இந்திய சுதந்திரப் போரில் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்ட புரட்சிகர அமைப்பான ‘கத்தார் பார்ட்டி’யின் பெயரைத் தனது புனைபெயராக வைத்துக்கொண்டவர், கும்மாடி விட்டல் ராவ் என்ற இயற்பெயரைக் கொண்ட கத்தார். அரபியிலிருந்து பஞ்சாபி மற்றும் உருதுவில் உருவாக்கப்பட்ட சொல்லே ‘கத்தார்’. அதன் பொருள் புரட்சி. தனது வாழ்வில் மட்டுமின்றிப் பெயரிலும் புரட்சி இருக்க வேண்டும் என்று இந்தப் பெயரைச் சூட்டிக்கொண்டவர், புரட்சிகர வானில் சிறகடித்துப் பறந்த செங்குயிலான கத்தார்.
தெலங்கானவில் உள்ள மெதாக் மாவட்டத்தில் தோப்பூரான் என்ற ஊரில் 1949இல் கூலிவேலை செய்யும் தலித் குடும்பத்தில் பிறந்தவர். அன்று புரட்சிகர அரசியல் மையம் கொண்டிருந்த ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் 1968இல் மேல்நிலைக் (PUC) கல்வியை முடித்தார். 1969இல் ‘வசந்தத்தின் இடிமுழக்கம்’ என்று வர்ணிக்கப்பட்ட நக்சல்பாரி எழுச்சியின் காரணரான சாரு மஜூம்தார் விடுத்த அறைகூவலினால் தூண்டப்பட்ட பல பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்கள் புரட்சிகர அரசியலை ஏற்றுப் படிப்பைப் பாதியில்விட்டு இயக்கத்தில் இணைந்தார்கள். பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த கத்தாரும் படிப்பை, முதலாமாண்டு முடிந்த நிலையில், பாதியில்விட்டு வெளியேறி புரட்சிகர அரசியலில் தன்னை இணைத்துக்கொள்கிறார். ஆரம்பத்தில் அம்பேத்கரியராக அரசியல் வாழ்வைத் துவங்கியவர், தெலங்கானா எழுச்சியால் தூண்டப்பட்டு, 1970க்குப் பின் “இந்திய அரசைத் தூக்கி எறியுங்கள்” என்ற ஆயுதம் தாங்கிய விவசாயப் புரட்சியை நடத்த முயன்ற நக்சல்பாரி எழுச்சியால், தன்னை ஒரு புரட்சிகரச் சக்தியாக மாற்றிக்கொண்டார். அதன்பின், 1975 – 77இல் பொதுத்துறை வங்கி ஒன்றில் எழுத்தராகப் பணி செய்தார். பிறகு, அதை விட்டுவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபடலானார்.
கத்தார் குழந்தையாக இருந்தபோது, தனது தாயின் மடியில் கட்டப்பட்ட தூளியில் இருந்துகொண்டு மணிக்கணக்கில் அவர் பாடுவதைக் கேட்பாராம். தாயுடன் வேலைக்குச் சென்ற காலங்களில் அவர் கற்றுக்கொண்ட முதல் பாடல்கள் துக்கம் மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நாட்டுப்புறப் பாடல்கள்தாம். தாயின் பாடல்கள், தலித் பெண்ணாக இருப்பதால் வரும் பல அடக்குமுறைகளை வெளிப்படுத்துவதாக இருந்தது. காரணம், ஒரு தலித் பெண் வர்க்க, சாதிய, பாலினம் என்ற மூன்று அடக்குமுறைகளுக்கும் ஆளாகிறார். நாட்டார் மரபில் அமைந்த இப்பாடல்களே கத்தாருக்கு எதிர்ப்புப் பாடல்களை எழுதுவதற்கான உத்வேகத்தை, உணர்ச்சிகளைத் தருவதாக அமைந்தன. “இந் நாட்டில் பெண்கள் பாடல்களின் மூலமாகவும், அடித்தளமாகவும், நீரூற்றாகவும் உள்ளனர். அவர்கள் தங்கள் உணர்வுகளை, வேலைகளை, துயரங்களைப் பாடுகிறார்கள். தங்கள் துயரங்கள், எதிர்ப்புகள் அனைத்தையும் பாடலில் வெளிப்படுத்துகிறார்கள்” என்று 2019இல் மனித உரிமையாளர் கண்ணபிரான் அவர்களுக்குத் தந்த நேர்காணலில் கூறியுள்ளார்.
