அம்பேத்கரின் பேச்சும் எழுத்தும் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக அரசியல் போராட்டத்தின் வலிமையான கருவிகளாக எப்போதும் விளங்குகின்றன. சமூகம், அரசியல், பொருளாதாரம், சட்டம் என எந்தக் களமானாலும் அம்பேத்கரின் ஆராய்ச்சி உலைக்களத்தில் வடித்தெடுக்கப்பட்டுப் பட்டை தீட்டிக் கூர்முனையோடு அறிவுக் கிடங்கில் தயாராய் இருக்கும் கருவிகளிலிருந்து ஒரு கருவியை உருவிச் சுழற்றி யுத்தம் செய்து வெற்றி பெற்றுவிட முடியும். நிராயுதபாணிகளான தலித்துகளுக்குத் தன்னையே ஆயுதமாக்கித் தந்தவர் அம்பேத்கர். அவர் கையளித்து விட்டுச்சென்ற ஆயுதங்களில் வலிமையான தத்துவப் பேராயுதம்தான் பௌத்தம். அம்பேத்கரைத் தவிர வேறு யாராலும் களத்திலேந்திச் சுழற்றப்படாத இந்த ஆயுதத்தின் வலிமையைக் களமாடும் பலரும் உணர்வதில்லை. களமாட வேண்டிய செயல்வீரர்கள் எதிரியின் ஆயுதம் கூர்மையானது என்று எண்ணித் தயங்குகின்றனர். அது அவ்வளவு கூர்மையானது இல்லையென்றாலும் அவர்களின் போர்த்தந்திரங்கள் அவர்களுக்கு வெற்றியை ஈட்டித் தந்துவிடுவதை ஆயுதத்தின் வலிமை என்று மயங்கித் தம் கைகளில் இருக்கும் ஆயுதத்தை ஏந்துவதற்குக் காட்டும் தயக்கம் இது. இந்த ஆயுதத்தை எவ்வாறு கையாளுவது என்பதைப் பலரும் அறிவதில்லை. அறியாமை என்னும் கொடிய நோய் எந்த உயிரையும் எளிதில் சாகடித்துவிடும். அறியாமையிலிருந்து நகர்ந்து அறிதலை நோக்கி வருவதற்கு மனத்துணிவு வேண்டும். பௌத்தம் என்னும் தத்துவப் பேராயுதம் இயல்பிலேயே அந்த மனத்துணிவைத் தரும் ஆற்றல்கொண்டது. பௌத்தம் என்னும் பேராயுதத்தை ஏந்திக் களத்தில் நிற்பதற்கே பெரும் மனவலிமை வேண்டும். ஆயுதங்களின் வலிமை எப்போதும் அதை ஏந்தி நிற்பவர்களின் மனவலிமையையும் பொறுத்துத்தான். அம்பேத்கருக்கு அந்த மனவலிமை எப்போதும் உண்டு. அம்பேத்கருடைய மனவலிமையின் உச்சத்தை 1956-ஆம் ஆண்டு அக்டோபர் 14-ஆம் நாள் உலகமே பார்த்தது.
2021-ஆம் ஆண்டோடு அம்பேத்கர் ஐந்து லட்சம் மக்களுடன் சேர்ந்து பௌத்தம் தழுவி அறுபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இது குறித்து ஆதரித்தும் எதிர்த்தும் பல ஆய்வுகளும் ஆய்வுகள் என்ற பெயரில் அவதூறுகளும் வெளிவந்துகொண்டேயிருக்கின்றன. மாறுபட்ட இந்தக் கருத்துகள் தலித் சமூகத்திற்கு வெளியிலிருந்தும் உள்ளிருந்தும் வருகின்றன. இவை எல்லாம் சேர்ந்து அம்பேத்கரை வாசிக்கத் துவங்குகிற இளந்தலைமுறையினரைக் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன. தற்போதைய ‘தகவல்களின் காலத்தில்’ சமூக ஊடகம் வாசிப்பதற்கான பல வாய்ப்புகளை உருவாக்கியிருக்கின்றன. ஆனால், கணக்கிலடங்காதபடிச் செய்திகள் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன. எதைக் கொள்ளுவது, எதைத் தள்ளுவது என்று புரியாமல் தத்தளிக்கிற நிலைமைதான் எங்கும். இந்தச் சூழலில், அம்பேத்கரின் பௌத்தம் குறித்த சரியான புரிதலை வழங்கிட முயற்சிப்பதுதான் இக்கட்டுரையின் நோக்கம். அப்புரிதலை அடைவதன் முதல்படியாக அம்பேத்கர் மதம் மாறும் முடிவை எடுத்ததற்கான வரலாற்றுப் பின்புலத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
அம்பேத்கர் ‘நான் இந்துவாகச் சாக மாட்டேன்’ என்று ஏன் அறிவித்தார்?
1935 அக்டோபர் 13-ஆம் நாள் நாசிக்கின் இயோலோவில் நடைபெற்ற மாநாட்டில்தான் அம்பேத்கர் ‘நான் இந்துவாகச் சாக மாட்டேன்’ என்று பொதுவெளியில் முதல்முறையாக அறிவித்தார். இது தலித் சமூக வரலாற்றில் அறிமுகம் உள்ள எல்லோரும் பரவலாக அறிந்த வரலாற்றுப் பிரகடனம். இந்தப் பிரகடனம், வரலாறு என்னும் கட்டற்றுக் கரைபுரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளத்தின் திசைப் போக்கைத் திருப்பும் ஆற்றல்கொண்டதாய் இருந்தது. அம்பேத்கரின் அரசியல் வாழ்வில் மட்டுமல்ல; தலித்துகளின் நீண்ட நெடியச் சமூக வரலாற்றிலும் இதுவொரு திருப்புமுனை. ஆனால், மதம் மாறும் முடிவை அதற்கும் வெகுகாலத்துக்கும் முன்பே (1924) அம்பேத்கர் எடுத்துவிட்டார் என்பது பலரும் அறியாத உண்மை. பல ஆண்டுகளாக மதம் மாறுவது குறித்துத் தொடர்ந்து சிந்தித்து வந்துள்ளார். 1928 இலிருந்து அவரே ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்திய ‘பகிஷ்கரித் பாரத்’ இதழ்களில் தொடர்ச்சியாக மதமாற்றம் குறித்து வெளிப்படையாக எழுதி வந்தார். அம்பேத்கர் மதம் மாறும் முடிவுக்கு வர முக்கியமான காரணம் ஒன்றுதான். அந்த ஒற்றைக்காரணம், இந்து மதம்.
இந்துமதத்தின் அடிக்கட்டுமானமாக உள்ள சதுர்வர்ணமும் அதனடிப்படையில் கடைபிடிக்கப்படுகிற சாதியும் தீண்டாமையும்தான் அவரை இந்து மதத்தைவிட்டு நிரந்தரமாக வெளியேறும் உறுதியான முடிவை எடுக்கச் செய்தது. இந்து மதத்தைச் சீர்திருத்த பலர் முயன்றனர் என்பதை வரலாறு நெடுகிலும் காணலாம். இந்து மதம் எத்தகையச் சீர்திருத்தத்தை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருந்தாலும் அதன் அடிக்கட்டுமானமாக இருக்கிற சதுர்வர்ண அமைப்பை மட்டும் சீர்திருத்தும் பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதியாகத் தெரிவித்துவிட்டது. நவீன காலத்தில் இந்து மதத்தில் முன்னெடுக்கப்பட்டச் சீர்திருத்தங்கள் எதுவும் இந்து மதத்தின் பிரிக்கவியலாத பண்புகளாக உள்ள சாதி முறையையும் தீண்டாமையையும் பெண்ணடிமையையும் சிறிதும் மாற்றவில்லை என்பதை அவரே நேரில் கண்டார்.
