வழக்கத்தை விட ஐந்தாம் வகுப்பு ‘ஆ’ பிரிவு வகுப்பறையிலிருந்து மாணவர்களின் கூச்சல் அதிகமாகக் கேட்டுக்கொண்டிருந்தது. வெளியிலிருந்து பார்ப்பதற்கு ஆசிரியர் இல்லாத வகுப்பறையில் மாணவர்கள் பேசிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருப்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தினாலும், வகுப்பறையில் தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த மர நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தபடியே மதிய உணவு இடைவெளியின்போது பள்ளி மைதானத்தில் கண்டெடுத்த பறவையின் இறகைக் குவித்துக் காதில் விட்டுத் துலாவிக்கொண்டிருந்தார் ஆசிரியர் சம்பத். வெள்ளிக்கிழமை மாலை வகுப்புகளில் பாடம் எடுப்பது அவருக்கு என்றுமே விருப்பமற்ற ஒன்று. அது மட்டுமல்லாமல் அடுத்த நாள் நடக்கவிருக்கும் பள்ளி கலை விழாவிற்கு மேடைகள் அமைப்பதற்கும் தோரணங்கள் கட்டுவதற்கும் வகுப்பின் பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் உடற்பயிற்சி ஆசிரியரால் அழைக்கப்பட்டு, வகுப்பறை காலியாக இருந்ததால் மாணவர்களை அமைதியாகப் படிக்கச் சொல்லிவிட்டு அமர்ந்திருந்தார். நேரம் செல்லச் செல்ல மாணவர்களின் கூச்சல் அதிகரிக்க, தன் கையில் இருந்த பிரம்பால் மேசையின் மேல் ஓங்கித் தட்டினார். அம்மாத்திரத்தில் வகுப்பறை நிசப்தமாகிப் போனது. இடமிருந்து வலமாக ஒவ்வொரு மாணவரின் முகத்தையும் நோட்டமிட்ட சம்பத்தின் பார்வை அமல்ராஜின் மேல் நிலை கொண்டது.
“அமலு, நாளைக்கு நீ எந்தப் போட்டியில கலந்துக்கப் போற?”
அவர் கேட்பதற்காகவே காத்திருந்தவன் போல அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து புன்னகையுடனும் உற்சாகத்துடனும் பதிலளித்தான் அமல்ராஜ்.
“மாறுவேட போட்டியில கலந்துக்கப் போறேன் சார்.”
“அப்படியா? என்ன வேஷம் போடப் போற?”
“கர்த்தர் வேஷம் போடப் போறேன் சார்” என்றான் முகம் முழுக்கப் புன்னகையுடன்.
காது துலாவுவதை நிறுத்தி ஒரு நொடி அவனை உற்றுப் பார்த்தவர்,
“ஏண்டா, கர்த்தர் வேஷம் செவத்த பசங்க போட்டாதானடா நல்லா இருக்கும், நீ கருப்பா சுருட்ட முடியோடல்ல இருக்க, உனக்கு எப்படி நல்லா இருக்கும். பேசாம வேற வேஷம் போடு” என்று அவர் சொல்லி முடித்ததும் வகுப்பறையில் எழுந்த சிரிப்பலை அமல்ராஜின் முகத்திலிருந்த புன்னகையையும் உற்சாகத்தையும் நொடியில் மறையச் செய்தது.
எதுவும் பேசாமல் சில நிமிடங்கள் உட்கார்ந்திருந்த அமல்ராஜ், பள்ளி மணி அடித்ததும் பையை எடுத்துக்கொண்டு முதல் ஆளாக வகுப்பறையிலிருந்து வெளியேறி வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
சிறு வயதிலிருந்தே கர்த்தரின் மீதும் அவருடைய போதனைகளின் மீதும் ஈர்க்கப்பட்டிருந்த அமல்ராஜ், கடந்த இரண்டு வருடங்களாக வழிபாடுகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டான். பள்ளி ஆண்டு விழா நாடகத்தில் கர்த்தராக நடிக்க ஆர்வம் கொண்டு முயற்சி செய்தபோதிலும் அந்த வாய்ப்புக் கிட்டாமல் போனது வருத்தத்தைத் தந்தது. பாடப் புத்தகங்களை மறந்தாலும், கடந்த இரண்டு வருடங்களில் ஒருமுறை கூட தன்னுடைய கையடக்க பைபிள் இல்லாமல் அவன் பள்ளிக்குச் சென்றதில்லை. பள்ளியின் பெரும்பாலான மாணவர்கள் அதிக ஈடுபாடு இல்லாமல் கலந்துகொள்ளும் அதிகாலை மறைக்கல்வி வகுப்புகளுக்கு முதல் ஆளாகப் போய் நிற்கும் அமல்ராஜ், மாறுவேட போட்டிப் பற்றிய அறிவிப்பு வந்ததும் வீட்டிற்குச் சென்று தான் கர்த்தரின் வேடத்தை அணியப் போவதாகத் தாய் மரியாளிடம் கூறியபோது அவளுக்கு ஆச்சரியம் எதுவும் ஏற்படவில்லை. பள்ளி நேரம் தவிர்த்து மற்ற நேரங்களை, வீட்டிற்கு அருகில் இருக்கும் தேவாலயத்தில் செலவிடுவதை வழக்கமாக வைத்திருந்தான் அமல்ராஜ். தன்னுடைய நிறத்தைப் பற்றியும் சுருட்டை முடியைப் பற்றியும் சகமாணவர்களிடமிருந்து பல்வேறு கேலியான விமர்சனங்களைச் சந்தித்திருந்த போதிலும் அதை என்றுமே அவன் பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை. இரண்டு வயது இருக்கும்போது காலரா நோயினால் தந்தையை இழந்த அமல்ராஜுக்குத் தன்னுடைய கருத்தத் தோலும் சுருட்டை முடியும் தன் தந்தையிடமிருந்து கிடைத்தது என்பது ஒருவிதத்தில் பெருமையே.
“அப்படியே அவங்க அப்பனை உரிச்சு வச்சிருக்கான் பாரு…” என்று வாஞ்சையாக அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் சொல்வதற்கும் “அப்பன மாறியே இருக்கான் பாரு, கருவாப் பய…” என்று சில வேண்டாத உறவினர்கள் சொல்வதற்கும் இடையே உள்ள வித்தியாசம் தெரிந்திருந்தபோதிலும் இரண்டுமே அமல்ராஜுக்கு மகிழ்ச்சியையே கொடுத்தன. ஆனால், இன்று வகுப்பறையில் நடந்த சம்பவம் அவனுக்குள் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. தன்னுடைய கருத்த நிறம் தனக்குப் பிடித்த கர்த்தரின் வேடமணிவதற்குத் தடையாகிவிடுமோ என்ற எண்ணம் மனதுக்குள் பயமாக மாறி, கண்ணீராக வெளிவந்தது. வீட்டு வாசலைக் கடந்து உள்ளே நுழைந்தபோது எதிரில் வீடு பெருக்கிக்கொண்டிருந்தாள் மரியாள். அவளைப் பார்த்ததும் வேகமாகக் கண்ணீரைத் துடைக்க முயல அதற்குள் அவள் பார்வையில் சிக்கிக்கொண்டான்.
“ராசா, என்னம்மா ஆச்சு? முகம் வாடி போய் கிடக்கு” என்றபடி கையிலிருந்த துடைப்பத்தைத் தரையில் போட்டுவிட்டு அவனை நோக்கி வந்தாள் மரியாள்.
தனக்குள்ளிருந்த குமுறலைக் கட்டுப்படுத்த முயன்ற அமல்ராஜ், மரியாளைப் பார்த்ததும் உடைந்து அழத் தொடங்க, அவனை அணைத்து ஆறுதல்படுத்தினாள். ஒருவழியாகச் சமாதானமடைந்த அமல்ராஜ், பள்ளியில் நடந்த சம்பவத்தை மரியாளிடம் கூறியபோது கோபத்தில் அவள் கண்கள் சிவந்து போயின. அமல்ராஜ் மீது அளவுக்கு அதிகமான அன்பு வைத்திருந்த மரியாள், அவன் மீது ஒரு துரும்பு பட்டாலும் துடித்துப் போய்விடுவாள். சில மாதங்களுக்கு முன்பு அக்கம்பக்கத்து வீட்டுச் சிறுவர்களுடன் நடந்த சிறிய சண்டையில் கையில் காயத்துடன் அழுதபடி வீடு வந்த அமல்ராஜைப் பார்த்ததும் அவனை இழுத்துக்கொண்டு அந்தச் சிறுவர்களின் பெற்றோரோடு மரியாள் சண்டையிட்ட பிறகு அந்தத் தெருவில் இருக்கும் மற்ற சிறுவர்களும் அமல்ராஜுடன் விளையாடுவதில் தயக்கம் காட்டினர்.
“யாருடா அந்த வாத்தியான்? நாளைக்குப் பள்ளிக்கூடத்துக்கு வந்து சட்டையைப் புடிச்சு என்னனு கேக்குறேன் பாரு” என்று மரியாள் சொல்லி முடித்ததும் அமல்ராஜுக்குத் திக்கென்றானது.
“என்ன மருமவனே? நீங்க அழுகுற சத்தம் டவுன் வரைக்கும் கேட்கும் போல” வீட்டு வாசலில் குனிந்து உள்ளே எட்டிப் பார்த்துக் கேட்டான் மரியாளின் ஒன்றுவிட்ட சகோதரனும் அமல்ராஜின் தந்தை எபிநேசரின் பால்ய சினேகிதனுமான ஜோசப். அவன் கேட்டுக்கொண்டிருக்கும்போதே அவர்கள் வீட்டுத் திண்ணையில் வந்து உட்கார்ந்துகொண்டார் சின்னையன் தாத்தா. உடம்பில் சட்டை எதுவும் அணியாமல் தோளில் ஒரு சிவப்பு நிறத் துண்டைத் தொங்கவிட்டபடி பழைய வேட்டியுடன் உட்கார்ந்திருந்த சின்னையன் தாத்தா, வேட்டி மடிப்பில் ஒதுக்கி வைத்திருந்த பீடியை எடுத்துப் பற்ற வைத்தார்.
“என்னத்தா மரியா, ஒரே கூச்சலா இருக்கு, என்ன விஷயம்” என்றார் புகையை உள்ளிழுத்தபடியே…
பள்ளியில் அமல்ராஜுக்கு நடந்த சம்பவத்தைப் பற்றிய தன்னுடைய ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தாள் மரியாள்.
அவள் சொல்லி முடித்தவுடன் ஜோசப்புக்குக் கோபம் தலைக்கேறியது.
“அவன் யாரு நம்ம புள்ள என்ன வேஷம் போடுறதுன்னு சொல்றதுக்கு… மருமவனே நாளைக்கு நானும் சின்னையா தாத்தாவும் பள்ளிக்கூடத்துக்கு வாரோம். நீங்க அந்த வாத்தியான் யாருன்னு மட்டும் காமிங்க, நாங்க பாத்துக்குறோம்” என்று ஜோசப் சொல்லி முடித்தவுடன் குறுக்கிட்டு,
“வேணாம் மாமா…” என்றான் அமல்ராஜ்.
அவர்களுடைய உரையாடலில் குறுக்கிடாமல் எந்தச் சலனமுமின்றிப் பீடியைப் புகைத்துக்கொண்டிருந்தார் சின்னையன் தாத்தா.
சில நொடிகள் அமைதியாக எதையோ யோசித்த ஜோசப், மீண்டும் பேசத் தொடங்கினான்.
“எவன் சொன்னான், கருப்பா இருந்தா கர்த்தர் வேஷம் போடக் கூடாது, சாமி வேஷம் போடக் கூடாதுன்னு… கருப்பா இருக்குற நம்ம சூப்பர் ஸ்டாருதானே படத்துல ராகவேந்திரா சாமியா நடிச்சாரு” போன வாரம்தான் பக்கத்து ஊர் சினிமா கொட்டகையில் ராகவேந்திரா படத்தை எட்டாவது முறையாக பார்த்திருந்தான் ஜோசப்.
“அட யாருடா இவன், எந்நேரம் பார்த்தாலும் சினிமா கூத்துனு…”
புகையை உள்ளிழுத்து விட்டபடி ஆவேசத்தோடு பேசத் தொடங்கினார் சின்னயன் தாத்தா.
Illustration : Judybowman
“எவன்ல சொன்னான், கர்த்தர் செவத்த தோளோட, நீள முடியோட, நீல கலரு கண்ணோட இருப்பாருனு… அவர் என்ன லண்டன்லயா பொறந்தாரு, பெத்லகேம்லதானே பொறந்தாரு, அவரு கொஞ்சம் மாநிறமாதான் இருந்துருப்பாரு. இந்த வெள்ளக்காரனுங்கதான் அவர அவங்க ஆள் ஆக்குறதுக்கு இப்படில்லாம் பண்றானுங்கன்னா, நம்ம ஊர்க்காரங்களுக்கு எங்க போச்சு புத்தி” எழுந்து நின்றவர் அமல்ராஜை நோக்கி,
“யய்யா, அந்த வாத்தியான் மறுபடியும் ஏதாவது சொன்னா நேரா வந்து தாத்தா கிட்ட சொல்லு… நீ உனக்குப் புடிச்ச வேஷம் போடு ராசா, எவன் என்ன கேக்குறான்னு பாப்போம்” என்றபடி அங்கிருந்து நடக்கத் தொடங்கினார்.
“சரி மருமவனே, இப்படியே உட்கார்ந்துருந்தா அழுதுகிட்டேதான் இருப்பீங்க… வாங்க கடைக்குப் போலாம்.” அமல்ராஜின் கையைப் பிடித்துக்கொண்டு கடைத்தெருவை நோக்கி நடந்தான் ஜோசப்.
அமல்ராஜுக்குப் பிடித்த தேன் மிட்டாயையும் தேங்காய் மிட்டாயையும் வாங்கி கையில் திணித்தவன் தனக்கொரு கட்டு பீடி வாங்கிக்கொண்டு கிளம்பத் தயாரானான்.
“மாமா, நாளைக்குக் கர்த்தர் வேஷம் போடுறதுக்குச் சவுரி முடி, அப்புறம் தாடி…”
அமல்ராஜ் சொல்லி முடிப்பதற்குள்,
“அவ்வளவுதானே, அதெல்லாம் மாமா பாத்துக்குறேன்” அவனுடைய கையைப் பிடித்துக்கொண்டு தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றவன், கட்டிலின் கீழிருந்த பழைய இரும்புப் பெட்டியைச் சிரமப்பட்டு வெளியே எடுத்து அதிலிருந்த சவுரி முடியையும் ஒட்டுத் தாடியையும் வெளியே எடுத்தான்.
“மருமவனே… நான், உங்க அப்பாலாம் பத்தாங்கிளாஸ் படிக்கும்போது நம்ம சத்திரத்துல வருஷா வருஷம் கிறிஸ்மஸ்க்கு நாடகம் போடுவோம். எல்லா வருஷமும் நான்தான் கர்த்தர் வேஷம் போடுவேன். நாடகம் முடிஞ்சதும் என் நடிப்பப் பார்த்து ஊரே எந்திரிச்சு நின்னு கை தட்டும்” என்றான் பெருமையுடன்.
இதே கதையை ஜோசப்பிடமிருந்து பலமுறை கேட்டிருந்தாலும் ஒவ்வொருமுறை கேட்கும்போதும் கண்களை அகல விரித்தபடி ஆச்சரியத்துடன் கேட்டு, தன்னுடைய மாமாவின் திறமையை நினைத்து மனதுக்குள் பெருமைப்பட்டுக்கொள்வான் அமல்ராஜ். ஆனால், இன்று ஜோசப்பின் சிவந்த தோல் நிறம்தான் அவனுக்கு நாடகத்தில் கர்த்தர் வேடம் கிடைப்பதற்கும் மக்கள் மத்தியில் பாராட்டுகள் கிடைப்பதற்கும் காரணமாக இருந்திருக்குமோ என்ற எண்ணம் மனதுக்குள் எழுந்தது.
“மருமவனே, நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க… நாளைக்குக் காலையிலேயே எல்லாத்தையும் எடுத்துட்டு நான் வீட்டுக்கு வந்துடுறேன், மொத பரிசு நமக்குதான்” என்று ஜோசப் சொன்னதும் உற்சாகத்துடன் வீட்டிற்குக் கிளம்பினான் அமல்ராஜ்.
