3
நந்தனார் கதைக்கான வேர் ஏற்கெனவே இங்கிருந்தது என்று சொல்லப்பட்டாலும் நந்தனாருக்கு இன்றறியப்படும் பிம்பத்தைத் தந்ததும் மீட்டெடுத்ததும் கோபால கிருஷ்ண பாரதியாரின் பிரதிதான். ஆனால், அவற்றோடு ஒப்பிடும்போது நந்த மன்னன் பற்றி வாய்மொழிக் கதையே நமக்குக் கிடைத்திருக்கிறது. இந்நிலையில் எழுத்துப் பிரதியாக உள்ள நந்தனார் கதையே ஒற்றை உண்மையாக மாறியுள்ளது. அதேவேளையில் நாம் உற்றறிந்துகொள்ள வேண்டிய மற்றோர் உண்மையும் இதிலிருக்கிறது. நந்தனை மன்னன் என்று சொல்லும் கதைகள் யாவும் அவர் சார்ந்த வகுப்பினராலும், அவரைப் பக்த நந்தனாராகக் கூறும் எழுத்துப் பிரதிகள் யாவும் அதிகார சாதியினராலும் சொல்லப்பட்டிருக்கின்றன.
எதிர்பிரதியிலிருந்து நமக்கானதை வாசித்தல்:
ஒன்று எழுத்தில் வந்துவிட்டதாலேயே அது சந்தேகத்திற்கு அப்பாற்றபட்டதாகி விடாது; அதற்குள்ளிருந்தும் நாம் ஆராய முடியும். எழுத்துப் பிரதி சமூகத்தின் வெவ்வேறு எதார்த்தங்களைத் திரித்தோ மறைத்தோ, அரைகுறையாகப் புரிந்துகொண்டோ, வரையறுக்கப்பட்ட காப்பிய அழகு கருதியோதாம் உருவாகியிருக்கிறது.
இதனை அறிய யூகநோக்கு உதவும். இவ்வாறு யூகத்தை விரித்துக் காட்டக்கூடிய வாசிப்புகள் இங்கெழவில்லை. தம் தரப்புப் பிரதிகளில் மட்டுமல்லாமல் எதிர் தரப்புப் பிரதிகளிலிருந்தும் தம் தரப்புக்கான சான்றுகளை வாசித்துக் கண்டடைய வேண்டியுள்ளது. ஒரே பிரதிக்குள் எதிரும் புதிருமான தரப்புகளைக் கதையாக்கிச் சித்திரிக்கும்போது அதிலிருக்கும் மையத் தரப்பு எதிர் தரப்பைக் கேலியாகவோ, இழிவாகவோ சொல்லியிருக்கும். அவற்றை அப்படியே பொருள் கொள்ளாமல் அதன் மூல வடிவத்தை, மூல அர்த்தத்தை, எழுத்து மற்றும் சொற்களை உடைத்தோ – மாற்றியோ வாசிப்பதன் மூலம் வேறு சொல்லை – அர்த்தத்தைக் கண்டடைதல், குறிப்பிட்ட குறியீடு வெவ்வேறு பின்புலங்களில் பொருள்படும் விதம் போன்ற வகைகளில் வாசிப்பை நிகழ்த்த முடியும். அதன் மூலம் குறிப்பிட்ட அப்பிரதி திரித்த சொற்கள், மறைத்த அடையாளங்கள், புதிய அர்த்தத்தை மேலேற்றிய விதம் ஆகியவற்றை வெளிக்கொணர்ந்து அப்பிரதி வெளிப்படையாகச் சொல்லிக்கொண்டிருப்பதற்கு மாறான (மறைந்து நிற்கும்) அர்த்தத்தை அல்லது கதையாடலைக் கண்டடையலாம். இவ்விடத்தில் ஒரு பிரதிக்கு எதிரில் இன்னொரு பிரதி இருந்தால்தான் மாற்றுத் தரப்புக்கு ஆதாரம் கிடைக்கும் என்ற நிலைமைக்கு மாறாக, குறிப்பிட்ட பிரதிக்குள்ளிருந்தே அத்தகைய மாற்றுக் கதையாடலைக் கண்டுணர முடியும்.
உள்மெய் வாசிப்பு:
கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் கதையில் பார்ப்பார் x பறையர் என்னும் எதிர்மறை கூறப்பட்டு அவ்வாறே கதை நகர்த்திச் செல்லப்படுகிறது. கதையில் சாதியால் தாழ்த்தப்பட்ட பறையர் ஒருவரின் பக்தி மேன்மையை ஒட்டி அவருக்குப் பரிவாகப் பேசினாலும், அவர்களின் பண்பாடு இழிவாகக் காட்டப்பட்டுள்ளது.