‘மகாத்மாக்கள் வந்தார்கள். மகாத்மாக்கள் போனார்கள். ஆனால், தீண்டத்தகாதார் தீண்டத்தகாதாராகவே இருக்கின்றனனர்.’
என்னும் ஒரு வாக்கியத்தில் அவர்களின் சீர்திருத்தங்களின் தாக்கத்தைச் சித்திரித்துக் காட்டிவிட்டார்.
அந்தக் காலகட்டத்தில் நடந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்புகள் அனைத்து சாதிகளின் கவனத்தையும் ஈர்த்தன. மக்கள்தொகையின் அடிப்படையில் சட்டமியற்றும் அவைகளில் பிரதிநிதித்துவம் என்பதன் மூலமாக ஆட்சி அதிகாரத்தில் கிடைக்கும் பங்கு ஒவ்வொரு சமூகத்தையும் தன்னைப் பெரும்பான்மையினராகக் காட்டிக்கொள்ள முனைந்தது. ஒடுக்கப்பட்டச் சமூகம் தம்மைச் சாதியால் புறந்தள்ளப்பட்டவர்கள் என்று அடையாளப்படுத்திக்கொண்டு வந்த காலகட்டம் அது. அப்போது இந்து மதம் தன் எண்ணிக்கைப் பெரும்பான்மையை நிறுவுவதற்காக ஒடுக்கப்பட்ட மக்களை இந்து மதத்தின் பிரிக்கவியலாத அங்கத்தினர் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக்கொண்டிருந்தது. இந்து மதத்தின் அங்கமாகத் தம்மைப் பதிவு செய்துகொள்ளுதல் என்பது இந்து மதத்தையும் சாதியமைப்பையும் அதனால் சந்திக்க வேண்டிய தீண்டாமை வன்கொடுமைகளையும் தாமாக முன்வந்து ஏற்றுக்கொள்ளுதல் போலாகிவிடும் என்று அவர்கள் கருதினாலும் தீண்டத்தகாத சாதியினர் மீது இந்துப் பேரடையாளம் திணிக்கப்பட்டது. இதனூடாகத்தான் அம்பேத்கரின் அரசியல் பிரவேசம் நிகழ்ந்தது.
இந்தியச் சமூகத்தின் கட்டமைப்பைத் தத்துவார்த்த ரீதியில் மிகத் தெளிவாகப் புரிந்து வைத்திருந்த அம்பேத்கர் இந்திய அரசியலின் நோக்கையும் போக்கையும் தெரிந்துகொள்ள அதிகக் காலம் எடுத்துக்கொள்ளவில்லை. இந்து மதக்கோட்பாடுகளைப் பாதுகாத்து வரும் சிந்தனையாளர்களின், அரசியல் தலைவர்களின் உள்நோக்கங்களைச் சரியாகக் கணித்த அம்பேத்கர் அதிலிருந்து தம் மக்களை மீட்டெடுக்கும் முக்கிய வழியாக இந்து மதத்திலிருந்து வெளியேறுவது குறித்து யாராலும் மாற்றவியலாத உறுதியான முடிவை எடுத்தார்.
இந்து சமூகம் அடுக்குமுறையில் ஒன்றின்மீது ஒன்றாகப் பல சாதிகளாகவும் உட்சாதிகளாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது யாரும் அறியாத ரகசியமில்லை. சில சாதிகளைக் கீழ் அடுக்கில் வைத்து அடிப்படை மனித உரிமைகளையும் தரவிடாமல் முற்றும் முழுதாகப் பறித்துவிட்டுச் சில சாதிகளை மேலடுக்கில் வைத்துச் சகல உரிமைகளையும் வாரி வழங்குமாறு இந்தச் சாதியமைப்பு மிகக் குரூரமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. தீண்டத்தகாத மக்கள் மனிதர்களாகக் கூட நடத்தப்படாததைத் தன் சொந்த வாழ்விலேயே அனுபவித்தவர் அம்பேத்கர். வகுப்பறைக்கு வெளியில் கோணிச்சாக்கில் அமர்ந்து கல்வி கற்றதும் வெளிநாடுகளில் உயர்கல்வி கற்று இராணுவச் செயலாளராகப் பதவியில் இருந்தாலும் தங்கும் விடுதியிலிருந்து துரத்தியடிக்கப்பட்டதும் அலுவலகத்தில் தனக்குக் கீழே பணிசெய்யும் ஊழியர் கூடத் தண்ணீர் தர மறுத்ததும் மகர் சாதி என்ற ஒரே காரணத்திற்காகத்தான் என்பதைத் தன் சொந்த வாழ்வனுபவத்தின் மூலமாகவே உணர்ந்தவர். இது குறித்து எந்த ஆராய்ச்சியும் செய்ய வேண்டிய தேவை அவருக்கு எழவில்லை. இருப்பினும், இதற்கான காரணங்களையும் இத்தளைகளிலிருந்து விடுபடும் வழிகளையும் தேடுவதில் அம்பேத்கரின் இயல்பான ஆராய்ச்சி மனப்போக்கு அவரை இடைவிடாமல் உந்தித் தள்ளியது.
இந்து மதத் தத்துவங்களுக்கு ஆதாரமாக இருக்கும் வேதங்களையும் உபநிடதங்களையும் இதிகாசங்களையும் புராணங்களையும் சாஸ்திரங்களையும் ஆழமாகவும் நுண்மையாகவும் வாசித்து ஆய்ந்தறிந்து ஒரு முடிவுக்கு வந்தார். சீர்திருத்துவதற்கான எந்த வாய்ப்புக்கும் இடமின்றி அனைத்து வழிகளையும் தானே இறுக்க அடைத்துக்கொண்ட இருட்டுக் குகையைப் போன்றது இந்து மதம் என்னும் உண்மை துலக்கமாகத் தெரிந்தது. ஒளியுமின்றி வழியுமின்றி இந்துமத இருட்டுக் குகைக்குள் எத்தனை தலைமுறைகளாகக் கிடந்து உழன்று வன்கொடுமைகளுக்குப் பலியாவது என்பதை உணர்ந்துதான் சாதியமைப்பை வெடிகுண்டு வைத்துத் தகர்க்க வேண்டுமென்றார். அதன் தொடர்ச்சியாக அம்பேத்கர் தயாரித்த வெடிகுண்டுதான் ‘மதமாற்றம்’ என்னும் பிரகடனம்.
