மயக்கச்சோறு

தொ.பத்தினாதன்

“புளட் இயக்கம் இருந்தபோது அவங்களுக்கு வால் புடுச்சான்.”

“புலி இருந்தபோது அவங்க பின்னால திருஞ்சு ஊருக்குப் பொது இடமான புலவுக்குள்ள வீடு கட்டினான்.”

“புலிக்குப் பிறகு அரசியல்வாதிகளுக்கு வால்புடுச்சு அரசு வேலையில புரமோசன் வாங்கினான். பிறகு தகுதி குறைவுன்னு கீழ இறக்கிவிட்டாங்க.”

“பக்கத்து ஊர்ல கள்ள ஓழுக்குப் போனதில புள்ள தங்கிடுச்சு. அத கலைக்கக் கை மருந்து கொடுத்ததில ஊனமா புள்ள பொறக்கவும் ஓடி வந்துட்டான்.”

“இப்ப இவன கோயில்ல செயலாளரா போட்டிருக்காங்களாம்.”

கடுப்பு மனநிலையின் வெளிப்பாட்டை இடையில் குறுக்கிடாமல் கேட்டுக்கொண்டிருந்தேன்.

இப்படியான ஊர்ப் புறணிகள் கதைப்பது இந்த இடத்துக்குப் புதுசு இல்ல. இப்படித்தான் நான் இந்த ஊரப்பத்தி தெரிந்துகொள்கிறேன். மருமகன் வரிசையாக இப்படிப் பட்டியலிட்டுக்கொண்டே போனான். அன்ரனி வந்தான். நான் எனது கதிரையை உட்பக்கமாகத் திருப்பிவிட்டுக் கதவை அடைத்து மேல்பக்கக் கொண்டியைப் போட்டுக்கொண்டு கத கேக்கத் தோதாக உக்காந்திருந்தேன். இந்தக் கத வெளிய கேட்டிடும் என்பதற்காக இல்ல, இனிமேதான் கொசு வீட்டுக்குள்ள வர ஆரம்பிக்கும். குசினி சிலாப்பில ஏறி உக்காந்து மருமகன் பேசியது அன்ரனி வரவினூடாகத் தடைப்பட்டது.

“மாம்சு ரீ குடிப்பமா?”

“எங்களுக்கும் சேர்த்து நீயே வை”

அன்ரனி தேத்தண்ணி வைக்க மருமகன் ஒதுங்கி வழிவிட்டான். கேனில் இருந்த தண்ணிய எலக்ட்ரிக் கேட்டிலில் ஊத்தி மூடி சுவிச்சப் போட்டவன், “என்ன ஏதோ ரகசியம் பேசுன மாதிரி என்ன பாத்ததும் கதய நிப்பாட்டிட்டிங்க.” “ரகசியம் ஒரு மயிருமில்ல. மைக் மரியதாச பற்றி பேசிட்டு இருந்தோம்.” மருமகனுக்குக் கடுப்பு இன்னும் இறங்காமல் இருந்தது.

“ஆர்ரா அவன் இவ்வளவு திறமசாலியா இருக்கானே?” மேற்கொண்டு கத கேக்கும் ஆர்வத்துல இப்படிக் கேட்டேன்.

“வெள்ளத் தலையோட மீச இல்லாம எங்கட தெருவில போவானே, கிழக்க அவனுக்குக் கொஞ்சம் காணி கிடக்கே” மருமகன் சொன்னான். “முன்னாடி வேலையில இருக்கும் மட்டும் டை அடிப்பான். ரிட்டயர் ஆனதும் விட்டுட்டான்” என்றான் அன்ரனி.

“அட இப்படி ஒருத்தன் நம்ம ஊர்ல இருக்கிறது எனக்குத் தெரியாதே”

“ஏன் தெரியாது… தம்புராசாவ தெரியாதா? அவர்ர மகன்தான். நீங்க சின்ன வயசுல பாத்திருப்பீங்க.” எனக்கு அப்பதான் ஞாபகம் தட்டியது. “தம்புராசா யாழ்ப்பாணம்தானே, அவர் மனுசிதான் இங்க. நாலஞ்சு பசங்க இருந்தாங்க. நீங்க யாரச் சொல்றீங்க?”

“செல்லத்தம்புட மகள கட்டினானே அவன்தான்” என்றான் மருமகன். “பெருந்தொண்டையில ஊருக்கே கேக்கிற மாதிரில்ல அவன் கதைப்பான்.” தேத்தண்ணி ஊத்திட்டு இருந்த அன்ரனி தலயத் திருப்பிச் சொன்னான், “அதனாலதான் அவனுக்கு மைக் மரியதாசுன்னு பட்டப் பெயர்.” “அது இல்ல… மைக்குன்னு பேரு வந்ததுக்கு வேற ஒரு காரணமும் இருக்கு. சத்தமா கதைச்சால் அதுதான் ஒலக ஞாயம் என்று திரியிறான்” என்றான் மருமகன்.

அன்ரனி தேத்தண்ணிய நீட்டினதுல கவனம் சிதறி உரையாடல் தடைப்பட்டது. தேத்தண்ணியக் குடுத்தவன் மூலையில அடுக்கியிருந்த நெல் மூட்ட மேல ஏறி உக்காந்துகொண்டான். அவர்கள் இருவரும் தேத்தண்ணியக் குடித்துக்கொண்டே “அடே அன்ரனி, நாளைக்கு மழ இல்லாட்டி வயலுக்கு மருந்தடிப்பம் வாறியா?” உரையாடல் வயல்பக்கமாகப் போய்க்கொண்டிருந்தது.

இடுப்பில சொருகியிருந்த பீடிக்கட்டை எடுத்து ஒரு பீடிய உருவி கையால நசுக்கிப் பதமாக்கி வாயில வச்சுப் பத்த வச்சேன். மைக் மரியதாஸ் மண்டைக்குள்ள கடஞ்சுக்கிட்டுக் கிடந்தான். மருமகனுக்கு மரியதாஸ் மேல தனிப்பட்ட பகை இருக்குமோ! மருமகன் தேத்தண்ணி குடிக்கல. லேசா கீறிட்டு வந்திருப்பான்போல. இவன்கள் எப்ப குடிக்கிறான்கள், குடிக்காமல் இருக்கிறான்கள் என்று கண்டுபுடிக்க முடியலியே. அன்ரனி “தேத்தண்ணிய குடிங்க, ஆறப்போகுது” என்றதுக்கு அவனப் பார்த்து நமட்டுச் சிரிப்புச் சிரித்ததைக் கவனித்தேன். “இல்ல மருமகன், நீங்க ஒண்டுக்கும் போறதில்ல அவன் போறான்” என்று நான் சொல்லி முடிக்கல. “ஓம் மாமா, நாங்க கள்ள ஓழுக்கெல்லாம் போறதில்ல… எங்களுக்குப் பொண்டாட்டியே போதும்.” ‘நவத்தார குடிச்சிட்டு வீட்ட வராதன்னு சொன்னதுபோல உவன இனி குடிச்சிட்ட இந்தப் பக்கம் வராத’ என்று சொல்ல நினைத்தேனே தவிர சொல்லவில்லை. அன்ரனி கிளுக்கென்று சிரித்தான். “மருமகன் என்ன முழுசா சொல்ல விடுங்க. நீங்க கோயிலுக்குப் போக மாட்டிங்க, பொது வேலன்னா வரமாட்டிங்க. அதனால அவன் என்றாலும் செய்றான்.” அன்ரனி குறுக்கிட்டான் “அதுக்கு ஊருக்குள்ள வேற ஆக்களா இல்ல”

“இருக்கிற எவனும் வரமாட்றானே.”

