ஜூலி
சிந்தனை தப்பியபடி
சாலையோரம் விழுந்துகிடக்கும்போதெல்லாம்
சற்று ஈரம் படிந்த சொரசொரப்பான நாக்கில்
என் தாடையை நனைத்துக்கொண்டிருப்பாள் ஜூலி.
எதையும் யோசிக்க விடாத பசி மயக்கம்
யாரோ உணவு தருவார்கள்.
அதிலொரு பங்கை ஜூலிக்கு ஒதுக்கித் தருவேன்.
அவளும் நானும் எந்தப் பேதமுமின்றி
ஒரே பொட்டலத்தை உண்ணுவோம்.
ஜூலி இறந்தபின் ஒருநாள்
மேகக்கூட்டத்தில் அவள் உருவம் தெரிந்தது.
நலம் விசாரித்தேன்.
நட்சத்திரங்களை ஒன்றுசேர்த்து
பந்து ஒன்று வரைந்து உருட்டிவிட்டேன்.
அதைத் துரத்திக்கொண்டு ஓடிய ஜூலி
எடுத்து வந்து என்னிடம் தந்தது.
சிறிது நேரம் அதே விளையாட்டை இருவரும் விளையாடினோம்.
மதியம் தின்று வைத்த மிச்ச உணவைப் பிரித்தேன்.
வழக்கம் போல் ஜூலியின் பங்கை அவளுக்கு ஒதுக்கினேன்.
இருவரும் உண்ட பிறகு
சிறிது நேரம் பேசாமல் இருந்தோம்.
நான் உறங்கும் வரை என் தலையை ஜூலி தடவியபடி இருந்தாள்.
வனமொன்று
இந்த வனத்திற்கு நேர் மேலே மினுக்கும் நட்சத்திரங்கள்
இரவில் ஊளையிடுகின்றன.
நதியாகிச் சலசலக்கும்.
சில மேகங்கள்
காட்டுப் பூனைகளை வரைந்து வேட்டையாடும்.
இன்னும் சில நட்சத்திரங்கள்
சுறாக்களைப் போல் மேலெழும்பி நீந்தும்.
எல்லா நட்சத்திரங்களும் ஒன்றுபோல்
எங்கள் கூரையில் ஏறி மொய்க்கும்.
வானம் வெறும் இருளாகிப் பயப்படுகிறது.
தலையணையை அணைத்தபடி புரண்டுபடுக்கிறாள் மகள்
நிலா ‘ச்சூ.. ச்சூ’ என்று உதட்டில் விரல் வைத்து அதட்டுகிறது.