மேலும், இந்து மதமும் சாதியமைப்பும் அறிவார்ந்த தாக்குதலைச் சந்தித்த ஒவ்வொரு காலத்திலும் மிகவும் தந்திரமாக அதைக் கையாண்டு, கேள்வி கேட்கும் எதிர்த் தத்துவத்தையே உட்செரித்துத் தனதாக்கிக்கொண்டு தன் ஆயுளை நீட்டித்து வருகிற வரலாற்றையும் அறிந்துகொண்டார். சதுர்வர்ண அமைப்பை நிலைப்படுத்தி வைத்திருக்கும் வேதத்தின் கருத்துநிலைகளைக் கேள்விக்குட்படுத்திய ஒவ்வொரு காலத்திலும் இந்து மதம் அதைப் புனரமைப்பு செய்து நியாயப்படுத்தியது. சனாதன அமைப்புக்குப் புதிய புதிய விளக்கங்களை அளித்துப் பாதுகாத்து வந்தது. இந்து மதத்தின் எல்லாத் தந்திரங்களையும் தன் ஆய்வுகளின் மூலம் தோலுரித்துக் காட்டினார் அம்பேத்கர். சாங்கியத்தின் ராஜ, தாம்ச, சத்வ குணங்களின் (திரிகுணா) கருத்துநிலை அடிப்படையிலும் பகவத் கீதையில் கிருஷ்ணர் போதித்த ‘கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே’ என்னும் கருத்துநிலை அடிப்படடையிலும் சதுர்வர்ணத்தைப் புதுப் புது வழிகளில் நியாயப்படுத்த இந்து மதம் எடுத்த சில தந்திர முயற்சிகளை அம்பேத்கர் வெளிச்சம் போட்டுக் காட்டினார். அடிப்படையை மாற்றினாலொழிய அனைத்தையும் மாற்ற வாய்ப்பேயில்லை என்னும் முடிவுக்கு அம்பேத்கர் வந்தடைந்தார். தீண்டத்தகாதாருக்கு இந்து மதம் ஒருபோதும் விடுதலையைத் தராது என்பதை எந்தச் சந்தேகத்திற்கும் இடமின்றித் தீர்க்கமாக உணர்ந்தார். ஆகையால், இந்து மதத்தைவிட்டு வெளியேறும் முடிவைப் பொதுவெளியில் அறிவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். மேற்கண்ட வரலாற்றுப் பின்னணியில்தான் அம்பேத்கரின் மதம் மாறும் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், பௌத்தத்தைத் தழுவுவது என்பது அவர் அப்போதே உடனடியாக எடுத்த முடிவில்லை. பௌத்தத்தைத் தொடக்கத்தில் நிராகரித்தவர் அம்பேத்கர்.
அம்பேத்கர் தொடக்கத்தில் ஏன் பௌத்தத்தை நிராகரித்தார்?
மனிதத்தன்மையற்ற வாழ்க்கையை மட்டுமே பரிசாக அளிக்கும் இந்து மதத்தில் இருந்து விடுதலை பெற அம்மதத்திலிருந்து வெளியேறுவதைவிடச் சிறந்த தீர்வு ஏதுமில்லை என்பதில் உறுதியாக இருந்தார். பௌத்த மதத்திற்கு மாறுவது என்னும் முடிவை இருப்பத்தோரு ஆண்டுகள் கழித்தே அம்பேத்கர் அறிவித்தார். இடைபட்ட காலம் முழுவதும் கடுமையான சமூக அரசியல் பணிகள், அரசு நிர்வாகப் பணிகள், அரசியலமைப்புச் சட்டம் இயற்றும் பணிகள் எனக் காலத்தை வேகமாக உறிஞ்சும் கடுமையான பணிச்சுமைகளுக்கு நடுவில் அவர் மதமாற்றம் குறித்தும் தீவிரமாகப் பணியாற்றினார். இந்து மதத்தைவிட்டு வெளியேறி இன்னொரு மதத்தை ஏற்பது என்னும் முடிவில் உறுதியாக இருந்த அம்பேத்கர் அந்த இன்னொரு மதம் எது என்பதை இறுதி செய்வதில் தீவிரமான ஆய்வுகளில் ஈடுபட்டார். அதன் ஒரு பகுதியாகத் துவக்கத்தில் பௌத்தத்தையும் ஆராய்ந்தார். ஆய்ந்துவிட்டு இது தீண்டத்தகாத சமூகத்திற்கு உகந்ததில்லை என்று நிராகரித்துவிட்டார் (29.07.1927).
அம்பேத்கர் பௌத்தத்தை நிராகரித்தார் என்ற செய்தியைப் பொதுவாக யாரும் அறிவதில்லை. அது விவாதங்களில் எங்கும் ஒரு கூற்றாகக்கூட வருவதில்லை. அவ்வாறு நிராகரித்த பௌத்தத்திற்கே இறுதியில் வந்து சேர்ந்தார் என்பதுவும் பலருக்கு வியப்பையும் குழப்பத்தையும் அளிக்கக்கூடும். இன்னும் சொல்லப்போனால், அதை விளங்கிக்கொண்டால்தான் அம்பேத்கர் ஏன் பௌத்தம் தழுவினார் என்பதையும் விளங்கிக்கொள்ள முடியும் என்பது என் கருத்து. ‘நான் இந்துவாகச் சாக மாட்டேன்’ என்ற வரலாற்றுப் பிரகடனத்துக்குப் பிறகு எந்த மதத்திற்கு மாறுவது என்பது தொடர்பாக அம்பேத்கர் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஒவ்வொருவராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டன. இந்து மதத்தை விட்டு வெளியேறக் கூடாது என்று எச்சரிக்கைகள் ஒரு புறம், தங்களுடைய மதத்திற்கு வரவேண்டும் என்ற அழைப்புகள் மறு புறம், தங்களுடைய மதத்திற்கு வரக் கூடாது என்ற எதிர்ப்புகள் இன்னொரு புறம்.
இந்து மகாசபை கண்டித்தது. ஹைதராபாத் நிஜாம் வரவேற்றார். அகாலி தளம் அச்சத்தால் எதிர்த்தது. அம்பேத்கர் அறிவித்த பதினான்காம் நாளில் (29.10.1935) பம்பாயில் இந்து மகாசபை அவசரமாகக் கூட்டிய சிறப்புக் கூட்டத்தில் மதன் மோகன் மாளவியா தலைமையில் ஜகஜீவன் ராம், பாலூ பல்வாங்கர், எம்.சி.ராஜா முதலான ஒடுக்கப்பட்ட சமூகத்துத் தலைவர்கள் கலந்துகொண்டு அம்பேத்கரின் இந்த முடிவைக் கண்டித்துத் தீர்மானம் இயற்றினார்கள். ஹைதராபாத் நிஜாம் இசுலாம் மதம் உங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராய் இருக்கிறது என்கிற வரவேற்பைச் சொல்லளவில் நிறுத்தாமல் தீண்டத்தகாதாரின் மேம்பாட்டுக்காகக் கணிசமான நிதியுதவி அளிப்பதாகவும் வாக்குறுதி கொடுத்தார். சீக்கிய மதத்தையும் அவர்களின் வாழ்வியல் முறையையும் கள ஆய்வு செய்யச் சொல்லி அம்பேத்கர் அனுப்பிய குழுவைப் பார்த்து ‘சீக்கிய மதம் ஒடுக்கப்பட்ட தீண்டத்தகாதாரின் மதமாகிவிடுமென’ அச்சம் கொண்டு சீக்கிய ஜாட்டுகளின் அகாலி தளம் அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஒரு சமகால உதாரணம் மூலம் இந்த அவலத்தை இன்றைக்கும் நாம் காணலாம். பஞ்சாபில் மூன்றில் ஒரு பங்கு மக்கள்தொகைகொண்ட தலித் சமூகத்திலிருந்து இப்போதுதான் முதன் முறையாக சரண்ஜித் சிங் சன்னி முதலமைச்சர் ஆகியிருக்கிறார். அதைத் தொடர்ந்து பாஜகவும் வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒரு தலித்தை முதலமைச்சராக்குவோம் என்று வாக்குறுதி அளித்து வரும் வேளையில் சீக்கிய ஜாட்டுகளின் கட்சியாகக் கருதப்படும் அகாலி தளம் மட்டும் தலித்தைத் துணை முதலமைச்சராக்குவோம் என்று அறிவித்திருக்கிறது.
