அடித்தள மக்களுக்கான குறிப்புகள்

மால்கம் எக்ஸ் | தமிழில் : கவின் மலர்

‘அடித்தள மக்களுக்கான குறிப்புகள்’ – டெட்ராயிட்டில் நடந்த வடபகுதி நீக்ரோ அடித்தள மக்களுக்கான தலைமைப் பண்பு மாநாட்டில், 1963 நவம்பர் மாதம் மால்கம் எக்ஸ் ஆற்றிய உரை. நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பிலிருந்து வெளியேறுவதற்கு முன்பான அவருடைய இறுதி உரைகளுள் ஒன்று இது. இந்த உரையில் வெளிப்படும் கறுப்பினத்தவரின் அதிகாரம் மற்றும் மக்கள் உரிமை இயக்கங்கள் குறித்த கூற்றுகள் ஒரு திருப்புமுனை என்கிறார்கள் ஆப்பிரிக்கர்களின் ஒற்றுமைக்காக, காலனியாதிக்கத்தையும் வெள்ளையர்களின் மேலாதிக்கத்தையும் எதிர்க்கும் ஆப்பிரிக்க அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். மால்கம் எக்ஸ் இதில் புரட்சியை வரையறை செய்கிறார். கறுப்பினப் புரட்சியையும் நீக்ரோ புரட்சியையும் ஒப்பிட்டு வேறுபாடுகளை விளக்குகிறார். வெள்ளையரல்லாத மக்களின் உலகந்தழுவிய ஒற்றுமைக்காகப் பேசுகிறார். அதிகாரம் பொருந்தியவர்களுக்கும், நிறப் பாகுபாடு காரணமாக முன்னுரிமைகளை அனுபவிப்போருக்கும் எதிராக முழங்குகிறார். அவருடைய புகழ்பெற்ற உரையிலிருந்து பின்வரும் பகுதிகள் எடுக்கப்பட்டுப் பின்னர், மெரிட் பப்ளிஷர்ஸ் மற்றும் டாக்டர் பெட்டி ஷபாஸ் வெளியிட்ட ‘மால்கம் எக்ஸ் பேசுகிறார்’ நூலிலிருந்து (பதிப்புரிமை 1965) மறுபிரசுரம் செய்யப்பட்டது.

ங்களுக்கும் எனக்கும் இடையே அதாவது, நம்மிடையே நிகழும் உரையாடல் முன்திட்டமிடப்பட்ட ஒன்றாக இருக்கக்கூடாது என விரும்பினோம். அனைவருக்கும் புரியும்படி எளிதான மொழியில் அந்த உரையாடல் இருக்க வேண்டும் என்றும் விரும்பினோம். மிகத் தீவிரமான பிரச்சினை ஒன்று அமெரிக்க நாட்டிற்கு உள்ளது என்பதை இந்த இரவில், இங்கு வந்திருக்கும் அனைத்துப் பேச்சாளர்களும் ஒப்புக்கொள்வார்கள். அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, நம் மக்களுக்கும் ஒரு முக்கியமான பிரச்சினை இருக்கிறது. அமெரிக்காவின் பிரச்சினை எதுவென்றால், அது நாம்தான். நாம் இங்கிருப்பதை இந்நாடு விரும்பவில்லை என்பதுதான் இந்நாட்டின் பிரச்சினை. கருப்பு, பழுப்பு, சிகப்பு, மஞ்சள் என உங்களுடைய தோலின் நிறம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்களை நீங்களே பார்த்துக்கொள்ளும்போது அமெரிக்காவிற்குப் பிரச்சினை தரும் நபராக நீங்கள் இருக்கிறீர்கள் என்று உணருங்கள். உங்கள் இருப்பு இங்கு தேவைப்படவில்லை. இந்த உண்மை உங்கள் பாதையில் எதிர்ப்படும்போது, அறிவற்றவராக அல்லாமல், உங்களை அறிவுஜீவியாகக் காண்பித்துக்கொள்வதற்கான வழிகளைத் தேடத் தொடங்குவீர்கள்.

நீங்களும் நானும் செய்ய வேண்டியது என்னவென்றால் நமக்கிடையே இருக்கும் வேறுபாடுகளை மறக்கக் கற்றுக்கொள்வதுதான். நாம் ஒன்றாக இணையும்போது Baptists1 ஆகவோ, Methodists2 ஆகவோ நாம் இணைவதில்லை. நீங்கள் ஒரு Baptist என்பதற்காகவோ, Methodist என்பதற்காகவோ உங்கள் மீது யாரும் கோபப்பட்டு ஏசுவதில்லை. அதுபோலவே நீங்கள் ஒரு ஜனநாயகவாதியாகவோ குடியரசுவாதியாகவோ இருந்தாலும் யாரும் உங்களிடம் அவ்வாறு கோபத்தோடு நடந்துகொள்வதில்லை. நீங்கள் மேசன்3 அமைப்பில் இருப்பதாலோ அல்லது எல்க்4 அமைப்பில் இருப்பதாலோ கூட உங்களிடம் யாரும் அப்படி நடந்துகொள்வதில்லை. நீங்கள் ஓர் அமெரிக்கர் எனில், மிக உறுதியாக உங்களுக்கு அப்படி நடக்காது. ஏனெனில், நீங்கள் அமெரிக்கர் என்றால் அதற்கான வாய்ப்பே இல்லை. நீங்கள் ஒரு கறுப்பர் என்றால் உங்களுக்கு அது நடக்கும். உங்களுக்கோ எனக்கோ அல்லது நமக்கோ அப்படி நடப்பதற்கு நாம் கறுப்பர் என்பதே காரணமாக இருக்க முடியும்.

