‘எக்ஸ்ரே’ மாணிக்கம் என்ற பெ.மாணிக்கம்

இ.செல்லத்துரை

பெரியவர் பெ.மாணிக்கம் அவர்கள் சூன் 13, 1937ல் பிறந்தார். என்றுதான் அவரது இரயில்வே பணி பதிவேட்டில் (SR) உள்ளது. அதன்படி அவருக்கு 86 வயது. ஆனால், அவரைப் பள்ளியில் சேர்த்தது ஏழு வயதில் எனக் கூறியுள்ளார். அப்படியானால் உண்மையான வயது 88. அவரது பெற்றோர் பெரிய நாச்சியம்மாள் – பெரியக்கருப்பன்.

அவருக்கு ‘எக்ஸ்ரே’ எனும் அடைமொழி வரக் காரணமாக இருந்தது மற்றவர்கள் மனதில் இருப்பதை அறிந்துணரும் ஆற்றலே எனக் கூறுவார் அவரின் உற்ற நண்பர் ‘எரிமலை’ ஆ.இரத்தினம். அவர்கள் இருவரையும் இரட்டை நண்பர்கள் என்பர். ‘எரிமலை’ மாத இதழ் (தனிப்பிரதி) நடத்தியதால் ‘எரிமலை’ எனும் அடைமொழி அவருக்கும் நிலைப்பெற்றது. [அயனாவரம் மனநலக் காப்பகத்தில் பணிபுரிந்த பெரியவர் அ.கருணாகரன் அவர்களும் ‘எக்ஸ்ரே’ என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார்.]

20.01.1958 இல் திருச்சிராப்பள்ளி டிவிஷனல் (Statistical Branch under Accounts Dept.) புள்ளிவிவர தொகுப்பியல் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியில் சேர்ந்து, 1976இல் பதவி உயர்வு பெற்று, சென்னை தெற்கு இரயில்வே தலைமைப் புள்ளியியல் அலுவலகக் கண்காணிப்பாளராகப் பணிமாற்றலாகி 33 ஆண்டுகள் பணிசெய்து 30.04.1989 அன்று விருப்ப ஓய்வுப் பெற்றார்.

பணிக்காலத்தில், அலுவலக கேண்டீனில் மாலை 5 மணிக்கு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பற்றிய கருத்தியலைத் தொடர்ந்து கற்பித்து சென்னை தலைமை மற்றும் டிவிஷனல் எஸ்.சி / எஸ்.டி தொழிலாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.

சென்னை தலைமைப் புள்ளிவிவர தொகுப்பியல் அலுவலகத்தில் எஸ்.சி / எஸ்.டி போலிச் சான்றிதழ்கள் மூலம் ஆபிஸ் சூப்பிரண்டண்ட் பதவி வகித்த பிற்படுத்தப்பட்டவர் ஒருவர் உட்பட இருவர் மீது, அதே அலுவலகத்தில் பணிபுரிந்த எஸ்.சி / எஸ்.டி ஊழியர்களிடமிருந்து மட்டும் பணம் வசூலித்து, வழக்கு தொடுத்து வெற்றி பெற்றதன் விளைவாகப் போலிச் சாதிச் சான்றிதழ்கள் மூலம் பணியில் இருந்த இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டு, உரிய நபர்கள் பதவி உயர்வு பெற வழி கண்டவர்.

அன்றைய காங்கிரஸ் எம்.பி. அன்பரசுவைக் காப்பாளராகக் கொண்டு புதிதாகத் துவக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட தொழிலாளிகளின் அப்ரெஸ்டு யூனியன், “அய்யா ‘எக்ஸ்ரே’ பெ.மாணிக்கம் எஸ்சி அல்ல. அவர் போலியான சாதிச் சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்தார்” எனத் தொல்லைக் கொடுக்கத் துவங்கினர். அதையடுத்து, அவர் புதிதாக எஸ்சி சான்றிதழ் பெற்றுவர வேண்டும் என்று சிபிஒ அலுவலகத்திலிருந்து ஒரு கடிதம் வழங்கப்பட்டது. அந்த இக்கட்டான நேரத்தில் அவருக்கு உதவியாக இருந்து ஊக்கம் தந்தவர் SPO(R) என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ஆலோசனைப்படி கீழ்க்கண்டவாறு பதில் கடிதம் விடுத்தார்.

“உண்மையான எஸ்சிகளுக்குச் சாதிச் சான்றிதழ் அவ்வளவு எளிதில் வழங்கமாட்டார்கள். நானோ உண்மைமையான எஸ்சி. ஆகவே, எனக்குத் தங்களது (நிர்வாகம்) அலுவலகக் கணக்கின் சார்பாக ஒருமாத விடுப்பும் பாஸும் வழங்கினால் நான் ஊருக்குச் சென்று எஸ்சி சாதிச் சான்றிதழ் பெற்று வர இயலும்.”