இவ்வாறாக, கண்டனங்களும் கடுஞ்சொற்களும் வாழ்த்துகளும் வரவேற்புகளும் அச்சமும் அவதூறுகளும் என அவரைச் சுற்றி நெருக்கடிகள் மட்டுமே சூழ்ந்திருந்தன. எவ்வளவு இக்கட்டான சூழலிலும் அம்பேத்கரின் அறிவார்ந்த மனம் குழம்புவதேயில்லை என்பதற்கு இது நல்லதோர் உதாரணம். அடிப்படையில் சமூக விஞ்ஞானியான அம்பேத்கர் தன் மற்ற ஆய்வுகளையும் போல எல்லா மதங்களையும் சில ஆய்வுச் சோதனைகளுக்கு உட்படுத்தினார். இதே காலகட்டத்தில்தான் இன்றைக்கும் அவரின் மேதைமையைப் பறைசாற்றும் சூத்திரர்கள் யார்? தீண்டத்தகாதார் யார்? இந்துத்துவத்தின் புதிர்கள் போன்ற மானுடவியல் மற்றும் சமூகவியல் போக்கில் இந்து மதம், இந்திய வரலாறு குறித்த ஆய்வுகளையும் அவர் செய்தார் என்பதை நாம் நினைவுகூர வேண்டும். இவையெல்லாம் அவரின் மதம் என்னும் கருத்தியல் மற்றும் மதமாற்றம் தொடர்பான ஆய்வுகளின் ஒரு பகுதியே ஆகும்.
அம்பேத்கர் மதம் மாறுவது என்று முடிவெடுத்த பிறகு, எந்த மதத்திற்கு மாறுவது என்பதற்குத் தேர்ந்தெடுத்த முதன்மையான அளவுகோல் தீண்டத்தகாத சமூகம் தழுவுகிற மதம் அவர்களை எல்லா நிலையிலும் சமமான உரிமையுள்ள மனிதர்களாக ஏற்றுக்கொண்டு எல்லா உரிமைகளும் அனுபவிக்கத் தங்குதடையற்ற சுதந்திரத்தை அளித்துச் சகோதரத்துவத்தைக் கடைபிடித்துச் சமத்துவத்தை நிலைநிறுத்த துணைசெய்வதாக இருக்க வேண்டுமென்பதுதான். இந்தியச் சமூகத்தில் அவ்வாறு நிகழ்வது அசாதாரணமான காரியம் என்பதை அம்பேத்கர் மிக நன்றாகவே அறிந்துவைத்திருந்தார். இதனால், இந்து மதத்தின் சாதியமைப்பைக் கண்மூடித்தனமாக உள்வாங்கிக்கொண்டு அடிமைத்தனத்தைத் தன் இயல்பாக்கிக்கொண்ட தீண்டத்தகாத சமூகத்திற்கு எந்த வகையிலும் இழப்பு வந்துவிடக் கூடாது என்பதில் அக்கறையுடன் இருந்தார். அதனால், தீண்டத்தகாதார் மாறும் மதம் அவர்களுக்குத் தம் வாழ்வில் முன்னேறுவதற்குத் தேவையான வாழ்வாதாரங்களை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளையும் பொதுச் சமூகத்தில் உரிமைகளைக் கோரும் போது உண்டாகும் சிக்கல்களை எதிர்கொள்ளும் வலிமையையும் அம்மதம் தர வேண்டுமென்றும் விரும்பினார். சுருக்கமாக, அந்த மதத்தின் அடையாளம் தீண்டத்தகாதாருக்கு மாண்புள்ள வாழ்க்கையைப் பெற்றுத் தர வேண்டும் என்று விரும்பினார்.
இதனையே சில ஆய்வாளர்கள் ‘இருத்தலியல் காரணங்களுக்காக அம்பேத்கர் மதம் மாறினார்’ என்கின்றனர். இது முற்றிலும் உண்மைதான். இதில் நமக்கு மாறுபட்ட கருத்துகள் ஏதுமில்லை. இந்தக் காரணங்களின் அடிப்படையில்தான் அம்பேத்கர் துவக்கத்தில் பௌத்தத்தையும் ஆர்ய சமாஜ நெறியையும் தீண்டத்தகாத சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்களை இது பூர்த்தி செய்யவில்லை என்று சுட்டிக்காட்டி நிராகரித்தார். அம்பேத்கர் ஆய்வு செய்த போது, ஆர்ய சமாஜம் சிறிய அளவில் மேம்போக்கான சில சீர்திருத்தங்களைச் செய்ததேயொழிய இந்து மதத்தை மாற்றவில்லை என்று அதை முற்றிலும் புறந்தள்ளினார். கடவுள் இல்லை, ஆத்மா இல்லை என்ற பகுத்தறிவுக் கருத்துகள் இருந்தாலும் இந்தியாவில் பௌத்தத்தைப் பின்பற்றுவோர் எண்ணிக்கை கணிசமான அளவு இல்லை. பௌத்தம் வழக்கொழிந்த மதம். அவை எந்தவகையிலும் தீண்டத்தகாத சமூகத்திற்குப் பயன்தரப் போவதில்லை எனக் கருதி அம்பேத்கர் அவற்றைத் துவக்கத்திலேயே நிராகரித்தார்.
அம்பேத்கர் கிறித்தவம், இசுலாம், சமணம், சீக்கியம் போன்ற மதங்களையும் ஆழமாக வாசித்தார். கிறித்தவத்தில் மிக அப்பட்டமாகத் தெரிந்த சாதியின் தாக்கம் அவரின் அடிப்படை நோக்கத்திற்கே எதிராக இருந்தது. சொல்லுமளவிற்குக் கணிசமான மக்கள்- தொகையைக்கொண்ட சமணமும் சீக்கியமும் கிறித்தவத்திலிருந்து எந்த வகையிலும் வேறுபட்டதில்லை என்பதையே வெளிப்படுத்தின. நான்கு மதங்களில் போராட்டக் குணமும் எதிர்ப்புணர்ச்சியும் மேலோங்கிய இசுலாம் மதத்தின் மீதே அவரின் நாட்டம் அதிகமாக இருந்தது. அதைப் பல்வேறு இடங்களில் அவர் எழுதியும் பேசியும் வெளிப்படுத்தியும் இருக்கிறார். 15.03.1929 இல் ‘நீங்கள் மதம் மாற விரும்பினால், இசுலாமியராக மாறுங்கள்’ என்று அவரே அறிவித்தார். இறுதியாக, இசுலாமையும் தீண்டத்தகாத சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என்னும் கருத்துக்கு உறுதியாக வந்து சேர்ந்தார். இசுலாம், கிறித்தவத்தை இந்திய மண்ணுக்கு அந்நியமானவை என்பதன் அடிப்படையில் நிராகரித்தார் என்னும் கூற்று ஓரளவிற்கு உண்மைதான். என்றாலும், மேற்கண்ட கிறித்தவம், இசுலாம், சீக்கியம் ஆகிய மதங்களை அவர் நிராகரித்ததற்கு அடிப்படைக் காரணங்கள் அவற்றிலுள்ள கடவுள் உண்டு, ஆத்மா உண்டு, ஆக்கவும் அழிக்கவும் கூடிய சர்வவல்லமையுள்ள சக்தி, முக்தி, மோட்சம் போன்ற பகுத்தறிவுக்கு ஒவ்வாத, அறிவியலுக்கு முரணான கருத்தியல்களும் சாதியமைப்பின் ஊடுருவலை அவை தமக்குள் அனுமதித்ததாகும்.
