அரசியல் அதிகாரமே இறுதி இலக்கு

இலஞ்சி அ.கண்ணன்

 

“கோயில் நுழைவை ஒடுக்கப்பட்ட சாதியினர் விரும்புகிறார்களா, விரும்பவில்லையா? இந்தப் பிரதான கேள்வி இரண்டு சிந்தனைப் போக்குகளிலிருந்து அணுகப்படுகிறது. ஒன்று வாழ்க்கை நலன் பற்றிய கண்ணோட்டம். தங்களின் உயர்வுக்கு மிக நிச்சயமான வழி உயர்கல்வி, உயர் வேலைவாய்ப்பு மற்றும் நன்கு வாழ்வதற்கு நல்ல வழிகள் என்று ஒடுக்கப்பட்ட சாதியினர் நினைக்கின்றனர். சமூக வாழ்வில் நல்ல நிலையில் வைக்கப்படும்போது, அவர்கள் மதிக்கப்படுவர்; அவர்கள் மதிக்கப்படும்போது அவர்கள்பால் உள்ள சனாதன மதக் கண்ணோட்டம் மாற்றமடைவது நிச்சயம்; அது நிகழாவிடினும், அது அவர்களது வாழ்க்கை நலனுக்கு எந்தத் தீங்கையும் விளைவிக்காது. சிந்தனை வழியில் மேலும் சென்றால், கோயில் நுழைவு போன்ற வெற்று விஷயங்களில் தங்களின் சக்திகளைச் செலவழிக்க மாட்டார்கள். அதற்காகப் போராடுவதில் அவர்கள் அக்கறை கொள்ளாததற்கு வேறொரு காரணமும் உள்ளது. அது சுயமரியாதைப் பற்றிய வாதம்” என்கிறார் புரட்சியாளர் அம்பேத்கர்.1 அந்தச் சுயமரியாதை உணர்வின் காரணமாகவே தலித்துகள் எதிர்த்தாக்குதல் நிகழ்த்தாமல் அறவழியில் போராடிக்கொண்டிருக்கின்றனர், கல்வி ஒன்றையே தங்களின் மேலான ஆயுதம் என்று கருதி. மாறாக தலித்துகள் கொதித்தெழுந்தால், புரட்சியாளர் அம்பேத்கர் சொன்னதுபோல், இந்த நாடு தாங்காது என்பதுதான் நிதர்சனம்.

தலித் மக்களின் அடிப்படை உரிமையை நிலைநாட்டுவதற்குச் சட்டத்தின் உதவியை நாடினாலும்கூட இன்றுவரையிலும் போராடியே பெற வேண்டிய சூழல். இந்நிலை மற்ற எந்தச் சாதியினருக்கும் இல்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் குடிமக்களிடையே பாகுபாடு பார்க்கக் கூடாது என்று சொல்கிறது; சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது. ஆனால், அந்தச் சூழல் இங்கு இல்லை என்றே சொல்ல வேண்டும். இன்றைய காலகட்டத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்குப் பதிலாகச் சனாதனத்தின் ஆட்சியை நிலைநாட்ட துடித்துக்கொண்டிருக்கிறார்கள். அதன் காரணமாகவே மக்களிடையே பாகுபாடுகளை உருவாக்கி, மக்களின் ஒற்றுமையைச் சிதைத்துக்கொண்டிருக்கின்றனர். குஜராத் கலவரம் தொடங்கி இன்று அரங்கேறிக்கொண்டிருக்கும் மணிப்பூர் கலவரம் வரை அதுதான் நிதர்சனம். இவை யாவற்றுக்கும் சனாதனம்தான் மூல காரணம். இதன் தொடர்ச்சியாகத்தான் தமிழகத்தில், ஏன் ஒட்டுமொத்த இந்தியாவிலும் திட்டமிட்டு தலித் மக்கள் மீது தீண்டாமைக் கொடுமைகள் அரங்கேற்றப்படுகின்றன. ஆட்சியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் தலித் மக்கள் மீது நடத்தப்படுகிற சாதிய வன்கொடுமைகளைக் கண்டுகொள்வதில்லை. தலித்துகளின் போராட்டங்களும் குறைந்தபாடில்லை.

