திருவள்ளுவருடைய குறள் ஏடாக இருந்து பிரிட்டிஷ் காலத்தில் பதிப்பிக்கப்பட்ட போது அதனை எழுதிய வள்ளுவர் வரலாறும் எழுதப்பட வேண்டியிருந்தது. அப்போது அந்நூலை எழுதியவர் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதாகவே தகவல் கிடைத்தது. அதனையே தொடக்க கால பதிப்பாசிரியர்களும் மொழிபெயர்ப்பாளர்களும் எழுதினர். ஆனால் அதற்குப் பிறகு உள்ளூர்ப் புலவர்கள் குறளைப் பதிப்பிக்கவும் உரை எழுதவும் உள்ளே நுழைந்த போது வள்ளுவர் வரலாற்றில் சிறிது சிறிதாக மாற்றம் செய்யத் தொடங்கினர். கால ஓட்டத்தில் அதனை இன்னொன்றாக மாற்றினர். பின்னர் மாற்றிய புதிய வரலாற்றையே நிலைக்க வைத்தனர். வள்ளுவர் பிராமணத் தந்தைக்கும் பறையர் வகுப்பைச் சேர்ந்த பெண்ணுக்கும் பிறந்தவர் என்ற புதிய கதையை அவர்கள் உருவாக்கினர். அதாவது வள்ளுவர் பறையர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று கிடைத்திருந்த வரலாற்றில் மெல்ல மெல்ல பிராமணர் ஒருவர் நுழைக்கப்பட்டார். அதிலும் பிராமணரே வள்ளுவரின் தந்தையென்று எழுதிச் சேர்த்தார்கள். இந்தியச் சமூகத்தில் தலித்துகளின் அறிவடையாளம் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது என்பதற்கு இந்தக் கதை ஓர் உதாரணம்.
அறிவு எந்தச் சாதிக்கும் சொந்தமானதல்ல. பலரும் அறிவு சார்ந்து பங்களித்துள்ளனர். ஆனால் அறிவைக் குறிப்பிட்ட சாதியினருக்குச் சொந்தமானதாக ஆக்கிக் காட்டியது மூலம் சாதி சார்ந்த அதிகாரம் இங்கு தக்க வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் ஒடுக்கப்பட்ட வகுப்பினர் அறிவாளிகளாக இருந்தனர் என்று கிடைக்கும் தகவல்கள் இங்கு எப்போதுமே பதற்றத்துடனேயே எதிர்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவில் தலித்துகளின் அறிவுப் பங்களிப்பு இம்மூன்று வழிகளில் ஏதாவதொன்றைச் சந்தித்திருக்கிறது. மற்றபடி இதுவரை வெளிப்பட்டிருப்பவை எல்லாம் இத்தடைகளைத் தாண்டி நடந்தவைதாம். தலித் தரப்பின் அறிவைக் கண்டு இவ்வளவு பதற்றம் ஏற்படுவது ஏன்?
ஏனெனில் அவை ஏற்கெனவே இங்கு சாதிரீதியாகக் கட்டப்பட்டிருக்கும் பல்வேறு புனைவுகளை உடைக்கின்றன. அறிவு என்பது இங்கோர் அதிகாரம். அதனை தக்கவைப்பதில் அதிகாரம் இருக்கிறது என்று கருதப்படுகிறது. இவ்வாறு ஆதிக்கத்தைத் தக்கவைக்க உதவுகிறது என்பதால்தான் அவை எதிர்க்கவும்படுகிறது. எதைக்கொண்டு ஒடுக்குமுறையை நிறுவினார்களோ அதைக்கொண்டே எதிர்க்கவும் முற்படுவதுதான் நவீன அரசியல். ஒடுக்கப்பட்டவனின் அறிவுரீதியான பங்களிப்பு எத்தகையதாக இருக்கிறது என்பதை விட அவன் அறிவோடு இருக்கிறான் என்பதே இங்கு பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் இழிவானவர்கள், பண்பாடு இழந்தவர்கள், சிந்திக்க முடியாதவர்கள் என்று கதைகள் கட்டி பரப்பியிருப்பதோடு அதனாலேயே அவர்கள் தாழ்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்றும் சொல்லி வைத்திருக்கிறார்கள். இதனால் தலித்துகள் அறிவாளிகளாக இருந்தார்கள் என்பதைப் பொது உளவியலில் நம்ப முடியாததாக ஆக்கி வைத்திருக்கிறார்கள்.
இந்நிலையில்தான் அவர்களின் அறிவுரீதியான பங்களிப்புகளை அப்படியே சொன்னால் அவர்கள் பற்றிப் புனைந்து ஏற்க வைக்கப்பட்டிருக்கும் பொய்கள் கேள்விக்- குள்ளாகிவிடும் என்று அச்சப்படுகிறார்கள். எனவே அவர்களின் அறிவுப் பங்களிப்பை மறைக்க முயலுகிறார்கள். அது இயலாதபோது அவற்றில் தங்களை இணைத்து அவர்களின் அறிவிற்குக் காரணம் தாங்களே என்று எண்ணும்படியான நிலையை உருவாக்குகிறார்கள்.
உண்மையில் தலித்துகளுக்கும் அறிவுரீதியான பங்களிப்பிற்கும் இடையே தொடர்பே இல்லையா? இது பொய் என்பது மட்டுமல்ல உண்மையின் தலைகீழாக்கப்பட்ட நிலையும் கூட. இந்திய வரலாற்றில் கலை இலக்கியப் படைப்புகள் பலவும் ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் பங்களிப்பினால் உருவாகியுள்ளன. அப்பங்களிப்புகளை ஒடுக்கப்பட்ட வகுப்பினருடையதாகச் சொல்ல மனமில்லாமல் வள்ளுவர் பிறப்பு வரலாற்றைப் போல திரித்திருக்கின்றனர் என்றாலும் ஓடுக்கப்பட்டோர் தொடர்பை முழுமையாக மறைக்க முடியவில்லை. இந்த அளவிலான கலை இலக்கியப் படைப்புகளின் உடனான ஒடுக்கப்பட்டோர் தொடர்பு எவற்றைக் காட்டுகிறது? அவர்கள் அறிவுரீதியான பங்களிப்போடு ஏதோவொரு வகையில் தொடர்புற்று இருந்தார்கள் என்பதையே காட்டுகிறது. அவற்றைத் தலைகீழாக்கித் தங்களுடையதாக மாற்றிக் காட்டும் முயற்சிகளாகவே புராணம் மற்றும் வழக்காற்றுக் கதைகள் இருக்கின்றன. வரலாறு நெடுக அறிவுப் பறிப்புக்கும் மீட்புக்கும் இடையே நடந்த போராட்டங்கள் இருக்கின்றன. ஒடுக்கப்பட்டோர் மீது அறிவுசார்ந்த பொறாமை எப்போதும் இருந்து வந்திருக்கிறது.
இந்திய வானியல் இயற்பியலாளரான மேக்நாத்சாகாவின் இடம் அறிவியல் உலகில் அங்கீகரிக்கப்படாமல் போனதையே பார்க்கிறோம். அதேவேளையில் பல தடைகளையும் மீறி கற்ற பாபாசாகேப் அம்பேத்கரின் அறிவை வேறு வழியே இல்லாமல் அங்கீகரிக்க வேண்டியிருந்தது. அதாவது அவருடைய அறிவுசார்ந்த பங்களிப்பே இந்திய அரசியல் சட்டம். சமத்துவத்தைக் கோரும் நவீனப் பிரதி அது. அதனால்தான் ஒடுக்கப்பட்டோரின் அறிவு அங்கீகரிக்கப்- படுவது சாதியச் சமூகத்தில் பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது.
அண்மையில் கூட இத்தகைய சம்பவங்கள் நடந்திருக்கின்றன. சர்வதேச இதழொன்றின் அட்டையில் பாடகர் அறிவின் பெயர் விடுபட்டிருந்தது. பல்வேறு நெருக்கடிகளுக்குப் பிறகே அட்டைப்படத்தில் பெயருடன் நிழற்படமும் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ் எழுத்தாளர்களான பாமா, சுகிர்தராணி எழுத்துகள் டெல்லி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன. அரசியல் உலகத்திலும் ஒடுக்கப்பட்டோரால் உருவாக்கி முன்னுக்குக் கொணரப்படும் விஷயங்கள் பலவும் அவர்களின் பெயர் குறிப்பிடாமலேயே போய்விடுகின்றன. இந்த அறிவு மறுப்பு தொடரலாம் என்பது எந்த அளவிற்கு உண்மையோ அந்த அளவிற்கு அவர்கள் போராடி வெல்வார்கள் என்பதும் உண்மை.