தன்னுடைய ஆழ்ந்த அறிவையும் ஆற்றலையும் எந்தத் தேசத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்தாரோ அவர்களைத் தவிர, மற்ற தேசத்தவர்களால் பாரபட்சமின்றிக் கொண்டாடக் கூடிய ஒப்பற்றத் தலைவர், சட்ட மாமேதை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், இந்திய தேசத்தின் தந்தை. சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களின் விடுதலைக்காகவும் அடிப்படை உரிமைகளுக்காவும் தன்னுடைய வாழ்நாள் முழுதும் குரல் கொடுத்து, அம்மக்களின் குரலாகவே எதிரொலித்தவர். பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன் ஆகியோர் மீது நம்பிக்கை கொள்ளவோ அல்லது அவர்களை வழிபடவோ மாட்டேன்; கடவுளின் மறுபிறப்பாக நம்பப்படுகின்ற ராமன், கிருஷ்ணன் ஆகியோர் மீது நம்பிக்கை கொள்ளவோ அல்லது அவர்களை வழிபடவோ மாட்டேன் என்பன போன்ற 22 உறுதிமொழிகளை முன்மொழிந்து அதன்படியே வாழ்ந்தவர். அவ்வாறு வாழ்ந்தவரை இந்துமத அடையாளத்திற்குள் திணிப்பதென்பது எவ்வளவு பெரிய கயமைத்தனம். இதற்கு ஆதரவாக நீதித்துறையும் முதல்வரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கக்கூடிய காவல்துறையும் செயல்படுவதைக் காணும்போது சமூகநீதியைப் பேசக்கூடிய அரசுகூட சனாதன அரசாகத்தான் இருக்கிறதோ என்கிற ஐயம் எழுகிறது. புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளான கடந்த டிசம்பர் 06இல், அடையாறில் உள்ள அவரது மணிமண்டபத்தில் நடந்த காவல்துறையினரின் அடக்குமுறையும், மயிலாடுதுறை மாவட்டம், பட்டவர்த்தியில் அம்மாவட்ட நிர்வாகம் விதித்த 144 தடை உத்தரவும் இதையே நமக்கு உணர்த்துகின்றன. இவ்விரு நிகழ்வுகளையும் எளிதாகக் கடந்துவிட முடியாது. ஏனெனில், ஒருபக்கம் தேசத் தலைவரை அவமதித்தவர்களுக்கு, அதிகபட்சமான பாதுகாப்போடு அவர் சிலைக்கே மரியாதை செய்ய அனுமதியளித்த சென்னை உயர் நீதிமன்றம், பட்டவர்த்தி விவகாரத்தில் மட்டும் அம்மாவட்ட நிர்வாகமே அங்கு நிலவும் சூழலைப் பொறுத்து அனுமதியளிக்கலாம் என்று சொன்னது சாதி வெறியர்களின் அச்சுறுத்தல்களுக்கு நீதிமன்றமும் இணங்கிப் போகிறது என்பதை அறிவுறுத்துகிறது.
“கெடு வாய்ப்பாக நான் ஒரு தீண்டத்தகாத இந்துவாகப் பிறந்துவிட்டேன்; அதைத் தடுப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது. ஆனால், அருவருக்கத்தக்க இழிவான நிலையில் வாழும் வாழ்வை என்னால் தடுத்து நிறுத்த முடியும். எனவே, நான் உறுதியாகக் கூறுகிறேன், நான் ஓர் இந்துவாகச் சாக மாட்டேன்” எனக் கூறி அதன்படியே இந்து மதத்தைவிட்டு வெளியேறி, பௌத்தம் தழுவியவர் தம்மப் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர். வாழ்நாள் முழுதும் தீண்டாமையைப் போதிக்கும் இந்து மதக் கொள்கைகளைச் சமரசமின்றிக் கடுமையாக விமர்சித்துவந்தவர். கடவுள் எங்கும் உள்ளார் என்று உபதேசம் செய்துவிட்டு, சக மனிதர்களை விலங்குகளை விடவும் கீழ்த்தரமாக நடத்துபவர்கள் வேடதாரிகள் என்றுரைத்ததோடு அவர்களுடன் நட்புறவே வைத்துக்கொள்ள வேண்டாம் என்றவர். சமத்துவத்தைப் போதிக்காத இந்து மதத்தைவிட்டு வெளியேறி சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தைப் போதிக்கும் பௌத்த மதத்தை ஏற்றுக்கொண்டவர். அவரின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் திட்டமிட்டே அவருக்குக் காவி சாயம் பூசுவதென்பதை எவ்வைகையில் நியாயமாகும். இத்தகைய செயல்களைச் செய்யக்கூடிய வன்முறையாளர்களுக்கே நீதிமன்றமும் காவல்துறையும் ஆதரவளிக்கின்றன எனும்போது, அதை நாம் விமர்சிக்காமல் கடந்து செல்ல முடியாது.