அம்பேத்கர் தீண்டத்தகாதாருக்குச் சமூக அரசியல் பொருளாதார விடுதலையைப் பெற்றுத் தரவும், மாண்புள்ள, சுதந்திரமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் மதத்தைத் தேர்வு செய்வது நல்லது என்ற இருத்தலியல் காரணங்களோடு மட்டும் அவர் நிற்கவில்லை. இருத்தலியல் காரணங்கள் மட்டுமே போதவில்லை அல்லது முழுமையாக இல்லை என்று சொல்லலாம். அதன் போதாமைகளிருந்தும் அல்லது முழுமையற்ற நிலையிலிருந்தும் அவரின் ஆய்வு முழுமையை நோக்கிப் பயணித்தது. அந்த முழுமை என்பது மனிதகுலம் முழுமைக்கும் பொருந்திப்போகும் வகையிலான மதம் அல்லது தத்துவம் என்பதாக இருக்க வேண்டுமென்று விரும்பினார். தீண்டத்தகாதாருக்கு மட்டுமன்றி எல்லோருக்கும், குறிப்பாக ஒட்டுமொத்த இந்தியச் சமூகத்திற்கும் பொருத்தமான மதம் வேண்டுமென்ற முடிவுக்கு வந்தார். ஒடுக்கப்பட்டவருக்கும் ஒடுக்குபவருக்கும் சேர்த்து விடுதலை வேண்டுமெனச் சிந்தித்தார். அவரின் ஆராய்ச்சிச் சிந்தனை அங்கேயே சுருங்கி நின்று விடாமல் மனிதகுல விடுதலைக்கு வழிகாட்டக் கூடிய சிறந்த சமய நெறியை நோக்கிச் சென்றது. அதன் நீட்சியாகத்தான் அம்பேத்கர் பௌத்தத்தை வந்தடைந்தார்.
அம்பேத்கர் இறுதியில் ஏன் பௌத்தத்தை ஏற்றுக்கொண்டார்?
அம்பேத்கர் பௌத்தம் தழுவலை ஓர் அரசியல் உத்தியாகக் கையாண்டார் என்பது அம்பேத்கரின் பௌத்தம் தழுவல் குறித்து மேம்போக்காக எல்லோரும் எடுத்துக்காட்டும் வழக்கமான காரணம். இது முற்றிலும் உண்மையில்லை. அதுவும் ஒரு காரணம் என்ற அளவில் மட்டுமே அக்கருத்தை ஏற்றுக்கொள்ள முடியும். தலித்துகள் ரொட்டிகளுக்காகக் கிறித்துவ மதத்திற்கு மாறுகின்றனர் என்று தலித்துகளின் மதமாற்றத்தைச் சிறுமைப்படுத்திப் பேசுவதைப் போன்றதுதான் இது. தன் சமூக அரசியல் பொருளாதாரப் போராட்டங்களின் ஒரு வலிமை வாய்ந்த வடிவமாக பௌத்தத்தைப் பார்த்தார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அம்பேத்கரின் பௌத்தம் ஏற்புக்கு முதன்மையான காரணம் அதன் தத்துவம். அதாவது பௌத்தமும், அதன் தம்மமும்.
வழக்கொழிந்த மதம், பின்பற்றுவோர் எவருமில்லை, அகிம்சை, தியானம் என்பதோடு சுருக்கிப் பார்க்கப்பட்டப் பௌத்தத்தை அம்பேத்கர் தத்துவார்த்த தளத்தில் அணுகினார். அவர் ஆய்வின் துவக்கக் காலத்திற்கும் இறுதிக்காலத்திற்கும் நிறைய வேறுபாடுகள் தென்படுகின்றன. மதத்தைத் தேர்வு செய்யும் அவரின் அளவுகோல்கள் விரிவாகிக்கொண்டே சென்றன. அதனூடாக அவரின் ஆய்வு முறையியலும் வேறுவேறு தளங்களுக்குச் செல்கின்றன. அவரின் ஆய்வு முடிவுகள் அவரை அந்த முடிவுக்கு உந்தித் தள்ளியது. இறுதியில், கிறித்தவம், இசுலாம், சீக்கியம் போன்ற மதங்களைக் காட்டிலும் புரட்சிகரமான, தத்துவ வலிமையுள்ள மதம் பௌத்தம் என்று அழுத்தமாகவும் உறுதியாகவும் முன்வைத்தார்.
அம்பேத்கர் தீண்டத்தகாத சமூகத்தின் விடுதலைக்குத் தீண்டாமைக் கொடுமைகளை மட்டுமே ஒழிக்க வேண்டுமென்று காந்தியையும் கம்யூனிஸ்டுகளையும் போலத் தீண்டாமை ஒழிப்பை மட்டுமே முன்னிறுத்தியவர் அல்லர். மனிதச் சமூகத்திற்கே எதிராக உள்ள அநீதியான சாதியமைப்பை அழித்தொழிக்க வேண்டுமென்று சூளுரைத்தார். சதுர்வர்ணம் என்னும் அடிக்கட்டுமானத்தைச் சுற்றி எழுப்பியுள்ள கோட்டையைத் தகர்க்கத் துணிந்தார். அதற்குச் சரியான தத்துவ ஆயுதம் பௌத்தம்தான் என்னும் முடிவுக்கு வந்தார். பௌத்தம் தன்னகத்தே கொண்டிருந்த தத்துவ வலிமையைத் தன் ஆராய்ச்சிகளின் வழி கண்டறிந்தார். 1924-இல் தொடங்கிய அந்த ஆராய்ச்சி 1929-இல் பௌத்தத்தை நிராகரித்ததில் முடிந்தது. அந்த நிராகரிப்பு வெறும் இடைவேளை மட்டும்தான் என்பது அப்போதைக்கு அம்பேத்கருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அம்பேத்கரின் மதமாற்ற வரலாறு முப்பத்திரண்டு ஆண்டுகள் கழித்து 1956-இல் நிறைவு பெற்றது. இதுதான் வரலாறு.
பௌத்தத்தை நோக்கிய அவரின் பயணத்தை வாசிக்கும் எவரொருவரும் அவரின் முடிவு எத்துணைச் சரியானது என்பதை ஒத்துக்கொள்வார்கள். கடுமையான பணிச் சுமைகளுக்கிடையில் தன் உடல்நலம் பாதிக்கப்பட்டு மோசமாகிக்கொண்டிருந்த நிலையிலும் ‘விழிப்புற்ற இந்தியாவை’ உருவாக்கும் நோக்கில் தன் ஆய்வுக் கண்களை அகலத் திறந்து விழித்தபடி இருந்தார். அம்பேத்கரின் பௌத்த மதமாற்ற முடிவு குறித்து விவாதிப்பதற்கு முன்பு அவரின் மதம் குறித்த கருத்துகளை விவாதிப்பது அதைப் புரிந்துகொள்ள உறுதுணையாக இருக்கும்.