இரயில்வே நிர்வாகம் அப்படி லீவும் பாஸும் கொடுக்குமா? அந்தப் பிரச்சினை அத்துடன் முடிவுக்கு வந்தது. காங்கிரஸ் எம்.பி. அன்பரசு பெரும் ‘மேதாவி’ என்பேன். காரணம், அவர் உதிர்த்த வார்த்தை: “பதவி உயர்வு இடஒதுக்கீட்டால் எஸ்சி / எஸ்டி பியூன் கூட ஜெனரல் மானேஜர் ஆகிவிடுவார்.” (அய்யா மாணிக்கம், எழுத்தராக 18 ஆண்டுகள் பணியாற்றிய பின்தான் ஆபிஸ் சூப்பிரண்டண்ட் பதவி கிடைத்தது.) இத்தகைய கொடூர மனம் கொண்டவர்கள் எம்.பி.யாக இருந்தால் எஸ்சி / எஸ்டி மக்களின் மேம்பாட்டிற்காகவும் வன்கொடுமைகளுக்கு எதிராகவும் பேசுவார்களா?

அவரது உடனடி சீனியர் புள்ளியியல் அதிகாரி (SSO/HQ) வரதராஜன் (எஸ்.சி) அவர்கள் ஏற்படுத்திய பிணக்குக் காரணமாக 1989இல் விருப்ப ஓய்வு பெற்றார். அவ்வாறு செய்ய வேண்டாம் என அவருக்கு மிக நெருங்கிய நண்பர்கள் கேட்டுக்கொண்டும் விருப்பு ஓய்வைத் திரும்பப் பெற மறுத்துவிட்டார். அதேபோல் இரயில்வே அப்ரெண்டிஸ் ஆள் சேர்ப்பில் செழியன் போன்றோர் சிபாரிசு மூலம் அவரது மகனுக்கு உதவ முன்வந்தபோதும் மறுத்துவிட்டார். இதை சகோதரர் செழியன் பின்னாளில் என்னிடம் சொன்னார். அதுகுறித்து அவரிடம் கேட்டபோது, “எப்படியானாலும் ஓர் எஸ்.சிதானே தேர்வு செய்யப்படுவார். அதற்கு இடையூறாக இருந்திட விரும்பவில்லை” என்றார்.

அப்போது நான் அயனாவரம் அக்கவுண்ட் ஆபிசில் கணக்கு எழுத்தர் பணியில் ஒர்க் ஷாப் தொழிலாளர்களுக்குச் சம்பளம் போடும் பிரிவில் இருந்தேன். ராஜி நாயக்கன் தெருவில் வசித்துவந்தேன். அச்சமயம் எனது உறவினர் ஜோதி மகேந்திரன், அயனாவரம் மேட்டுத்தெருவில் வசித்துவந்தார். ஒருநாள் (1984) அவருடன் பணிபுரிந்த ஜீவரத்தினத்தை அறிமுகப்படுத்தினார். தம்புசெட்டித் தெருவில் இருந்த யூகோ வங்கியில் பணிபுரிந்த இருவரும் எஸ்சி / எஸ்டி நலச்சங்கத்திலும் பணியாற்றிவந்தனர். அவர் “மாணிக்கம் அவர்களைத் தெரியுமா” என என்னைக் கேட்டார். “தெரியாது” என்றேன். உடனே மாணிக்கம் அவர்களைப் பற்றி அவர் கூறியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை. அப்போது ஒருமுறை சொல்லின் செல்வர் சக்திதாசன், பேராசிரியர் பி.தங்கராஜ் (ஈவெராவாதி) இருவரும் பேசுவதாக அறிந்து தலைமை அலுவலகக் கேண்டீனுக்குச் சென்றேன். அய்யா மாணிக்கம் தலைமையில் நடந்த அக்கூட்டத்தில் முதன்முறையாக பேரறிஞர் அம்பேத்கர் பற்றிய பேச்சைக் கேட்கும் வாய்ப்புப் பெற்றேன்.

அப்போது சென்னை அலுவலகத்தில் காசாளர் பணியிடம் காலியாக இருந்தும் என்னைப் பெங்களூர் கண்டோன்மெண்டுக்குப் பணிமாற்றம் செய்தனர். பெங்களூரில் இரண்டரை ஆண்டுகள் பணியாற்றிவிட்டு மீண்டும் சென்னை தலைமை அலுவலகத்திற்கு மூத்தக் காசாளராக திரும்பி வந்தேன். அக்காலகட்டத்தில் மதிய உணவு நேரத்தில் அருகில் இருக்கும் பூங்கா டவுன் CLS (The Christian Literature Society) புத்தக நிலையத்திற்குச் சென்று டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் புத்தகங்களில் புதுவரவு என்னென்ன என்று அறிந்துவருவேன். அப்படி ஒருமுறை ‘எரிமலை’ இரத்தினம் என்னை அங்கு பார்த்துள்ளார். நான் வெளியேறும்போது பின்னாலே வந்து “டாக்டர் அம்பேத்கர் புத்தகங்கள் மீது என்ன அக்கறை” என வினவினார். “நான் ஓர் அம்பேத்கர்வாதி” என்றேன். அன்றிலிருந்துதான் அவரது நட்பு கிடைத்தது. அவர் ‘எக்ஸ்ரே’ மாணிக்கம் அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தினார். அதன்பின் நான் அவர்களுடன் மாலை நேரத்தில் அன்றைய நேரு அரங்கத்தின் முன்னுள்ள பூங்காவில் முன்னாள் சென்னை மேயர் (தந்தை) திரு.குசேலர் அவர்களால் வைக்கப்பட்டிருந்த டாக்டர் பாபாசாகேப் சிலைக்கு முன் ஆர்பிஐ கட்சித் தலைவர் மு.சுந்தரராசனைச் சந்தித்து, அவர்கள் உரையாடுவதைக் கவனித்துவருவேன்.