“அப்படி இல்ல மாமா. நாங்க கோயிலுக்குச் செய்துட்டம். வேணாண்டு விட்டதாலதான் அவன் வந்திருக்கிறான். எனக்கு அது பிரச்சன இல்ல. கோயில்ல அங்க கொள்ளையடிக்க எல்லாம் முடியாது. அவன் புள்ளய குடுத்ததில்லாம அதக் கலைக்க வெளிக்கிட்டதாலதானே ஊனமா புள்ள பொறந்தது. இவன் அத என்றாலும் செய்யாமல் இருந்திருக்கலாம்.” எனக்கு என்ன சொல்றதெண்டு தெரியல.

“அப்படி எல்லாம் நடந்திருக்காது மருமகன். ஊர்ல உள்ளவன் வாயில வந்ததச் சொல்லுவான், நீங்க அதச் சொல்றீங்க.”

“இங்க என்ன நடந்ததுன்னு உங்களுக்குத் தெரியாது. புலிகள் காலத்துல கருக்கலைப்புச் செய்ய முடியாது. அதனால நம்ம சுத்துவட்டாரத்துலயே நாலஞ்சு புள்ளைங்க இப்படி புறந்திருக்கு”

நான் எதுவும் பேசாமல் இருந்தேன். மருமகனோட தேத்தண்ணி ஆறிப்போயிருந்தது. டவுசர் பாக்கற்றில் இருந்த பொட்டலத்த பிரிச்சு நாலு பாக்கத் தூக்கி வாயில போட்டான். வெத்தலய இரண்டா கிளுச்சு வாயில திணுச்சான். “ஆரு, மாஸ்டரயா கதைக்கிறீங்க,” என்றான் அன்ரனி. கடுப்பில இருந்த மருமகன் அவசரமா வெத்தலய ஒரு பக்கமா ஒதுக்கி “எவண்டா மாஸ்டர்?” “அவர் மாஸ்டர்தானே… நான் அவரிட்ட படிச்சிருக்கிறன்.” நான் குறுக்கிட்டு, “அப்ப அவர் சாதிச் சங்கத் தலைவரா இருக்கலியா?” என்னுடைய கேள்வியில் கொஞ்சம் எள்ளல் கலந்திருந்தது. வெத்தலயச் சப்பியவன் எழும்பி ஜன்னல் வழியாகப் பொழுச்சென்று துப்பிட்டு வந்தான். “பள்ளிக்கூட அதிபர்கள்தானே உங்க சாதிச் சங்கத் தலைவர்கள். அதனாலதான் கேட்டேன்.”

“அது மாமா நமக்குத் தேவதானே” நிதானமாக வார்த்தைகள் வந்தது. என்னதான் முற்போக்கு பேசினாலும் சாதின்னு வந்ததும் பதுங்குறாங்கள். தொலைபேசி அழைப்பு வரவும் கதை தடைப்பட்டுப்போனது. மழையில் நனையாமல் இருப்பதற்காக சொப்பின் பேக்கில் சுத்தி வைக்கப்பட்ட கைபேசிய எடுத்து காதில் வைத்தவன் நடக்க ஆரம்பித்தான். “என்னடா அவசரமா போறன்” என்றதுக்கு “அப்புச்சிக்கு உடம்பு சரியில்லயாம் என்றாங்க, அதுவாத்தான் இருக்கும்” அன்ரனியும் மருமகன் பின்னால போனான்.

llustration : judybowman

இரவு நல்ல மழை பெய்திருந்தது. கதவு தட்டும் சத்தம் கேட்டுப் படுக்கையிலிருந்து எழுந்துவந்து கதவைத் திறந்தேன். அன்ரனி உள்ள வந்தான்.

“மணி என்னடா?”

“ஒன்பது மணியாவுது… இப்பதான் எந்திருச்சீங்களா, குணசீலி உங்கள இப்படிப் பெத்திருக்கு” “மூணுவேள சாப்பிட்டு, அஞ்சு வேள தூங்கி… அதையும் சேர்த்துச் சொல்லு”

“பிறகு அதுவும்தான்”

“தேத்தண்ணி குடிக்கப்போறியா”

“இப்பதான் வீட்ட குடுச்சன். எனக்கு வேணாம்” என்றான். நான் கேற்றுளில் ஒரு டம்ளர் தண்ணிய ஊத்தி சுச்சைப் போட்டேன். “வவுனியா போறதா நேத்துச் சொன்னீங்க, போகலியா?” கேள்வியில் ஒரு நளினம் தெரியவும் திரும்பிப் பார்த்து “ஆமா போகணும்” என்றேன். “அப்புச்சி செத்துட்டாரு நீங்க போங்க”

“அட என்னடா சொல்ற”

“இரவு மூணு மணிக்குச் செத்துட்டாரு. எதிர்வீட்டுல செத்தவீடுகூட தெரியாம நித்துர கொள்றீங்க”

“ஆமா அப்படித்தானே குணசீலி பெத்திருக்கு.”

“தண்ணியக் குடிச்சிட்டு ஒரு மாசம் இருப்பாரு, தண்ணி குடிக்காம ஒரு மாசம் இருப்பாருன்னு சொன்னீங்க”

“இந்த மழமட்டுமில்லாம வெயில் அடிச்சிருந்தா இருந்திருப்பாரு”. அப்புச்சி சாவுக்கு மழைமேல பழியைப் போட்டேன். நக்கலாகச் சிரித்தான் “ஆமா ஆமா… தொண்ணூத்தாறு வயசுக்கு மேலயும் இருப்பாரு” என்று கிண்டலடித்தான். முகத்தக் கழுவிட்டு, சட்டய போட்டுட்டு அவனுடன் அப்புச்சி வீட்ட போனேன்.

