இருத்தலின் முடிவற்ற தொடரோட்டத்துக்கு
நடுவில்,
மனம் ஒரு ஜென் துறவியாகி
விரல் கூப்புகிறது.
என் பாடும் சிறகே
இந்த இருண்ட நாட்களில்
பாலமானாய்.
உன் கண்களூடாகச்
சிறு மஞ்சள் வர்ணத்தில்
சூரியன் சாயும் பெருங்கடல்
காண்கிறாய்.
எனக்குள் நானே வரித்த சுவர்கள்
உடைகின்றன
உள்ளிறங்கும்
தனித்த படிகளில்
என் பழைய கனாக்கள்
நீண்டு உறங்குகின்றன.
நீ ஒரு நட்சத்திரம்
இதுவரை நடவாத அன்பின் பாதைகளுக்கு
வழிகாட்டுகிறாய்
என் அதீதங்களைக் கட்டவிழ்க்கிறாய்.
முடிவற்ற இழைகளில்
என்னைப் பிணைக்கிற
மாய நூலாகிறாய்.
உன் அரவணைப்பில்,
புதிய கதவுகளுக்குள் நுழைகிறேன்,
அறியப்படாத உலகங்கள்
புதிய கரையோரங்கள்
என் ஆதிக்குழந்தாய்..
உன் ஆன்மாவுக்கு மட்டுமே
தெரிந்த இரகசியங்களில்
நான்
இளைப்பாறுகிறேன்..