அயோத்திதாசர் தரும் பார்வைபடி, இதனைக் கூற வேண்டுமானால் மேன்மை என்பதைப் புறமெய் என்றும், பண்பாடு என்பதை உள்மெய் (உண்மை) என்றும் கூறலாம். பிராமணர்களின் சாதி ஆதிக்கத் தடையை நந்தனார் தன்னுடைய மேன்மையான பக்தியால் தாண்டப்படுகிறார் என்றாலும் பிரதியில் பிராமணர்களின் பண்பாட்டு அடையாளம் விமர்சிக்கப்படவில்லை. மாறாக, மதிப்பாக தக்கவைக்கப்பட்டுள்ளன.
‘நந்தனார் கீர்த்தனை’யைப் படிக்கும் வாசகர்களிடம் கதை என்னும் வடிவம் பிரக்ஞைபூர்வமாய்ச் சேரும்போது அடையாளங்கள் என்னும் பண்பாட்டு விஷயங்கள் பிரக்ஞை இல்லாமலேயே சிந்தைக்குள் சென்று சேர்கிறது. இதனை அறிவதற்குப் பெயர்தான் உள்மெய் வாசிப்பு. அதன்படி நந்தனார் கதையை மட்டுமல்ல, அவற்றிலுள்ள அடையாளங்களையும் அவை யாரோடு எந்த அர்த்தத்தில் தொடர்புபடுத்தப்படுகின்றன என்பதையும் பார்க்க முடியும். கதை மூலமே அர்த்தம் உருவாகும் என்பதால் கதைக்குள்தான் மறைப்பும் திரிபும் நடத்தப்படும். அதேவேளையில் பண்பாட்டு அடையாளங்கள் உள்ளுறைந்தவை என்பதால் முழுமையாகவும் திரித்திருக்க முடியாது. அதன் எச்சங்கள் மிச்சமிருக்கும். இந்த மிச்சங்களை இணைத்து வாசிக்க வேண்டும்.
சாதி பற்றிய அயோத்திதாசரின் பார்வை:
இந்த விஷயத்தில் சாதிமுறை பற்றிய அயோத்திதாசரின் பார்வை நமக்கு உதவக்கூடும். இன்றைய கீழ் மேல் வரிசையிலான சாதிமுறை நிரந்தரமானதல்ல; பழமையானதல்ல என்பது அயோத்திதாசர் கருத்து. ஆனால், இன்றைக்குப் போல கீழ் – மேலான சாதியமைப்பு எல்லாக் காலத்திலும் இருந்தது என்று நம்ப வைக்கப்படுகிறது. இன்றைய சாதிய முறையானது ஒருவகை அதிகார தலைகீழாக்கத்தால் உருவானது என்பது அயோத்திதாசரின் கருத்து. இதன்படி இன்றைக்குக் கீழிருப்போரும் மேலிருப்போரும் வரலாறெங்கும் அவ்வாறாகவே இருந்திருக்க முடியாது என்பதும் அவரது கணிப்பு. இன்றைய ‘இழிந்த’ நிலையில் உள்ள பறையர், முற்காலத்தில் மதிப்பான நிலையில் இருந்தனர். அவ்வாறு இருந்திராத பிராமணர்கள் பல்வேறு மாற்றங்கள் வழியாக இன்றைய ‘மதிப்பான’ நிலையை வந்தடைந்தனர். அதாவது, சமூகத்தில் பறையர்கள் வகித்துவந்த நிலையையே பின்னாட்களில் பிராமணர்கள் தழுவிக்கொண்டனர் என்றார்.
தமிழ்ச் சமூக வரலாற்றில் சாதி முறையும் தலித்துகளும்:
இன்றைய தலித்துகள் வரலாற்றில் வெவ்வேறு நிலைகளில் இருந்திருப்பதைக் கூறும் சான்றுகளும் கிடைத்துள்ளன. சாதிமுறை தோன்றிவிட்ட வெகுகாலம் வரையிலும் கூட இன்றைய தலித்துகள் தாழ்ந்த நிலைக்குள் முற்றிலும் வராத நிலை இருந்திருக்கிறது. தமிழ் வரலாற்றில் சில தலித் சாதிகள் மேலான நிலையைப் பெற்றிருந்தமை பற்றிய இலக்கிய – கல்வெட்டு – வழக்காற்றுச் சான்றுகள் கிடைத்துள்ளன. சங்க இலக்கியம் பிறந்த காலத்தின் பிரதிபலிப்பாக புறநானூற்றில் “துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று இந்நான்கல்லது குடியுமில்லை” என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. இப்பாடலின் காலத்தில் இன்றைய சாதிமுறை இருந்தனவா, இப்பெயர்கள் இன்றைய சாதிய அர்த்தத்திலேயே கையாளப்பட்டனவா, அவை குடிகளின் பெயர்களா என்கிற விவாதங்கள் இருப்பினும் இந்நான்கு பெயர்களும் பிற்காலத்தில் சாதிப்பெயர்களாகக் குறிப்பிடப்பட்டன அல்லது ஒடுக்கப்பட்ட சாதிகளோடு இணைக்கப்பட்டன.
தமிழகத்தில் பல்வேறு சாதிகளும் எதிரும்புதிருமாக இருந்துவந்தாலும் பார்ப்பன சாதிக்கும், பறையர் சாதிக்கும் இடையே உருவாக்கப்பட்டிருக்கும் அளவுக்கு வேறெந்தச் சாதிகளுக்குமிடையே எதிர்மறை உருவாக்கப்படவில்லை. அவை ஒரு நம்பிக்கையாகவே நிலவுகின்றன. இதற்கான காரணம் என்ன? இதன் தோற்றுவாய் என்ன?
பறையர் வகுப்பில் ஒரு பிரிவினராகக் குறிப்பிடப்படும் வள்ளுவர்கள் தமிழ்ச் சமூகத்தில் கரும காரியங்களில் தலைமை ஏற்றிருந்தார்கள் என்பதற்கான இலக்கியச் சான்றுகளும் வழக்காற்றுச் சான்றுகளும் இருக்கின்றன. தலித்துகள் மட்டுமல்லாது பிறர் வணங்கும் கோயில்களிலும் பூசகத் தொழில் புரிபவர்களாகப் பறையர்கள் இருக்கிறார்கள். மேலும், இவர்களுக்குக் கோயில்களில் முதன்மையான இடமும் மரியாதையும் அளிக்கப்பட்டுவந்துள்ளன. (யானைமேலேறும் பெரும்பறையன், மத்தியானப் பறையர்). இதன்படி இவர்கள் பூணூல் அணிபவர்களாக இருந்தனர் / இருக்கின்றனர். வள்ளுவர், ஔவை, கபிலர் போன்ற தமிழின் பிரதான கவிஞர்கள் பற்றி உலவிய / எழுதப்பட்ட பிறப்புக் கதைகளில் பறையர் பெண் தாயாகவும், பிராமண ஆண் தந்தையாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதன் பொருத்தப்பாட்டைப் பார்ப்பது ஒருபுறமிருந்தாலும், இவ்விரண்டு வகுப்பினரையும் தொடர்புபடுத்தியோ எதிரெதிராக நிறுத்தியோ சொல்ல வேண்டிய அவசியம் எழுந்திருப்பது ஏன் என்பதை யோசிக்க வேண்டும். இப்புலவர்களின் பிறப்போடு பார்ப்பனர்களைப் பறையர்களோடு தொடர்புபடுத்திக் காட்டியிருப்பது அவர்களின் நிலை ஏதோவொரு வகையில் முக்கியமாய் இருந்ததைக் காட்டுகிறது. இப்பின்னணியில்தான் முன்பு பறையர்களிடமிருந்த பூசகத்தொழில் பின்பு பார்ப்பனர்களிடம் கைமாறியது என்ற முடிவை ஆய்வாளர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய தலைகீழாக்கத்தின் வழியாக வந்துதான் இன்றைய சாதி அமைப்பு நிலைத்திருக்கிறது என்பது தெரியக்கூடாது என்பதற்காகவும், அதனை யாரும் பின்னாட்களில் கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதற்காகவும் இன்றைக்கு இருக்கும் மேல் – கீழ் நிலையே வரலாற்றில் என்றென்றைக்குமாய் இருந்துவந்ததாகக் கதைகளை உண்டாக்கினர். கதைகளில் தங்களை மேலானவர்களாகக் காட்டினர்; பறையர் முதலியவர்களின் முந்தைய மதிப்பான நிலையை மறைத்தனர் அல்லது திரித்தனர். ஆனால், இத்தகைய மறைப்பும் திரிபும் பண்பாட்டு அம்சங்கள் சார்ந்தவை என்பதால் எச்சங்களாய் மிச்சமிருக்கின்றன. இந்தப் பின்புலத்தோடு நிலவும் ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’ மீது ஒரு வாசிப்பை இங்கு நிகழ்த்திப் பார்க்கலாம்.
ஓவியங்கள்: ரவி பேலட்
இரண்டு எதிர்மறைகள்:
‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’யில் இரண்டு எதிர்மறைகள் பின்னப்பட்டுள்ளன. இந்த இரண்டுக்கும் இடையிலான தொடர் மோதலும், இறுதியில் ஏற்படும் இணக்கமும்தான் மொத்தக் கதை. பறையர் x பார்ப்பார் என்னும் எதிர்மறையே அது. இவ்விரண்டு சாதிகளை முன்வைத்து உலவிவரும் கதைகளையும் வழக்காறுகளையும் கோபாலகிருஷ்ண பாரதியார் அறிந்திருப்பதற்கான எல்லா வாய்ப்புகளும் இருக்கின்றன.
இவ்வெதிர்மறை சார்ந்து இக்காலக்கட்டத்தில் நிறைய வேலைகள் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, வள்ளுவரின் பிறப்புக் கதையும், கபிலர் அகவலும் இக்காலகட்டத்திலேயே உருவாயின. உத்திரநல்லூர் நங்கையின் பாய்ச்சலூர் பதிகமும் வழக்கில் இருந்துவந்தது. இவை எல்லாவற்றிலும் பறையர் x பார்ப்பார் எதிர்மறையே அடிப்படையானதாக இருந்தது. அதிலும் பாரதியார் வாழ்ந்த தஞ்சை மாவட்டத்தில்தான் இந்த முரணும் அது தொடர்பான நம்பிக்கைகளும் வலுப்பெற்றிருந்தன. இப்பின்னணியிலேயே ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’யில் இடம்பெற்றுள்ள பார்ப்பார் – பறையர் எதிர்மறையைப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
சாதியச் சட்டகத்தின்படி இரண்டு சாதிகளும் எதிரெதிரானது. ஒன்று தூய்மை என்றால் மற்றொன்று அசுத்தம். ஒன்று சமூகத்தின் மையம் என்றால் மற்றொன்று விளிம்பு. எனவே, இவ்வெதிர்மறைகளை இருவேறு முரண்பாடுகளுக்கு இடையிலான மோதல் என்று கூறலாம்.
‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’யில் நந்தனார் இரண்டு இடங்களில் பார்ப்பாரை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒருவர் நந்தனார் கூலியாக வேலை செய்யும் வயலின் உரிமையாளர் / பண்ணையார். திருப்புன்கூர் சென்றும், சிதம்பரம் சென்றும் நடராஜரை வணங்கப் பார்ப்பனப் பண்ணையாரின் அனுமதி நந்தனாருக்குத் தேவைப்படுகிறது. ஆனால், பார்ப்பனப் பண்ணையாரோ அதனை மறுக்கிறான். தாங்கள் வணங்கும் பெரிய தெய்வமான சிவபெருமானைத் தன்னுடைய அடிமையும் வணங்கினால் அவன் தனக்குச் சமமானவனாக மாறுகிறான் என்று கருதி மறுக்கிறான். இதன்படி நந்தனாருக்குரிய உள்ளூர் தெய்வங்களை நினைவுபடுத்துகிறான். மேலும் “மாடு தின்னும் புலையா, உனக்கு மார்கழித் திருநாளோ, தேடி எடுத்தாய் ஆரிடத்தே போய், தீண்டாதே போடா” என்கிறான். ஒருவரின் கெஞ்சலும் இன்னொருவரின் மறுப்பும்தான் இக்கதையாடலின் வளர்ச்சி. இறுதியில் பண்ணை வேதியன் இடும் வேலைகளைச் சிவபெருமான் கருணையால் முடித்துவிட்டுத் தில்லை செல்ல அனுமதி கேட்கிறான். ஒருவழியாக நந்தனார் பண்ணையார் அனுமதியோடு தில்லை செல்கிறார். கீர்த்தனையில் இடம்பெறும் முதல் எதிர்மறை இது.
கதையில் இடம்பெறும் இரண்டாவது எதிர்மறையும் இதே பறையர் – பார்ப்பார் இடையிலானதே. முன்பு ஆதனூர், இப்போது தில்லை. அங்கு பார்ப்பார் பண்ணையார் என்ற முறையில் மேலிருந்தார். தில்லையிலோ சிவபெருமானைப் பூஜிக்கும் பூசாரிகளாய்ப் புனித அதிகாரத்துடன் மேல் இருக்கின்றனர். இரண்டிடங்களிலும் சமூக அதிகாரம், பண்பாட்டு அதிகாரம் இரண்டையும் கொண்டவர்களாகப் பார்ப்பார்களே இருக்கின்றனர்; பறையர்கள் கீழே இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளனர். கதையில் இரண்டாவது முரண்பாடு நந்தனார் தில்லையில் நுழையும்போது ஆரம்பிக்கிறது. தில்லையில் நுழைய எண்ணுகையில் யாகப்புகை, பிராமணர்கள் வேதமோதும் சத்தம், நெருங்கியிருக்கும் மடங்கள் ஆகியவற்றைக் கண்டு தம்முடைய குலப்பிறப்பை நினைத்து பயந்து உள்ளே போகாமல் நின்றுவிட்டார். இந்தப் பிறவியை நினைத்துத் தாழப்புரண்டழுதார். பிறகு, சிவபெருமான் நந்தனார் கனவிலும் தில்லை மூவாயிரவர் கனவிலும் வந்து சொன்னதன் காரணமாக நந்தனார் கோயிலுக்குள் புகுகிறார். மொத்தத்தில் மேல் கீழ் வகுப்பினர் முரண் பற்றிப் பேச வேண்டிய தேவை ஏற்படும்போதெல்லாம், இவ்விரு சாதிகளின் அடையாளங்களே குறியீடுகள் ஆகிவிட்டிருந்தன.
மோதலின் வடிவம்:
இவ்விரு சாதிகளை வெவ்வேறு விஷயங்கள் தொடர்பாக எடுத்தாண்டாலும் இவ்விரண்டு சாதிகளுக்கிடையே இருந்துவந்த மோதலுக்கான சாட்சியமாகவே அக்கதைப் பிரதிகள் மாறிவிடுகின்றன. மோதல் சொல்லப்படாவிட்டாலும் – காலத்தின் நினைவிலிருந்து அவை மறைந்துவிட்டிருந்தாலும் அவ்விரு சாதிகளை எடுத்தாளும்போது பிரதியில் எங்கோ ஓரிடத்தில் பழைய மோதல் கண்ணுக்குத் தெரியாமல் உலவிக்கொண்டிருக்கிறது. நந்தனார் கதைக்குள்ளும் அந்த மோதல் வெளிப்படையாக உலவியிருக்கிறது. வரலாற்றில் இவ்விரு சாதிகளும் ஆண்டான், அடிமை என்ற நிலையில் மாறாமல் இப்படியேதான் இருந்திருப்பார்களா? இதில் நெகிழ்வுத்தன்மையே இருந்திருக்காதா? இருந்திருக்காது எனில், இவ்விரு சாதிகளுக்கு இடையேயான எதிர்மறை எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே மாதிரி சொல்லப்பட்டுவருவது ஏன்?
பொதுவாக, சாதிகளுக்கிடையிலான மோதல் எவ்வாறு இருந்திருக்கலாம்? இரு குழுக்களுக்கிடையே மோதல் எழும்போது ஒரு குழு மேலெழ முயன்றிருக்கும். மற்றொரு குழு அதனை மறுத்திருக்கும். மோதலையொட்டி அவற்றில் மாறுதல் நடந்திருக்கலாம். இவ்விரு சாதிகளுக்கிடையிலும் கூட இது நடத்திருக்கும். எதிர்ப்பே இல்லாமல் இன்றைய நிலைக்கு மாறியிருக்க முடியாது. இந்த எதிர்ப்பின் சாயல் அது தொடர்பான பிரதிகளில் இருந்திருக்காதா என்பதுதான் நம்முடைய தேடல். இவ்விடத்தில் பிராமணர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் என்ற வரலாற்றின் அறிவிப்பையும் இணைத்துக்கொள்ளலாம். அதாவது உள்ளூர் குடிகளுக்கும் வெளியிலிருந்து வந்த குடிகளுக்கும் இடையேயான மோதல் என்றும் இதனை விரிக்கலாம்.
பழமொழி :
இங்கே எழுத்துப் பிரதிகளில் இல்லாத வழக்காற்றுத் தகவல் ஒன்றைப் பொருத்திப் பார்க்கலாம். “பார்ப்பானுக்கு மூப்பான் பறையன், கேட்பாரில்லாமல் கீழ்ச்சாதியானான்” என்பது உள்ளூரில் புழங்கும் பழமொழி. பழமொழியை அப்படியே நேரடி பொருள் கொள்ள முடியாது என்றாலும் அவற்றை முழுக்கக் கற்பனை என்றும் கூறிவிட முடியாது. தொடர்ந்து வாய்மொழியாக வழங்கிவருவதால் பழமொழி போன்றவற்றில் சில மாற்றங்கள் வரலாம். ஆனாலும் பழமொழியானது ஏதோவொரு வகையில் சமூக வரலாற்றைத் தனக்குள் எச்சமாகக் கொண்டிருக்கும். அதன்படி இந்தப் பழமொழியைச் சற்று விரித்துப் பார்க்கலாம். இப்பழமொழி இரண்டு தகவல்களைத் தன்னுள் கொண்டிருக்கிறது. பறையன் பார்ப்பானுக்கு மூத்த நிலையில் இருந்தான் என்பது முதல் தகவல். கேட்பதற்கு ஆளில்லாமல் போனதால் கீழ்ச்சாதி ஆகிவிட்டான் என்பது மற்றொரு தகவல். இதன்படி பறையர்கள் கீழ்ச்சாதி என்று கருதப்பட்டாலும் வரலாற்று நிலையில் மூத்த / தலைமையான நிலையில் இருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால், பழமொழி இதோடு நின்றுவிட வில்லை. பறையர்கள் மூத்தவர்களாக இருந்து கீழ்ச்சாதியானது பார்ப்பனர்களோடு தொடர்புபடுத்துகிறது. ஆனால், இன்றைய நிலை என்ன? முன்பு மூத்த நிலையில் இருந்த பறையர்கள் இன்று கீழாக இருக்கிறார்கள். மாறாக, முன்பு அடுத்த நிலையிலிருந்த பார்ப்பார்கள் மேலாக இருக்கிறார்கள்.
அண்ணன் தம்பி என்னும் குறியீடு:
பார்ப்பு என்றால் இளமைப் பெயரைக் குறிக்கும் (பாப்பா). அதாவது பார்ப்பான் என்றால் தம்பி என்று பொருள். எனில் பறையன் அண்ணன் ஆகிறார். இந்த மூத்த – இளமை நிலையைக் குறிப்பதற்கான குறியீட்டுச் சொல்லே அண்ணன் – தம்பி என்பதாகும். எனில் இந்த இன்றைய நிலை இயல்பானது அல்ல. மாறாக, நிறைய மாற்றங்களுக்குப் பிறகே சாதிகளின் இன்றைய நிலை உருவாகியிருக்கிறது.
இந்த மாற்றத்தின்போது மோதலும் அதன் தொடர்ச்சியும் இருந்திருக்கலாம். மோதல் என்றால் போராகத்தான் இருந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இந்தப் பழமொழி தவிர பறையரையும் பார்ப்பாரையும் அண்ணன் தம்பிகளாகக் கூறும் வேறு கதைகளும் உண்டு. இத்தகைய கதைகளில் ஒரு விஷயம் மாறாமல் இடம்பெற்றிருக்கிறது. அண்ணனான பறையரிடமே பூசகத்தொழில் இருந்தது. அதுவே பின்னர் பார்ப்பாரிடம் போனது என்ற தகவல்தான் இந்தக் கதைகளில் திரும்பத் திரும்ப இடம்பெறுகிறது. இதுவே இங்கு நடந்திருக்கக் கூடிய மோதலாக இருந்திருக்க வேண்டும்.
பறையரின் தகுதி பிராமணர்களிடம் சென்றுவிட்ட நிலையில் இருவரும் சமமாகிறார்கள். அதனால்தான் இரண்டு சாதியாரை மட்டும் ஒப்பிட்டும், இணைத்தும் பேச வேண்டிய சூழலும் உருவாகியிருக்கிறது. ஆனால், தகுதி கைமாறிவிட்ட பின்னால் இருவரையும் சமமாக வைத்துக்கொள்ள முடியாது. புதிதாகத் தகுதி பெற்றவர்கள் அது மற்றவரிடமிருந்து பறித்தவை என்பது தெரியக்கூடாது, தெரிந்தால் இந்தத் தகுதிக்கு அர்த்தமில்லாமல் போய்விடும். எனவே, முன்பிருந்து தாங்களே தகுதி பெற்றவர்களாக இருந்தோம் என்று கருதினர். இதன்படி முந்தைய சமூக நிலை பற்றிய நினைவு மாற வேண்டும்; இதற்கு என்ன செய்ய வேண்டும்? புதிதாய் தகுதி பெற்றவர்கள், காலங்காலமாகவே இந்த நிலையிலேயே இருந்துவந்தவர்கள் என்ற கதையாடலை உருவாக்க வேண்டும். இதனைச் (பழைய நினைவு மறையக்கூடிய அளவிற்கு) சமூக நினைவில் வெவ்வேறு வடிவங்களில் திரும்பத் திரும்பப் பரப்ப வேண்டும். தங்களைப் பெருமிதப்படுத்தினால் மட்டும் போதாது. முன்பு தகுதி பெற்றிருந்த பறையவர்கள் பற்றிய பிம்பத்தையும் மாற்றியாக வேண்டும். அதற்காக அவர்கள் மீது இழிவுகள் கற்பிக்கப்பட்டு அவர்களும் என்றென்றைக்கும் இன்றைக்கிருப்பது போலவே இருந்தார்கள் என்ற கதையாடலைப் பரப்ப வேண்டிவந்தது. அதனால்தான் பார்ப்பாருக்கு எதிராகப் பறையரை மட்டும் சொல்லி பெருமை ஙீ இழிவு என்னும் மாறாத எதிர்மறை கொண்டிருக்கும் கதைககள் பிறந்தன. பார்ப்பார் தங்களுக்கான பலத்தைப் பயன்படுத்தி அவற்றை நிரந்தரப்படுத்தினர். மாறாக, பறையர்களின் முந்தைய தகுதியை எழுத்து வழியாகத் தக்கவைப்பதற்கான பலம் இல்லாததால் வழக்காறுகளில் தகவல்களாக மிஞ்சி கிடக்கின்றன.
இப்பின்னணியில்தான் நந்தனார் கதையில் இடம்பெறும் பார்ப்பார், பறையர் எதிர்மறையைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்பிரதி பார்ப்பாரை மையப்படுத்தும்போது அவ்விடத்தில் பறையரை ஏன் கொணர வேண்டும்? பிற சாதிகளில் ஏதேனும் ஒன்றைக் கொணராதது ஏன்? அல்லது பறையருக்கு மேலிருக்கும் ஆண்டையாகப் பிற உடைமைச் சாதியைக் காட்டாதது ஏன்? இதற்குச் சமூக எதார்த்தம் அவ்வாறுதான் இருந்தது என்பதை ஒரு பதிலாகக் கூற முற்படலாம். அவ்வாறு இருந்திருக்கலாம். ஆனால், இச்சித்திரிப்புகளுக்கு அவை மட்டுமே காரணம் இல்லை. பெரிய புராணத்தில் இல்லாத பார்ப்பார், ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’யில் மட்டும் ஏன், எப்படி வந்தது? ஏற்கெனவே நம் மரபின் நினைவுகளில் இருந்தவை இந்த எதிர்மறையே. இரு வேறு சமூகத்தைப் பிரதிபலிக்கும் பாத்திரங்களுக்கிடையே முரண்பாட்டைப் பேச வேண்டும் என்று நினைத்தபோது மரபின் இந்த நினைவுகளே துணை செய்திருக்கின்றன. இதை ஏற்பதில் இந்தப் படைப்பாளிகளுக்கும் எந்த மனத்தடையும் இருந்திருக்காது. சமகால எதார்த்தத்தையும் சேர்த்துக் கதையாடலாக விவரித்திருப்பர்.
வரலாற்றின் முந்தைய நிலையைச் சொல்வது நந்தனார் கதைகளின் நோக்கமல்ல. மாறாக, அதனைத் தலைகீழாக்கி மற்றொன்றாக, கதைகள் வாயிலாகத் தக்கவைத்திருக்கும் பிரதிகளாகவே இருக்கின்றன. இந்த வகையில் நந்தனார் கதைகள் பெருமை, இழிவு என்னும் எதிர்மறைகளுக்குக் கீழ் தங்களை அறிந்தோ அறியாமலோ தலைகீழாகாத வரலாற்றைப் பிரதிபலிக்கின்றன. ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’யில் இடம்பெற்றிருக்கும் பறையர் மீதான மிதமிஞ்சிய இழிவு முற்கால சமூக நிலையை மறைப்பதற்கான எதிர்வினையே.
நந்தனார் கீர்த்தனையின் இறுதிப் பகுதி மிக முக்கியமான பகுதி. சிவபெருமான் நந்தனார் கனவிலும் தில்லை வாழ் அந்தணர்கள் கனவிலும் தோன்றி நந்தனாரைக் கோயிலுக்குள் அனுமதிப்பது பற்றிச் சொல்கிறார். “இப்பிறவி போய்நீங்க வெளியினிடைதீ மூழ்கி, முப்புரி நூல் மார்புடன்” வர வேண்டுமெனக் கூறிச் செல்கிறார். அவ்வாறே தில்லைவாழ் அந்தணர்கள் நெருப்புக் குழி அமைக்கிறார்கள். நந்தனார் “பொய்தகை உருவம் ஒழித்து புண்ணிய மாமுனி வடிவாய் மெய்திகழ் முந்நூல் விளங்க” எழுந்து இறைவனை அடைந்தார். அவரை மறையவர்கள் தொழுதனர்.
இவ்விடத்தில் நந்தனார் நேராக இறைவனை அடையவில்லை. அவருக்கு இரண்டு பிறப்பு கூறப்படுகிறது. முதலில் மனிதராக (நந்தனார்) இருக்கிறார். நெருப்பில் இறங்கி புனிதராக மாறுவது மூலம் இரண்டாவது பிறப்பு அடைகிறார். ஏறக்குறைய ஓர் உடலை அழித்து மறுஉடலாக எழுகிறார். அடையாள ரீதியாகக் கூற வேண்டுமானால் ஒரு பிறப்பு / உடல், பறையர்; மறுபிறப்பு / உடல், பார்ப்பார். பறையரே பார்ப்பாராக மாறுகிறார். பறையர் உடல் முந்தையது. பார்ப்பார் உடல் பிந்தையது. ஆனால், முந்தையதாக இருப்பினும் இவர்களின் கருத்துப்படி பறையர் உடல் இழிவானது. அதை இழந்ததால் / மறைத்ததால் பார்ப்பாராக ஆகிறார். அதுதான் இக்கதையில் நடக்கிறது.
நந்தனாரே ஒரே கதைக்குள் பறையர், பார்ப்பார் என்று இரண்டாகவும் ஊடாடுகிறார். இந்த ஊடாட்டம் முக்கியமான குறியீடு. இது நந்தனாரிடம் மட்டும் நடக்கவில்லை. நந்தனாரை வைத்துக் குறிப்பிடப்படும் பறையர் வகுப்பினர் அடைந்திருந்த தகுதியையும், தகுதி மாற்றத்தையும் குறிப்பிடும் குறியீடுபோல உடல் மாறுதல் அமைந்திருக்கிறது. சமூக அமைப்பில் பார்ப்பாராக இருந்து பறையராக மாறினர். இந்தக் கதையாடலில் நந்தனார் பறையராக இருந்து பார்ப்பாராக மாறினார். இதன்படி பார்ப்பார் பறையர் என்கிற நிலையை இந்தப் பிரதியும் ஏதோ ஒருவிதத்தில் அறிந்தோ அறியாமலோ ஒத்துக்கொள்கிறது. நெருப்பு தூய்மையின் அடையாளம்; அழுக்கை எரித்துத் தூய்மையாக்கும். அது இங்கு இழிபிறப்பை அழித்துத் தூய்மையாக்குகிறது. பறை பிறப்பை நீக்கினால் இடையில் எதையும் அடையாமல் நேராகப் பார்ப்பாராகத்தான் மாற முடிகிறது. இவ்வாறு பறையருக்கு நேர் இணையாகப் பார்ப்பாரையே கதை காட்டுகிறது. நந்தனாருக்கு யார் தடையாக இருந்தார்களோ அதுவாகவே ஆகிப்போகிறார். மனித பிறப்பில் பறையராக இருந்த அவர் தெய்வ நிலையில் பார்ப்பனராக ஆக்கப்படுகிறார். மொத்தத்தில் பறையரே பார்ப்பனராக மாறுகிறார். தங்களை அறியாமலேயே இப்பிரதிகள் தாங்கள் மறுக்க / மறைக்க / மறந்த விஷயங்களைக் காட்டியிருக்கின்றன. இன்னொரு விஷயத்தையும் பார்க்க வேண்டும்.
நெருப்பிலிருந்து எழுந்து செல்லும் நந்தனார் தன்னுடைய முதுகில் பூணூல் விளங்கச் செல்கிறார் என்று குறிப்பிடப்படுகிறார். பறையர்கள் பூசகர்களாக இருந்தபோது பூணூல் அணிந்திருந்தார்கள் என்பதைச் சான்றுகள் கூறுகின்றன. மற்ற அடியார்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போதுதான் நந்தனாருக்குத் தரப்படும் இந்தத் தகுதியைப் புரிந்துகொள்ள முடிகிறது. வேறெந்த அடியாருக்கும் பூணூல் தவழச் செல்லும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. நந்தனாரோடு ஒப்ப குறிப்பிடப்படும் பெற்றான் சாம்பான், தில்லைவெட்டியான் ஆகியோருக்கு இந்த வாய்ப்பளிக்கப்படவில்லை. பெற்றான் சாம்பானுக்குத் தீக்கைதான் செய்யப்படுகிறது. பூணுலோ பார்ப்பார் தகுதியோ தரப்படவில்லை. கண்ணப்ப நாயனாருக்கும் இல்லை. இவ்விடத்தில் நந்தனார் குழு முன்பு பெற்றிருந்த அடையாளம் ஒன்று வேறு ஏதோ ஒருவகையில் நினைவில் வந்து ஊடாடுகிறது. இவற்றைத்தான் முற்றிலும் எதிரான பிரதியைத் தலைகீழாக்கி வாசிப்பதிலிருந்து சில தடயங்களை அறிய முடியும் என்கிறோம்.