கஞ்சமலப்பட்டி வெட்டியானோடு மத்த ஆறூரு வெட்டியானுங்களும் ஆடி மாசத்துக் கடைசி நாளோட இருட்டை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். அக்கம் பக்கத்திலிருந்த ஏழு ஊருக்கும் குறிச்சிக்குளத்துப் பறத்தெருவிலிருந்து வெட்டியான் வேலை பார்த்தார்கள். கோனாருத் தெரு, படையாச்சித்தெரு, நைனாருத்தெரு ஏழு ஊருக்குமிருக்கும் பொத்தாம் பொதுவான பேரு.
ஜாதிக்காரங்க தெருவுல சாவு விழுந்தா செத்தவனின் புள்ளக்கிச் சொல்லுறாங்களோ இல்லையோ வெட்டியானுக்குத்தான் மொதலில் சொல்லுவாங்க. சாவு வூட்டுல எழவு சேதி கேட்டுட்டு வூட்டவுட்டுப் போனால் பொணத்த எரிச்சிச் சாம்பலாக்கி அடுத்த நாளு பால் தெளிச்சி தலையெலும்பு, இடுப்பெலும்பு, கால் எலும்புன்னு பொறுக்கிவச்சிட்டு முழுபோதையில தான் வூடு வந்து சேர்வார்கள். செத்தவனின் உடம்பங்காளி, ஊர்ப் பங்காளி, ஊர் உறவு மொறையான் எல்லாரையும் கூட்டிக்கிட்டுச் செத்தவனுக்கு வழி விடப் போவாங்க. அங்க தொடங்கும் வெட்டியான் வேலை, பந்தல் போடுறது, சாவுக்கு மோளமடிப்பது, வாய்க்கரசியும் வாழைமரமும் எடுத்துக்கிட்டு வர பல ஊரு உறவுமொறையானுங்களை வரவேற்பது, பொணத்த எரிக்கச் செத்தவனின் காட்டைத் தேடிக் கண்டுபிடித்து, மரத்தை வெட்டியெடுத்து, கட்ட வண்டியோ டயர் வண்டியோ புடிச்சிச் சுடுகாடு கொண்டுபோயி சேர்க்கணும், வசதிக்கித் தகுந்த பாடைக் கட்டணும், பொணம் நல்லா எரிய வராட்டியக் கொண்டு போணும், காலாங்கடசியில பாடையோடு சுடுகாடு போகும்போது சுத்தமா நெகா இருக்காது.
கருமகாரியத்து அன்னக்கிதான் எல்லாத்துக்கும் சேர்த்து நெல்லோ கம்போ கூலியா கொடுப்பாங்க. போதையில கண்ண மூடிக்கிட்டு எல்லா வேலையும் இழுத்துப்போட்டுச் செய்யக் கேக்காமலே பட்டசாராயம் கொடுப்பாங்க. பட்டசாராயத்துக்குத் தொணையா நாலு பேரு வெட்டியானுங்க பின்னால கூடமாட சுத்திக்கிட்டு அலைவானுங்க. அப்படி அலையும் ஆளுங்க ஊருல எந்த விசயத்திலும் நாட்டாமை ஆளுங்களை விட்டுத்தரமாட்டார்கள். சாராயம் குடிச்ச கணக்கச் சொல்லி, ஊருல வாய்ச் சண்டையில அசிங்கப்படுத்துவார்கள் என்ற பயமும் உண்டு. ஊர்த்தெரு வெட்டியானுங்கதான் பறத்தெருவுல இருக்குற ஒவ்வொரு வகையறாக்கும் நாட்டார்களாகப் பவுசு காட்டிக்கிட்டுத் திரிவார்கள். ஊர்த்தெருவுக்கு வெட்டியான், பறத்தெருவுக்கு நாட்டாமை. ரெட்ட வாழ்க்கை அவங்களோடது. ஊர்த் தெருவுலருக்குற ஒவ்வொரு குடும்பத்துக்கும் வெட்டிவேலை பாக்க பறத்தெருவுலருந்து ஒத்த குடும்பமாவது இருக்கும். ஒரு கொத்துப் பங்காளிகளும் ஒரே வீட்டில் பண்ணை வேலை பார்ப்பார்கள். வருசா வருசம் ஒரு பன்னிக்குட்டிய வாங்கி வளர்ப்பார்கள். பன்னியை வாங்கி வளர்ப்பது கஞ்சமலப்பட்டி ஊர்த்தெரு வெட்டியான் பெரிய மோளக்கார வகையறா நாட்டாரோட செலவு.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then