என் வீட்டிற்கு எதிரில் சீமெந்து ரோடு. அதற்கு அந்தப் பக்கம் அப்புச்சியோட வீடு. தெருவின் இரண்டு பக்கங்களிலும் 23 வீடுகள் பெரிய வளவுகளாக இருக்கின்றன. 1990இல் நான் சிறு பிள்ளையாகப் பார்த்தபோது 9 வீடுகள் இருந்தன. அத்தனை வீடுகளும் மண் சுவராலும் கிடுகாலும் கட்டப்பட்டிருந்தன. போருக்குப் பின் இந்த வளவுகளுக்குள் 21 அடி அகலமும் 27 நீளமும் உடைய வீடுகள் சீமெந்தாலும் ஓட்டாலும் கட்டப்பட்டிருக்கிறது. இந்த வீடுகளில் ஒரு அடி, இரண்டு அடி அவரவர் வசதியைப் பொறுத்துக் கூடலாம், குறையாது. இந்த வீடுகளில் உள் அமைப்புகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான். இவை போருக்குப் பின் இந்திய அரசாங்கம் கட்டிக்கொடுத்ததால் திட்டத்துக்கு அமைய கட்டப்பட்டவை. அப்புச்சிதான் ஊர்லயே அதிக வயசானவர். விசம் கலக்காத அந்தக் காலத்துக் குத்தரிசிச் சோறும், குளத்து மீன் கறையும், காட்டு இறைச்சியும், காட்டுத் தேனும், பசும்பாலும் நெய்யுமா சாப்பிட்டு வாழ்ந்த மனுசன். எந்த நோயுமில்லாமல் வயது முதிர்வினால் இறந்து போனார்.

வாடகை பந்தல்காரன் தகர சீற்றால பந்தல் போட்டுக்கொண்டிருந்தான். ஒரு பக்கத்தால மெசின் பெட்டியிலிருந்து பிளாஸ்டிக் கதிரைகள் இறக்கிக்கொண்டிருந்தார்கள். ஒரு குழு வளவைச் சுத்தப்படுத்திக்கொண்டிருந்தார்கள். கடவலடி சுரியா இருக்கவும் சிலர் வில்வர்ல மண் அள்ளிக்கொண்டு வந்து கொட்டினார்கள். மருமகன் குறுக்க மறுக்கப் பரபரப்பாக நடந்துகொண்டிருந்தான். ஆக்கள் ஒன்றொன்றாக வர ஆரம்பித்தார்கள். பெரிதாக அழுகைச் சத்தம் கேட்கவில்லை. வயதானவர்கள் சிலர் ஆங்காங்கு ஏற்கெனவே போடப்பட்ட கதிரைகளில் இருந்தார்கள். கதிரை இறக்கும் பொடியளுடன் அன்ரனி சேர்ந்துகொண்டான். கடவலை கடக்கும்போதே நோட்டம் விட்டேன். மாஸ்டருக்குப் பக்கத்துல போய் உக்காந்தேன். இங்கு இருப்பதில் இவர்தான் சாராயம் குடியில்லாத மனிதர். இதற்கு முன்னாடி சந்தியாகு செத்த விட்டிலயும் சரி, மேரி செத்தவீட்டிலும் இவர் அருகில் இருந்தது ஞாபகத்துக்கு வந்தது.

“எப்ப மாஸ்டர் எடுக்கிறாங்களாம்”

“மூணு மணிக்காம்”

“நல்ல காரியம்… வயதான பாடிய எதுக்கு வச்சிருப்பானே”

கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தேன் மாஸ்டரும் எதுவும் பேசவில்லை.

“காசு இருந்தா ஒரு ஆயிர்வா குடு, ரெண்டு நாள்ள தர்ரன். செத்த வீட்டுக் காசு கட்டணும்.” அவரே ஆரம்பித்தார்.

பின்பக்கமாகக் கதச்சுக் கேக்கவும் பின்னாடி திரும்பிப் பார்த்தேன். நெடுத்த வெள் மீசக்காரருக்கு முன்னாடி பிளாஸ்டிக் மேசையும் சிலரும் உக்காந்திருந்தார்கள். மேசையில் நாலஞ்சு நோட்டுப் புத்தகங்கள் அடுக்கியிருந்தன. நெடுத்த மீசக்காரர் நிமிந்து பார்க்க நேரமில்லாமல் அவசரம் அவசரமாக ரசீது போட்டுக்கொண்டிருந்தார்.

“அதாவது உங்க சாதி சங்க காசு கட்ட எங்கிட்ட கடன் கேக்குறீங்க”

“அட பேயா விசர்க்கத கதைக்காத”

“ஆமா விஸ்வகுலஞ் சாதி சங்கமின்னு வெளிய பேனர் வச்சிருக்கு.”

“அட லூசா, ஒவ்வோரு செத்த வீட்டுக்கும் கட்டுற இருநூறு ரூபாவச் சேத்து… நாம செத்தாலும் உடனே ஐம்பதாயிரம் காசு தருவாங்க”

“ஏன் உங்கள புதைக்க உங்ககிட்ட, உத்தியோகம் பாக்குற உங்க புள்ளைக்கிட்ட காசு இல்லையா, இல்ல தன் நாட்டுக் குடிமகன புதைக்கிறதுக்கு உங்க அரசாங்கத்துக்கும் வக்கில்லையா?”

“இந்தச் செதுக்கு மசிர் கதயெல்லாம் என்னட்ட கதைக்காத. காசு இல்லாட்டி இல்லன்னு சொல்லு. ஓடிப்போன உங்களுக்கு இங்குள்ள நடைமுறைகள் எங்க தெரியப்போவுது” முகத்தை அந்தப் பக்கம் திருப்பிக்கொண்டார். அவரைச் சீண்டிப் பார்க்கும் விதமாக “உங்க அதிகாரம் இருந்தப்பவும் சங்கம் இப்படித்தான் இருந்துதா மாஸ்டர்?”

“சூசையப்பர் நலன்புரிச் சங்கம் என்று பேர மாத்தி வச்சிருந்தாங்க”

“அப்ப எந்தக் காலத்திலயும் எத்தன பேர் செத்தாலும் உங்க சாதிக்கு எந்தச் சேதாரமும் வரல” “தேவையில்லாத கத கதைக்காத. காசு இருக்கா இல்லையான்னு சொல்லு”

“இந்திய காசு இருக்கு, தரட்டுமா?”

“அது இங்க செல்லாது”

“இந்திய ரெயினிங்” என்று நிறுத்தி அவர் முகத்தைப் பார்த்தேன், கடுமையாக இருந்தது. அவர் உளறுபவர் அல்ல. வார்த்தைகளால் எதையும் வெளிப்படுத்த அவர் விரும்பவில்லை என்று தெரிந்தது. கொடுக்கப்பட்ட பயிற்சி அப்படி!

“உங்களுக்குத்தான் பென்சன் காசு வருமே…”

“எங்க வருது… நான் என்ன அரச உத்தியோகமா பார்த்தேன்”

“இங்க பள்ளிக்கூட வாத்தியார எல்லாம் மாஸ்டர்ங்கிறாங்க. நீங்களும் மாஸ்டர் வேல பாத்திருப்பீங்கன்னு நீனச்சன். அப்ப ஏன் உங்கள மாஸ்டர்ங்கிறாங்க?”

“அது இயக்கத்துல இருந்தப்போ…”

“ஓ நீங்க புலியோட ரெயினிங் மாஸ்டர்” இவர் ரெயினிங் மாஸ்டர் என்பதும் இந்தியாவில் ரெயினிங் எடுத்தவர் என்பதும் முன்பே எனக்குத் தெரியும். நான் அப்படிச் சொல்லும்போது அவர் முகத்தில் ஒரு பெருமிதம் தெரிந்தது.

“சரி வாத்தியார் வேல பாக்கிறவன மாஸ்டர் எங்கிறாங்க. முடி வெட்டுற வேல, மரம் ஏறி கள்ளிறக்கிற வேல செய்றவங்கள எப்புடிக் கூப்பிடுவீங்க?”

“அடேய் குணசீலி பெத்த தறுதல… இந்தியாவில இத்தன வருசம் இருந்து இத கேக்கத்தான் வந்தியா”

“நல்லவேள நான் இங்க இல்ல”

“இருந்திருந்தா தனி ஈழம் கிடச்சிருக்குமோ!”

“இல்ல செத்திருப்பேன்”

கடுகடுத்த முகத்துடன் புலம்பிக்கொண்டு வந்த அமல், மாஸ்டர் பக்கத்தில் உக்காந்தான். ஏதோ பிரச்சனப் பட்டுக்கொண்டு வந்திருக்கிறான் என்பது அவன் தோற்றம் காட்டியது. குப்பென்று வீசிய பட்டசாராய நெடி முகத்திலடிக்கவும் முகத்தைத் திருப்பிக்கொண்டேன். “நாங்க வேணாமிண்டா சொல்றம், போறவன் போகட்டும் எங்களுக்கென்ன”

“என்னடா பிரச்சனை… எதுக்குக் கோவப்படுற”

“நீங்க நாயத்தச் சொல்லுங்க சித்தப்பா… நாங்க சாராயம் குடிக்கத்தான் குழி வெட்டப் போறமாம். நாங்க அதுக்கா போறம், குடிக்க எங்ககிட்ட காசா இல்ல… அப்புச்சி ஊர்ல பெரிய மனுசன் அதனாலதான்”

“கொஞ்சம் பொறுடா, ஏன் கோவப்படுற. நிதானமா கத”

“அப்ப நான் என்ன வெறியிலயா கதைக்கிறன்”

“நா அப்புடிச் சொன்னேனா” வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். தேவா ரோட்டில் நிண்டு சத்தமாக “டேய் அமல், இங்க வாடா நேரமாகுது” என்று கூப்புட அமல் எந்திருச்சு போயிட்டான். “இவங்க ஒரு போத்தல் சாராயம் வாங்கிக் குடுப்பாங்க. குழிவெட்டுற இடத்துல பதினஞ்சு பேர் நிப்பாங்கள்” என்றார் மாஸ்டர்.

“கல்யாணத்துக்கு வடிசாராயம் காச்சுறவன்கள் சா வீட்டுக்கும் காச்சுவாங்தானே”.

“எப்ப சாவு வருமென்று தெரிஞ்சா அதயும் செய்வாங்க.”

“வீறாப்பு பேசினவன் இப்ப அங்கதான் போறான் பாரு” என்றார் மாஸ்டர்.

“உங்கட ஆட்சிக்காலத்துல இந்தச் சமாச்சாரமெல்லாம் எப்படி மாஸ்டர்”

“நக்கல் மயிர எங்கிட்ட காட்டாத, முகறய பேத்திருவேன்.”

“ஆஆ வன்முறையா?” என்னுடைய கேள்விகள் எதற்கும் அவரிடமிருந்து பதில் வரவில்லை.

மருமகன் வேகமாக வந்தான். “மயக்கச் சோத்துக்கு வாழக்கா வேணும். உங்க வளவில கிடக்குதா?”

“சந்தியாகு செத்த வீட்டுக்கு வெட்டினாங்கள், கிடக்காண்டு தெரியல. போய்ப் பாரு, கிடந்தா வெட்டிக்க”

தெருவில் நாலு குத்துக் கம்பக் குத்தி, தென்னோலை தோரணம் கட்டியிருந்தார்கள். மழை வரும் என்பதால் மாதர் சங்கப் பந்தலையும் மெசின் பெட்டியில அள்ளி வந்து போட்டார்கள். மூணு மணிக்குப் பாடி எடுப்பதாக ஆட்டோவில் குழாயக் கட்டி அறிவிப்புச் செய்ததால ஆக்கள் வர ஆரம்பித்தார்கள். தெருவில் கட்டிய தோரணத்தில் கொஞ்சத்த மெசின் பெட்டியின் மூணு பக்கக் கதவையும் கழட்டிவிட்டுக் கம்பக்கட்டி அதில் தோரணத்தையும் கட்டியிருந்தார்கள். காட்டுக்கு மோட்டர் சைக்கிள்ள சென்று கம்பு வெட்டிக்கொண்டு வந்து வீட்டுக்குப் பின்பக்கம் வைத்துப் பாடை கட்டிக்கொண்டிருந்தார்கள். வீட்டப் போய் ஒரு தூக்கத்தைப் போட்டுவிட்டு வரலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். மாஸ்டர் காசு கிடைக்காத ஏமாற்றத்தில் எழுந்து சென்றுவிட்டார். மாஸ்டர் போனதும் எந்தக் குடிகாரனாவது பக்கத்தில் வந்து உக்காந்து தாலியறுக்கப் போறான் என்று நினைத்துக்கொண்டிருக்கவும், சர்ச்சில உள்ள பாஸ்டர் பக்கத்தில் வந்து உக்காந்தது சற்று ஆறுதலாக இருந்தது. இவரும் குடிப்பதில்லை. வீட்டு விறாந்தையில் இருந்த அப்புச்சி பாடிய பந்தலுக்குள் கொண்டுவந்து வாங்குமேல பெட்டியோட வைத்தார்கள். குளிக்க வாத்தாங்களா, சேவ் எடுத்தாங்களா தெரியல. நான் அப்புச்சி புணத்த எட்டியும் பாக்கல. ஒரு வாரம் படுக்கையில கிடந்து செத்திருக்கிறார்.