“தெய்வீக ஆட்சியின் இந்து முறை அமைப்பானது ஓர் எழுதப்பட்ட அரசியல் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ளது; அதைத் தெரிந்துகொள்ள விரும்பும் எவரும் மனுஸ்மிருதி என்ற புனித நூலில் அவை தெளிவாக்கப்பட்டுள்ளதைக் காணலாம்; நுணுக்கமான விவரத்துடன், இந்துக்களின், மத, ஆசார, சமுதாய வாழ்வினை ஆளும் விதிகளை எடுத்துரைக்கும் ஒரு தெய்வீக நெறிமுறையாகும் அது; அதனை இந்துக்களின் விவிலியம் என்று கருதலாம். இந்து மதத் தத்துவமே அதில் அடங்கியுள்ளது” என்று புரட்சியாளர் அம்பேத்கர் சொல்கிறார்.2 இதை மெய்ப்பிக்கும் வகையில் சமீபத்தில் குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு ஒன்று உள்ளது. பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட 17 வயது பெண்ணின் கருவைக் கலைக்க அனுமதி கோரி அவரது பெற்றோர் நீதிமன்றத்தை நாடிய சூழலில், வழக்கை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி சமீர் தவே, ‘‘அந்தக் காலத்தில் பெண்கள் 14 – 15 வயதில் திருமணம் செய்துகொள்வதும், 17 வயது ஆவதற்குள் குழந்தைப் பெற்றுக்கொள்வதும் இயல்பானதுதான். வேண்டுமானால் மனுஸ்மிருதி நூலைப் படித்துப் பார்த்து இதை உறுதி செய்துகொள்ளுங்கள்’’ என்றிருக்கிறார். சிதம்பரத்தில் தீட்சிதர் குடும்பத்தில் அரங்கேற்றப்பட்ட குழந்தைத் திருமணத்தையும், அதற்கு ஆதரவாகத் தமிழக ஆளுநரின் செயல்பாட்டையும் இதனுடன் பொருத்திப் பார்க்கலாம். இந்திய அரசியலமைப்புச் சட்டம் பெண்களின் திருமண வயது 18 என்கிறது. அதையும் 21ஆக உயர்த்தும் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்தகைய சூழலில் இந்திய அரசமைப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் வேலையைத்தான் சனாதனிகள் செய்துகொண்டிருக்கிறார்கள். அதற்குச் சூத்திரர்களாகிய இடைநிலைச் சாதியினர் முட்டுக்கொடுத்துக்கொண்டிருகின்றனர். இதனால்தான் இந்தியாவில் நடந்துகொண்டிருப்பது சனாதனத்தின் ஆட்சி என்கிறோம். சாதியப் பிரச்சினைகள் பற்றி ஆளுகின்றவர்களுக்கு எந்தவோர் அக்கறையும் இல்லை. இன்றும் இப்பிரச்சினைகள் தொடர்வதற்கு இதுவே காரணம்.

இதனுடைய நீட்சியே, இன்றுவரையிலும் நாறிக்கொண்டிருக்கும் வேங்கைவயல் நிகழ்வு; விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் அருள்மிகு தர்மராஜா திரெளபதி அம்மன் கோயிலுக்குள் தலித் இளைஞர் சென்றதற்காகச் சாதி வெறியர்கள் அவரையும் அவரது குடும்பத்தையும் தாக்கிய நிகழ்வு; மதுரை திருமோகூரில் தலித் மக்களின் மீதும், அவர்களின் உடைமைகள் மீதும் அரங்கேற்றப்பட்ட சாதிவெறி தாக்குதல்; மதுரை உசிலம்பட்டியில் தலித் குழந்தைகள் பள்ளிக்குச் சென்றுவரும் பொதுப் பாதையை அடைத்த நிகழ்வு எல்லாம்.

பொதுவாக இந்து மதத்தைக் கட்டிக் காத்துக்கொண்டிருக்கிற சூத்திரர்களாகிய இடைநிலைச் சாதியினரது வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் இந்து மதம் கட்டுப்படுத்துகிறது. அதனால்தான் தலித் மக்கள் பொதுப் பாதையில் நடப்பதையும், பொதுச் சுடுகாட்டில் நல்லடக்கம் செய்வதையும், பொதுக் கோயிலுக்குள் நுழைவதையும், பொதுவானவற்றில் தங்களுக்கான சம உரிமையைக் கோருவதையும் ஏற்க மறுத்து வன்கொடுமைகளை நிகழ்த்துகிறது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் நடைமுறையில் இருந்தபோதும்கூட இது தொடர்வது, அச்சட்டம் இன்னும் முறையாகக் கையாளப்படவில்லை என்பதையே காட்டுகிறது. இதனால்தான் குற்றவுணர்ச்சியே இல்லாமல் சக மனிதர்கள் மீதே தீண்டாமைக் கொடுமைகளை நிகழ்த்த முடிகிறது.

விழுப்புரம் மாவட்டம், வளவனூர் மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள, தமிழக இந்துச் சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான திரெளபதி அம்மன் கோயிலுக்குள், கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி தலித் இளைஞர் ஒருவர் சென்றதற்காக, சூத்திரர்களாகிய இடைநிலைச் சாதியினரால் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார். அதைத் தடுக்க முயன்றவர்களும் தாக்கப்பட்டிருக்கிறார்கள். மேற்கண்ட கோயிலானது அரசிற்குச் சொந்தமான பொதுக்கோயில். அக்கோயிலுக்குள் நாயும் பூனையும் செல்கிறபோது, ஏன் இந்தியக் குடிமக்களாகிய தலித்துகள் செல்வதற்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுகிறது. இப்போக்குத் தீண்டாமை வன்கொடுமை இல்லையா? கோயிலுக்குள் செல்ல விடாமல் தடுத்தவர்களையும் கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களையும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏன் கைது செய்யவில்லை?

அவர்களைக் கைது செய்ய வலியுறுத்தித்தான் முதலில் அப்பகுதி தலித் மக்கள் சாலை மறியலில் ஈடுபடுகிறார்கள். ஆனால், இன்றுவரையிலும் தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. மேலும் ஒவ்வோர் ஆண்டும் பத்து நாட்கள் நடைபெறும் திரெளபதி அம்மன் கோயில் திருவிழாவுக்காகத் தலித் மக்களிடமிருந்தும் வரி வசூல் செய்யப்படுகிறது. ஆயினும் இம்மக்கள் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயிலுக்குள் சென்று வழிபட அனுமதி மறுக்கப்படுகிறது, தலித் என்கிற ஒற்றைக் காரணத்தினால். இக்கோயிலானது 1978ஆம் ஆண்டு முதலே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் குறிப்பிட்ட சாதியினர் ஆதிக்கத்தின் கீழ்தான் இருக்கிறது. இதுபோல இன்னும் பல கோயில்கள் தமிழகத்தில் இருக்கின்றன. சனநாயக நாட்டில் கடந்த பத்தாண்டுகளுக்குப் பிறகு பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் பஞ்சாயத்துகளில் தேர்தல்கள் நடைபெற்றாலும் அங்குள்ள தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள் பெயருக்கு மட்டுமே தலைவர் என்கிற நிலை நீடிப்பதைப் போல என்றுதான் சொல்ல வேண்டும்.

மேல்பாதி தலித் மக்கள் கூறுவது என்னவென்றால், “எங்க பிள்ளையை ஏன் அடிச்சாங்க, கோயிலுக்குள் போனதாலதானே அடிச்சாங்க. அதனால இப்ப நாங்க எல்லாரும் கோயிலுக்குள் போகணும். இல்லன்னா எங்க பிள்ளையை அடிச்சவங்கள கைது பண்ணுங்க.” இதுதான் பாதிக்கப்பட்ட தலித்துகள் முன்வைக்கும் கோரிக்கை. அவர்கள் ‘எங்களைக் கோயிலுக்குள் அழைத்துச் செல்லுங்கள்’ என்று போராட்டம் செய்யவில்லை. மாறாக, ‘கோயிலுக்குள் சென்ற எங்கள் வீட்டுப் பிள்ளையைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்’ என்றுதான் போராடுகிறார்கள்.  அவர்களைக் கைது செய்வது சாத்தியப்படாத சூழலில்தான் கோயில் நுழைவை முன்னெடுக்கிறார்கள். சாதிப் பித்தர்களும் அவர்களைக் கோயிலுக்குள் விடமாட்டோம் என்கிறார்கள். இப்பிரச்சினை தொடர்பாக அரசு சார்பில் நடைபெற்ற ஏழு சமாதானக் கூட்டங்களும் தோல்வியடைந்திருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இறுதியாக அங்கு பதற்றமான சூழல் நிலவவே, கோயிலுக்குள் அழைத்துச் செல்லுங்கள் என்கிற தலித் மக்களின் அடிப்படை உரிமைக்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகக் கோயிலுக்குச் சீல் வைக்கப்பட்டது. இது பெரிய அநீதி, அபத்தம்.

அன்று  ஊதிய உயர்வு கேட்டுப் போராடிய மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மீது தாமிரபரணியில் கொலைவெறி தாக்குதல் நடத்தி 17 உயிர்களைப் படுகொலை செய்த அரசுகள்; காரணையில் பஞ்சமி நில மீட்புப் போராளிகளைப் படுகொலை செய்த அரசுகள்; பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவுநாளின்போது துப்பாக்கிச் சூடு நடத்தி 6 பேரைப் படுகொலை செய்த அரசுகள்; தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அறவழியில் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரைப் படுகொலை செய்த அரசுகள் இன்று சமூகத்தில் பதற்றம் ஏற்பட்டுவிடும் என்கிற காரணத்தால் மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலுக்குச் சீல் வைத்தது வேடிக்கையாகவே இருக்கிறது. அதற்காகக் காவல்துறை தூப்பாக்கிச் சூடு நடத்தி நீதியை நிலைநாட்ட வேண்டுமென்பது பொருளல்ல. மாறாக, எத்தனையோ போராட்டங்களில் வரம்பு மீறி, நீதியை நிலைநாட்டிய காவல்துறையாலும் மாவட்ட நிர்வாகத்தாலும் மேல்பாதியில் ஏன் முடியாமல் போனாது என்பதுதான் வியப்பாய் இருக்கிறது.

உரிமை மறுக்கப்பட்டவர்களுக்கான அடிப்படை உரிமையை நிலைநாட்டுவதுதானே சமூகநீதி. மாறாக, சீல் வைப்பது எப்படிச் சமூகநீதியாகும். தமிழகத்தில் எத்தனையோ கோயில்களில் தலித் சமூக மக்கள் சென்று வழிபட முடியாத நிலை இருக்கிறது. அத்தனை கோயில்களுக்கும் அரசால் சீல் வைக்க முடியுமா? அப்படியே சீல் வைத்தாலும் மறுக்கப்பட்டவர்களின் உரிமைகள் எவ்வாறு நிறைவேற்றப்படும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. “சாதி முறையை அழிக்காமல் தீண்டாமையை ஒழிக்கலாம் என்று நம்புவது சற்றும் பயனற்றது. சாதியும் தீண்டாமையும் வெவ்வேறானவை என்ற கருத்துத் தவறானது. இரண்டும் ஒன்றைவிட்டு மற்றது பிரிக்க முடியாதவை. சாதி முறையின் நீட்சியே தீண்டாமை. இரண்டும் பிரிந்து நிற்க முடியாது. இரண்டும் சேர்ந்தே நிற்கின்றன, சேர்ந்தேதான் வீழும்” என்கிறார் புரட்சியாளர் அம்பேத்கர்.3

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பெரும்பாலான சாதிய மோதல்கள் கோயில் விவகாரம் தொடர்பாகவே அரங்கேற்றப்பட்டன என்பதற்குச் சான்றுகள் உள்ளன. அதில் “கண்டதேவி, உத்தபுரம், சுந்தம்பட்டி, பாப்பாப்பட்டி போன்றவை சமகாலத்திய போராட்டங்கள். பொதுவாகவே தலித்துகள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ள தற்போதைய சூழலில் மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களின் 85 ஊராட்சிகளைச் சார்ந்துள்ள கோயில்களில் கள ஆய்வு ஒன்றை நடத்தியுள்ள எவிடன்ஸ் என்னும் அரசுசாரா நிறுவனம், கோயில்களில் தலித்துகளுக்கு மறுக்கப்பட்டுவரும் உரிமைகள் குறித்துப் புள்ளிவிவரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. 85 ஊராட்சிகளில் உள்ள 69 கோயில்களில் தலித்துகள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 72 கோயில்களின் சன்னிதானமும் 56 கோயில்களில் அர்ச்சனையும் மறுக்கப்படுகின்றன. 54 கோயில்களின் தேர்கள் தலித் பகுதிகளில் வலம்வருவது தடைசெய்யப்பட்டுள்ளது. 52 கோயில்களில் பரிவட்டம் மறுக்கப்பட்டுள்ளது. 33 கோயில்களில் தலித்துகள் வடம் தொடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில்களில் தலித்துகள் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை செய்யப்பட்டுள்ளது. பால்குடம் எடுப்பது, தீச்சட்டி ஏந்துவது போன்ற சடங்குகளின்போது கோயில்களில் பாகுபாடு காட்டப்படுகிறது. பாதிரியார்கள், பூசாரிகள் பாகுபாடு காட்டப்படும் கோயில்கள் 65 என்கிறது அப்புள்ளி விவரம்.4 இதன்படி தமிழகத்தில் தலித் மக்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட அத்தனை கோயில்களையும் ஒட்டுமொத்தமாக இழுத்து மூடி சீல் வைப்பது சாதிய தேசத்தில் சாத்தியமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

Art by Negizhan

 

‘நாங்கள் இந்துக்கள் அல்ல பௌத்தர்கள்’ என்று அறைகூவல் விடும் தலித் மக்கள் கோயில் நுழைவை ஒரு பொருட்டாகக் கருதக்கூடாது. அடிப்படை உரிமை என்று வரும்போது அதை விட்டுக்கொடுக்கவும் கூடாது. இதை வலியுறுத்திதான் புரட்சியாளர் அம்பேத்கர் கலாராம் ஆலய நுழைவு பற்றி இவ்வாறு கூறுகிறார், “இன்று நாம் ஆலயத்தில் நுழைய இருக்கிறோம். இந்தக் கோயிலில் நுழைவது, பிரச்சினை முழுவதையும் தீர்த்து வைக்காது. நமது பிரச்சினை பன்முகத்தன்மை கொண்டது. நமது பிரச்சினை அரசியல், சமூக, மத, பொருளாதார, கல்வி முதலியவற்றைக் கொண்டது. கலாராம் கோயில் நுழைவு இந்து மனதிற்கு ஒரு வேண்டுகோள் ஆகும். காலங்காலமாகச் சாதி இந்துக்கள் நமது உரிமையைப் பறித்தனர். இந்தக் கோயில் நுழைவுச் சத்தியாக்கிரகம் எழுப்பும் பிரச்சினை இந்துக்கள் நமது மனிதாபிமான உரிமையை அளிப்பார்களா என்பது. உயர்சாதி இந்துக்கள் நம்மைக் கேவலப்படுத்திப் பூனை, நாய்களைவிடவும் மோசமாக நடத்தினர். மனிதன் என்ற உரிமையை இந்துக்கள் நமக்கு அளிப்பார்களா என்று நாம் அறிந்துகொள்ள விரும்புகிறோம். இந்தக் கேள்விக்குச் சத்தியாக்கிரகம் பதில் அளிக்கும். உயர் சாதி இந்துக்களிடையே ஒரு மனமாற்றத்தைக் கொண்டுவருவதற்குச் செய்யப்படும் முயற்சிகளில் சத்தியாக்கிரகமும் ஒன்று. எனவே இந்த முயற்சி வெற்றி பெறுவது இந்து மனோநிலையைப் பொறுத்து இருக்கும். மனிதன், மனிதனாக நடத்தப்பட வேண்டும். அவனுக்கு (மனிதாபிமான) மனித உரிமைகள் அவசியம் அளிக்கப்பட்ட வேண்டும்… இந்த இலட்சியத்தை அடைவதற்காக நாம் சத்தியாக்கிரகத்தைத் துவக்கியுள்ளோம்”5 என்றார். இதனோடு ஒப்பிட்டுத்தான் மேல்பாதி தலித் மக்களின் “கோயிலுக்குள் செல்வது எங்களுக்குப் பிரச்சினை இல்லை. எங்கள் பிள்ளையைத் தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுங்கள்.” என்கிற கோரிக்கையைப் பார்க்க வேண்டும்.

ஆய்வாளரும் பேராசிரியருமான ஸ்டாலின் ராஜாங்கம், “சாதி அமைப்பை இந்துக்கள் ஒவ்வொருவரும் தங்கள் ‘சொந்த நம்பிக்கை’ என்றே நியாயப்படுத்திவருகின்றனர். இந்நம்பிக்கைக்கு எதிரான போராட்டம்தான் இங்கு சாதி எதிர்ப்புப் போராட்டத்தின் தொடக்கமாகும். சாதி இந்துக்கள் தரப்பை எளிதில் பகைத்துக்கொள்ள விரும்பாத கட்சிகளும் அரசும் அவர்களுக்கே ஆதரவாய் நடந்துகொள்கின்றன” என்கிறார்.6 இதுதான் நடப்பியல் உண்மை.

தலித் மக்கள் தங்களது உரிமைக்காகப் போராடுகிறபோது அவர்கள் மீதான காவல்துறையினரின் அடக்குமுறைச் செயல்களும் அவர்களைத் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் அரசுகளின் செயல்பாடுகளும் இதைத்தான் உணர்த்துகின்றன. பொதுவாக அரசுத் துறைகளில் நிலவுகிற சாதிய மேலாதிக்க மனப்பான்மை ஆளுகிற அரசுகளுக்குத் தெரியாத ஒன்றல்ல. உண்மையைச் சொல்லப் போனால் அதனூடாகவே அரசும் சாதியவாதிகளைத் தன்வசப்படுத்திக்கொள்கிறது. பொதுவாக, தமிழக காவல்துறையில் புரையோடிப்போயுள்ள சாதிய ஆதிக்கம் பற்றி ஆய்வு செய்யப்படும்போதுதான் காக்கிச் சீருடை அணிந்த சாதிப் பற்றாளர்களை இனங்காண முடியும். இயல்பாகவே போராடுவதற்கான தேவையைத் தன்னுள் கொண்டிருக்கும் தலித்துகள் காவல்துறையினரால் தொடர்ந்து மோசமாக நடத்தப்படும் சூழலில், தலித் மக்கள் போராடும்போது பாதுகாப்புப் பணிக்குச் செல்லும் காவல்துறையினர் பற்றிய கவனமும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஏனெனில், அத்தகைய சூழலில் திட்டமிட்டே வன்முறையைக் கட்டவிழ்த்து, போராடிய மக்கள் மீது தூப்பாக்கிச் சூடு நடத்தி, அரச பயங்கரவாத படுகொலைகளை நிகழ்த்திய நிகழ்வுகள் இங்கு ஏராளம்.

இதை உணர்ந்தே புரட்சியாளர் அம்பேத்கர், “ஒரு பக்கத்தில் தீண்டப்படாத வகுப்பினருக்கும் மறுபக்கத்தில் இந்துக்களின் மேல்சாதியினருக்கும் இடையே நடைபெறும் எந்தப் போராட்டத்திலும் காவல்துறை கொடுங்கோலான பெரும்பான்மைக்கு ஆதரவாகத்தான் எப்போதும் பிரயோகிக்கப்படுகிறது. இதற்கான எளிமையான காரணம், நாட்டின் காவல்துறையிலோ நீதித் துறையிலோ தீண்டப்படாத வகுப்பினருக்கு எந்த இடமும் இல்லாததுதான்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.7

நமக்கான இசம் எது?

நம்முடைய தலித்தியச் சிந்தனையாளர்கள் சாதியப் பிரச்சினைகளுக்கான தீர்வு மார்க்சியத்திலும் கம்யூனிசத்திலும் சோஷலிசத்திலும் இருக்கிறது என்று நம்புகிறார்கள். இது எப்படிச் சாதிய தேசத்தில் சாத்தியமாகும் என்பது புரியவில்லை. அதுவும் அரசியல் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்து, சனாதனச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவர துடிக்கிற பிராமணியம் இருக்கும் நாட்டில். அதன் காரணமாகவே தங்களுக்குள் பல்வேறு முரண்களுடன் ஒருவரை ஒருவர் பகைத்தும் கொள்கின்றனர். எனவே தலித்துகள் முதலில் தங்களுக்கான இசம் எது என்பதில் தெளிவுபெற வேண்டும். அதற்காக மற்ற இசங்களை அப்படியே புறந்தள்ள வேண்டும் என்பதல்ல. நமக்கான நட்பு சக்திகளோடு இணைந்து செயலாற்றலாம். அதுவும் நமக்குப் பயன் தருவதாக இருந்தால் மட்டுமே. மற்றபடி தனிப்பட்ட முறையில் நமக்கான இசம் என்பது அம்பேத்கரிசமாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில், சாதிய தேசத்தில் அம்பேத்கரிசம்தான் சாதியினால் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கான தீர்வுகளையும் அதிலிருந்து விடுதலைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளையும் அளிக்கும். ஏனைய இசங்களோடு நட்பு பாராட்டிக்கொள்ளலாமே தவிர, அதனால் இங்கு நிலவுகிற சாதிய மனநோய்க்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது.

முதலில் சிதறிக் கிடக்கிற தலித் தலைவர்கள் ஒன்றிணைந்து செயலாற்ற முன்வர வேண்டும். அப்போதுதான் தலித்தியம் இங்கு சாத்தியமாகும். சமூகத்திற்காகப் பணியாற்ற வந்தவர்கள் முதலில் அந்தச் சமூகப் பிரச்சினைகளுக்காக ஒன்றிணைந்து குரலெழுப்ப வேண்டும். இது பல்வேறு அரசியல் கட்சிகளில் அங்கம் வகிக்கும் தனித்தொகுதி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொருந்தும். இவர்கள்தான் இச்சமூகத்தின் முதல் சாபக்கேடு என்று சொன்னால் கூட அது மிகையாகாது.

நமக்குள் ஆயிரம் சண்டைச் சச்சரவுகள் இருக்கலாம். ஆனால், அதைப் பொதுவெளிக்குக் கொண்டுவருவது அம்பேத்கர் இழுத்துவந்த தேரை முன்னகர்த்தி இழுத்துச் செல்வதற்கு ஒருபோதும் பயனளிக்காது. தலைவர்களுக்குள்ளே ஒற்றுமை இல்லாவிட்டால் எங்ஙனம் தொண்டர்களிடமும் மக்களிடமும் ஒற்றுமை இருக்கும். இது நம் விடுதலைக்கு வழிவகுக்காது.

எது நமக்கான திறவுகோல்

சாதியக் கட்டமைப்புப் பற்றியும் அதனுடைய விளைவுகள் பற்றியும் அதனால் பாதிக்கப்பட்டவர்களால்தான் சிந்திக்க முடியும். ஏனெனில் அடிப்பட்டவர்களுக்குத்தான் வலி புரியும். மாறாக, நீண்ட காலமாகச் சாதியமைப்பின் பலனை அனுபவித்துக்கொண்டிருப்பவர்களுக்கு அது பற்றிய அக்கறை இருக்காது. அதை நாம் அவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதும் காலவிரயம்தான். பொதுவாக, சாதியற்றச் சமூகம் என்பது தலித்துகளுக்கானது. எனவே, தலித்தியத்தின் வெற்றி என்பது, சாதியால் பாதிக்கப்பட்ட அனைவருக்குமாகப் போராடுவதில்தான் அமைந்திருக்கிறதே தவிர, சுயசாதி உணர்வினால் அல்ல என்பதை உணர்ந்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நாம் ஒன்றிணைவதின் மூலமே நமக்கான அதிகாரத்தை அடைய முடியும். அந்த அதிகாரம் டாக்டர் அம்பேத்கர் சொன்னது மாதிரி அரசியல் அதிகாரமாக இருக்க வேண்டும். அரசியல் அதிகாரமே அனைத்திற்குமான திறவுகோல். அதன்மூலம் மட்டுமே தலித் மக்களின் முன்னேற்றத்திற்குத் தடையாகவுள்ள அத்தனை கதவுகளையும் உடைத்தெறிய முடியும்.

உதாரணமாக மான்யவார் கன்ஷிராம் தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் வளர்ச்சியை எடுத்துக்கொள்ளலாம். நம்முடைய நோக்கத்தை நிறைவேற்ற நாம் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லலாம். நமக்கு நம்முடைய இலக்குதான் முக்கியம். அந்த வகையில், மான்யவார் கன்ஷிராம் மலேசியாவில் ஆற்றிய உரையில், ‘1983ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி உத்தரப்பிரதேசத்தில் 425 இடங்களுக்கு 410 இடங்களில் வெற்றி பெற்றது. 1985ஆம் ஆண்டு போட்டியிட்ட 425 இடங்களில் 265 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. 145 இடங்களைப் பகுஜன் சமாஜ் கட்சியால் இழந்தது. இந்த இழப்பால் கோபமடைந்த காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சியைச் ‘சமார்களின் கட்சி’ என்று பிரச்சாரம் செய்யத் தொடங்கியது. இது சமார்கள் மத்தியில் பகுஜன் சமாஜ் கட்சி வளர பேருதவியாய் இருந்தது. 1985ஆம் ஆண்டு நாம் 2 சதவீத வாக்குகள் பெற்றோம். 1989இல் 9 சதவீத வாக்குகளாய் உயர்ந்தது. 1991இல் 11 சதவீதமாகவும் 1993ஆம் ஆண்டு 20.6 சதவீதமாகவும் வளர்ச்சியடைந்தது. 1996ஆம் ஆண்டு தேர்தலில் 29 சதவீத வாக்குகளைப் பெற்றோம். நாங்கள் சாதியைப் புறக்கணிக்கவில்லை; அதனைக் கவனத்தில் கொண்டு கையாளக் கற்றுக்கொண்டோம்’ என்கிறார். இக்கூற்றில் நாம் கவனிக்க வேண்டியது ‘சாதியைக் கவனத்தில் கொண்டு அதைக் கையாளக் கற்றுக்கொண்டோம்’ என்பதைத்தான். சாதியைக் கையாளுவது என்பதைச் சாதியால் புறக்கணிக்கப்பட்ட அனைவரையும் ஒரே குடையின் கீழ் அமைப்பாய்த் திரட்டுவது என்பதாகத்தான் பொருள் கொள்ள வேண்டும். அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியதன் மூலமாகத்தான் அன்றைக்கு உத்தரப் பிரதேசத்தில் மாயாவதியால் தலித் மக்களுக்குத் தேவையான பல திட்டங்களைத் துணிச்சலாகக் கொண்டுவந்து நிறைவேற்ற முடிந்தது; தலித் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடிந்தது; சாகு மகாராஜ், மகாத்மா புலே, புரட்சியாளர் அம்பேத்கர் பெயர்களில் பல்கலைக்கழகங்களை அமைக்க முடிந்தது.

காலத்தின் கட்டாயம் அமைப்பாகுதல்

“ஓர் அமைப்பை அல்லது கட்சியை வழிநடத்தக்கூடிய தலைவர்கள், பொறுப்பாளர்கள், களப்பணியாளர்கள் யாவரையும் அரசியல்படுத்துவதுதான் ‘அமைப்பைக் கட்டும்’ செயல்திட்டத்தின் அடிப்படையாகும். அமைப்பை வழிநடத்துவோரை அரசியல்படுத்தாமல் அதனை வடிவாக்கமும் வலுவாக்கமும் செய்ய இயலாது. அரசியல்படுத்தப்பட்ட பொறுப்பாளர்களால் வழிநடத்தப்படும் அமைப்பால்தான் அமைப்பாக்கப்பட வேண்டிய மக்களை அடையாளம் காணவும் முடியும்; அவர்களை அரசியல்படுத்தி அணிதிரட்டவும் முடியும்” என்கிறார் முனைவர் தொல்.திருமாவளவன்.8 இதை ஒவ்வொரு தலித் செயற்பாட்டாளர்களும் கவனத்தில் கொண்டு செயல்பட்டால் நிச்சயமாக நம் இலக்கை அடையலாம். களப்பணியாளர்களுக்குச் சமூகம் பற்றிய புரிதல் ஏற்பட்டுவிட்டால், வெகு மக்களிடத்திலும் அதை எளிதாகக் கடத்திவிட முடியும். அது சாத்தியப்படும்போது அமைப்பாக்குதல் எளிமை பெறும். இங்கு சாதியால் புறக்கணிக்கப்பட்டவர்களை அமைப்பாக்குவதுதான் பெரும் பிரச்சினையாகவும் தடையாகவும் இருக்கிறது. எனவே, மக்களை முதலில் அரசியல்படுத்த வேண்டும். அதுவே அமைப்பாக்கச் செயல்திட்டத்தின் இன்றியமையாத தேவையாகும்.

நம்மைச் சுரண்டுபவர்களுக்கு எதிராக அணிதிரள வேண்டியது தவிர்க்கவியலாத ஒன்று. அதே சமயம்  சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டவர்களை அமைப்பாக்குவதும் எளிதல்ல. அவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை அமைப்பாக்குவதில்தான் நம்முடைய வெற்றி இருக்கிறது. அந்த வெற்றியின் ஊடாகவே நாம் அரசியல் அதிகாரத்தை நுகர முடியும்.

“‘உழைப்பவன் உயிர்வாழ மட்டுமே தகுதியுடையவன்; ஏனென்றால், உயிர் வாழ்ந்தால்தான் அவன் தொடர்ந்து உழைக்க முடியும்’ என்கிற கருத்தை உள்ளடக்கியதுதான் பாசிசத்தின் அடிப்படையாகும்” என்கிறார் முனைவர் தொல்.திருமாவளவன்.9 உழைப்பவன் வாழ்நாள் முழுமைக்கும் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும். மற்ற எதன் மீதும் அவனுக்கு நாட்டம் ஏற்பட்டுவிடக்கூடாது. அவ்வாறு ஏற்பட்டுவிட்டால் அவன் தன்னை உணர்ந்துகொள்வான். எனவே அவனை மேலெழும்பவிடாமல் இருக்கச் செய்வதுதான் பாசிசத்தின் தத்துவம். அதன் காரணமாகவே பள்ளிப் பாடத்திட்டத்தில் கூட தொழிலை அடிப்படையாக வைத்து அவர்களின் சாதியை நிர்ணயிப்பது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

இத்தகைய செயல்களிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்வதற்கு அரசியல் அதிகார வலிமையைப் பெற்றாக வேண்டும். அரசியல் அதிகாரம் நம்முடைய கைகளுக்கு வருகிறபோதுதான், நமக்கான சட்டத்தை இயற்றும் அதிகாரத்தை பெற முடியும். அதன் வழியே நம் மீது திட்டமிட்டு ஏவப்படும் வன்கொடுமைகளுக்கும் அநீதிகளுக்கும் தீர்வு காண முடியும். இது சாத்தியப்பட வேண்டும் என்றால் நமக்குள் இருக்கும் முரண்களை விட்டுவிட்டு நாம் அணிதிரள வேண்டும்.

அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும்போதுதான் மறுக்கப்பட்டவர்களுக்கான சனநாயகப் பரவலாக்கம், சமத்துவத்தை நிலைநாட்டும் நடைமுறையாக மாறும். எனவே, அதிகாரம் மறுக்கப்பட்ட அனைத்து தரப்பினரையும் அமைப்பாக்குதல் காலத்தின் கட்டாயமாகும். ஏனெனில், சமத்துவ சனநாயகப் பார்வையின் பிறப்பிடமே தலித்துகள்தாம்.

 

குறிப்புகள்

  1. அம்பேத்கர் நூல் தொகுதி 35 பக்-264.
  2. அம்பேத்கர் நூல் தொகுதி 9.
  3. அம்பேத்கர் நூல் தொகுதி 9 பக்-153.
  4. ‘சாதியம்: கைகூடாத நீதி’, ஸ்டாலின் ராஜாங்கம், பக்-52.
  5. அம்பேத்கர் நூல் தொகுதி 35 பக்-244.
  6. ‘சாதியம்: கைகூடாத நீதி’, ஸ்டாலின் ராஜாங்கம், பக்-27.
  7. அம்பேத்கர் பேச்சும் எழுத்தும், தொகுதி 4 பக்-200.
  8. ‘அமைப்பாய்த் திரள்வோம்’, தொல்.திருமாவளவன், பக்-7
  9. மேலது, பக் – 53.

l [email protected]

 

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger