச்சாரகர்களின் பேச்சை நம்புவதில்லை. நீங்கள் கவனித்திருக்கலாம், முன்பெல்லாம் எலிஜா முஹம்மதைத் தாக்கிப் பேசிக்கொண்டிருந்தவர்களான ‘நீக்ரோ தலைவர்கள்’ என்றழைக்கப்பட்டவர்கள் இப்போது அப்படிச் செய்வதில்லை. அவரும் அவர்களுடைய தாக்குதலுக்கான எதிர்வினையாகத் தவிர, தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு எதிராகப் பேசுவதே இல்லை. இஸ்லாம் தாக்கச் சொல்லிப் போதிப்பதில்லை, வலுச்சண்டைக்கு நீங்கள் போகவே கூடாது என்கிறது. ஆனால், உங்களை ஒருவன் தாக்கினால் அவனை நீங்கள் தொலைத்துக்கட்டலாம் என்கிறது. எலிஜா முஹம்மதின் துப்பாக்கி அவர்களை நோக்கிக் குறி வைக்கும் அளவுக்கு அவரைத் தூண்டிவிட்டால் அவர்கள்தான் தோற்பார்கள் என்பது நீக்ரோ தலைவர்களுக்கு நன்றாகத் தெரியும். பலரும் இதை அனுபவித்திருப்பார்கள்.

மற்ற அமெரிக்க நீக்ரோ தலைவர்களில், மார்டின் லூதர் கிங் போன்றவர்களில், யாரையாவது நீங்கள் ஆராதிக்கவோ மதிக்கவோ செய்கிறீர்களா?

நான் ஒரு முஸ்லிம். அமெரிக்காவின் அனைத்துத் தளங்களிலும் உள்ள கறுப்பர்களை ஒன்றிணைக்கக் கூடிய தகுதி உடையவராக ஒரே ஒருவரைத்தான் முஸ்லிம்கள் அறிந்திருக்கிறார்கள். அவர் எலிஜா முஹம்மத் மட்டும்தான்.

பல வெள்ளை ஆன்மிகத் தலைவர்களுமே கறுப்பின முஸ்லிம்களுக்கு எதிராகத் தங்கள் கருத்துகளைப் பதிந்திருக்கிறார்கள். NAACP பத்திரிகையின் அதிகாரப்பூர்வ பிரதியில் கத்தோலிக்கப் பாதிரியார் ஒருவர் உங்களைப் “ஃபாசிச புத்தியுள்ள வெறுப்பு அமைப்பு” என்றும் பினை பிரித் (B’nai B’rith) அமைப்பு உங்களைக் கிறிஸ்தவ எதிர்ப்பாளர்கள், செமிதிக் இன எதிர்ப்பாளர்கள் என்றும் குற்றஞ்சாட்டுகிறார்களே. நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

கிறிஸ்தவ உலகைப் பொருத்தவரை ரோமன் கத்தோலிக்கம் அனுசரிக்கப்படும் இடங்களில் அல்லது நாடுகளில்தான் சர்வாதிகாரமும் காணப்பட்டது. கத்தோலிக்கம்தான் மனித மனங்களைச் சர்வாதிகாரத்துக்குத் தயார் செய்கிறது. ஒரே ஒரு ப்ரொடஸ்டண்ட் நாடாவது ஒரு சர்வாதிகாரியை உருவாக்கியதாக நீங்கள் காட்ட முடியுமா?

ஜெர்மனி பெருவாரியும் ப்ரொடஸ்டண்ட்டாக இருந்தபோதுதானே ஹிட்லர்…

இந்த 20ஆம் நூற்றாண்டில் சிந்திக்க வேண்டிய இன்னொரு விஷயம்: கிறிஸ்தவச் சபை, சமய நிந்தனை என்று குற்றஞ்சாட்டும் ஃபாசிசம், கம்யூனிஸம் பற்றியது. ஃபாசிசம் எங்கு துவங்கியது? ரஷ்யாவுக்கு வெளியில் இரண்டாவது மிகப்பெரிய கம்யூனிஸ்ட் கட்சி எங்கிருக்கிறது? இரண்டுக்குமான ஒரே பதில் இத்தாலி. வாடிகன் எங்கிருக்கிறது? ஆனால், நாம் யூதர்களையும் மறந்துவிடக் கூடாது. யாராவது யூதர்களைப் பற்றிய ஒரேயொரு நேர்மையான விமர்சனத்தை வைத்துவிட்டாலும் அவர்கள் செமிதிக் எதிர்ப்பாளர்களாக முத்திரைக் குத்தப்படுகிறார்கள். விமர்சிக்கப்பட்டுவிட்டால் மற்ற யாரையும்விட யூதர்கள் உரக்கக் கூவுகிறார்கள். அமெரிக்காவின் எந்தச் சிறுபான்மை இனத்தைப் பற்றிய உண்மையையும் நீங்கள் பேசலாம். ஆனால், யூதர்கள் குறித்தவோர் உண்மையான அவதானிப்பை, அவர்கள் முதுகில் தட்டும்படியானதாக இல்லாத ஒன்றை நீங்கள் முன்வைத்துவிட்டால் உடனே யூதர்கள் செய்தி ஊடகங்களில் தங்களுக்கிருக்கும் செல்வாக்கை இறுக்கி உங்களைச் செமிதிக் இன எதிர்ப்பாளர் என்று முத்திரைக் குத்துவார்கள். யூதர்கள் குறித்தும் கறுப்பர்கள் குறித்தும் ஒன்றே ஒன்று சொல்லிக்கொள்கிறேன். யூதர்கள் எப்போதும் கறுப்பர்களுக்கு அறிவுரை சொல்வதிலேயே ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டது போல கறுப்பர்களுடைய பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பது குறித்த அறிவுரைகளை ஒருபோதும் சொல்ல மாட்டார்கள். நீக்ரோக்கள் அமர்ந்தவாறும், தவழ்ந்தபடியும், அங்குல அங்குலமாக ஊர்ந்தும், ஃப்ரீடம் ரைடுகள் நடத்தியும் போராட வேண்டும் என்பதே யூதர்களின் அறிவுரை. ஆனால், இப்படி எதையும் அவர்கள் செய்ததில்லையே. அவர்கள் விழித்தெழுந்தார்கள், ஒன்றாய் நின்றார்கள், அவர்களுடைய இறுதி அஸ்திரமான பொருளாதாரச் சக்தியைப் பிரயோகித்தார்கள். அதையேதான் கறுப்பர்களும் செய்ய வேண்டும் என்று எலிஜா முஹம்மத் போதிக்க முற்படுகிறார். தங்களை விலக்கி வைத்த விடுதிகளை எல்லாம் யூதர்கள் தங்கள் எல்லோருடைய பணத்தையும் குவித்துச் சேர்த்து வாங்கினார்களே. அட்லாண்டிக் நகரையும், மயாமி கடற்கரையையும், தங்களுக்கு வேண்டிய எல்லாவற்றையும் விலைக்கு வாங்கினார்களே. ஹாலிவுட் யாருக்குச் சொந்தமாக இருக்கிறது? நியூயார்க் நகரின் செல்வாக்கு மிக்கதான ஆடை வணிகம் யாருடையது? நீக்ரோவுக்கு அறிவுரை செய்யும் யூதர்கள் NAACP, CORE, URBAN LEAGUE என்று எல்லாவற்றிலும் சேர்ந்துகொள்கிறான். எங்கு பார்த்தாலும் நன்கொடை செலுத்தி அதிகாரத்தை வாங்கிக்கொள்ளும் யூதர்கள், நீக்ரோவுக்கு மட்டும் நீரில் அமிழ்ந்தும், ஆழ்ந்தும், ஏன் புதைந்தும் கூட போய் போராடுமாறு அறிவுறுத்துகிறார்கள். ஆனால், தொழிற்சாலைகளை, உணவு விடுதிகளை எப்படித் தொடங்குவது என்று சொல்லித் தருவதில்லை. தனக்கு வேண்டிய எதையும் எப்படிச் சொந்தமாக்கிக்கொள்வது என்று சொல்லித் தருவதில்லை. எப்படிச் சொல்லித் தருவான்? சொந்தமாக்கிக்கொள்ளும் வகையில் எது இருந்தாலும் அது யூதர்களுடையதாகிவிடுமே. நீக்ரோக்களின் கெட்டோக்களில் கொஞ்சம் நடந்து பாருங்களேன். அங்கிருக்கும் உருப்படியான எந்தத் தொழிலகமும் யூதர்களுடையதாகத்தான் இருக்கும். ஒவ்வோர் இரவும் அவர்கள் இலாபத்தை எடுக்கிறார்கள். இப்படியாகக் கறுப்பர்கள் இனத்தை அவர்கள் கெட்டோக்களிலேயே வைத்திருக்கிறார்கள்.

NAACP, CORE இவற்றிலும் இன்னும் சில பல்லின முகமைகளிலும் தன்னார்வலர்களாகச் சேவையாற்றும் பல யூதர் அல்லாதவர்கள் நீக்ரோக்களின் ஒருங்கிணைப்புக்காகவும் பொருளாதார முன்னேற்றத்துக்காவும் அர்ப்பணிப்புடன் பாடுபடுவது உண்மை இல்லையா?

ஆற்றுக்குள் புழுக்களை வீசுபவர்கள் எல்லோரும் மீனின் தோழர்கள் ஆகிவிடுவார்களா? அவர்களை நண்பன் என்றும் புழுக்களில் கொக்கிகள் இல்லை என்றும் நம்பும் மீன்கள் வழக்கமாகச் சென்று சேருமிடம் பொறிக்கும் சட்டிதான். நண்பர்களாகவும் தயாளர்களாகவும் காட்டிக்கொள்ளும் தாராளமய வெள்ளையர்களால், எங்கள் முன்னால் தொங்கவிடப்படும் இவை எல்லாமும் முன்னேறிக்கொண்டுதான் இருக்கிறோம் என்று எங்களை நம்ப வைப்பதற்கான பொறிகள் மட்டுமே. உச்ச நீதிமன்றத்தின் முடிவு செயல்படுத்தப்படவே இல்லை. பிரித்துவைத்தல் நீக்கச் சட்டம் செயலாக்கம் பெறவில்லை. வாக்குறுதிகள் காப்பாற்றப்படவில்லை. எங்களுக்குக் கிடைத்ததெல்லாம் கிள்ளுச் சீட்டுகளும், மாற்றுகளும், ஏமாற்றுகளும், புரட்டுகளும்தான்.

உங்களுடைய கருத்துகளைச் சுதந்திரத்துடன் முன்வைப்பதற்கான வாய்ப்பை அளித்திருக்கும் ப்ளேபாய் மீது என்ன குற்றச்சாட்டை முன்வைப்பீர்கள்?

நீங்கள் பத்திரிகை விற்பனையை அதிகரிக்க விரும்புகிறீர்கள் என்று நினைக்கிறேன். நேர்மையான வெள்ளையன் என்று ஒருவனை நான் இதுவரையில் பார்த்ததில்லை, கறுப்பர்களுக்கு உதவுதல் என்று வரும்போது அப்படியொருவனைப் பார்க்கவே முடியாது. வெள்ளைக்காரர்கள் பொதுவாக இப்படியான காரியங்களைத் தங்களுக்கு ஆதாயம் தேடிக்கொள்வதற்காகவே செய்வார்கள். வெள்ளையனின் பிரதான குறிக்கோள், கறுப்பனின் சிந்தனையை மேம்படுத்துவதல்ல; அவர்களை விழிப்படையச் செய்வதுமல்ல; வெள்ளைக்காரர்களை விழித்துக்கொள்ளச் செய்வதுமே கூட கிடையாது. கறுப்பனின் மீது வெள்ளையனின் ஆர்வம் எல்லாம், கறுப்பனை எப்படிச் சுரண்டுவது, உபயோகப்படுத்திக்கொள்வது என்பதில் மட்டும்தான்.

இந்த உலகத்தில் நீக்ரோக்களின் நலனில் உண்மையான அக்கறை உள்ள வெள்ளையர் என்று யாரையாவது ஒப்புக்கொள்வீர்களா?

ஆதாரமே இல்லாமல் புத்திசாலித்தனமான ஒரு தீர்ப்பை எழுதிவிட முடியாது. வெள்ளையர்களுக்கும் கறுப்பர்களுக்குமான உறவை வரலாற்று ரீதியாகப் பார்த்தால் கறுப்பர்கள் வெள்ளையர்கள் மீது நம்பிக்கையோ நன்மதிப்போ வைத்திருக்க நியாயமான ஒரேயோர் ஆதாரத்தையும் காண முடியாது.

ஆக, கறுப்பர்களுடனான உறவில் வெள்ளையர்கள் சுரண்டர் பேர்வழிகளாகவும் புரட்டுக்காரர்களாகவும் தவிர வேறு யாராகவும் இருக்க வாய்ப்பே இல்லை என்கிறீர்கள்?

அறுவடையாகும் முன்பே கோதுமையின் குணத்தைக் கணிப்பது தவறாகுமா? கோதுமையின் தன்மையும் அதன் இயற்கையும்தானே அதைக் கோதுமையாக்குகிறது. பார்லியிலிருந்து கோதுமையை அதன் இயல்பு வேறுபடுத்துகிறது. கோதுமை அதன் இயல்பைத் தக்கவைத்துக்கொள்கிறது, வெள்ளை இனத்தைப் போல. வெள்ளையர்கள் அவர்களுடைய செயலால் அல்ல, பிறப்பாலேயே சாத்தான்கள். நீங்கள் சட்டியில் போடாவிட்டாலும் பாப்கான் பாப்கானாகத்தான் இருக்கும். சூடு காட்டினால் மட்டும் வெடிக்கும், அவ்வளவே.

வெள்ளையர்கள் இயற்கையிலேயே சாத்தான்கள் என்கிறீர்கள். கிறிஸ்து சாத்தானா?

கிறிஸ்து வெள்ளையர் அல்ல, கறுப்பர்.

எந்த ஆகமத்தின் ஆதாரத்தின் பேரில் இதைச் சொல்கிறீர்கள்?

சார், பில்லி க்ரஹாம் இதே கருத்தைப் பொதுவெளியில் முன்வைத்தார். எந்த ஆகமத்தில் அதைக் கண்டெடுத்தார் என்று அவரைக் கேட்கலாமே? போப் பயஸ் XII அவருடைய வாசிப்பறையில் இருந்த ஒரு கறுப்பு கிறிஸ்துவுக்கு முன் மண்டியிட்டிருந்த புகைப்படம் அவருடைய மரணச் செய்தியோடு லைஃப் பத்திரிகையில் வெளியிடப்பட்டது. அந்தச் செய்திக்கான மூலம் எது? கிறிஸ்து கறுப்பர்தான் என்பது வரலாறும் புவியியலும் படித்த எல்லா வெள்ளையர்களுக்கும் தெரியும். ஏழைப்பட்ட அமெரிக்க நீக்ரோ மட்டும்தான் கிறிஸ்து வெள்ளையர் என்று நம்ப வைக்கப்பட்டிருக்கிறான். அது, வெள்ளையர்களையும் சேர்த்து, அவனை வழிபட வைப்பதற்கான தந்திரம். சிறையில், நான் முஸ்லிமாக மாறிய பிறகு அங்கிருந்த நூலகத்தில் வாசிக்கக் கிடைத்த அத்தனை புத்தகங்களையும் படித்தேன். அதற்கு முன்பு நான் வாசித்திருந்த எல்லாவற்றையும் குறிப்பாக, வரலாறைக் குறித்து யோசித்தேன். பொதுச் சனங்களின் வாசிப்புக்கு வெளியாகும் கிட்டத்தட்ட எல்லாப் பிரதிகளுமே வெள்ளையர்களின் வரலாறாக்கப்பட்டிருப்பதை உணர்ந்தேன். வரலாற்றுக்கு வெள்ளை அடிக்கும் அந்தச் செயலாக்கத்தில், இரண்டு காரியங்கள் நடந்திருக்கின்றன. ஒன்று கறுப்பர்கள் செய்திருக்கும் செயற்கரிய காரியங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு, கறுப்பர்கள் சிலருக்கு வெள்ளையடிக்கப்பட்டிருக்கிறது.

அவர்களில் சிலரைக் குறிப்பிட முடியுமா?

நிச்சயமாக, இதுகாறும் வாழ்ந்த தளபதிகளுள் மிக வெற்றிகரமானவரான ஹானிபல் ஒரு கறுப்பர். பீத்தோவனும் அப்படியே. பீத்தோவனின் தகப்பனார் ஐரோப்பாவில் படைவீரராகப் பணியாற்றிய ப்ளாக் கமோர்களில் ஒருவர். பீத்தோவனின் குரு ஹைடன் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர். சாலமனும் கூட, பைபிளில் குறிப்படப்பட்டிருக்கும் பல முக்கியமான கதாபாத்திரங்களும். அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ் பாதி கறுப்பர். அமெரிக்கா கண்டுபிடிக்கப்படுவதற்கு முந்திய காலத்திலேயே, பலம் பொருந்திய கறுப்பர் அரசுகள் வெள்ளை சாம்ராஜ்ஜியங்களை வெற்றிகொண்ட செய்தியை மறைத்து வைப்பதற்காக மூர் சாம்ராஜ்ஜியத்தைப் போன்ற முழுக் கறுப்பர் சாம்ராஜ்ஜியங்களுக்கு வெள்ளை அடிக்கப்பட்டிருக்கின்றன. மூர் நாகரிகத்தின் ஆப்பிரிக்கக் கறுப்பர்கள், ஸ்பெயினைக் கைப்பற்றி ஆண்டார்கள். தென் ஐரோப்பாவில் தொடர்ந்து ஆண்டுவந்தார்கள். இன்னொரு முக்கியமான விஷயம், மூர் என்றால் கறுப்பு என்று பொருள். வெள்ளையர்கள் அருமையான ஆப்பிரிக்கக் கலாச்சாரங்களைத் திருடிக்கொண்டு அவற்றை வெள்ளை ஐரோப்பிய கலாச்சாரமாக மாற்றியதற்கான பொருத்தமான உதாரணம் எகிப்திய நாகரிகம்தான். கறுப்பர் நாடான எகிப்துக்கு மட்டும்தான் அதன் நாகரிகத்தின் பேராலான அறிவியல் பிரிவு இருக்கிறது, எகிப்தியல்.

இதையெல்லாம் எந்த வரலாற்று ஆதாரத்தின் பேரில் சொல்கிறீர்கள் என்று குறிப்பிட முடியுமா?

என்னால் பல ஆவணங்களைக் குறிப்பிட முடியும். மாபெரும் வரலாற்றாசிரியரான ஹெரோடோடஸோடு துவங்கலாம். எடுத்த எடுப்பிலேயே அவர் எகிப்தியர்களைப் பற்றி “கறுப்பாக, கம்பளி மயிரோடு” என்றுதான் வர்ணிக்கிறார். அமெரிக்காவைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளரும் எகிப்தியல் வல்லுநருமான ஜேம்ஸ் ஹென்றி ப்ரஸ்டடும் இப்படியேதான் வர்ணிக்கிறார். பிளினியைப் படித்துப் பாருங்கள். பண்டைய ரோமானிய, கிரேக்க ஆய்வாளர்கள், சமீபத்திய ஐரோப்பிய மானிடவியலாளர் மற்றும் தொல்பொருள் ஆய்வாளர்கள் யாரை வேண்டுமானாலும் படித்துப் பாருங்கள்.

வெள்ளையர் அல்லாத மற்ற எல்லோரும் கறுப்பர்களே என்ற வாதத்தின் அடிப்படையில் பேசுகிறீர்கள்.

சிவப்பு, பழுப்பு, மஞ்சள் எல்லாமே கறுப்புத் தேசத்தின் பகுதிகள் என்று திரு.முஹம்மத் சொல்கிறார். கறுப்பர், பழுப்பர், சிவப்பர், மஞ்சளர் எல்லோரும் சகோதரர்கள். அவர்கள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே இதன் பொருள். வெள்ளையனே அந்நியன். அவன்தான் சேராச் சேர்த்தி.

வெளிரிய தோலுடைய கிழக்கத்திய, மத்திய கிழக்கத்திய, இலத்தீன் இனத்தவர்களோடு, கூடுதல் கறுப்பான தோலை உடைய இந்திய, நீக்ரோ வம்சாவளியினர் அனைவரையும் கறுப்பர்கள் என்ற வகைமைக்குள் இணைத்துக்கொள்கிறீர்கள். என்றால், வெள்ளையர்கள் என்ற உங்களுடைய குற்றத்தீர்ப்புக்கு ஆளாகாமல் தப்ப ஓர் இனத்தின் தோலின் நிறம் எவ்வளவுக்கு வெள்ளையாக இருந்துவிடலாம்? வெள்ளை இனத்தவர் இயற்கையாகவே பிசாசு குணமுடையவர்கள் என்றால், மனிதர்களின் பைசாச குணத்தை அவர்களுடைய தோலின் வெளிறலை வைத்துதான் எடை போடுகிறீர்களா?

சிறிய நுட்பங்கள் குறித்து நான் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. ஆனால், ஒருவனைக் கறுப்பன் என்று வகைப்படுத்திவிட ஒரேயொரு துளி கறுப்பு இரத்தம் போதும் என்று நினைக்கும் வெள்ளைச் சமூகத்தின் புத்தி எனக்குத் தெரியும். ஆனால், எனக்கோ அந்த ஒரு துளியின் பேராற்றல்தான் தெரிகிறது. இன்னொன்றும் எனக்குத் தெரியும், வெள்ளையர்தான் என்று சொல்லிவிடக்கூடிய அளவுக்கு வெளிறியிருக்கும் நீக்ரோக்களில் பலரும் அதனால் வரக் கூடிய துர்பலனைக் கண்டுகொண்டு மீண்டுவந்து சொந்த இனத்தோடு சேர்ந்துகொள்கிறார்கள். காலத்தின் கை அவர்களுக்கு நிகழ்த்தவிருக்கும் பேரழிவை உணர்ந்திருக்கும் வெள்ளையர்களுமே கறுப்பர்களோடு சேர்ந்துகொள்ள, நரம்புகளில் ஓடக்கூடிய கறுப்பு இரத்தத்தின் சுவடுகளையாவது தேடிப்பிடிக்க முயற்சி செய்கிறார்கள், நாசத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள விழைகிறார்கள். ஆனால், எந்தச் சாத்தானாலும் இறைவனை ஏமாற்ற முடியாது. இதுகுறித்து முஸ்லிம்கள் சிறு பாடல் ஒன்றைப் பாடுவார்கள். “ஒரு துளி உன்னைக் கறுப்பாக்கப் போதும், வரக்கூடிய நாட்களில் உன் ஆன்மாவைப் பாதுகாக்கவும் அது ஒன்றே போதும்.”

இந்த மேம்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவராகச் சொல்லிக்கொள்ளும் உங்களுக்கும் பெரும்பான்மையினருக்குச் சிறுபான்மை இனத்தினரின் மீதான வழக்கமான தோரணைதான் உள்ளதா? அதாவது ‘கறுப்புத் தேசத்தினர்’ என்று நீங்கள் விளிப்பவரோடு பார்க்க வெள்ளை இனத்தவர் தரத்திலும் எண்ணிக்கையிலும் தாழ்வானவர்கள் என்று கருதுகிறீர்களா?

சிந்திக்கத் தெரிந்த வெள்ளையர்களுக்கே தாங்கள் கறுப்பர்களைவிடத் தாழ்வானவர்கள் என்பது தெரியும். ஈஸ்ட்லாண்டுக்கும் அது தெரியும். கறுப்பு ஆதிக்கக் குணமுள்ளது என்பதையும் வெள்ளைப் பின்னடைவு இயல்புடையது என்பதையும் உயிரியலில் மரபியல் பிரிவு படித்தவர்கள் அறிவார்கள். முதல்தர காப்பி வேண்டுமென்றால் நீங்கள் கறுப்புக் காப்பியைத்தானே வேண்டுவீர்கள். நீங்கள் அடர்த்திக் குறைவானதை வேண்டினால், தரம் குறைந்ததை, பால் கலந்ததை விரும்புகிறீர்கள் என்று பொருள். ஊட்டச்சத்து இல்லாத ரொட்டி வேண்டுமென்றால்தான் வெள்ளை ரொட்டி வாங்க வேண்டும். நன்மை பயக்கக் கூடிய யாவும் அதில் நீக்கப்பட்டிருக்கும். அது மலச்சிக்கலையும் உண்டு பண்ணத்தக்கது. உங்களுக்குச் சுத்தமான மாவு வேண்டுமென்றால் நீங்கள் அடர் மாவை, முழுக்கோதுமை மாவைக் கேட்க வேண்டும். உங்களுக்குச் சுத்தமான சர்க்கரை வேண்டுமென்றால் நீங்கள் கருஞ்சர்க்கரையைத்தான் வாங்க வேண்டும்.

நீங்கள் குற்றஞ்சாட்டுவதைப் போல வெள்ளையர்கள் அத்தனை பேரும் இயல்பிலேயே சாத்தான்கள் என்றால், இப்போது சொன்னது போல கறுப்பர்களும் வெள்ளையர்களும் அடிப்படையாகவே நேரெதிரானவர்கள் என்றால், எல்லாக் கறுப்பர்களையும் – முஸ்லிம் தலைவர்கள் அல்லாதவர்கள் தவிர – அடிப்படையிலேயே தேவ குணம் உள்ளவர்களாகப் பார்க்கிறீர்களா?

இல்லை, நீக்ரோக்களிடம் ஏராளமான சிக்கல்கள் உண்டு. அவர்களுக்கென்று ஒரு சமூகம் இல்லை. அவர்கள் இயந்திர மனிதர்கள், இயக்கப்படுகிறவர்கள். அவர்களுக்கென்று சிந்தனை இல்லை. எங்களைப் பற்றி இப்படிப் பேச எனக்குக் கொஞ்சமும் விருப்பமில்லைதான், ஆனால் உண்மையைச் சொல்லியாக வேண்டுமே. அவர்கள் கறுப்பு உடலில் வெள்ளை மூளை உள்ளவர்கள். ஃப்ராங்கின்ஸிடைனின் அரக்கனைப் போல. மேற்பகுதியில் உள்ளவர் நடுத்தர வர்க்கத்து நீக்ரோ. அவர்தான் ஒன்றிணைப்பு ஆர்வலர். அவருக்கு அவருடைய ஏழை கறுப்புச் சகோதரர்கள் மீதெல்லாம் அக்கறை இல்லை. பொதுவாக, அவர் வெள்ளையர்களின் பழக்கங்களைப் பிரதி செய்வதிலேயே ஆர்வமுற்று அதற்காக வாங்கிய கடனில் மூழ்கி மற்ற எதைப் பற்றியும் கவலைப்பட நேரமற்று இருப்பவர். இருப்பதிலேயே விலை அதிகமான உடைகளையும் கார்களையும் வாங்கிவிட்டு மலிவான உணவுகளை உண்பார். அதிகப்படியாக வெள்ளையர்கள் போல நடந்துகொள்வார். இப்படியானவர்கள்தான் முஹம்மதின் உபதேசங்களின் மீதான தங்களுடைய அபிமானத்தை மறைத்துக்கொள்கிறவர்கள். வெள்ளைக்காரன் தின்ற மிச்சம் மீதியை அடைந்துவிட வேண்டும் என்னும் அவர்களுடைய அடிப்படை நோக்கத்தை முஹம்மதின் போதனைகள் ஆட்டம் காண வைக்கின்றன. நாங்கள் இந்த வர்க்கத்தை ‘வேலியில் அமர்ந்திருக்கிறவர்கள்’ என்கிறோம். அவர்கள் ஒரு கண்ணை வெள்ளையனின் மீதும் மற்றொன்றை முஸ்லிம்களின் மீதும் வைத்திருக்கிறவர்கள். காற்று எந்தப் பக்கம் வீசுகிறதோ அந்தப் பக்கமாகக் குதித்துவிடுவார்கள். அடுத்து வருவது கீழ்நிலை நீக்ரோ சமூகம், இவர்கள் கெட்டோக்களில் வாழ்வதில்லை. வாழ்க்கையே ஒரு போராட்டம்தான் என்பதை உணர்ந்தவர்கள், தங்கள் இனத்துக்கு நிகழ்த்தப்படும் அநியாயங்களையும், தாங்கள் சதா அச்சத்தோடு வாழ வேண்டியிருப்பதையும் அறிந்தவர்கள். அவர்களுக்கு எதிரான அத்தனையின் மீதும் ஒரு நிலைப்பாடு எடுக்கத் துணிந்தவர்கள். முஹம்மதின் உபதேசங்களைக் கேட்டதும் இவர்களே வேகமாக முன்வருகிறார்கள், அவரோடு தங்களைப் பொருத்திக்கொள்கிறார்கள், முஹம்மத் சொல்வதை நடைமுறைப்படுத்துவதற்கான எல்லாவற்றையும் செய்கிறார்கள்.

சமூகக் குவிகத்தின் ஆக அடிமட்டத்தில் இருப்பவன் பெரு நகரங்களின் சேரிகளில் இருக்கும் நீக்ரோ. இவன் அல்லும் பகலும் எலிகளோடும் கரப்பான்களோடும் வாழ்கிறான், சாராயத்தில் தன்னை மூழ்கடித்துக்கொள்கிறான், தான் எங்கிருக்கிறோம் என்னவாக இருக்கிறோம் என்பதை மறந்து போவதற்காக டோப்பின் மயக்கத்தில் தன்னை ஆழ்த்திக்கொள்கிறான். இந்த நீக்ரோ நம்பிக்கையை இழந்துவிட்டவன். இவனை நெருங்குவதே எங்களுக்குக் கடினம். ஏனென்றால், இவன் சகதிக்குள் மிக ஆழமாக இறங்கிவிட்டவன். ஆனால், இவனை மட்டும் நெருங்கிவிட்டால், இவனே முஸ்லிம்களில் மிகச்சிறந்த முஸ்லிமாக உருப்பெறுவான். ஏனென்றால், இவனே மாற்றங்களில் எல்லாம் மிகப் பெரிய மாற்றத்துக்கு ஆளாகிறவன். அச்சமறியாதவனாகவும் நீண்ட காலம் நிலைத்திருப்பவனாகவும் இருப்பான். இவனிடம் இழப்பதற்கு ஒன்றுமே இல்லை, இவனுடைய வாழ்வுமே கூட. ஏனென்றால், வாழ்க்கை என்ற ஒன்று இவனுக்கு எப்போதுமே இருந்ததில்லை. இப்படியொருவனுக்கான முதன்மை உதாரணமாக நான் பார்ப்பது என்னைத்தான் – கறுப்பர்களுக்கும் விமோசனம் கிடைக்கும் என்பதற்கான உருவகமாகவும் முன்னுதாரணமாகவும் நானே இருக்கிறேன்.

உங்களுக்கு விமோசனம் கிடைத்த காலம் வரையிலுமான உங்கள் ஆரம்பக்கால வாழ்க்கையைப் பற்றிச் சொல்ல முடியுமா?

நிச்சயமாக. நான் 1925இல் மே மாதம்19ஆம் தேதி ஒமாஹாவில் பிறந்தேன். என்னுடைய தாயாரை ஒரு வெள்ளையன் வல்லுறவுக்கு ஆளாக்கியதே என்னுடைய வெளிர் நிறத்துக்குக் காரணம். என்னில் இருக்கும் ஒவ்வொரு துளி வெள்ளை இரத்தத்தையும் நான் வெறுக்கிறேன். என் மீது வெறுப்பாளன் என்ற குற்றச்சாட்டை நீங்கள் மறுபடியும் செய்துவிடுவதற்கு முன்பு கேட்கிறேன் – வல்லுறவு கொண்டவனின் இரத்தத்தை வெறுப்பது தவறா? மார்கஸ் கார்வேயின் ‘ஆப்பிரிக்காவுக்கு மீளுவோம்’ இயக்கத்தின் செயல் வீரர் என்னுடைய தந்தை. மிச்சிகனின் லாங்சிங் நகரத்தைச் சார்ந்ததும், ‘கு கிளக்ஸ் கிளானு’க்கு (Ku Klux Klan) நிகரானதுமான ஓர் அமைப்பு, கார்வேயின் முன்னெடுப்பைப் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று என் தந்தைக்கு எச்சரிக்கை விடுத்த பிறகும் அவர் அதைத் தொடர்ந்து செய்தார். என்னுடைய இளம் பிராயத்து நினைவுகளில் பிரதானமான ஒன்று, ஓரிரவு உறக்கத்தில் இருந்த நான் எரிந்துகொண்டிருந்த எங்கள் வீட்டிலிருந்து, ஏகப்பட்ட வீறிடல்களுக்கு இடையில் தூக்கிச் செல்லப்பட்டதுதான். அதற்குப் பிறகும் என் தந்தை அவருடைய பிரச்சாரத்தை இன்னமும் உரக்கச் செய்யலானார். சில நாட்களிலேயே மண்டை பிளக்கப்பட்ட நிலையில் தெருவில் கிடந்த அவரைக் கண்டெடுத்தார்கள். சீக்கிரமே அவர் இறந்து போனார், எங்கள் குடும்பம் மிக மோசமான நிலையை அடைந்தது. நாங்கள் பசியோடும் குழப்பத்தோடும் திக்கற்றுத் திரிந்தோம். இறுதியில் அதிகாரிகள் வந்து எங்களை ஆளுக்கொரு திசையில் ஒப்படைத்தார்கள். வெள்ளைச் சிறுவர்களுக்கான சீர்திருத்தப் பள்ளி ஒன்றை நடத்திக்கொண்டிருந்த வெள்ளைத் தம்பதியிடம் நான் ஒப்படைக்கப்பட்டேன். அந்தக் குடும்பத்தினர் அவர்கள் வீட்டு வளர்ப்புப் பிராணி ஒன்றை விரும்புவதைப் போல என்னை விரும்பினார்கள். வெள்ளையர்களுக்கான பள்ளி ஒன்றில் என்னைச் சேர்த்தார்கள். பள்ளியில் எல்லோரும் அறிந்த ஒருவனாக இருந்தேன், விளையாட்டுகளில் பங்கேற்றேன், நன்றாகப் படித்தேன், எட்டாவது வரையில் வகுப்பில் முதல் மாணவனாகவே திகழ்ந்தேன். அந்த வருடத்தின் கோடையில் எனக்கு 14 வயதானது, ஆனால் 21 வயது என்று பொய் சொன்னால் நம்பத்தக்க வகையிலான தோற்றம் இருந்தது. அப்படியாகப் பாஸ்டனுக்கும் நியூயார்க் நகரத்துக்குமாக ஓடிக்கொண்டிருந்த இரயில் ஒன்றின் உணவு தயாரிக்கும் பெட்டியில் எனக்கு வேலை கிடைத்தது.

பணி இடைவழியில் நான் நியூயார்க்கின் ஹார்லெமுக்குப் போவேன். அங்கிருந்த மதுவிடுதிகளில் உலகிலேயே மிக எளிதான வாழ்க்கை ஒன்றை வாழ்வது போல தோற்றம் தந்த பெண்களையும் ஆண்களையும் பார்த்தேன். ஏராளமான பணம், பெரிய கார்கள், எல்லாம் அங்கு புழங்கின. சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டிருப்பது தெரிந்தது. நகரத்துக்குப் போகும் நேரமெல்லாம் அந்த விடுதிகளில் சுற்றித் திரிந்தேன், என் கண்களையும் காதுகளையும் விரியத் திறந்து வைத்துக்கொண்டு வாயை இறுக மூடிக்கொண்டேன். அவர்களும் என்மீது ஒரு கண் வைத்துத்தான் இருந்தார்கள். இறுதியில் ஒரு தாதா தனக்கொரு தரகன் வேண்டும் என்று சொல்ல, அன்றிரவு பாஸ்டனுக்குத் திரும்பும் இரயிலில் ஏறாமல் இருந்துகொண்டேன். குற்றச்செயல்களால் ஆன ஒரு வாழ்க்கையை அன்று துவங்கினேன். கறுப்பின குற்றவாளிகளுக்கென்றே வெள்ளைப் போலீஸும் கொள்ளைக் கூட்டத்தினரும் விரியத் திறந்து வைத்திருந்த எல்லா வகைக் குற்றங்களிலும் ஈடுபட்டேன். தரகனாய் இருந்தேன், கள்ளச் சாராயம் காய்ச்சினேன், திருட்டுப் பொருட்கள் புழங்கினேன், பெண்களை விற்றேன், எல்லாம் செய்தேன். கறுப்பினப் பெண்களை வெள்ளையர்களுக்கும் வெள்ளைப் பெண்களைக் கறுப்பர்களுக்கும் விற்றேன். டோப் அடித்தேன், தீயதென்று நீங்கள் குறிப்பிடக்கூடிய எல்லாவற்றையும் செய்தேன். அன்றைய என்னைப் பற்றி நான் நல்லதாகச் சொல்லிக்கொள்ளக் கூடிய ஒரே விஷயம், நான் யாருடைய மண்டையையும் பிளந்ததில்லை என்பதுதான்.

உங்களது பதினாறாவது வயதில் நீங்கள் நடத்திக்கொண்டிருந்த வெவ்வேறு தொழில்களில் உங்களுக்குக் கீழே ஏராளமானவர்கள் வேலை செய்தார்கள் என்று பதிவேடுகள் குறிப்பிடுகின்றன. சரிதானே?

உண்மைதான் சார். நான் செய்ததாகக் குறிப்பிட்டுள்ள எல்லாவற்றையும் செய்ய வேலை ஆட்கள் வைத்திருந்தேன். அதோடு காவல்துறைக்குக் கையூட்டுக் கொடுக்கும் திட்டம் ஒன்றையும் செயல்பட வைத்திருந்தேன். கொள்ளைகளும் குற்றங்களும் போலீஸார் அவற்றை அனுமதிக்கும் அளவிலேயேதான் நடக்கும் என்பதை அப்போதுதான் தெரிந்துகொண்டேன். என்னிடம் ஏராளமான ஆட்கள் வேலை செய்தார்கள். நான் தரகனாய் இருந்தேன். பணத்தோடு ஹார்லெமுக்கு வரும் வெள்ளையர்களுக்கு அவர்கள் விரும்பும் எல்லாப் பாவ காரியங்களையும் செய்ய உதவினேன். அவர்கள் வாயைத் திறக்க வேண்டுமென்று கூட எதிர்பார்க்க மாட்டேன், அவர்களை எங்கெல்லாம் அழைத்துச் செல்ல வேண்டுமென்று எனக்கே நன்றாகத் தெரியும். ஒரு விஷயத்தை அவசியம் பதிவு செய்ய வேண்டும். அப்போது என்னுடைய முக்கியமான வாடிக்கையாளர்களாக இருந்தவர்கள் எல்லோருமே அதிகாரிகளும், காவல்துறையில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர்களும், பெருவியாபாரிகளும், அரசியல்வாதிகளும், சமய குருமார்களும்தாம். அதை மறக்கவே முடியாது. எல்லாப் படிநிலைகளிலும் இருந்த இந்த வெள்ளையர்களைச் சந்தித்தேன், அவர்கள் விரும்பியதை எல்லாம் ஏற்பாடு செய்தேன். இழிபட்ட சாத்தான்களின் இனத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் என்பதைப் புரிந்துகொண்டேன். ஆனால், என்னுடைய தந்தையாரே வெள்ளையர்களால் கொல்லப்பட்டார் என்பதற்குப் பிறகும், என் வாழ்நாள் முழுக்க என் இன மக்கள் வெள்ளையர்களால் கொடூரமாக நடத்தப்பட்டதைப் பார்த்த பிறகும், அவர்களோடு கலந்து பழகும் அளவுக்குக் குருடனாக இருந்திருக்கிறேன். திரு.முஹம்மதின் ஆற்றல்மிக்க தூதுரை என் கண்களைத் திறந்து வெள்ளையர்களைப் பிசாசுகளின் இனமாகப் பார்க்கச் செய்யும் வரையில் அவர்கள் எல்லோரையும் தேவர்களாகவும் தேவதைகளாகவும் நினைத்தேன். வெள்ளையர்களின் உண்மைச் சொரூபத்தை எலிஜா முஹம்மதின் ஒரு வார்த்தை ஒரே இரவில் எனக்குக் காட்டியதைப் போல அதற்கு முன்பு வேறெதுவும் காட்டியதில்லை.

இது எப்போது நடந்தது?

நான் சிறையில் இருந்தபோது நடந்தது. மூன்று வெவ்வேறு சிறைகளில் 77 மாதங்களைக் கழிக்கும்படி ஆகிற்று என்றாலும் எனக்கு நிகழ்ந்தவற்றிலேயே மிகச் சிறப்பானது அதுதான். ஏனென்றால், சிறையில்தான் எனக்கு எலிஜா முஹம்மத்தின் போதனைகளைக் கேட்க வாய்த்தது. அவருடைய போதனைகள்தாம் என்னைத் திருத்தியமைத்தன. வெள்ளையனே சாத்தான் என்று முஹம்மத் சொல்வதை முதலில் கேட்டபோது எனக்குள் ஏதோவொரு விசை சொடுக்கியது. இந்த நாட்டில் இவ்வளவு வேகமாக இஸ்லாம் பரவுவது ஏன் என்பதற்கு என்னைவிட ஒரு நல்ல உதாரணத்தை நீங்கள் காட்டிவிட முடியாது. ஒரு தண்டனைக் கைதியாக, அறைகுறையாகப் படித்திருந்த குற்றவாளியாக இருந்தவன் நான். முஹம்மதின் போதனைகள் மனிதன் வீழும் இடங்களில் எல்லாம், ஆகமோசமான இடமான சிறைக்குள்ளும் ஊடுருவக்கூடியனவாக இருந்தன. சிறைச்சுவர்களுக்கு மறுபுறத்தில் இருந்த என்னை அவருடைய போதனைகளே நாட்டின் முன்னணி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் மேடைகளுக்குக் கொண்டு சேர்த்தன. 1946இல் மசஷீசெட்ஸின் கேம்பிரிட்ஜுக்கு நான் போனது 8 – 10 வருடங்கள் தண்டனை விதிக்கப்பட்ட கைதியாக. எட்டாம் வகுப்பு கூட முடித்திராத நான் அங்கு சிறையில் இருந்தேன். அடுத்த முறை 1961இல் கேம்பிரிட்ஜ் சென்றபோது ஹார்வர்ட் சட்டக்கல்லூரியின் கருத்தரங்கு மன்றத்துக்குக் கௌரவப் பேச்சாளராகப் போனேன். இதை அடிக்கடி நினைத்துப் பார்த்துக்கொள்கிறேன். ஒன்றுமில்லாததைக் கொண்டு எதையோ உண்டாக்கிவிடுவதற்கும் யாருமாக இல்லாதிருந்தவனை மனிதனாக ஆக்குவதற்கும் முஹம்மதால் இயலும் என்பதற்கான சிறப்பான உதாரணம் இதுவே.

அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவின் கறுப்பர்களுக்கு இடையிலான உறவு பதற்றமான ஒன்று என்று பல நீக்ரோ எழுத்தாளர்கள் பேசுகிறார்கள். இன்னமும் ஏராளமான இஸ்லாமிய ஏற்புகள் நிகழாமல் போக இது காரணமாக இருக்குமா?

இருக்கலாம். ஆப்பிரிக்காவிலிருந்து வரும் ஒரு கறுப்பன், தான் வாழ முடியாத இடத்தில் வாழ்வதை அமெரிக்கக் கறுப்பன் பார்க்கிறான். ஆப்பிரிக்கக் கறுப்பன் இங்கு வரும்போதே ஒரு போர்வையோடு வருவதையும், வெள்ளையனைப் போல உடுத்திக்கொண்டு, வெள்ளையனைப் போலப் பேசிக்கொண்டு, சமயங்களில் வெள்ளையன் அளவுக்குப் பணக்காரனாகவும் இருந்துகொண்டு, ஒரு நீக்ரோ போக இயலாத இடத்துக்குப் போவதையும் பார்க்கிறான். நம் நாட்டில் சுற்றுப்பயணம் செய்யும்போது என்னுடைய முஸ்லிம் பெயரான மாலிக் ஷபாஷ் என்ற பெயரில்தான் போகிறேன். விடுதி அறைகளை அந்தப் பெயரிலேயே பதிவு செய்கிறேன், நான் இப்போது சொன்னது போல நடப்பதைப் பார்த்திருக்கிறேன். நான் விடுதியின் விருந்தினர் மேசைக்குப் போகும்போது “இதோ வருகிறான் ஒரு நீக்ரோ” என்று சொல்லாமல் சொல்லும் பார்வைகளைக் கவனிக்கிறேன். அது அன்பில்லாததும், சகிப்புத்தன்மை மட்டுமே இருப்பதுமான ஒரு வரவேற்பாகவே இருக்கும். ஆனால், நான் “மாலிக் ஷபாஷ்” என்று சொல்லும் நிமிடமே சட்டென்று நிலைமை மாறும், மரியாதை தோன்றும். என்னை அவர்கள் ஆப்பிரிக்கன் என்று நினைத்துவிடுகிறார்கள். பெயரில் என்ன இருக்கிறது என்கிறோமே. பெயரில் ஏராளமானது இருக்கிறது. ஆப்பிரிக்கக் கறுப்பனுக்கு ஒரு மனிதனுக்குரிய மரியாதை கிடைப்பதை அமெரிக்கக் கறுப்பன் பார்க்கிறான். ஆப்பிரிக்கனுக்கென்று சுய அடையாளமும் பண்பாட்டு வேர்களும் இருப்பதாலேயே அவனுக்கு மரியாதை கிடைக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலே ஆப்பிரிக்கனுக்கென்று சொந்தமாக நிலம் உண்டு. இந்தக் காரணங்களாலேயே அவனுடைய மனித உரிமைகள் மதிக்கப்படுகின்றன, அவனுடைய குடிமுறை உரிமைகள் உடனிகழ்வாக மதிப்புப் பெறுகின்றன.

குடியரசுத் தலைவர் வெர்வோர்ட் (Verwoerd)இன் அரசால் அபார்தீட்* சித்தாந்தங்கள் நடைமுறையிலிருக்கும் தென் ஆப்பிரிக்க நீக்ரோக்களின் குடியுரிமை, மனித உரிமைகள் பற்றியா பேசுகிறீர்கள்?

அமெரிக்காவின் நிலைப்பாட்டையே தென் ஆப்பிரிக்கா செயல்படுத்துகிறது. ஒரே வித்தியாசம், அங்கே அவர்கள் அபார்தீடைப் பிரச்சாரமும் செய்து செயல்படுத்தவும் செய்கிறார்கள். அமெரிக்கா விடுதலையைப் பிரச்சாரம் செய்கிறது, அடிமைத்தனத்தைச் செயல்படுத்துகிறது. அமெரிக்கா ஒன்றிணைத்தலைப் பேசிக்கொண்டே ஒதுக்கிவைத்தலை நிகழ்த்துகிறது. வெர்வோர்ட் நேர்மையான வெள்ளையர். *பார்னெட்டுகளும், *பௌபஸெஸ்களும், *ஈஸ்ட்லாண்டுகளும், *ராக்வெல்களும் அப்படியானவர்களே. அவர்களுக்கு வெள்ளையர்களை வெள்ளையர்களாகாவே வைத்திருக்க வேண்டும். எங்களுக்குக் கறுப்பர்களைக் கறுப்பர்களாகவே வைத்துக்கொள்ள வேண்டும். இனவெறியாளர்களையும் இனங்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று பேசுகிறவர்களையும் ஒப்புநோக்கினால் நான் இனவெறியாளர்களே மேல் என்பேன். கிலுகிலுப்பை விரியன்களுக்கு (Rattle Snakes) மத்தியில் நடந்துபோவது பாதுகாப்பானது, அவை ஓயாமல் ஒலியெழுப்பி தாம் எங்கே இருக்கின்றன என்பதை அறிவித்துவிடும், இந்த வடதிசை பாம்புகள்தாம் ஏமாற்றி நீங்கள் இன்னமும் பாம்புக்குழிக்குள்தான் இருக்கிறீர்கள் என்பதை மறக்கச் செய்துவிடும். ஒவ்வொரு வெள்ளையனும் கறுப்பனுக்கு எதிரானவன்தான். இந்த முழு அமெரிக்காவின் பொருளாதாரமும் வெள்ளை மேலாதிக்கத்தின் பேரிலேயே கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. சமய தத்துவங்களும் அடிப்படையில் வெள்ளை மேலாதிக்கத்தின் பேரிலானவை. கிறிஸ்து வெள்ளை; கன்னி மேரி வெள்ளை; தேவதைகளும் வெள்ளை; எல்லாம் வெள்ளை. பிசாசு மட்டும் கறுப்பு. அங்கிள் சாமின் அரசியல் நிறுவனம் வெள்ளை மேலாதிக்கத்தின் அடிப்படையில் அமைந்ததே, வெள்ளையர் அல்லாதோரை இரண்டாம் தரக் குடிமக்களாக்குவது அதன் வேலை. சமூகத் தத்துவங்களும் வெள்ளை ஆதிக்கத்தின் அடிப்படையிலானவை என்பதைச் சொல்ல வேண்டியதே இல்லை. கல்வி அமைப்புகளும் வெள்ளையர் ஆதிக்கத்தைத்தான் தொடர்ந்து நிலை நிறுத்துகின்றன.

வெள்ளை மேலாதிக்கத்தைப் பழித்துரைத்தவாறே அதைச் செயல்படுத்துபவர்களைப் பாராட்டி உங்கள் பேச்சுக்கு நீங்களே முரண்படுகிறீர்கள். பிரித்து வைக்கும் அவர்களுடைய கொள்கையை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களே?

வடக்கின் இன ஒருங்கிணைப்பு ஆர்வலர்களின் புரட்டைவிட தென்பகுதி இனவாதிகளின் வெளிப்படைத்தன்மை மேலானது என்று நான் பேசுவது, வெள்ளை மேலாதிக்கத்தின் அடிப்படை அறமற்றத் தன்மையை மாற்றிவிடாது. போர்வையைப் போர்த்தி வந்தாலும், ப்ரூக்ஸ் பிரதர்ஸின் சூட்டை அணிந்துவந்தாலும் சாத்தான் சாத்தான்தான். எலிஜா முஹம்மத் பிரிந்துபோதலைப் போதிப்பது ஏனென்றால், அமெரிக்காவை வலுக்கட்டாயமாக ஒன்றிணைக்கும் எந்த முயற்சியும் வெள்ளையர்களிடையே பெரு வெடிப்பை நிகழ்த்தும். அது அமெரிக்காவை அழித்துவிடும் என்பதோடு பிரச்சினையும் தீராது. ஆனால், கறுப்பர்களையும் வெள்ளையர்களையும் பிரித்து வைக்கும் முஹம்மத்தின் யோசனை இருவருக்கும் இடையிலான பிரச்சினையை அழகாகத் தீர்த்து வைத்துவிடும். அமெரிக்காவும் காப்பாற்றப்படும். பிறகு உலகமே, அங்கிள் சாமுக்குக் கபடதாரி என்பதல்லாத வேறு நற்பெயரை வழங்கும்.

மிசிசிப்பி பல்கலைக்கழகத்தில் ஜேம்ஸ் மெரிடித்தை வெற்றிகரமாகச் சேர்த்துவிட்ட அரசியலமைப்பைக் கபடதாரியாகத்தான் இன்னமும் பார்க்கிறீர்களா? நீக்ரோக்களின் சமத்துவத்துக்கான ஆர்வத்தை இந்த ஆட்சி மதிப்பதாக உங்களுக்குத் தோன்றவில்லையா?

அப்படி என்ன சாதிக்கப்பட்டுவிட்டது? மெரிடித்தை மிசிசிப்பி பல்கலைக்கழகத்தில் சேர்க்க 15,000 படைவீரர்கள் தேவைப்பட்டனர். ஒரு நீக்ரோவை உள்ளே அனுமதிக்க அவ்வளவு பெரிய படையும் 3,000,000 ஷில்லிங்குகளும் செலவழிக்கப்பட்டன. அந்த தொகையைக் கொண்டு மிசிசிப்பியில் இருக்கும் அத்தனை நீக்ரோக்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்த இந்தக் கூட்டரசு ஆவன செய்திருக்கலாம்.

தெற்கிலிருந்து வந்த எதிர்ப்பையும் மீறி போராடி டாக்டர் ராபர்ட் வீவரைக் கேபினட்டின் முதல் நீக்ரோ அமைச்சராக்கி கென்னடி சாதித்திருக்கிறார். இப்போது அரசு வெள்ளை மேலாதிக்கத்தை எதிர்ப்பதில் தீவிரமாக இருப்பதாக ஏராளமான நீக்ரோ தலைவர்கள் உணர்கிறார்கள். நீங்கள் அப்படி உணரவில்லையா?

கென்னடி எதற்காகப் போராட வேண்டும், அவர்தானே குடியரசுத் தலைவர்? ரிபிகாஃபுக்குப் பதிலாக செலிப்ரேஸை அமர்த்த அவர் போராடவில்லை. உச்ச நீதிமன்றத்தில் கோல்ட்பெர்கை அமர்த்த அவர் சிரமப்படவில்லை. வீவரையும் தர்கூட் மார்ஷலையும் தவிர வேறு யாருக்காகவும் அவர் கஷ்டமே படவில்லை. யு.எஸ் ஸ்டீலை அவர் எதிர்த்தபோது எழுந்த சட்டமன்றத்தின் ஆட்சேபணையை அவர் பொருட்படுத்தவில்லை. கியூபாவை முற்றுகையிட்டபோது அவர் சட்டமன்றத்தின் எதிர்வினையையோ, ரஷ்யாவின் எதிர்வினையையோ, ஏன் உலகத்தின் விமர்சனத்தையோ கூட பொருட்படுத்தவில்லை. ஆனால், ஒரு நீக்ரோவின் உரிமைகள் என்று வரும்போது, அதுவும் அலுவலகத்தில் அவருக்கு உதவியாக இருந்த ஒருவனுக்கு என்று வரும்போது அவர் வெள்ளை எதிர்ப்பின் சிறு துணுக்குகளுக்குப் பயப்பட்டுவிடுவார், அப்படித்தானே?

உங்களைப் பொருத்தவரை எந்த அமெரிக்கக் குடியரசுத் தலைவராவது லிங்கன், *எஃப்.டி.ஆர், *ட்ரூமன், *ஐசனாவர், கென்னடி யாராவது நீக்ரோக்களுக்காக உருப்படியான எதையாவது செய்திருக்கிறார்களா?

இவர்களில் யாரும் நீக்ரோக்களுக்காக எதையுமே செய்ததில்லை. அத்தனை பேரும் நீக்ரோக்களை ஏமாற்றியிருக்கிறார்கள், தேர்தல் நேரத்தில் பொய் வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறார்கள். அவற்றை ஒருபோதும் நிறைவேற்றியதில்லை. லிங்கனின் அக்கறை நீக்ரோக்களின் விடுதலை குறித்ததல்ல, கூட்டமைப்பைக் காப்பாற்றுவது மட்டும்தான்.

லிங்கனின் வார்த்தைகளின்படி இந்த நாடு “காலகாலமாகப் பாதி அடிமையாகவும் பாதி விடுதலை அடைந்ததாகவும்” இருப்பதைச் சகித்துக்கொள்ள முடியாது என்பதற்காகத்தானே உள்நாட்டுக் கலகம் நிகழ்ந்தது?

“லிங்கனும் நீக்ரோவும்” குறித்த தவறான புரிதலே ஏராளமானவர்களுக்கு இருக்கிறது. அந்தக் கலகத்தில் தெற்கு, வடக்கு என்று இரண்டு கயவர்கள் ஈடுபட்டிருந்தார்கள். போரில் எஞ்சுவனவற்றை அபகரிக்கும் போட்டி அவர்களுக்கிடையில் இருந்தது. நாம் உண்மையிலிருந்து விலகிச் செல்லச் செல்ல அவர்கள் அதைக் கறுப்பர்களுக்கான போராகக் காட்டிவிட முயல்கிறார்கள். நீக்ரோக்களை விடுதலை செய்யாமல் கூட்டமைப்பைக் காத்துக்கொள்ள முடியுமானால் அப்படியே செய்துவிட இருப்பதாகத்தான் லிங்கன் பேசியிருந்தார். ஆனால், இரண்டு வருடங்கள் முழுக்கத் தொடர்ந்து கொலைகள் நிகழ்ந்த பிறகே அவர் அடிமைகளை விடுவித்தாக வேண்டும் என்று தெரிந்துகொண்டார். அவருடைய ஆர்வமெல்லாம் கூட்டமைப்பில்தான் இருந்தது, அடிமைகள் மீது அல்ல. அடிமை மீட்புப் பிரகடனம் குறித்துச் சொல்வதென்றால் அது ஒரு வெற்றுப் பத்திரம் அவ்வளவுதான். அது அடிமைகளை விடுதலை செய்தது என்றால், நாம் ஏன் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகும் குடியுரிமைகளுக்காகப் போராடிக்கொண்டிருக்கிறோம்?

இனங்களுக்கு இடையிலான சமத்துவம் என்ற இலட்சியம் இன்னமும் எட்டப்படவில்லை என்பது உண்மையாகவே இருக்கட்டும். ஆனால், இந்த உலகின் வேறெந்தச் சிறுபான்மை இனமும் கடந்த நூறாண்டுகளில் சாதித்திருக்கும் சமூக முன்னேற்றம், குடியுரிமை சார் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தைவிடவும் அமெரிக்க நீக்ரோக்கள் அதிகமாகச் சாதித்திருப்பதாகப் பல நீக்ரோ கருத்துரையாளர்கள் தெரிவித்திருக்கிறார்களே?

இதைத்தான் நானும் எல்லா இடங்களிலும் கேள்விப்படுகிறேன். அமெரிக்கக் கறுப்பர்கள் நம்பும் பல கட்டுக்கதைகளில் இதுவும் ஒன்று. இந்த நாட்டுக்குக் குடியேறிகளாக வந்துள்ள எல்லா இனப்பிரிவுகளும் முதல்தரக் குடிமக்களாக மாறியிருக்கின்றனர். அவர்களெல்லாம் இங்கு வரும்போதே, இங்கு இருந்த கறுப்பர் இனத்தைத் தவிர. எல்லோருமாகப் பழங்களைப் பகிர்ந்துகொண்டுவிட்டு, கறுப்பர்களுக்கு இப்போதுதான் விதைகளை எறியத் துவங்கியிருக்கிறார்கள். நீக்ரோக்களின் முன்னேற்றத்தைப் பற்றியா பேசுகிறீர்கள். இதைக் கேளுங்கள், நீக்ரோக்கள் இங்கிருப்பதால்தான் அமெரிக்கா முன்னேறியிருக்கிறது. நீக்ரோ முன்னேறியிருப்பது போலத் தெரியலாம். மணிக்கு 90 மைல் வேகத்தில் பாயும் சொகுசு இரயிலில் இருப்பவன் போன்றவன் நீக்ரோ. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குத் தெரிவது போல,  வெள்ளைப் பிரயாணிகளோடு தானும் சொகுசு நாற்காலிகளில் அமர்ந்து மணிக்கு 90 மைல் வேகத்தில் பறக்கிறதாகத்தான் அவனும் நினைத்துக்கொள்கிறான். பிறகு அறையில் இருக்கும் கண்ணாடியில் தன்னைப் பார்க்கும்போதுதான் அவர்களுக்கு அருகில் கூட தான் செல்லவில்லை என்பது அவனுக்குப் புரிகிறது. அவனுடைய பிரதி பிம்பம் அவனுக்குக் காட்டுவது உணவு தயாரிக்கும் பெட்டியில் வெள்ளைச் சீருடையோடு இருக்கும் ஒரு பணியாளைத்தான். அவன் 5:10க்கு உள்ளே இருக்கலாம், எல்லாம் சரிதான். ஆனால், மற்றவர்களைப் போல அவனால் வெஸ்ட்போர்ட்டில் இறங்க முடியாது.

நீக்ரோக்களின் சமூக – பொருளாதார முன்னேற்றத்தைத் துரிதப்படுத்த வெள்ளையர்களாலோ கறுப்பர்களாலோ செய்ய இயன்றதென்று ஏதாவது இருக்கிறதா?

முதலாவதாக எங்கள் மக்கள் இப்போது இருக்கும் இந்த மோசமான நிலைக்குத் தான் செய்த குற்றங்களே காரணம் என்பதை வெள்ளைக்காரன் உணர வேண்டும். எங்களை இகழ்வதன் வழியாக அவனுடைய குற்றவுணர்வை அவன் மறைத்துக்கொள்ள முடியாது. அவனுடைய கடந்தகால, நிகழ்கால குற்றச் செயல்களுக்குத்தான் இப்போது நாங்கள் அதீதமான, விடாப்பிடியான கோபத்துடன் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறோம். அவனால் பாதிக்கப்பட்ட எங்களை இனவெறியாளர்கள், தீவிரவாதிகள், கறுப்பு மேலாதிக்கவாதிகள் என்று குற்றஞ்சாட்டி அவனுடைய குற்றவுணர்வை அவன் மறைத்துக்கொள்ள முடியாது. பெற்றவன் செய்த பாவங்கள் எல்லாம் அதே பாவங்களை இன்னமும் நாசுக்காகச் செய்துகொண்டிருக்கும் பிள்ளைகளின் தலையில் வந்து விடிய இருப்பதை வெள்ளையர்கள் உணர்ந்தாக வேண்டும். எலிஜா முஹம்மத் இந்தத் தலைமுறையைச் சேர்ந்த வெள்ளையர்களை இப்படி எச்சரிக்கிறார்: உங்கள் தாத்தன்கள் எங்களை அடிமைகளாக்கிச் செய்த கொடுமைகளுக்கான விலையை நீங்கள் தருவதற்கான நேரம் வந்துவிட்டது.

ஆனால், தன்னுடைய விதியை மாற்றிக்கொள்ள வெள்ளையன் செய்யக் கூடிய ஒன்று இருக்கிறது. இந்த அடிமைத்தளை பூமியைவிட்டு, தங்களுக்கென்ற ஓரிடத்துக்குப் போக நினைக்கும் கறுப்பர்களை அனுமதிப்பதன் மூலமாக அவன் பிராயச்சித்தம் செய்யலாம். ஆனால், இந்த அடிமை வீட்டைவிட்டு ஏராளமான கூட்டம் போய்விடக்கூடாது என்று நினைத்தால் அவன் இந்த நாட்டைப் பிரித்தாக வேண்டும். இங்கு, இந்த அமெரிக்க மண்ணில் எங்களுக்கென்று பல மாநிலங்களை அவன் விட்டுத்தர வேண்டும். எங்களில் யாருக்கு விருப்பமோ அவர்கள் அங்குச் சென்று எங்களுக்கென்று ஓர் அரசு, எங்களுக்கென்று ஒரு பொருளாதார அமைப்பு, எங்களுக்கென்று ஒரு நாகரிகத்தை உருவாக்கிக்கொள்ள விட வேண்டும். வெள்ளையனின் இந்த அமெரிக்காவுக்கு நாங்கள் 300 வருடங்களாக அடிமை ஊழியம் செய்திருக்கிறோம். இதைக் கட்டியெழுப்ப அவனுக்கு உதவியிருக்கிறோம். ஆக, அடுத்த 25 வருடங்கள், எங்கள் தேசம் சுயமாக நிற்கும் வரை அதற்குத் தேவையான பணம் மற்றும் பொருளை இந்த வெள்ளை அமெரிக்கா எங்களுக்குத் தந்து உதவுவது நியாயமானதே. அப்படியாக, ஒருவேளை பிற்காலத்தில் அந்த மேற்குக் கோளத்தை வெளியிலிருந்து வரும் எதிரிகள் தாக்கினால் அதைக் காப்பதற்காகப் போராடும் திறனும் ஆர்வமும் எங்களுக்கு உண்டாக நியாயம் இருக்கும். கறுப்பர்கள் இந்த உலகின் மற்ற அனைத்து இனத்தவர்களாலும் ஏதாவதொரு சமயத்தில் ஆளப்பட்டுவிட்டார்கள். இப்போது இறைவனின் விருப்பம், எல்லா நாகரிகங்களுக்கும் மேலே உள்ள உச்சியில் – வெள்ளையனான ஆதம் உருவாக்கப்பட்டதற்கு முன்பே கறுப்பர்கள் இருந்த இடத்தில் – கறுப்பர்களை வைக்க வேண்டும் என்பதே. ஆதமுக்குப் பிறகு இந்த உலகம் ஊழல் மயப்பட்டுவிட்டது. நாளைய உலகம் கறுப்பாகவும் நேர்மையானதாகவும் இருக்கும். வெள்ளை உலகில் அடிமைத் தளையும், துன்பமும், மரணமும், காலனியாக்கமும் தவிர வேறெதுவும் இல்லை. கறுப்பர்களின் உலகமான நாளைய உலகில் உண்மையான விடுதலையும், நீதியும், எல்லோருக்குமான சமத்துவமும் இருக்கும். மேலும் அந்த நாள் நீங்கள் நினைப்பதைவிட விரைவாகவும் வந்துகொண்டிருக்கிறது.

குறிப்புகள்

  • ஃப்ரீடம் ரைட் – இனப்பாகுபாட்டுக்கு எதிரான குடியுரிமைப் போராளிகளான கறுப்பர்களோடு வெள்ளை ஓட்டுநர்களும் கலந்துகொண்ட போராட்டம். வருடம் 1961. தென் அமெரிக்காவுக்குள் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பேருந்துகளைக் கறுப்பர்களும் வெள்ளையர்களும் இணைந்து ஓட்டிச்சென்று கலகம் செய்தனர்.
  • கெட்டோ – கறுப்பர் சேரி
  • அபார்தீட் – தென் ஆப்பிரிக்காவில் 1948 – 1998 வரை நடைமுறையிலிருந்த இனவேற்றுமைச் சட்டம்.
  • பார்னெட் – ராஸ் ராபர்ட் பார்னட் : 1960 – 1964இல் மிசிசிப்பியின் ஆளுநராக இருந்தவர். இனவேற்றுமையை ஆதரித்தவர்.
  • ஆர்வல் பபௌபஸெஸ் : 1955 – 1967இல் அர்கன்ஸாஸின் ஆளுநராகப் பணியாற்றியவர். Little Rock Central High School பள்ளிக்குள் நீக்ரோ மாணவர்கள் நுழையவிடாமல் தடுத்தவர்.
  • ஈஸ்ட்லாண்ட் – மிசிசிப்பியைச் சேர்ந்த அரசியல்வாதி. ஆப்பிரிக்க அமெரிக்கர்களைத் ‘தரம்தாழ்ந்த இனத்தினர்’ என்று அழைத்தவர்.
  • ராக்வெல் – ஜார்ஜ் லிங்கன் ராக்வெல் : American Nazi Partyயின் தலைவர். ஃபாசிச செயல்பாட்டாளர்.
  • FDR – ஃப்ராங்கிளின் டெலானோ ரூசவெல்ட் – 32ஆவது ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்.
  • ட்ரூமன் – ஹாரி எஸ்.ட்ரூமன் – 33ஆவது ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்.
  • ஐசனாவர் – டுவைட் டி.ஐசனாவர் – ஐக்கிய அமெரிக்காவின் 34ஆவது குடியரசுத் தலைவர்.

நன்றி: PLAYBOY

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!