ஆக, நாம் அனைவரும் கறுப்பர்கள். அதாவது நீக்ரோக்கள், இரண்டாம்தர குடிமக்கள், முன்னாள் அடிமைகள். நீங்கள் வேறு யாருமில்லை; ஒரு முன்னாள் அடிமை. அவ்வளவுதான். அவ்வாறு அழைக்கப்படுவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். ஆனால், நீங்கள் யார்? நீங்கள் அனைவரும் முன்னாள் அடிமைகளே. நீங்கள் யாரும் ‘மே ஃபிளவர்’ கப்பலில் இங்கு வரவில்லை. அடிமைகளின் கப்பலில் இங்கு வந்து சேர்ந்தீர்கள். குதிரையைப் போல, பசுவைப் போல, ஒரு கோழியைப் போல சங்கிலியால் பிணைக்கப்பட்டு வந்தீர்கள். மேலும் மே ஃப்ளவர் கப்பலில் வந்தவர்களே உங்களை அழைத்து வந்தார்கள். யாத்ரீகர்கள் அல்லது புதிய நிலத்தைக் கண்டுபிடித்தவர்கள் என்றழைக்கப்படும் அவர்களால்தான் இங்கு நீங்கள் அழைத்து வரப்பட்டீர்கள்.

நமக்கு ஒரு பொது எதிரி உண்டு. உங்களுக்கும் எனக்குமிடையே பொதுவான ஒடுக்குபவர்; சுரண்டுபவர்; பாகுபாடு காட்டுபவர் உண்டு. ஆனால், நாம் அனைவரும் நமக்குப் பொது எதிரி ஒருவரே என்பதை உணரும்போதுதான் ஒன்றிணைகிறோம். நம்மிடையே பொதுவாக எது இருந்ததோ அதுவே நம்மை ஒன்றிணைக்கிறது. வெள்ளையர்கள்தான் நமது பகை. நம் பகையாளிகள் வெள்ளையர்கள் என்பதுதான் நம்மிடையே இருக்கக்கூடிய பொதுவான விஷயங்களில் முதன்மையானது. வெள்ளைக்காரன் நம் அனைவருக்குமே பகையாளிதான். அவர்களில் சிலர் நமக்கு எதிரிகள் அல்லர் என்று உங்களில் சிலர் எண்ணுவதை நான் அறிவேன். ஆனால், காலம் பதில் சொல்லும்.

1954இல்தான் கறுப்பர்களின் வரலாற்றில் முதன்முதலாக ஒருங்கிணைந்த மாநாடு பேன்டங்கில் நடந்தது. பேன்டங் மாநாட்டில் என்ன நடந்தது என்பதை நாம் அலசி ஆராய்ந்தால், இப்போது நீங்களும் நானும் நம்முடைய சிக்கல்களுக்கான தீர்வை நோக்கிச் செல்வதற்குரிய வழிமுறைக்கான மாதிரியாக அந்நிகழ்வுகள் இருந்தததை அறிந்துகொள்ளலாம். பேன்டங் மாநாட்டில் ஆப்பிரிக்காவையும் ஆசியாவையும் சேர்ந்த கறுப்பின நாடுகள் பங்கேற்றன. அதில் சில நாடுகள் பௌத்தத்தைப் பின்பற்றுபவை; சில இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவை; சில நாடுகள் கிறிஸ்தவ மதத்தையும் வேறு சில நாடுகள் நாத்திகத்தையும் பின்பற்றுபவை. அவற்றின் மதரீதியான வேறுபாடுகளைத் தாண்டியும் அவை ஒன்றிணைந்தன. அவற்றில் சில கம்யூனிச நாடுகள்; சில சோஷியலிச நாடுகள்; சில முதலாளித்துவ நாடுகள். அந்நாடுகளின் பொருளாதார – அரசியல் ரீதியான வேறுபாடுகளைத் தாண்டியும் அவை இந்த மாநாட்டுக்காக ஒன்றிணைந்தன. அந்நாடுகள் யாவும் கருப்பு, பழுப்பு, சிகப்பு அல்லது மஞ்சள் நிறத்தவர்களைக் கொண்டவை.