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் படத்தைச் சட்டமன்றத்தில் வைத்திட அன்றைய முதல்வர் மு.கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தார் மு.சுந்தரராசனார். ஆனால், கருணாநிதிக்கு அப்படியோர் எண்ணமில்லை. ஆகவே, மு.சுந்தரராசனாரின் துணைவியார் திருமதி.ஜெகதீஸ்வரி சட்டமன்றப் பார்வையாளர்கள் வளாகத்திலிருந்து துண்டறிக்கை ஒன்றைச் சட்டசபைக்குள் வீசினார். அதற்காகப் பதினைந்து நாள் சிறை தண்டனை வழங்கினார் முதல்வர். அதன்பிறகுதான் பார்வையாளர்கள் வளாகத்திலிருந்து துண்டறிக்கைகள் ஏதுவும் வீச முடியாதவாறு கம்பி வலைகள் வைக்கப்பட்டன.

பின்னர் எம்ஜிஆர் முதல்வரானபோது அதே கோரிக்கை வைக்கப்பட்டு, அவர் அதை நிறைவேற்றினார். டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் போட்டோ திறப்பு விழா அன்று நானும் ஒரு பார்வையாளராகச் சென்றிருந்தேன். தமிழகச் சட்டமன்றம் சென்றது அதுவே முதலும் கடைசியுமாகும். அதன் பெருமை திரு.செ.கு.தமிழரனையே (ஆர்பிஐ எம்எல்ஏ) சாரும். ஆனால், அன்று முத்துராமலிங்கம் தேவர் படமும் திறந்து வைக்கப்பட்டது.

ஆரியசங்காரன் – எஸ்.எம்.துரைராஜ்

எம்ஜிஆர் அதிமுக ஆரம்பித்தபோது திரு. எஸ்.எம்.துரைராஜுக்குக் கட்சியின் பொருளாளர் பதவியை வழங்கினார். காரணம், அன்று திமுக பொதுக் குழுவில் எம்ஜிஆர் நீக்கப்பட்டதைக் கண்டித்து அவருக்கு ஆதரவாகப் பேசினார். கை ரிக்சாவுக்குப் பதிலாக சைக்கிள் ரிக்சா வழங்கிய காலத்திலிருந்து நட்பு இருந்திருக்கும் போலும். ஆகவேதான் அவர் கார் மீது லாரியை இடிக்கச் செய்து கொலைச் செய்யப்பட்டாரோ எனும் ஐயம் எனக்குள்ளது. இதுபோன்ற லாரி விபத்திலிருந்து உயிர்த்தப்பியவர் ஜெயலலிதா மட்டுமே.

(26.02.1973 அன்று தளபதி. ஆரியசங்காரன் இதுபோன்ற கார் விபத்தில் அகால மரணமடைந்தார். அவரது இறுதி ஊர்வலத்தில் ஓட்டேரி சுடுகாடுவரை எம்ஜிஆர் நடந்தே சென்றுள்ளார்.)

டீக்கடைகளில் இரட்டைக் குவளை முறையைப் பற்றிப் பேசாத எம்எல்ஏக்களுக்குச் சட்டமன்றம் முன்பு தனிக் குவளை வழங்கிய போராட்டம். இரயில்வே தொழிலாளர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள கத்தி வழங்கி தலைவர் மு.சுந்தரராசானார் நடத்திய போராட்டம் ஆகியவை கவனத்திற்குரியவை.

‘காந்தி’ திரைப்படத்திற்கு எதிர்ப்புக் காட்டிட, படம் ஓடிய திரையரங்குகளில் தண்ணீர் பாம்பைவிட்டுப் போராட்டம் நடத்தியவர் ‘எக்ஸ்ரே’ பெ.மாணிக்கம்.

‘ஒரே ஒரு கிராமத்திலே’

ஒவ்வொரு மாதமும் 2ஆம் தேதி தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டடத்தில் (LLA) ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கூடும் டாக்டர் அம்பேத்கர் அக்கெடமி கூட்டத்தில் ‘ஒரே ஒரு கிராமத்திலே’ எனும் திரைப்படத்தைப் பற்றி அனைவரும் அறியும்படிச் செய்தவர் அன்றைய பத்திரப்பதிவுத் துறை அதிகாரி திரு.குழந்தைசாமி. அதைப் போராட்டமாக மாற்றிய பெருமை டாக்டர் அ.பத்மநாபன் அவர்களையே சாரும். அனைத்து எஸ்.சி / எஸ்.டி தொழிலாளர்கள் நலச் சங்கங்களையும் அழைத்து ஆலோசனை மற்றும் வழக்கிற்காகும் செலவிற்கு முடிந்த அளவு நன்கொடை வழங்கிடக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

‘ஒரே ஒரு கிராமத்திலே’ திரைப்படத்திற்கு எதிரான போராட்டம் சென்னை அண்ணா சாலையில் நடந்தது. அதை நினைவுகூர்ந்த ‘எக்ஸ்ரே’, ‘எரிமலை’யைத் தூக்கி வேனில் தள்ளியதையும், அதைப் பார்த்த சகோதரர் எல்ஐசி பிரபாகரராவ் பாய்ந்து சென்று தடுக்கப் போனதையும், அவரையும் தூக்கி வேனில் எறிந்த காட்சிகளையும் விவரித்துள்ளார். ‘எக்ஸ்ரே மாணிக்கம் எரிமலை ஆ.இரத்தினம் – சமூகச் சிந்தனைகள்’ என்ற பெயரில் ‘எரிமலை’, ‘சிவில் உரிமை’ ஆகிய பத்திரிகைகள் பற்றி தொகுத்தளித்தவர் சகோதரர் கோவி. பார்த்திபன்.

பின்னர் அப்படத்திற்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தபோது பார்வையாளர்களாகச் சென்றவர்கள் வழக்கு – திரைப்படத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். அதனைத் தொடர்ந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

சக்தியார், வை.பா

அரசியல் தலைவர்கள் சக்தியார், வை.பா போன்றோர் சாலையில் அமர்ந்து முழக்கமிட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அத்திரைப்படம், வேலைவாய்ப்புகளில் எஸ்.சி / எஸ்.டி இடஒதுக்கீடுக்கு எதிரானது. போலிச் சான்றிதழ் மூலம் அதிகாரியான பார்ப்பன பெண் பற்றியது. அதைப் படமாக்கியவர்கள் இந்து ஆங்கில நாளிதழோடு சம்பந்தப்பட்டவர்கள். கதை – வசனம் வாலி, இசை இளையராஜா, நடிகை லட்சுமி. வழக்கு உச்ச நீதிமன்றம் சென்றபோது இரட்டையர்கள் அங்கும் சென்றனர். அவ்வழக்கில், போலிச் சான்றிதழ் மூலம் ஐஏஎஸ் வேலை பெற்றவர் பணி நீக்கம் செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்படும் காட்சி சேர்க்கப்பட வேண்டும் என்பதே உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு. அவ்வாறு திரைப்படத்தின் முடிவும் மாற்றப்பட்ட பிறகே வெளியிடப்பட்டது. இது மக்களின் ஒன்றிணைந்த போராட்டத்தின் வெற்றியாகும்.

ஆனால் ‘ஒரே ஒரு கிராமத்திலே’ படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் முன் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கடராமன் அப்படத்திற்கு ஜனாதிபதி பரிசு வழங்கினார்.

‘எக்ஸ்ரே’ பெ.மாணிக்கமும் ‘தலித்’ எழில்மலையும் இணைந்து ‘ஜிலீமீ ஹிஸீtஷீuநீலீணீதீறீமீs’ எனும் நூலை ‘மறைக்கப்பட்ட மண்ணின் மைந்தர்கள்’ என்று மொழியாக்கம் செய்துள்ளனர். தலைப்பைத் தமிழாக்கம் செய்யாமல் அவர்களே கொடுத்த தலைப்புச் சரியல்ல என்பது கருத்து. அவற்றில் பாபாசாகேப் குறிப்பிட்ட மேற்கோள்களையும் விட்டுவிட்டனர். அதைப் பற்றி ‘எக்ஸ்ரே’ அவர்களிடமே திராவிட மொழி பற்றிக் கேட்டேன். அவர் தகுந்த பதில் அளிக்கவில்லை. ‘தலித்’, ‘எக்ஸ்ரே’ இருவருக்கும் பெரியார்தாசன் நண்பர்தான்.

இ.செல்லத்துரை

‘பறை அடிப்பதில்லை’ எனும் தன்மானம்

தலைவர் எல்.இளையபெருமாள் பறை அடிப்பதற்கு எதிரானவர். அவரது அழைப்பை ஏற்ற பாண்டியன், போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்தார் என்பதையும் நினைவில் இருத்துவோம். பறை மேளம் அடிப்பதை இரட்டையர்களும் எதிர்ப்புத் தெரிவித்தே வந்தனர். அதுபோல ‘ஹரிஜன்’, ‘தாழ்த்தப்பட்டோர்’, ‘தலித்’ போன்ற சொல்லாடல்களைப் பயன்படுத்துவதையும் எதிர்த்தே வந்தனர். பொன்னேரி கிராமம் ஒன்றில் நாயுடு, ரெட்டிகள் சேர்ந்து சாவுக்குப் பறை அடிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தினர். அதற்கு எஸ்சி மக்கள் “இனிமேல் பறை அடிப்பதில்லை என முடிவெடுத்துவிட்டோம். ஆகவே பறை அடிக்கமாட்டோம்” என்று கூறியுள்ளனர். அதற்காக அம்மக்கள் தாக்கப்பட்டனர். அவர்களது குடிசை வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. தலைவர் மு.சுந்தரராசனார் களமிறங்கினார். அம்மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் வழங்க தீர்மானிக்கப்பட்டது. அனைத்து எஸ்சி / எஸ்டி நலச்சங்கங்களையும் அணுகினார்கள். வழக்கம்போல் இரயில்வே சித்.பாலகிருஷ்ணன் நன்கொடை அளிப்பதாகக் கூறினார். அவர் தர மாட்டார் எனத் தெரிந்தே அணுகினோம். அன்று முக்கிய இரயில்வே உறுப்பினர்களின் கூட்டம் நடைப்பெற்றுக்கொண்டிருந்தது. நானும் கூடவே சென்றிருந்தேன். மற்ற துறை சார்ந்த நலச்சங்கங்கள் ஆதரவுக் கரம் நீட்டினர். தலைவர், காட்டூர் சிவலிங்கம் ஆகியோருடன் நாங்களும் அரிசி, பருப்பு மூட்டைகளுடன் அக்கிராமத்திற்குச் சென்றோம். அங்குள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, சென்னையிலிருந்து எங்களது மக்களுக்காக நாங்கள் வருவோம் எனும் ஓர் எச்சரிக்கையே அது.

பின்னர் ‘எக்ஸ்ரே’, விருப்ப ஓய்வு (VR) பெற்று தான் வசித்த சென்னை பெரம்பூரைவிட்டுச் சொந்தக் கிராமமான சிவகங்கை கொல்லங்குடிக்கு அருகில் உள்ள குருகா(வா)டிப்பட்டிக்கு குடியேறினார். துணைவியார் திருமதி. எம்.சிவபாக்கியம் அவரது செயல்களில் மிக்க உறுதுணையாக இருந்துவந்தார். பவுத்தம் பரவச் செய்வதில் இருவரும் ஆர்வமிக்கவர்கள். கிராமங்களில் தீண்டாமைக்கெதிராக மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்தனர். அரசியல்வாதிகளைச் சந்தித்து “ஆவன செய்யுங்கள் அல்லது எங்களுக்கு ஒத்துழைப்பு நல்குங்கள்” என்றும் கேட்டுக்கொண்டார். அத்தகைய அறப்போர் வாயிலாக அவர்களது கிராமத்திற்குச் சாலை வசதி வந்தது எனலாம்.

அவரது முதல் இரு மகன்களின் – திருநாவுக்கரசு, திருஞானம் – திருமணத்தை ஊரிலேயே நடத்தினார். சென்னையிலிருந்து நாங்களும் போய் கலந்துகொண்டோம். மூன்றாவது மகன் திருப்புகழேந்தி காதல் மணம் புரிந்துகொண்டார் – புகழேந்தி இயற்கை எய்திவிட்டார். ‘எக்ஸ்ரே’ அவர்களுக்குக் கம்யூனிசத்தின் மீது அக்கறை உண்டு. பணிக்கு விடை கொடுத்தக் கையோடு சேலம் சென்று சில கிராமங்களிலுள்ள இளைஞர்களை ஒன்றுதிரட்ட முனைந்து இடையிலேயே கைவிட்டார். பின்னர் புத்தருக்கு ஆலயம் உருவாக்கத் தீவிரமாகச் செயல்பட்டார் என்று அறிந்தோம். ஆனால், அதிலும் வெற்றி அடையவில்லை எனக் கருதுகிறேன்.

சிவில் உரிமை மாத இதழ்

16.10.1988 ஞாயிறன்று மாலை நடைபெற்றக் கூட்டத்தில் சிவில் உரிமை (தனிப்பிரதி) நான்கு பக்க மாத இதழை, பெரியார் திடலில் நான் வெளியிட (இதழைப் பெற்றுக்கொள்ளவிருந்த இரயில்வே பொறியாளர் பொன்.தேசராஜ் அவர்கள் வராததால்) பி.பிரபாகர ராவ் பெற்றுக்கொண்டார். இ.அன்பன் நன்றி நவில விழா இனிதே முடிந்தது.

20.10.1988 இல் அசோக தம்மச் சக்கர பரிவர்த்தனை தினத்தன்று தீக்சா பூமி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டோம். 09.06.1990 இல் பதிவு செய்யப்பட்ட ‘சிவில் உரிமை’ மாத இதழ், பெரம்பூர் நெல்வயல் சாலை புத்த விகாரில் திரு. வி.கருப்பன் ஐஏஎஸ் வெளியிட, முன்னாள் நீதிபதி திரு. கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். மருத்துவர் திரு. சொக்கலிங்கம் சிறப்புரை ஆற்றினார். பவுத்த இடங்களில் வலம் வந்தப் பயணம் என ஓர் உபாசகராக ‘சிவில் உரிமை’ மாத இதழ் ஆசிரியராக 15 கட்டுரைகளை திரு. பெ.மாணிக்கம் அவர்கள் எழுதியுள்ளார். கையில் மலம் அள்ளுவதை ஒழிப்பதில் தீவிரமாகச் செயல்பட்டுள்ளார். உலர் கழிவறைகளுக்குப் பதிலாக செப்டிக் டேங்குடன் அமைந்த கழிவறையைச் சட்டப்பூர்வமாக அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் கொணர்ந்த தடைச் சட்டம் (1993) 19.04.1994 அன்று நிறைவேறியதை வரவேற்று எழுதியுள்ளார்.

‘புத்தரும் அவர் தம்மமும்’

பேராசிரியர் பெரியார்தாசன் மொழிபெயர்த்த ‘புத்தரும் அவர் தம்மமும்’ நூலின் சிறு பகுதியை அரக்கோணத்தில் டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின் தலைவர் பொன்.பெருமாள் (இன்று விசிகவில் உள்ளார்) தலைமையில் வெளியிட இருந்தார் (தேதி தெரியவில்லை). கூட்டம் ஆதிதிராவிட மகாசன சங்கம், அரக்கோணத்தில் நடைபெற்றது. (அவ்விடத்தில் இன்று சென்னை தலைமை தபால் அலுவலகத்தில் பணிபுரிந்த ஜி.மோகனால் கட்டப்பட்ட டாக்டர் அம்பேத்கர் பவனும் புத்த விஹாரும் உள்ளன.]

அழைப்பிற்கிணங்கி தாய்லாந்து பிக்குகளும் கலந்துகொண்டனர். அவர்களை அரக்கோணம் இரயில்வே ஓய்வறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே ஜீவரத்தினத்தைப் ‘புத்த ஜீவா’ என்று பிக்குகளுக்கு அறிமுகப்படுத்தினர். அப்பிக்குகள் “அப்படி அழைக்கக் கூடாது” என்றனர். அப்போது இரயில்வே ஓய்வறைக்கு பெரியார்தாசன் வந்தார். அவர் வெளியிட இருந்த சிறு புத்தகத்தை ‘எக்ஸ்ரே’யிடம் கொடுத்தார். அவர்கள் இருவரும் தர்மம் என்பது தம்மம் எனவும் கர்மம் என்பது கம்மம் எனவும் இருக்க வேண்டும் எனச் சிலவற்றைச் சொன்னார்கள்.

‘புத்தரும் அவர் தம்மமும்’ தமிழ் மொழியாக்க நூல் பற்றி 13.10.1991 அன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்கு வருமாறு பெரியார்தாசன் குறிப்பிட்ட சிலருக்கு 07.10.1991 தேதியிட்ட கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருந்தார். அதில் ‘புத்தரும் அவர் தம்மமும்’ நூல் வெளியிட ஒரு விழாக் குழு அமைக்க உள்ளதாகக் கூறியிருந்தார். அக்கூட்டத்தில் இரட்டையர்கள் என்னை அழைத்ததால் அவர்களோடு நானும் அறிவு வழி அலுவலகம் (அரும்பாக்கம்) சென்றேன். கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் போர்ட்ரஸ்ட் கே.தயாளன், தமிழினியன். அப்போது ‘எக்ஸ்ரே’ சிபாரிசு செய்ததின் பேரில் ஒன்பது பேர் கொண்ட விழாக் குழுவில் நானும் இடம்பெற்றேன். உடனடியாக என்னைப் பொருளாளராக நியமிக்க மு.பா.எழிலரசு முன்மொழிந்தார். நான் மறுத்துவிட்டேன். வெளியீட்டுக் குழுவில் சாதாரண உறுப்பினராக மட்டுமே இருப்பேன் எனக் கூறிவிட்டேன். ஆகவே ‘அறிவு வழி’ மாத இதழ் ஆசிரியர் மு.பா.எழிலரசைப் பொருளாளராக நியமித்தார்கள். ஆனால், அக்கூட்டத்திற்கு வராத இருவர் – அரக்கோணம் பி.பெருமாள், அவர்களது இயக்கத் தோழர் எஸ்.பி.கெங்காதுரை ஆகியோரை நூல் வெளியீட்டுக் குழு உறுப்பினராக பெரியார்தாசனே நியமித்தார். அத்தோடு தோழர்கள் ‘எக்ஸ்ரே’ மாணிக்கம் தலைவராகவும், ‘எரிமலை’ இரத்தினம் செயலாளராகவும், ஆறு பேர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர். ஒன்பது உறுப்பினர்களில் பெரியார்தாசனும் ஒருவர். The Buddha and His Dhamma ஆங்கில நூலின் தமிழ் மொழியாக்கத்தை ‘எக்ஸ்ரே’ மாணிக்கம், ‘எரிமலை’ இரத்தினம் இருவரும் பரிசீலித்து உதவுமாறு கேட்டுக்கொண்டு நியமித்தார். அவர்களது பரிசீலனைக்குப் பின் மட்டுமே அந்நூல் வெளியிடப்படும் என்றும் அறிவித்தார். அடுத்து புத்தக நன்கொடை இரசீது அச்சடிக்கப்பட்டு, புத்தக விலை ரூ.100 எனத் தீர்மானிக்கப்பட்டு 01.03.1992 அன்று பெரம்பூர் நெல்வயல் சாலை தென்னிந்திய சாக்கிய புத்த விகாரில் வழங்கப்பட்டது. 14.04.1992 அன்று வெளியிடுவதாக முடிவும் செய்யப்பட்டது. புத்தகம் வாசிப்போர் இரசீதைப் பெற்றுச் சென்றனர். காலதாமதம் ஏற்பட்டது. அதற்குக் காரணம், மொழியாக்கத்தைப் பரிசீலனை செய்வதற்கு பெரியார்தாசனால் வழங்க இயலவில்லையா, அல்லது ஏதோ காரணத்தால் ஒத்துழைக்க மறுத்தாரா என்பது அவர்கள் மூவருக்குமே வெளிச்சம். ஒரே ஒருமுறை அவர்கள் எப்படி மொழியாக்கம் செய்கின்றனர் என காணச் சென்றேன். ஆங்கிலச் சொல்லை மொழிபெயர்ப்பதில் ‘எரிமலை’க்கும் பெரியார்தாசனுக்கும் கருத்து வேறுபாடு வாய்த்தகராறாக முற்றி, எழுதியதைக் கிழித்து எறிந்துவிட்டார் பெரியார்தாசன். இருவரையும் சமாதானம் செய்தார் ‘எக்ஸ்ரே’. அன்று அரும்பாக்கத்தில் இருக்கும் துரை, மு.பா.எழிலரசு என நாங்கள் ஆறு பேர் மட்டுமே இருந்தோம். பரிசீலனை முடிந்தவுடன் மு.பா.எழிலரசு அப்பிரதிகளை வாங்கிச் சென்றுவிடுவார். ஒருநாள் மு.பா.எழிலரசை அணுகி அந்தப் பிரதிகளை மீண்டும் சரிபார்க்க வேண்டும் எனக் கேட்ட பெரியார்தாசன், அதை ஓர் அச்சகத்தில் கொடுத்து வெளியிடப் போகிறேன் என்றும் கூறியிருக்கிறார். இதற்கிடையே இரசீதுகளைப் பெற்றுச் சென்றவர்களும் வசூலான தொகைகளைக் கொடுக்க முன்வரவில்லை. பணம் கொடுத்தவர்கள் புத்தகம் எப்போது வரும் எனக் கேட்கத் தொடங்கிவிட்டனர். ஆகவே ‘எக்ஸ்ரே’ மாணிக்கம் மு.பா.எழிலரசை அணுகி வசூலித்த பணத்தைத் திரும்பக் கொடுத்துவிடலாம் என நெருக்கடி உருவாக்கியுள்ளார். அச்சமயத்தில் திடீரென ஒருநாள் மு.பா.எழிலரசு ‘எரிமலை’யை எனது இல்லத்தில் சந்தித்து “அப்பிரதிகளை பெரியார்தாசன் திரும்பக் கேட்டார். நான் தங்களிடம் ஏற்கெனவே ஒப்படைத்துவிட்டதாகக் கூறிவிட்டேன். ஆகவே, உங்களிடம் ஒப்படைக்கிறேன்” என ஒப்படைத்துவிட்டார். அதை எடுத்துச் செல்லாமல் என் வீட்டில் வைத்திருக்குமாறு ‘எரிமலை’ கூறிவிட்டார். அப்போது சில பக்கங்கள் மொழியாக்கம் செய்யவில்லை என்பதை இரட்டையர்களும் அறிந்திருந்தாலும் எப்பகுதி என அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால், மு.பா.எழிலரசு அதை அறிந்திருந்தார். கடைசியாகச் சாதாரண அச்சு கோக்கும் முறையில் மெய்ப்பொருள் அச்சகத்தில் அச்சிடலாம் என முடிவெடுத்தோம். அதை மு.பா.எழிலரசு மூலம் அறிந்த பெரியார்தாசன், ஐசிஎப் எஸ்சி/எஸ்டி அசோசியேஷன் அலுவகத்தில் கூடி விவாதித்துக்கொண்டிருந்தபோது விடுபட்டதாகக் கூறப்பட்டவற்றை முழுமைப்படுத்தி 01.05.1993 அன்று ஒப்படைப்பதார். திரு. ஒய்.எம்.முத்து எழுபதாயிரம் கொடுப்பதாகக் கூறி, முன்பணமாக முப்பதாயிரத்தை வழங்கினார். அதன்பின் துரிதவேகத்தில் புத்தக அச்சுப்பணி துவங்கியது. பாவை அச்சகத்தில் அச்சிட செயலாளர் ஆ.இரத்னம் ஒப்பந்தம் செய்தார். பதிப்புப் பணி பொறுப்பை மு.பா.எழிலரசே எடுத்துக்கொண்டார். காலதாமதமானதற்கு ஓர் அறிக்கை வெளியிட வேண்டும் எனக் கூறி அதைத் தயாரித்தவரும் மு.பா.எழிலரசுதான். ‘புத்தரும் அவர் தம்மமும்’ வெளிவர ஆர்வமாக இருந்து வெளிக்கொண்டு வந்தவர் மு.பா.எழிலரசு என்றால் மிகையாகாது.

தீக்சா பூமியில் அசோக விஜயதசமி விழாவில் (05.10.1992) கலந்துகொள்ளச் செல்லும் எங்களை, குறிப்பாக இரட்டையர்களை, சென்ட்ரல் இரயில் நிலையத்தில் வழியனுப்ப பெரியார்தாசன் வந்திருந்தார். எங்களது இரயில் புறப்பட பத்து நிமிடங்களே இருந்த நிலையில், அன்னனூர் மின்தொடர் வண்டிப் பராமரிக்கும் பணிமனையில் வேலை செய்துவந்த வியாசர்பாடி வஉசி நகரைச் சேர்ந்த எம்.கெஜா என்ற கஜேந்திரன் அவரிடம், ஒரு டிக்கட் இருப்பதாகவும், பயணச் சீட்டுக்கு உரியவர் இன்னும் வரவில்லை என்றும் கூறினார். ஆகவே ‘எக்ஸ்ரே’வும் ‘எரிமலை’யும் பெரியார்தாசனை அழைக்க, அவரும் வந்துவிட்டார்.

நாக்புரியில் ‘எக்ஸ்ரே’ மாற்றுத் துணிகள் வாங்கிக் கொடுத்தார். அதுவரை வெளிவந்த Dr. Babasaheb Ambedkar Writings and Speeches (டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் எழுத்துகளும் பேச்சுகளும்) புத்தகங்களை வாங்கிக் கொடுத்தவர் அடையாறு அஞ்சலகத் தலைவர் சகோதரர் வேலாயுதன். சென்னை திரும்பிய பெரியார்தாசன் எழும்பூர் கென்னத் லேனில் அமைந்துள்ள இலங்கை மகாபோதி சொசைட்டி பிக்குவிடம் அதிகாரப்பூர்வமாகப் பவுத்தம் ஏற்றார். அதற்குச் சாட்சி கையொப்பமிட்டவர் ‘தலித்’ எழில்மலை. வீ.சேஷசைலம் என்ற தனது பெயரை வீ.சித்தார்த்தா என்று கெஜட்டில் பதிவு செய்துகொண்டார். 1993இல் சிகாகோவில் நடைபெற்ற மதநல்லிணக்க நூற்றாண்டு மாநாட்டில் கலந்துகொண்டதாகக் கூறினார். அது எந்த அளவு உண்மை எனத் தெரியவில்லை. அவர் இஸ்லாம் ஏற்றபின்பு அப்துல்லா ஆனார். பெரியார்தாசன் எனும் புனைபெயரை மட்டும் அவர் விடவில்லை எனத் தெரிகிறது.

