வேண்டுதல்
நன்கு முற்றியத் தேங்காயில் மஞ்சளைத் தடவி
கொட்டகைக்கு மேலே வீசிய பின்னும் விட்டபாடாய் இல்லை வானம்
இடியோடும் மின்னலோடும் விடாமல் அரட்டுகிறது
இந்த அடைமழை இப்படியே நீடித்தால்
இன்றிரவோ நாளை காலையோ
சோமேரியில் கழிங்கும் கரையும் உடைந்து
ஊருக்குள் புகுந்துவிடும் வெள்ளம்
கம்மாயை ஒட்டிய வயக்காடெல்லாம் முதலில் முங்கிப்போகும்
ஆடு மாடு கோழி குஞ்செல்லாம் அடியாகிப்போகும்
படுக்கையில் கிடக்கும் கெழடுகெட்டைகள் தாக்குப்பிடிப்பது கடுசுதான்
வெள்ளம் வீட்டுக்குள் வந்த பின்பு ஒதுங்க எங்கே செல்வது
இப்படியாக, கோணியோடும் குடையோடும்
வீட்டிற்கு வெளியே ஒரு கூட்டம் உச்சுக் கொட்டிக்கொண்டிருக்க
ஒழுகும் வீட்டினுள் ஒவ்வொரு குண்டானாக வைத்து
மகுற மகுற வாசலில் எடுத்து ஊத்திக்கொண்டிருக்கும் நான்
விடாமல் வேண்டிக்கொண்டிருக்கிறேன்
முதலில் அழியப்போவது அம்பலாரின் வயக்காடு என்பதால்
விடாமல் கொட்டட்டும் மழை
விடிவதற்குள் உடையட்டும் கறை
அண்ணனும் ஒருவேளை அன்று உயிரோடு பிழைத்திருந்தால்
இன்று இப்படித்தான் வேண்டியிருப்பான்.
Illustration : Lou Benesch
தண்டோரா
பெரும்பாலும் இருள் சூழ்ந்த மாலை வேளையில்தான்
அய்யா ஊருக்குள் தண்டோரா போடச் செல்வார்
டண்டாக் டண்டாக் ட்டணட்டணனக் ட்டணட்டணனக்
ட்டணட்டணனக் ட்டணட்டணனக் ட்டணட்டணனக்
ட்டணட்டணனக் ட்டணட்டணனக் ட்டணட்டணனக்
டண்டாக் டண்டாக் ட்டணட்டன ட்டன்
“இதனால் தெரிவிப்பது என்னவென்றால்” என்று ஊர் முழுக்க வலம் வருவார்
தண்டோரா போட்டு முடித்து அவர் வீடு திரும்பிச் சட்டையைக் கழட்டிய ஒருநாள்
பன்னெடுங்காலமாய் பறை மாட்டிக் கண்ணிப்போன
அவரது இடது தோள்பட்டையில்
வெற்றிலைக் கறைப் படிந்த சில முத்தத் தடங்கள்.
அதிர்ந்த நான் அய்யாவிடம் கேட்டேவிட்டேன்.
அரக்கப்பறக்க பீடியைப் பற்றவைத்தவர் ஆரம்பத்தில் சங்கடப்பட்டார்
பின் பீடியின் புகை வழியே இளமைக்குள் சென்றவர்
கொஞ்சம் சிரித்தும்
கொஞ்சம் வெட்கப்பட்டும்
கொஞ்சம் கண்ணீர் வடித்தும்
நீண்ட மௌனத்திற்குப் பிறகு முதுமைக்குத் திரும்பினார்
அப்போதுதான் புரிந்தது
ஆண்டபரம்பரையில் முதுகிழத்தி ஒருத்தி
அறைநூற்றாண்டுகாலமாய்
அய்யாவை மனசுக்குள் போட்டுக் குமைவதும்
ஆயுள் முழுக்கத் தண்டோரா போடும் அய்யா
தன் காதலை மட்டும் ஊருக்குத் தண்டோரா போடாமல் மறைத்ததும்
ஆனால், ஒன்று மட்டும் புரியவேயில்லை
அய்யாவிடம் அந்தக் காலத்தில் ஜீன்சு பேண்டும் இல்லை கூலிங்கிளாசும் இல்லை.