குஞ்சு மாஸ்டர் தெருவில் கடவலடியில் குறுக்காக மோட்டார் சைக்கிளை நிறுத்திட்டு, சின்னக்கவுண்டர் விஜயகாந்த் மாதிரி நடந்து வந்தார். அவர் வாகனத்த நிறுத்திய இடமும் அவர் நடையும் தோற்றமும் விரும்பும்படியாக இருக்கவில்லை. அதிகாரத்தின் உச்சம் அசைவில் தெரிந்தது. உக்காந்திருந்த சிலர் எந்திருச்சு வணக்கம் வைத்தார்கள். நேராக அப்புச்சிக்கிட்ட போனவர், அவரை வணங்கிவிட்டுப் புளியமரத்தடிக்கு வந்தார். அந்தக் கதிரையிலிருந்து ஒருவர் எந்திருச்சு அவர் இருக்க வழிவிட்டார். அவரு உக்காரவும் சரியாக அந்த இடத்தில் மைக் மரியதாஸ் வந்து சேர்ந்தான். பக்கத்திலிருந்த பாஸ்டரிடம் “இவரு யாரு கதாநாயகன் மாதிரி வந்து உக்காந்திருக்கிறார்?” எனக்கு இங்குள்ள ஆக்கள இன்னும் சரியாத் தெரியாததால பக்கத்தில அறிமுகமாகி இருப்பவர்களிடம் இப்படி விசாரிப்பது வழக்கமாக இருந்தது. “அவருதான் சாதி சங்கத் தலைவர்.” மீண்டும் அவரை உற்றுப் பார்த்தேன், முகம் கடுமையாக இருந்தது. தலைக்கு டை அடித்திருந்தும் வெள்ள மயிரு ஈ என்று பல்லைக் காட்டிக்கொண்டிருந்தது. “எத்தன போத்தல் சாராயம் வாங்கிக் குடுத்து இந்த இடத்துக்கு வந்திருப்பார்?” “சாராயமெல்லாம் தேவயில்ல, பள்ளிக்கூட அதிபராக இருந்தா போதும். இப்படித்தான் இங்குள்ள நடைமுறை” ‘அப்ப இவர்களிடம் படிக்கும் பிள்ளைகள்!’ என்று நினைத்தேன், அவரிடம் கேட்கவில்லை. மேற்கொண்டு பேச மனமில்லாமல் முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக்கொண்டேன்.

நேரம் மதியம் ஒரு மணியத் தாண்டியிருந்தது வானம் எப்ப வேணுமின்னாலும் மழை பெய்வேன் என்று பயம் காட்டிக்கொண்டிருந்தது. கோயில் சங்கிர்தம் வந்து அப்புச்சிக்கு முன்னாடி கதிரையில வந்து அமர்ந்தாரு. எங்க நிண்டானோ தெரியல, மைக் மரியதாசும் சங்கிர்த்தத்துக்குப் பக்கத்துல வந்து உக்காந்தான். சற்று நேரத்தில ‘அருள் நிறைந்த மரியே வாழ்க, கர்த்தர் உம்முடனே…’ என்று ஆரம்பித்து ‘பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமேன்’ என்று முடிக்கும்போது மணி இரண்டைக் கடந்திருந்தது. நன்கு கொழுத்து உருண்டு திரண்ட நடுத்தர வயதான கறுத்த கட்டையான பாதர் வந்தார். உக்காந்திருந்தவர்கள் எழுந்து வணக்கம் வைத்தார்கள். பாதர பார்க்கும்போது சின்ன வயசுல ஆசப்பட்டதோட பாதருக்குப் படித்திருக்கலாமோ என்ற நினைப்பு வந்தது. மரியதாஸ் ஓடிப்போய் பாதருக்குப் பக்கத்துல நிண்டு ஏதோ குசுகுசுத்தான். இவன் எவ்வளவு நேரமெடுப்பானோ என்று நினைத்துக்கொண்டேன். பாஸ்டர் சொன்னார் “பாதருக்குக் குண்டியில கொழுப்பேறி இருக்கு.” அவருடைய மேலங்கியையும் தாண்டி எப்படி பாஸ்டர் கண்டுபிடித்தாரோ என்று தெரியல. அவர்களுடைய வழிபாட்டு நேரத்துல குசுகுசுன்னு கதைக்கப் புடிக்காமல் பாஸ்டரைப் பார்த்து ஒரு புன்னகையை மட்டும் பதிலாக வைத்தேன். கோயில்ல திருப்பலி இருப்பதால் பாதர் விரைவாக பிதா சுதனுக்கு வந்துட்டார். அவரும் செக்கு மாடுமாதிரி இதே வேலையச் செய்து செய்து அலுத்துப் போயிட்டாரோ என்னவோ. பாதர் முடித்துப் பக்கத்துல நின்ற மைக் மரியதாசிடம் மைக்கக் கொடுத்தார். அவன் யேசுநாதர கூப்பிட்டு, சேமால மாதாவக் கூப்பிட்டு, மடுமாதாவக் கூப்பிட்டு, அப்புச்சியட அருமை பெருமைகளப் பேசி பிதா சுதனுக்கு வரும்போது நான் ரோட்டுல ஏறி நின்றேன். பெட்டியத் தூக்கி வந்து ரோட்டுல நிண்ட மெசின் பெட்டியில வைத்தார்கள். இவங்க சொன்ன சேமால அக்கப்போருக்குள்ள ஒரு பாட்டம் மழையும் வந்து ஓய்ந்திருந்தது. ரோட்டெல்லாம் சேறும் சகதியுமாக மாறியிருந்தது.

கோயிலின் நடுவில் அப்புச்சியட பிணம் திறந்து வச்சிருந்த சவப் பெட்டிக்க இருந்தது. பெண்கள் ஆண்கள் சுத்தி நின்றார்கள். வீட்டிலிருந்து பிணத்தத் தூக்கியதும் வந்த கூட்டத்தில் பாதி அவரவர் வீட்டுக்குப் போய்விடுவார்கள். குறைந்தளவான பெண்கள் மட்டும் கோயிலடி வரை வருவார்கள். அதைத் தாண்டி சவக்காலைக்குப் புணத்துக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே வருவார்கள். பெண்கள் வரமாட்டார்கள். இரங்கல் திருப்பலி ஞாயிறு மாதிரி ரெம்ப நேரம் இருக்காது என்றாலும், அர மணி நேரமாவது ஆகும். பாதர் திருப்பலிய ஆரம்பிக்கவும் மெதுவாக வெளியேறி பக்கமாக இருந்த பழைய இடிந்து கிடந்த பள்ளிக்கூட கட்டில் உக்காந்திருந்தேன். என்னைப் போல் சைவக்காரர்கள் பலரும் இருந்தார்கள். வெளிநாட்டில் இருப்பவர்களிடம் வசூல் செய்து கட்டிய கோயில் பளபள என்றிருந்தது. எதிரில் தூபம் காட்டுதற்காகப் பையன் ஒருவன் சிரட்டக்கரிய போட்டுப் புக முட்ட ஊதி ஊதி தனலாக்கிக்கொண்டிருந்தவன், எந்திருச்சு வேகமாக உள்ள போனான். நானும் உள்ள போனேன். பாதர் பூசை முடித்துப் பீடத்தடியில் இருந்து இறங்கி வந்து அப்புச்சியட தலமாட்டுப்பக்கமாக வந்து கையிலிருந்த செப புத்தகத்தை விரித்துப் பார்த்துச் சில வார்த்தைகள படித்தார். பக்கத்தில் நின்ற மரியதாஸ் பாதருக்குத் தோதாக மைக்க புடித்துக்கொண்டு நின்றான். பாதர் படித்து முடித்ததும் உதவியாளர் பையனிடம் இருந்து தூபத்தை வாங்கி அப்புச்சிய சுத்தி வந்து தூபம் காட்டினார். ஆசீர்வாத தண்ணியத் தெளித்தார். மரியதாஸ் பேச ஆரம்பித்தான். “கர்த்தரின் கருணையினால் அமரர் அருளாநந்தம் அவர்களின் ஆத்மா இறைவனடி சேர்ந்தது. அன்னார் இவ்வாலயத்தில் நீண்டகாலம் சங்கிர்தமாக இருந்தவர். அவரின் வாழ்வானது….” மரியதாசின் குரல் என் காதில் மெலிதாக விழுந்து மறைந்தது. நான் தெருவில் நின்றுகொண்டிருந்தேன். இதனாலதான் இவன மைக் மரியதாஸ் என்கிறார்கள் போல. அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள்ள ஏறி சவக்காலைக்குப் போனேன்.

பக்கத்து ஊர் எல்லையை ஒட்டினாற்போல சவக்காலை இருந்தது. மூன்று பக்கமும் வயல். மேற்குப் பக்கமாகத் தெரு இருந்தது. வடக்குப் பக்கம் சவக்காலை வேலிக்கு வெளியே ஒரு வீடு தனியாக இருந்தது. சீமெந்து தூண் போட்டு முள்ளுக் கம்பியால் வேலியடைத்திருந்தார்கள். வடக்குப் பக்க வீட்டையொட்டி வேலி அடைத்திருந்த சவக்காலைக்குள் அரை ஏக்கர் அளவுக்கு உழுதிருந்தது. அதனை ஒட்டினாற்போல் பெரிய மோட்டை, அதற்குள் தாமரை படர்ந்திருந்தது. வெட்டப்பட்ட குழிக்குச் சற்றுத் தள்ளி நிண்ட புளிய மரத்தடியிலும், பால மரத்தடியிலும் சிலர் உக்காந்திருந்தார்கள். குழி முழுவதுமாக வெட்டி முடித்திருந்தார்கள். நான் இங்க வந்த பின்பு இன்றுதான் முதல் தடவையாகச் சவக்காலைக்கு வந்திருக்கிறேன்.

மிசின் பெட்டி மெதுவாக ஊர்ந்து வந்து ரோட்டில் நின்றது. சவப்பெட்டிய தூக்கிட்டுப் போய் வெட்டுன குழிக்குப் பக்கத்துல வைத்தார்கள். சங்கிர்த்தம் மறுபடியும் புத்தகத்தப் பிரிச்சு சேமால சொல்ல ஆரம்பித்தார். நான் சற்றுத் தள்ளி மரத்தடியில் தனியா நின்ற பாஸ்டருக்குப் பக்கத்தில் போய் நின்றேன். மறுபடியும் மழ வந்திரப்போவுது, பாக்கட்டுல இருக்கிற போன் நனஞ்சிரப் போவுது என்ற நினைப்பு ஒரு பக்கம். “உங்களுக்கும் இதே சவக்காலதானா?” “எங்கட சர்ச்சுக்குத் தனியா சவக்கால இருக்கு” என்றார் பாஸ்டர்.

கடைசியா பாக்குறவங்க வந்து பாருங்க என்ற குரல் சற்று அழுத்தமாகவே கேட்டுது. கூட்டம் சற்றுத் தள்ளு முள்ளுப்பட்டுது. பெட்டிய மூடி ஆணியடித்தார்கள். “அறுநாக்கயிற அவுத்துட்டீங்களாடா” என்று பின்னாடியிருந்து ஒரு குரல் வந்தது. தமிழ் சினிமாவின் தாக்கம். குறுக்கால இரண்டு தேடாக் கயிறு போட்டு அதன் மேல் பெட்டி வைக்கப்பட்டிருந்ததால நாலு பக்கமும் கயித்த பிடித்துப் பெட்டிய குழிக்குள்ள இறக்கினார்கள். “அடே சத்தாருக்குப் பெட்டிய வைங்கடா” என்று ஒரு குரல்வந்தது. “பெட்டிய இறக்குறவனுக்கு அது தெரியாதா” “அட விடுங்கப்பா…” இப்படியாக மண்ணுக்கப் போனார் அப்புச்சி. ஒரு தடவை குடி வெறியில பெரிய குழியா வெட்டிட்டாங்களாம், அதனால குழிக்குள்ள பெரிய இடங்கிடக்குதே என்று எவனோ ஒருவன் சொன்ன ஆலோசனை பெட்டிய சத்தாருக்கு வைங்க என்று. அது இன்று ஒரு சடங்காக மாறியிருந்தது. மூத்தமகன் பத்து வருசத்துக்கு முன்னாடியே போயிட்டார் என்பதால கடைசி மகன் முதல் மண்ணள்ளிப் போட்டார். அதன் பிறகு மருமகன், பேரப்புள்ளைங்க வரிசையா மண்ணள்ளிப் போட்டார்கள். பிறகு, மண் வெட்டியால் போட்ட மண் பாதி குழி நிரம்பியிருந்தது. பின்னால இருந்து வந்த சத்தம் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருத்து…

“உன்ன யாருடா எங்க சவக்காலைக்க உழச் சொன்னது” மரியதாஸ் மச்சினன் சவுந்தரத்தின் குரல் ஆக்ரோசமாக இருந்தது. “உங்க சங்கத்து ஆளுகதான் சொன்னாங்க” இந்தக் குரலுக்கு மேலால பல சத்தங்கள் நாலா பக்கமிருந்தும் வந்து விழுந்ததில் குரல் அமுங்கிப்போனது.

“அத நீ ஏப்பா கேக்கிற… அதுக்குத்தான் சங்கம் இருக்குது”

“நானும்தான் உறுப்பினர்”

“எல்லாருந்தான் உறுப்பினர்”

“சும்மா கிடக்கிற மீதி இடத்துல ஏதாவது பயிர் செய்ங்கன்னு சங்கம் சொன்னப்ப சாதிக்காரங்க கௌரவம் பாத்து முன்வரல”

“அதுக்காக புறத்தியான் வந்து எங்க சவக்காலைக்கத் தோட்டம் செய்வானா”

“சும்மா கிடக்கிற இடந்தானே, புழச்சுப் போறான் விடுப்பா”

“இப்ப விட்டா நாளைக்குப் புணத்தக் கொண்டுவருவான்”

“சும்மா விட்டாலும் பத்தக்காடா ஆயிரும்.” யாரு என்ன கதைக்கிறார்கள் எந்தப் பக்கம் கதைக்கிறார்கள் என்பது அறிய முடியாத நிலையிருந்தது. சாராயம் குடிக்காத ஒரு சிலர் பிரச்சனை பெரிதாகாமல் இருக்க முயற்சி செய்தார்கள். குடிகாரர்களின் குரல் மேலும் மேலும் உயர்ந்துகொண்டிருந்தது. சங்கத்தாளுங்க கதையக் கேட்டு உழுத கணேசன் தனித்து நின்றதால் அமைதியானான். இந்த வாய்த்தகராறிலும் சிலர் சவக்குழியை மூடிக்கொண்டிருந்தார்கள். ஆங்காங்கு சிலர் மரத்தடியிலும் ரோட்டிலுமாக நின்று வேடிக்கை பார்த்தார்கள். “எந்த புண்டமகனாவது உழுகிறன், தோட்டம் செய்றன் என்று வந்தீங்க கேற்ற பூட்டி சாவிய எடுத்துருவன்.” சற்று அமைதியான சூழல் நிலவுவதாக இருந்த நிலையில மரியதாஸ் மச்சினன் சவுந்தரத்தின் குரல் தெறித்து விழுந்தது. “ஏண்டா சுண்ணி உன் அப்பன் வீட்டு சொத்தா… நீ பூட்டுப் போடுறதுக்கு” என்று கூறி பாடையில இருந்த கம்ப உருவியெடுத்தான் பிரபா. மரியதாஸ் மச்சினன் பாஞ்சு சவக்குழிய மூடிட்டு இருந்தவனுடைய மண் வெட்டிய புடுங்கினான். மாறி மாறி தள்ளுமுள்ளுப் பட்டதில சிலர் முழுதாக மூடுப்படாத சவக்குழிக்குள்ள விழுந்தார்கள். “அரசாங்கத்துல பதிவு செய்யாத சவக்காலைக்கு எப்புடி சண்ட போடுறாங்க” நான் ஆச்சர்யமாக பாஸ்டரப் பார்த்தேன். “பிறகு எப்படி புதைக்கிறாங்க”

“அரசு நிலமா கிடந்தத அடாத்தா புடுச்சு தங்கட சாதிக்கான சவக்காலையா மாத்திட்டாங்க. இன்னும் பிரதேச சபையில பதிவு செய்யல”

‘ஓ இதுதான் சாதித் தடித்தனமா’ என்று நினைத்துக்கொண்டேன்.

“கணேசன் உழுதிருக்கிற இடத்துல அவன் அப்பா கருப்பையா சாகுறதுக்கு முன்னாடி முளகா கண்டு நாட்டுவார்”.

‘அட இப்படி எல்லாம் கத இருக்கா’ என்று நினைத்துக்கொண்டேன்.

“அது மட்டுமில்ல இவங்க முன்னாடி பக்கத்து ஊர் கோயில் வளவுக்குள்ள தாட்டாங்க. அவங்க தங்கட கோயில்ல தாக்கக்கூடாதுண்டு பிரச்சன… பிசப்பு வரை போச்சு. அதுக்குப் பிறகுதான் இங்க ஆரம்பிச்சிருக்காங்க. இப்ப இவங்களும் அந்தக் கோயிலுக்குப் போறதில்ல, அவங்களும் இங்க வாறதில்ல.”

“இந்த இடம் அவங்க ஊருக்குள்ளயா இப்ப இருக்கு?”

“முன்னாடி வேற ஆக்கள் இந்தப் பகுதியில இருந்ததால சேர்க்காம இருந்தாங்க. இப்ப சவக்கால வேணுங்கிறதால சேத்திருப்பாங்க.” அவர்கள் மேல் எரிச்சல் பட்ட பாஸ்டர் இவங்க திருந்த மாட்டாங்க என்று புலம்பிக்கொண்டே புறப்படவும், ‘இவர்மேல அவர்கள் என்ன கதை வைத்திருக்கிறார்களோ’ என்று நினைத்துக்கொண்டு மெதுவாக ரோட்டுக்கு வந்து நின்று பார்த்தேன். சத்தம் அடங்கவில்லை. பிரபாவுக்கு ஆதரவாகவும் மச்சினனுக்கு ஆதரவாகவும் சிலர் கத்திக்கொண்டிருந்தார்கள். சவக்கால கேற்றடியில அப்புச்சியட மகனும் மருமகனும் வந்தவர்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டு நின்றார்கள். அவர்களுக்குப் பலரும் கை கொடுத்துவிட்டுச் சென்றார்கள். இரண்டாவது மிசின் பெட்டியில் கொண்டுவந்த பிஸ்கட் சோடாவ வந்தவர்களுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். நான் திரும்பிப் பார்க்காமல் பொடி நடையாக வீட்டுக்குப் புறப்பட்டேன்.

இரவு ஏழு மணியிருக்கும் மெதுவாக நடந்து சாவீட்டுக்குச் சென்றேன். ஆங்காங்கு சிலர் பேசிக்கொண்டிருந்தார்கள். சிலர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். அதுவும் அப்புச்சிக்கு நெருக்கமான உறவுகள்தான். காலை சவத்த எடுத்திட்டால் மதியமும், மதியத்துக்குப் பிறகு சவத்த எடுத்தால் இரவும் மயக்கச்சோறு காச்சுவார்கள். அதற்கு வாழக்காய், கருவாடு, கத்தரிக்கா எல்லாத்தையும் ஒண்ணா போட்டு ஒரு கறி, முருங்கக் கீரை போட்டு ஒரு சொதி வைத்திருப்பார்கள். எல்லா செத்த வீட்டிலும் இப்படித்தான். இதற்கான காரணங்கள் எனக்குத் தெரியாது. ஒரு சடங்காகவோ மரபாகவோ செய்வார்கள். சவக்குழியில பெட்டிய சத்தாருக்குவைக்கிற மாதிரி இதற்கும் ஒரு கதை இருக்கலாம்.

மருமகன் வந்து சாப்பிடக் கூப்பிட்டான். சாப்பிடுவதற்காக வந்த மாதிரி ஆகிவிடக்கூடாது என்பதால் “நீ போ நான் வாறன்” என்று சொல்லிவிட்டு இருந்தேன். பக்கத்துல பாஸ்டர் அமர்ந்திருந்தார். இவர் அப்புச்சிக்குப் பேரனோ பூட்டனோவாகத்தான் இருப்பார். மரியதாஸ் குழுச்சு முழுகி மொழுமொழு முகத்துடன் மோட்டார் சைக்கிள ரோட்டோரமா நிறுத்திட்டு வந்தான். தகர பந்தலின் நடுவில நிண்டுகொண்டு பெருத்த சத்தத்தில “எல்லாருக்கும் ஒன்று சொல்லுறன் கேளுங்க. நம்ம ஊருக்கு என்று ஒரு இது வேணாமா? தெருவிலயும் பத்தைக்குள்ளயும் குடிச்சிட்டுக் கிடக்கிறாங்கள். பக்கத்து ஊர்க்காரங்க நம்மள பாத்துச் சிரிக்கிறாங்க. இனிமே யாராவது குடிச்சிட்டு வந்தா நான் பாதர்ரிட்ட சொல்லுவேன், போலிசுக்கு போன் பண்ணுவேன். எவரையும் நான் பார்க்க மாட்டேன், மினிஸ்டருக்குக் கடிதம் எழுதுவேன். பேசிக்கொண்டிருக்கும்போதே மருமகன் பிளாஸ்ரிக் கதிர ஒன்றை எடுத்து வாசல் படிக்கட்டுல ஓங்கி அடித்தான். கதிரை சுக்குநூறாகத் தெறித்து விழுந்தது. “அவன மரியாதையா வளவவிட்டு வெளிய போகச் சொல்லுங்க. உடஞ்ச கதிர அவன்மேல படுறதுக்கு நேரமாகாது.” சற்று நேரம் மயான அமைதியானது. சாப்பிட்டுட்டு இருந்த மரியதாசுட மனுசி சாப்பாட்டுக் கோப்பையப் போட்டுட்டுக் கைய சோட்டியில துடச்சிட்டு ஓடிவந்து மரியதாச கையில புடுச்சு இழுத்துக்கொண்டு போச்சுது. “யார் வீட்டுல வந்து நின்று ஊர் நியாயம் கதைக்கிறான். என் மாமனார் வீட்டுல வந்து கதைக்கிறதுக்கு இவனுக்கு என்ன உரிமையிருக்கு. அவன் வீட்டுக் காசிலயா குடுச்சிட்டுத் தெருவில கிடக்கிறான்கள் அல்லது அவன் வீட்டுலயா செத்தவீடு. அவன் மருமகன்தான் வடிக்கிறான், அங்க போய் உன் பிரசங்கத்த வைக்க வேண்டியதுதானே. அவங்கதைய எல்லாம் இப்ப நான் சொல்லட்டுமா? ஊரத் திருத்த வந்துட்டாரு.” மெதுவாக எழுந்து மருமனிட்ட போனேன். “நம்ம வீட்டுல நாமளே பிரச்சனைய உருவாக்க கூடாது மருமகன்.” “அப்ப அடுத்தவன் வந்து பிரச்சன பண்ணா பாத்துட்டு இருக்கணுமா… என்ன கத கதைக்கிறீங்க நீங்க” சமாதானம் செய்யப்போனா என்னையே ஏற வர்றான் என்று சத்தமில்லாம இருந்திட்டன். “அவர் விளங்காம கதைக்கிறார், நீங்க விடுங்க” என்று யாரோ ஒருத்தர் சொன்னார். “சாராயம் காச்சுறது அவன் மருமகன், அத குடிச்சிட்டுக் சவக்காலையில சண்ட போட்டவன் அவன் மச்சினன். அதப் பேசமாட்டான். இங்க வந்து ஊரத் திருத்துறானாம் அயோக்கியன்.” யாரும் பேசல, அமைதியாக இருந்தது. மனசு கேக்காம கிட்ட போய் கைய புடுச்சு “விடுங்க மருமகன்” “சும்மா போமாட்டீங்களா அங்கால” என்று கைய உதறிவிட்டான். “ஊருக்குப் பொதுவான புலக்காணிய புடிக்கிறான்கள், காட்டுல இருந்து இருட்டுல மரங்கடத்துறவன் தெருவிளக்கெல்லாம் அடிச்சு நொருக்கி வச்சிருக்கிறான்கள்… இதுவும் ஊரோட பொதுப் பிரச்சனதானே, இத அவன கதைக்கச் சொல்லுங்க பாப்பம்” “அட விடப்பா, ஊருக்குன்னு ஒரு கட்டுப்பாடு வேணாமா… அதத்தான் அவர் சொல்றார்.” “அத யாரு சொல்றது, அத சொல்ல இவன் யாரு… ஊர்த்தலைவரா? முதல்ல இவன் யோக்கியமானவனா? சாராயம் காச்றவனிட்ட காச வாங்கிட்டுப் போலிசே விட்டுர்ரான், இவன் என்ன பெரிய மயிரு” “அப்ப எல்லாரும் குடிக்கட்டும்கிறியா…” என்று கூட்டத்துல இருந்து சகாயம் கேட்டான். “நீர் என்னையா விளங்காம கதைக்கிறீரு… குடி மட்டுமா இங்க பிரச்சன. இவனுக்கு யாரு அதிகாரம் கொடுத்தது. ஊர்த் தலைவரா இவன் சொன்னா கேட்டுருவாங்களா? யாரு வீட்டுல வந்து பிரசங்கம் செய்றான். அவன் காசுல குடிக்கிறானா அல்லது குடிச்சிட்டு அவன் வீட்டுலயா போய் படுக்கிறான்?”

மருமகன் கையப் புடுச்சு இழுத்துட்டுப் போய் சாப்பிடுற இடத்தில உக்கார வச்சேன். “மருமகன் எனக்குச் சாப்பிடனும், நீயும் சாப்பிடு. பிறகு ஆறுதலா பேசுவம். அவன மாதிரி நீயும் கத்தி ஊரக் கூட்டாத” “நீங்க சாப்பிடுங்க, நான் பிறகு சாப்பிடுறன்” குரல் தணிந்திருந்தது. நிலைமை கொஞ்சம் சுமுக நிலைக்குத் திரும்பியது. பலருக்கும் மரியதாச மருமகன் பேசுனதில சந்தோசம் இருந்தது. “மருமகன் அவன் கேக்க ஆளில்லன்னு ஆட்டம் போடுறான். இந்த ஊர்ச்சனத்துக்கு முதல்ல அறிவில்ல, இருந்தா இப்படியெல்லாம் அவன் செய்வானா? நீ எல்லாத்தயும் சேத்து வச்சு வஞ்சம் தீர்த்திட்ட. அது சாணியில கல்லெறியிற மாதிரி” மெதுவாக அவன் காதருகில் சொன்னேன். என் முகத்தப் பார்த்துச் சிரித்தான்.

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger