“உங்களது கருப்புத் தோலை
உடலை மூடும் ஒரு அங்கியைப் போல் அணியாதீர்கள்
அதனைப் போர்க்கொடியைப் போல்
உயர்த்திப் பிடியுங்கள்”
– லாங்ஸ்டன் ஹ்யூக்ஸ்
1982ஆம் ஆண்டு அரக்கோணம் பகுதியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த விளாபாக்கம் சந்திரசேகரன், மின்னல் சுப்பிரமணியம் இருவரும் படுகொலை செய்யப்படுகின்றனர். காரணம்: விளாபாக்கத்தில் சாதி இந்து பகுதியிலிருந்து தலித் குடியிருப்புக்குத் தண்ணீர் குழாய் பெற்றதையொட்டி உருவான பிரச்சினையில் ஆசிரியர் சந்திரசேகரனும், மின்னல் கிராமத்தில் செய்த வேலைக்கான கூலி கேட்ட தகராறில் நாட்டாண்மை சுப்பிரமணியமும் கொல்லப்பட்டனர். இதைக் கண்டித்து அன்றைய காலகட்டத்தில் வடஆற்காடு பகுதியில் தீவிரமாக இயங்கிய இந்தியக் குடியரசுக் கட்சி(கள்) உள்ளிட்ட தலித் அமைப்புகள் பல போராட்டங்களைத் தனித்தனியாகவும் ஒன்றிணைந்தும் முன்னெடுத்தன. அதன் உச்சமாக, ‘March to Madras’ என்ற பேரணி நடைபெற்றது. இரண்டு நாள் பயணமாக ஆகஸ்டு 29ஆம் தேதி அரக்கோணம் மின்னல் கிராமத்தில் தொடங்கிய பேரணி திருவாலங்காடு, திருவள்ளூர், வெள்ளவேடு, திருமழிசை, பூந்தமல்லி, கரையான்சாவடி, குமணன்சாவடி, வேலப்பன்சாவடி, மதுரவாயல், நெற்குன்றம், கோயம்பேடு, அரும்பாக்கம், அமைந்தகரை வழி ஆகஸ்டு 30 அன்று முதல்வர் அலுவலகத்தில் மனு அளித்ததோடு நிறைவுற்றது. இரண்டு படுகொலைகளுக்குக் கண்டனம் தெரிவிக்கும் பேரணி என்றாலும், அக்காலகட்டத்தில் நிகழ்ந்த பல்வேறு சாதிய வன்முறைகளைக் குறிப்பிட்டு, தங்கள் கோரிக்கைகளையும் பரிந்துரைகளையும் மனுவாக அளித்தனர். சொல்லின் செல்வர் ஆ.சக்திதாசன், டாக்டர் அ.சேப்பன், பௌத்த அறிஞர் மு.சுந்தரராஜன், செ.கு.தமிழரசன், ஆகியோர் தலைமையில் பல்வேறு தலித் கட்சிகள் – அமைப்புகள் இணைந்து நடத்திய இப்பேரணியின் நிறைவிடத்தில் ஐயாயிரம் பேர் திரண்டிருந்தனர்.
தமிழகத்தில் நடைபெற்ற மிகப்பெரிய பேரணியில் ஒன்றான இதுகுறித்து இந்தியக் குடியரசுக் கட்சியின் ‘உணர்வு’ இதழில் அறிவிப்புகள், கட்டுரைகள் வெளிவந்திருந்தாலும் வெகுஜன ஊடகங்களாலும் அறிவுஜீவி தரப்பாலும் ‘March to Madras’ இருட்டடிப்புச் செய்யப்பட்டது. பல வருடங்களுக்குப் பிறகு ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிய கட்டுரையே (காலச்சுவடு, செப்டம்பர் 2021) சமகாலத் தரவாக இருக்கிறது.