இத்தகைய அதிருப்தியின் குரல்களில் இருந்துதான் அவர் தனது அரசியல் குரலைக் கண்டுபிடித்தார். 1969களில் அவர் வாழ்ந்த தெலங்கானா பகுதிகளில் நடந்த ஸ்ரீகாகுளம் விவசாயிகள் எழுச்சி, தனி மாநிலத்திற்கான தெலங்கானா போராட்டம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டுப் புரட்சிகரப் பாடல்களை எழுதத் துவங்கினார். திரைப்பட இயக்குநர் பி.நர்சிங்க ராவ் அவர்களால் தொடங்கப்பட்ட ‘கலை ஆர்வலர்கள் சங்க’த்தில் (Art Lovers Association) சேர்கிறார். அதுவே, 1972இல் அவரது ‘ஜன நாட்டிய மண்டலி’ (JNM) ஆக மாற உதவியது. 1967 – 68இல், நக்சலைட்டுகள் அனைத்து முன்னணி அமைப்புகளையும் கைவிட்டு, ஆயுதப் போராட்டத்தை ‘நடவடிக்கை மட்டுமே’ (Only Action) என்று இயங்கத் துவங்கினார்கள். அதற்காகத் தலைமறைவு அமைப்புகளின் வழியாக, தலைமறைவு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதாவது, வர்க்க எதிரிகளை அழித்தொழிப்பது. அதனால், கடும் அடக்குமுறைக்கு ஆளாயினர். இயக்கங்கள் கடும் பின்னடைவைச் சந்தித்தன. 1969இன் பிற்பகுதியில் ஆந்திரத் தலைமை இந்த யோசனையை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியது. அத்தகைய சூழலில் மக்களிடம் இயக்கம் தனிமைப்படாமல் இருக்க வெகுசன அமைப்புகளைக் கட்டத் துவங்கியது. 1970இல் ‘புரட்சிகர எழுத்தாளர்கள் சங்கம்’ (VIRASAM or RWA) உருவானது; 1972இல் ‘ஜன நாட்டிய மண்டலி (JNM)’ அமைப்பு உருவானது. இவ்விரு அமைப்புகளும் நக்சலைட்களின் நடைமுறைகளில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தன.
மாவோயிஸ்ட்களான ‘மக்கள் யுத்தக் குழு’வின் (Peoples War Group) பண்பாட்டு முன்னணியாக ஜன நாட்டிய மண்டலி உருவானது. மார்க்சிஸ்ட் – லெனினியக் கோட்பாட்டுகளின் அடிப்படையில் ‘ராகல் ஜந்தா’ (செங்கொடி), ‘வோலி வோலிலா, ரங்குலா வோலி’ (ஹோலி, ஒளிரும் ஹோலி) போன்ற பாடல்களை எழுதினார். இடதுசாரி இளைஞர்கள் மீதான காவல்துறை என்கவுண்டர்கள், அப்போது நடந்த (கரம்சேடு) தலித் படுகொலைகள் ஆகியவற்றினை எதிர்த்துக் கோபத் தீ தெறிக்கும் பாடல்களை இயற்றிப் பாடினார் கத்தார். யிழிவி எந்த அளவுக்குப் பரவலாக மக்களிடம் பரவியதோ அந்த அளவிற்கு அதன்மீதான அடக்குமுறையும் அதிகமானது. பல RWA, JNM உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். 1980களின் இரண்டாம் பாதியில் தண்டகாரண்யா வனப்பகுதியில் நக்சல் ஆயுதப் படையுடன் சில மாதங்கள் இருந்தார் கத்தார். நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவந்தார். மாவோயிசத்தை ஆதரிக்கும் தெலுங்கு கலைஞர்களான ஸ்ரீகாகுளம் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான பல்லாடியர் சுப்பாராவ் பானிகிரகி 1969இல் கொல்லப்பட்டார். கவிஞர்கள் சேரபண்டா ராஜு, வரவர ராவ் போன்றவர்கள் தொடர்ந்து சிறைகளில் தள்ளப்பட்டனர்.
அதன்பின் வெகுசனங்களிடம் அரசியல் பிரச்சாரத்திற்கான உணர்வுகளை வளர்க்கும் பாடல்கள், கவிதைகளை இயற்றி நாட்டிய நிகழ்வுகளை நடத்துவதற்காக மக்கள் அடர்ந்த சேரிகள், கிராமங்களுக்குச் செல்லத் துவங்கினார். அப்போதுதான் இன்று நமக்குப் பிம்பமாகும் நாட்டிய அசைவுகளுடன் வீறுகொண்டு எழும் கத்தாரின் புகழ்பெற்ற அடவுடன் கூடிய உடைகளைப் போடத் துவங்கினார். ஆடு மேய்ப்பவர்கள் அணியும் கறுப்பு, சிவப்பு பார்டர் இட்ட கம்பளிப் போர்வை, மரத்தால் ஆன நீளத்தடி, மணிக்கட்டில் கட்டப்பட்ட சிவப்புக் கைக்குட்டை ஆகியவற்றைத் தனது நாட்டியக் குழுவின் சீருடையாக மாற்றினார். ‘புர்ரா கதா’ எனப்படும் வாய்வழி கதைசொல்லல் வடிவம், நாட்டுப்புறப் பாடல் ஆகியவற்றையும் தனது கலை நிகழ்வுகளில் இணைத்துக்கொண்டார்.
அவரது பாடல்கள் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மனிதர்களின் துயரம், வலி, துன்பம் ஆகியவற்றைப் பேசும் அரசு எதிர்ப்புக் கதைகளிலிருந்து பெறப்பட்டவை. அதைப் போலவே, அவரது இசை இணக்கத்துடன், அனைவராலும் நன்கு அறியப்பட்ட ஊற்றுகளிலிருந்து பீறிட்டவையாகும். பட்டினியால் வாடும் ரிக்ஷாகாரர், வயலில் நாள் முழுவதும் உழைக்கும் கொத்தடிமைத் தொழிலாளி, சந்தை விலையால் மிகவும் நொந்துபோயிருந்த விவசாயி வெற்றுச் சமையலறைக்குத் திரும்புவது போன்ற காட்சிகளையும், தனது எதிர்ப்பைக் காட்ட சொந்தப் பயிர்களை எரித்துவிடும் விவசாயியின் அவலம் மட்டுமின்றி, இயக்கமாகச் (சங்கமாக) சேருவதன் முக்கியத்துவம், காவல்துறையினர் அரசால், அதிகாரிகளால் படும் வேதனைகள் ஆகியவை அவரது பாடுபொருட்களாக அமைந்திருந்தன. ஏழைகளின், சேரிவாழ் மக்களின், ஒடுக்கப்பட்ட நடுத்தர மக்களின் வாழ்க்கை அனுபவங்களைத் தனது கம்பீரமான குரலில், புரட்சிகர மற்றும் துயரத்தில் வாடும் உடலசைவுடன் வெளிப்படுத்தினார். அவரது பாடல்கள் இத்தகைய அனுபவங்களின் வழி வெளிப்படும் கோபத்தையும், அது தரும் அவமானத்தையும், புரட்சிக்கான, போராட்டத்திற்கான அழைப்புகளாக மாற்றின; விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் அவர்களின் உள்ளார்ந்துள்ள புரட்சிகரச் சக்தியை நினைவூட்டி அவர்கள் இயக்கமாக மாற வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவதாகவும் அமைந்தன.
