சென்னை மாகாணத்தில் ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது, 1938-ஆம் ஆண்டு ஓர் அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிகிறது. கம்மாளர்கள் எனப்படும் விசுவகர்மா வகுப்பினர் தங்கள் பெயருக்குப் பின் ஆச்சாரி என்று எழுதாமல், ஆசாரி என்று எழுத வேண்டுமென அந்த அரசாணை கூறியது. அதற்கு எதிர்ப்பு எழுந்ததால், அம்முடிவு கைவிடப்பட்டதாகத் தெரிகிறது. பிராமண சாதிப் பிரிவில் அடங்கியுள்ள அய்யங்கார்கள் இப்பட்டத்தைப் பயன்படுத்துவதால், குழப்பம் வராமலிருக்கக் கம்மாளர்கள் இப்பட்டத்தைப் பயன்படுத்த வேண்டியதில்லை என்பது அரசாணையின் நோக்கம்.
ஒரேயொரு எழுத்துத் தோன்றுவது / மறைவதன் மூலம் இருவேறு சாதிகளுக்கிடையேயான வேறுபாட்டை உருவாக்கிவிட முடியும் என்று நம்பப்பட்டிருக்கிறது. இவ்விரண்டு சொற்களுக்கிடையே இந்த அளவுக்கான நெருக்கம் ஏன், வேறு சொற்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளாதது ஏன், இந்த அளவுக்கான பிடிவாதத்தில் ஏதேனும் பொருளிருக்க முடியுமா என்கிற கேள்விகள் நமக்கு எழுகின்றன. இக்கேள்விகளுக்கான விடைகள் இச்சொற்களில் மட்டும் அடங்கியிருக்கவில்லை. அதாவது, இந்தக் கேள்விகள் இச்சொற்களைத் தங்களுடையவையாக உரிமைப் பாராட்டிவரும் இரு சமூகக் குழுக்களுக்கிடையேயான நெடிய மோதலை அறிந்துகொள்வதில் சென்று நிறுத்துகின்றன. இந்த மோதல் உடனடியானது அல்ல. இதற்கென நீண்ட தொடர்ச்சியும் வெவ்வேறு பரிமாணங்களும் இருந்தன.
இதனை அறியும்போது இன்றைய சாதியமைப்பில் மேலாகவோ, கீழாகவோ இடம்பெற்றிருக்கும் எந்தவொரு சாதியும் வரலாற்றில் எல்லாக் காலத்திலும் எல்லா இடத்திலும் இன்றைய நிலையிலேயே இருந்திருக்கவில்லை என்பதை அறிகிறோம். மேலும், சாதிகளானது எந்த எதிர்ப்பும் முரண்பாடுகளும் இல்லாமல் நேராக (மேலாக இருந்தாலும் கீழாக இருந்தாலும்) இன்றைய இடத்தை அடைந்துவிடவில்லை என்பதையும் சேர்த்தே அறிகிறோம். பொதுவாக, சாதி எதிர்ப்பு அல்லது மறுப்பு என்பது நவீனக் காலத்தில்தான் உருவானது என்றே நாம் விளங்கிக்கொண்டிருக்கிறோம், விளக்கிவருகிறோம். ஆனால், அந்த அமைப்பு உருவான காலத்திலிருந்தே எதிர்ப்பையும் முரண்பாட்டையும் உட்படுத்திக்கொண்டேவந்திருக்கிறது. நவீனக் காலச் சாதி எதிர்ப்புக் கருத்துகள் பண்பளவில் வேறுபட்டவை என்றாலும், நம்முடைய மரபில் சாதி எதிர்ப்பு நடக்காமலேயே இருந்திருக்க முடியாது. வேறு வகையில், வேறு தளத்தில் நடந்துள்ளன. தத்தம் சாதிகளுக்குச் சமூகத் தகுதியை உருவாக்கிக்கொள்ள, தக்க வைத்துக்கொள்ள, பறிக்கப்பட்டதை மீட்டெடுக்க என்கிற தளங்களில் அவை அமைந்திருக்கின்றன. அப்போராட்டங்களில் ஒவ்வொரு சாதியினரிடமும் பெருமிதம், இழிவு, தற்காலிகம், தந்திரம் போன்றவை வெளிப்பட்டிருக்கின்றன பிற சாதிகள் அம்பலப்படுத்தப்பட்டிருக்கின்றன. இத்தகைய புரிதலையெல்லாம் பிராமணர்கள், விசுவகர்மாக்கள் என்கிற இரு சமூகக் குழுக்களுக்கிடையேயான மோதல் வரலாறு நமக்குத் தருகிறது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then