இந்தியாவில் உள்ள அனைத்துக் கிராமங்களிலும் சாதிய வன்கொடுமைகள், தீண்டாமைகள், சாதியின் பெயரால் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகள், வேறுபாடுகள் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்துகொண்டுதான் வருகின்றன. என்னதான் அறிவியல் தொழிற்நுட்ப வளர்ச்சி இருந்தாலும், விண்ணை முட்டும் சாதனைகளைப் படைத்தாலும், தீண்டாமைக் கொடுமைகளும் சாதிய வேறுபாடுகளும் காலத்திற்கேற்ப உருமாறிக்கொண்டேதான் வருகின்றன. இவ்வாறு தொடரப்படும் சாதிய வன்கொடுமைகளும் தீண்டாமைகளும் யாருக்கும் புதிதல்ல. அதுமட்டுமல்லாமல், அது மக்களின் வாழ்வியலோடு ஒன்றி எதார்த்த நடைமுறைகளாகவே மாறியுள்ளது. அதனால்தான் பொதுச் சமூகத்தில் சாதிய வன்கொடுமைகள் சாதியின் பெயரால் நிகழும் ஏராளமான பெருங்குற்றங்கள் எந்த அதிர்வலையையும் இச்சமூகத்தில் ஏற்படுத்தவில்லை. இந்த நடைமுறைகளை மாற்றுவதற்கு இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் முயற்சிப்பதில்லை. ஏனெனில், இன்றைக்குச் சாதியும் அரசியலும் பின்னிப்பிணைந்த ஒன்றாக மாறிவிட்டது. மேலும் பல கட்சிகள் மற்றும் இயக்கங்களுக்குச் சாதி முக்கிய மூலதனமாக உள்ளது. எனவே அந்தக் கட்டமைப்பை மாற்றுவதில் பல பேருக்கு உடன்பாடில்லை. எனவேதான் சாதியின் பெயரால் நிகழும் வன்முறைகளுக்குப் பல அரசியல் கட்சிகள், இயக்கங்கள் அமைதி காப்பதும், சில அரசியல் கட்சிகள், இயக்கங்கள் கொதித்தெழுவதும் வாடிக்கையாக உள்ளது. இவை அனைத்தும் அவரவர்களின் அரசியல் இலாபத்திற்கு மட்டுமே.
அந்த நடைமுறைகள் தொடர்வதில் முக்கியப் பங்கு வகிப்பது, இந்தியக் கிராமங்கள் அனைத்தும் சாதிய பௌதீகக் கட்டமைப்பில் (Physical structure) உள்ளதே ஆகும். அதாவது ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனியே குடியிருப்புகள், கோயில்கள், குளங்கள், கிணறுகள் உள்ளன. இங்கு பொதுக்கிணறு, கோயில்கள், குளங்களை ஏதேனும் ஓர் ஆதிக்கச் சாதியினர் மட்டுமே பயன்படுத்துவதும், மற்றவர்கள் பயன்படுத்த முடியாத சூழலும் உள்ளது. இன்றைய நாகரிக உலகில், சாதிய வன்கொடுமைகளும் தீண்டாமையும் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத பல்வேறு வடிவங்களில் தொடர்வதைப் பொதுச் சமூகம் பார்க்காமலில்லை.
மனிதர்கள் வாழும் குடியிருப்புகள் தனித்தனியாக உள்ளபோது, இறந்த பிறகு புதைக்கும் சுடுகாடும் தனித்தனியே இருப்பதில் எந்த ஆச்சர்யமுமில்லை. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் தலித் மக்களுக்குச் சுடுகாடு வசதி இல்லை. அதாவது சுடுகாடே இல்லை, சுடுகாடு இருந்தும் பாதை இல்லை, பொதுப்பாதையில் பிணத்தைத் தூக்கிச் செல்ல அனுமதியில்லை, பொதுச் சுடுகாட்டில் அடக்கம் செய்ய அனுமதி இல்லை. இவ்வாறு மனிதன் பிணமான பிறகும் கூட, சாதிய வன்மத்தாலும் ஈவு இரக்கமற்ற குணத்தாலும் உரிய மரியாதையோடு அடக்கம் செய்ய முடியாத அவல நிலை உள்ளது. அத்தகைய சாதிய வன்மமானது, மற்றவர்களை இழிவுபடுத்துவதாக நினைத்துக்கொண்டு தன்னைத் தானே இழிவுக்கு உட்படுத்திக்கொள்ளவைக்கிறது. அதனால் அவர்களுக்கு எந்த அவமானமோ குற்ற உணர்ச்சியோ இல்லை.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then