மேலிடம் சுற்றுலா வருங்கால்
நாங்கள் உரைக்கத்தக்கவை மூன்று
1
பளுச்சுமையின்
அளவை அதிகரிப்பதாகத்
தகவல்
வரத் தொடங்கியபோது
முதலில் அவை புரளிகளாகத்தான் வேடமேற்றிருந்தன
எங்கள் கலக்கத்திற்கு ஓரளவேணும் ஆறுதலுரைக்கும் பொருட்டு அவை அப்படி வந்திருப்பதைக்
கலைந்த விகாரங்கள் சிரித்தபோதுதான் நாங்கள் உணர்ந்துகொண்டோம்
அதனாலேயே நேரடியாக ஈட்டியிறங்குகையில் வரும் வலியைவிட கூடுதலான வலி
உயிரேகுகிறது
2
பளுவுக்கேற்ற பலகையான முதுகுகளை அவர்கள் தேர்வு செய்யத் தொடங்கினர்
குனியுங்கால்
முட்டி நிற்கும் தண்டுவடத்தின்
முள்ளெலும்புகள் பளுவைச் சிதைக்காவண்ணம் சமன்படுத்த தோதான சுத்தியல்களை அவர்களது
கைகள் கொண்டிருந்தன
இவ்வளவு பளு அதிகமென்ற
எங்கள் கூப்பாட்டின்போதெல்லாம்
இடையிலிருப்பவர்கள் ஓநாய்களை ஒலிக்கவிட்டும்
வண்ணத்துப்பூச்சிகளைப்
பறக்கவிட்டும்
மேலிடத்துக்கு எட்டாவண்ணம் பார்த்துக்கொண்டனர்
Illustration : Amanda Mijangos
3
சிறுநீர் கழிக்கச் செல்லும் இடைவேளையில்
நீங்கள் துயரக் கவிதை எழுதிக்கொள்ளலாம்
துணையைப் புணர
மயக்கமுற்று விழுங்கால் அனுமதியுண்டு
எட்டுகளைக் கொஞ்சம் பக்கத்தில் வைக்கலாமென்ற
ஆகச்சிறந்த திருத்தங்களை அவர்கள் கூறினார்கள்
முக்கியமாக
அவர்கள் கூடுதலாய் ஈவதாகச் சொன்ன ரொட்டித் துண்டு
நாங்கள் பளு தாங்காது அலறுங்கால்
எங்கள் வாயில் திணித்தடைக்கப்
போதுமானதாக இருந்தது
அதையே அவர்கள் வயிற்றைத் திணித்தடைப்பதாகக்
குறித்துக்கொண்டனர்
மேலிடம் எப்போதும்போல சுற்றுலா வருவதோடு
நிறுத்திக்கொள்கிறது.