வெள்ளையர்கள் ஒருவரைக் கூட உள்ளே விடக்கூடாது என்கிற விதிமுறைதான் பேன்டங் மாநாட்டில் முதன்மையாகக் கடைபிடிக்கப்பட்டது. ஒருவர் கூட உள்ளே வர முடியாது. வெள்ளை நாடுகள் அற்ற மாநாடு என்றவுடன் இங்கே மற்ற நாடுகள் ஒன்றாகக் கூட முடிந்தது. மிகச் சரியான முறையில் அனைத்தும் நடந்தன. இதை நீங்களும் நானும் மிகச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். அங்கு வந்திருந்த நாடுகளிடம் அணு ஆயுதங்கள் இல்லை; ஜெட் விமானங்கள் இல்லை; வெள்ளையர்களிடம் இருக்கும் பெரிய பெரிய ஆயுதங்கள் இல்லை. அவர்களிடம் இருந்தது எல்லாம் ஒன்றே ஒன்றுதான், அது ஒற்றுமையே!

அவர்களுக்கிடையே இருந்த மிகச் சிறிய வேறுபாடுகளைப் பெரிதுபடுத்தாமல் ஒரே ஒரு காரியத்திற்காகத் தம்மை ஒப்புக்கொடுத்தனர். கென்யாவிலிருந்து வந்த ஓர் ஆப்பிரிக்கரை வெள்ளையர்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்தனர். காங்கோவிலிருந்து வந்த ஓர் ஆப்பிரிக்கரைப் பெல்ஜியம் அடிமைப்படுத்தி வைத்திருந்தது. கினியாவிலிருந்து வந்து ஒருவரை ஃபிரான்ஸ் அடிமைப்படுத்தி வைத்திருந்தது. போலவே அங்கோலாவைப் போர்த்துகீசு அடிமைப்படுத்தி வைத்திருந்தது. இந்நாடுகளைச் சேர்ந்தவர்கள் மாநாட்டிற்கு வந்தபோது போர்த்துகீசியர்களை, பிரெஞ்சுக்காரர்களை, வெள்ளையர்களை, டச்சுக்காரர்களைக் கண்டனர். அவர்கள் அனைவருக்குமான பொதுத்தன்மை என்று ஒன்றே ஒன்று இருந்தது. அது அவர்கள் அனைவரும் ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் ஐரோப்பியர்கள்; பொன்னிறத் தலை முடியோடு நீல விழிகளோடு வெள்ளை நிறத்தோடு ஒரே மாதிரி இருந்தனர். வந்திருந்தோர் தங்கள் எதிரி யார் எனக் கண்டுகொண்டனர். கென்யாவில் உள்ள நம்மவர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் அதே நபர்தான் காங்கோவில் உள்ள நம்மவர்களையும் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறான் என உணர்ந்துகொண்டனர். காங்கோ மக்களை அடிமைப்படுத்தியவர்களே தென்னாபிரிக்காவிலும் தெற்கு ருதீஸியாவிலும் பர்மாவிலும் இந்தியாவிலும் ஆஃப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் இருக்கும் நம்மவர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றனர் என்பதையும், உலகெங்கிலும் கறுப்பினத்தவர் வாழ்வதையும் புரிந்துகொண்டனர். எங்கெல்லாம் கறுப்பின மக்கள் ஒடுக்கப்படுகிறார்களோ அல்லது சுரண்டப்படுகிறார்களோ அங்கெல்லாம் வெள்ளையர்களால்தான் இது நடக்கிறது என்பதைப் புரிந்துகொண்டனர். ஆகவே பொது எதிரி ஒருவரே என்கின்ற வகையில் அவர்கள் ஒன்றிணைந்தனர்.

இங்கு நீங்களும் நானும் டெட்ராய்ட்டில் இருந்தாலும், மிச்சிகனில் இருந்தாலும், அமெரிக்காவில் இருந்தாலும் இப்போது விழிப்புணர்வு அடைந்தவர்களாக இருக்கிறோம். நம்மைச் சுற்றி நோக்கும்போது நமக்கொரு பொது எதிரி இருப்பது புலப்படும். அந்த எதிரி ஜார்ஜியாவில் இருக்கலாம்; கலிபோர்னியாவிலோ அல்லது நியூயார்க்கிலோ இருக்கலாம். எங்கிருந்தாலும் நம் எதிரி அதே மனிதன்தான். நீல விழிகளும் பொன்னிறத் தலை முடியும் வெளுத்தத் தோலுமாக அவன் இருப்பான். அவர்கள் செய்ததையே நாம் செய்தாக வேண்டியிருக்கிறது. அவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்வதை நிறுத்தினர். அவர்களுக்குள் சிறு சச்சரவு இருந்தாலும் அவற்றைப் பெரிதுபடுத்தாமல் அதைத் தங்களுக்குள் தீர்த்துக்கொண்டு நெருங்கி ஒன்றாக வந்தனர். அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் உள்ளன என்பதைக்கூட அவர்களின் எதிரிகளால் அறிந்துகொள்ள முடியாது.