இவை அவரை ஒரு புரட்சிகரப் பாடகராக, கவிஞராக, நடிகராக மாற்றின. அவரது நிகழ்ச்சிகளுக்குப் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர்; ஆயிரக்கணக்கானோர் அவரது அழைப்பைப் பின்பற்றி இயக்கத்திற்கு வந்தனர். மனித உரிமைப் போராளி கே.பாலகோபால் கூறுகிறார்: “நாடு முழுவதும் அறியப்பட்ட கத்தாரால் கட்டமைக்கப்பட்ட பண்பாட்டு அமைப்பான ஜன நாட்டிய மண்டலியால் பிப்ரவரி 20, 1990 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டத்தில், ஒன்றரை லட்சம் மக்கள் கலந்துகொண்டனர். அது, என்டிஆர் (என்.டி.ராமராவ்) மற்றும் அவரது நட்பார்ந்த எதிர்க்கட்சிகள் கூட்டிய பிரமாண்டமான நிகழ்ச்சியை விட அதிகமான எண்ணிக்கை ஆகும்.” அவரது பாடல்கள் தொகுக்கப்பட்டுச் சிறு புத்தகங்களாக வெளியிடப்பட்டன, கேசட்டுகளாக விற்கப்பட்டன. 2010இல் 3,000 பாடல்கள், 35 ஆடியோ கேசட்டுகள் வெளியிடப்பட்டதாக றி.கேசவ் குமார் குறிப்பிடுகிறார். அவரது பாடல்கள் வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. வசந்த கண்ணபிரான் அவர்களால் ‘கத்தாரின் பாடல்கள், ஓர் அடிமையின் வாழ்வு’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழிலும் அவரது பல பாடல்கள் மொழிபெயர்க்கப்பட்டு இயக்கங்களால் பாடப்பட்டன.
1985ஆம் ஆண்டு முதல் பலமுறை அவர் ஜாதி அடிப்படையிலான வன்கொடுமைகள் குறித்த கேள்வியைத் தனது பிரச்சாரங்களில் முன்வைத்துவந்தார். தெலங்கானா, பிரகாசம் மாவட்டத்தில் உள்ள சிராலா நகரில் உயர் சாதியினரால் ஆறு தலித்துகள் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக தலித்துகளின் மாபெரும் போராட்டக் கூட்டத்தைத் தொடங்கிவைத்தார். 1990களின் முற்பகுதியில் கத்தார் தனது வீட்டில் அம்பேத்கர் மற்றும் புத்தரின் புகைப்படங்களை வைத்திருந்ததாகக் குறிப்பிடுகிறார்கள். மார்க்சிய சின்னங்களை விட புத்தர், கபீர், பூலே, அம்பேத்கர் போன்றவர்களுக்கு அவர் நெருக்கமானவர் என்றும் கூறுகிறார்கள் சில ஆய்வாளர்கள். “அம்பேத்கர் மார்க்ஸை நேசித்தது போல், கத்தார் மார்க்ஸை நேசித்தார். இருப்பினும், அவர் இந்தியச் சமூகப் புரட்சியாளர்களிடமிருந்து உத்வேகம் பெற்றார். மேலும், கத்தார் ஒரு மார்க்சிஸ்ட் என்பதில் இரண்டாவது சிந்தனை இல்லை” என்று பிரசாத் என்பவர் தனது நூலில் எழுதியுள்ளார் என்று ஒரு கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1989இல் மக்கள் யுத்தக் குழு மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு, 1990களில் அவர் பொது வாழ்க்கைக்குத் திரும்பினார். அவரது பாடல்கள் ‘பந்தே நக பாண்டி கட்டி (Bande Naka Bandi Katti)’, ‘பொடுஸ்துன்னா போடுமேடா (Podusthunna Poddumeed)’ ஆகியவை தனித் தெலங்கானா மாநிலத்திற்கான இயக்கத்தின் கீதங்களாக மாறின. சாதிப் பிரச்சினைகளுக்கு அவர் அதிக அழுத்தம் கொடுத்தது முரண்பாட்டின் முக்கியப் புள்ளிகளில் ஒன்றாக மாறி, 1995இல் கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்நிகழ்வு கடுமையான மன உளைச்சலை அளித்ததாகப் பின்னர் குறிப்பிட்டுள்ளார். கட்சியின் இந்நடவடிக்கைப் பற்றி அவர் பகிரங்கமாக வாய் திறக்கவில்லை. அந்த ஆண்டே இடைநீக்கம் திரும்பப் பெறப்பட்டு, கட்சியில் நெருக்கமானார். 1997ஆம் ஆண்டு அவர் காவல்துறையின் இலக்காக மாறினார். ஏப்ரல் 1997, சாதாரண உடையில் இருந்த காவலர்கள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஐந்து தோட்டாக்கள் பாய்ந்தன அவர் மீது. அவை அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டன, ஆனால், ஒரு தோட்டா மட்டும் முதுகெலும்பிற்கு அருகில் மயிரிழை இடைவெளியில் சிக்கியிருந்தது. உயிருக்கே ஆபத்தான நிலையில் இருந்ததால் அகற்றாமல் விட்டுவிட்டனர். அவர் இறந்த 2023 வரை 26 ஆண்டுகளாக கத்தார் தனது உடலில் அத் தோட்டாவைச் சுமந்தபடி, அது தரும் வேதனையுடன் நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருந்தார். அரசால் பரிசளிக்கப்பட்ட அத்தோட்டா அவரது புரட்சிகர எழுச்சியை, நடனத்தை, பாடலை, மக்களிடம் சென்று பரப்புரை செய்வதை இம்மியும் அசைக்கவில்லை. ஆனால், அவர் இறந்தபோது அரச மரியாதையுடன் தோட்டாக்கள் முழங்க அடக்கம் செய்யப்பட்டார் என்பது அவரது வாழ்வில் நிகழ்ந்த அரசியல் முரணின் விளைவு என்றால் மிகையாகாது.
2000ஆம் ஆண்டில் கட்சியின் மற்றொரு கலாச்சாரப் பிரிவான அகில இந்தியப் புரட்சிக் கலாச்சாரக் கழகத்தின் பொதுச் செயலாளராக ஆனார். 2002ஆம் ஆண்டில், அரசாங்கத்துடனான சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வரவர ராவ், ஜி.கல்யாண் ராவ், கத்தார் ஆகியோரைக் கட்சி தனது பிரதிநிதிகளாக அறிவித்தது. கத்தார் இறுதியாக 2004இல் சிபிஐ (மாவோயிஸ்ட்) கட்சியிலிருந்து விலகினார். 2010இல், மாவோயிஸ்டுகளின் சாதியம், வர்க்கம் குறித்த நிலைப்பாட்டில் முரண்பட்டு, ஆயுதப் புரட்சியை மறுத்து, அம்பேத்கரிய போராட்ட முறையைக் கையிலெடுத்தார். 2012இல் மையநீரோட்ட அரசியலில் நுழைந்தார். இருப்பினும், அவரால் அதில் தனித்ததோர் அடையாளத்தை உருவாக்க முடியவில்லை. ஒருவேளை, புரட்சிகரக் கவிஞராக, கலைஞராக உருவாகியிருந்த அவரது பிம்பம் மக்களின் நினைவில் ஆழமாகப் பதிந்துவிட்டதால், அவரை வேறு எந்தப் பிம்பத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது இருந்திருக்கலாம். “எனது தாய்க் கட்சியுடன் நான் ஒரு விவாதம் செய்தேன், அதில் மார்க்சிய அறிவுக்குக் கூடுதலாக, சாதி மற்றும் வர்க்கத்தால் ஆன நமது சமூகத்தை விடுவிக்க அம்பேத்கர் மற்றும் பூலேவின் சித்தாந்தங்களை இந்தியச் சூழலுடன் இணைக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தேன்” என்று அவர் கூறியுள்ளார். 2017ஆம் ஆண்டு, ‘தாய்க் கட்சி’யில் இருந்து விலகுவதாக முறைப்படி அறிவித்தார்.
