வரலாற்றுக் கனவுகளின் வரலாறும் வரலாற்றைக் கனவு காணச் செய்த வாளின் வரலாறும்

பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

ரண்டாம் உலகப்போர்க் கால வாள் ஒன்று எங்கள் தாத்தாவிடம் வருவதற்கு முன்பாகவே பிரித்தானியர்கள் இந்த நாட்டைவிட்டுப் போய்விட்டார்கள். அந்த வாள் அவருடைய கைகளில் வந்து சேர்ந்த நாளில் ஒருவேளை பிரித்தானியர்கள் இந்த நாட்டை ஆண்டிருந்தாலும் எங்கள் தாத்தா அதைக் கொண்டு விடுதலைப் போராட்டத்தில் இறங்கியிருக்கமாட்டார். அவருடைய வாழ்நாளில் ஒரு வெள்ளைக்காரனைக் கூடப் பார்த்ததில்லை என்று பின்னர் ஒருமுறை என்னிடம் சொன்னபோது அவர் வரலாற்றின் கரி எஞ்சின் இரயிலைத் தவறவிட்ட ஒரு முட்டாளைப் போலத்தான் எனக்குத் தோன்றினார். பாதி வாழ்நாளை பருத்தி வண்டியைப் பொள்ளாச்சி சந்தைக்கு ஓட்டியும், குழந்தைகளைப் பெற்றும், மீதியை ஆஸ்துமாவிலும் கழித்தவர் என்றாலும் அந்த வாளை அவர் பொன் போலப் பாதுகாத்திருக்க வேண்டுமென்று விரும்பினேன். அதையும் அவர் செய்திருக்கவில்லை. நைத்துப் போயிருந்த தோல் உறையிலிருந்து முதன்முறையாக நான் அந்த வாளை உருவியபோது அது துருவேறி, ஓய்வு பெற விரும்பும் பணித்திறனற்ற வயதான ஊழியரைப் போலிருந்தது. தலைக்கு மேலே வாளை உயர்த்திப் பார்த்தது நினைவிருக்கிறது. அப்போது அதன் முனையில் எந்த நட்சத்திரமும் மினுங்கியிருக்கவில்லை.

அந்த வாள் சிறுவனான எனக்கு அளித்த கிளர்ச்சியை, அதைக் கட்டிக்கொண்டு தூங்க அனுமதிக்காத என் தந்தையின் மீது எழுந்த கோபம் வெகுவாகக் குறைத்து, ஒரு வாளைக் கையில் வைத்திருக்கும்போதும் என்னைக் கையாலாகாதவனைப் போல உணரச் செய்தது. நிச்சயமாக என் தந்தையின் மீது அதனைப் பிரயோகிக்க விரும்பியிருக்க மாட்டேன் என்றாலும், என் கையிலிருக்கும் வாளை ஒரு விளையாட்டுப் பொருளைப் போலக் கருதிவிட்டார் என்கிற விரக்தியோடு அன்றிரவு உறங்கினேன். பின்னர் அந்த வாள் அட்டாணியில் ஏற்றப்பட்டு என் கைக்கு எட்டாத உயரத்திற்குச் சென்றது.

எங்கள் தாத்தாவின் சித்தப்பா மகன், வீட்டைவிட்டு ஓடிப் போய் இராணுவத்தில் சேர்ந்த சில மாதங்களில் இரண்டாம் உலகப் போர் துவங்கியது. ஒன்றிரண்டு கடிதங்களை அவருடைய அப்பாவிற்கு எழுதியதோடு பின்னர் என்னவானார் என்றே தெரியவில்லையாம். போரெல்லாம் முடிந்து பாலக்காட்டிற்குத் திரும்பியபோது அவர் இராணுவத்திலிருந்து எடுத்துவந்த பொருட்களில் இந்த வாளும் இருந்திருக்கிறது. பொள்ளாச்சியில் இரயில் ஏறி பூலாங்கிணற்றில் இறங்கி நடந்தே எங்கள் பூர்விக ஊருக்கு வந்து அதை ஏன் அவர் எங்கள் தாத்தாவிடம் கொடுத்தார் அல்லது அது எப்படி எங்கள் தாத்தாவிடம் வந்தது என்பதையும், சின்ன தாத்தா எங்கெல்லாம் போர் புரிந்தார், அவருடைய வீரசாகசங்கள் என்ன என்பதையும் நான் யாரிடமும் கேட்காமல் போய்விட்டதை இப்போது நினைத்தாலும், வரலாற்றைச் சந்தித்தவரின் வரலாற்றைக் கேட்காமல் கை நழுவவிட்ட உணர்வே எழுகிறது. இந்தத் தவறு தாத்தாவையும் என்னையும் சமமாக்குகிறது.

என் அப்பா ஒரு நூற்பாலையில் வேலை பார்த்தார் என்றாலும் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர் அல்ல. அவர் கம்யூனிஸத்தினால் ஈர்க்கப்படாதிருந்தது எனக்கு ஏமாற்றமாக இருந்தது. எங்கள் சித்தப்பா ஒருவர் சிலகாலம் எங்கள் பூர்விக ஊரில் இருந்த கம்யூனிஸ்ட்களின் விவசாயப் பிரிவு அலுவலகத்திற்குச் சென்று அங்கே நடக்கும் வகுப்புகளைக் கேட்டுத் தானும் ஒரு கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொண்டு தாடி வளர்த்துக் குடும்பத்தில் சிறு கலகம் ஒன்றைச் செய்தார். பொங்கல் நாட்களில் காளை மாடுகளைக் கொண்டு நடக்கும் ஓட்டப் பந்தயம், சுற்றி நின்று மூங்கில் கழிகள் இரண்டைக் கைகளில் வைத்து ஆடுவது போன்றவற்றில் ஈடுபடாமல், ஓர் ஓரத்தில் உறுமி வாசிப்பவர்களோடு சேர்ந்து உறுமி வாசிப்பதும், தப்பு அடிப்பதுமாக (இதைச் சிறுவனாக இருந்தபோது நானே பார்த்திருக்கிறேன்) எங்கள் தாத்தாவை எரிச்சலூட்டுவார். பூவரச மரத்தின் நிழலில் சாவடியின் முன்பிருந்த மைதானத்தில் நடக்கும் இந்த ஆட்டத்தின் இசையில் நான் மயங்கி நின்றிருப்பேன். தாத்தா வந்ததும் தப்படிப்பதை நிறுத்திவிட்டு சித்தப்பா கூட்டத்தில் மறைந்துவிடுவார். அவர் நக்ஸலைட்டுகளோடு சேர்ந்து முதலாளிகளை, கொடுமைகளைச் செய்யும் பண்ணையார்களைக் கொல்லப் போவதாகச் சொல்லிக்கொண்டு திரிந்திருக்கிறார். பின்னர் குடும்பத்தில் எல்லோரும் அவரை வற்புறுத்தியும், பயமுறுத்தியும் கம்யூனிஸத்தையும் நக்ஸலைட்டுகளோடு சேரும் முடிவையும் கைவிடச் செய்திருக்கின்றனர். அவருடைய கனவிற்கு எங்கள் தாத்தாவின் வீட்டைத் தாண்டும் வலுவிருந்திருக்கவில்லை. அவரின் பெயரைக் கேட்டாலே அஞ்சி நடுங்கியிருக்க வேண்டிய முதலாளிகளும் பண்ணையார்களும் உயிர்பிழைத்தனர். அந்த நாட்களில் அவருடைய நண்பர்களோடு எடுத்த நிறமழிந்த ஒரு புகைப்படம் இன்றும் அவரிடம் இருக்கிறது. அதில் தாடி வளர்த்து, லுங்கி கட்டிக்கொண்டு நெஞ்சை உயர்த்தி நின்றிருப்பார். என் அப்பாவின் இளமைக்காலத்தில் அவர் எடுத்திருந்த புகைப்படங்கள் ஆயுத பூஜை விடுமுறை நாளில் நூற்பாலையிலும் உறவினர்களின் திருமணங்களிலும் எடுத்தவை.

எல்லாக் கலகக்காரர்களுக்கும் அவர்களது தந்தைகள்தாம் முதல் எதிரிகள். கலகக்காரர்கள் தந்தைகளைக் கொல்லத் துணியமாட்டார்கள் என்றாலும், அவர்களுக்கு அடிபணியாமல் இருப்பதிலிருந்தே கலகத்தைத் தொடங்குவார்கள். நக்ஸல்பாரி இயக்கத்தை ‘வசந்தத்தின் இடிமுழக்கம்’ என்று அழைத்திருக்கிறார்கள். கோடைக்காலங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் எதிரொலித்த இடியோசையின், ஊரிலிருந்த மங்களூர் ஓட்டு வீடுகளின் கூரையின் மீது கொட்டும் மழையின் தளர்வில்லாத ஓசையின் அழைப்புகளுக்குச் செவிசாய்த்து (நீதி, ஓங்கி ஒலிக்கும் அழைப்பு), எங்கள் தாத்தாவின் வீட்டிலிருந்து வாளை எடுத்துக்கொண்டு நக்ஸலைட்டுகளோடு சேராமல், தாடியை மழித்து உணவகம் ஒன்றை நடத்தப் போய்விட்ட சித்தப்பாவை அந்த வாள் ஒருபோதும் மன்னித்திருக்காது.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது பொள்ளாச்சியில் பலர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். எங்கள் உறவினர்கள் ஒருவர் கூட இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்துகொண்டிருக்கவில்லை என்பதைக் காட்டிலும் என்னுடைய மாமா ஒருவரிடம் இதைப் பற்றிக் கேட்டபோது ‘எனக்குச் சரியா விவரம் தெரியல’ என்று சொன்னது என்னை அதிகமாகத் தளரச் செய்தது. பொள்ளாச்சி ஸ்டூடியோ ஒன்றில் கார்ட்போர்ட் அட்டையினால் செய்யப்பட்ட எம்ஜிஆரின் ஆளுயரக் கட்-அவுட்டிற்கு அருகே நின்று அவர் எடுத்திருக்கும் கறுப்பு வெள்ளைப் புகைப்படம் ஒன்று அவர் வீட்டில் பல ஆண்டுகளாகத் தொங்குகிறது.

வரலாற்றைச் சந்திப்பதைத் தவறவிட்ட என்னுடைய தாத்தா, அப்பா, மாமா, சித்தப்பாவையும், என்னுடைய எல்லா உறவினர்களின் வாழ்வையும் என்னால் இப்போது புரிந்துகொள்ள முடிந்தாலும், எங்கள் குடும்பத்தைப் பற்றிப் பெருமையாகச் சொல்லிக்கொள்வதற்கு ஒன்றுமில்லாமல் போனது வெகு சாதாரணமான குடும்பங்களோடு எங்களுடைய குடும்பத்தையும் சமமாக்கிவிட்டது.

திருமூர்த்தி அணையிலிருந்து ஆமை ஒன்றையும், தாத்தாவின் வீட்டிலிருந்த வாளையும் எடுத்துக்கொண்டு என் அப்பா வீட்டிற்கு வந்தபோது எனக்கு வாளைக் காட்டிலும் ஆமையின் மீதே ஆர்வமாக இருந்தது. சிறு பாத்திரம் ஒன்றில் நீரை ஊற்றி அதில் ஆமையைப் போட்டும், வாளை நீண்ட காடாத் துணியால் சுற்றியும் எடுத்து வந்திருந்தார். ஆமையை வீட்டுக் கிணற்றில் விட்டோம். பருவமழை நாட்களில் கிணற்று நீர் கைக்கு எட்டும் அளவிற்கு ஊற்றெடுத்திருக்கும். தெளிவான நீரின் மெலிதான பச்சை நிறத்தில் என் முகமும், வெளிச்சக் குவியலாக மின்னும் சூரிய ஒளியும் ஒருசேர நீரில் தளும்புவதைப் பார்த்திருப்பேன். இரண்டுமே கிணற்றின் ஆழத்திலிருந்து மேலே வந்து உலகை எட்டிப் பார்ப்பவை போலிருக்கும். பள்ளி விடுமுறை நாட்களில் எனது நண்பர்கள் அந்த ஆமையைப் பார்க்கவும், நான் ஒரு கயிற்றைக் கட்டி என் முதுகில் தொங்கவிட்டிருக்கும் வாளைப் பார்க்கவும் வருவார்கள். அவர்களில் ஒருவரைக் கூட என் வாளைத் தொட அனுமதித்ததில்லை.

Illustration by RBlack

கிரிக்கெட் குழுவில் சேர்வதற்கு முன்பாக என்னுடைய விடுமுறை நாட்களில், அப்பா வீட்டில் இல்லாத சமயமாகப் பார்த்து, வாளை எடுத்துக்கொண்டு சிங்கள இராணுவத்தினரைக் கொல்வதற்காகத் தென்னை மரத்திற்கும் கிணற்றுக்கும் நடுவேயிருந்த துணி துவைக்கும் கல்லில் ஏறுவேன். எனது வாளால் வெட்டி வீசப்பட்ட தலைகளின் எண்ணிக்கையின் அளவிற்கு ஈழப் போரில் சிங்கள இராணுவத்தினர் இறந்து போயிருந்தால், ஈழத்தின் வரலாறு வேறு ஒன்றாக இருந்திருக்கும். புலிகள் திருமூர்த்தி அணைப் பகுதியில் டிரெய்னிங் எடுத்த நாட்களில், எங்களுடைய மற்றொரு சித்தப்பா அவர்களைத் தூரத்திலிருந்து பார்த்திருப்பதாக ஈழப் போர் முடிந்த இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டில் என்னுடைய திருமணம் நடப்பதற்குச் சில நாட்களுக்கு முன்பு சொன்னார். துணி துவைக்கும் கல்லில் இருந்து இறங்கி, சிங்கள இராணுவத்தினரைக் கொன்ற பிறகும் ஆவேசம் அடங்காமல் நான் வாள் வீசும் வீச்சில் குரோட்டன்ஸ் செடியின் ஆட்டின் காதுகளைப் போலத் தொங்கும் இலைகளும், ரோஜா செடிகளின் காற்றில் அசையும் தலைப்பகுதியும், கொய்யா மரத்தின் கிளைகளும் காயமடையும். ஒரு கடலும், இலங்கையிலிருந்து பல நூறு கிலோமீட்டர்கள் தொலைவில் வசித்ததும், புலிகளோடு எப்படி இணைவதென்று தெரியாமல் போனதும் என்னை ஈழப் போரைத் தவறவிட்டவனாக்கிவிட்டன.

முதலில் யாரோ சொல்லியிருக்கிறார்கள், வீட்டில் ஆமை வளர்த்தால் குடும்பத்திற்கு ஆகாதென்று. என் அப்பா, நான் எவ்வளவோ மன்றாடியும் கேட்காமல் கிணற்றில் நீர் குறைவாக இருந்த நாளில் ஒரு பித்தளை பக்கெட்டைவிட்டு ஆமையைப் பிடித்து எங்கோ சென்று விட்டுவந்தார். அந்நாட்களில் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம். ஊரிலிருந்த எல்லாக் கிணறுகளும் வறண்டிருந்தன. கடல் எங்கள் ஊரிலிருந்து நெடுந்தொலைவு, குளங்கள் எங்கே இருக்கின்றனவென்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆமை மெதுவாக ஊர்ந்து நாய்களின் வாய்களுக்கும், கொளுத்திய வெய்யிலுக்கும் தப்பி ஏதோ ஒரு நீர்நிலையை அடைந்திருக்கும். அவ்வாறு நினைப்பதே எனக்குச் சமாதானமாக இருந்தது. பிறகு யாரோ சொல்லியிருக்கிறார்கள், வீட்டில் ஒற்றைத் தென்னை மரம் இருக்கக்கூடாதென்று. ஆட்களைப் பிடித்து வந்து தென்னை மரத்தையும் வெட்டினார். சிங்கள விமானப்படையிடமிருந்து தப்பிக்க நான் ஏறி ஒளிந்திருந்த தென்னை மரம். இன்னும் சில மாதங்களில் என் அப்பா வாங்கிய கடன்களுக்காக வீட்டை விற்றார்.

எங்கள் பெரியப்பா உடுமலைப்பேட்டைக்குக் கிழக்கே புதிதாக உருவான குடியிருப்புப் பகுதியில் ஒரு வீட்டைக் கட்டினார். இப்போது அதை வீடு என்கிறோம். ஆனால், அதை அவர் கட்டிய நாட்களில் எங்கள் தாத்தா பங்களா என்றே அழைப்பார். கத்திக் கூப்பிட்டாலும் கேட்காத தொலைவில்தான் வேறு வீடுகளும் இருந்தன. பாதுகாப்பிற்காக எங்கள் வீட்டிலிருந்த வாளை அவர் கேட்டுப் பெற்று எடுத்துச் சென்றுவிட்டார். ஆமை, வாள், செடிகள், மரங்கள், வீடு என எல்லாமும் கைவிட்டுப் போயின. அதன் பிறகு என்னுடைய கல்வியைத் தவிர வேறு எதையும் நான் கனவு கண்டிருக்கவில்லை. அதிலும் பெரும்பாலானவை கொடுங்கனவுகள்.

என்னுடைய மகன் காரின் முன்னிருக்கையில் சலுவாய் ஒழுக உறங்கிக்கொண்டிருந்தான். பெங்களூரிலிருந்து நாங்கள் காரில் கிளம்பியபோது பனிமூட்டம் முன்னே செல்லும் வாகனங்கள் தெளிவாகத் தெரியாதவாறு அடர்த்தியாக இருந்தது. பனிப்பாளமாகப் பிய்த்து எடுத்துக் கையில் வைத்துக்கொள்ளும் அளவிற்குக் கொட்டிய பனியில் காரின் முன் விளக்குகளை ஒளிரவிட்டுச் சூளகிரி வரையிலும் மெதுவாகவே ஓட்டினேன். சானமாவுக் காட்டின் மீது அசைந்த பனியைக் காட்டுவதற்காக என் மகனை எழுப்பினேன். நவீன் அவனது பெயர். கண்விழிக்க மறுத்தான். தன்னை எழுப்ப வேண்டாமென்று எரிச்சலாகச் சொன்னான். ஒரு சனிக்கிழமை அதிகாலையில் நாங்கள் இருவரும் உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாகக் கிடக்கும் எங்கள் பெரியப்பாவைப் பார்க்கச் சென்றதைக் காட்டிலும், அவர் வீட்டிலிருந்த வாளை எடுத்து வருவதுதான் எங்கள் பயணத்தின் முக்கியமான நோக்கமாக இருந்தது. அவரைப் பார்க்கச் செல்வதென்று முடிவு செய்தததும் பல ஆண்டுகள் கழித்து அந்த வாளின் நினைவு எனக்கு வந்தது. என் பதின்பருவத்தின் நினைவுச் சின்னத்தை மீண்டும் கைகளில் ஏந்திப் பார்க்கும் உணர்வினால் அதி உற்சாகத்தோடும், எங்கும் கவனக்குறைவாகவும் நடந்துகொண்டேன். அலுவலகத்திலும் வீட்டிலும் நான் வாள் வீசிய தினங்களின் கிளர்ச்சியை என் உடலில் உணர்ந்தேன். விடுதலைப் போராட்டம், கம்யூனிஸம், ஈழப் போர் என அனைத்தும் மறைந்து வரலாறாகவும், ஆமை, வீடு, கைவிட்டு நீரை அள்ளக்கூடிய அளவிற்குப் பெருகும் கிணறும் நினைவாக மாறிவிட்டன. கடந்துசென்ற ஆண்டுகளின் அடுக்குகளின் கீழேயிருந்து எழுந்த வாளின் நினைவு அறுபதாண்டுகளின் வரலாற்றின் நடுவே என்னை நிறுத்தியது. நான் இவை எவற்றையும் தற்போது பொருட்படுத்துவதில்லை. எனது அன்றாடத்தின் பக்கங்களில் எனது கட்டுப்பாட்டில் இல்லாதவையே அவற்றை எழுதி அழித்து மறுபடியும் எழுதிக்கொள்கின்றன. மூடுபனியிலிருந்து கார் வெளியே வந்ததும் நவீன் கண் விழித்தான். காலை உணவிற்கு அவன் முன்பே திட்டமிட்டு வைத்திருந்த உணவகத்தை அடைய இன்னும் எவ்வளவு நேரம் ஆகுமென்று கேட்டான்.

பெரியப்பாவின் வீட்டை அடையாளமே காண முடியாத அளவிற்குச் சுற்றிலும் வீடுகள் பெருகிவிட்டன. இரண்டு மூன்று முறை பெரியம்மாவின் செல்பேசிக்கு அழைத்து வழியைக் கேட்டே அவர்களது வீட்டை அடைந்தேன். கட்டிய நாட்களில் இருந்தே அமைப்பு மாறாமல் இருந்த வீட்டின் போர்டிகோவில், ஆறடி உயரத்தில், பருமனாக இருந்த எங்கள் பெரியப்பா உடல் இளைத்து, தளர்ந்து, காய்ந்த மூங்கிலைப் போல அமர்ந்திருந்தார். பெரியம்மா காஃபி போட்டுக் கொடுத்தாள், நவீனுக்குப் பால். பெரியப்பாவால் அதிகம் பேச முடியவில்லை. முகம் கருத்திருந்தது. வலது காலில் கட்டை விரல் நீக்கப்பட்டிருந்த இடத்தில் கட்டியிருந்த வெள்ளைத் துணியில் இரத்தம் கசிந்திருந்தது. நுரையீரலும் திறன் குறைந்து சில பத்தடிகள் நடந்தாலே மூச்சிரைப்பதாகவும், கழிவறைக்குப் போகும்போது கதவைத் தாழிடாமல்தான் போகிறார் என்றும் பெரியம்மா சொன்னாள். சிலமுறை அவராக எழ முடியாமல் (படுக்கையிலிருந்தும் மேற்கத்திய கம்மோடிலிருந்தும்) தான் தூக்கிவிடுவதாகவும் சொன்னாள். அவர்களுடைய ஒரே மகள் திருமணமாகி ஆஸ்திரேலியாவில் வசிக்கிறாள். இறப்பதற்காகக் காத்திருக்கும் ஒரு மனிதரின் முன் நவீன் அமைதியாக நாங்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தான். ரொம்பப் பொறுமையா இருக்கானே பையன், என்றாள் பெரியம்மா. எனக்குப் பெரியப்பாதான் அவனைக் காட்டிலும் பொறுமையாக இருப்பதாகத் தோன்றியது. உடல் வலுவிழந்து, வயோதிகத்தின் கால்களை இழுத்துக்கொண்டு, மூச்சிரைப்போடு ஒவ்வோர் இரவிலும் மரண பயத்தின் அறைகளின் வழியாக நுழைந்து உறக்கத்தை அடையும் ஒருவரின் காத்திருப்புதான் அசாத்தியப் பொறுமையால் நிரம்பியது. கற்றுக்கொள்வதற்கு ஏதுமில்லாத வெற்றுப் பொறுமை, தேர்ந்தெடுத்த ஒன்றல்ல, கட்டாயத்தினால் ஆனது.

அன்றிரவு நாங்கள் என்னுடைய மாமனாரின் வீட்டில் தங்கப் போவதாகப் பெரியம்மாவிடம் சொன்னேன். அடுத்த நாள் அதிகாலை பெங்களூருக்குக் கிளம்புவது எங்களுடைய திட்டம். சாயங்காலத்திற்குள் பெங்களூர் சேர்ந்துவிட்டால் திங்கட்கிழமை அலுவலகத்திற்குச் செல்வதற்கும், நவீன் பள்ளிக்குச் செல்வதற்கும் சிரமமின்றி இருக்குமென்று சொன்னேன். நாங்கள் அங்கே தங்க மாட்டோமென்று அவளுக்குத் தெரிந்தேயிருக்கும். யாரும் பேசாமல் இருந்த அமைதியான சமயத்தில் பெரியம்மாவிடம் அந்த வாளைப் பற்றிக் கேட்டேன். நவீனிடம் அதன் கதையைச் சொன்ன நாளில் இருந்து அதைத் தன்னோடு வைத்துக்கொள்ள வேண்டுமென்று நச்சரிப்பதாகச் சொன்னேன். பெரியப்பாவின் முகத்தில் எழுந்த சலனத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அமைதியாகக் கைகளைக் கோத்து அமர்ந்திருந்தார். பெரியம்மா பட்டென்று சொன்னாள்,

‘அது எங்கையோ ஸ்டோர் ரூம்ல குப்பைல கெடக்கது, உங்கப்பன் கிட்டயிருந்து அதை எடுத்துட்டு வந்த நாள்ல இருந்து ஒரு தடவை கூட அதைக் கையில தொடல உங்க பெரியப்பன். பட்டாளத்துல இருந்த உங்க சின்ன தாத்தனோட கத்திய பத்தரமா வெச்சிருந்த பெருமையத் தவுர வேற ஒரு பிரயோஜனமும் இல்ல. அது இருக்குதா, துருப்புடுச்சு பொடிப்பொடியா உதுந்து போச்சானு தெரியல. கடைசியா உங்கக்கா கல்யாணத்துக்கு வீட்டச் சுத்தம் செஞ்சப்போ பாத்தது. அத நீ எடுத்துட்டுப் போய் என்ன பண்ணுவ, ரெண்டு நாள் அதக் கொஞ்சுனதுக்கு அப்புறம் உங்க வீட்டுக் குப்பைல போட்டு வெச்சிருப்ப. உனக்கு வேணும்னா நீ தேடிப் பாரு’.

ஸ்டோர் ரூமில் நிறைந்திருந்த பொருட்களைப் பார்த்ததும் என்னால் வாளைத் தேட முடியாதென்று முடிவு செய்தேன். அறையைச் சுத்தம் செய்யவே எனக்கு ஒருநாள் ஆகியிருக்கும். நவீன் என் பின்னால் நின்றிருந்தான். மற்றொரு முறை வந்து எடுத்துக்கொள்வதாகச் சொல்லி அவர்களிடமிருந்து விடைபெற்றோம். ஒரு முதிர்ந்த பறவை உதிர்க்கும் கரிய இறகுகளால் இருமையடையத் துவங்கியிருந்த அவர்களுடைய வீட்டிலேயே அந்த வாள் கிடக்கட்டுமென்று நினைத்தேன்.

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!