நம்முடைய வேறுபாடுகளை நாம் பொதுவெளியில் வெளிப்படுத்துவதற்குப் பதிலாக நாமெல்லாம் ஒரே குடும்பம் என்பதை நாம் உணர வேண்டும். ஒரு குடும்பத்தில் சிறு சண்டைகள் இருந்தால் அதற்காக வெளியேறிவிடக்கூடாது. அவ்வாறு செய்வது பண்பற்றது; நாகரிகமற்றது; கடுமையானது; கொடூரமானது என்றே பிறருக்குத் தோன்றும். வீட்டுக்குள் ஒரு பிரச்சினை என்றால் அதை வீட்டுக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள வேண்டும். மூடிய கதவுகளுக்குப் பின்னால் சிக்கல்களை விவாதித்து ஒரு தீர்வு காண வேண்டும். தெருவில் இறங்கிவிட்டால் அங்கு நீங்கள் காட்ட வேண்டியது நம் ஒன்றுபட்ட ஒற்றுமையான முகம் மட்டுமே. நம் சமூகத்திற்குள், நகரத்திற்குள், நாட்டிற்குள் செய்ய வேண்டியது இதுதான். வெள்ளையர்களுக்கு முன்னால் நம் வேறுபாடுகளைப் பேசுவதை நாம் தவிர்க்க வேண்டும். வெள்ளையர்களை நம்முடைய கூட்டங்களுக்கு அழைப்பதை நிறுத்திவிட்டு நாம் ஒன்றாக அமர்ந்து ஒருவருக்கொருவர் பேச வேண்டும். இதுவே நாம் செய்ய வேண்டியது.

கறுப்பினப் புரட்சிக்கும் நீக்ரோ புரட்சிக்குமான வேறுபாடுகளைப் பற்றி சில கருத்துகளை நான் இங்கு சொல்ல வேண்டியிருக்கிறது. இரண்டும் ஒன்றுதானா? அப்படி இல்லை என்றால், இரு புரட்சிகளுக்குமான வேறுபாடு என்ன? முதலில் புரட்சி என்றால் என்ன? புரட்சி என்கிற சொல்லை அதன் பொருளை உணராமல், புரட்சிகளின் வரலாற்று முக்கியத்துவத்தை உணராமல் நம்மில் சிலர் போகிறப்போக்கில் அச்சொல்லைப் பயன்படுத்துவதுண்டு. புரட்சிகளின் வரலாற்றையும் அவற்றின் இலக்கையும் புரட்சிக்கான வழிமுறைகளையும் ஆராய்ந்து பார்த்தால் ‘புரட்சி’ என்கிற சொல்லைப் பயன்படுத்துவதற்குப் பதில் வேறு சொல்லைத் தேர்ந்தெடுப்பீர்கள். உங்கள் திட்டத்தை மாற்றிக்கொள்ளக்கூடும். உங்கள் இலக்கையும் உங்கள் மனதையும் கூட மாற்றிக்கொள்வீர்கள்.

1776 அமெரிக்கப் புரட்சியை எடுத்துக்கொள்ளுங்கள். அந்தப் புரட்சி எதற்கானது? நிலத்திற்கானது. அவர்கள் ஏன் நிலத்தை விரும்பினார்கள்? சுதந்திரத்திற்காக! அது எப்படி நடத்தப்பட்டது? ரத்தம் சிந்தி நிகழ்ந்த புரட்சி, முதலில் நிலத்திற்கான போராட்டம் அது. நிலமே விடுதலைக்கு அடிப்படை. ரத்தம் சிந்தித்தான் அவர்களால் அதை அடைய முடிந்தது. பிரெஞ்சுப் புரட்சியை எடுத்துக்கொள்ளலாம். அதன் அடிப்படை என்ன? நிலம் வைத்திருந்தவர்களை எதிர்த்து நிலமற்றவர்கள் நடத்திய போராட்டம் அது. அந்தப் புரட்சி எதற்கானது? அதுவும் நிலத்திற்கானது! எப்படி அவர்கள் அதை அடைந்தார்கள்? ரத்தம் சிந்தித்தான் அடைய முடிந்தது. அன்பை இழந்துவிடவில்லை; எவ்வித சமரசமும் இல்லை; பேச்சுவார்த்தையும் இல்லை. நான் உங்களுக்குச் சொல்கிறேன். புரட்சி என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியவில்லை. அது என்னவென்று தெரியவரும்போது நீங்கள் சரியான பாதையில் வருவீர்கள். இப்போதிருக்கும் வழிமுறையைப் பின்பற்ற மாட்டீர்கள்.

ருஷ்யப் புரட்சி எதனை அடிப்படையாகக் கொண்டது? அதுவும் நிலம்தான். நிலச்சுவான்தார்களை எதிர்த்து நிலமற்றவர்கள் அப்புரட்சியை நடத்தினர். அதை எவ்வாறு வழிநடத்தினர்? மீண்டும் ரத்தம் சிந்தித்தான். ஆனால், நீங்களோ ரத்தம் சிந்த அச்சப்படுகிறீர்கள். ஆம், நான் சொல்கிறேன். நீங்கள் ரத்தம் சிந்தப் பயப்படுகிறீர்கள்.

