கறாரான முகத்தோற்றம், தெளிவான பேச்சு ஆகியவை, இந்தப் பெண்ணிடம் பேசுவது அவ்வளவு எளிதாக இருக்காது என்ற எண்ணத்தைக் கொடுத்தது. ஆனால், பேசிய ஒருநாளிலேயே என் மடியைத் தலையணையாகக் கேட்கும் உரிமைப் பெற்றவராகிவிட்டார். இயக்குநர், சமூகச் செயற்பாட்டாளர், தொகுப்பாளர், நீலம் பெண்கள் – திருநர் சினிமா மன்றத்தின் (NPTCM) ஒருங்கிணைப்பாளர் எனப் பல பரிமாணங்களில் இயங்கியவர் சினேகா பெல்சின். பாலினச் சமத்துவம் குறித்துத் தெளிவான கண்ணோட்டம் கொண்டவர். அவருடனான உரையாடல்கள் ஆரோக்கியமான விவாதங்களை ஏற்படுத்தும்.
நீலம் சோசியல் யூடியூப் சேனலில் ‘முன்னுரை’ என்ற தலைப்பில் சமகால சமூகத்தைப் பற்றிய பல கருத்துகளைத் தொகுத்து வழங்கிவந்தார். பிறகு ‘என்னடா பாலிடிக்ஸ் பண்றீங்க?’ என்ற நிகழ்ச்சியில், பல்வேறு கட்சித் தலைவர்களின் அரசியல் கருத்துகளை நகைச்சுவையாக்கி விமர்சித்துவந்தார். இதனால் சமூக வலைதளங்களில் சினேகாவுக்கென்று ரசிகர்கள் உருவாக ஆரம்பித்தனர். கூடவே விமர்சகர்களும் இருந்தனர். இந்தக் காணொளிகள் மூலம் சமூகம் குறித்த ஒவ்வோர் அசைவிலும் அவரது கருத்துகள் எங்களை வெகுவாக ஈர்த்தது. மேலும், சினேகா தன் சொந்த அனுபவங்களைக் கதையாக எழுதி எங்களிடம் சொல்வதுண்டு. அப்படி ஒருநாள் ஸ்டாண்டப் காமெடிக்காக ஒரு நகைச்சுவைக் கதையைத் தயாரித்து எங்களிடம் நடித்துக்காட்டினார். அவரது நகைச்சுவை தொனியை அனைவரும் ரசித்தோம். சிறுவயதில் தான் அனுபவித்த மோசமான நிகழ்வுகளையும், மத ரீதியாகத் தான் அடிமைப்பட்டுக் கிடந்ததையும் நகைச்சுவை கலந்த தொனியில் எங்களோடு பகிர்ந்துகொண்டார்.
சினேகா பெல்சின் (10.06.1997 – 28.08.2023)
இயக்குநராக வேண்டும் என்ற சினேகாவின் எண்ணம் அவரது ஒவ்வோர் உரையாடல்களிலும் தெரிந்தது. அவர் எழுதும் கதைகள் அனைத்தும் பெண்ணுரிமை சார்ந்தே இருக்கும். நாங்கள் கதை எழுதிக் கொடுத்தால் தாமதிக்காமல் படித்து, அதில் இருக்கும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவார். நகைச்சுவையாக எழுதிக் கொடுக்கும் கதைகளை வெகுவாகப் பாராட்டுவார். ‘சவுண்டு’ என்ற குறும்படத்தை இயக்கியிருக்கிறார். மேலும், நீலம் சோசியல் தயாரித்து வெளியிடவுள்ள தொகுப்புப் படங்களில் சினேகாவும் ஒரு படத்தை இயக்கியிருக்கிறார்.
நீலம் வட்டத்தில் சினேகா பெல்சினை அறியாதவரே இல்லை, அனைவரையும் எளிதாகத் தனது நண்பராக்கிக்கொள்வார். சமூகவலைதளங்களில் கார்தும்பி என்ற புனைபெயரில் வலம்வந்த இவர், தனக்குப் பிடித்தப் பாடல்களைப்பாடி அதைக் காணொளியாகப் பதிவேற்றம் செய்வதுண்டு. அதுபோல் திரைப்படங்கள் குறித்த விமர்சனங்கள், கவிதைகள், அரசியல் சார்ந்த விமர்சனங்கள் என்று தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர். கடந்த ஜனவரி 2023இல் நீலம் சோசியலில் இருந்து விலகி தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் நிருபராகச் சேர்ந்தார். நீலம் சோசியலில் அவர் இயக்கியத் தொகுப்புப் படத்திற்காகவும் தொடர்ந்து பணியாற்றினார்.
இத்தகைய சமூகச் சிந்தனை கொண்டவர், முதிர்ந்த அரசியல் தெளிவோடு பயணித்தவர், கடந்த ஆகஸ்ட் 28இல் தனது செயற்பாடுகளை நிரந்தரமாக நிறுத்திக்கொண்டார் என்பது மிகவும் வேதனைக்குரியது. கார்தும்பியாக சினேகா சிறகடித்துச் சென்றாலும், அவருடைய கனவுகளும் எழுத்துகளும் அரசியல் நோக்குகளும் இன்றளவும் அவரை நிலைநிறுத்திக்கொண்டிருக்கும்.