தில்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் பி.கேசவ குமாரின் கூற்றுப்படி, “மார்க்ஸின் அரசியல் பொருளாதாரம் அல்லது மாவோவின் தத்துவம் அல்லது மார்க்சியத்தின் எந்த உரை மொழியையும் கடன் வாங்காமல் எளிய பாடல்கள் அல்லது வார்த்தைகளில்” விளக்கியவர் கத்தார். “கத்தார் மற்றும் யிழிவி இந்தியாவின் முற்போக்கான நாடக இயக்கங்களிலும், அரசியல் நாடகம் மற்றும் ‘நாட்டுப்புற நிகழ்ச்சி’ என்ற பெரிய துறையிலும் தீவிரமான தலையீட்டை மேற்கொண்டனர்” என்று பிரகாஷ் என்பவர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். “அரசியல் நாடகத்தில் நடுத்தர வர்க்கத்தின் படிநிலையை உடைத்த இந்தியாவின் முதல் இடதுசாரி அரசியல் நாடகக் குழு” என்று ஜனநாட்டிய மண்டலியை அடையாளம் காட்டுகிறார். மேலும் கத்தாரின் JNM “மக்களின் முற்போக்கான பண்பாட்டிற்கும், வெகுசனப் பண்பாட்டிற்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்தது” என்ற அவரது கருத்து முக்கியமானது. அதாவது, நாட்டார் கலை மரபுகளோடு சரியான அரசியலைக் கொண்டுசென்ற அவரது பாணி முற்போக்குக் கலைப் பண்பாட்டினர் கற்க வேண்டிய முன்னோடிச் செயல்பாடாகும்.
தெலங்கானா போராட்டத்தில் அவர் ஆற்றியப் பங்கை வரலாறு மறக்காது. அவரது அடையாளத்தை வெளிப்படுத்தும் பாடல்களான ‘பொடுஸ்டுன்னா போடு மேடா நடுஸ்டுன்னா காலமா பொரு தெலுங்கானாமா (Podustunna Poddu Meeda Nadustunna Kaalama Poru Telanganama)’ தெலங்கானா போராட்டத்தின் ஒவ்வொரு கூட்டத்திலும் கட்டாயமாகப் பாடப்பட்டது. அது தெலங்கானாவின் தேசியக் கீதமாகக் கருதப்பட்டது. கருத்தியல் ரீதியாகவும், அவர் தனித் தெலங்கானா உருவாக்கத்திற்கு அனுக்கானமானவராக இருந்தார். அக்கருத்து மக்களைச் சென்றடையவும், தெலங்கானாவிற்கு இழைக்கப்பட்ட அநீதியை அம்பலப்படுத்தவும் தனது இசையைப் பயன்படுத்தினார்.
அவர் நரசிங்கராவின் ‘மா பூமி’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். நக்சல்பாரி இயக்கத்தினரால் நாடு தழுவிய அளவில் அத்திரைப்படம் கொண்டுசெல்லப்பட்டது. 80களில் மக்கள் யுத்தக் குழுவின் பண்பாட்டு, மாணவர், இளைஞர் அமைப்புகள் சார்பாகத் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அணைக்கரை அருகில் ஒரு கிராமத்தில் திரையிட ஏற்பாடு செய்து, சுற்றுவட்டாரத்தில் உள்ள இயக்கம் வளர்ச்சிபெற்ற கிராம மக்களைத் திரட்டிக் கொண்டுவந்திருந்தோம். பலரும் வண்டிகள், கால்நடையாக வந்து குழுமியிருந்தனர். இரண்டாவது காட்சியாகப் போட திரையரங்கு அனுமதித்தது. ஆனால், காவல்துறை திரையிடக் கூடாதென்று பெட்டியைப் பிடுங்கிச் சென்றுவிட்டது. விடிய விடிய போராடியும் திரையிட முடியாடமல் போனது. கத்தாரைத் திரையில் சந்திக்கும் முதல் வாய்ப்புத் தவறிப்போனது பெரும் மனக்குறையாக இருந்தது. அப்படத்தில் அவர் குழுவினருடன் பாடும் பாடலான ‘பந்தெங்கா பாண்டி கட்டி படஹாரு பண்ட்லு கட்டி’ (Bandenka Bandi Katti Padahaaru Bandlu Katti) என்ற பாடல் பிரபலமானது மட்டுமல்ல, இன்று அப்பாடலைக் கேட்டாலும் நமது உடல் ஆடவும், நமது உணர்வில் எழுச்சியின் தீப்பொறிப் பற்றவும் செய்யக்கூடிய நடனம் அது. அவர் மூன்று திரைப்படங்களில் நடிகராக, பாடலாசியராகப் பணியாற்றியுள்ளார். அதில் ‘ஓரே ரிக்ஷா’ என்ற திரைப்படத்தில் அவரது ‘மல்லத்தீகா கு பாண்டிறி வோலி (Malletheega Ku Pandiri Vole)’ என்ற பாடலுக்குச் சிறந்த பாடலாசிரியருக்கான 1995ஆம் ஆண்டு நந்தி விருது பெற்றுள்ளார். 2011இல் சிறந்த ஆண் பாடகருக்கான நந்தி விருது ‘ஜெய் போலோ தெலுங்கானா (Jai Bolo Telangana)’ என்ற பாடலுக்குப் பெற்றுள்ளார்.
தோழர் கத்தாருடனான என் நினைவுகள் மறக்க முடியாதவை. எண்பதுகளில் தமிழகத்தில் மூன்றாவது அணி என்று சொல்லப்படும் புரட்சிகர மார்க்சிய – லெனினிய இயக்கங்களின் வளர்ச்சி அதிகரித்துக்கொண்டிருந்த நேரம். நான் அந்த இயக்கத்தின் மாணவர் அமைப்பின் மாவட்டச் செயலாளராக இருந்தேன். எங்கள் இயக்கக் கலைக்குழுவிற்கான ஆதர்சமாக இருந்தவர். தோழர் கத்தார் குடந்தை வந்தபோது அவருடன் ஒரே மேடையில், சில பாடல்களை அவர் தெலுங்கில் பாடி ஆட, தமிழில் பாடி ஆடும் கலைக்குழுவில் ஆடியிருக்கிறேன். மேடையில் அவரது ஆட்டம் என்பது அனைவரையும் கிளர்ந்தெழச் செய்யக் கூடியது. அந்நிகழ்விற்காகக் குடந்தை முழுக்க இரவு போஸ்டர் ஒட்டியதுடன், அந்நிகழ்விற்கு எனது குடும்பத்தினர் அனைவரும் வந்திருந்தனர். இதைக் குறிப்பாகச் சொல்லக் காரணம், எனது தாய், சகோதரிகளிடம் அந்நிகழ்விற்குப் பின் எனது செயல்பாடுகள் மீது ஒரு மரியாதை ஏற்பட்டது என்பதைக் குறிக்கவே. அத்துடன் இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவன் என்பதால், அவர்கள் துப்பட்டா போட்டு அமர்ந்திருந்தது, அந்த ஆயிரக்கணக்கானோர் முன் தனித்துவமாகத் தெரிந்தது, மட்டுமல்ல, அங்கு வந்திருந்த ‘கியு பிராஞ்ச்’ உளவுத்துறையினர் அதனை உன்னிப்பாகக் கவனித்தனர் என்பதும், பிற்பாடு என் வீட்டிற்கு வந்து தொல்லைகள் தந்தனர் என்பதும் கூடுதல் செய்திகள்.
அந்நிகழ்வு முடிந்து அவரை ஆட்டோவில் தோழர் பொதி இல்லத்திற்கு அழைத்துச் சென்றேன். அன்றிரவு அவருடன் ஒரு நேர்காணல் ‘செந்தாரகை’ சார்பாக நடந்தது. அதன் பின் தர்மபுரி பாலன் சிலை திறப்பு விழாவில் அவரது ஜன நாட்டிய மண்டலியின் கலை நிகழ்வு நடந்தபோது இரவு முழுக்க அந்நிகழ்வைப் பார்த்திருக்கிறேன். கத்தார் குழு மேடைக்கு வருவதே பாய்ந்து வரும் சிங்கத்தைப் போல பிடரி மயிர் சிலிர்க்க வருவார்கள். அது பெரும் எழுச்சியைத் தரும் ஒன்றாக இருக்கும். ஒருமுறை அகில இந்திய மாணவர் இயக்கம் சார்பாகச் செகந்தராபாத் ஒஸ்மானிய பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த மூன்று நாள் மாநாட்டில் அவரது கலை நிகழ்வைப் பார்த்திருக்கிறேன். பல ஆயிரம் மக்கள் கூடிய அக்கூட்டத்தில் அவரது நாட்டியம், பாடல் ஏற்படுத்திய மனவெழுச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஒரு கலையின், கலைஞனின் சாத்தியம் அதுதான். இதை எழுதும் கணங்களில் அந்த உணர்வின் தாக்கம் உடலின் செயலாக மாறியுள்ளதை என்னால் உணரமுடிகிறது. நம்மை அறியாதவோர் எழுச்சிக்குத் தயார் செய்கிறது. தாங்கவியலாத சோகமும் மனதைக் கவ்வுகிறது.
2023 ஆகஸ்ட் 3 அன்று நுரையீரல் மற்றும் சிறுநீரகப் பிரச்சினையால் உடல்நலம் பாதிக்கப்பட்டுத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டு, ஆகஸ்டு 6 அன்று அந்தப் புரட்சிகர கானம் தனது 73ஆம் வயதில், ஆர்ப்பரிப்பை, ஆலாபனையை அணைத்துச் சென்றுவிட்டது. புரட்சிகரக் குயில் அதன் கூட்டை அடைந்தாலும், நம்மிடம் அதன் குரலின் ஒலிப்பு இருந்துகொண்டே இருக்கும். அவரது குரலும், அவர் விட்டுச் சென்ற நடனமும், அதன் புரட்சிகர அசைவுகளும் என்றும் ஒடுக்கப்பட்டவர்கள், தலித் மக்கள் அனைவருக்கும் புரட்சிகர நெருப்பை மூட்டிக்கொண்டே இருக்கும்.
மிகச் சிறந்த கலைஞர். புரட்சிகர இயக்கத்திற்குப் பல இளைஞர்களைத் தன்னெழுச்சியாகக் கொண்டுவந்த மகா கலைஞன், இறுதிக்காலத்தில் பக்தி நெறிக்கு ஆட்பட்டு முழுக்கப் புரட்சிகர இயக்கப் பணிகளைக் கைவிட்டவர். என்றாலும், ஆந்திரா, தமிழகத்தில் அவரது கலைநிகழ்வு ஏற்படுத்திய தாக்கமும், புரட்சிகர இயக்க வளர்ச்சிக்கான அவரது செயல்பாடுகளும் மறுக்கவோ, மறக்கவோ முடியாதவை. புரட்சிகரக் கலைஞனாக, தனது வாழ்வை இயக்கத்திற்கு அர்ப்பணித்து, அதனால் குண்டடி பட்டு, அதன் நோய்மையில் மரணத்தைத் தழுவிய தோழர் கத்தாருக்குச் செவ்வணக்கம். லால் சலாம் காம்ரேட்!
பயன்பட்ட கட்டுரைகள்:
- Popular Culture and Ideology : The Phenomenon of Gaddar, P Kesava Kumar, EPW, FEB 13, 2010
- Maoism to Mass Culture: Notes on Telangana’s Cultural Turn, S.V. Srinivas, http://bioscope.sagepub.com
- Gaddar and the end of an era in Indian Music, Bhanuj Kappal, Livemint.com
- Gaddar: India’s Most-Known Revolutionary Performer, Snigdhendu Bhattacharya, 19 Aug 2023, Outlook.