இந்தியக் குடியரசுக் கட்சி (கோபர்கடே) இன் தமிழ் மாநிலத் தலைவராகவும் கடந்த 60 ஆண்டுகால பொதுப் பணிக்குச் சொந்தக்காரராகவும் இயங்கி 77 ஆவது வயதில் காலமான கே.பி.சுந்தர பிரதாபன் என்ற பெரியவரின் வாழ்க்கை முன்னுதாரணமான ஒன்று.
காலமாவதற்கு ஒருநாள் முன்புகூட தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் தமிழகத்திலிருந்து 150க்கும் மேற்பட்ட அம்பேத்கரியர்களை நாக்பூர் தீக்ஷா பூமி வரை அழைத்துச் சென்று அங்கே தான் எழுதிய சக்திதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலை வெளியிட்டு, ஒருமணி நேரம் உரையாற்றிவிட்டுச் சென்னை திரும்பினார் என்பது நெகிழ்ச்சியான தருணமாகும்.
“தமிழகத்தில் பௌத்தப் பெரியார் மு.சுந்தரராசன், டாக்டர் அ.சேப்பன், சொல்லின் செல்வர் சக்திதாசன் உள்ளிட்ட தலைவர்களோடு சென்னை பகுதியில் இணைந்து செயற்பட்டு, சக்திதாசன் அவர்களின் முரட்டுப் பக்தர் என்று சொல்லும் அளவுக்கு விளங்கினார்” என்று மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் மூத்த அரசியல்வாதியுமான டாக்டர் செ.கு.தமிழரசன் குறிப்பிடுகிறார். “சென்னை சிந்தியாதிரிப்பேட்டை களிமண் சேரி என்றழைக்கப்பட்ட பகுதியில் பரசுராமன் – பாப்பம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்து பள்ளிக்காலத்திலேயே சாதி ஒழிப்புக்கு, தீண்டாமைக்கு எதிராகப் போராடி வரலாறு படைத்தவர் சுந்தர பிரதாபன். மக்கள் பணி செய்யத் தடையாக இருக்கும் என்று கிடைத்த அரசுப் பணியை நிராகரித்தவர்” என்று கூறுகிறார் சாம்ராட் இதழின் துணை ஆசிரியரும் ஐயா சுந்தர பிரதாபனோடு இணைந்து பல வரலாற்று நூல்களை உருவாக்கியவருமான கோ.சுப்பிரமணியன்.
மெயில் முனுசாமி அவர்களாலும், மாவீரன் என்றழைக்கப்பட்ட குடியரசுக் கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் அமைப்புச் செயலாளராகவும் விளங்கிய ஐயா எத்திராசன் அவர்களாலும் பொது வாழ்க்கையில் வளர்க்கப்பட்டவர்; சக்திதாசன் அவர்களால் குடியரசுக் கட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டவர்; தன்னலம் பாராமல் பாபாசாகேப் அம்பேத்கர் கொள்கைகளுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட தலைமுறையைச் சார்ந்தவர் சுந்தர பிரதாபன்.
“1982இல் வெளியான ‘காந்தி’ திரைப்படத்தில் டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு முழுமையாக நிராகரிக்கப்பட்டதால் இந்தியா முழுவதும் எதிர்ப்பு அலைகள் உருவாயின. தமிழகத்தில் பல்வேறு தலைவர்கள் போராடினார்கள். அந்த எதிர்ப்புப் போராட்ட வரலாற்றில் ஐயா சக்திதாசன், மாவீரன் எத்திராசன், கே.பி.சுந்தர பிரதாபன், டாக்டர் செ.கு.தமிழரசன் ஆகியோர் பங்கேற்று, கைதாகிச் சிறையில் இருந்தனர் என்பது வரலாறு.
1980களில் சென்னை நோக்கிய பயணம் (March to Madras) என்று அரக்கோணத்திலிருந்து சென்னை வரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாபெரும் ஊர்வலம் நடத்தி ஒடுக்கப்பட்ட மக்களின் படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று பெரும் போராட்டத்தை நடத்திய வரலாறும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கதாகும் என்று செ.கு.தமிழரசன் குறிப்பிடுகிறார்.
சாம்ராட் என்ற பத்திரிகையையும் சுந்தர பிரதாபன் நடத்தியுள்ளார். பௌத்தப் பெரியார் மு.சுந்தரராசன், ஆ.சக்திதாசன் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றுச் சுவடுகளை கோ.சுப்ரமணியன் அவர்களோடு இணைந்து தொகுத்து நூலாக்கியுள்ளார்.
தொழில் அடிப்படையில் மின்னியல் ஒப்பந்ததாரராக (எலக்ட்ரிக்கல் காண்ட்ராக்டர்) வாழ்க்கையைத் தொடங்கியவர். வாழ்க்கைத் துணையாக நீலாவதி அம்மையாரைக் கரம் பிடித்து, மகேந்திரவர்மன், அமுல் மகேஸ்வரி, பிரபாகரன், உமா மகேஸ்வரி ஆகிய நான்கு பிள்ளைகளைப் பெற்றவர்.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நாக்பூர் தீக்ஷா பூமிக்குச் சென்றுவரக்கூடியவர். ஏராளமான போராட்டங்களில் பங்கேற்றவர். அவரது துணைவியார் நீலாவதி அம்மையாரும் பல்வேறு போராட்டங்களில் பங்கு எடுத்தவர்.
சேத்துப்பட்டு இரயில்வே நிலையத்தின் இடது புறத்தில் இருக்கின்ற மீனாம்பாள் சிவராஜ் நகரில் ஐயா சக்திதாசன் அவர்களும், வலதுபுறத்தில் உள்ள ரெட்டமலை சீனிவாசன் நகர் – ஓசான் குளம் – புல்லாபுரம் என்றழைக்கப்படுகிற பகுதியில் ஐயா சுந்தர பிரதாபன் அவர்களும் அரசு குடியிருப்புகளில் மிக எளிமையாக வாழ்ந்தவர்கள். ‘சொர்க்கத்திற்குச் செல்லும் பாதை மிகவும் குறுகலானது’ என்ற விவிலிய வரிகளைப் போல் 60, 70 ஆண்டுகளாக அந்த நெருக்கடி மிகுந்த குடிசைப் பகுதிகளிலேயே தங்கள் வாழ்க்கையை முடித்தனர் என்பது நாம் நினைவுகூர வேண்டிய வரலாறாகும்.
அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பண்டித அயோத்திதாசர், திவான் பகதூர் ரெட்டைமலை சீனிவாசன் சிலைகளுக்கு நடுவில் சக்திதாசன் அவர்களுக்குச் சிலை எழுப்பியவர். பெரும்பாலும் நீலச்சட்டையே அணியக்கூடியவர். அவரது இறுதிச் சடங்கும் குடியரசுக் கட்சியின் கொடி போர்த்தப்பட்டுப் பௌத்த முறைப்படி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
“இரண்டு மெழுகுவர்த்திகள்
பேசிக்கொண்டிருந்தன நிழலை
இருட்டை
ஒளியை
பேசவே இல்லை உருகுவது பற்றி”
என்ற கவிஞர் முத்துவேலின் வரிகள் ஆ.சக்திதாசன் அய்யாவுக்கும் கே.பி.சுந்தர பிரதாபன் அய்யாவுக்கும் பொருந்தும். அந்த நல்லோர்களின் புகழ் என்றும் ஓங்குக.