கடந்த நூற்றாண்டில் பிறந்த ஆளுமைகளில் இன்றளவும் பெரும் தாக்கத்தையும் ஆய்வு பரப்பில் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்திக்கொண்டிருப்பவர்களில் முதன்மையானவராக அறிஞர் அம்பேத்கரை மதிப்பிடலாம். மணிக்கணக்கில் வாசிக்கிற பழக்கமுடையவர்களாகப் பல ஆளுமைகளை வரலாற்றில் நாம் அறிந்திருக்கிறோம். நாள் கணக்காக வீட்டைவிட்டு வெளியில் வராமல், அம்பேத்கருடைய உதவியாளரான தேவி தயால் ஆச்சரியத்தோடு குறிப்பிடுவதைப் போல, சூரிய ஒளியையே பல நாட்கள் பார்க்காமல் வாசித்துக் குறிப்பெடுத்துக்கொண்டிருந்த ஒரு மனிதரை இந்த உலகம் அறிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். வாசிக்கும்போதே அதன் முக்கியக் கருத்துகளை சிவப்பு மற்றும் நீல நிறத்தினால் அடிக்கோடிடுவதும் தன்னுடைய கருத்துகளையும் புதிய குறிப்புகளையும் அதனருகில் எழுதி வைக்கிற பழக்கமும் அறிஞர் அம்பேத்கருக்குச் சிறு வயதிலிருந்தே உண்டு. டெல்லியிலிருந்து அம்பேத்கர் தன்னுடைய சொந்த அலுவல் நிமித்தமாகவோ பணி நிமித்தமாகவோ பம்பாய்க்கு வருகிறபோது ‘Doctor is in town’ என்றுதான் சொல்வார்களாம். ‘டாக்டர்’ என்பது அவருக்கே உரிய அறிவாற்றலின் நிரந்தர அடையாளமாக அக்காலத்திய அரசியல் வரலாற்றில் இருந்ததை இன்றளவும் புறந்தள்ள முடியவில்லை.
“நான் ஒரு கடினமான மனிதன். என்னுடைய புத்தகங்கள்தாம் எனக்குத் துணையாளர்களாகயிருக்கிறார்கள். என்னுடைய மனைவி குழந்தைகளைவிட அவை எனக்கு மிகவும் நெருக்கமானவை” என்று புத்தகங்கள் மீதான தன்னுடைய அளப்பரிய பிணைப்பை விவரிக்கிறார் அம்பேத்கர். தன் வாழ்வின் அதிகப்படியான செலவினத்தைக் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவதைவிட புத்தகங்களுக்கே செலவிட்டு அரிய புத்தகச் சேகரிப்பாளராகவும், நேர்த்தியான வாசிப்பாளராகவும் இருந்தவர் அம்பேத்கர். தன்னுடைய உரையிலும் எழுத்திலும் ஒரு காற்புள்ளியைக் கூட மாற்றிக்கொள்ள மாட்டேனென்றும், யாரும் தணிக்கை செய்வதையும் அனுமதிக்க மாட்டேனென்றும், எவ்விதமான கட்டுப்பாடுகளையும் ஒப்புக்கொள்ளாதவராக தன் கருத்துகளை எவ்விதச் சமரசமுமன்றித் துணிந்து சொல்லக்கூடியவராக அறியப்பட்ட அம்பேத்கரின் ஆய்வு முறையியலை அறிமுகம் செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
சொற்களின் அறிமுகம்
மொழிகள் அதனதன் பண்பாட்டிலிருந்து தம்மை உருவாக்கிக்கொள்கின்றன. நவீன காலத்திற்கேற்ப அவை மீளுருவாக்கமும் செய்துகொள்கின்றன. அம்பேத்கருக்கு மராத்தி, இந்தி, உருது, பாலி, பார்ஸி, சமஸ்கிருதம், ஆங்கிலம், ஜெர்மன் மொழிகள் தெரியும். மொழியியலையும் (philology) கற்றிருக்கிறார். ஆனால், இந்தியப் பண்பாட்டின் எல்லைகளைத் தாண்டி மேற்குலகின் தத்துவவாதிகள், சமூகவியலாளர்கள், இறையியலாளர்களின் தாக்கம் அம்பேத்கரிடம் இருந்தது. இந்திய வரலாற்றிலிருந்து தரவுகளை எடுத்து அவற்றை சமூகவியல், இறையியல் மற்றும் தத்துவங்களின் துணையோடு தான் எடுத்துக்கொண்ட சமூகப் பிரச்சினைகளை அவர் விளக்க முனைகிறார். அம்பேத்கருடைய கருத்துகள் அவருடைய மேற்குலக கல்வியிலிருந்து கிடைக்கப்பெற்றவை. குறிப்பாக, அவருடைய ஆசிரியர்களிடமிருந்தும் ஆசிரியர்களுடைய நூல்களிலிருந்தும் கிடைக்கப்பெற்றவை. எடுத்துக்காட்டாக ‘ஜனநாயகம் என்பது அரசு என்பதற்கு மேலானதொரு வடிவம். அது அடிப்படையில் கூடிவாழ்தலின் வழிமுறை.’ இது அம்பேத்கரின் ஆசிரியரான ஜான் டூவேயின் கருத்தாகும். இதனை அம்பேத்கர், ஆசிரியரின் பெயரும் மேற்கோளும் இன்றி அப்படியே தன்னுடைய கட்டுரையில் பயன்படுத்துகிறார். இந்தக் கருத்தைத் தன்னுடைய கருத்தாக மாற்றிக்கொள்வதன் காரணம், ஜான் டூவேதான் தன்னை முழுமையாக ஆட்கொண்ட ஒரே அறிவுஜீவி என அம்பேத்கர் குறிப்பிடுவதே.
18 – 19ஆம் நாற்றாண்டுகளின் பகுத்தறிவு மற்றும் புத்தொளி சிந்தனை மரபு அரசிற்கும் மதத்திற்குமான பிணைப்பைக் கேள்விக்குட்படுத்தி, அவற்றிற்கு மறுவிளக்கத்தையும், மக்கள் மொழிந்த மாற்றுவெளிகளையும், மானுட விடுதலையின் அடித்தளத்தில் அமைந்த சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் எழுச்சியையும் உருவாக்கிய காலத்தில் தனித்த கல்விப்புலம் சார் சிந்தனைகளும் தத்துவங்களும் உருவான காலம் அது. இதனுடைய தொடர்ச்சியாகவே புதிய விடுதலைக் கருத்துகள் சமூகத்திலும் கல்விப்புலத்திலும் வெளிப்படத் தொடங்கின. சமூகவியல், தத்துவம், இறையியல் இம்மூன்றையும் இணைந்து கற்ற காலமாகத் தொடக்கத்தில் இருந்தது. மேற்குலகின் இந்த ஆய்வுலக அணுகுமுறை அம்பேத்கருடைய மொழியையும் ஆய்வின் களத்தையும் விரிவுபடுத்தியது. அவருடைய மொழியின் செழுமைக்கும் அது உதவி செய்தது. அதனால்தான் அம்பேத்கருடைய மொழி, ஆதிக்கத்திற்கு எதிரானதாகவும் அதே நேரத்தில் செயற்பாட்டிற்கு அழைப்பு விடுக்கிறதாகவும் இருக்கிறது. இந்த அணுகுமுறையின் வழியாக ஏற்றத்தாழ்வான இந்திய சமூக அமைப்பைப் பெரும் விவாதத்திற்கு உட்படுத்துகிறார். இந்திய அளவிலான அல்லது வட்டார அளவிலான ஜாதியப் பிரச்சினையை உலகளாவிய கண்ணோட்டத்தில் வேறுபட்ட வாசகர்களுக்கு விளக்க முயலுகிறார். அதனால்தான் ஆங்கிலத்தைத் தொடர்பு மொழியாக எடுத்துக்கொண்டார். ஒருவேளை தன்னுடைய தாய்மொழியிலோ அல்லது இந்தி மொழியிலோ எழுதியிருந்தாலோ அல்லது பேசியிருந்தாலோ, இந்தியாவின் பிற வட்டார மொழிகளில் அம்பேத்கர் வந்து சேர்வதற்கு ஒரு நூற்றாண்டு கூட ஆகியிருக்கலாம். தன்னைப் பாதிக்கப்பட்ட குழுவின் பிரதிநிதியாகவும், ஜாதியை ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வாழ்வாதார பிரச்சினையாகவும் உலகத்தின் முன் விவாதிக்கத் தொடங்குகிறார். ஆனால், ஆய்வியல் சட்டகத்திற்குள்ளாகவே (Research Framework) தன்னுடைய வாதத்தை அம்பேத்கர் முன்வைக்கிறார். அப்படி முன்வைக்கும்போது, வரலாற்றாசிரியர் பெரி ஆண்டர்சன் சொல்வதைப் போல, இதுவரை அறிந்திராத ஒரு புதிய உலகத்திற்கு அம்பேத்கரது மொழி நம்மை அழைத்துச் செல்கிறது.
ஜாதியின் தோற்றம் பற்றிப் பேசுகிற அம்பேத்கருடைய முதல் மானுடவியல் ஆய்வுக் கட்டுரையில், ‘இரக்கம், பாவி, சமூக விலக்கம்’ இம்மூன்று சொல்லாடல்களையும் ஒன்றன்பின் ஒன்றாகப் பயன்படுத்துவார். இந்தச் சொற்கள் முழுக்க முழுக்க மதம் சார்ந்த அல்லது இறையியல் சார்ந்த பின்னணியில் வெளிப்படுபவையாகும். ஜாதியப் பிரச்சினையைத் தனித்த ஒரு சமூகப் பிரச்சினையாக ஆய்வு செய்யாமல் மதத்தின் அங்கீகாரமே, பார்ப்பனியத்தின் வேரே ஜாதிதான் என்பதை நிறுவுகிறார். இந்து மதத்தின் பின்னணியில்தான் ஜாதி இயங்குகிறது என்பதன் அரசியல் பின்னொட்டுதான் அந்தச் சொல்லாடல்கள். அதனைப் போன்றே ‘விடுதலைக்கு என்ன வழி’ என்கிற புகழ்மிக்க உரையில், விடுதலை சார்ந்த சொல்லாடல்களை அம்பேத்கர் பயன்படுத்துகிறார். குறிப்பாகச் சுயமரியாதை, சமத்துவம், நீதி, அநீதி, போராட்டம், வலிமை, அழித்தொழிப்பு, போராடுகிற ஆற்றல், கலகம், ஒடுக்குதல் என்னும் சொல்லாடல்களை அதிகமாகப் பயன்படுத்துவார். இந்தச் சொற்கள் அதன் இயல்பிலேயே நேரடியாக விடுதலையோடு தொடர்பு கொண்டிருப்பதை நாம் எளிதாக உணரமுடியும். அம்பேத்கருடைய மொழி அவர் எடுத்துக்கொண்ட சிக்கல்களின் மூலத்தைத் தேடுகிற மொழி, விளைவுகளை அறிந்து தீர்வைக் கண்டடைகிற மொழி. இதனை அவருடைய ‘ஜாதிகள் தோற்றம் வளர்ச்சி மற்றும் பரிணாமம்’, ‘தீண்டப்படாதவர்கள் யார்? சூத்திரர்கள் யார்?’, ‘தீண்டாமையின் தோற்றம் என்ன?’, ‘காந்தியும் காங்கிரஸும் தீண்டப்படாதவர்களுக்குச் செய்தது என்ன?’ போன்ற ஆய்வுரைகளில் காண முடியும். மூலத்தை ஆராயும்போது கல்விப் புலம் சார் ஆய்வுகளின் வடிவம் மட்டுமல்ல, விசாரணை செய்கிற வடிவமும் அவரிடத்தில் இருக்கும். வரலாற்றுச் சான்றுகளோடு கேள்வி கேட்டு, பதிலைச் சொல்லி, முந்தைய விளக்கத்தைப் புறந்தள்ளி, புதியதை முன்வைப்பது அவரது மொழி. ஒரு தீவிர அறிவுஜீவியின் சந்தேகமும், தாகமும், அழுத்தமும் கொண்டது அம்பேத்கரது ஆய்வுமொழி.
