மூக் நாயக்

- உதயகுமார் விஜயன்

 

1920 ஜனவரி 31 அன்று பாபாசாகேப் அம்பேத்கர் மூக்நாயக் இதழைத் தொடங்கினார். எந்தவொரு செயல்திட்டத்தையும் தொடங்குவதற்கு முன் அப்பணியை மேற்கொள்வதற்கான அவசியமென்ன என்று ஒரு நெடிய குறிப்பைத் தருவது பாபாசாகேப் அவர்களின் பாணி. தொகுப்பாக வெளிவந்துள்ள அவரது பல ஆய்வுக்கட்டுரைகளுக்கு அவரெழுதிய முன்னுரைகளே சான்று. சாதியக் கட்டுமானங்கள் வலுவாக இருக்கும் இந்தியாவில் வேறொருவரையும் விட ஒரு தலித்தாக தன் இயங்குதளம் தனித்துவமாக இருக்க வேண்டிய அவசியமென்ன என்பதை ஒவ்வொரு முறையும் பதிவு செய்தே வந்திருக்கிறார். மூக்நாயக் இதழ் தொடங்கப்பட்டு அதன் முதல் கட்டுரையிலும் அவர் அது குறித்து விவரிப்பதைக் காணலாம்

தலித்துகள் தங்களுக்கெனத் தனித்துவமான இயங்குதளத்தை உருவாக்கிக்கொள்ளும் ஒவ்வொரு சூழலிலும் அவர்கள் தங்களைப் பொதுச் சமூகத்திலிருந்து அதன் வழியாகத் துண்டித்துக் கொள்கிறார்கள் என்று விமர்சிக்கப்படுவதுண்டு. காந்தி காலத்திலிருந்து இன்றுவரை அது தொடர்கிறது. தின்-மித்ரா, ஜெக்ருக், டெக்கான் ரியாத், விஜயி மராத்தா, தியான் பிரகாஷ், சுபோத் பத்ரிகா போன்ற இதழ்கள் தீண்டப்படாத மக்களின் சிக்கல்களைப் பேசுவதற்குத் தனியான பத்திகளை ஒதுக்கியிருந்தாலும் அதை விரிந்த பின்புலத்தில் விரிவாக அலசுவதற்குத் தனியாக ஒரு பக்கம் அவர்களால் ஒதுக்க முடியவில்லை என்கிற யதார்த்தத்தைக் குறிப்பிடுகிறார்.

இதனடிப்படையிலிருந்து சுதந்திரமான ஒரு செய்தி இதழ், குறிப்பாகத் தீண்டப்படாதவர்கள் என்றழைக்கப்படுபவர்களின் சிக்கல்களை உரையாடுவது இன்றியமையாதாகிறது, இந்த இதழ் அத்தேவையை நிறைவேற்றவே தோற்றுவிக்கப்படுகிறது என்கிறார்.

மூக்நாயக் இதழில் வெளிவந்த இம்முதல் கட்டுரையின் மொழிப்பெயர்ப்பை வெளிக்கொண்டு வருவது வரலாற்றின் பக்கங்களை மீண்டும் அசை போடுவதற்காக மட்டுமேயல்லாமல், நாம் மேற்கொண்டிருக்கும் பணி குறித்தான கேள்விகள் நம்மை ஆட்டுவிக்கும் போது அதிலிருந்து விடுபட்டு ஆற்றலோடு பணிபுரிய வேண்டிய தேவையை இவ்வெழுத்துகள் உணர்த்துகின்றன.


மூக் நாயக்
(ஊமைகளின் தலைவன்)
————————————

இதழாசிரியர் : பாபாசாகேப் டாக்டர் பி ஆர் அம்பேத்கர்.
விளம்பர தொகை: முதன்முறை ஒரு வரிக்கு 5 அணாக்கள்
இரண்டாம் முறை 4 அணாக்கள்
வாழ்நாள் முழுதும் 2‌‌ 1/2 அணாக்கள்
பதிவு எண்: B1430
சந்தா தொகை: ஆண்டு முழுவதும் தபால் செலவுடன் ரூபாய் 2 1/2

மும்பை,
சனிக்கிழமை,
31 ஜனவரி 1920
இதழ் எண்#1


(மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் மூக் நாயக் என்னும் இவ்விதழுக்கான தலைப்பை மராத்திய பக்தி கவிஞர் துக்காராம் கவிதை வரிகளிலிருந்து பெற்ற உந்துதலாக அறியப்படுகிறது. அக்கவிதை பின்வருமாறு:)

“ஏன் நாணுற வேண்டும் நான்?
தயக்கத்தைப் புறந்தள்ளி வாய் திறந்தேன்
இப்புவியில் ஊமை நபரை எவரும் கண்டுகொள்வதில்லை
அளவிலாப் பணிவு, எந்த நன்மைக்கும் அரண் ஆகா(து).”

வெறும் பார்வையாளராக எவராயினும் ஒரு முறை இந்தியப் பௌதிக மற்றும் சமூக உலகைக் காண நேர்கையில்கூட, ஐயதிற்கிடமின்றி இந்த நாடு பகட்டான சமத்துவமின்மையின் இல்லமாக இருப்பதைக் காண்பார். மாறாக, அளவிலா இயற்கைக் கொடைகளும், மிகு பொருள் உற்பத்தியும், சமத்துவமிலா வறுமையும் இந்தியப் பெருஞ்சமூகத்தில் நிலவுவதை, எந்தவிதச் சிந்தனையுமின்றி மேம்போக்காகக் காண்பவரும் அறிந்துகொள்வர்.

அவ்வாறே, சிறிது தாமதமாக, சமத்துவமிலா வறுமைப் பெருக்கம், சமூகச் சமத்துவமின்மையினூடாக நிலவுவதை அவர் காணாமல் இருக்க முடியாது. இந்த முதன்மைச் சமத்துவமின்மை பின்னதற்கு மூத்த சகோதரியாகி, தன் இளைய சகோதரியை நாணி குறுகச் செய்வாள்.

இந்தியர்களிடையே சமத்துவமின்மை பல வடிவங்களில் நிலவுகிறது. பௌதிக (உடல்) வேறுபாட்டால், இன வேறுபாட்டால் சமத்துவமின்மை எங்கும் காணப்படுவது போல் இங்கும் உள்ளது. கறுப்பு- வெள்ளை, உயரம்- குட்டை, கூர் மூக்கு – சப்பை மூக்கு, ஆரியர்- ஆரியரல்லாதவர், கான்ட்-நான்ட் (Gond-Knond), இயவனிகர்- திராவிடர், அரேபியர்- இரானியர் மற்றும் பல வேறுபாடுகள் தெளிவாகவும் மேலோட்டமாகவும் சில இடங்களில் உள்ளன. இவை எங்கு நெகிழ்வாக எங்கு உறுதியாக உள்ளன என்பதை அறுதியிட்டுக் கூற இயலாது. சமய சமத்துவமின்மை மிகத் தீவிரமாகப் பௌதிக மற்றும் இனச் சமத்துவமின்மையை விஞ்சியதாக உள்ளது. சில தகராறுகளும் போராட்டங்களும் சமய சமத்துவமின்மையால் வீறுகொண்டு, குருதி சிந்தல் வரை நீடித்ததற்குப் பல எடுத்துக்காட்டுகள் உண்டு. எவ்வித ஐயமுமின்றி இந்து, பார்சி, இயகுதி, முசல்மான், கிருத்துவர் இதர பலர் சமய சமத்துவமின்மையின் சுவர்களாக நிற்பதை நாம் அறிந்தாலும், அதனினும் மேலாய், அவருடைய நுட்பமான கண்களுக்கு இந்துக்களிடையே நிலவும் சமத்துவமின்மை மற்றும் அதன் வடிவம் நம் கற்பனைக்கு எட்டாத அளவிலும், கடும் கண்டனத்திற்கு உரியதாகவும் உள்ளது.

மாங்கு, பிராமணன், சென்வி, மராத்தா, மகர், சம்பார், காயஸ்தர், பார்சி, கோரி, வைசியர் எனப் பல வேறுபாடுள்ள சாதிகள் இந்து மதத்தில் உண்டு. எனவே, இவர் மகர், இவர் பிராமணர் என விளிப்பதுண்டு.

இந்துக்களுக்குச் சமய (ஒற்றுமை) ஒருமையுணர்வைக் காட்டிலும் சாதிய உணர்வு எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதை எவரும் கூறத்தேவையில்லை.

ஓர் ஐரோப்பியரை ‘நீங்கள் யார்?‘ என வினவினால், தானோர் ஆங்கிலேயர் ஜெர்மானியர், இத்தாலியர் எனும் மறுமொழியால் நாம் நிறைவடைகிறோம். இது இந்துக்களிடம் நடவாது. ஒருவர் தான் இந்து என மறுமொழிந்தால் எவரும் மனநிறைவு அடைவதில்லை. அவர் தன் சாதியை வெளிப்படுத்தவேண்டும் ‘நீங்கள் யார்?‘ என்றால் இந்துக்கள் தம் மனித நேயத்தை வெளிப்படுத்துவதற்குச் சமத்துவமின்மையை ஒவ்வோர் அடியிலும் நிறுவ வேண்டும்.

இவ்வாறு சமத்துவமின்மை இந்துக்களிடையே ஒப்பிட இயலாததாகவும் வெறுக்கத்தக்கதாகவும் உள்ளது.

தங்களிடையே தொடர்பைப் பேணுவதற்கு இந்துக்கள் சமத்துவமின்மையைத் துறப்பது என்பது இந்து சமயத்தின் இயல்புக்கு உகந்ததாக இல்லை. உணர்வின் உந்துதல், உயர்வு, தாழ்வு அடிப்படையில் சாதிகளிடையே உள்ளதை இந்துமதத்தில் தெள்ளுறத் தெளியலாம்.

இந்துக்களின் சமூகம் நுழைவாயிலும் ஏணிகளுமற்ற பல அடுக்குக் கோபுரம் போன்றது. ஒருவர் எத்தளத்தில் பிறந்தாரோ அத்தளத்திலேயே மடிய வேண்டும். கீழ்தளத்தில் பிறந்த ஒருவர், அவர் எத்தகு உயர் பண்புகள் உடையவராய் இருப்பினும் மேல் தளத்திற்குள் நுழைய இயலாது. இதேபோல் மேல் தளத்தில் பிறந்த ஒருவர் கீழ் தளத்திற்குள் நுழையமுடியாது.

தனிமனிதர்களின் தகுதியையும் தகுதியின்மையையும் கருத்திற்கொண்டு சாதிகள் இடையே சமத்துவமின்மை உணர்வானது நிலவவில்லை என்பது தெளிவாகப் புலனாகிறது. உயர் சாதியில் பிறந்த ஒரு மனிதர், எத்துணைத் தகுதியற்றவராக இருப்பினும் அவர் உயர்வாகவே கருதப்படுவார். மாறாக, கீழ் சாதியில் பிறந்த ஒருவர், எத்துணைத் தகுதியுடையவராய் இருப்பினும் எப்பொழுதுமே கீழாகவே கருதப்படுவார்.

மறுபுறம், கலந்து உண்ணல் மற்றும் கலப்புத் திருமணங்கள் மறுக்கப்பட்டுள்ளமையால் ஒவ்வொரு சாதியும் ஒத்திசைவற்று ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாறிக்கொள்ள இயலாமல் தனித்து விடப்பட்டுள்ளனர். குருதி கலத்தலும், உள்ளார்ந்த உறவு பிணைப்பும் கேள்விக்குறியென்றால், இருவருக்குமிடையே சுதந்திரமாக மேலோட்டமான வெளியுறவு பேணுவதும் அவ்வாறே காண்கற்கிலது. சில நபர்களது தொடர்புகள் வெறுமனே கதவுக்கு வெளியேயே முடிவது. சில சாதிகள் தீண்டத்தகாதவர்கள் என்றும், அவர்களது தீண்டல் பிற சாதிகளைக் கறைபடுத்திவிடும் எனும் காரணத்தால் தீண்டத்தகாதவர்கள் பிற சாதிகளுடன் தொடர்பு வைத்துக்கொள்வதே வெகு அரிதாக நிகழ்கிறது.

கலந்துண்ண இயலாமை மற்றும் கலப்புத் திருமணங்கள் மறுக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்ட தீண்டத்தகாதவர்கள், தாமும் இந்துச் சமூகத்தின் ஒரு பகுதிதான் எனக் கருதியிருந்தும், தீண்டத்தகாதவர்கள் மற்றும் தீண்டத்தக்கவர்கள் ஆகிய இரு சாதிகளும் நடைமுறையில் இருவேறு துண்டாடப்பட்ட உலகில் வாழ்கிறார்கள்.

இவ்வாறான நடைமுறையிலுள்ள இந்துச் சமூக அமைப்பு இந்துக்களால் மூன்று வகை சமூக வகுப்பாராகத் தங்களைப் பகுத்துள்ளனர். அவர்கள்: பிராமணர்கள், பிராமணரல்லாதவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பார்கள். அவ்வாறே, சமத்துவமின்மையின் விளைவுகளின் மீது நம் கவனத்தைச் செலுத்துவோமாயின், அது வெவ்வேறு சாதிக்கும் வெவ்வேறு விளைவுகளை உருவாக்குவதை அறியலாம்.

ஆம். பிராமணர்கள் படிமச் சமூக அடுக்கின் உச்சத்தில் இருப்பதால் தம்மைப் பூவுலகக் கடவுளர்களாகக் கருதுகின்றனர். ஆகவே, இந்தச் சமத்துவமின்மை பூவுலகக் கடவுளர்களுக்கு அதிகப் பலன்களைத் தருவதாக இருப்பதோடு, பிற வகுப்பார் தமக்கு சேவை புரியவே பிறந்துள்ளனர் என்று எண்ணவைக்கிறது. ஆகவே, தாங்களே உருவாக்கிக்கொண்ட உரிமைகள் வழி, பிற சாதியினர் யாவரின் சேவைகள் தரும் கனிகளைச் சுவைப்பவர்களாகச் சமூகத்தளத்தில் உள்ளனர்.

பிராமணர்களால் உண்டான பயன் அல்லது செய்த பணி என்ன என்பதைக் குறிப்பிட வேண்டுமானால் அது வெறுமனே அறிவுத்திரட்டலும் சமய நூல்கள் யாத்தல் மட்டுமே. ஆனால் அவர்களது சமய நூல்கள் சிந்தனைக்கும் நடைமுறைக்கும் பொருந்தாத முரண்பாடுகளும் குறைபாடுகளும் உடையவை. இந்த நூல்களை இயற்றியவர்கள் போதைப்பொருட்களின் வசம் தனையிழந்து எழுதியிருக்க வேண்டும். இல்லையேல், உயர்ந்த சிந்தனையும் தாழ்ந்த நடைநெறியையும் ஒன்றாக இணைத்திருக்கமாட்டர். ஏனெனின் ஒரு கரத்தில் அவர்தம் சமயநூலின் தத்துவங்கள் – உயிர்திணை, அஃறிணை யாவும் ஒரே கடவுளின் வடிவங்கள் எனப் போதிக்கிறது. ஆனால், மறு கரத்தில் இவற்றிடையே மிதமிஞ்சிய சமத்துவமின்மையை நடைமுறை வழக்கமாக்குகிறது. இது அறிவோடு இயங்குபவர்களின் அறிகுறியல்ல.

சரியோ, தவறோ இந்தச் சாத்திரங்கள் பெருமளவிலான தாக்கத்தை எளிய சிந்தையரான பெருந்திரளான மக்களிடம் ஏற்படுத்திவிட்டது. இம்மக்கள் தங்கள் பகைவர்களைப் பூவுலகின் கடவுளர்களாக வணங்குகின்றனர். எவர் இதை ஏற்பர்? ஏன் இம்மக்கள் தீங்கிழைக்கும் அடிமைப்படுத்தும் சமய நடைமுறைகளை வலியுறுத்தும் பகைவர்களை, தங்கள் நலம் விரும்பிகள் எனத் தேர்ந்தனர் என்பதை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். பிராமணர்கள், இப்பெரும் மக்களை அறியாமையில் வைப்பதன் வாயிலாக எத்திசைக்கும் அழைத்துச் செல்ல இயலும் எனும் நோக்கில் அறிவுசார் தரவுகளைப் பெற்றுக்கொள்ளும் ஒற்றைச் சமூக வகுப்பராய் நிறுவிக்கொண்டனர். மற்றும் தங்கள் சொந்த சமயத்தையே பின்பற்றுவதாக ஏய்த்து எளிய மக்களை வசப்படுத்தினர். அறிவுக் கருவூலங்களை அடைய முற்படும் பிராமணரல்லாதவர்கள் வெளிப்படையாகவோ ரகசியமாகவோ கடுமையாகத் தண்டிக்கப்படுவர். எனினும் பிராமணரல்லாதோரின் தொடர் முயற்சி ஓயவில்லை.

அதிகாரமும் கல்வியறிவும் மறுக்கப்பட்ட பிராமணரல்லாதோர் பின்தங்கிய நிலையில் அவர்களது வளர்ச்சி இருப்பினும், அவர்கள் வறுமையால் உழலவில்லை. தங்கள் வாழ்நிலையை வேளாண்மை, வணிகம் மற்றும் பண்டமாற்று இதர நிலம்சார் சேவைகளின் மூலம் பொருள் ஈட்டிக்கொண்டனர். ஆனால், சமூகச் சமத்துவமின்மை தீண்டத்தகாத மக்களிடம் மிக இழிவான நிலையை ஏற்படுத்தியது. பெரும்பான்மை தீண்டத்தகாதோர் ஐயத்திற்கிடமின்றி வலுவின்மை, வறுமை, அறியாமை ஆகிய மூன்றின் ஆழத்தில் மூழ்கடிக்கப்பட்டனர்.

அடிமைத்தனத்தால் உருவான தன்னலம் இவர்களைப் பல்லாண்டுகளுக்குப் பின்தங்கியவர்களாகவே ஒடுக்கிவைத்துள்ளது. தங்களது அருவருக்கத்தக்க நிலை கடவுளால் நிறுவப்பட்டதாக எண்ணினர். இச்சீர்குலைவு சிந்தை, (கல்வி) அறிவு ஊட்டப்பட்டதாலேயே அவர்களிடமிருந்து விலகியது.

ஆயினும் பெருவிலை தந்து வாங்கக்கூடிய பொருளாகவே உயர்கல்வி இருந்தமையால், வறுமையின் காரணமாக, தங்களால் வாங்க இயலாமல், ஒருவேளை அரிய சிலர் வாங்கினாலும் அவர்கள் பள்ளியிலே நுழைய மறுக்கப்படுவது எனத் தீண்டாமை இழிநிலை தங்களோடு நிலையாகப் பிணைக்கப்பட்டிருப்பதால் முன்னேற்றம் தடைப்பட்டது.

தீண்டாமை இழிநிலை சுதந்திரமாக ஒரு பணியைத் தெரிவுசெய்ய அவர்களுக்குத் தடையாக நின்றது. எனவே, வறுமையைக் களையும் அவர்களது முயற்சிகள் பலன் தருவதாக இல்லை, பண்டை மாற்று மற்றும் வணிகம் போன்ற தொழில்கள் அரிதாகவே அவர்களுக்குத் தென்பட்டன. வேறு குருட்டு வாய்ப்பும், முகாந்திரமுமற்று கீழ்மட்டப் பணியாளர்களாக நிலைக்குமாறு தள்ளப்பட்டனர். இந்த தீண்டத்தகாதவர்கள் எனும் இழிந்த நிலையில் வைக்கப்பட்ட சமூக விலக்கத்திற்காளான மக்களை பார்க்கையில் 33 கோடி கடவுளர்களில் ஏதாவது, அதுவும் அனைத்தும் இந்து கடவுளர்களாக உள்ளபோது, இவர்கள் மேல் குறைந்தபட்சம் அல்லாவாவது கழிவிரக்கம் கொண்டிருக்க வேண்டும். இந்துக்கள் அல்லாத பிற சமயத்தினர் கூட இவர்களைச் சமூகப் புறக்கணிப்பு செய்யவே ஒட்டு மொத்த மனிதநேயமே மறுக்கப்பட்ட மக்கள் மீண்டு எழாதவாறு அமிழ்த்தப்பட்டனர். அவர்கள் மனிதர்கள் அல்லர் வெறும் பூச்சிகள்.

தீண்டத்தகாத சமூகங்களில் உள்ள சில மக்கள் கூட தீண்டத்தகாதவர்கள் எல்லா மூலையிலும் அமிழ்த்தபட்டமையால் தங்கள் பூச்சி வாழ்க்கையிலிருந்து தப்பிக்க இயலாதவர்களாகக் கருதுகின்றனர். தீண்டத்தகாதவர்கள் ஏழ்மையில் உழல்வதால் அறிவற்றவர்களாக (கல்வி) உள்ளனர். அறிவின்மையால் அதிகாரமற்று உள்ளனர். தர்க்கரீதியாக இது சரியானது இதை என்றும் மறக்கக் கூடாது எனினும், தீண்டாமைக்கு எதிராகப் போராடுபவர்களின் ஆற்றலைக் குறைத்து மதிப்பிட முடியாது. உண்மையான மனித நேயம் தடைகளைத் தகர்ப்பதில்தான் உள்ளது. இந்தத் தீண்டத்தகாத சமூகங்களிடையே மனிதநேயம் (தன்மானம்) வளர்வது மிகச்சிறந்த அறிகுறி.

இந்துமதத்தின் தீய சமூக நடைமுறையால் கட்டுண்ட பல கோடி உயர்சாதி மக்கள் அறிவற்றவராய், மிடிமை கொண்டவராய், இறையச்சம் அற்றவராய் நம் மக்களைத் தீண்டத்தகாதவராய் நடத்துகின்றார்கள். இவர்கள் தீண்டாமை கடைபிடிக்கும்வரை நம் மக்கள் இழிவான கழிவிரக்கநிலையில் தொடர்ந்து வைக்கப்படுவார்கள். முழுமையான சமூகத் தடுமாற்றத்திற்கு இடையேயும் தமக்கு விடிவு தரும் வழியை நம் மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்கான அறிகுறி.

உயர்சாதி இந்துக்கள் மிக எளிதாக ஆங்கில அரசை அணுகி, தீண்டப்படாதவர்கள் வழக்கைத் தவறாக வழிநடத்தியும் பிசகாக்கும் பணியும் செய்து வெகுமதி பெற்றுக்கொள்கிறார்கள் என்பதைத் தீண்டப்படாத சமூகங்கள் இப்போது நன்கு உணர்ந்துகொண்டன.

தீண்டப்படாத சமூகங்கள் மீதான சாதியமும் சாதி வெறுப்பும் இந்நாட்டில் உச்ச அளவில் நடைமுறையில் இருப்பதை உண்மையான சுயாட்சி மலர வேண்டுமாயின், தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சுதந்திரமான தனிப் பிரதிநிதிகள் அரசியல் அதிகாரம் பெறுவதால் மட்டுமே ஏகும் எனக் கோருகின்றனர். ஆகவே, தீண்டத்தகாதவர்கள் அரசிடம் சாதி இந்துக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்குமாறு தங்கள் எதிர்ப்பைக் கோரிக்கைகள் மூலம் விடுத்தனர். சாதி இந்துக்களின் ஏய்ப்பு முறைகளை இப்பொழுது நன்கு அறிந்துகொண்டனர். அரசியல் அதிகாரம் பெறுவதன் மூலம் சமூகச் சமத்துவமின்மையை இன்னமும் தக்கவைக்கலாம் எனும் அவர்களின் கபடத் தனத்தை அறிந்திருக்கின்றனர். இந்த எதிர்ப்புணர்வு தீண்டத்தகாதோரை சாதி இந்துக்களைக் குறித்து விழிப்புணர்வு பெறச் செய்திருக்கிறது.

தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் தீண்டத்தகாதவர்கள் மீதான சமூகப் புறக்கணிப்புக்கும் வல்லாதிக்க வன்முறைகளுக்கும் ஆதரவாக எழுப்பப்படுகிற சாதியக் குரல், தீண்டத்தகாதவர்களுக்கு வருங்காலத்திலும் தொடரும் என்பதாலும் நாம் அனைவரும் உரையாடவும் நம் எதிர்காலத்தை வடிவமைக்கவும் செய்தி இதழ் ஒன்றைத் தவிர, ஒருங்கிணைக்க வலிமையான மாற்று எதுவும் இல்லை. தற்போது வெளிவரும் மும்பை மாநகரச் செய்தி இதழ்களைக் காணுகையில், பெரும்பாலான செய்தி இதழ்கள் குறிப்பிட்ட சாதியினரை, அவர்களது விருப்பங்களைப் பாதுகாக்கும் நோக்கில் செயல்படுவது விளங்கும். அவை பிற சாதிகளைப் பற்றிக் கவலைகொள்வதில்லை. அதுமட்டுமன்றிச் சிலவேளைகளில் இச்செய்தி இதழ்கள் நமக்கு எதிரான விஷயங்களை வெளியிடுகின்றன. நாம் இவ்விதழ் களுக்குக் கூறவிரும்புவது யாதென்றால் ஒரு சாதி முன்னேற முடியாவிடில், அதன் வீழ்ச்சி பிற சாதிகளின் மீது அழியா வடுவாக எவ்வித ஐயமும் இன்றிப் படரும் என்பதையே.

சமூகம் ஒரு பெரும் கப்பலைப் போன்றது. அந்தக் கப்பலில் எந்தப் பயணியும் பிறரைத் துன்புறுத்தும் நோக்கில் செயல்பட்டாலும் குழப்பம் விளைவிக்க முயன்றால் அது கப்பலில் பிற பகுதி ஏதொன்றிலும் ஓட்டை விழுவதைப் போன்றது, முழுக் கப்பலையும் மூழ்கச் செய்துவிடும். அவ்வாறே ஒரு சாதி மற்றொரு சாதியால் துன்புறுத்தப்படுமாயின் பிற சாதியினரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தாமே இன்னலுறுவர். எனவேதாம் நன் மதிப்போடு நடத்தப்பட வேண்டும் என்று விரும்பும் செய்தி இதழ்கள் யாவும் பிற இதழ்களுக்குத் தீங்கிழைக்கும் மூடத்தனத்தை நிகழ்த்தக் கூடாது.

நம் விவாதப் பொருளின் தேவையை முன்னிறுத்தி பகுத்தறிவுடன் முன்பே தின்-மித்ரா, ஜெக்ருக், டெக்கான் ரியாத், விஜயி மராத்தா, தியான் பிரகாஷ், சுபோத் பத்ரிகா, இதர (Din-Mitra Jagruk Deccan Rayyat, Vijayi Maratha, Dhyan Prakash, Subodh Patrika) தீண்டப்படாத மக்களின் சிக்கல்களை வெளியிட பத்திகள் ஒதுக்கி இருப்பினும், அவை தெளிவாக மக்கள் தொகையின் எண்ணிக்கையில் மிகுதியாக உள்ள பிராமணரல்லாதார்களுடைய சிக்கல்களை உரையாற்றவே பெரும்பாலான பக்கங்களைச் செலவிட்டன. எனவே தீண்டப்படாதவர்களுக்கு எனத் தேவையான இடத்தை ஒதுக்குவது அவற்றுக்கு இயலாததாக ஆயிற்று.

எனவே, சுதந்திரமான ஒரு செய்தி இதழ், குறிப்பாக இழிவான நிலைகளில் இருந்து எழும் தீண்டப்படாதவர்கள் என்றழைக்கப்படுபவர்களின் சிக்கல்களை உரையாட இன்றியமையாததாகிறது. எனவே, மூக்நாயக் செய்தி இதழ் தோற்றுவிக்கப்படுகிறது.

தீண்டப்படாதவர்களின் அல்லது சமூகப் புறக்கணிப்பு செய்யப்படுபவர்கள் உரிமைகளைக் குறித்துச் செய்திகள் வெளியிடத் தம்மை அர்ப்பணித்துக்கொண்ட சோம்வம்ஷிய மித்ரா இந்து நாகரீக், விட்டல் வித்வம்சக் ஆகிய இதழ்கள் பிறந்தும் நெடுநாள் நீடிக்கவில்லை. பகிஷ்கரித் பாரத் ஒருவாறு சிக்கலினூடே தொடர்ந்துகொண்டிருக்கிறது. மூக் நாயக் வாசகர்கள் தொடர்ந்து போதுமான ஆதரவளிக்கும் பொழுது தடுமாற்றமின்றி மிக உயர்ந்த விஷயங்களைச் சரியான வழியில் நம்மால் நடத்திச் செல்ல இயலும். என் அவாவினை இதைத் தவறாது நிறைவேற்றுவேன் என்ற உறுதிக்கடப்பாட்டுடன் உரையை முடிக்கிறேன்.

 

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger