உருமாறிவரும் இடஒதுக்கீடு – வழக்கறிஞர் A.B.இராஜசேகரன்

முன்னேறிய சாதியினரில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு (EWS) அரசு கல்வி நிலையங்களிலும் வேலை வாய்ப்புகளிலும் இட ஒதுக்கீடு வழங்கிட எந்தத் தடையுமில்லை என்கிற 103ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் செல்லும் என்று, உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 7ஆம் தேதியன்று தீர்ப்பளித்திருக்கிறது. வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகளில் மூவர் 103ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் செல்லும் என்று தீர்ப்பளித்திருக்கிறார்கள். மற்றிருவர் சமூக நிலையிலும் கல்வி நிலையிலும் பின்தங்கியவர்கள், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் இந்த இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று கூறி இச்சட்டத் திருத்தம் செல்லாதெனத் தீர்ப்பளித்திருக்கிறார்கள். ஆனால், ஐந்து நீதிபதிகளும் ஒருசேரப் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு தவறில்லை என்றே தீர்ப்பளித்திருக்கிறார்கள்.

இடஒதுக்கீட்டின் தோற்றம்

அரசு கல்வி நிலையங்களிலும் வேலை வாய்ப்புகளிலும் பிராமணர்களே பெருமளவு இடம்பெற்றிருந்த காரணத்தினால் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய சமஸ்தானங்கள் சிலவற்றிலும் ஒருசில பிரிட்டிஷ் இந்திய மாகாணங்களிலும் பிராமணரல்லாதவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. குறிப்பாக, சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி ஆட்சியில் 1921ஆம் ஆண்டு அனைத்துச் சமூகங்களுக்கும் கல்வி நிலையங்களிலும் அரசு வேலைவாய்ப்புகளிலும் பிரதிநிதித்துவம் ஏற்படுத்தப்பட்டது. சமூகத்தைச் சாதி – மத வாரியாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் குறிப்பிட்ட சதவீதம் இடஒதுக்கீடு அளித்தது. இதுபோல 1942இல் பாபாசாகேப் அம்பேத்கரின் முயற்சியால் மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பட்டியிலின மக்களுக்கு 8.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

1950இல் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதில் பிரிவு 15, பிரிவு 16, பிரிவு 29(2) ஆகியவை சாதி, மதம், இனம், பிறப்பிடம், பால் என எதன் பொருட்டும் அரசு வேற்றுமை பாராட்டக் கூடாது என்று வலியுறுத்தியது. இதில் விதிவிலக்காகப் பிரிவு 16(4)இல் இதுவரை அரசு நிர்வாகத்தில் பிரதிநிதித்துவமில்லாத பின்தங்கிய வகுப்பினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க முடிவெடுத்தால் அதற்குத் தடையில்லை என்று அறிவித்தது. அரசியலைமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபோதே வேலை வாய்ப்புகளில் இடஇதுக்கீடு அளிக்கலாம் என்று அனுமதித்திருந்தது. ஆனால், கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு குறித்து எந்தக் குறிப்புமில்லை.

இத்தகைய சூழலில் சென்னை மாகாணத்தில் அமலில் இருந்த இட ஒதுக்கீட்டினை எதிர்த்துச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் பட்டது. சம்பந்தப்பட்டவர்களின் வாதங்களை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் சென்னை மாகாணத்தில் அமலில் இருந்த இடஒதுக்கீட்டு அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 15(1) மற்றும் 29(2)க்கு எதிராக இருப்பதாகச் சொல்லி அந்த இடஒதுக்கீடு செல்லாது என்று அறிவித்தது.

இத்தீர்ப்பு ஒடுக்கப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் கல்வி வாய்ப்புகளைப் பாதிக்கும் என்றுணர்ந்த சட்ட அமைச்சர் பாபாசாகேப் அம்பேத்கர், முதல் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார். இந்தச் சட்டத் திருத்தம் பிரிவு 15இல் 15(4) என்கிற பிரிவைக் கொண்டுவந்தது. அப்பிரிவு குடிமக்களில் சமூக நிலையிலும் கல்வி நிலையிலும் பின்தங்கிய எந்தப் பிரிவினருக்கும் அல்லது பட்டியிலின மக்கள் மற்றும் பழங்குடியினருக்கு அவர்களின் மேம்பாட்டினைக் கருத்தில் கொண்டு சிறப்பு வழிமுறைகளை எடுக்க அரசுக்கு எந்தத் தடையுமில்லை என்று அறிவித்தது.

இப்படித்தான், அரசு கல்வி நிறுவனங்களிலும் அரசு வேலைவாய்ப்புகளிலும் பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் சமூக நிலையிலும் கல்வி நிலையிலும் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு உருவானது. பல மாநிலங்களில் பட்டியலினத்தவர், பழங்குடியினர் மட்டுமல்லாது சமூக நிலையிலும் கல்வி நிலையிலும் பின்தங்கியவர்களுக்கும் இட ஒதுக்கீடு தொடக்கத்திலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் கல்வி நிலையங்களிலும் வேலை வாய்ப்புகளிலும் பட்டியலினத்தவருக்கும் பழங்குடியினருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்த நிலையில் 1990இல் மண்டல் அறிக்கையை ஏற்றுக்கொண்ட பிறகு மத்திய அரசுப் பணிகளில் சமூக – கல்வி நிலையில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கத் தொடங்கியது.

இடஒதுக்கீட்டு விவகாரத்தில் இந்திரா சாஹானி குறிப்பிடும்படியான மிக முக்கியமான வழக்கு (1992). சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கியவர்களுக்கு  மத்திய அரசு கல்வி நிலையங்களிலும் வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக 1979இல் பி.பி மண்டல் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு 1980இல் அளித்த  அறிக்கை  மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது. 1989இல் பதவியேற்ற வி.பி.சிங் தலைமையிலான அரசு அந்த அறிக்கையை ஏற்றுச் சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கியவர்களுக்கு 27% இடஒதுக்கீடு அளித்தது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குத்தான் இந்திரா சாஹானி வழக்கு.

இவ்வழக்கு ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வால் விசாரிக்கப்பட்டது. அதனடிப்படையில் மத்திய அரசு நிறுவனங்களிலும் சமூக நிலையிலும் கல்வி நிலையிலும் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்தது. அதேவேளையில் இடஒதுக்கீடு 50% விழுக்காட்டுக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியது. பின்தங்கிய வகுப்பினருள் பொருளாதாரத்தில் முன்னேறியவர்களுக்கு (க்ரீமி லேயர்) இடஒதுக்கீடு வழங்கிடக் கூடாதென்றும் தீர்ப்பளித்தது. இவ்வழக்கிற்குப் பிறகு இடஒதுக்கிடு சம்பந்தமாக அரசியலமைப்புச் சட்டத்தில் பல திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுப் பல வழக்குகளில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில் மத்திய அரசு முன்னேறிய சாதிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்து, சட்டத் திருத்தத்தின் மூலம் 10% இடஒதுக்கீடு வழங்கிட வழி செய்தது. இத்திருத்தத்தின் மூலம் பிரிவு 15இல் பிரிவு 15(6) சேர்க்கப்பட்டுப் பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் சமூக நிலையிலும் கல்வி நிலையிலும் பின்தங்கியவர்களுக்கு அல்லாத பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் மேம்பாட்டிற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு ஏற்படுத்தத் தடையில்லை என்றும் பிரிவு 16இல் பிரிவு 16(6) சேர்க்கப்பட்டுச் சமூக நிலையிலும் கல்வி நிலையிலும் பின்தங்கியவர்கள் அல்லாது பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க அரசு முடிவெடுக்கத் தடையில்லை என்றும் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது.

இந்தத் திருத்தத்தில் கவனிக்க வேண்டிய விஷயம் அரசியல் சாசனப் பிரிவு 15(4) சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கியவர்கள், பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினர் ஆகியோரின் மேம்பாட்டிற்கான ஏற்பாடுகளுக்குத் தடையில்லை என்கிறது. மாறாக, பிரிவு 16(4) குடிமக்களில் எந்தப் பின்தங்கிய வகுப்பினராவது அரசுப் பணியில் போதிய அளவு பிரதிநிதித்துவம் இல்லாமல் இருப்பின் அவர்களுக்கு அரசு இடஒதுக்கீடு அளிப்பதற்குத் தடையில்லை என்கிறது. அதாவது கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு அளிப்பதற்கான காரணமும் அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு அளிப்பதற்கான காரணமும் வேறு. 103ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் உருவாக்கிய பிரிவு 15(6)இல் பிரிவு 15(4) போலவே வரையறை இருக்கிறது. ஆனால், பிரிவு 16(6)இல் பிரிவு 16(4) இருப்பதில் போன்ற வரையறையில்லை. பிரிவு 16(4) போன்று பிரிவு 16(6)இல் முன்னேறிய சாதியினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் அரசு பணியில் போதிய அளவில் இருக்கிறார்களா என்று அரசு ஆராய வேண்டிய அவசியமில்லை.

இடஒதுக்கீடு அடிப்படை உரிமை இல்லை என்று பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. அரசு வேலைவாய்ப்புகளில் பிற்பட்ட வகுப்பினருக்குப் போதிய பிரதிநிதித்துவம் இல்லையென்பதை ஆய்வு செய்துதான் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறது.  ஆனால், அதற்கு நேரெதிராக அப்படியொரு தேவையே இல்லாத பிரிவாக 16(6)இருக்கிறது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு

இந்த 103ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இச்சட்டத்திருத்தம் அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களுக்கு எதிரானது என்றும், கடந்த காலத்தில் முன்னேறிய வகுப்பினரால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சரி செய்யவும் சமூகத்தில் நிலவும் அசமத்துவத்தைக் கணக்கில் கொண்டும், கீழ் அடுக்கில் இருப்பவர்கள் மேம்பாடு அடைவதற்கான வாய்ப்புதான் இடஒதுக்கீடு என்றும் வாதிட்டனர்.

ஐந்து பேர் கொண்ட நீதிமன்ற அமர்வு இவ்வழக்கில் நான்கு முக்கியக் கேள்விகளைத் தொகுத்துக்கொண்டது.

  1. பொருளாதார அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்க முடியுமா?
  2. பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிலிருந்து சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கியவர்கள், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் ஆகியோரை விலக்க முடியுமா?
  3. மொத்த இடஒதுக்கீடு 50 சதவீதத்தை மீறக் கூடாது என்று இந்திரா சாஹானி வழக்கில் நிர்ணயிக்கப்பட்டதைப் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு மீறலாமா?
  4. அரசிடம் நிதி பெறாத தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியுமா?

ஐந்து நீதிபதிகளில் மூவர், முதல் கேள்விக்குப் பொருளாதார அடிப்படையில் மட்டுமே இடஒதுக்கீடு வழங்க முடியும் என்று சொல்லியிருக்கிறார்கள். அடுத்த கேள்விக்குப் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டிலிருந்து பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கியவர்களை விலக்கியது சரி என்றிருக்கிறார்கள். மூன்றாவது கேள்விக்கு இடஒதுக்கீடு 50 விழுக்காட்டைத் தாண்டக் கூடாது என்று இந்திரா சாஹானி வழக்கில் நிர்ணயிக்கப்பட்டது, பிரிவு 15(4) மற்றும் பிரிவு 16(4) மூலம் வழங்கப்படும் இடஒதுக்கீட்டிற்குத்தான் பொருந்தும், அது பிரிவு 15(6) மற்றும் பிரிவு 16(6) உள்ளிட்ட பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்குப் பொருந்தாது என்றிருக்கிறார்கள். நான்கு, அரசிடம் நிதி பெறாத தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும் என்று தீர்ப்பளித்திருக்கிறார்கள். மாற்றுத் தீர்ப்பினை அளித்த இரு நீதிபதிகள், பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியும் என்பதை ஏற்றுக்கொண்ட அதேவேளையில் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டில் இருந்து பட்டியலினத்தவர் பழங்குடியினர் மற்றும் சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கியவர்களை விலக்கியது தவறு என்பதால் சட்டத்திருத்தம் செல்லாது எனத் தீர்ப்பளித்தனர். ஐந்து பேரில் மூவர் அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்திற்குச் சாதகமாகத் தீர்ப்பளித்ததால் அந்தச் சட்டத்திருத்தம் செல்லும்.

பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு சரியா?

இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமில்லை என்கிற அடிப்படையை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. சமகாலத்தை ஒப்பிடும்போது அரசியலமைப்புச் சட்டம் எழுதப்பட்ட காலத்தில் வறுமை தலைவிரித்தாடியது. இருந்தும் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியவர்கள் பொருளாதாரத்தை ஏன் ஓர் அளவுகோலாகக் கொள்ளவில்லை என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

மேலே குறிப்பிட்டதைப் போல இதுவரை இரண்டு காரணங்களுக்காகத்தான் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது: முதலில் பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் சமூக நிலையிலும் கல்வி நிலையிலும் பின்தங்கியவர்கள் மேம்பாட்டிற்காக; இரண்டு, அரசு வேலைவாய்ப்புகளில் போதிய அளவிற்குப் பிரதிநிதித்துவம் இல்லாத காரணத்திற்காக. இப்படி எந்த நிபந்தனைகளுமின்றி அரசியலமைப்பின் 103ஆவது சட்டத் திருத்தம் உருவாக்கப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பும் இந்த வேறுபாட்டினைக் கணக்கில் கொள்ளாமல் இரண்டு இடஒதுக்கீட்டையும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் மேம்பாடு என்றே கருதியுள்ளது. மேலும், பிற இடஒதுக்கீடுகளைப் போல இது குழுக்களுக்கு அளிக்கும் இடஒதுக்கீடு இல்லை. இது முன்னேறிய சாதிகளில் இருக்கும் தனி நபர்களுக்காக வழங்கப்படும் இடஒதுக்கீடு. ஏதோவொரு சூழ்நிலையால் முன்னேறிய சாதிகளில் இருக்கும் ஒருவரின் குடும்பம் அரசு நிர்ணயித்த வருமான வரம்பிற்குள் வருமேயானால் அவர் இந்த இடஒதுக்கீட்டைப் பயன்படுத்தத் தகுதியுள்ளவர் ஆகிறார். பிற இடஒதுக்கீடு போலல்லாமல் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு பெறுபவரின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஏற்கெனவே அரசு நிர்வாகத்தில் போதிய அளவிற்கு மேல் இருந்தாலும் பிரச்சனையில்லை. குறிப்பிட்ட சில முன்னேறிய சாதிகளே அரசு நிர்வாகத்தின் உயர் பதவிகள் அனைத்தையும் ஆக்கிரமித்திருப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சுதந்திரத்திற்கு முன்பும் இதே நிலையே இருந்தது. அந்த நிலையைச் சரி செய்வதற்காகத்தான் இடஒதுக்கீட்டின் அவசியம் உருவானது. மாறாக, இத்தீர்ப்பு இடஒதுக்கீட்டினை ஒரு பலனாக (benefit) கருதி மேல் சாதியினருக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என்று நிறுவியிருக்கிறது. நமது அரசியலமைப்புச் சட்டத்தின் இடஒதுக்கீட்டிற்கான தத்துவமே தலைகீழாக மாறியிருக்கிறது. இந்த இடஒதுக்கீட்டின் மூலம் ஒருசில முன்னேறிய சாதிகளைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை, கல்வி நிலையங்களிலும் அரசு வேலைவாய்ப்புகளிலும் மேலும் பன்மடங்காகும். அது நிர்வாகத்திலும் பிரதிபலிக்கும்.

இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பில்  சொன்னது போல், பொருளாதார அளவில் பின்தங்கியவர்கள் பட்டியலினத்தவர்களும் பழங்குடியினரும்தான். அவர்களைத் தவிர்த்த பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு சமத்துவக் கொள்கைக்கு எதிரானது. இடஒதுக்கீடு என்பது சாதி அடிப்படையிலானதாக இருக்கக் கூடாது என்று இதுவரை தெரிவித்து வந்த நீதிமன்றம், சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்கு வழிகோலியிருக்கிறது.

இடஒதுக்கீட்டுச் சதவீதம் அதிகமானால் திறமையானவர்களுக்கு வாய்ப்பிருக்காது என்றும் அரசு நிர்வாகத்தில் தொய்வு ஏற்படுமென்றும் சொல்லி இடஇதுக்கீடு 50 விழுக்காட்டிற்கும் குறைவாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய உச்சநீதி மன்றம், இன்று அந்தக் காரணங்களையும் மறந்து புதிய காரணங்கள் ஏதுமின்றி 50% விழுக்காட்டைத் தாண்டுவதற்கு அனுமதியளித்திருக்கிறது. இந்திரா சாஹானி வழக்கில் பின்தங்கிய சமூகங்களைக் கண்டறிய பொருளாதாரக் காரணங்கள் மட்டும் போதாது, சமூகக் காரணிகளும் முக்கியம் என்று கூறியதை இந்த அமர்வு மறுதலித்திருக்கிறது. இச்சட்டத்திருத்தம், உச்சநீதிமன்றத் தீர்ப்பு, அதில் மூன்று நீதிபதிகள் வெளியிட்ட கருத்துகளை உள்ளடக்கிப் பார்க்கும்போது இடஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படைத் தர்க்கத்தையே மாற்றி, அக்கொள்கையை நீர்த்துப் போகச் செய்யும் வேலை தொடங்கியதாகவே இதை எண்ண வேண்டியிருக்கிறது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!