மார்கழியில் மக்களிசை

- இராமலிங்கம்

ன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம்
தன்னன்ன நாதினம் தன்னானே

தன்னன்ன நாதினம் தன்னானே

தன்னன்ன நாதினம் தன்னன்னா நாதினம்

தன்னன்ன நாதினம் தன்னானே

தன்னன்ன நாதினம் தன்னானே

புதுக் கன்றுக்குட்டியின் குதியாலத்தை ஒவ்வோர் உடற்செல்லுக்கும் முடுக்கிவிட்டுக் கால்களைத் தரையில் படர்த்தவிடாமல் ஆர்ப்பரிப்பைக் கிளப்ப வேண்டும் அல்லது உடலே அற்றதொரு மயக்க நிலையில் அகத்தை ஏந்திப் போய் அந்தரத்தில் மிதக்கவிட வேண்டும். அதுவே என்னளவில் இசை என்ற வடிவத்திற்கான வரையறை.

ஒலிக்கலப்புகளின்போது பிசிறாக எந்த ஓசையும் தனித்தெழும்பாமல் ஒரே தாளத்தில் வெளிப்பட வேண்டும். அதுவே இசை நேர்த்தி. இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் துணைக்கொண்டு ஒரு கூட்டோசையினை அடுக்கடுக்காகத் தனித் தனி ஓசைகளாய்ப் பிரித்து வேண்டுமளவில் ஓர் ஓசையின் ஒலி அளவைக் குறைக்கவோ கூட்டவோ முடியும். ஆனால், இதுவெல்லாம் இல்லாமல் ஒரு கூட்டோசையை அதுவும் கனமான அதிர்வுகளைக்கொண்ட இசைக்கருவிகளின் ஓசையை எந்த உறுத்தலுமின்றித் தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்குக் கேட்கச் செய்ய முடிகிறது என்பதை ஒப்பாரி இசை நிகழ்வன்று, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் எழுத்தாளர் தமிழ்ப்பிரபா குறிப்பிட்டுச் சொன்னபோதுதான் “ஆமால்ல” என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். குறிப்பாகப் பறை மேளத்தின் அதிர்வுகள் செவியுணர்வைச் சிதைக்காமல் உள்ளிறங்குகிறது. பறை இசையை இதற்கு முன்பு கேட்டதே இல்லையா என்றால், கேட்டிருக்கிறேன். ஆனால், அது சுவர்களற்ற திறந்தவெளி. எனவே, அந்த அதிர்வு அவ்வளவாகச் சிந்திக்க வைத்ததில்லை. ஆனால் நான்கு சுவர்களுக்குள் அந்த அதிர்வைக் கேட்கும்போதுதான் தோலிசைக்கருவியின் மேன்மையை உணர முடிந்தது. இதன் அறிவியல் தன்மையைப் பறையிசைக் கலைஞரும் ஆய்வாளரும் `மார்கழியில் மக்களிசை‘ நிகழ்வைத் தெருக்குரல் அறிவோடு சேர்ந்து ஒருங்கிணைத்து நடத்தியவருமான ஜே.கே.ஒப்பாரி நிகழ்வின் இடையிடையே தகவல்களாய் விவரித்துக் கூறியது சுவாரஸ்யமாய் இருந்தது.

ஊரில் திறந்தவெளியில் அல்லது இளையராஜாவின் பாடல்களின் வழியே கேட்ட நாட்டுப்புற இசை வடிவங்களை ஒரு லைவ் ஆர்கேஷ்ட்ராவாக நான்கு சுவர்களுக்குள் கேட்பது புதுமையான அனுபவம். அதுவும் இந்த வருடம் முதல் நாள் நிகழ்வில் நாட்டுப்புறப் பாடகி ராஜேஸ்வரி பாடிய `தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம் தன்னானே’ என்று தொடங்கிற நாட்டார் தெய்வ வழிபாட்டுப் பாடல் அப்படியே சொக்கவைத்து, மெல்ல மெல்ல உடலை அசைய வைத்து, பிறகு கால்களை ஆட வைத்தது. எந்த இடத்தில் அந்த `தன்னன்ன நாதினம்’ தாலாட்டு வடிவத்திலிருந்து தெம்மாங்குக்கு நழுவி பிறகு குத்தாட்டம் போட வைக்கும் ராகமாக மாறியதென்றே தெரியவில்லை. அத்தனை நுட்பமாக மாய மந்திரம் போல குரலாலேயே அதை நிகழ்த்திவிட்டார். நம் மண்ணில் எழுந்த கலை வடிவத்தின் மகிமையை அந்தக் கணம் சிலாகித்துக்கொண்டேன்.

சிறு வயதில் பக்கத்து ஊர், எங்கள் ஊர் என எங்கு நடந்தாலும் நாடகம், கரகாட்டத்தை அப்பா தவறவிட்டதே இல்லை. உடன் என்னையும் அழைத்துச் சென்றுவிடுவார். இன்றும் தொலைக்காட்சியில் நாட்டுப்புற இசை வடிவங்களைக் கேட்டதும் அதில் லயிக்க ஆரம்பித்துவிடுவார். `மார்கழியில் மக்களிசை’ நிகழ்வைப் பார்த்து அனுபவித்தபோது, முடிந்தால் அடுத்த வருடம் ஊரிலிருந்து அப்பாவை அழைத்து வந்துவிட வேண்டியதுதான் எனத் தோன்றிவிட்டது.

சென்ற வருடமே நீலம் பண்பாட்டு மையம் இப்படியான ஒரு நிகழ்வை ஒருங்கிணைக்கிறது என்றதும் வெறுமனே அரசியலை மட்டும் பாடி விரைப்பாகவே வைப்பார்களோ என்று யூகித்திருந்தேன். ஆனால், அரசியலை விடவும் அன்றாட வாழ்வியல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து காதல், நட்பு, கொண்டாட்டமென இசையை அதன் போக்கில் நிகழவிட்டது எனக்கு ஆறுதலாய் இருந்தது. அதனாலேயே இந்த வருடம் என் நண்பர்களிடத்தில் இந்நிகழ்வை எந்தத் தயக்கமுமின்றிப் பரிந்துரைக்க முடிந்தது. அதிலும் இந்த வருடம் வாழ்வியல் பாடல்கள் நிறையவே இருந்தன. உடன் நம் நாட்டுப்புறக் கலை வடிவத்திற்கே உண்டான அந்த எள்ளலான சீண்டல்களையும் இப்படி மேடையேற்றி அழகு பார்த்தது நீலம் பண்பாட்டு மையத்தின் அசாத்தியமான வெற்றி என்றே கூறுவேன். இருபால் முதன்மை ஆட்டக்காரர்களும் தவில்காரரைச் சீண்டுவது, நாயனக்காரரைச் சீண்டுவதெல்லாம் ஊரில் பார்த்து ரசித்த நினைவுகளில் ஒன்று.

`குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா’ என்று தன்மையாகத்தான் பாடியிருக்க வேண்டும். அப்படித்தான் நாம் கேட்டிருக்கிறோம். இரண்டாம் நாள் நிகழ்வில் VM மகாலிங்கமும் மதிச்சயம் பாலாவும் சுகந்தியும் குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா என்ற வரியிலுள்ள பாரம்பரிய இழுவையை வெட்டி உச்சரிப்பில் கொஞ்சம் அழுத்தம் கூட்டினார்கள். வெடிச்சிரிப்புடன் மொத்த அரங்கமும் அதை ஆர்ப்பரிப்போடு வரவேற்றது. முதலில் எதிர்க் கலாச்சாரம், எள்ளல் என்று தோன்றினாலும் மேடையில் அவர்கள் மூவரும் அவர்களுடைய வாத்தியக் கலைஞர்களுடன் சேர்ந்து செய்த அழிச்சாட்டியம் என்னோடு சேர்த்து மொத்த அரங்கையும் எழுப்பி ஆட வைத்துவிட்டது. மதிச்சயம் பாலாவிடம் வெளிப்பட்ட நகைச்சுவை பேச்சுகள் கட்டியக்காரன் போன்று இருந்தது. நான்கைந்து ஆண்டுகளுக்கு மேலாகிறது கரகாட்டம், நாடகமெல்லாம் பார்த்து. அதில்தான் வெறும் இசை, ஆட்டம் என்றில்லாமல் இடையிடையே இப்படி சிரிப்பு மூட்டிப் பார்வையாளர்களைப் புத்துணர்வோடு வைத்திருப்பார்கள். அந்தப் புத்துணர்வை மதிச்சயம் பாலா அந்நிகழ்வில் தந்தார்.