பௌத்தத் தேடலின் ஊடாக, மதம் என்னும் சொல்லுக்குப் புதிய நவீனமான வரையரைகளைத் தந்தார். மதத்தின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டுமென்று எடுத்துரைத்தார். அவரின் மொழியிலேயே சொல்வது பொருத்தமாக இருக்குமென்று கருதுகிறேன்.
“மதம் மனிதனுக்காக இருக்க வேண்டும். மதத்திற்காக மனிதன் இல்லை”
என்பது அம்பேத்கர் மதம் குறித்துச் சொன்ன புகழ்பெற்ற வரிகள்.
அம்பேத்கர் மதமும் கடவுளும் தேவையில்லை என்று வாதிடும் தீவிர நாத்திகர்களின் குழுவிலும் கிடையாது. மதமும் கடவுளும் தேவை என்று வாதிடும் ஆத்திகர்களின் குழுவிலும் கிடையாது என்பதை எல்லோரும் நுணுக்கமாகப் புரிந்துகொள்ள முயல வேண்டும். அம்பேத்கர், மதம் மனிதனுக்குத் தேவை என்றார். என்ன மாதிரியான மதம் தேவை என்பதை விளக்கிச் செல்வதின் உச்சக்கட்டமாக நவீன காலத்திற்குரிய ‘மதம்’ என்னும் கோட்பாட்டையே மறுவரையறை செய்கிறார். ஆகவே, நாம் எல்லோரும் புரிந்து வைத்திருக்கும் மதம் என்னும் பொருளில் அம்பேத்கரின் மதத்தைப் பார்த்தால் நாம் தவறான இடத்திற்குத்தான் போய்ச்சேர வேண்டி வரும். எட்மண்ட் பர்க் சொல்லும் மதம் என்னும் கருத்தாக்கத்தின் அடிப்படையில் தன் மதக் கொள்கையை வகுத்துக்கொண்டார் அம்பேத்கர். மனிதனின் இயல்பான தேடல் மனத்தை யாரும் தடுக்கவியலாது என்றும் மதம் மனிதனுக்குத் தேவையான பற்றுகோல் என்பதும் மதம் பற்றிய அம்பேத்கரின் கண்ணோட்டமாகும். இது வழமையான மதம் என்னும் கண்ணோட்டங்களிலிருந்து முற்றிலும் வேறானது என்பதை ஒருவர் அம்பேத்கரை வாசிக்கும் பொழுது உணர முடியும்.
ஒரு சமூகத்தைக் கட்டுக்கோப்பாக ஓர் ஒழுங்குடன் வைப்பதில் சட்டத்தைவிட மதம் முக்கியப் பங்காற்றுகிறது என்பது அம்பேத்கரின் உறுதியான கருத்தாகும். நாமும்கூட இதைத் தினந்தோறும் நம் அன்றாட வாழ்வில் பார்க்கிறோம். ‘இங்கு சிறுநீர் கழிக்கக் கூடாது மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கொட்டை எழுத்தில் எச்சரிக்கை வாசகங்கள் எழுதி வைத்தாலும் அங்கு சிறுநீர் கழிக்காமல் செல்லாத ஆட்களே இருக்க மாட்டார்கள். அதே இடத்தில் ஒரு கடவுள் படத்தை வைத்து மஞ்சளும் குங்குமமும் பூசி வைத்துவிட்டால் ஒருவர் கூட அங்கு சிறுநீர் கழிக்கச் செல்வதில்லை என்பதைப் பார்க்கிறோம். தனிமனிதர்களின் சாதாரண தினசரி நடவடிக்கைகள் மீதான மதத்தின் ஆளுமையையும் தாக்கத்தையும் இந்தச் சிறிய உதாரணத்தின் மூலம் எளிதாக அறிந்துகொள்ள முடியும்.
மதம் மனிதனுக்கு ஒழுக்க நெறிகளைக் கற்றுக்கொடுக்கிறது என்பதை அழுத்தமாகப் பல இடங்களில் குறிப்பிடுகிறார் அம்பேத்கர். இந்த ஒழுக்க நெறிகள்தான் சமூகத்தை வழிநடத்துகிறது என்றும் விளக்குகிறார். சாதியமைப்பையும் தீண்டாமையையும் இந்துமதம் தன் ஒழுக்க நெறியாக வைத்திருப்பதால்தான் இந்துக்கள் தன் சக இந்துவைக் கீழாக நடத்துகிறான். அதை மதமே அங்கீகரிக்கிறது. இந்து மதம் ‘இது நீ முற்பிறப்பில் செய்த கர்ம வினை’ என்று சூத்திரர்களையும் பஞ்சமர்களையும் அடிமைகளாக நடக்கச் சொல்லி அறிவுறுத்துகிறது. இதைத்தான் கிருஷ்ணர், `கடமையைச் செய், பலனை எதிர்பாராதே’ என்று சொல்வதாக அம்பேத்கர் குறிப்பிடுகிறார். மனிதனுக்கு மதம் கட்டளையிடுகிறது. அதுவும் துணிந்து மீற முடியாத கட்டளை. அதை மீறினால், இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட ஒழுக்கநெறிகளை மீறுவோர்க்கு மதம் தண்டனைகள் அளிக்கிறது. தீண்டத்தகாதாரும் சூத்திரர்களும் எந்தக் கேள்வியும் கேட்காமல் பணிவிடை செய்வதற்குக் காரணம் இந்து மதம் அங்கீகரிக்கும் இவ்வொழுக்க நெறிகள்தான் என்பதை அம்பேத்கர் தெளிவாக விளக்கிச் சொல்லியிருக்கிறார்.
இதைப் பல இடங்களில் அம்பேத்கர் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார்.
நான் முன்பு குறிப்பிட்டதைப் போல, ‘மதம்’ என்பதை நவீன காலத்திற்கேற்ப மறு வரையறை செய்தார் அம்பேத்கர். மதம் ஒழுக்க நெறிகளின் தொகுதியாக இருக்க வேண்டுமென்பதைப் பலமுறை வலியுறுத்துகிறார். இந்து மதத்திலிருந்து அவர் கற்றுக்கொண்ட பாடங்களின் விளைவுகள் அவை. அவ்வொழுக்க நெறிகள் மனிதனை நல்வழிப்படுத்த உதவியாக இருக்க வேண்டுமென்றார். அந்தக் காரணத்திலேயே, தாம் பௌத்தத்தைத் தேர்ந்தெடுத்ததாகவும் சொல்லியிருக்கிறார். நவீன அறிவியலின் வளர்ச்சியால் பெருகும் அறிவின் துணைகொண்டு பலர் மதமே வேண்டாமென்பதும் மார்க்சியச் சிந்தனையால் உள்வாங்கப்பட்டு மதத்தை வேண்டாமென்பதும் கூடாது என்றும் அம்பேத்கர் அறிவுறுத்துகிறார். மதம் மனிதனை விட்டாலும் மனிதன் மதத்தைக் கைவிடத் தயாராக இல்லை என்பது அம்பேத்கரின் கருத்து. எனவே மத்தை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை என்கிறார். அம்பேத்கர் ஒரு நடைமுறைவாதி என்பதை இந்தக் கருத்துகளின் வழி அறியலாம். ஆனால், மதம் பகுத்தறிவை அடிப்படையாகக்-கொண்டிருக்க வேண்டுமென விரும்பினார். மதம் ஒழுக்கநெறிமுறைகளின் மீது கட்டியெழுப்பப்பட வேண்டுமென்றார். மதம் என்பது மனித நேயத்தைப் பரப்புவதையே அதன் நோக்கமாகக்கொண்டிருக்க வேண்டுமென்றார். ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் சுயபிரக்ஞை கொண்டவர்களாக வளர்த்தெடுக்கப்பட வேண்டிய சூழல்களையும் வாய்ப்புகளையும் உண்டாக்கும் வழிகளைக் காட்ட வேண்டுமென்றார். இந்த வரையறைகளின் அடிப்படையில் எல்லா மதங்களையும் சோதனைக்கு உட்படுத்திய எல்லாவற்றையும் நிராகரித்த அம்பேத்கர் பௌத்தத்தையும் சோதனைக்கு உட்படுத்தினார்.
பௌத்தம் என்னும் மதம் குறித்த பொதுவான பண்புகளாக அறியப்படுபவை, பௌத்தம் இந்திய மரபில் வேரூன்றிய சிரமண மதம். அது அகிம்சையைப் போதித்தது. துக்கம் குறித்த வாழ்வின் நான்கு பேருண்மைகளைச் சொல்லியது. பௌத்த மார்க்கத்தின் வழி நடக்கும் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய கொல்லாமை, கள்ளுண்ணாமை, பிறன்மனை விழையாமை, புறங்கூறாமை முதலான அஷ்டாங்க மார்க்கமான எட்டு வழிகளை உறுதியாகக் கடைபிடிக்கச் சொல்லியது. பௌத்தத்தில் கடவுள் இல்லை. ஆன்மா இல்லை. சாதி இல்லை. சதுர்வர்ணத்தின் இருப்பை எதிர்த்து வைதீக மதங்களின் கோட்பாடுகளுக்கு நேரெதிர் நிலையில் நின்று இயங்கியது பௌத்தம் என்னும் அளவில் பௌத்தம் அறியப்பட்டிருந்தது.
நூற்றாண்டுகளாகப் பராமரிப்பின்றிச் சிதைந்து உருக்குலைந்த அரண்மனையைச் சுத்தம் செய்து புனரமைத்து அதன் பழைய அழகையும் பொலிவையும் பிரமாண்டத்தையும் மீட்டெடுப்பதைப் போல, பௌத்தத்தின் மீது அழுந்தப் படிந்திருந்த காலத்திய அழுக்கைத் துடைத்தெறிந்து அதன் தன்னியல்பான பூர்வ அறிவின் ஒளியில் மிளிரச் செய்தார் அம்பேத்கர். முப்பத்திரண்டு ஆண்டுகள் அவர் செய்த ஆய்வுக்குப் பிறகு அம்பேத்கர் இறுதியில் பௌத்தத்தைத்தான் தாம் மாற விரும்பும் மதமாகத் தேர்ந்தெடுத்தார்.
அதற்கான முதன்மையான காரணம் பகுத்தறிவை அடிப்படையாகக்கொண்ட அதன் தத்துவமும் நவீன அறிவியலுடன் முழுமையாக ஒத்துப் போகும் அதன் கொள்கைக் கோட்பாடுகளும்தான். அதனால்தான், பௌத்தம் முதன்மையாக அறத்தையும் அறிவியலையும் அடிப்படைப் பண்புகளாகக்கொண்ட மதம் என்று வரையறை செய்தார். பௌத்தத்தின் தத்துவத்தை மேலும் விரிவுபடுத்திக் கட்டமைத்தார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி ஆகிய கொள்கைகள் பௌத்தத்தின் உள்ளார்ந்த அம்சமாக அங்கீகரிக்கப்பட்டு எல்லா நிலைகளிலும் செயல்பட்டது. புத்தர், தம் வாழ்நாளிலேயே வைதீக மரபுக்கும் சதுர்வர்ண அமைப்புக்கும் எதிராகப் போராடியவர். இந்து மதத்தில் சூத்திரர்களாகவும் அவர்ணர்களாகவும் கருதப்பட்டவர்களும் உரிமைகளற்ற நிலையில் முடங்கிக் கிடந்த பெண்களும் பிக்குகளாகவும் பிக்குணிகளாகவும் மாறுவதற்கு உரிமையும் வாய்ப்பும் அளிக்கப்பட்டன. சங்கம் ஒரு ஜனநாயக அமைப்பாகச் செயல்பட்டதையும் எடுத்துக் காட்டினார். இயேசு, முகம்மது நபி, கிருஷ்ணர் போன்று தம்மைக் கடவுளாகவும் ஆக்கவும் அழிக்கவும் வல்லவர் என்றும் வரங்களையும் சாபங்களையும் அளிக்கும் சர்வ வல்லமையும் பொருந்திய அதீத சக்திகொண்டவர்கள் என்றும் புத்தர் தன்னைப் பிரகடனப்படுத்திக்கொள்ளாததை மிகமுக்கியமான கூறாக முன்வைத்தார். பௌத்தம் மற்ற மதங்களைப் போலல்லாமல் தம்மத்தையும் புத்தரின் போதனைகளையும் கேள்விக்குட்படுத்தும் சுதந்திரத்தையும் உரிமையையும் வழங்கியது. தம் கருத்துகள் நடைமுறைக்கும் பகுத்தறிவுக்கும் அறிவியலுக்கும் ஒத்துவராது போனால் காலத்திற்கேற்ப மாற்றுவதற்கு இடம் கொடுத்தது. மகாபரிநிப்பாண சுத்தத்தில் புத்தர் ஆனந்தரிடம் சொல்கிறார்,
“இந்த மதம் அறிவு மற்றும் அனுபவத்தின் அடிப்படையாகக்கொண்டது… தன்னுடைய சொற்களே இறுதியானதும் முழுமையானதும் இல்லை. எவரொருவரும் என் கருத்துகளை மாற்றிக்கொள்ளும் உரிமையுண்டு”
என்று சொல்கிறார். பௌத்தத்தைத் தவிர எந்த மதமும் பிரக்ஞா (விழிப்புணர்வு), கருணா (அன்பு), சமதா (சமத்துவம்) என்னும் இந்த மூன்று கொள்கைகளையும் கூட்டாகக் கலந்து தந்ததில்லை என்றார்.