உறுதியளித்தது போலவே காலையில் வீட்டிற்கு வந்தான் ஜோசப். பெரிய வெள்ளை நிற ஜிப்பாவை அமல்ராஜுக்கு அணிவித்தவன், சிவப்பு நிற துண்டைத் தோளில் தொங்க விட்டான். எதிர்பார்த்ததை விட தாடியும் முடியும் அமல்ராஜுக்குக் கச்சிதமாகப் பொருந்திப் போனது. ஜோசப் அமல்ராஜை தயார்படுத்திக்கொண்டிருந்ததைக் கன்னத்தில் கை வைத்தபடி ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் மரியாள். முந்தைய நாள் இரவு மரியாள் சொல்லிக் கொடுத்த “நான் பாவிகளை இரட்சிக்க மனித குமாரனாய் தோன்றினேன்….” என்று தொடங்கிய வசனத்தை மீண்டும் மீண்டும் மனதுக்குள் சொல்லி மனப்பாடம் செய்திருந்தான் அமல்ராஜ். அவனுடைய ஒரு கையில் கையடக்க பைபிளையும், மற்றொரு கையில் திருமண அன்பளிப்பாகக் கிடைத்த மரத்தாலான சிறிய சிலுவையையும் கொடுத்திருந்தாள் மரியாள். அடுத்த சில நிமிடங்களில் அமல்ராஜைத் தயார்படுத்திவிட்டு ஜோசப் அங்கிருந்து விடைபெற, வீட்டைப் பூட்டிவிட்டு அமல்ராஜின் கையைப் பிடித்துக்கொண்டு வேகமாகப் பள்ளியை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
“என்ன அமலு, திருவள்ளுவர் வேஷமா…” வழியில் ஏளனம் செய்த மெக்கானிக் சேகரை ஒரு கணம் நின்று முறைத்துப் பார்த்தாள். வழக்கமாக வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு நிற்பவள் தற்போது நேரமில்லாத காரணத்தால் அமல்ராஜை இழுத்துக்கொண்டு வேகமாக நடந்தாள்.
பள்ளி வளாகத்தை அடைந்தபோது எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகமாக இருந்தது. பெரிய மேடை அமைக்கப்பட்டு, மாறுவேட போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் மேடைக்கு இடதுபுறம் வரிசையாக நிற்க வைக்கப்பட்டிருந்தனர். மேடையேறும் மாணவர்கள் ஒவ்வொருவராக தான் தயார் செய்து வைத்திருந்த வசனத்தைக் கூறிவிட்டு வலதுபுறம் இருக்கும், படி வழியாக இறங்கிச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தனர். மேடைக்கு முன்னால் போடப்பட்டிருந்த சில மர பெஞ்சுகள் மாணவர்களுக்காகவும் பின்னால் இருந்த சில மர பெஞ்சுகள் பெற்றோர்களுக்காகவும் பார்வையாளர்களுக்காகவும் ஒதுக்கப்பட்டிருந்தன. ஏற்கெனவே பெற்றோர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால், பெரும்பாலானோர் பின்னால் நின்றபடி மேடையைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அமல்ராஜை மேடைக்கு இடதுபுறம் மாணவர்களோடு நிற்க வைத்துவிட்டு, பின்னால் சென்று நின்றுகொண்டாள் மரியாள். தன்னைப் போலவே கர்த்தரின் வேடமணிந்து மேடையேறிய தினகரனுக்கு எழுந்த வரவேற்பும் ஆதரவும் அமல்ராஜுக்கு ஒருவித தைரியத்தைக் கொடுத்திருந்தது. ஒவ்வொரு மாணவராக மேடையேற வரிசை முன்னோக்கி நகர்ந்துகொண்டிருந்தது.
“இங்க பாருடா, கர்த்தரு மாறுவேஷத்துல வந்துருக்காரு…” பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்தபடி தன்னை நோக்கி ஏளனமாக எட்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் சொன்னதைக் கேட்டதும் பதற்றத்திலும் அவமானத்திலும் அமல்ராஜின் கைகள் லேசாக நடுங்கின. அவன் சொன்னதைக் கேட்டு எழுந்த சிரிப்பொலியில் சில ஆசிரியர்களின் சிரிப்பொலியும் சேர்ந்துகொள்ள, நிமிர்ந்து பார்க்கத் தைரியமின்றிக் கூனிக்குறுகி வரிசையில் நின்றிருந்தான். தனக்கான நேரம் வந்தவுடன் மேடையேறியவன் தனக்கு முன்னால் இருந்த கூட்டத்தைப் பார்த்ததும் சற்றுப் பதறிப் போனான். கூட்டத்தில் ஆங்காங்கே எழுந்த கூச்சலும் சிரிப்பொலியும் தன்னை ஏளனம் செய்வதற்காக எழுப்பப்பட்டது என்ற எண்ணம் எழ, அவனுக்குள் இருந்த பயமும் பதற்றமும் மேலும் அதிகரித்து, மனப்பாடம் செய்து வைத்திருந்த வசனத்தைச் சொல்ல முடியாமல் தடுமாறிப் போனான். கூட்டத்தைப் பார்த்துத் திகைத்துப் போய் பேசாமல் நிற்கும் மாணவர்களைச் சமாதானப்படுத்திக் கீழே இறங்க வைப்பதற்காக மேடையின் பக்கவாட்டில் ஆசிரியை ஒருவர் நிற்கவைக்கப்பட்டிருந்தார். சில நொடிகள் பார்த்துவிட்டு அமல்ராஜை மேடையில் இருந்து இறக்கும் முடிவை எடுக்கலாம் என்ற எண்ணத்தோடு அந்த ஆசிரியை நின்றுகொண்டிருந்தார். தனக்குள் எழுந்த அதீத கை நடுக்கத்தைத் தன் கைகளிலிருந்த மரச் சிலுவையையும் கையடக்க பைபிளையும் இறுக்கிப்பிடித்தபடிக் கட்டுப்படுத்திக்கொண்ட அமல்ராஜால் தன்னுடைய கால் நடுக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மனதுக்குள் அதிகரித்த பயத்தால் அவனையும் அறியாமல் கண்களிலிருந்து வெளிவந்த கண்ணீர் அவன் கன்னங்களை ஈரமாக்கிக் கரைந்து போனது. மிகவும் சிரமப்பட்டு, தான் மனப்பாடம் செய்து வைத்திருந்த வசனத்தை நினைவுபடுத்த முயன்றவனுக்குக் காலையில் ஜோசப் சொன்னது நினைவிற்கு வந்தது.
“இங்க பாருங்க மருமவனே, மேடையில ஏறினதும் பயத்துல வசனம் எதையும் மறந்துட்டீங்கன்னா பதட்டப்படக் கூடாது, உங்களுக்குதான் பைபிள் வாசகம்லாம் நல்லா தெரியுமே, அந்த நேரத்துல உங்க மனசுக்குள்ள என்ன வாசகம் தோணுதோ அத பட்டுனு சத்தம் போட்டுச் சொல்லிட்டு வந்துருங்க.” என்ற அறிவுரை அவனுக்குள் சிறிய தைரியத்தை உருவாக்கியது. கண்களை மூடி பைபிள் வாசகங்களை நினைவுபடுத்த முயன்றவன், சில நொடிகளுக்குப் பின் கண்களைத் திறந்து தன் முழு ஆற்றலையும் திரட்டி,
“யூதன் என்றும் கிரேக்கன் என்றும் இல்லை, அடிமை என்றும் சுயாதீனம் என்றும் இல்லை, ஆண் என்றும் பெண்ணென்றும் இல்லை. நீங்கள் எல்லாம் கிறிஸ்து இயேசுவிற்குள் ஒன்றாக இருக்கிறீர்கள்.”
அடிவயிற்றிலிருந்து கத்திச் சொல்லி முடித்ததும் கூட்டத்தில் லேசான சலசலப்பு எழுந்தது. திகைத்துப் போய் நின்றிருந்தவனின் கையைப் பிடித்து மேடையிலிருந்து இறக்கினார் அந்த ஆசிரியை. மேடையேறிய மற்ற மாணவர்களுக்கு எழுந்த சம்பிரதாயமான கைத்தட்டலைக் காட்டிலும் அமல்ராஜுக்குக் குறைவான கைத்தட்டலே எழுப்பப்பட்டது. கீழே இறங்கிய பின்னும் அவனுடைய கண்ணீர் நின்றபாடில்லை. படபடப்புடன் நடந்துசென்ற அமல்ராஜ், மாணவர்கள் கூட்டத்தைக் கடந்து பெற்றோர்கள் கூட்டத்திற்குள் நுழைந்தான். கண்களை இங்குமங்கும் அலையவிட்டபடி தன் தாயைக் கூட்டத்தில் தேடிகொண்டிருந்த கர்த்தரின் வேடத்திலிருந்த அமல்ராஜைப் பார்த்ததும் தன்னையும் அறியாமல் இரு கைகளையும் கூப்பி வணங்கிய அந்தப் பெயர் தெரியாத பெண்ணின் முகம் அதன் பின் அவன் நினைவைவிட்டு மறையவே இல்லை. சிறுவயதிலிருந்து அவனுக்குப் பரிச்சயப்பட்ட புனித மரியாவின் சாயலில் அல்லவா அவர் இருந்தார்.