புத்தரும் அவர் தம்மமும்

‘புத்தரும் அவர் தம்மமும்’ நூல் வெளியீட்டு விழாவிற்கு மூத்தத் தலைவர்கள் மு.சுந்தரராசனார், சொல்லின் செல்வர் சக்தியார், டாக்டர் அ.சேப்பன் ஆகியோரை ஏன் அழைக்கவில்லை எனச் சிலர் கேட்கலாம். தலைவர் மு.சுந்தரராசன் ஒருமுறை ‘எரிமலை’யிடம், “ நீங்கள் பெரியார்தாசனை உதாசினப்படுத்துவதாகக் கூறுகிறாரே” எனக் கேட்டார். அவரை அழைத்தால் புத்தக வெளியீட்டு விழா புகார் விழாவாக உருவெடுக்கும் என்பதால் மற்ற எல்லா அரசியல் தலைவர்களையும் அழைக்கவில்லை. மு.பா.எழிலரசு நமது (ஸிறிமி) ஒரே எம்எல்ஏ டாக்டர் செ.கு.தமிழரசன் அவர்களையாவது அழைக்கலாமே என வேண்டியதால் அவர் அழைக்கப்பட்டார். அதிகாரி திரு. வி.கருப்பன் ஐஏஎஸ், திரு. கே.ஜி.கோபாலகிருஷ்ணா ஐபிஎஸ் – அவரது துணைவியார், திரு. டி.பி.கமலநாதன் போலீஸ் ஆய்வாளர் (ஓய்வு), பேராசிரியர். டாக்டர் எஸ்.பெருமாள் ஆகியோர் அழைக்கப்பட்டனர்.

‘புத்தரும் அவர் தம்மமும்’ நூல், புத்தர் ஆண்டு 2538 செவ்வாய் கிழமை வைசாகி பவுர்ணமி தினத்தில் மே 24, 1994 புத்த ஜெயந்தி அன்று சென்னை மாநகராட்சி அருகிலிருந்த சென்னாபுரி ஆந்திர மகாசபை அரங்கத்தில் வெளியிடப்பட்டது. அன்பு பொன்னோவியம் நூலை வெளியிட முதல் நூலை திருமதி. சந்தோசம் முத்து பெற்றுக்கொண்டார்.

பெரியவர் மாணிக்கம் பல்வேறு காலகட்டத்தில் மூன்று பத்திரிகைகளின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

  1. எரிமலை மாத இதழ், 1984 முதல் 1988 வரை. (இளைஞர் நற்பணி சங்கம்)
  2. சிவில் உரிமை மாத இதழ், அக்டோபர் 1988 முதல் 1994 அக்டோபர் வரை. (சிவில் உரிமை சங்கம்)
  3. சிந்தனைப் புதிது மாத இதழ் 2014 முதல்

அரியலூர் ஓவியர் அமுதன் பச்சைமுத்து ஏற்பாடு செய்து, டிசம்பர் 27, 2013 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற அரியலூர் விழாவில் ‘புரட்சியாளர் அம்பேத்கர் சமூக நல அறக்கட்டளை’யின் விழாவில் ‘எரிமலை’, ‘எக்ஸ்ரே’ இருவருக்கும் விருது வழங்கிச் சிறப்பித்தனர். சிறப்பழைப்பாளர் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் திரு. கே.ஆம்ஸ்ட்ராங், திருச்சி மாவட்டத் தலைவர் திரு. கல்யாணசுந்தரம் ஆகியோர் விருதினை வழங்கினர்.

(‘ஒரே ஒரு கிராமத்திலே’ போராட்டத்தைப் பற்றிச் சிலர் வேறுவிதமாகக் கூறுகின்றனர். அவர்கள் டெல்லிக்குச் சென்ற விவரங்கள் எல்லாம் அவர்களே சொல்லியதுதான். ஆனால், இணையதளத்தில் வழக்கு தொடர்ந்தவர் பி.ஜெகசீவன்ராம் என்றுள்ளது. வழக்கு தொடர்ந்தவர் டாக்டர் தெய்வநாயகமா, ஜெகசீவன்ராமா? இது சற்று ஆய்வுக்குரியது.)

அண்மையில் மறைந்த இ.செல்லத்துரை (01.04.1950 – 18.02.2024), எக்ஸ்ரே மாணிக்கம், எரிமலை இரத்தினம் உள்ளிட்ட மூத்தத் தலைவர்களோடு நெருங்கிப் பழகியவர். ஆனாலும், களத்தில் அவர்களோடு செயற்படாததால் ‘எப்போரட்டக் களத்திலும் கலந்துகொள்ளாத இ.செல்லத்துரை’ என்றே தன்னை மதிப்பிட்டுக்கொள்கிறார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!