ஒப்பாரி என்பது மரண வீட்டில் பாடப்படும் துக்க இசை வடிவாக மட்டுமே பொதுச் சிந்தனையில் இருக்கிறது. ஆனால், அது சூழல்களை எள்ளலாகப் பாடவும் பயன்பட்டிருப்பதைக் கிராமப்புறத்தில் இருந்தோர் அறிந்திருக்க முடியும். ஒப்பாரி சிரிக்க வைக்கவும் செய்யுமென்பதை நம் வாழ்வியலில் உணர்ந்திருக்கிறோம். அப்படி, ஒப்பாரி இசை நிகழ்வில் முத்தம்மாள் பார்வையாளர்களை நோக்கிப் பறக்கும் முத்தங்களை அள்ளி வீசியபடி பாடி ஆடி மகிழ்வித்து ஒப்பாரியின் மீதான பார்வையையே வேறொரு கோணத்திற்கு மாற்றிவிட்டார். சென்ற வருடமே அவர் தனக்கென ரசிக ஆதரவைச் சம்பாதித்திருந்தார். அது இந்த வருடம் இன்னும் வலுவாகிவிட்டது. பறையிசைக் கலைஞர் ஜே.கே-யின் பேசு பறையிசைக் குழு அரங்கத்தினுள் பாலினம், வயது என எந்தத் தடையும் குறுக்கே நிற்காதபடி அனைவரையும் எழுந்து ஆட வைத்துக்கொண்டிருந்தது. குறிப்பாக ஒரு கணவன்-மனைவி ஜோடி ஆடியது கண்கொள்ளாக் காட்சி. ஒரு சமூக அமைப்பு நடத்தும் நிகழ்வா அல்லது கோவில் திருவிழாவா என்கிற அளவு கொண்டாட்டமும் கும்மாளமுமாய் இருந்தது.

ஒப்பாரி பாடலை சிம்மாசனத்தில் அமர்ந்துகொண்டு பாடியது சிலாகிப்பான தருணம். அதுவும் மயானத்தில் கூறப்படும் அரிச்சந்திரன் கதையை அப்படியோர் அரியாசனத்தில் அமர்ந்துகொண்டு பாடுவதை யாரும் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.

இந்தக் கலைஞர்கள் யாரும் சென்னை மாதிரியான மெட்ரோ சிட்டியில் இப்படியோர் அரங்கங்களில் பாடி ஆடப்போகிறோம் என்று நினைத்திருக்க மாட்டார்கள். சாத்தியமின்மை என்ற ஒன்று எதற்கும் இல்லவே இல்லை என்பதைத்தான் இயக்குநர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையத்தின் மூலமாக திரும்பத் திரும்ப உணர்த்திவருகிறார். அதுவும், சென்னைப் பூர்வக்குடிகளின் வாழ்வியலில் ஒன்றாகிப்போன கானா இசை வட சென்னையை அல்லது அடித்தள மக்கள் பகுதியைத் தாண்டி பொது மேடைகளே கண்டதே இல்லை என்கிற நிலையை மாற்றியமைத்து முப்பது ஆண்டுகளாக மேடையையே கண்டிராத மூத்த கானா பாடகர்களை மேடையேற்றி அதுநாள் வரை தன் குரல் கொண்டாடப்படுவதை நேரடியாகப் பார்த்து நிறைந்திடாத கலைஞர்களின் கண்முன் அவர்களுக்கான ரசிக ஆதரவை நிகழ்த்திக்காட்டியிருப்பது எவ்வளவு அர்த்தப்பூர்வமான பண்பாட்டு மாற்றம். சென்னை கிருஷ்ண கான சபாவில் தொடையைத் தட்டிக்கொண்டு காற்றில் ஒரு கையை அலைய விட்டபடி இருந்த ரசிக மனோபாவத்தை விசிலடித்துக் கத்தி ஆர்ப்பரிப்போடு ஆட்டம் போடுவதைப் பார்த்தபோது பிரமிப்பாக இருந்தது.

சமதள நிலப்பரப்பில் புழங்குகிற நாட்டுப்புறக் கலை வடிவங்களுக்குக் குறைந்தபட்ச அங்கீகாரமாவது இருக்கிறது. ஆனால், மலைவாழ் பழங்குடியினச் சமூகங்கள் தங்களின் வாழ்வியலோடு மட்டுமே நிகழ்த்திக்கொள்கிற கலை வடிவத்தைப் பொது மேடையில் ஏற்றிவிட்டு அந்த இசையையும் அருகிருந்து நுகர வைத்தது வரலாற்றனுபவம்.

நீலம் அமைப்பின் இப்படியொரு பண்பாட்டு முன்னெடுப்பிற்கு முதல் ஊற்றாய் இருந்தது தெருக்குரல் அறிவின் மூலம் வழியே சாத்தியப்பட்ட Casteless Collective இசைக் குழுதான். மேற்கத்திய நாடுகளில்தான் இப்படியான மேடை இசைக்குழுவை ஊடகங்களின் வழியே பார்த்திருக்கிறேன். கோட்-சூட் கூலரென டிப்டாப்பாய் அதுவும் ஜெய் பீம் முழக்கத்தோடு நம் நிலத்தில் ஒரு குழுவைப் பார்ப்பது சிலிர்ப்பான ஒன்று. இந்தியாவில் மும்பை, கொல்கத்தா, பஞ்சாப், கர்நாடகா போன்ற இடங்களில் சேரிவாழ் சமூகங்களிடம் இப்படியான குழுக்கள் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், அரசியல் அஜெண்டாவுடன் தனி அடையாளத்தோடு மெய்ன் ஸ்ட்ரீமில் கலந்து உலக அளவில் பிரபலமடைந்த முதல் இந்திய இசைக்குழு Casteless Collective மட்டும்தான் என்று நினைக்கிறேன். அதுவும் அறிவு முதல் அடி எடுத்து வைத்த வேகத்திலேயே தமிழகத்தின் தவிர்க்க முடியாத இசையாளுமையாய் வளர்ந்திருப்பது நம்பிக்கையூட்டும் செய்தி.

பூர்வகுடி மக்களின் முக்கிய உணவான மாட்டுக்கறியின் மகத்துவத்தைச் சொல்லி இசைவாணி பாடும்போது அரங்கதிர ரசிகர்கள் ஆரவாரம் செய்கிறார்கள். அரசியல் எதிர் அரசியல் என்றல்லாமல் இவ்வாறு பண்பாடுகளின் வழியே நாம் இழந்த அடையாளங்களை மீட்டெடுத்து நம்மை நிறுவிக்கொள்வது பொதுச்சமூகத்தைக் கண்டு தயங்குகிற மக்களுக்குள் புத்துணர்வை அளிக்கும். Casteless Collective குழு பாடும்போதெல்லாம் கொண்டாட்டம் தானாய்ப் பிறந்துவிடுகிறது. “உன் பாட்டனெல்லாம் வச்சான்டா என் பாட்டனுக்கு வேட்டு “ என்ற பாடல் பாபாசாகேப்பின் துணையோடு வலிகளிலிருந்து மீண்டெழுந்து கொண்டாட்டத்தோடு சமூக நீதியை அனுபவிக்கிற சுதந்திர உணர்வை அறிவிக்கிறது. இந்தப் பாடலின் தாளத்தை உக்கிரமாகவோ சோகமாகவோ அல்லாமல் கொண்டாட்ட தொணியில் ஆடிக்களிக்கும்படி கட்டமைத்ததுதான் சிலாகிப்பான அம்சம். இந்த வகையில் நம்முடைய முன்னோர்களான தலித் சுப்பையாவையும் அவரது குழுவையும் இதே `மார்கழியில் மக்களிசை’ மேடையில் அரங்கேற்றி என் போன்ற பலருக்கு அறிமுகப்படுத்தியது பண்பாட்டு அரசியல் மீதான தெளிவை உண்டாக்கியிருக்கிறது.

ஓர் ஊரே சேர்ந்தாலும் ஒன்பது நாள் திருவிழாவிற்கு அதிகபட்சம் மூன்று நான்கு கலைக்குழுவைத்தான் அமர்த்தி ஒன்றிணைக்க முடியும். தோராயமாக முப்பது பேர்தான். ஆனால், எட்டு நாட்கள் – ஒரு நாளுக்கு மூன்று விதமான கலைக்குழு – மொத்தம் 250 கலைஞர்களை மேடையேற்றியிருப்பது சுலபமான காரியமல்ல. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வென்றுவிட்டதும் நான் அதைச் செய்வேன் இதைச் செய்வேன் என்று பேட்டி கொடுப்பது ஒருகாலத்தில் இங்கு பரவலான கலாச்சாரம். அதைப்போல நாமும் சமூகத்தின்பால் பற்றுகொண்டு இதைச் செய்வேன் அதைச் செய்வேனெனச் சூளுரைத்திருத்திருப்போம். அவற்றை எல்லாம் நாம் செய்தோமா, செய்துவிடும் சூழலையாவது இனங்கண்டோமா என்ற கேள்விகளுக்கிடையில் இதெல்லாம் சாத்தியமா என்று கூறப்பட்ட பல மாற்றங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள் நீலம் பண்பாட்டு மையமும் பா.இரஞ்சித் அவர்களும்.

நாட்டுப்புற மற்றும் பழங்குடி மக்களின் இசை வடிவத்தை அரங்கேற்றுவது காலவரிசைப்படி இது முதல் மேடையா இல்லையா என்கிற தர்க்கத்திற்குள் நாம் போக வேண்டியதில்லை. எளிய மக்களின் வாழ்வியலையும் கொண்டாட்டத்தையும் அரசியலையும் நிகழ்த்திக் காட்ட இதுவரை நிர்ணயிக்கப்பட்ட அளவீடுகளை `மார்கழியில் மக்களிசை’ மீறியிருக்கிறது. அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்திலிருந்து வெகுண்டெழுந்து எல்லா நவீனச் சாதனங்களையும் மேடைகளையும் அலங்கரிப்பதற்கான கலையும் புலமையும் தம்மிடையே உண்டு எனப் பறைசாற்றியிருக்கிறது. அந்த வகையில் `மார்கழியில் மக்களிசை’ வரலாற்றில் முதல் முயற்சி என்பது திண்ணம்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger