பழைய கடவுள்
எதேச்சையாக நீட்டப்படும் தீபாராதனையிலிருந்து
கொஞ்சம் அள்ளி முகம் நனைத்தார்.
கொஞ்சம் அள்ளி முகம் நனைத்தார்.
பிறகு நினைவு திரும்பியதும் பூசிய திருநீறை அழித்துவிட்டு
அன்றைய நாள் துவங்குவதற்காகக் காத்திருந்த நபர்
சமீபத்தில்தான் குடும்பத்தோடு மதம் மாறியிருந்தார்.
நிரந்தரமின்மையைக் காணப் பழகிக்கொண்ட கண்களுக்குத் தாமதமாகத்தான் தெரிந்தது
ஒரு தினம் என்பது
எங்கிருந்துவேண்டுமானாலும் துவங்கக்கூடுமென.
மேலும்
ஓங்கி அறையும்போது ஆத்திரத்தில் உடன் பங்கெடுக்காமல் ஒப்புக்கு வந்துசெல்லும் ஆறாம் விரலைப்போலிருந்த
தனது பழைய கடவுளை
நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர்
இன்றுதான் சாலையில் எதிர்கொள்கிறார்.
அக்கணம் பரஸ்பரமான புன்னகையை
யார் முதலில் துவங்குவது என்கிற வீம்பு
இருவரிடமும் இருந்தது.
ஒரே ஒருமுறை உன்னை வீழ்த்திக்கொள்கிறேன்
கண்களை விரித்தநிலையில் நாக்கை நீட்டியபடி
உன் எதிரே வந்து குதிக்கும் எனது நோக்கம்
ஒன்றே ஒன்றுதான்
இந்தமுறை எப்படியேனும் உன்னைப் பயமுறுத்தியாக வேண்டும்
சரியாக உன் அரியணையில் நீ அசந்திருக்கும் நேரம் பார்த்து
நீ பரிபூரணமாய் நம்புமோர் உண்மையின் பின்புறம் ஒளிந்திருந்தபடி
ஒட்டுமொத்த அழுத்தத்தையும் மடைதிறந்தவாறு
திடீரென்றொரு கணத்தில் வந்துநின்று
அதுவரை நீ கெட்டியாகப் பிடித்திருந்தவொரு தீர்மானத்தை
அதுவே சரியென்று நம்பியிருந்தவொரு பற்றுதலை
வானமளக்க விரித்துக்காட்டும் என் பத்து விரல்களும்
உன் கண்முன்னேயே போட்டுடைத்துத் தலைகீழாக மாற்றிக்காட்டும்
அந்நேரம் அச்சத்தில் நிலைகுலைந்து முகம் வெளிறி
அசையாமலிருக்கும் உனக்கு
நடந்தது என்னவென்று விளங்குவதற்குள்
உன் சாம்ராஜ்ஜியங்கள் அனைத்தையும் நான்
மிச்ச மீதியின்றி வென்றிருப்பேன்
சரிதானே….
உனக்கும் இதில் பரிபூரண சம்மதம்தானே…