புரட்சியாளர் அம்பேத்கர் அனைவருக்குமான தலைவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இந்து மத அடையாளத்தைவிட்டு வெளியேறிய ஒருவருக்கு, இந்து மதச் சாயம் பூசுவதென்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். அத்தகைய செயல்கள் சமூகத்தின் அமைதியைச் சீர்குலைத்து, மதவாதப் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும். பொதுவாக, இந்துமதக் கடவுள்களுக்கு மாற்று மத அடையாளத்தோடு கூடிய சுவரொட்டிகளை அச்சடித்து வீதியெங்கிலும் காட்சிப்படுத்தினால், இங்குள்ள இந்து மதப் பற்றாளர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பரா? இல்லை, நடுநிலையாகச் செயல்படுவதாகச் சொல்லிக் கொள்ளும் நமது நீதிமான்களும்தாம் அதை எளிதாகக் கடந்து சென்றுவிடுவார்களா?
பொதுவாக, சனாதனம் என்பது, பிறருக்குரியதை வெட்கமில்லாமல் அபகரித்துத் தனதாக்கிக் கொள்வதையே குறிக்கோளாகக் கொண்டது. இதன் தொடர்ச்சியாகவே அம்பேத்கரையும் இந்து மையப்படுத்த முயற்சிக்கிறது. இதைக் கண்டிக்கும் விதமாகத்தான் டிசம்பர் 6 இல் அம்பேத்கர் மணிமண்டபத்திலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த சனாதனவாதி ஒருவரை எதிர்த்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழலும் ஏற்பட்டது. அதேவேளையில் சுமார் பத்து இலட்சம் மக்களோடு பௌத்தம் தழுவியவரைக் காவிமயப்படுத்தும் எண்ணத்தில் சுவரொட்டிகள் அச்சடித்து ஒட்டியதற்குத் தமிழகப் பௌத்த அமைப்புகள் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் மௌனம் காத்தது வினோதமாக இருக்கிறது.
இச்செயல்களில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யுமாறு பல்வேறு காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், இதுநாள்வரையிலும் அச்செயலுக்குக் காரணமானவரைக் கைது செய்யவில்லை. அந்தக் குறிப்பிட்ட நபரால் ஒவ்வொரு வருடமும் பதற்றமான சூழல் நிலவுவது தெரிந்தும் நீதிமன்றம் அச்சமூக விரோதிக்கு அனுமதியளிக்கிறது என்றால், நீதிமன்றம் யாருடைய கைப்பாவையாக இருக்கிறது என்பது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவே காவல்துறை துடிக்கிறதே தவிர, அதனால் ஏற்பட்ட பதற்றமான சூழலைக் கண்டுகொள்ளவே இல்லை. மேலும், அம்பேத்கரியர்கள் அங்கு வீரவணக்க கோஷங்கள் எழுப்பவும் தடை போட்டனர், மணிமண்டபத்தில் கூட்டமாக நிற்பவர்களை ஒருமையில் பேசி மிரட்டினர், அது மட்டுமல்லாது அநாகரிகச் சொல்லாடல்களையும் பயன்படுத்தினர். இதனால் தமிழகத்தில் நடப்பது ‘திராவிட மாடல்’ ஆட்சிதானா என்கிற சந்தேகம் எழுகிறது.
தமிழகத்தில் புரட்சியாளர் அம்பேத்கரின் எத்தனையோ சிலைகள் உடைக்கப்பட்டிருக்கின்றன. அப்போதெல்லாம் அதைக் கண்டித்துக் குரல் எழுப்பாத சனாதனவாதிகள், சுயசாதிப் பற்றாளர்கள், அவருடைய பிறந்தநாள் – இறந்தநாளன்று மட்டும் மரியாதை செய்ய வருவதென்பது எவ்விதத்தில் நியாயமாகும். உண்மையிலேயே இவர்கள் அம்பேத்கர் மீது பற்றுள்ளவர்கள் என்றால், மயிலாடுதுறை மாவட்டம், பட்டவர்த்திக்குச் சென்றுதானே மரியாதை செய்திருக்க வேண்டும். அதை ஏன் செய்ய முன்வரவில்லை. அப்படியானால், புரட்சியாளர் அம்பேத்கரை தேசியத் தலைவராகக் கருதாமல் ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்களுக்கான தலைவராகத்தானே கருதுகிறார்கள். ஆனால், அவரைக் கொண்டாடுவதற்குத் தடை விதிக்கக் கூடிய சாதியவாதிகளுக்குத் தெரியவில்லை, பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீடு உள்ளிட்ட நலன்களுக்கு ஆணையத்தை ஏற்படுத்த அரசியல் சட்டத்தில் தனிப் பிரிவை உருவாக்கியவர் புரட்சியாளர் அம்பேத்கர்தான் என்று; அதற்காகவே தன்னுடைய அமைச்சர் பதவியையும் தூக்கி எறிந்தவர் என்று. குறிப்பிட்ட சில சாதிவெறியர்களின் அச்சுறுத்தலுக்குப் பயந்துகொண்டு மாவட்ட நிர்வாகமும் 144 தடை உத்தரவுப் போட்டது தேசிய அவமானம்.
“விளிம்புநிலை மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுமேயானால், உலகின் எந்தத் தேசமாயினும் அங்கு நடப்பது ஜனநாயகம் அல்ல, சர்வாதிகாரமே.” என்று முழங்கியவர் புரட்சியாளர் அம்பேத்கர். இதை மெய்ப்பிக்கும் வகையிலேயே நீதித்துறையும் மாவட்ட நிர்வாகமும் அரசும் கூட்டுச் சேர்ந்து விளிம்புநிலை மக்களின் குரல்வளையை நெரித்துக்கொண்டிருக்கின்றன.