என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை சிறுகதைகளாக எழுத வேண்டும் என்று ஆரம்பத்தில் நினைத்துக்கொண்டிருந்தேன். அண்ணாச்சி வசந்தகுமார் (தமிழினி பதிப்பகம்) அவர்களின் நட்பு கிடைத்த பிறகு அந்த எண்ணம் மாறியது. அவரின் தொடர்பு மேலும் மேலும் இறுகிவரும் காலத்தில், ஒரு நாவல் எழுதும்படி அவர் என்னிடம் இடையறாது சொல்லிக்கொண்டிருந்தார். “நீங்கள் சொல்லும் விஷயங்களுக்கு சிறுகதை வடிவம் போதாது. இவற்றையெல்லாம் நாவலாகத்தான் எழுதவேண்டும்” என்று வலியுறுத்தினார். சந்திக்கும் நேரத்தில் எல்லாம் இதுபற்றியே பேசிக்கொண்டிருந்தார். நாவல் எழுதியே ஆக வேண்டும் எனும் கட்டாயத்துக்குக் கொண்டுவந்தவர் அவர்தான். சென்னை பழவந்தாங்கலில் ஒரு சிற்றறையில் தங்கிக்கொண்டிருந்த என்னை, “இங்கிருந்தால் உங்களால் எழுத முடியாது, உங்கள் ஊருக்குப் போய் நிதானமாக எழுதுங்கள்” என்று பட்டுக்கோட்டைக்கு அனுப்பினார். நாவல் எழுத வேண்டி பட்டுக்கோட்டை வந்ததிலிருந்து எழுதி முடியும்வரை அவரால் இயன்ற வகையில் எல்லாம் என்னை ஊக்கப்படுத்தினார். இந்த நொடியில், மிகப் பல என் சிந்தனையில் வருகின்றன. ஆனால் வார்த்தைகளாக வருபவை மிகச் சிலவே. அவர் கொடுத்த நம்பிக்கையின் அடிப்படையில் ‘ரத்த உறவு’ நாவல் எழுதினேன். அதை அவர் மிகவும் விரும்பி நேர்த்தியாகப் பிரசுரித்தார். இதுதான் என் முதல் நாவல். டிசம்பர் 2000-இல் வெளியானது.
‘ரத்த உறவு’ என் பாலபருவத்தோடு மிகவும் நெருக்கம் கொண்டிருப்பது. இதில் வரும் தமக்கை கதாபாத்திரத்தின் துல்லிய விவரணைகள் இப்போது என் மனதில் இல்லாதுபோனாலும், அதன் ஆளுமையின் கனம் தங்கியிருக்கிறது. ஒரு மிகப் பெரிய காலக் கொடூரத்தை தன் பிஞ்சுக் கரங்களாலும் பிள்ளை உள்ளத்தாலும் தாய்மைப் பாங்காலும் அனாயாசமாகச் சமாளித்து தன் தம்பிகளைக் காப்பாற்றும் சிறுமி. அந்தச் சின்னஞ்சிறு பருவத்தில் அவளுக்கு சு+ழலும் இயற்கையும் அளித்த கனிவும் பக்குவமும், இன்றும் சுடரும் அதிசயமாக என் மனதில் நிலவுகின்றன. அந்த மகா உன்னத தியாக சித்தி அவளுக்கு எப்படிச் சாத்தியமாயிற்று? இந்த நாவலைப் படித்த சிலர் இந்தப் பாத்திரத்தை ஒருமுறை பார்க்க வேண்டும் என்று என்னிடம் கேட்டிருக்கிறார்கள்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then