‘வரலாறு என்பது திரும்பத் திரும்ப நிகழ்வது.’ பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை ஐந்தாம் தேதி மாலை பெரம்பூரில் கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. தமிழக அரசின் நிர்வாகத் தோல்வி, உளவுத்துறை எச்சரித்தும் நடவடிக்கை இல்லை, சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை என்ற புகார்கள் ஒருபுறம். அன்னாரது உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல அனுமதி மறுப்பு, கட்சி அலுவலகத்தில் உடலை அடக்கம் செய்ய அனுமதி மறுப்பு, படுகொலைக்கு நீதி வேண்டி ஜனநாயக வழியில் போராடியவர்கள் மீது காவல்துறையின் அதிகார மீறல் என அரசு நிர்வாகத்தின் மெத்தனம் மறுபுறம். இவற்றைத் தாண்டி ஆளும் அரசுக்கு ஆதரவாக இயங்கும் தொழிற்நுட்ப பிரிவும், ‘முற்போக்காளர்’களும் இப்படுகொலையை நியாயப்படுத்தும் விதமாகச் சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை ரெளடியாகவும், கட்டப்பஞ்சாயத்து செய்பவராகவும், அதன் காரணமாக உருவான பகையால்தான் கொல்லப்பட்டார் என்றும் சித்திரித்தனர். தலித்திய அமைப்புகளிடமிருந்தும், ஆம்ஸ்ட்ராங்கால் பயனடைந்த எளிய மக்களிடமிருந்தும் எதிர்ப்புகள் எழுந்த பிறகே இவர்கள் சற்று அடங்கினர். ஆனாலும், அரசு தன் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. இப்படுகொலையில் சரணடைந்தவர்கள், கைது செய்யப்பட்டவர்கள், என்கவுண்டர் செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் கூலிப்படையினரே. ‘வேலை’ செய்தவர்களை அடையாளப்படுத்தும் அரசு, ‘வேலை’ கொடுத்தவர்களை இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறது. கட்சிப் பொறுப்பில் இருந்த சிலர் கைது செய்யப்பட்டவுடன், அந்தந்தக் கட்சித் தலைமை சம்மந்தப்பட்டவர்களைக் கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியிருக்கின்றன, ஆளுங்கட்சியைத் தவிர. இவையெல்லாமும் இவ்வழக்கின் போக்கு மீதும் அரசு மீதும் சந்தேகங்களை எழுப்புகின்றன.
நிற்க. இத்தனையையும் தாண்டி வேறொரு வகையில் இப்படுகொலை முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர், அவரது இல்லத்திற்கருகே, பொதுமக்கள் நடமாட்டமிருக்கும் நேரத்தில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்றால் இங்கு எளிய மக்களின் நிலை கூடுதல் அச்சத்திற்குரியதாகிறது. மேலும், மக்கள் தலைவராக ஆம்ஸ்ட்ராங்கின் பணிகளையும் குறிப்பிட்டாக வேண்டும். கொள்கை ரீதியாகவும், செயற்பாடு ரீதியாகவும் பாபாசாகேப் அம்பேத்கர், மான்யவர் கன்ஷிராம், தலைவர் பூவை மூர்த்தியார் ஆகியோரை உள்வாங்கியவர் ஆம்ஸ்ட்ராங். வர்ணாசிரமத்தால் வஞ்சிக்கப்படும் பகுஜன் மக்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் இயங்கியவர். “ஒரு எம்.எல்.ஏ., ஒரு எம்.பி., என்பது நம் இலட்சியமல்ல. முதல்வராவதும் பிரதமராவதும்தான் நம் இலட்சியம்.” என்று முழங்கியவர். அவருடைய செயல்திட்டங்களும் அதை நோக்கியே இருந்தன. அரசியல் – பண்பாட்டுத் தளத்தில் பெரும் பாய்ச்சல்களைச் சாத்தியப்படுத்தியவர். தனிப்பட்ட முறையில் அவர் செய்த உதவிகள் குறித்துப் பலரும் குறிப்பிடுகின்றனர். பல வழிக்கறிஞர்களை, தொழில் முனைவோரை உருவாக்கியிருக்கிறார், பௌத்தமேற்பு நிகழ்வுகளை ஒருங்கிணைத்திருக்கிறார். பல சாதி வன்கொடுமை சம்பவங்களில் வழக்குகள் மூலம் நீதி கிடைக்க உதவியிருக்கிறார். தனித்தனியாகத் தெரியும் இப்புள்ளிகளை நேர்க்கோட்டில் இணைத்துப் பாருங்கள். இவை எல்லாமே அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான களப்பணிகள். அந்தவகையில் ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலையென்பது ஓர் அச்சுறுத்தல். மைய நீரோட்ட அரசியலைத் தவிர்த்து, அம்பேத்கரியத்தை அடிப்படையாகக் கொண்டியங்கி, செல்வாக்குள்ள தலைவராக உருவானவரை அழிப்பது என்பது ஒரு சமூகத்தின் நம்பிக்கையையே சிதைக்கும் செயல்.
இந்நிலையில்தான், சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டியும் பகுஜன் மக்களின் ஒற்றுமையைப் பறைசாற்றவும் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ‘March for Justice’ பேரணி ஒருங்கிணைக்கப்பட்டது. 20 ஜூலை அன்று எழும்பூர் ரமடா உணவகம் முன்பு தொடங்கி, இராஜரத்தினம் அரங்கம் அருகில் நினைவேந்தல் கூட்டத்தோடு நிறைவுறும் வகையில் திட்டமிடப்பட்டது. அரசியல் கட்சியாக அல்லாமல் தனியோர் அமைப்பின் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்ட பேரணி என்றபோதும், ஆம்ஸ்ட்ராங்கிற்காகவும் அவரது ஆற்றல்மிக்கச் செயற்பாடுகளுக்காகவும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், குறிப்பாக இளைஞர்கள் பேரணியிலும் நினைவேந்தல் கூட்டத்திலும் பங்கேற்றனர். வழக்கம் போல, வெகுஜன நாளிதழ்கள் “நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்” என்றெழுதி தம் சிறுமையை வெளிப்படுத்திக்கொண்டன. அரசியல் கட்சித் தலைவர்கள், இயக்க – அமைப்பு தலைவர்கள், வழக்கறிஞர் சங்கங்கள், அரசு ஊழியர்களின் எஸ்.சி/எஸ்.டி நலத்துறை இயக்கங்கள், திரைத்துறையினர் எனப் பல்வேறு தரப்பினர் இந்நிகழ்வில் பங்கேற்றனர், உரையாற்றினர். நீலம் பண்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் பா.இரஞ்சித் ஆற்றிய உரை இன்றும் விவாதிக்கப்படுகிறது.
உலக வரலாற்றில் பெரும் அதிர்வுகளை உண்டாக்கிய பேரணிகளில் முதன்மையானது, அமெரிக்காவில் கறுப்பின மக்களின் சட்ட உரிமைகளுக்காக நடைபெற்ற ‘March on Washington’ பேரணி. இந்திய வரலாற்றில் ‘தண்டி யாத்திரை’யைக் குறிப்பிடுவர். ஆனால், பாபாசாகேப் அம்பேத்கர் தலைமையேற்று நடத்திய ‘மகத் சத்தியாகிரகம்’ பற்றி அறிந்தவர்கள், அதன் அதிர்வை நிச்சயம் உணர்வார்கள். அந்தவகையில், தமிழ்நாட்டில் March to Madras’ பேரணிக்கு அடுத்தபடியாக March for Justice’ பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு வரலாறே சான்று.
எளிய மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்று ஒன்றிணைந்தால் பிரித்தாளும் கூட்டம் சிதறிவிடும் என்ற தத்துவத்தை அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்தி, அரசியல் – சமூக – பண்பாட்டு அதிகாரத்தைக் கைப்பற்றுவோம். அதுவே சமத்துவத் தலைவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி. ஜெய்பீம்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி நடைபெற்ற நினைவேந்தல் பேரணியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
- பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் நீதி விசாரணையை நேர்மையான முறையில் நடத்தி உண்மையான குற்றவாளிகளைத் தண்டித்திடுக. வழக்கு விசாரணை சரியான பாதையில் செல்லாதபட்சத்தில் சிறப்புப் புலனாய்வு விசாரணை, பதவியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்திடுக.
- இக்கொலை வழக்கில் கோடிக்கணக்கான ரூபாய் புழங்கியிருப்பதைச் சமீபத்திய விசாரணையின் மூலம் அறியமுடிகிறது. இவ்வழக்கில் ஆருத்ரா நிறுவன மோசடி பின்னணியையும், பல்வேறு கட்சியைச் சார்ந்தவர்கள் படுகொலையில் ஈடுபட்டிருப்பதையும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தி உண்மையை வெளிக்கொணர்ந்திடுக.
- சமூகத்தில் மக்கள் செல்வாக்கு பெற்ற அரசியல் தலைவரும், தேசியக் கட்சியின் மாநிலத் தலைவருமான ஆம்ஸ்ட்ராங் போன்றவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழலில், தமிழகத்தின் தலித் தலைவர்கள், செயற்பாட்டாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிடுக.
- பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த குற்றவாளிகளில் ஒருவரான திருவேங்கடம் என்பவர் சமீபத்தில் காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். படுகொலையில் ஈடுபட்டவர்களை இயக்கியது யார் என்கிற சங்கிலித் தொடரைக் கண்டுபிடித்து, பாரபட்சமில்லாமல் அனைவரும் நீதி விசாரணையின் முன் தண்டனை பெறுவதை உறுதி செய்ய வேண்டும். காவல்துறை என்கவுண்ட்டரை அரசு ஊக்குவிப்பதை நிறுத்த வேண்டும்.
- அரசியல் படுகொலைக்கு உள்ளான தலைவர் ஆம்ஸ்ட்ராங் சில ஆண்டுகளுக்கு முன்னே தன்னைக் குறித்து அவதூறான செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மீது வழக்கு தொடுத்து நியாயத் தீர்ப்பைப் பெற்றுள்ளார். நீதிமன்றமும் சம்மந்தப்பட்டவர்களுக்கு அபராதத் தொகை விதித்து கண்டித்தது. இப்படியிருக்க, அவரது மறைவிற்குப் பிறகு ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் அவரை இழிவுபடுத்தும் விதமாக அவதூறுகளைப் பரப்பும் ஊடகவியலாளர்கள், அரசியல் இயக்கத்தார்கள், தனிநபர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுத்திடுக.
- தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிராக நடக்கும் தொடர் வன்முறையை விசாரிப்பதற்கு அரசு சாரா தலித் பிரதிநிதிகள், அறிவுஜீவிகள் கொண்ட குழுவை அமைத்திடவும். அக்குழு கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- தமிழகத்தில் தலித் மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து நடக்கும் வன்முறைகளை ஆய்வு செய்வதற்கு நாடாளுமன்றக் குழு ஒன்றை உடனடியாக ஒன்றிய அரசு அமைத்திட வேண்டும்.
- திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு வன்கொடுமைகளைக் களைந்திட தமிழ்நாடு ஆதிதிராவிடர் / பழங்குடிகளுக்கான ஆணையம் உருவாக்கி அதற்கென்று சட்ட விதிகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. இருந்தும் வன்கொடுமை வழக்குகள் மீதான விசாரணைகளில் குறிப்பிடத் தகுந்த மாற்றங்கள் நிகழாமல் இருக்கிறது. இதனைச் சரி செய்து அவ்வாணையத்தின் செயல்பாடுகள் உறுதியாகவும் விரைவாகவும் நடந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிகழ்வில் பங்கேற்ற தலைவர்கள்
- சமூகநீதிப் போராளி க.திருவள்ளுவன்
- பிக்கு மௌரிய புத்தா (தமிழ்நாடு சிறுபான்மை நலத்துறை உறுப்பினர்)
- பூவை.ஜெகன் மூர்த்தி (தலைவர், புரட்சி பாரதம் கட்சி)
- செ.கு.தமிழரசன் (தலைவர், இந்தியக் குடியரசுக் கட்சி)
- ப.சிவகாமி ஐ.ஏ.எஸ் (தலைவர், சமூக சமத்துவப் படை)
- ஆசைத்தம்பி (தலைவர், மக்கள் தேசம் கட்சி)
- டி.எம்.புரட்சிமணி (தலைவர், நீலப்புலிகள் அமைப்பு)
- கோபிநாத் (மாநில ஒருங்கிணைப்பாளர் (தமிழ்நாடு, கர்நாடகா), பகுஜன் சமாஜ் கட்சி)
- கு.ஜக்கையன் (நிறுவனத் தலைவர், ஆதித் தமிழர் கட்சி)
- நீதியரசர் ஹரிபரந்தாமன்,
- திருமுருகன் காந்தி (ஒருங்கிணைப்பாளர், மே பதினேழு இயக்கம்)
- எம்.பி.ரஞ்சன் குமார் (தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி/எஸ்.டி பிரிவு)
- சுப.உதயகுமார் (மாநிலத் தலைவர், பச்சைத் தமிழகம் கட்சி)
- மன்சூர் அலி கான் (தலைவர், தமிழ் தேசிய புலிகள் கட்சி)
- கிரேஸ் பானு (தலைவர், திருநர் உரிமை கூட்டியக்கம்)
- கரீம் (எஸ்டிபிஐ)
- மதி பறையனார் (தலைவர், அம்பேத்கர் மக்கள் படை)
- அருங்குணம் விநாயகம் (தலைவர், நாகர் சேனை)
- கலை இயக்குநர் கதிர்,
- சைதை அன்புதாசன் (ஒருங்கிணைப்பாளர், தலித் இயக்கக் கூட்டமைப்பு)
- எம்.ஏ.சூசை (மாநிலத் தலைவர், இந்திய குடியரசுக் கட்சி (அத்வாலே))
- ஓ.இ.சங்கர் (தலைவர், புதிய புரட்சிக் கழகம்)
- சமூகச் செயற்பாட்டாளர் பாரதி பிரபு,
- திருத்தணி திருநாவுக்கரசு (தலைவர், தலித் மக்கள் முன்னணி)
- இரா.தாயுமானவன் (தலைவர், ஜனநாயக புலிகள் கட்சி)
- மகிழ்வாணன் (தலைவர், இந்திய மனித உரிமைக் கட்சி)
- ஏ.என்.லெமூரியர் (நிறுவனர், அபயம்)
புகைப்படங்கள் : கபிலன் சௌந்தரராஜன்