பாட்டுடைத் தலைவியும் மாட்டு வாலும்
கெவுளியின் கத்தலில் வேறுபாடு கண்டுணர்ந்த தலைவி
அரசமரத்தடியில் முதுகிழத்தியிடம் குறி கேட்கிறாள்
சோழி உருட்டிப் பார்த்த கிழத்தி
தலைவன் திரும்பும் அறிகுறி என்கிறாள்
கருப்பட்டி துண்டொன்றைக் கிழத்திக்கு உண்ணக்கொடுக்கிறாள்
எண்ணி ஏழாம் நாள் பண்ணை விடுப்பில் வீடு திரும்பினான் தலைவன்
ஓட்டமும் நடையுமாய் நிலைகொள்ளாத் தலைவியின் கால்கள்
மாடுரிக்கும் கண்மாய்க் கரையில்தான் நிலைகொண்டன
கொளுத்த மாட்டுவாலை வெட்கத்தோடு கேட்டு வாங்கியவள்
ரசம் வைத்து ஆவி பறக்கத் தலைவனுக்குப் பருகக் கொடுத்தாள்
வாழை நாரில் பிச்சியைத் தொடுத்துச் சூடிக்கொண்டு
வழக்கத்தை விடச் சீக்கிரத்தில் அன்று விளக்கணைத்தாள்.
பேரன்புக்காரி
வீட்டிற்கு எப்படியோ தெரிந்துவிட்டது
அவர்கள் எந்த நேரத்திலும் உன்னை நெருங்கலாம்
கவனமாயிருயெனக் கண்ணீர் வடித்தாள்
உனக்காக வெட்டுப்பட்டுச் சாகலாம் என்றான்
அதைப் பார்க்கும் தெம்பு எனக்கில்லை
கண்காணாத தேசத்திற்கு ஓடிவிடலாமெனத் தேம்பினாள்
தெருவே சாம்பலாகுமென அஞ்சியவன் அமைதி காத்தான்
புலம்பியவள் பொறுமையிழந்து மொட்ட வெயிலில் புறப்பட்டாள்
பொட்டக்கிணறுவரைச் சென்று வீடு திரும்பியவள்
தாவணியில் முடிந்திருந்த அரளியை ஆட்டுரலில் கொட்டினாள்
கிழக்கு வெட்டறிக்கையில் வீட்டோடு நுரைதள்ளிக் கிடந்தார்கள்
ஆணவத்தோடு அமர்ந்திருந்தாள் பிணங்களுக்கு மத்தியில் பேரன்புக்காரி.