சவுத்பரோ மாமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையும், வட்ட மேசை மாநாடுகளில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையும் ஒருசேர ஜாதியின் கொடூரத்தையும் அதனால் நேரடியாகப் பாதிக்கப்படுகிற மக்களின் வலியையும் கடத்துகிற மொழியை அவை கொண்டிருக்கும். அதாவது, ஒரு பண்பாட்டிலிருந்து இன்னொரு பண்பாட்டிற்கு ஒடுக்கப்பட்டோரின் வாழ்வைக் கடத்துகிற மொழியாக, தொடர் விளக்கமாக அமைந்திருக்கும். தன் சமூகத்திலிருந்து எஞ்சியிருக்கிற உலகை விளக்குவதற்குரிய விரிந்த, தனித்த, தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களில் எதிர்த்தரப்போடு விவாதிக்கிற மொழி அது. வரலாற்றிலிருந்து தரவுகளை அப்படியே நகல் எடுக்காமல் வரலாற்றிலிருந்து ஒடுக்கப்பட்டோரின் வாழ்வை விளக்குவதற்கு அம்பேத்கர் அதில் முயலுகிறார். பொய்யிலிருந்து உண்மையைப் பிரிக்கிற வேலையை ஒரு வரலாற்று ஆய்வாளர் செய்வார் என்கிற அம்பேத்கரே, இங்கு அந்த வரலாற்றின் ஒரு பகுதியாகயிருக்கிறார். அந்த வரலாறைப் பிரதிபலிப்பது மட்டுமல்லாது அதைக் கேள்விக்குட்படுத்துகிறார். இந்தச் சமூக விசாரணை வரலாற்றின் தனித்த மொழிகளோடு ஒடுக்கப்பட்டோரின் பார்வையிலிருந்து சமூகவியலின் துணையோடு புதிய வரலாறையும் கட்டமைக்கிறது.
ஒரு கருத்தாக்கத்தின் பலவீனத்தைச் சுட்டிக்காட்டுவதற்காக அழுத்தமான வேறொரு சொல்லாடலை அம்பேத்கர் பயன்படுத்துவார். இதை தீண்டாமையின் தோற்றம் பற்றிய ஆய்விலும், ‘தீண்டப்படாதவர்கள் யார்?’ என்கிற ஆய்விலும் உணர முடியும். தலித்துகளை தீண்டப்படாதவர்கள் என்று இழிசொல்லாகப் பயன்படுத்திய சமூக அரசியல் சூழலில், வட்ட மேசை மாநாட்டில் பேசுகிறபோது புதியதொரு சொல்லாடலின் வழியாக விளக்கமளிக்க அம்பேத்கர் முயலுகிறார். தீண்டப்படாதவர்கள் எனும் பழைய சொல்லுக்கு மாற்றாக Depressed Classes, Non-Caste Hindus, Protestant Hindus, Non – Conformist Hindus, Excluded Castes, Exterior Castes என்று அம்பேத்கர் குறிப்பிடுவார். இந்தச் சொற்கள் தீண்டப்படாதவருக்கு நேர் எதிரான பொருளையும் எதிர்குரலையும் கொண்டிருப்பவை. குறிப்பாக, ‘எதிர்க்கிற இந்துக்கள்’, ‘ஏற்க மறுக்கும் இந்துக்கள்’ என்பவற்றைக் கூறலாம். அம்பேத்கரின் ஆழ்ந்த மொழிவளத்திற்கு இவை பொருத்தமான எடுத்துக்காட்டாகும்.
ஒரு சொல்லின் அடிப்படையான பொருள், அது பயன்படுத்தப்பட வேண்டிய பொருத்தமான சூழல், அதன் பயன்பாட்டு முக்கியத்துவம் என்பவற்றின் அடிப்படையில் அக்காலத்திய பின்புலத்தில் மாற்றுச் சொல்லை எதிர்ச் சொல்லாக (counter argument) விரித்துப் பேசத் தொடங்குகிறார். அதற்குரிய வேற்றுப் பண்பாட்டையும், பின்னணியையும் முன்வைத்து உலகளாவிய சிந்தனைப் போக்குகளையும் எடுத்துக்காட்டுகளையும் முன்வைத்து ஒப்புநோக்குகிறார். குறிப்பாக, பெருந்துன்பங்களையும் சித்ரவதைகளையும் அனுபவித்த நாஜிக் காலத்து யூதர்களோடும், ரோம அடிமைகளோடும், கறுப்பினத்தவரோடும் ஒப்பிட்டு இவையெல்லாவற்றையும் விட தீண்டாமை கொடூரமானது, நிரந்தரமானது என அம்பேத்கர் நிறுவுவார். இதனைத் தன்னுடைய முடிவு அல்லது விளக்கம் என்றில்லாமல் பொருத்தமான ஆய்வறிஞர்களின் முடிவுகளோடு விளக்கமளிக்கிறார். அதனால்தான் யாரும் மறுக்க முடியாத வகையில் பல்வேறு மேற்கோள்களை முன்வைத்து உரையாடத் தொடங்குகிறார். இது அம்பேத்கருடைய மொழியின் கூர்மையை வெளிப்படுத்துகிறது. மேற்கோள்களைக் காட்டிலும் தனக்கென்று தனித்த மொழியில் எந்தவொரு கருத்தாக்கதையும் அவர் வரையறுத்தார். அதே நேரத்தில் அறிவுசார் விவாதத்தையும் முன்மொழிந்தார். ஜான் டூவே, எமில் டர்கைம், மேக்ஸ் வெபர், கார்ல் மார்க்ஸ், எட்மண்ட் பர்க். ரூசோ, ஸ்டூவர்ட் மில் என அக்காலத்திய அறிஞர்களின் கருத்தாக்கங்களை உள்வாங்கிக்கொண்டாலும் இந்தியாவின் படிநிலையான சமூக அமைப்பில் எது பொருத்தமானது என்பதை ஒடுக்கப்பட்டவர்களின் பார்வையிலிருந்து மாற்று வழியைச் சிந்தித்தார். அம்பேத்கரின் ஆய்வு ஒவ்வொன்றும் தனித்தனியே தொடங்கினாலும், தனித்தனி கருத்தாக்கங்களைக் கொண்டிருந்தாலும் எல்லாவற்றிலும் ஓர்மையும் தொடர்ச்சியும் இருந்தது. எனவே அம்பேத்கரின் மொழி தனித்து ஒலித்தது.
வரலாறு மற்றும் சமூகவியல் ஆய்வுக் களங்கள்
அம்பேத்கரது ஆய்வியல் முறைகளில் மேலோங்கி நிற்பது வரலாற்றோடு கலந்திருக்கிற புனைவைச் சந்தேகித்து, அதைத் தகுந்த சான்றுகளோடு மறைக்கப்பட்ட வரலாற்றைக் கட்டமைத்தல் என்னும் போக்கு. இரண்டாவது, முந்தைய கருத்துகளை வரலாற்றுக் கருதுகோள்களிலிருந்து விளக்கமளிக்கும் போக்கு மூன்றாவது, உலகளாவிய புத்தொளி மரபையும் அறிவுமரபையும் பகுத்தறிவோடு ஒப்புமைப்படுத்தி நவீன சிந்தனைகளால் முடிவுகளை நோக்கி நகர்தல். எனவே அம்பேத்கரது ஆய்வில் அறிவுஜீவித்தன்மையும், மேதமையும், தனித்த சொல்லாடல்களும் நிறைந்திருப்பதைப் போலவே, கோபமும் அதீத உணர்ச்சியும் இருக்கும். நவீனமும், விடுதலையின் மொழியும், சமூகவியலின் தாக்கமும், தொன்மையைக் கேள்விக்குட்படுத்துகிற தெளிந்த பார்வையும், நீதிக்கான வேட்கையும் கொண்டது அவரது மொழி. அம்பேத்கரது ஆய்வு முறையியலை வரலாற்றுப் பகுப்பாய்வு (historical Analysis) என்பதில் தொடங்கி, ஒப்பீட்டுப் பகுப்பாய்வு (comparative analysis) மற்றும் உள்ளடக்க பகுப்பாய்வு (content analysis) என்பதாக விளங்கிக்கொள்ளலாம்.
அம்பேத்கருடைய எழுத்துகளை உரையாகவும், உரைகளை எழுத்தாகவும் தலைகீழ்படுத்தினாலும் ஒரே உணர்வு நமக்கு மேலிடுவதற்கு அவருடைய ஆய்வின் ஆழமும் அதன் விரிந்த பரப்புமே அடித்தளமாகும். இணையாக மற்றொரு புரிதலும் அவருடைய எழுத்துகளை வாசிக்கிறபோது நமக்குக் கிடைக்கப் பெறுகிறது. அதாவது, அவருடைய எழுத்துகளில் அறிமுகம் என்ற பகுதியும், முந்தைய ஆய்வுகள் மற்றும் அது பற்றிய அம்பேத்கருடைய கண்ணோட்டமும், அதற்கு வரலாற்றிலிருந்தும் சமூக எதார்த்தத்திலிருந்தும் எழுப்பப்படும் விரிவான கேள்விகள் அதற்குரிய பதிலுரைகள், எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தும் திறனாய்வுகள், மாற்றிக்கொள்ளக் கூடிய தற்காலிக முடிவுரைகள் என்பதாக அமைகின்றன. இது சமூக ஆய்வியலின் சட்டகத்திற்குள் நேர்த்தியாகப் பொருந்திப் போவதை ஆய்வாளர்கள் உணர முடியும்.
எமில் டர்கைம் என்கிற புகழ்மிக்கச் சமூகவியலாளர் நம்முடைய சமூகத்தின் அன்றாடச் செயற்பாடுகளிலிருந்து தோன்றுகிற உறவுநிலைகளை இரண்டாகப் பிரிக்கிறார். ஒன்று இயந்திரத்தனமான ஒன்றிணைவு (mechanical solidarity), இரண்டாவது உயிர்ப்புள்ள ஒன்றிணைவு (organic solidarity). இயந்திரத்தனமான ஒன்றிணைவு என்பது சார்பற்றத் தன்மையில் அதாவது, மனிதர்களைச் சார்ந்து வாழாமல் தனித்தனியான வேலைகளைச் சமூகத்தில் செய்துகொண்டிருப்பவர்களைக் குறிப்பிடுவார். ஒரு தொழிற்சாலையில் பணியாற்றுகிற பணியாளர்கள் யாரையும் கவனியாது அக்கறை கொள்ளாது தன்னுடைய வேலையை மட்டும் செய்துகொண்டிருப்பார்கள். உயிர்ப்புள்ள ஒன்றிணைவில் மனிதர்கள் ஒருவரையொருவர் சார்ந்து வாழுவர். ஒருவர் மீது ஒருவர் அக்கறை கொள்ளுவர். இது வளர்ச்சியடைந்த நாகரிகச் சமூகத்தில்தான் நிகழும் என்கிறார் டர்கைம்.
அறிஞர் அம்பேத்கரோ டர்கைமின் தாக்கத்திலிருந்து மூன்றாவதாகச் சமூக ஒன்றிணைவு (social solidarity) என்னும் கருத்தாக்கத்தை உருவாக்குகிறார். அதாவது, சமூகத்தில் ஒன்றித்து வாழ முயற்சித்தல். சமூக உறவுகளில்தான் ஜனநாயகத்தின் வேர்களைத் தேடிப் பார்க்க முடியும் என்கிற அம்பேத்கர், ஏற்றத்தாழ்வான இந்தியச் சமூகத்தில் ஒன்றித்து வாழ்தலை இந்து மதம் தர முடியாது, அறவியலின் அடிப்படையிலான பௌத்தமே தர முடியும் அல்லது பாராளுமன்ற ஜனநாயகம் சமூக ஜனநாயகமாக மாற்றம் பெறுகிறபோது ஒன்றித்து வாழும் முறை சாத்தியப்படும் என முன்மொழிகிறார். ஜனநாயகம் என்பது அம்பேத்கர் குறிப்பிடுவதன் பின்னணியில் பலர் இணைந்து அதாவது ஒன்றாக இணைந்து ஆளுகை செய்தல் என்பதாகிறது. அதே நேரத்தில் ஒரே வர்க்கம் பிறரைத் தொடர்ந்து ஆளுகை செய்வதைத் தடுத்தல் என்றும் இதற்குப் பொருளாகிறது. அதனால்தான் சமூக ஜனநாயகமே பாராளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படை என்பதோடு, அதுவே மக்களின் நலன் என்கிறார். பௌத்தம் இந்தக் கூட்டு வாழ்வியலை, பாகுபாடற்று இணைந்து வாழ்வதை இயல்பாகக் கொண்டிருக்கிறது எனவும், அதற்குச் சங்கம் உதாரணம் எனவும் அம்பேத்கர் குறிப்பிடுகிறார். ஏனென்றால், கட்டளையிடுவதன் மூலம் அல்லது வலியுறுத்திக் கூறுவதன் மூலம் ஜனநாயகத்தையோ ஒன்றிணைவதையோ உருவாக்க முடியாது என்பது அம்பேத்கருடைய வாதம். அதனால்தான் மக்களைப் பிளவுபடுத்துகிற, மேல் கீழ் எனப் பிரிக்கிற மதநூல்களையும், சாஸ்திரங்களையும், மனுஸ்மிருதியையும் அறம் மற்றும் நீதியின் பார்வையில் கட்டுடைக்கிறார். உறுதியாக நிருபணம் செய்ய முடியாததை, நாம் வாழும் சமூகத்திற்குத் தொடர்பற்று இருப்பதை அல்லது சமூக உறவுகளுக்கு முரண்பாடாகயிருப்பதைப் புறந்தள்ளுகிறார். தன்னுடைய இறுதி நூலான ‘புத்தரும் அவரது தம்மமு’மில் பகுத்தறிவிற்குப் புறம்பாகயிருப்பது புத்தரால் சொல்லப்படவில்லை என்கிறார்.
சமூக அரசியல் களங்களில் அம்பேத்கர் முன்வைத்த முழக்கங்களும் மிகவும் முக்கியமானவையாகும். ஏனென்றால், அவை உலகின் பல்வேறு புரட்சிகளிலும் கலகங்களிலும் தொழிலாளர்களால், இயக்கங்களால், தத்துவவாதிகளால், அறிவுஜீவிகளால் பயன்படுத்தப்பட்டவையாகும். ஜெர்மனியின் சோசலிசக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும், கார்ல் மார்க்ஸின் நண்பருமான பெர்டினான்ட் லசாலிடமிருந்து தொழிலாளர் உரிமைகளை அறிந்துகொள்கிறார்; மதத்தினுடைய சமூகப் பங்களிப்பிற்கும் முக்கியத்துவத்திற்கும் ஹெர்பர்ட் ஸ்பென்சரையும் எமில் டர்கைமையும் எடுத்துக்கொள்கிறார்; மதம் என்கிற அமைப்பையே சுரண்டலுக்கு எதிராக மாற்ற முனைந்து அதில் வெற்றியும் கண்ட மார்ட்டின் லூதரை உள்வாங்கிக்கொள்கிறார்; மத நம்பிக்கையாளர்களாக இருந்து செயற்பட்ட தூய பவுல் அடிகளையும் பில்கிரிம் பாதிரியார்களையும் ஜனநாயக, சமத்துவக் கருத்துகளை முன்மொழிந்தவர்களாக எடுத்துக்கொள்கிறார்; தன்னுடைய சமூகவியலின் முக்கிய கருத்தாக்கங்களுக்கு கேபிரியெல் தார்டேவையும், பொருளியலுக்கு எட்வர்ட் செலிக்மேனையும் எட்வர்ட் கேனையும், பிரான்ஸ் போவாஸிடமிருந்து மானுடவியலையும் கற்றுக்கொள்கிறார். ரோம சமூக அமைப்பில் இருந்த முரண்பாடுகளை இந்தியச் சூழலோடு ஒப்புநோக்குவதற்காக அந்நாட்டுக் குடிமக்களான பாட்ரிசியன்களையும் பிளேபியன்களையும் எடுத்துக்கொள்கிறார்; சோசலிசம் பற்றிய அடிப்படைக் கருத்தாக்கங்களுக்குப் பிரிட்டிஷ் சோசலிச இயக்கத்தின் தலைவரான வில்லியம் மோரிசையும் தன்னுடைய ஆசிரியரான ஜான் டுவேயையும் ஆதர்சமாகக் கொள்கிறார். பிரெஞ்சு புரட்சியிலிருந்து மதத்திற்கு எதிரான கலகத்திற்கும், ரோம சமூகத்தைப் படிநிலையான அடிமை முறைக்கும், ஜெர்மனியை இனஅழிப்பிற்குரிய முன்னுதாரணமாகவும் தன்னுடைய ஆய்விற்கு அம்பேத்கர் எடுத்துக்கொள்கிறார். ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிராக ஹிட்லரால் அதிகம் பயன்படுத்தப்பட்ட சொல்தான் Annihilation (of caste). இந்தச் சொல்லுக்கும் மத மற்றும் இறையியலின் விரிந்த யூதப் பின்னணியம் உண்டு. ‘ஒன்றுமில்லாமை’ (ex-nihilo) என்னும் வேர்ச்சொல்லிருந்து இந்தப் பொருள் வருகிறது. அதாவது, மதத்தோடு தொடர்புடைய ஜாதியை அதன் வேர்வரை சென்று ஒன்றுமில்லாமல் ஆக்குவது என்பதாலேயே Eradication, Abolition, Destruction என்பதற்கு மாற்றாக ஆழமான பொருளில் ஜாதியை அழித்து, அது இருந்த இடம் தெரியாது ஒன்றுமில்லாதாக்குதல் என அம்பேத்கர் மிகக் கவனமாகப் பயன்படுத்துகிறார்.
பிறிதொரு எடுத்துக்காட்டாக கற்பி, கிளர்ச்சி செய், ஒன்று சேர் என்னும் முழக்கங்களை எடுத்துக்கொள்ளலாம். கற்பித்தல் என்பது அறிவுசார் செயற்பாடு, கிளர்ச்சி செய் என்பது அரசியல் நடவடிக்கை, ஒன்றுபடு என்பது சமூகச் செயற்பாடு அல்லது செயல்களை மையப்படுத்தியது. தன்னுடைய மக்களுக்கான, சங்கத்திற்குரிய இலக்கைத் தீர்மானிக்கிறபோது முன்திட்டமில்லாமல் இதனை அம்பேத்கர் வைக்கவில்லை. தீர்க்கமான பார்வையோடும் ஆழ்ந்த புரிதலோடும் மக்கள் முன் வைக்கிறார். ஏனென்றால் எழுச்சி மிகுந்த முழக்கங்களைக் கொண்ட அமைப்பிற்கு ஒரு தத்துவம் தேவை, ஒரு தலைவர் தேவை, அதற்கோர் அரசியல் செயல்திட்டமும் தேவை. எளிய மக்கள் மனதில் இருத்திக்கொள்ளும் வகையிலும் மக்களைச் செயற்பாட்டிற்குத் தூண்டுகிற வகையிலும், அரசியல்படுத்தப்படுவதாகவும் இருக்க வேண்டும் என அம்பேத்கர் கருதியிருக்க வேண்டும். அறிவுத்தளத்தில் அம்பேத்கருடைய காலத்தில் அதிகாரம் செலுத்திய மொழியாக அவருடைய மொழி இருந்தது என்பதில் எவ்விதமான ஐயமுமில்லை. பொதுவான ஒரு தலைப்பில் பேசும்போதும் Frontal Attack, Direct Attack, Direct Action, Struggle, Agitation, Social Order, Weapon, Battle, War, Misfire, Retaliation, Revenge என்கிற சொல்லாடல்களை அம்பேத்கர் தொடர்ந்து வலியுறுத்துவதைப் பார்க்கலாம். நம்முடைய யுத்தம் மானுட விடுதலைக்கான யுத்தம், சுயமரியாதைக்கான யுத்தம், எதிர்கால வாழ்விற்கான யுத்தம், புதிய யுகத்தைப் படைப்பதற்கான யுத்தம், இது ஒரு நிரந்தரமான யுத்தம். அதைப் போன்றே இந்திய வரலாற்றுக்கு ஒற்றை வரியில் விளக்கம் கூறும்போதும் பார்ப்பனியத்திற்கும் பௌத்தத்திற்குமான யுத்தம் என்பார். இந்து மதத்தைவிட்டு வெளியேறும்போது இந்துக்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்குமான யுத்தம் என்பார். யுத்தத்திற்குத் தன்னுடைய படைவீரர்களைத் திரட்டுகிற ஒரு தலைமை போர் வீரராக இராணுவ ஒழுங்கோடு அம்பேத்கர் அணிதிரட்டுகிறார்.
நேர்மறையாகச் சொல்லி புரிய வைப்பதைப் போலவே இருமை எதிர்நிலையிலும் தன்னுடைய கருத்தை அம்பேத்கர் முன்வைக்கிறார். ஜாதியின் செயற்பாடுகள் ஒரு சமூக அமைப்பு எந்த அளவு பாகுபடுத்துவதாக இருக்கிறது என்பதற்கு அழுத்தம் கொடுக்க ஏறுவரிசையில் ஜாதிகள் மேன்மையாகவும், இறங்கு வரிசையில் இழிவாகவும் உள்ளது என்பார் (Reverence and contempt). அதைப் போன்றே அரசியலமைப்பு என்பது ‘கோயில்’ – வெளியேற்ற வேண்டியது – பேய், பழைய உடல் x புதிய உடல், நோயுற்ற உடல் x நோயற்ற உடல், மதிப்பு x வெறுப்பு, புனிதம் x தீட்டு, மதம் x மதச்சார்பற்றது, சமூக ஒழுங்கு x இந்து சமூக ஒழுங்கு, காலனி x இந்து காலனி, ஏகாதிபத்தியம் x இந்து ஏகாதிபத்தியம் என மனதில் பதியவைக்கும் முறையில் எளிய மக்களிடம் பேசினார். ஆனால், அந்தச் சொல்லமைப்பு ஓர் உயர்ந்த மொழி நடையை இலக்கண அமைப்போடு கொண்டிருக்கும்.
அம்பேத்கரின் எழுத்துகளை வேகமாகப் பார்வையிடுகிற எளிய வாசகருக்கும் அல்லது மாணவருக்கும் அதன் ஆழமும் வீச்சும் புலப்படும். அதற்கு அம்பேத்கரது மொழி வளமே அடிப்படையானதாக இருக்கிறது. ஏனென்றால், கோட்பாடுகளையும் கருத்தாக்கங்களையும் சமூக அரசியல் மொழி நடையில் அறிவியல் பூர்வமாக ஆய்வு முறையியலோடு நம்முன் வைக்கிறார். அதற்கான அனைத்து ஆய்வியல் போக்குகளையும் கவனமாகக் கையாளுகிறார். அம்பேத்கரது ஆய்வில் ஒரு பரந்த சிந்தனைப் போக்கும் பன்னாட்டுத் தன்மையும் இருக்கும். அதனால்தான் சாக்ரடிஸுடனும் கிராம்சியுடனும் அம்பேத்கரை இன்றைக்கு ஒப்பிட முடிகிறது. பண்டைய ரோம சமூகத்தில் வாழ்ந்த அடித்தட்டு மக்களான பிளேபியன்ஸ், ஜப்பானில் போரிடும் வர்க்கமாக அறியப்பட்ட சாமுராய்கள், பண்டைய கிரேக்கக் கடவுளான டெல்பி, பசிபிக் பகுதிகளிலுள்ள ஆதிக்குடிகள் என வேறுபட்ட நிலப்பரப்பிலுள்ள மக்களை நமக்கு அறிமுகம் செய்கிறபோது, அம்மக்களுடைய அரசியல் சமூகச் சூழலோடு, பண்பாட்டையும் பிரதிபலித்து இந்தியப் பண்பாட்டோடு இணைத்துப் பார்க்க ஆய்வுகளின் துணையோடு அழைப்பு விடுக்கிறார்.
எடுத்துக்காட்டாக இந்திய கிராமங்களைப் பற்றிப் பேசும்போது, கிராமங்களின் உண்மையான நிலை என்ன என்பதைச் சொல்லி, அவர் காலத்து ஆளுமையான காந்தியின் கருத்தையும் ஒப்பிட்டு, முந்தைய ஆய்வுகளின் கருத்தையும் எடுத்தாண்டு அதில் உள்ளூர் ஆய்வாளர்களின் கருத்தை நிராகரித்து, குறிப்பாக Baden Bowellஇன் கருத்தை எடுத்துக்கொண்டு தன்னுடைய ஆய்வு முடிவுகளை விரிவான கள எதார்த்தத்தோடும் தகுந்த ஆதாரங்களோடும் முன்வைக்கிறார். இவ்வாறான போக்குகளும் அம்பேத்கரின் ஆய்வில் உண்டு. அதாவது உண்மையைப் பிரித்தல், மற்ற வரலாற்று உண்மைகளோடு ஒப்பிடுதல், அதனை ஆதாரங்களோடு மதிப்பீடு செய்தல், முடிவுகளுக்கு இட்டுச் செல்லுதல். அம்பேத்கருடைய முதல் கட்டுரையில் இதனைத் தெளிவாகக் காண முடியும். மானுடவியலாளர்கள், ஆங்கிலேய அரசு அதிகாரிகள், பேராசிரியர்கள், ஆதிக்க வர்க்கப் பார்வையில் அமைந்த ஆய்வுகள் என ஜாதியைப் பற்றிய முந்தைய கருத்துகளை ஒன்றன் பின் ஒன்றாக அதன் போதாமைகளையும், இந்தியச் சூழலுக்குப் பொருத்தமற்ற தன்மையையும் ஆதாரங்களுடன் கட்டுடைத்துப் புதிய ஆய்வைக் கருதுகோளாக முன்வைக்கிறார். ஒன்றை விளக்குகிற முறையில் மானுட வாழ்வில் ஏற்படுகிற சிக்கல்களைத் தீர்க்கிற விளக்க முறைகளைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துகிறார். அதனால்தான் உலகின் வேற்று நிலப்பரப்பிலுள்ள சமூகக் குழுக்களின் பண்பாட்டு, சமய, சமூக கருத்தாக்கங்களைக் கையாளுகிறார். சமூக உறவுகளின் வளர்ச்சிப் போக்கில் மானுட வளர்ச்சி முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எனவே தனிமனிதர்களின் சமூகச் செயற்பாடுகளைச் சமூக உறவுகள் பாதிக்கின்றன. அதனால் சமூக முரண்பாடுகளும் எழுகின்றன. அதனைத் தீர்க்கின்ற முறைகளை கண்டறிய தன்னுடைய மேற்குலக ஆய்வியலைச் சார்ந்து நிற்கிறார். சமூகவியலாளர் மேக்ஸ் வேபர் இதனை விளக்கமுறை சமூகவியல் (interpretive sociology) என்கிறார். தனிமனிதர்களின் செயற்பாடுகள் ஒரு சமூகத்தின் செயற்பாடுகளைப் பிரதிபலிக்கக் கூடியவையாக இருப்பதினால் அவற்றை நாம் கவனத்தில் எடுத்துக்கொண்டு விளக்கமளிக்க வேண்டும் என்கிற வேபரின் சிந்தனை முற்றிலுமாக அம்பேத்கரின் சிந்தனைப் போக்கிற்கும் ஆய்வுகளுக்கும் பொருந்திப் போகிறது.
ஒரு மொழியோ, ஒரு சொல்லோ, ஒரேயொரு சிறு செய்கையோ அடுத்தவரைக் காயப்படுத்த முடியும் அல்லது அவருடைய ஆளுமையின் மீது தாக்கத்தினைச் செலுத்த முடியும் என்பதினால்தான் சொற்களுக்கு அம்பேத்கர் முக்கியத்துவம் தருகிறார். ஆதிக்க ஜாதிகள் மற்றும் ஆதிக்க வர்க்கத்தினரின் நடத்தையை அம்பேத்கர் கூர்ந்து நோக்கும்போது பண்பாட்டையும் அதன் அடிப்படையான காரணியாகிய மதத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். படிநிலையான சமூக அமைப்பிற்குத் தன்னுடைய ஒடுக்கப்பட்ட உலகிலிருந்து விளக்கம் கொடுக்க முனைகிறார். உலகின் வேறுபட்ட இடங்களில் மக்கள் எழுச்சிகளும் கலகங்களும் நடந்திருந்தாலும் தன்னுடைய சமூகச் சூழலை விளக்குவதற்கு எது பொருத்தமானதாகயிருக்குமோ அதை எடுத்துக்கொள்கிறார். ஓர் இனக்குழுவை அல்லது பண்பாட்டை அறிந்துகொள்ள முனையும் மானுடவியலாளர்கள் அவர்களுடனே தங்கி அம்மக்களினத்தை அறிந்துகொள்வார்கள். அம்பேத்கர் ஜாதியமைப்பையும் அதன் கொடூரத்தையும் உள்ளிருந்து அனுபவித்தவராக இருந்ததால்தான் கூர்நோக்கியதை மட்டும் செய்யாமல் புறக்கூறுகளையும் நேர்மறைச் செயல்பாடுகளையும் எதிர்மறைச் செயற்பாடுகளையும் கவனத்தில் எடுத்துக்கொள்கிறார். அதே நேரத்தில் ஒரு நடைமுறைவாதியாக எதார்த்தத்தில் எது தேவை என்பதையே செய்தார். அதிலேயே நின்றுவிடாமல், புதிய பரப்புகளுக்கும் செயற்பாட்டிற்கும் ஒடுக்கப்பட்டவர்களை அழைத்துச் செல்கிறார்.
தன்னுடைய அறிவாற்றல், விரிந்த வாசிப்பு, பகுத்தறியும் போக்கு, விமர்சனப் பார்வை என்பதன் தொடர்ச்சியாக அறிவார்ந்த பரப்பை வெளிப்படுத்துதல் (exposition), பரந்து வாசித்தல், வாசித்தவற்றை ஆழ்ந்து நோக்குதல் என்னும் அறிதல் விளக்கமுறையின் ஊடாகப் பல்வேறு உலகளாவிய பார்வைகளை முன்மொழிதல் (proposition), ஒடுக்கப்பட்டவரின் ஒற்றைக் கருத்தாக அல்லாது சமூக மாற்றத்தின் நோக்கில் எதிர்கால விளைவை ஏற்படுத்தும் போக்கிலான சான்றாதாரங்களை நிறுவுதல் (construction) என்னும் பயிற்சி புத்தகத்தை, படிநிலையான இந்தியச் சமூகத்தை மாற்றியமைப்பதற்காக நம்முடைய கரங்களில் அறிஞர் அம்பேத்கர் தந்துவிட்டுப் போயிருக்கிறார். ஆனால், சமூக விடுதலையைக் கட்டமைக்கும் கூறுகளையும், ஆழ்ந்த மொழியின் தாக்கத்தையும் கொண்டிருக்கிற இப்பயிற்சிப் புத்தகத்தைப் புரட்டிப் பார்க்காமலேயே நாம் கடந்து செல்வதுதான் கசந்து நிற்கும் உண்மையாகும்.