மாமன்னன் நந்தன்

ஸ்டாலின் ராஜாங்கம்

9

வெண்மணியில் நந்தனார்

ந்நிலையில்தான் நந்தனார் பற்றிய யோசனையில் ‘வெண்மணி’ என்னும் வன்முறை சம்பவம் முக்கியமான தாக்கத்தைச் செலுத்தியது. நந்தனார் கதை ஒரு புனைவு, வெண்மணி உண்மை நிகழ்வு. நந்தனார் கதையின் நிகழ்வு எதார்த்தத்திலும் தொடர்கிறது என்ற பார்வையே வெண்மணியோடு இணைத்துப் பார்க்க வைத்தது. கீழ்வெண்மணி என்றறியப்படும் வெண்மணி கீழத்தஞ்சை எனும் நாகப்பட்டினம் பகுதியில் இருக்கும் கிராமம். இப்பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையில் நெடிய கூலி உழவர் போராட்டம் நடந்துவந்தது. பண்ணையார்களுக்கும் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூலி விவசாயிகளுக்குமான நெடிய முரணாக இது நீடித்தது. இதன் தொடர்ச்சியில் கூலி உயர்வுப் போராட்டம் நடத்திய தலித் விவசாயக் கூலிகள் 44 பேரை 1968ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் நாள் பண்ணையார் தரப்பு குடிசைக்குள் வைத்துக் கொளுத்தியது. இந்தக் கொடூரம் தமிழகத்தைத் தாண்டி இந்தியாவெங்கும் கவனத்தை ஈர்த்தது. தமிழக இடதுசாரி போராட்ட மரபிலும், சாதி எதிர்ப்பு வரலாற்றிலும் இச்சம்பவம் அழுத்தமான குறியீடாக மாறிப்போனது. அரசியல் தளத்தில் மட்டுமல்லாது கலை இலக்கியத் தளத்திலும் இக்குறியீடு கையாளப்பட்டது. கலை இலக்கியத் தளத்தில் இப்பிரச்சினை எடுத்தாளப்படும்போதெல்லாம் நந்தனார் என்கிற மரபான குறியீட்டோடு இணைத்து விளக்கும் பரவலான போக்கைப் பார்க்க முடிகிறது.

1970களுக்குப் பிந்தைய கலை இலக்கியப் பதிவுகளிலும் திரைப்படங்களிலும் இவ்வொப்பீடு பெருமளவு இடம் பெற்றுள்ளது. நந்தனார் சிதம்பரம் சென்று நடராஜரைத் தரிசிக்க விரும்பும் தன்னுடைய உரிமைக்காகப் பண்ணையாரிடம் வேண்டுகிறார். தாழ்ந்த சாதியானுக்கு உயர்ந்தோர் வணங்கும் கடவுளை வழிபட உரிமையில்லை என்று கருதி பண்ணையார் மறுக்கிறார். இவ்விடத்தில் நந்தனார் பண்ணையாரை எதிர்த்து உரிமை முழக்கம் எழுப்பவில்லை. விருப்பத்தைக் கைவிடாமலேயே வேண்டுகிறான்.

இது இருபதாம் நூற்றாண்டில் பண்ணையடிமை முறைக்கு எதிராகக் கூலி விவசாயிகள் நடத்திய போராட்டங்களிலிருந்து குறிப்பான விதத்தில் வேறுபடுகிறது. நந்தனாரின் வேண்டுதல் பண்ணையாரின் கருணையைக் கோரும் பணிதலாக இருக்க, பின்னாட்களில் பண்ணை எதிர்ப்புப் போராட்டம் அரசியல் போராட்டங்களாக அமைந்தன.

சிதம்பரம் சென்ற நந்தனார் நடராஜரைத் தரிசிக்கத் தில்லைவாழ் அந்தணர் மூட்டும் தீயில் மூழ்கிக் கடவுளை அடைகிறார். இதேபோல விவசாயிகளும் வெண்மணியில் தீக்கிரையாகினர். இதிலும் கூட முக்கிய வேறுபாடு இருக்கிறது. நந்தனார் தீயில் மூழ்குவதை விரும்பிச் செய்ததோடு அதனால் இறைவனை அடையும் நற்கதியும் பெறுகிறார். ஆனால், இங்கே விவசாயிகள் தீயிடப்படுவதோடு உயிரிழப்பையே சந்தித்தனர். ஒன்று மரபின் புனைவு, மற்றொன்று நடந்த சம்பவம். நடந்த சம்பவமான வெண்மணியைப் படைப்பாக மாற்றும்போது மரபில் இருந்த நந்தனாரைப் பின்னணியாக எடுத்துக்கொள்கின்றனர். ஒரே சமூகப் பின்னணி, அதாவது தலித் வகுப்பைச் சேர்ந்த கூலி விவசாயிகள் போராட்டம், ஏவப்பட்ட வன்முறை ஆகியவையே ஒப்பிடுவதற்கான அடிப்படைக் காரணங்களாக இருந்திருக்கின்றன.

நந்தனார் கதையை இரண்டு வகைகளில் மறு விளக்கம் தந்து எடுத்தாண்டனர். ஒன்று நந்தனாரின் நிலையை ஒடுக்கப்பட்டவர்களின் நிலைக்கான குறியீடாகக் கருதி அவரை – அவர்களைப் பரிவோடு அணுகுவது அல்லது அதிலிருந்து மீறியெழ வேண்டும் என்ற நிலைப்பாட்டைத் தீர்வாகக் கூறி முடிப்பது. இரண்டாவதாகச் சமூக அமைப்பை மறுக்காமல் வலிந்து ஏற்கும் சமரசவாதியாக நந்தனாரைச் சாடுவது. இன்றைய தலித்துகள் நந்தனாரைப் போல் இருக்காமல், போராடுவதன் மூலமே வெற்றி பெற முடியும் என்றும் கூறப்பட்டது. முதல்வகை புதிதாக ஒரு தீர்வைச் சொன்னாலும் நந்தனாரின் நிலையை ஏற்கிறது. இரண்டாவது வகை அவரை எதிர்மறைப் பாத்திரத்துக்கான உதாரணமாக எடுத்தாண்டது.

நந்தனுக்குப் பூணூல் அணிவித்ததை மேனிலையாக்கம் செய்யும் தந்திரமாகப் பார்த்த கவிஞர் இன்குலாப் “விவேகானந்தரிலிருந்து ஜெயகாந்தன் வரை நந்தன்களை மேல்நிலையாக்கம் செய்யும் நோக்கங்களை வலியுறுத்துகின்றனர். நந்தனுக்குப் பூணூல் போட்டுப் பார்ப்பது எந்த அளவில் அவனை விடுதலை பெற்ற மனிதனாக்கும் என்பதும் நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்…. பூணூலும் வேத பாராயணமும் விடுதலைக்கான சின்னங்கள் அல்ல. அவை மரபு வழிப்பட்ட ஒடுக்குமுறை சின்னங்கள்… நந்தனுடைய விடுதலை நந்தன் தன்னை அந்தணனாகக் காண்பதில் இல்லை, புலையனாகக் காண்பதில் இல்லை, மனிதனாகக் காண்பதிலேயே இருக்கிறது…” (‘காலந்தோறும் நந்தன் கதை’ – முன்னுரை) என்று கூறுவதிலிருந்து நந்தன் மீதான விமர்சனப் பார்வையை அறிய முடிகிறது.

திரைப்படங்கள்

இந்த ஒப்பீட்டோடு வந்த சில திரைப்படங்களைப் பார்க்கலாம். ஸ்ரீதர் ராஜன் இயக்கிய ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ (1983) திரைப்படத்தில் தலைப்பிலுள்ள ‘சிவப்பு’ என்பது இடதுசாரி அரசியலின் குறியீடு என்று புரிந்துகொள்ளலாம். கீழ்வெண்மணி சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்திரா பார்த்தசாரதி ‘குருதிப் புனல்’ (1975) என்ற நாவலை எழுதியிருந்தார். இந்நாவலின் தாக்கத்திற்குட்பட்டு இடதுசாரி போராட்ட மரபைக் கலந்து உருவாக்கப்பட்டதே இப்படம்.

புகைப்படக் கலைஞனாகவும் ஓவியனாகவும் இருக்கும் கௌதமும், நாட்டியக் கலைஞரான அருந்ததியும் சென்னையிலிருந்து சத்தியபுரி என்ற கிராமத்திற்கு வருவதிலிருந்து படம் தொடங்குகிறது.

பண்ணையார், கூலி விவசாயிகள், போராட்டம் என்ற அளவில் கீழ்வெண்மணியைப் பிரதிபலிக்கும் இப்படத்தில் நந்தனார் அடையாளம் நேரடியாக, கதை போக்கினூடாக என இரண்டு விதங்களில் கையாளப்பட்டிருக்கிறது. கௌதமும் அருந்ததியும் சத்தியபுரி கிராமத்திற்கு வருவது தெருக்கூத்து வடிவில் புழங்கும் நந்தனார் கீர்த்தனையை ஆய்வு செய்வதற்கேயாகும். கூத்துக்கலையை நாடக இயக்கமாக முன்னெடுத்திருந்த புரிசை கண்ணப்ப தம்பிரானே படத்தில் இடம்பெறும் கூத்து பகுதியையும், நந்தனார் பாடும் பாடலையும் அமைத்திருந்தார்.

படத்தின் மொத்தப் போக்கிலிருந்து இது தனித்துத் தெரிவதுபோல் இருந்தாலும், கதையில் நடக்கும் சம்பவங்களைப் பிரதிபலிப்பதற்கேற்பக் காட்டப்பட்டிருப்பதால் இக்கூத்து கதையின் அங்கமாகிவிடுகிறது. படத்தில் இடையிடையே வரும் இக்கூத்தில் பிராமண ஆண்டையிடம் நந்தனார் படும் பாடுகள், சமகால சத்தியபுரி கிராம பண்ணயாரிடம் விவசாயக் கூலிகள் படும் பாடுகள், மக்களின் போராட்டம் ஆகியவை ஒப்பிடப்படுகின்றன. குறிப்பாக, நந்தனார் பாடும் போக்கில் சத்தியபுரி பண்ணையாரை நோக்கித் தலித் மக்கள் பாடுவதைப் போல்,

நந்தன் என்பவன் நானே – பறைய
நந்தன் என்பவன் நானே
சாதிபேதம் ஒழிக்க
சமதர்மம் நிலைக்க

என்று பாடுகிறது கூத்துப் பாத்திரம். பின்னால் “அனைவரும் கூடி நாளை ஆலயம் புகுவோம் வாரீர்” என்றும் அப்பாத்திரம் பாடுகிறது. அவ்விடத்தில் தில்லை சென்ற நந்தனார் நினைவு மேலெழுகிறது.

அதேபோல நகரத்திலிருந்து வந்த கௌதமமும் அருந்ததியும் கண்ணப்பத் தம்பிரானின் நந்தனார் கூத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே தலித் மக்களுக்காகப் பாடுபடும் வைரம் என்பவரின் தேநீர் கடை பண்ணையார் தூண்டுதலினால் இடிக்கப்படும் செய்தியும் கிடைக்கிறது. இதுபற்றி கௌதம் பண்ணையாரிடமே கேள்வி கேட்டுச் சண்டையிடுகிறான். அதையொட்டிப் பின்னால் கௌதம் தாக்கப்படுகிறான். இவ்வாறு கூத்தில் நந்தனார் பாடுகளும் கதைச் சம்பவங்களும் ஊடுபாவுமாக நடக்கின்றன. மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதோடு தேநீர் சாலை நடத்திவரும் வைரம் பாத்திரம், வெண்மணியில் தேநீர் சாலை நடத்திக்கொண்டு கம்யூனிஸ்ட்டாக இயங்கிய முத்துசாமி என்பவரைக் குறித்தது.

இவ்வாறு கூத்து வழியாக நந்தனார் தொடர்பைக் காட்டியது மட்டுமல்லாமல், கதைக்குள்ளே நந்தனாரைப் பிரதிபலிப்பது போன்று பாத்திரம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. அப்பாத்திரத்தின் பெயர் சித்தன். நேரடியாகப் பிரதிபலிக்கவில்லை எனினும், சித்தன் பாத்திரத்தைக் கூர்ந்து கவனிக்கும்போது நந்தனார் பாத்திரத்தின் தாக்கம் ஊடாடியிருப்பதைக் கணிக்க முடிகிறது. அதாவது, நந்தனார் பணிந்து போகாமல் எதையெல்லாம் செய்திருக்க வேண்டும் என்று பிற்காலம் முற்போக்கு அரசியல் களம் விரும்பியதோ அதற்கேற்ப சித்தன் பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 70 ஏக்கருக்கு மேல் நிலமிருக்கும் பண்ணையார் ராஜரத்தினத்தின் நிலத்திற்கு நடுவில் சித்தனின் 3 ஏக்கர் நிலமிருக்கிறது. பண்ணை அடிமைத்தனத்திற்கு மத்தியில் நந்தனாருக்கு அரும்பியிருந்த சிதம்பர தரிசன ஆசைக்கு இணையாக இதனைக் கூறலாம். நந்தனாரைச் சிதம்பரம் செல்ல அனுமதிக்காத பண்ணையாரைப் போல இங்கும் சித்தன் பயிர் செய்ய ஏதுவாகத் தண்ணீர் செல்லாமல் பார்த்துக் கொள்கிறார் பண்ணையார். பிறகு, சித்தன் கிணறு வெட்டித் தண்ணீரெடுக்கிறார். இது பண்ணையார் ஏவிய வேலைகளைச் சுய முயற்சியால் நிறைவு செய்து சிதம்பரம் சென்ற நந்தனாரை நினைவுபடுத்துகிறது. மேலும் கிணற்றிலிருந்து எடுத்த முதல் நீரை அம்மனுக்குப் படைக்க விரும்புகிறான். இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் பண்ணையார் ஆட்கள், அவரை வலிய சாராயம் குடிக்க வைத்து வெற்றுப் பத்திரம் ஒன்றில் கையொப்பம் வாங்கி நிலத்தைப் பண்ணையாருக்கே சொந்தமாக்குகின்றனர். தான் ஏமாந்ததை அறிந்த சித்தன் பித்துப் பிடித்தவன் போலாகிவிடுகிறார். இது நடராஜரைத் தரிசிக்க வாய்ப்புக் கிடைத்த மகிழ்ச்சியில் இருந்த நந்தனாரிடம் தீயில் முழுகச் சொன்ன தில்லை வாழ் அந்தணர்களின் செயலோடு ஒத்துப்போகிறது.

தீயில் இறங்கக் கூறுவதே சாதி அடையாளத்தினால்தான் என்பதை அறியாமல் நந்தனார் தீ இறங்கினார் என்ற அர்த்தத்தைக் கதையாடல் கட்டமைக்கிறது. படத்தில் இது நடந்து முடிந்த சம்பவமாகச் (திருப்புகாட்சி மூலம்) சொல்லப்பட்டிருக்கிறது.

போரடடா ஒரு வாளேந்தடா

வெண்மணி சம்பவத்தை நேரடியாகப் பிரதிபலித்த இப்படம் தவிர்த்து, பாடலாகவோ உரையாடலாகவோ வெண்மணியை நினைவுபடுத்திய படங்களும் வந்தன. 1980களில் இடதுசாரி தாக்கம் கொண்ட சினிமாக்கள் கணிசமாக வெளியாகின. சிறுமுகை ரவி இயக்கிய ‘அலையோசை’ (1985) படம், அட்டூழியம் புரியும் பண்ணையாருக்கு எதிராக நாயகன் தலைமையில் நடக்கும் போராட்டத்தைப் பேசியிருக்கிறது. விவசாயக் கூலிகள் என்று பொதுவாகக் காட்டினாலும் அவர்கள் தலித்துகளே என்று தெரிந்துகொள்ளும்படியான குறிப்புகளுடனும் சில படங்கள் வந்துள்ளன. ‘அலையோசை’ படத்தில் அடக்குமுறைக்கு எதிரான அரசியலைப் பேசும் வகையிலான பாடல் தொடங்குவதற்கு முன் அமையும் உரையாடல் – காட்சி – பாடல் வரிகள் ஆகியவற்றில் நந்தனாரை நினைவுபடுத்தும் பதிவுகள் வெளிப்பட்டன. நாயகன் தலைமையில் மக்கள் (தலித்) கோயில் விழாவை நோக்கி வருகிறார்கள்.

ஊர்ப் பண்ணையார்கள் மூவர் குறுக்கே நின்று “நாங்க வச்சதுதான் இங்க சட்டம்“ என்று தடுக்கிறார்கள். அதை எதிர்க்கும் நாயகன் “உங்க பிற்போக்குத்தனத்திற்கு முடிவு கட்டத்தான் நாங்க இங்க வந்திருக்கோம்“ என்று கூறிவிட்டு “ஆதியில சாதி பாகுபாடு கிடையாது. இது பாதியில வந்தவங்க செஞ்சக் கொடுமை” என்கிறான். சாதியாதிக்கத்தின் அங்கமாக இப்பாகுபாடு எல்லா இடங்களிலும் இருக்கிறது என்றாலும், இங்கு பண்ணையார், கோயில் உரிமை மறுப்பு போன்றவை நந்தனார் கதையை நினைவுப்படுத்துவதோடு, நந்தனார் காலம்போல் இல்லாமல் இக்காலத்தவர் கேள்வி கேட்பார்கள் என்பதாகவும் நாயகனின் வசனங்கள் அமைகின்றன. கூலி உயர்வுக் குரல்கள், பண்ணையார்கள் என வெண்மணியைப் பிரதிபலிக்கும் இப்படத்தில் மேற்கண்ட உரையாடலின் தொடர்ச்சியாக நாயகன் ஆவேசமாக முஷ்டியை உயர்த்தி “போராடடா ஒரு வாளேந்தடா” என்று பாடத் தொடங்குகிறான். அப்பாடலின் இடையில்,

நந்தன் இனமே பெறும் அரியாசனமே,
அந்த தினமே வருமே

இன்னுமிங்கு பள்ளுபறை என்று சொல்லும் மடமைகள் உள்ளதடா

என்கிற வரிகள் இடம்பெற்றுள்ளன.

நிலவுடைமை எதிர்ப்புப் போராட்ட பின்னணியில் நந்தனார் வாரிசுகள் அதாவது, இன்றைய உழைக்கும் வர்க்கத்தினராகிய தலித்துகள் எழுச்சி பெறுவதாக இப்பாடல் அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது. அலைகள் ஓயாதது போல் இம்மக்களின் போராட்டமும் நிற்கப் போவதில்லை என்பதைச் சொல்லும் வகையில் “அலைகளும் ஓய்ந்து போகுமோ” என்று முழங்கி முடிகிறது இப்பாடல். இதற்கு இணையாகவே ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ படத்தின் “மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்“ என்று தொடங்கும் பாடல், “அட சாமரம் வீசிடும் பாமர சாதிகள் சாதனை கண்டுவிடும்“ என்ற வரிகளால் அமைந்திருக்கிறது.

இதேவிதத்தில் ‘ஒரே ஒரு கிராமத்திலே’ படத்திலும் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. செருப்புத் தைப்பவரிடம் ஆதிக்க வகுப்பைச் சேர்ந்தவர்கள் “உன் பேரனுக்கு இந்தத் தொழிலைக் கற்றுத் தர வேண்டியதுதானே” என்று கேட்கின்றனர். பேரனோ படிப்பதில் ஆர்வம் காட்டுகிறான். ஆதிக்க வகுப்பினரைப் போலவே பழைய மதிப்பீடுகளை ஏற்றுக்கொண்டிருக்கும் தாத்தா “அவன் இன்னேரம் எங்காவது பள்ளிக்கூடத்துக்கு முன்னாடி நின்னுகிட்டு இருப்பான். நடராஜன் கோயில் முன்னால நந்தனார் நின்ன மாதிரி” என்று கூறுகிறார். நந்தனாரை நேரடியாகக் கூறவில்லை என்றாலும் செருப்புத் தைக்கும் உழைப்பாளியான தாத்தா நந்தனார் காலத்தவர் போல இருக்க விரும்புகிறார். ஆனால், இந்தத் தலைமுறையினனான பேரன் அவ்வாறு இருக்க விரும்பாமல் மீள விரும்புகிறான் என்பதை உரையாடல் காட்டுகிறது. சிவப்பு நிறமும், நந்தனார் என்கிற பிம்பமும்தான் இக்கால நிலவுடைமை எதிர்ப்புப் படங்களில் அதிகம் கையாளப்பட்டுள்ளன. அதேபோல இப்படங்களின் கதைக்களம் நிலவுடைமைப் பகுதி என்ற முறையில் பெரும்பாலும் தஞ்சை வட்டாரத்தையே பிரதிபலித்தன.

கவிதைகள்

திரைப்படங்களுக்கு அப்பால் இடதுசாரி கருத்தியலை உள்வாங்கிய அரசியல் கவிதைகளிலும் நந்தனார் – வெண்மணி ஒப்பீடு வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் ஊடாடியிருக்கிறது. இவ்வகை கவிஞர்களில் முக்கியமானவர் இன்குலாப். அவரின் திராவிட இயக்க அபிமானத்தை இடதுசாரி அரசியல் பக்கம் திருப்பியது வெண்மணி சம்பவமே. அந்த அளவிற்கு அது அவருள் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இவர் கவிதைகளில் முழுமையாகவும் குறிப்பாகவும் வெண்மணி சம்பவம் எடுத்தாளப்பட்டிருக்கிறது. ‘மனுசங்கடா’ என்ற தலைப்பிலான கவிதையில் ஒருபகுதி வெண்மணியை விவரிக்கிறது. அது தவிர ‘வெண்மணி’ என்ற தலைப்பிலேயே கவிதையையும் எழுதியுள்ளார். இவற்றில் எல்லாம் வெண்மணியை நந்தனாரோடு ஒப்பிட்டு எழுதாத இன்குலாப் ‘ஈரோடு’ என்ற தலைப்பில் பெரியார் பற்றி எழுதிய கவிதையில் நந்தனாரைக் கொணர்ந்திருக்கிறார். நந்தனாரைச் சமரசவாதியாக இனங்காட்டி இன்றைய தலித் மக்கள் அதுபோலில்லாமல் எதிர்த்துப் போராடுபவர்களாக இருக்க வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். சாதியத்தின் வடிவமாகப் பார்ப்பனியத்தைச் சாடும் அவர்,

பின்னொரு காலம் பேச்சுத் தமிழில்
சித்தன் போட்ட சத்தம் கேட்டது
இறைச்சி தோல் எலும்பினில் இலக்க மிட்டிருக்குதோ
நெருப்பு வெளிச்சத்தில் இலக்கம் தேடினர் – நந்தனிலிருந்து வெண்மணி தாண்டியும்…..

என்கிற வரிகளில் நெருப்பில் பொசுக்கப்பட்டதற்கான குறியீடுகளில் நந்தனாரையும் வெண்மணியும் இணைக்கிறார்.

அதே கவிதையில்,

நந்தனின் குறிக்கோள் பார்ப்பனியம்
நமக்கும் குறிக்கோள் பார்ப்பனியம்

என்று சாடுவதன் மூலம் நந்தனாரை அவர் எவ்வாறு புரிந்துகொண்டிருந்தார் என்பதையும் அறிகிறோம்.

உதயை மு.அழகிரிசாமி என்கிற கவிஞர் எழுதிய ‘எத்தனை நாள் பொறுப்பது?’ என்ற கவிதையில் கூலி உயர்வுக் கேட்ட மக்கள் கொளுத்தப்பட்டதைச் சொல்லும் முன்,

நந்தனார் காலம் முதலே – இந்த
நாகரிக காலம் வரையிலே
வெந்து சாவது நாங்களே – அதை
வேடிக்கை பார்ப்பது நீங்களே

என்று நந்தனாரை ஒப்பிட்டுக் காட்டுகிறார். நந்தனார் காலம் என்று பழைய காலத்தையும், நாகரீக காலம் என்று வெண்மணி காலத்தையும் கூறுகிறார் என்பது புரிந்துகொள்ளக் கூடியதே.

‘புரட்சிப் பிரளயம்’ என்ற தலைப்பிலான (‘இறந்ததால் பிறந்தவன் தொகுப்பு’) நெடுங் கவிதையில்,

இன்னும்
நந்தனார்களை மறிக்கும்
நந்திகள் விலகவில்லை
நெருப்புக் குளியல்
நிகழ்ச்சிகளும் நிற்கவில்லை

என்று எழுதுகிறார் அப்துல் ரகுமான்.

இங்கு நிற்காத நெருப்புக் குளியல் என்பது வெண்மணிக்கும் பொருந்தும். நந்தனாருக்கும் பொருந்தும். இதேபோல தன் கவிதை தொகுப்பிற்கு ‘அந்த நந்தனை எரிச்ச நெருப்பின் மிச்சம்’ (1994) என்ற தலைப்பைச் சூட்டினார் ஈரோடு தமிழன்பன். இங்கே நந்தனார் பற்றிய சுட்டல் நெருப்போடு இணைத்துதான் காட்டப்பட்டிருக்கிறது. வெண்மணி நெருப்பும் பண்ணையார் கொடுமைகளும் நந்தனார் காலத்தின் தொடர்ச்சியாகவே நீடிக்கின்றன என்கிறது கவிதை.

இது என்ன காயம்?
இது
அவங்க போட்ட அருவா வெட்டு
இது என்ன கோடு ?
இது அவங்க சவுக்குப் போட்ட சாசன வரிகள்…
இது என்ன கண்ணில்?
இது
அந்த நந்தனை எரிச்ச நெருப்பின் மிச்சம்

இதழ்

இதேபோல 1990களின் இறுதியில் பார்ப்பன எதிர்ப்புத் திராவிடக் கருத்தியல், தமிழ் அடையாளவாதம், பொதுவுடைமை இலட்சியம் போன்றவற்றை உள்ளடக்கித் தொடங்கப்பட்ட மாத இதழுக்கு ‘நந்தன்’ என்ற பெயர் சூட்டப்பட்டது. இங்கும் அப்பெயர் நந்தனாரைப் பணிந்துபோன சமரசவாதியாகப் பார்த்து ஒதுக்கிவிட்டு, பார்ப்பனியத்திற்கு எதிராகக் கிளர்ந்துவிட வேண்டிய போர்க்குணம் மிக்கப் பிம்பத்தைக் கையாண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்ச் சான்றோர் பேரவை நா.அருணாசலம் இதன் நிறுவன ஆசிரியராகவும், இளவேனில், சுப.வீரபாண்டியன் ஆகியோர் ஆசிரியர்களாகவும் இருந்தனர்.

 

Illustrations : Ravi Palette

நந்தனார் ஆராய்ச்சிக் கதை

இத்தலைப்பு ஆய்வு நூல் போல் தோன்றும். ஆனால், கதை நூல்தான். அதாவது நிலவிவந்த நந்தனார் கதையிலிலுள்ள ‘பொய்களை’, ‘தந்திரங்களை’ நீக்கி இவைதாம் நடந்திருக்கக் கூடும் என்று தாம் நம்புகிறவற்றை வில்லிசைப் பாடல் வடிவில் கதையாக்கியுள்ளார் ஆசிரியர் எம்.சி.ஜெயப்பிரகாசம். விருதுநகர் மாவட்டம் மம்சாபுரத்தைச் சேர்ந்த ஜெயப்பிரகாசம் இளமையில் மார்க்சியராகவும் பிறகு தேசிய இயக்கத்தவராகவும் இருந்தவர். தொழிற்சங்கவாதியாக இருந்தவர். அறிவுப் பாசறை என்னும் பெயரில் கலை – இலக்கிய இதழொன்றை நடத்தினார். நந்தனார் கதையைப் பகுத்தறிவுக்கு உகந்த முறையில் மாற்றி எழுதினார்.

இதனை “குறிப்பிட்ட சிலரால் கற்பனை சேர்த்து இதுநாள்வரை சொல்லப்பட்ட நந்தனார் கதைக்கு முற்றிலும் மாறுபட்ட கதையாகச் சொல்லப்படுவதே நந்தனார் ஆராய்ச்சியாகும். இது போட்டிக் கதையல்ல; புதுமைக் கதை, உண்மைக் கதை.

நந்தனார் வாழ்ந்த காலம், அவரது காலத்தில் தமிழகத்தில் புகுந்த வைதீகம், அந்த வைதீகம் உண்டாக்கிய தீண்டாமை என்னும் தீய உணர்வு, அதன் காரணமாக சமூகத்தில் நிலவிய கடுமையான சாதிய முரண்பாடு –

சமணரின் ஆதிக்கத்தைத் தகர்த்த வெற்றி பெருமிதத்தில் இடையில் புகுந்த வைதீகத்தின் தவறான கோட்பாடுகளை ஆதரித்த சிவ பக்தர்கள் –

சிவ பக்தர்களிடையே புகுத்திய தீண்டாமையை மௌனமாக ஏற்றுக்கொண்ட சைவ சமயத்தவரின் பரிதாப நிலை ஆகிய எல்லாவற்றையும் கணக்கிலெடுத்துக்கொண்டு யதார்த்த கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து எழுதப்பட்டதே நந்தனார் ஆராய்ச்சி கதை” என்கிறார்.

இக்கதை இலக்கிய உலகத்தில் புகழ் பெறவில்லையெனினும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியாகப் பல ஊர்களிலும் நடந்துவந்தது. இந்திரா பார்த்தசாரதியின் ‘நந்தன் கதை’ நாடகம் தில்லி போன்ற வடமாநில நகரங்களில் மேடையேற்றப்பட்ட காலத்தில் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் மம்சாபுரம் மறுமலர்ச்சி வில்லிசைக் குழு சார்பாக பாலு திராவிடன் என்பவரால் இக்கதை வில்லுப்பாட்டு நிகழ்ச்சியாக நடத்தப்பட்டுவந்தது. மேலும், இக்கதை திருச்சி வானொலி நிலையத்தாரால், ஆட்சேபிக்கும் சில பகுதிகள் நீக்கப்பட்டு, 03.09.1972 முதல் 08.09.1972 வரை ஒலிபரப்பப்பட்டது. ஆட்சேபிக்கப்பட்ட பகுதிகள் எவையென அவர் எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால், நாடகத்தைப் படிக்கும்போது ஆட்சேபிக்கப்பட்ட பகுதிகள் எவையாக இருந்திருக்குமென யூகிக்க முடிகிறது. தீவிர பிராமணச் சாடலும், வைதீக மறுப்பும் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. பிறகு மீனாட்சிபுரம் மதமாற்றத்தையொட்டி விவாதங்கள் எழுந்திருந்த சூழ்நிலையில், 1984ஆம் ஆண்டு இக்கதையைச் சிறு நூலாகவும் வெளியிட்டனர். மதமாற்றங்கள் இழிவை அகற்றிவிடாது என்ற கருத்து நூலாசிரியருக்கு இருந்தது. அதேவேளையில் அந்தணர்களின் சூழ்ச்சிகளைச் சொல்லிய இக்கதை சைவம் சமரசம் செய்துகொண்டதையும் சொன்னது. ஆனால், சைவம் மீதான விமர்சனம் உள்முக விமர்சனம் மட்டுமே. ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’யில் குறிப்பிட்டுள்ள அற்புத நிகழ்ச்சிகளை நிகழ்ந்தனவாகவே கொண்டு, அவை இறைவன் அருளால் ஏற்பட்ட அற்புதங்கள் அல்ல, மாறாக வேதியரின் சூழ்ச்சிகளே என்பதாகப் படைத்துள்ளார். அற்புதங்களையும் சூழ்ச்சிகளையும் விலக்கி சர்வ சாதாரணமாக நிகழக்கூடியவையாகவே நிகழ்ச்சிகளை அமைத்துள்ளார்.

தில்லையில் நடைபெறும் ஆனி திருமஞ்சன விழாவிற்குச் சென்றுவந்த ஆண்டை வேதியர் மூலம் அதன் பெருமைகளை அடிமை நந்தனார் அறிவதாகக் கதை தொடங்குகிறது. சிவபெருமான் மீது கொள்ளும் பக்தியினால் இறைவனைப் பாட இசைக் கருவிகளுக்கான தோல் உள்ளிட்ட பொருட்களைக் கொடுத்துவந்தார். பிறகு கதாகாலட்சேபம் மூலம் இறைவனின் புகழைக் கேட்டுத் திருப்புன்கூர் செல்கிறார்.

அப்போது நந்தனார் கண்ணுக்குச் சிவன் தெரியவில்லை. காரணம், வாசலை அடைத்துக்கொண்டு ஒரு காளை மாடு படுத்திருந்தது. அது கோயில் மாடாக இருக்கலாம். இந்த மாடு கொஞ்சம் விலகினால் சிவனைத் தரிசனம் செய்துவிடலாம் என்று ஏங்கினார் நந்தனார். படுத்திருந்த மாடு எழுந்து பசும்புல் தரையை நோக்கிச் சென்றது. நந்தனார் சிவனை வணங்கினார். தன் குலத்தில் பிறருக்குக் கிடைக்காத பேறு தனக்குக் கிடைத்ததாக ஆனந்த கூத்தாடினார். அப்போது சில முரடர்களுடன் அங்கு வந்த ஓர் அந்தணர் நந்தனாரைத் தீண்டாமையைச் சொல்லித் தாக்கினார். அவர் கால் பட்ட இடத்து மண்ணை வெட்டியெடுத்து வேறு இடத்தில் போடச் சொல்லுங்கள் என்றார். நந்தனாரும் அவ்வாறே அப்புறப்படுத்தினார். பின்னர் அந்த முரடர்கள் மண்வெட்டியைப் பறித்துக்கொண்டு நந்தனாரை விரட்டினர்.

ஆனால், சேரியில் நந்தனாருக்கு ஒரு மரியாதை உருவானது. இதற்கிடையில் சாமி சிலைகளைத் திருடுபவர்களும் இருக்கிறார்கள் என்பதை அவன் அறிகிறான். பிறகு பிற கதைகளில் இருப்பது போல் சிதம்பரம் செல்ல வேதியனிடம் அனுமதி கேட்பதும், அவன் மறுப்பதும் நடக்கிறது. ஒருநாள் வேலி கணக்கிலான வயல்களில் நடவு போடச் சொல்லிவிட்டு சிதம்பரம் சென்றுவிடுகிறான் வேதியன். நடவு வேலைகளை விட்டுவிட்டு நந்தனாரும் சிதம்பரம் கிளம்பிவிடுகிறார். நந்தனாரை அங்கு பார்த்துவிட்டு நாற்று நட்டிருக்க மாட்டானே என்ற கோபத்தோடு ஊருக்குத் திரும்புகிறான் வேதியன். ஆனால், நாற்று நடப்பட்டிருப்பதைக் கண்டு ஆச்சரியமடைகிறான். “ஒருவேளை நந்தனாருக்குப் பரிந்து கடவுளே நட்டுவிட்டாரோ” என்று எண்ணியபோது, அங்குள்ள சேரி விவசாயி ஒருவர் “நந்தன் எங்கள் பேச்சைக் கேட்காமல் தில்லைக்குப் போய்விட்டான். சேரியில் இருக்கிற நாங்கள் எல்லாம் சேர்ந்து நாற்று நட்டோம்“ என்கிறான். மொத்தத்தில் நந்தி விலகல், குளம் வெட்டியது, நாற்று நட்டது ஆகிய மூன்று சம்பவங்களையும் பகுத்தறிவுக்கு உட்பட்டதாக ஆக்கிக்கொண்டுள்ளது இக்கதை.

மற்றபடி, பிற கதைகளில் உள்ளதைப் போல் சிதம்பரத்தில் அந்தணர்கள் நந்தனாரை அழைத்துச் சென்று தீவலம் செய்கிறார்கள். அங்கு நடந்ததை கதை பின்வருமாறு கூறுகிறது: “நந்தனார் அக்கினிக் குழியை வலம் வந்தார். மூன்றாம்முறை சுற்றி வரும்போது கூட்டத்தில் நின்ற ஒருவன் வேகமாக வந்து நந்தனாரை மூர்க்கமாகத் தீக்குழியில் தள்ளிவிடுகிறான். நந்தனார் புழுவைப் போல் துடித்தார், கதறினார், வெளியில் வர முயன்றார், முடியவில்லை. உடலெல்லாம் தீப்பற்றிக் கருகியது. ஐயோ! நந்தனார் பட்ட வேதனையை எப்படி வர்ணிப்பது? தீக்குழியைச் சுற்றிக் கூடியிருந்தவர்கள் ஆனந்த மிகுதியால் ஹோ… ஹோ… என்று வெறிச் சிரிப்புச் சிரித்துக்கொண்டிருந்தார்கள். இச்சிரிப்பு வெகு நேரம் நீடித்தது. நந்தனார் வெந்து சாம்பலானார்.”

இதன் மூலம் நந்தனார் ஜோதியில் கலக்கவில்லை, சூழ்ச்சி செய்து கொல்லப்பட்டார் என்று இக்கதை கூறுகிறது. நாட்கள் பல நகர்ந்தன. நந்தனார் அக்கினியில் கலந்த செய்தி ஆதனூர் மக்களுக்கு ஓரளவு தெரிந்தது. வேதியர் “நந்தனார் அங்கு ஜோதியில் கலந்தான்” என்றான். சிலர் அதை நம்பியதாகவும் சிலர் நம்பாமல் முணுமுணுத்துப் புலம்பியதாகவும் கதை முடிகிறது. முதலில் உரைநடையாகவும் பிறகு பாடலாகவும் நூல் அமைக்கப்பட்டுள்ளது. இருபதாண்டுகளுக்கு மேல் பல ஊர்களில் நடத்தப்பட்டுவந்த இந்த வில்லிசை 1990களுக்குப் பிறகு மெல்ல மெல்ல முடிவுக்கு வந்ததாகத் தெரிகிறது. அதனை யாரும் எடுத்து நடத்தவும் இல்லை.

நந்தன் வெளியே நிற்கிறான்

பல்வேறு ஆய்வு நூல்களை எழுதிய அறிஞர் கு.வே.பாலசுப்பிரமணியன் எழுதிய நாடகம் ‘நந்தன் வெளியே நிற்கிறான்’ (அறிவுப் பதிப்பகம், ஜீலை 2017). இது இடதுசாரி அமைப்பு தொடர்புடைய பதிப்பகத்தின் வெளியீடாகும். இந்நாடகம் ஏழு சிறு காட்சிகளைக் கொண்டிருக்கிறது. பழைய கதையே என்றாலும் சமகாலத்தில் நடப்பது போல் காட்டப்பட்டிருக்கிறது. கடைசி காட்சியில் மட்டும் குறிப்பிடத்தக்க மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அப்பு சாஸ்திரியின் தந்தை குப்புசாமி சாஸ்திரி இறந்து சுடுகாட்டுக்குக் கொண்டுபோவதோடு முதல் காட்சி தொடங்குகிறது.

இரண்டாவது காட்சியில் அங்கு நந்தன் பறைக் கொட்டி ஆடிப் பாடுகிறான். அது நடராஜ பெருமானைப் பற்றிய பாடல். அவன் ஆட்டத்தை பார்த்த பிராமணர்கள் அவனின் சிதம்பரம் போகும் நீண்டநாள் விருப்பத்தைப் பற்றிப் பேசிக்கொள்கிறார்கள். மூன்றாவது காட்சியில் சிதம்பரம் போக விரும்பும் நந்தனுக்கு எதிரான சக உறவினர்களின் மறுப்பு வாதங்கள் அமைகின்றன. நான்காவது காட்சியில் வேதியர் கண்டனமும் “நான் விளைத்த நெல்லுக்குத் தீட்டு இல்லையோ” என்று அவனை மறுக்கும் நந்தனின் பாடலும் இடம்பெறுகின்றன. ஐந்தாவது காட்சியில் நந்தன் தில்லை கோபுரவாசல் முன் நின்று பாடுகிறான்.

வேதியர் கூட்டம் வந்து அவனோடு பேசுகிறது. முதலில் அவன் விருப்பத்தை மறுக்கிறார்கள். இந்நிலைக்கு வருந்தி சிவனை நோக்கிப் பாடுகிறான் நந்தன். அதுவரையிலும் ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’யின் கதையைச் சுருக்கமாக எடுத்தாண்டுவந்த நாடகம், ஏழாம் காட்சியில் மாற்றமடைகிறது. இதற்காகத்தான் இக்கதை எழுதப்பட்டுள்ளது. அந்தணர்கள் வந்து “அக்னி வளர்த்து ஓமம் பண்ணி பூணூல் போட்டு இறைவன் அழைத்து வரக் கூறியதாக” நந்தனிடம் சொல்கிறார்கள். சொன்னபடி நந்தன் தீக்குளிக்கிறான். ஆனால், நெருப்பு அவனைச் சுடவில்லை. அந்தணர்கள் திடுக்கின்றனர். தீயிலே மூழ்கும்போது தமிழ் மந்திரம் சொன்னான் என்கிறது நாடகம். நந்தனை நெருப்பு சுடாததைக் கண்டு பக்தி கொண்டு அவனை நடராஜனிடம் அனுமதிக்கிறார்கள். உள்ளே போனதும் அங்கு கடவுளைக் காணவில்லை. அப்போது வானிலிருந்து ஒரு குரல் கேட்கிறது.

“நந்தா நீ அங்கே போய்விட்டாயா? நான் அதைவிட்டு வந்து நாளாச்சு. பாலுக்கு அழும் குழந்தைகள் பல இருக்க எனக்குப் பாலபிஷேகம். மணமுடித்து மலர் முடிக்க மங்கையர்கள் வாய்ப்பின்றி வாடும்போது எனக்கு மலர் மாலைகள், பூச்சொரியல். பசித்த வயிற்றுக்குக் கூழின்றித் தவிப்போர் ஆயிரக்கணக்கில் இருக்கும்போது எனக்குப் பஞ்சாமிர்தம், சர்க்கரைப் பொங்கல். எனக்கே விளங்காத சொற்களின் சத்தத்தில் என் மீது பாராயணங்கள். எனக்குச் சலிப்பேற்பட்டு வெளியே வந்துவிட்டேன். நீ என்னைத் தேடி அங்கே போனாய். நான் உன்னைத் தேடி ஆதனூர் புலைப்பாடியில் நிற்கிறேன்” என்கிறது. அக்குரல் கேட்டு நந்தன் ஓடுகிறான். அந்தணர்கள் திகைத்து நிற்கின்றனர். “எங்கும் எங்கெங்கும் நிறைந்த ஐயனை எட்டடிக் குச்சுக்குள் ஏன் பார்க்கத் துடித்தேன் நான்” என்று கூறி நந்தன் விழுந்து வணங்குவதோடு நாடகம் முடிகிறது. இது நந்தனார் பற்றிய நாடகமாக இருப்பினும் எளிய மக்களை வாடவிட்டுக் கடவுளின் பெயரால் செய்யப்படும் சடங்குகளை – நம்பிக்கைகளைச் சாடுகிறது. மேலும், இந்நாடகம் எழுத்துப் பிரதியாக இருப்பதைத் தாண்டி நிகழ்த்தப்பட்டதாகத் தெரியவில்லை.

கு.வெ.பாலசுப்பிரமணியனும், எம்.சி.ஜெயபிரகாசமும் தம் பிரதிகளில் நேரடியாக இடதுசாரி வர்க்கக் கண்ணோட்டத்தைப் பிரதிபலிக்கவில்லையெனினும், அவர்கள் நந்தனார் பற்றிய மாற்றுக் கதையாடலை யோசிப்பதற்கு இடதுசாரி சிந்தனைகளும் படைப்பாளிகளும் முன்னோடிகளாக இருந்தனர் எனலாம்.  இதில் எம்.சி. ஜெயப்பிரகாசம் இடதுசாரி அமைப்பிலேயே இருந்தவர். கு.வெ.பா இடதுசாரி பதிப்பகத்தில் தம் நாடகத்தை நூலாக வெளியிட்டார்.

நாவல்

தமிழில் குறிப்பிடத்தக்க இடதுசாரி படைப்பாளி சோலை.சுந்தர பெருமாள். வெண்மணி பற்றி ‘செந்நெல்’ (1999) என்ற நாவலை எழுதியிருந்த அவர், 2007ஆம் ஆண்டு ‘மரக்கால்’ எனும் நாவலை வெளியிட்டார். இந்நாவல் நந்தனாரை மையப்படுத்தியிருந்தது. தமிழ்நாட்டு வரலாற்றில் வைதீகம் செல்வாக்கடைந்தது பற்றி நாவலாசிரியருக்கிருந்த புரிதலின் பின்புலத்தில் இந்நாவலை எழுதியிருக்கிறார். நந்தன் கதை தனித்ததாக நடந்திருக்க முடியாது, அதற்குப் பின்னால் சமய தத்துவ மோதல்கள் இருந்தன என்று இந்நாவல் விவரிக்கிறது. வர்க்க அரசியலை அழுத்தப்படுத்திய அதேவேளையில் சமயம், வர்ணாசிரமம் ஆகியவற்றையும் பிரதானப்படுத்தியிருக்கிறது நாவல். இடதுசாரி கண்ணோட்டத்தில் இது முக்கிய மாறுதல் எனலாம். க.கைலாசபதி போன்றவர்களே சமண – பௌத்த சமயங்கள் பற்றி பொது வரலாற்றியல் தரும் சித்திரங்களை ஏற்றிருந்த நிலையில், சோலை.சுந்தரபெருமாள் அவற்றிலிருந்து விலகி சாதி இறுக்கத்தையும் – நெகிழ்வையும் அச்சமயங்களைத் தவிர்த்துப் பார்க்க முடியாது என்று காட்டியிருக்கிறார். சோலை.சுந்தர பெருமாளுக்கு வேத மத எதிர்ப்பு இருக்கும் அதேவேளையில் சைவ மத ஆதரவு உருப்பெற்றிருந்ததை இந்நாவலில் பார்க்கிறோம். இன்றைய சைவம் பிராமணமயப்பட்டதாகக் கூறி ஆதிசைவம் பற்றிய ஒரு தேடல் மெல்லியதாக அவரிடம் இழையோடுவதையும் நாவலில் பார்க்க முடிகிறது.

சிவமதம் உள்ளிட்ட வைதீக மதங்களின் அனைத்துப் பிரிவுகளிலிருந்தும் 63 நாயன்மார்களைத் தேடித் தேடி வரிசைப்படுத்தினர். அவர்களில் பலர் புனைவாகச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அதில் நந்தனும் ஒருவர் என்று கருத இடம் இருக்கிறது என்று நாவல் முன்னுரையில் குறிப்பிடும் சோலை.சுந்தரபெருமாள், நந்தனைப் பற்றி எழுதியதற்கான காரணத்தைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

“களப்பிரர் ஆட்சிக் காலத்தின் கடைசிக் காலப்பகுதியே நந்தனின் காலமாகும். நாவலில் சொல்லப்படும் காஞ்சிபுரம் ராஜாங்கமும் அதுவேயாகிறது. நந்தன் இருந்தானா என்னும் வினா சனாதனிகளின் சினத்தைக் கிளறிவிடும். நந்தன் என்று ஒரு மனிதன் இல்லையென்றால் சுந்தரர் திருத்தொண்டத் தொகையிலும், சேக்கிழார் பெரியபுராணத்திலும் எழுதியிருக்க முடியுமா என்று எதிர்வினா எழுப்புவார்கள். ஆகவே, நந்தனை ‘வரலாற்று மனிதன்’ என்று எடுத்துக்கொண்டால் அவர் எப்படிப்பட்ட சூழலில் இயங்கியிருக்க முடியும் என்ற அவதானிப்பே நாவலாக வெளிப்பட்டிருக்கிறது” என்கிறார். இதன்படி நந்தன் உண்மையோ, பொய்யோ, இதில் சொல்லப்படும் வரலாறு உண்மை என்றாகிறது. இனி நாவலைக் காணலாம்:

மேல ஆதனூர் பிரம்மதேயத்திற்கு ஏராளமான நஞ்சை நிலங்கள். பிரம்மதேய அதிபர் ஆண்டையின் பெயர் முத்துசாமி. மருதவாணம் பிள்ளை கணக்குப்பிள்ளை, ராமு மழவராயன் கண்காணி, பிரம்மதேய நிலங்களின் உடைமை பொருட்கள் பண்ணைப் பறையர்கள், பிரம்மதேய முத்திரையைக் கைமணிக்கட்டில் கொண்டவர்கள். பிராமணர், சூத்திரர், பறையர் என்கிற வர்ணாசிரமப் படிநிலையோடு பிரம்மதேயம் இயங்குகிறது. பண்ணைப் பறையர்களில் ஒருவன்தான் நந்தன். செவலை, வளத்தி ஆகியோர் அவனின் தாய் தந்தை. கச்சலை அவன் மனைவி. நந்தனுக்குச் சிவபக்தி உண்டாகிறது. தங்கள் சாமிகளை வணங்காமல் சிவனை வணங்கும் நந்தனின் பக்தியை ‘மேல் வர்ணத்தவனாக விரும்புகிற ஆசை’யாகப் பார்க்கிறார்கள் பிரம்மதேய மேல் சாதியினர். ஆனால், நந்தனோ ஆண்டவனுக்குக் கொத்தடிமைக்காரன் என்றாலும் பண்ணை அடிமைத்தனத்தை உதறித் தள்ளும் எண்ணம் இல்லாதவனாக இருக்கிறான். மூத்தப் பறையர்கள் அடக்கிட முயன்றாலும் கட்டுப்படாமல் சிவப்பித்து பிடித்து அலைகிறான். “நான் சாதி முறையை மறுக்கலையே” என்றுதான் கூறுகிறான். இதில் கண்காணியாக இருக்கும் சூத்திர சாதி ராமு மழவராயனுக்கு ஆத்திரம் அதிகம். ஒருநாள் சிவனை வணங்கியதற்காக நந்தனையும் அவன் கூட்டாளிகளையும் தாக்குகிறான். பொறுக்க முடியாத சேரி ஜனங்கள் “போதும் நிறுத்துங்கள் ஆண்டே” என்று கூறிவிடுகிறார்கள். இந்தச் சிறு அளவிலான எதிர்ப்பு பிரம்மதேயத்தை யோசிக்க வைத்துவிடுகிறது. இந்தச் சிறு பொறி தீயாய் மாறிவிடக்கூடாது என்று சுதாரிக்கிறார்கள். அவர்கள் யோசிப்பதற்குக் காரணம் இருக்கிறது. சாதி இல்லை என்று கூறும் சமண மதத் துறவிகள் இதுபோன்ற நீச சாதிக்காரர்களை ஒன்றுதிரட்டிவருகிறார்கள் என்ற செய்தியே அது.

அவ்வாறு நடந்தால் தங்களுக்கு அடிமைகள் இல்லாமல் போவார்கள், இந்தச் சுரண்டல் முறைக்குக் காரணமான வர்ணாசிரம ஒழுங்கு அழியும் என்று அஞ்சுகிறார்கள். எனவே, நந்தன் உள்ளிட்டோரின் ‘கலகத்தை’ விட்டுப் பிடிக்க விரும்புகிறார்கள். அதன்படி முதலில் அவன் விரும்பியபடி திருப்புன்கூர் உற்சவத்திற்கு அனுமதிக்கிறார்கள்.

நந்தன் பின்னால் பெரிய ஜனசக்தி திரண்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்தச் சூட்சமமான ஏற்பாடு. திருப்புன்கூரில் நந்தி மறைப்பதாக வருந்தும் நந்தனுக்கு “நந்தி பகவானை வடக்கு பக்கமா ஒரு முழம் தள்ளி வச்சு சாந்தி செஞ்சுட்டா, இது நமக்குள்ளே புதைஞ்சு போயிடும். எல்லாம் தெய்வத்தோட சித்தத்தால நடந்திருக்குன்னு ஆண்டவன் பேர்லயே பாரத்தைப் போட்டுப் புடலாம்“ என்று நந்தியை விலக்கி வைக்கிறார்கள். திருப்புன்கூர் போய் வந்த பிறகு சிதம்பரம் போக விரும்புகிறான் நந்தன். அவனுக்குச் சேரியிலும் ஆதரவு பெருகுகிறது. சமண – பௌத்த ஊர் சுற்றிகள் மக்களிடம் ஏற்படுத்தும் கலகங்களால் வேத மதம் திணறிக்கொண்டிருந்த காலம் அது. பத்து வேலி மகசூலை முடித்துவிட்டால் தைப்பூச நாளில் தில்லைவலம் போகலாம் என்று நந்தனுக்கு அனுமதி தரப்படுகிறது. பக்கத்து ஊர் பண்ணை அடிமைகளின் ஆதரவோடு அறுவடை முடிகிறது. கடைசியில் 12 பேரோடு சிதம்பரம் செல்கிறான் நந்தன். வழியில் மருதன், நாகன் என்கிற இருவர் இவர்களைச் சந்திக்கின்றனர். அவர்கள் செம்மங்குடி பிரம்மதேயத்தில் அடிமைகளாக இருந்தவர்கள். அங்கு தொடர் கலகம் செய்ததால் அவை பிறருக்கும் தொற்றிவிடக்கூடாது என்று பசலை வரிக்கு ஈடாக நாகப்பட்டினம் கடற்கரையில் அடிமைகளாக விற்கப்பட்டார்கள். பிறகு, அங்கிருந்து தப்பி வந்து வாழும்போதே வழியில் நந்தனைப் பார்க்கிறார்கள். நந்தனுக்கு ஆதனூர் பிரம்மதேயம் இந்த அளவுக்கு இடமளித்துச் சிதம்பரத்திற்கு அனுப்புவதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாக யூகிக்கிறான் மருதன். இருந்தும் பொறுத்திருந்து பார்க்க முடிவெடுக்கிறான். நந்தனின் இந்த அளவிற்கான ‘கலகத்திற்கு’ துணையிருக்கவும் முடிவெடுக்கிறான். கோயிலுக்குள் போன நந்தன் “நீச சாதிப் பிறப்பு சண்டாளத்துவத்தை நீக்கி மறுபிறப்பில் சண்டாளனாகக் கூடாது” என்று வேண்டுகிறான். அதற்கு யாகக் குண்டல தீயில் இறங்கிப் புனிதப் பிறவி எடுக்கலாம் என்கிறார்கள் அந்தணர்கள். இதெல்லாம் முன்கூட்டியே செய்த சூழ்ச்சி என்று கருதும் மருதன், நந்தனை யாகக்குண்டத்தில் இறக்காமல் சிவனைத் தரிசிக்க ஏற்பாடு செய்யும் வேலைகளில் ஈடுபடும்போது கொல்லப்படுகிறான். பிறகு, நந்தன் யாகத்தில் இறங்கி இறைவனை அடைந்ததாக அறிவிக்கிறார்கள். நந்தனைக் காட்டி பண்ணையடிமைகளைத் தொடர்ந்து சேவகம் செய்பவர்களாகத் தக்கவைத்திடத்தான் இந்தச் சிவதரிசனம் என்ற புரிதலோடு கதை முடிகிறது. இவ்வாறு பெருமான் திருத்தொண்டினால் பெருமை அடைந்த நந்தனார் ஆகிறார்.

ஒருவேளை நந்தன் இருந்திருந்தால் எத்தகைய வரலாற்றுக் காலகட்டத்தில் இருந்திருக்க முடியும் என்பதை யூகித்துக் களப்பிரர் காலத்தின் இறுதி அல்லது பல்லவர் காலத்தின் தொடக்கமாக இருக்க முடியும் என்ற வரலாற்று நிலைகளைக் கொணர்ந்து அப்பின்னணியில் நந்தன் கதையை எழுதியிருக்கிறார். ஏறக்குறைய பக்தி இயக்கக் காலத்தைக் கூறுகிறார். இதன்படி சுந்தரர் எழுதிய காலமே நந்தன் காலமாகிறது. இந்த அளவில் இடதுசாரிகளின் அணுகுமுறை அமைந்துள்ளது.

உழைக்கும் வர்க்க – ஒடுக்கப்பட்ட சாதி பாத்திரத்தை எடுத்தாண்ட விதத்தில் சாதகமாகப் பங்காற்றிய இடதுசாரிகளுக்கு நந்தனார் விசயத்தை அணுகுவதில் சில வரையறைகளும் ஏற்பட்டிருந்தன. அவை அவர்கள் ஏற்றிருந்த அரசியல் சட்டகத்தால் ஏற்பட்டிருந்தன என்பேன். அதாவது, அவர்களின் நந்தனார் பற்றிய அறிதல் ‘எழுத்துப் பிரதி’களையே சார்ந்திருந்தது. அவற்றை மட்டும் வைத்து எழுதப்பட்டிருக்கும் மைய நீரோட்ட வரலாற்றை – அவை தரும் கால வரையறையை அப்படியே ஏற்று, அதன் மேல் நின்றுகொண்டு நந்தனை – சமய அரசியலை அணுகியிருக்கிறார்கள். இந்தப் பிரதிகள் காட்டும் ‘பழைமை’யின்படியே சாதியமைப்பையும், சாதிகள் மீதான இழிவு – பெருமைகளையும் பழைமையானதாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். இப்போக்கு சாதியமைப்பைத் தக்க வைக்கிறது என்ற புரிதலைத் தவற விட்டிருக்கிறார்கள். எல்லாக் காலத்திலும் இன்றைய சாதிகள் இவ்வாறே இருந்தனர் என்பதையே அவர்களின் நந்தனார் பற்றிய பிரதிகள் தெரிவிக்கின்றன. சாதியமைப்பை உருவாக்கிப் பரப்புவதில் கதை உள்ளிட்ட பண்பாட்டு வடிவங்களுக்கு உள்ள இடத்தை மேலோட்டமாகக் கடந்திருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் அடிப்படையான காரணம் ஒன்றிருக்கிறது. அது அவர்கள் ஏற்றிருந்த அரசியலின் ஒற்றைப் பண்பும், அந்த அரசியலுக்கேற்ற வரலாற்றுப் புரிதலும்தான். அதாவது, அவர்கள் முன்வைத்த ‘இழப்பதற்கு ஏதுமற்ற அடிமை’ என்பதற்கான பிம்பமாக நந்தனார் கதை இருந்தது என்பதுதான். இதன்படி சமகாலத்தை மட்டுமல்ல வரலாறெங்கும் இவ்வாறுதான் இருந்தது என்பதைச் சொல்வதற்கும் இக்கதையை எடுத்தனர். அவர்கள் எதிர்பார்த்திருந்த ஒரு ‘victim நிலை நந்தனாரிடம் இருந்தது உண்மை. க.கைலாசபதி போன்ற தேர்ந்த திறனாய்வாளர்கள் கூட நந்தனாருக்குச் சான்றுகள் இல்லை என்ற முடிவுக்கு அருகே வந்துவிட்டாலும், பிரதிகள் காட்டும் மேல் – கீழ் சமூகத்தைப் பார்த்து வரலாற்று எதார்த்தம் என்ற முடிவுக்குத் திரும்பி விடுவதை இவ்வாறுதான் புரிந்துகொள்ள முடிகிறது. தரவுகளைக் கூட நம்முடைய அரசியல் புரிதலும் – விருப்பமும்தான் அர்த்தப்படுத்துகிறது என்பதற்கு இது சிறந்த உதாரணம்.

திராவிட இயக்கம்

பண்பாடு, இலக்கியம் போன்ற விசயங்களில் திராவிட இயக்கப் பார்வை என்று ஒற்றைப் பார்வையைக் கூறிவிடமுடியாது. இவை பற்றிய பெரியாரின் பார்வை பின்வந்தோரிடையே அப்படியேயும், மாறியும் இருந்திருக்கிறது. குறிப்பாக அண்ணாவிடம் பெரியாரின் தொடர்ச்சியையும் பார்க்கலாம், விலகலையும் பார்க்கலாம். நந்தன் பற்றிய திராவிட இயக்கப் பார்வையைத் தேடும்போது இவற்றை மனதில்கொள்ள வேண்டும். பல்வேறு புராண – இலக்கியக் கதையாடல்களைக் கட்டுடைத்தும் மீட்டெடுத்தும் எழுதிவந்த திராவிட இயக்கத்தாரிடம் நந்தன் பாத்திரம் ஏனோ விடுபட்டிருக்கிறது. பிராமணர்களின் வஞ்சகத்தைச் சுட்டுவதற்கு நந்தன் கதை நல்ல வாய்ப்பு என்றபோதும் அது நடக்கவில்லை. இரணியன், இராவணன் கதைகளை அவ்வாறு அர்த்தப்படுத்தித்தான் எழுதினர். நந்தனாரைப் பற்றி பெரியார் பேசியிருந்தால் எவ்வாறு பொருள்படுத்தியிருப்பார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஒருபுறம் பார்ப்பனியத் தந்திரம் என்பதையும், மறுபுறம் நந்தனார் பார்ப்பனியத்திடம் சோரம் போனார் என்பதையும் பேசியிருக்க முடியும். பெரியாருக்குப் பின் வந்தோரின் கட்டுடைப்பு – மீட்புச் சொல்லாடல்களில் அரச நிலையில் இருந்தோர்களே இடம்பெற்றனர். நந்தனார் போன்ற பாத்திரங்கள் இடம்பெறவில்லை. நந்தனார் பற்றிய தன் எழுத்தைக் காட்ட வரும்போது 1944ஆம் ஆண்டு சிதம்பரத்தில் நடந்த வர்ணாசிரம மாநாட்டைக் கண்டித்து முரசொலி துண்டறிக்கையில் சேரன் என்னும் புனைபெயரில் எழுதியதையே மு.கருணாநிதியால் காட்ட முடிகிறது (ரவிக்குமாரின் ‘அறியப்படாத நந்தன் கதை’ நூலின் முன்னுரை). ஆனால், அதில் நந்தனார் பற்றி நேரடியாக எந்தக் குறிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதுவை சிவத்தின் ‘வீரநந்தன்

இந்நிலையில் புதுவை சிவத்தின் நந்தன் பற்றிய ஒரேயொரு படைப்பைப் பார்க்க முடிகிறது. புதுவை சிவம் (1908 – 1989) கவிதைகள், நாடகங்கள் எழுதியவர். புதுவை முரசு இதழை நடத்தியவர். புதுச்சேரி திராவிடர் கழகச் செயலாளராக இருந்தவர். இராமாயணக் கதையைத் தமிழர் – ஆரியர் போராட்டமாகக் கருதி ‘தமிழரின் வீழ்ச்சி அல்லது இராமாயணச் சாரம்’ (1935) என்ற நாடகத்தை எழுதினார். இந்தத் தலைப்பே அவரின் படைப்புப் பார்வையைச் சொல்லிவிடுகிறது. பாரதிதாசனின் ‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்’ நாடகத்தோடு ஒப்பிடக்கூடியதாக இருக்கிறது. அதன் தாக்கம் பெற்று எழுதப்பட்டதாகவும் இருக்கலாம்.

புதுவை சிவம் எழுதி, அவர் மரணத்திற்குப் பிறகு மீட்கப்பட்ட நாடகம் இது. அப்போது நாடகமாக அரங்கேற்றப்பட்டதா என்று தெரியவில்லை. அண்மையில் புதுவை சிவம் பிறந்தநாள் விழாக்களிலும், நவீன நாடகங்களிலும் இது நாடகமாக நிகழ்த்தப்பட்டதாகத் தெரியவருகிறது.

1940 – 45 காலகட்டங்களில் எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதப்படும் இந்நாடகம், 22 காட்சிகளாக அமைந்துள்ளது. நந்தனார் தொடர்பான பிறரின் மறு ஆக்கங்களிலிருந்து பெருமளவு ‘வீரநந்தன்’ வேறுபட்டிருந்தது. நந்தனை வீரன் என்று கூறியதோடு பார்ப்பனியத்திற்கு எதிராகத் திட்டமிட்டுப் போராடியவனாகவும் இந்நாடகம் காட்டியது.

கதாகாலட்சேபம் ஒன்று நடப்பதிலிருந்து நாடகம் தொடங்குகிறது. அதில் நந்தனார் பற்றிய ‘வழக்கமான’ கதையைப் பாகவதர் சொல்லிக்கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் ஒருவன் அது உண்மைக் கதை அல்ல, தான் சொல்லுவதே உண்மைக் கதை என்று கூறுவதாக நாடகம் மாறுகிறது. அக்கதை பின்வருமாறு:

நந்தனின் பெற்றோர்கள் பொது புத்தி கொண்டவர்கள், பிராமணர்களை ஆண்டைகளாகவே நினைப்பவர்கள். நந்தனின் இயல்பான மீறல்களைக் கூட வேண்டாம் எனத் தடுத்து அறிவுறுத்துகிறவர்கள். ஆனால், அவனோ ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதைப் பௌத்தப் பிக்கு ஒருவர் மூலம் கேட்டு ஏற்றுக்கொண்டவனாக இருக்கிறான். நண்பர்களோடு சேர்ந்துகொண்டு மூடப் பழக்கங்களை ஒழித்துக் கட்ட நினைப்பவன். உயிர்ப் பலிகளைத் தடுக்க நினைப்பவன். தெய்வம் ஒன்றே என்று கருதுவதோடு அதனை மக்களிடையே பரப்பியும்வருபவன். எனினும் பெற்றோர் வாங்கிய கடனுக்காகப் பார்ப்பன ஆண்டையின் நிலத்தில் அடிமையாக உழைக்க வேண்டிய நிலையிலும் இருக்கிறான்.

நந்தனுக்கும் நாளடைவில் நண்பர்கள் கிடைக்கிறார்கள். தில்லை நடராஜரைத் தரிசிக்க முடிவு செய்கின்றனர். பண்ணையாரிடம் அனுமதி கேட்கும்போது நிறைய வேலைகள் தருகிறான். நந்தனின் உறுதி கண்டு சூழ்ச்சி எண்ணத்தில் “நடராஜர் கனவில் வந்து அனுப்பச் சொல்லியதாக” தில்லை செல்ல அனுமதிக்கிறான். ஊராரோடு சென்றாலும் நந்தனை மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கின்றனர் தீட்சிதர்கள். அங்கு அக்னி குண்டத்தில் தள்ளி நந்தனைக் கொல்கிறார்கள். நந்தனைப் புஷ்ப பல்லக்கு வந்து கயிலைக்கு அழைத்துச் சென்றதாகக் கூறிவிடுகின்றனர்.

‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’ கதையை அப்படியே எடுத்துக்கொண்டு அதில் நந்தனை மட்டும் மாற்றியிருக்கிறார். நந்தனை நவீன சமத்துவ – சனநாயகக் கருத்துகளை ஏற்றிருந்தவனாகக் காட்டியிருந்ததும், பௌத்த மதக் கருத்துகள் அவனுக்குள் தாக்கம் செலுத்தியிருந்ததாகக் காட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. நாடகத்தில் திருப்புன்கூர் இல்லை, நந்தி விலகல் இல்லை, குளம் வெட்டவில்லை. பகுத்தறிவு அரசியலை ஏற்றிருந்ததால் ‘அற்புதங்களாக’ வரும் பகுதிகள் விடப்பட்டிருக்கலாம். நாடகம் முழு வடிவம் பெறாமல் உரைநடை மிகுந்ததாக உள்ளது. மொத்தத்தில் ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’ கதைச் சட்டகத்தை எடுத்துக்கொண்டு அவற்றிற்குள் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

m

கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழில் எழுதப்பட்டுவந்த நந்தனார் கதைகளை இதுவரையில் தொகுத்துப் பார்த்திருக்கிறோம்.19ஆம் நூற்றாண்டும், 20ஆம் நூற்றாண்டும் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்த நவீன சமுதாய அமைப்பாகும். இலக்கியத்தில் வடிவ ரீதியாக உரைநடையும், உள்ளடக்க ரீதியாக அறிவொளி மதிப்பீடுகளும் செல்வாக்கு பெற்றன. சமூகத்தில் பொதுவெளி உருவாக்கமும், நவீன ஜனநாயக அரசியல் பார்வைகளும் நடைமுறைக்கு வந்திருந்தன. இத்தகைய காலகட்டத்தினூடாகத்தான் இத்துணை நந்தனார் கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. நந்தனார் கதையாடல் ஒருபுறம் படைப்பாளிகளையும், மறுபுறம் படைப்பல்லாத வெளியையும் ஈர்த்தன. சமூக தளத்தில் சீர்திருத்தவாதிகள், தேசிய – தலித்திய – இடசாரி தரப்பினர் நந்தனார் கதையால் ஈர்க்கப்பட்டிருந்ததைப் பார்த்தோம்.

இவ்வாறு நந்தனார் கதையை வெவ்வேறு தரப்பினர் வெவ்வேறு நோக்கங்களுக்காக எழுதியிருப்பினும் அடிப்படையான கதையமைப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பாத்திரங்களில், கதையின் முடிவில், உரையாடலில், சம்பவங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டாலும் நந்தனார் பண்ணையடிமை என்பதிலும், அது தொடர்பான சாதி இழிவிலும் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. குறிப்பிட்ட சாதியாகக் கூறப்படும் ஒரு பாத்திரம், சாதிய இழிவுகளுடன் கூடிய பண்ணையடிமையாக இருக்க முடியும் என்பதில் எல்லோரும் உடன்பட்டுள்ளனர். பலவற்றை மாற்றி எழுதினாலும் பண்ணையடிமை என்பதை மட்டும் மாற்றி எழுத யோசிக்க முடியவில்லை. புனைவில் கூட அத்தகைய யோசனை வர முடியாத காரணத்தின் பெயர்தான் சமூகத்தின் சாதிய உளவியல். எழுதியிருப்பவர்கள் எல்லோரும் சாதியவாதிகள்; எனவே இதனைத் திட்டமிட்டுச் செய்தார்கள் என்று கூற முடியாது. இன்னும் சொல்லப்போனால் இக்கதையை நன்னோக்கத்தோடு எழுதியவர்களே அதிகம். ஆனால் மாற்றி யோசிக்க முடியாததற்குக் காரணம் என்ன? இங்குதான் தலித் பற்றி கற்பிதம் செய்வதில் சமூக உளவியல் ஏற்படுத்தியிருக்கும் வரம்பை நாம் யோசிக்க வேண்டியிருக்கிறது. பிரக்ஞையைத் தாண்டியும் யோசிக்க முடியாததின் பெயர்தான் சாதிய உளவியல் என்கிறோம். சாதியானது சமூக பொருளாதார வலைப்பின்னலால் மட்டுமல்ல, அதற்கேயுரிய சமூக உளவியலாலும்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. முதலில் சமூகத்தால் தீர்மானிக்கப்படும் சாதி உளவியல், பின்னர் சமூகத்தையே தீர்மானிக்கிறது. இத்தகைய ‘சமூகத்தின் சாதி உளவியல்’ பற்றி ஆழமாக ஆராயப்பட்டதில்லை. கிட்டத்தட்ட அத்தகைய உளவியல் உருவாக்கம், அதன் காரணிகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள நந்தனார் கதையை ஒரு சான்றாகக் கொள்ளலாம்.

நந்தனார் கதை முதலில் எழுதப்பட்டபோது புனைவு என்று கருதியே எழுதப்பட்டிருக்கும். கோபாலகிருஷ்ண பாரதியார் எழுதியபோதும் அது ஒரு பக்திப் புனைவு என்ற புரிதலே இருந்தது. ஆனால், இருபதாம் நூற்றாண்டில் அக்கதை திரும்பத் திரும்ப எழுதப்பட்டபோது – எழுதிய நோக்கத்தை வைத்துப் பார்க்கும்போது எழுதியவர்கள் தாங்கள் அறியாமலே அது ‘வரலாறு’ ஆவதற்கு உதவிவிட்டனர் எனலாம்.

ஒரு புனைவு சமூக ‘எதார்த்தத்தை’ விளக்குவதற்கான பிரதியாகத் திரும்பத் திரும்ப எடுத்தாளப்பட்டபோது, எழுதிச் சென்ற போக்கில் ‘வரலாறாகி’க்கொண்டது. சமூக நனவிலியில் வரலாறாக நிலைத்தது. பிறகு, அது கதை என்றே சொல்லிக்கொள்ளப்பட்டாலும், கதை என்ற பெயரில் நிலவும் வரலாறாகத்தான் கருதப்பட்டது. நந்தனார் கதைக்கு முன்பு பண்ணையடிமைத்தனத்தையும் சாதிய இழிவையும் ஒரு சாதியோடு பிணைத்து இத்துணை வலுவாக எழுதி பரப்பிய வேறு பிரதி இல்லை எனலாம். இந்தப் பரவலாக்கத்திற்கு ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’ எழுதப்பட்ட காலகட்டமும் ஒரு காரணம். அந்த வகையில் அச்சு உள்ளிட்ட நவீன தொழிற்நுட்பம், நவீன அரசியல் யோசனைகள், தலித்துகள் பற்றி அவர்களுக்குள்ளும் பிறரிடத்திலும் உருவான சொல்லாடல்கள் போன்றவற்றைக் கூறலாம். நந்தனார் கதை பரவிவந்த வேகத்தில் ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைச் செய்தது. முதலாவதாக, கதையைப் பரப்பியது. இரண்டாவதாக, கதையின் வரம்பைத் தாண்டிய மாற்று யோசனைக்குப் போவதைத் தடுத்தது. நந்தனார் பற்றி இத்துணை பிரதிகள் எழுதப்பட்டன என்பதை மற்றொரு வகையில் சொல்ல வேண்டுமானால் சமூகத்தில் நிலவும் மேல் – கீழ் என்னும் இருமைச் சட்டகமும் அந்த அளவிற்குப் பரவியது எனலாம். நந்தனார் கதை பரவலானது மூலம் நடந்த சில விசயங்களைப் பின்வருமாறு தொகுத்துக்கொள்ளலாம்.

  1. சாதியச் சட்டகத்தை நினைவுபடுத்திவந்தது. அதன் மேல் – கீழ் நிரலில் ஒரு சாதி இழிவானது (பறையர்), ஒரு சாதி பெருமையானது (பிராமணர்) என்ற இருமையை உறுதிபடுத்தியது.
  2. சாதி தோன்றியதிலும், வளர்ச்சி பெற்றதிலும் காலந்தோறும் – இடந்தோறும் சந்தித்துவந்த மாற்றங்களை மறைத்து அது என்றைக்கும் ஒரே மாதிரி இருந்தது, இன்றிருப்பதுதான் என்றென்றைக்குமான நிரந்தரமான நிலை என்ற கருத்து உருவாக உதவியது.
  3. சாதியைப் பழைமையோடும் – கடவுளோடும் – புராணத்தோடும் இணைத்தது மூலம் அது மாறாதது அல்லது அழிக்க முடியாதது என்கிற உளவியல் வலுப்பெற உதவியது.
  4. தலித்துகள் பெற்றிருந்த சமூக உரிமைகள் – மதிப்புகள் ஆகியவை நினைவுக்கு வராத வண்ணம், அவர்களுக்கென ஒரேவிதமாக ‘இழிவு’ வரலாறே இருந்தது என்றாக்கினர். இதனால் தலித்துகளின் இன்றைய தாழ்நிலைக்குப் பின்னாலிருக்கும் அதிகார காரணிகள் பேசப்படவில்லை.
  5. நந்தனார் கதையைத் திரும்பத் திரும்ப எழுதியவர்கள் கதையை நேரடியாகப் பொருள் கொண்டனர். அதிலிருந்த குறியீடுகளை – இடைவெளிகளை – மீறல்களை வாசிக்கத் தவறினர்.

தலித்துகள் தாழ்நிலையில் இருந்ததில்லையா, சுரண்டப்படவில்லையா என்பதான கேள்விகள் இவ்விடத்தில் எழலாம். அதனை நாம் முற்றிலும் மறுக்கவில்லை. இங்கு பிரச்சினை அதுவல்ல. ஒரு கதையாடல் சமூகத்தில் என்ன செய்கிறது, அதன் விளைவுகள் எவ்வாறெல்லாம் இருக்கின்றன, கதைக்குச் சமூகத்தில் பங்கே இல்லையா என்பவற்றையும் பார்க்க வேண்டும் என்கிறோம். இவ்விடத்தில் ஒன்றை முக்கியமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. கதைகள் என்பவை புனைவுகள்தாம். அதேவேளையில் அக்கதைகளில் சமூக எதார்த்தம் பிரதிபலித்திருப்பதைத் தேடி நிறைய பேசியிருக்கிறோம். உண்மையில் சமூகம் கதைகளில் பிரதிபலிக்கப்படுவதைப் போல், கதைகளும் சமூகத்தில் தாக்கம் செலுத்துகின்றன. இதன் காரணமாக அக்கதை செல்வாக்கு பெற்றுவிடுகிறது. பிறகு, நாம் கதையில் சொல்லப்படுபவற்றிற்கான சமூக – வரலாற்றுப் பொருத்தத்தைத் தேட ஆரம்பித்துவிடுகிறோம். இந்த ஊடாட்டத்தில் கதை எழுதப்பட்ட நோக்கமும் – பரவிய விதமும் மறைந்து போய்விடுகிறது. தேடும் வரலாற்றுப் ‘பொருத்தம்‘ கிட்டும்போது திருப்தி கண்டனர். வரலாற்றின்படி புனைவு எழுதப்பட்டிருக்கிறது என்று கூறிக்கொண்டே புனைவின்படி வரலாற்றைக் கண்டனர். இவ்வாறு நிகழ்காலத்தைக் கருத்தில் கொண்டு கடந்த காலத்தை வடிவமைத்தோம். கதைக்குப் பொருத்தம் இருந்ததோ இல்லையோ வரலாற்றிற்குப் பொருத்தமாக அது இருக்க வேண்டும் என்று விரும்பப்பட்டது. உண்மை என்பது, ஓரிடத்தில் ஒன்று இருப்பதனால் மட்டும் உருவாவதில்லை. இருந்தது என்று ‘நம்புவதாலும்‘ உருப்பெறுகிறது. வரலாறு என்பதும் ஒரு நம்பிக்கையே. ஒன்று பருண்மையாக இருந்திருந்தாலும், இருந்ததென்று அது நம்பப்படாவிட்டால் பொய் என்றே பொருளாகிவிடுகிறது. மாறாக, ஒரு பொருள் இருந்திருக்காவிட்டாலும், அப்படியொன்று இருந்ததாகக் கூறுவதை நம் மனம் நம்பத் தொடங்கிவிடுமானால் அது உண்மை என்றாகிவிடுகிறது. எது உண்மை, எது பொய் என்றறிவது ஒருபுறம் இருக்கட்டும். “உண்மை” என்ற ஒன்று எவ்வாறு உருவாகிறது என்பதை அறிந்துகொள்ள நந்தனார் கதைகளின் தொடர் பயணம் ஒரு சிறந்த சான்று. கதையிலிருப்பது போல் நடந்ததால் உண்மை என்று சொல்வதை விடவும், அதுபோல்தான் நடந்தது என்று தொடர்ந்து சொல்லிவந்ததால் (வரலாற்று) உண்மை ஆயிற்று என்று சொல்வதே பொருந்தும். ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகிவிடும் என்ற உள்ளூர் பழமொழிக்குச் சிறந்த உதாரணமாக நந்தனார் கதை அமைந்துவிட்டது.

(தொடரும்)

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!