வெள்ளையர்கள் உங்களைக் கொரியாவுக்கு அனுப்பிய உடன் நீங்கள் ரத்தம் சிந்துகிறீர்கள். ஜெர்மனிக்கு அனுப்பினால் அங்கும் ரத்தம் சிந்துகிறீர்கள். ஜப்பானிற்கு அனுப்பினாலும் ரத்தம் சிந்துகிறீர்கள். வெள்ளையர்களுக்காக நீங்கள் ரத்தம் சிந்துகிறீர்கள். ஆனால், உங்களுடைய சொந்த தேவாலயங்களின் மீது குண்டு வீசியபோதும், உங்களுடைய சொந்தக் கறுப்பினச் சிறுமிகள் கொலையுண்டபோதும் நீங்கள் ரத்தம் சிந்தத் தயாராக இல்லை. வெள்ளையர்கள் ரத்தம் சிந்தச் சொன்னால் நீங்கள் உடனே தயாராகிறீர்கள். வெள்ளையன் உங்களைக் கடிக்கச் சொன்னால் கடிக்கிறீர்கள்; குரைக்கச் சொன்னால் குரைக்கிறீர்கள். நம்மைப் பற்றி இவ்வாறு நானே சொல்வதற்கு எனக்குப் பிடிக்கவில்லைதான் ஆனால் என்ன செய்வது? இதுதான் உண்மை. மிஸிசிப்பியிலும் அலபாமாவிலும் உங்களுடைய தேவாலயங்கள் குண்டு வீசி தகர்க்கப்படும்போதும் உங்களுடைய சின்னஞ்சிறு சிறுமிகள் கொலையுண்டபோதும் எவ்வாறு நீங்கள் அகிம்சையைக் கைக்கொண்டிருக்க முடியும்? அதே நேரத்தில் ஹிட்லருடனோ, தோஜோவுடனோ அல்லது யாரென்றே தெரியாத ஒருவருடனோ நீங்கள் வன்முறையில் இறங்கத் தயாராக இருக்கிறீர்கள்.

அமெரிக்காவில் வன்முறை தவறு என்றால், உலகெங்கிலும் நடக்கும் வன்முறைகளும் தவறுதான். கறுப்பினப் பெண்களையும், கறுப்பினக் குழந்தைகளையும், கறுப்பின ஆண்களையும் காப்பதற்காக இங்கே அமெரிக்காவில் வன்முறையில் நாம் இறங்குவது தவறு என்றால், தன்னைக் காத்துக்கொள்ள போர் என்கிற பெயரில் அமெரிக்கா நம்மை வன்முறையில் ஈடுபடச் செய்வதற்காக உலகெங்கும் அனுப்புவதும் தவறுதான். தன்னைப் பாதுகாப்பதற்காக நமக்கு வன்முறையைக் கற்றுத் தந்து பயிற்றுவிக்கும் உரிமை அமெரிக்காவுக்கு உண்டு என்றால், அது நமக்கும் பொருந்தும். இந்த நாட்டில் உங்களையும் என்னையும் நம் கறுப்பின மக்களையும் பாதுகாப்பதற்காக வன்முறையைப் பிரயோகிப்பதும் நமது உரிமைதான்.

சீனப் புரட்சியும் நிலம் வேண்டியே நடந்தது. அங்கிள் டாம்களோடு5 சேர்த்து பிரிட்டிஷாரையும் சீனர்கள் தூக்கி எறிந்தனர். ஆம். அவர்களால் அதைச் செய்ய முடிந்தது. அப்புரட்சி ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்கிறது. சிறையில் இருந்தபோது ஒரு கட்டுரையை வாசித்தேன். நான் சிறையில் இருந்தேன் என்று சொல்வதைக் கேட்டு அதிர்ச்சியடைய வேண்டாம். நீங்கள் அனைவரும் கூட இன்னமும் சிறையில்தான் இருக்கிறீர்கள். அமெரிக்காவில் இருப்பதே சிறையில் இருப்பதுதான். நான் சிறையில் இருந்தபோது லைஃப் இதழில் ஒரு கட்டுரையை வாசித்தேன். ஒன்பது வயது சிறுமியின் தந்தை எழ முடியாத நிலையில் கிடக்கிறார். அச்சிறுமி துப்பாக்கியால் அவரைச் சுடுகிறார். ஏனென்றால், வெள்ளையர்களின் அங்கீகாரத்தையும் அவர்களிடத்தில் நற்பெயரையும் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அங்கிள் டாம்களில் ஒருவர் அந்தத் தந்தை. அங்கு புரட்சிக்குப் பின் இவரைப் போன்ற அங்கிள் டாம்கள் அனைவரையும் வெளியேற்றினார்கள் சீனர்கள். அடுத்த பத்தாண்டுகளில் சீனாவில் அங்கிள் டாம்களே கிடையாது. இன்றைக்கு உலகத்திலேயே சீனாதான் வெள்ளையர்களுக்குக் கடுமையாகவும் கடினமாகவும் முகங்காட்டும் ஒரே நாடு. வெள்ளையர்கள் பார்த்து அச்சப்படும் நாடாக சீனா இருக்கிறது. ஏனெனில், அங்கு தற்போது அங்கிள் டாம்களே கிடையாது.

நம்முடைய அனைத்து ஆராய்ச்சிகளிலும் மிகச் சிறந்தது எது என்பதை வரலாறு நமக்குச் சொல்லும். உங்களுக்கு எப்போதெல்லாம் பிரச்சினைகள் தோன்றுகின்றனவோ அப்போதெல்லாம் இதேபோன்ற பிரச்சினைகளுக்கு வரலாற்றில் என்னென்ன வழிமுறைகளைக் கையாண்டிருக்கிறார்கள் என்பதைக் கவனமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் எவ்வாறு காணப்பட்டன என்பதை உற்று நோக்கி அறிந்துகொண்டால் உங்கள் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். ஆப்பிரிக்காவில் ஒரு கறுப்பினப் புரட்சி நடந்துகொண்டிருக்கிறது. கென்யாவில் மௌ மௌ இயக்கத்தினர் புரட்சியாளர்களாக உள்ளனர். அவர்களே ‘உகுரு’ என்ற சொல்லை முன்களத்திற்குக் கொண்டுவந்தனர். மௌ மௌ இயக்கம் scorched earth எனப்படும் எரிந்த பூமி கொள்கையைக்6 கடைபிடிக்கும் இயக்கம் தங்கள் பாதையில் குறுக்கிட்ட அனைத்தையும் அவர்கள் தகர்த்தெறிந்தனர். அவர்களுடைய இலக்கும் நிலத்தை அடைவதாகவே இருந்தது. ஆப்பிரிக்காவின் வடக்குப் பகுதியில் உள்ள அல்ஜீரியாவில் ஒரு புரட்சி நடந்தது.

அல்ஜீரிய மக்கள் புரட்சியாளர்கள். அவர்கள் நிலம் வேண்டும் என்று விரும்பினார்கள். அல்ஜீரியா விரும்பினால் பிரான்ஸ் நாட்டோடு இணைந்துகொள்ளலாம் என பிரான்ஸ் தெரிவித்தது. ஆனால், அதை நிராகரித்த அல்ஜீரியா தங்களுக்குத் தேவை நிலமே; பிரான்ஸ் அல்ல என்று கூறி போரில் ஈடுபட்டது.

ஆகவே, சகோதர சகோதரிகளே! அமைதி வழியில் புரட்சியை உருவாக்க முடியாது என உங்களுக்குக் காட்டுவதற்காகவே பல்வேறு புரட்சிகளைப் பற்றி உங்களுக்கு எடுத்துக் கூறினேன். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டுவது புரட்சியில் கிடையாது. வன்முறையற்றப் புரட்சி என்கிற ஒன்று கிடையாது. வன்முறையற்ற ஒரே புரட்சி நீக்ரோ புரட்சிதான். தங்கள் எதிரியை நேசிப்பதையே இலக்காகக் கொண்ட ஒரே புரட்சி நீக்ரோ புரட்சியே. இந்தப் புரட்சியில் மட்டும்தான் தனியே ஒதுக்கப்பட்ட மதிய உணவு வழங்குமிடம், திரையரங்கம், பூங்கா போன்றவற்றைப் பெறுவதே இலக்காக உள்ளது. பொதுக் கழிப்பறையில் மட்டும்தான் வெள்ளையர்களுக்கு அடுத்தபடியாக நீங்கள் அமரலாம். இது புரட்சியல்ல. புரட்சி என்பது மண்ணை அடிப்படையாகக் கொண்டது. விடுதலைக்கு அடிநாதமாக இருப்பது நிலமே. விடுதலை, நீதி, சமத்துவம் அனைத்திற்கும் நிலமே அடிப்படை.

வெள்ளைக்காரனுக்குப் புரட்சி என்றால் என்னவென்று தெரியும். கறுப்பினப் புரட்சி என்றால் அது உலகம் தழுவியது என்றும் அது இயற்கையானது என்றும் அவனுக்குத் தெரியும். ஆசியா முழுவதும், ஆப்பிரிக்கா முழுவதும் கறுப்பினப் புரட்சி நடக்கிறது. இலத்தீன் அமெரிக்காவில் இப்போது தொடங்கியுள்ளது. கியூபப் புரட்சி தன்னளவில் மிகச் சிறப்பானது. ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் புரட்டிப் போட்டது.

ஆசியாவில் புரட்சி இருக்கிறது, ஆப்பிரிக்காவிலும் இருக்கிறது. ஆனால், இலத்தீன் அமெரிக்காவில் புரட்சியைக் கண்டவுடன் வெள்ளைக்காரன் அலறுகிறான். உண்மையான புரட்சி எது என்று நீங்கள் அறிந்துகொண்டீர்கள் என்றால் அவன் எதிர்வினை எப்படி இருக்குமென நினைக்கிறீர்கள்? உங்களுக்குப் புரட்சி என்றால் என்னவெனத் தெரியாது. தெரிந்திருந்தால் அச்சொல்லைப் பயன்படுத்த மாட்டீர்கள்.

புரட்சி ரத்தம் தோய்ந்தது; புரட்சி பகைகொண்டது; எவ்விதமான சமரசத்தையும் ஏற்காது; புரட்சி எல்லாவற்றையும் புரட்டிப் போட்டு எதிர்படும் எதையும் அழித்து தன் வழியில் முன்னேறும். அதன் வழியில் தடைக்கல்லாக இங்கே அமர்ந்துகொண்டு நீங்கள் “அவர்கள் என்னை எவ்வளவு வெறுத்தாலும் நான் அவர்களிடத்தில் அன்பு செலுத்துவேன்” எனச் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். இல்லை! உங்களுக்கு ஒரு புரட்சி தேவை. புரட்சி பற்றிக் கேள்விப்பட்ட யாரும் கைகோத்துக்கொண்டு “நாம் வெல்வோம்” என்றா பாடிக்கொண்டிருப்பார்கள்? நீங்கள் பாட வேண்டியதில்லை. நீங்கள் எப்போதும் ஊசலாட்டத்தில் இருக்கிறீர்கள். ஒரு புரட்சியாளனுக்குத் தன் தேசத்தை, விடுதலை பெற்ற சுதந்திர தேசத்தைக் கட்டமைக்கத் தேவையான நிலம் வேண்டும். இந்த நீக்ரோக்கள் எந்தத் தேசத்தையும் கோரவில்லை. உங்கள் பழைய தோட்டங்களுக்குத் திரும்பிச் சென்று அங்கு ஊர்ந்துகிடப்பதையே விரும்புகிறீர்கள்.

உங்களுக்கென்று ஒரு நாடு வேண்டுமென விரும்பினால், அதுவே தேசியம். இந்நாட்டில் இங்கிலாந்திற்கெதிரான புரட்சியில் வெள்ளையர்கள் ஈடுபட்டது எதற்காக? இன்னொரு வெள்ளைக்கார தேசத்தை உருவாக்கிக்கொள்ள இந்த நிலம் வேண்டுமென விரும்பினர். அது வெள்ளை தேசியம். அமெரிக்கப் புரட்சி என்பது வெள்ளை தேசியம். பிரெஞ்சுப் புரட்சியும் வெள்ளை தேசியம்தான். அது போலவே ருஷ்யப் புரட்சியும். ஆம்! அதுவும் வெள்ளை தேசியம்தான். நீங்கள் அவ்வாறு எண்ணவில்லையா? குருசேவும் மாவோவும் ஏன் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு ஒன்றாகச் செயல்பட முடியவில்லை? வெள்ளை தேசியம்தான் காரணம் (ஆசிரியர் குறிப்பு – 1960களில் குருசேவ்தான் சோவியத் யூனியனின் தலைவர். மா சே துங்தான் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும், மக்கள் சீனத்தின் முதல் தலைவரும் ஆவார்).

ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் இன்றைக்கு நடந்துகொண்டிருக்கும் புரட்சிகள் யாவும் எதை அடிப்படையாகக் கொண்டவை? கருப்பு தேசியத்தை அடிப்படையாகக் கொண்டவை. கருப்பு தேசியவாதி ஒருவனே இன்றைக்குப் புரட்சியாளன். அவனுக்கு ஒரு தேசம் வேண்டும். கருப்பு தேசம் குறித்த அச்சம் உங்களுக்கு இருக்குமானால் நீங்கள் புரட்சிக்கும் அச்சப்படுகிறீர்கள் என்று பொருள். நீங்கள் புரட்சியை நேசிப்பவர் என்றால் கருப்பு தேசத்தையும் நேசிப்பீர்கள்.

இதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் இங்கு ஓர் இளைய சகோதரர் கூறியது போல அடிமை காலத்தில் இருந்த House Negroக்களையும் Field Negroக்களையும் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டும். அடிமைகளில் இரு வகைகள் உண்டு. House Negro மற்றும் Field Negro.7

இந்த இரு அடிமைகளில் வீட்டுப் பணியில் இருப்போருக்கு ஒப்பீட்டளவில் ஓரளவிற்கு நல்ல உடைகள், உணவு, இருப்பிடம் போன்றவை கிடைக்கும். ஹவுஸ் நீக்ரோக்கள் தன் எஜமானருடன் அவரது வீட்டில் வாழ்ந்தார்கள். நல்ல உடைகளோடு காணப்பட்டனர். எஜமானரோடு வாழ்ந்ததால் அவர் உண்டது போக மீதமிருந்த உணவையே இவர்களும் உண்டார்கள். ஆகவே அவர்களுக்கு நல்ல உணவு கிடைத்தது. வீட்டின் மேல்மாடியின் கூரையின் கீழுள்ள அறையிலோ அல்லது அடித்தளத்திலோ வாழ்ந்தார்கள். ஆனால், எஜமானருக்கு அருகிலேயே இருந்தார்கள். எஜமானர் தன்னைத் தானே நேசிப்பதை விட நீக்ரோக்கள் அவரை நேசித்தனர். எஜமானர் தன் வீட்டைக் காக்கத் தயாராக இருக்கிறாரோ இல்லையோ இவர்கள் அவருடைய வீட்டைக் காப்பதற்காகத் தங்கள் உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்தனர். “நமக்கென்று ஒரு நல்ல வீடு உள்ளது” என எஜமானர் சொன்னால் நீக்ரோவும் “ஆம், நமக்கென்று ஒரு நல்ல வீடு உள்ளது” என்பார். எஜமானர் “நாம்” என்றால் அவரும் “நாம்” என்பார். இதுவே ஒரு ஹவுஸ் நீக்ரோவின் தன்மை.

எஜமானரின் வீடு தீப்பிடித்துக்கொண்டால் எஜமானரை விட சிரமப்பட்டு அத்தீயை அணைக்க முயல்வார் ஹவுஸ் நீக்ரோ. எஜமான் “எனக்கு உடல்நிலை சரியில்லை” என்று சொன்னால் ஹவுஸ் நீக்ரோ “எஜமான்! நமக்கு உடம்பு சரியில்லையா? நமக்கு உடம்பு சரியில்லையா?” என்பார். ‘நமக்கு’! எஜமானர் தன்னோடு தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதற்கும் மேல் ஒருபடி அதிகமாக நீக்ரோ அவரோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வார். “இங்கிருந்து ஓடிவிடலாம். இங்கிருந்து தப்பித்துவிடலாம். இங்கிருந்து புறப்படலாம்” என்று ஒரு ஹவுஸ் நீக்ரோவிடம் போய்ச் சொன்னால் அவர் உங்களைப் பார்த்து “உங்களுக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா? என்ன சொல்லவருகிறீர்கள்? பிரிந்து சென்றுவிட்டால் இதைவிட நல்ல வீடு எங்கிருக்கிறது? இவற்றைவிட நல்ல உடைகளை எங்கே காண்பது? இதைவிட நல்ல உணவை எங்கே தேடுவது?” என்பார். இதுவே ஹவுஸ் நீக்ரோவின் குணம்.

அந்தக் காலத்தில் அவருடைய பெயர் ஹவுஸ் Nigger8 என்றிருந்தது. இப்போதும் அவர்களை அப்படித்தான் அழைக்க வேண்டியுள்ளது. ஏனெனில் நமக்கிடையே சில ஹவுஸ் Niggerகள் இன்னமும் இருக்கிறார்கள்.

நன்றி: csun.edu

மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள்

  1. கிறிஸ்தவத்தை ஒருவர் மனப்பூர்வமாகக் கோரும்வரை அவருக்கு ஞானஸ்நானம் செய்யக் கூடாது எனும் கொள்கையுள்ள பிரிவினர்.
  2. பதினெட்டாம் நூற்றாண்டில் ஜான் வெஸ்லியால் தோற்றுவிக்கப்பட்ட சீர்திருத்தத் திருச்சபையின் உறுப்பினர்.
  3. சகோதரத்துவத்தை முன்னிறுத்தி செயல்படும் ஒரு ரகசியக் கூட்டமைப்பு. 18ஆம் நூற்றாண்டையொட்டி இங்கிலாந்தில் முறைபடுத்தப்பட்ட இயக்கம்.
  4. 1868இல் நிறுவப்பட்ட அமெரிக்க சகோதரத்துவ அமைப்பு.
  5. வெள்ளையர்களின் அங்கீகாரத்திற்கு ஏங்கி அவர்களிடம் நற்பெயர் பெற விரும்புவோர் அங்கிள் டாம் என்று அழைக்கப்படுவர்.
  6. போரில் எதிரியின் இருப்பை நிர்ணயிக்கும் நீர், உணவு, இருப்பிடம், ஆயுதங்கள் என அனைத்தையும் அழிப்பதே எரிந்த பூமி கொள்கை.
  7. House Negro – அடிமைகளிலேயே சற்றே மாநிறம் கொண்டவர்கள் என்பதால் வீட்டுப் பணியில் அமர்த்தப்படுவோர்; கூடுதலாகக் கருப்பு நிறத் தோல் கொண்டோர் வீட்டுக்கு வெளியே செய்யக் கூடிய பணிகளில் அமர்த்தப்படுவோர். இவர்கள் Field Negro என்றழைக்கப்படுவர்.
  8. நீக்ரோக்களைக் குறிக்கும் இழிசொல்.

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!