இந்த இடத்தில் இன்னொரு மிக முக்கியமான விசயம் குறித்து விவாதிக்க வேண்டும். அம்பேத்கரின் பௌத்தம் குறித்துப் பேசும் போது கம்யூனிசம் குறித்துப் பேசாமல் அது முழுமை அடையாது. அம்பேத்கர் பௌத்தத்தோடு கம்யூனிசத் தத்துவத்தை ஒப்பிட்டுப் பலமுறை எழுதியிருக்கிறார், பேசியிருக்கிறார். புத்தரா, காரல் மார்க்ஸா என்ற தத்துவ விவாதத்தையும் தொடங்கிவைத்தவர் அவரே. கம்யூனிசத்தைப் பேசிய அளவுக்கு வேறெந்த தத்துவத்தையும் இவ்வளவு விரிவாகப் பௌத்தத்தோடு ஒப்பீட்டு ஆய்வு நடத்தியிருக்க மாட்டார் என்று துணிந்து சொல்லலாம். பௌத்தத்தில் கம்யூனிசச் சிந்தனைகள் உள்ளது என்கிறார். பௌத்தமும் கம்யூனிசமும் ஒரேமாதிரியான தத்துவத்தையும் கொள்கைகளையும் நோக்கங்களையும் கொண்டிருப்பதாக அம்பேத்கர் கூறுகிறார். சமத்துவச் சமூகத்தை உண்டாக்குவதில் புத்தர், மார்க்ஸ் இருவரும் ஒத்த கருத்துடையவரே என்பது அம்பேத்கரின் வாதம். இருவரும் அவர்களின் நோக்கங்களை அடைவதில் பின்பற்றும் வழிமுறைகளை வைத்து அவர்களை வேறுபடுத்துகிறார். வாதத்தின் இறுதியில், அம்பேத்கர் இரண்டு காரணங்களுக்காக மார்க்ஸின் கம்யூனிசத்தைவிடப் புத்தரின் தம்மமே சிறந்தது என்ற முடிவுக்கு வருகிறார். ஒன்று, புரட்சி என்ற பெயரில் போரில் ஈடுபடுவதும் மக்கள் உயிர்ப்பலியாவதையும் அம்பேத்கர் விரும்பவில்லை. இரண்டு, புரட்சிக்குப் பின்னான பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தில் தனிமனிதச் சுதந்திரம் பறிக்கப்படுவதை தீவிர ஜனநாயகவாதியான அம்பேத்கர் ஏற்கவில்லை. அம்பேத்கர் தான் வாழ்ந்த காலத்திலேயே ரஷ்யப் புரட்சியையும் இரண்டு உலகப்போர்களையும் அதன் விளைவுகளையும் நேரில் கண்டவர். அதனால் உலகின் வெவ்வேறு சமூகங்களில் கம்யூனிஸம் உண்டாக்கிய தாக்கத்தை நன்கு அறிந்து வைத்திருந்தார். புரட்சி என்ற பெயரில் நிகழ்த்தப்படும் ரத்தம் சிந்தும் வன்முறையையும் பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரம் என்ற பெயரில் உரிமைகள் பறிக்கப்படுவதையும் அம்பேத்கர் நேரில் கண்டார்.
மேலும், எல்லோரும் வியப்படையும் வகையில் இரண்டொரு இடங்களில் அம்பேத்கர் ‘பௌத்த கம்யூனிசம்’ என்றொரு புதிய சொல்லாடலைத் தருகிறார். கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர விரும்புவோரை பௌத்தத்தில் சேரச் சொல்லுகிறார். பௌத்தத்தில் சங்கம் என்னும் கம்யூனிச அமைப்பு இருப்பதாகச் சொல்லுகிறார். அதில் தனியுடைமை என்பது இல்லை என்கிறார். அதில் இணைந்து வன்முறையற்ற அகிம்சை வழியில் புரட்சியை நடத்தலாம் என்று அழைப்பு விடுக்கிறார். ரஷ்யாவைப் போல தென்கிழக்கு ஆசிய நாடுகள் கம்யூனிஸ்டு நாடுகளாகிவிடக் கூடாதென்று அறைகூவல் விடுக்கிறார். புத்தரின் போதனைகளைச் சரியான முறையில் வாசியுங்கள். ரத்தம் சிந்தாமல் புரட்சி நடத்தி சமத்துவச் சமூகத்தை உருவாக்கும் கம்யூனிசத் தத்துவம் பௌத்தத்தில் இருக்கிறது என்று சுட்டிக்காட்டுகிறார். பல நேரங்களில், அம்பேத்கரிடத்தில் கம்யூனிசம், பௌத்தம் இரண்டும் ஒன்றுதான் என்பது போன்ற தொனி ஒலிப்பதைக் காண முடியும்.
வழக்கமாக, எந்தவொன்றையும் கறாராகக் கேள்விக்குட்படுத்தும் அம்பேத்கர் பௌத்தத்தையும் விட்டு வைக்கவில்லை. அவர் காலத்தில் சொல்லப்பட்ட பௌத்தத்தை அப்படியே ஏற்கவில்லை. பௌத்தமென்னும் தத்துவங்களின் தத்துவத்தைக் கடும் ஆய்வுச் சோதனைகளுக்கு உட்படுத்தினார். காலங்காலமாகப் பௌத்தத்தின் அடிப்படைக் கொள்கைகளாக விளங்கி வந்த நவீன அறிவியலுக்கும் ஜனநாயகத்தன்மைக்கும் ஒத்துப் போகாதவற்றை விமர்சிக்கவும் கேள்விக்குட்படுத்தவும் அம்பேத்கர் தயங்கவில்லை. அவற்றைத் தாம் வடிவமைத்த பௌத்தத்திலிருந்தும் தம்மத்திலிருந்தும் முற்றிலும் நீக்கித் தூர வீசி எறிந்தார். புத்தர் துறவு மேற்கொள்ளக் காரணம் ரோகிணி நதி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையென்னும் ஏற்றுக்- கொள்ளக்கூடிய வரலாற்றுக் காரணத்தை முன்வைத்ததையும் வெறுமனே பீடகங்களை மனனம் செய்துகொண்டு சாதுக்களைப் போல மாறிவிட்ட பிக்குகளின் சங்கத்தைக் கண்டித்ததையும் இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும். இவ்வாறாக, இந்தியச் சமூகச் சூழலில் இந்து மதத்திலிருந்துகொண்டு தீண்டத்தகாத சமூகம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அனைத்துக்கும் தீர்வு தரக்கூடிய மதமாக பௌத்தத்தை மறுவரையறை செய்தார் அம்பேத்கர்.
பகுத்தறிவைத் தத்துவ அடித்தளமாகக்கொண்ட நவீன அறிவியல் பண்புகளை உள்வாங்கிக்கொண்டு இயங்கும், ஒழுக்க நெறிகளுக்கு முதன்மையான இடமளித்துச் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்தும் மற்றும் சமூக நீதியை நிலைநாட்டும் எல்லா வாய்ப்புகளையும் எல்லோருக்கும் வழங்கும் ‘ஆதர்ச மதமாக’ அம்பேத்கர் பௌத்தத்தைப் புதிய வடிவத்தில் பொதுவெளியில் முன்வைத்தார். அதனாலேயே, அதனை ‘அம்பேத்கரின் பௌத்தம்’ என்றும், ‘நவயான பௌத்தம்’ என்றும் அழைத்தனர். அம்பேத்கர் முன்வைத்த பௌத்த தம்மமும், புத்தர் போதித்த தம்மமும் எந்த வகையிலும் ஒன்றல்ல என்றெல்லாம் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அம்பேத்கர் எல்லாவற்றுக்கும் தன் ஆராய்ச்சியில் கண்டெடுத்த உண்மைகளை விமர்சகர்களின் முன்பு சளைக்காமல் பதில்களாக அடுக்கினார். இதைப் போல வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இன்னும் பௌத்த மதத்தின் பல்வேறுபட்ட பரிமாணங்களைத் தன் பேச்சின் மூலமும் எழுத்துகளின் வழியும் விவரித்துக் காட்டினார். அம்பேத்கர் அதுவரை தேடிக்கொண்டிருந்த மிகச் சரியான மதத்தின் தேவைக்குப் பௌத்தம் கச்சிதமாகப் பொருந்திப் போனது. இயேசு, நபிகள், கிருஷ்ணர் ஆகியோரைப் புத்தரோடு ஒப்பிட்டுப் பார்த்த அம்பேத்கர் சாமானிய மனிதனாக அறத்தையும், அறிவையும் போதித்த புத்தர்தான் என்னுடைய வழிகாட்டி என்று தேர்ந்தெடுத்துக்- கொண்டார்.
(இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த மாத இதழிலும் தொடரும்…)
***************