உழைப்பாளிகளின் தோழன் உதயசூரியன்

ஜெ.பாலசுப்பிரமணியம்

6

டஆற்காடு மாவட்டத்தில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் தலித்துகள் பெரும்பான்மையாக வேலை செய்துவந்தனர். அதிக வேலை நேரம், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வேலை என்பவற்றால் தோல் பதனிடும் தொழிலாளர்கள் கஷ்டப்பட்டனர். இந்தச் சூழலில் J.J.தாஸ் என்று அறியப்பட்ட J.ஜேசுதாஸ் என்பவரும் தென்னாடு பத்திரிகையின் ஆசிரியர் வி.ஆதிமூலமும் இணைந்து தோல் பதனிடும் தலித் தொழிலாளர்கள் “வட ஆற்காடு ஜில்லா தோல் பதனிடும் தொழிற் சங்கம்” (பதிவு எண் 315) என்ற பெயரில் சங்கம் ஒன்றை 1939இல் தொடங்கினர். இந்தச் சங்கத்தின் குரலாக உதயசூரியன் வாரஇதழ் ஞாயிறுதோறும் வெளிவந்தது. வி.ராதாகிருஷ்ணன் என்பவரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இந்தச் சங்கம் வாணியம்பாடி, ஆம்பூர், பேர்ணாம்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் பரவியிருந்தது. 1948வரை வார இதழாகவே வெளிவந்தது. இப்பத்திரிகையின் உதவி ஆசிரியர் பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி. உதயசூரியன் வேலூர் விக்டோரியா அச்சகத்தில் அச்சிடப்பட்டது. ஜெ.ஜெ.தாஸ் குறித்த ஒரு கட்டுரையில் அழகிய பெரியவன், “இரண்டு காளை மாடுகளைப் பூட்டி நிலத்தை உழும் ஏர்உழவனின் பின்னணியில், உதித்து எழும்பும் சூரியனின் கதிர்கள் தெரிவது போன்ற சின்னத்தைத் தாங்கி வெளிவந்தது உதயசூரியன் பத்திரிகை. இதழின் முகப்பு அட்டைகளில் தொழிலாளர் நிலைகுறித்த கருத்துப் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பிற்காலத்தில் ‘உதயசூரியன்’ என்ற பெயரும் சின்னமும் திராவிடக் கட்சியால் பயன்படுத்தப்படுவதற்கு முன்னமே ஜெ.ஜெ.தாஸ் அவர்கள், அதை தலித் தொழிலாளர்களின் விடுதலைக் குறியீடாய்ப் பயன்படுத்தி இருக்கிறார்” என்று குறிப்பிடுகிறார்.

ஆறுபக்க இவ்விதழின் விலை அணா ஒன்று. வருடச் சந்தா 4 ரூபாய், ஆறுமாதச் சந்தா 2 ரூபாய், தனிப்பிரதி ஒரு அணா, வெளிநாடு ஆண்டுச் சந்தா 6 ரூபாய்.

உதயசூரியன் இதழைப் பாராட்டி, அதன் நோக்கத்தை விளக்கி அதனைப் பரவச் செய்து அனைவரும் வாசித்து எழுச்சி பெற வேண்டுமென்று எழுதப்பட்ட வாழ்த்துரை.

உழைப்பாளிகளின் தோழன் உதயசூரியன்

சீர்திருத்த கவிஞர் துரைராஜன்

உதித்தான் உறக்கமேன்! விழித்தெழுங்கள். ஒட்டிய வயிறும், ஒளி மங்கிய கண்களும், தட்டை முதுகும், தாருபோன்ற நிறங்களும் கட்டிய வேட்டி கந்தையாயிருந்தாலும் அதை கசக்கிக் கட்ட நேரமின்றி கடும் பனியில், மழைக்குளிரில், சுடும்வெயிலில், சுண்ணாம்புக் குழியில், சூடு சுரணையின்றி அடிமையில் ஆழ்ந்து அல்லலுற்று அவதியுறும் மக்களை அப்புறப்படுத்தவன்றோ அவதரித்தான் உதயசூரியன்.

காடு புகுந்து, காட்டை வெட்டி, கட்டி சுமந்து, காத வழி நடந்து, வீதியில் கூவி கூவி விற்றும் எட்டணாதான் கிடைத்தது என்ன செய்வேன்! என் பிள்ளைகள் ஏழும் இன்றைக்கு என்ன கதியடா? ஈஸ்வரா! என்று ஏங்கி நிற்கும் தோழனை பார்த்து அன்பரே! உங்கள் துன்பத்தை அகற்ற தோழமைக் கொண்டேன் துயறுராதே, துணைக்கொள்ளென நினைப்பூட்டத் தோன்றினான் உதயசூரியன்.

பண்டைத் தமிழ் பழங்குடி மக்கள் கண்டவர்கெல்லாம் தொண்டு பலபுரிந்து, ஒண்ட நிழலின்றி ஊதாரியாய் திரிந்து, ஓலைக் குடிசையில், ஒழுகும் மனையில், காலமுழுதும் ஏழ்மை என்னும் இழிநிலையில் வாழும் இனத்தவருக்கு இன்ப வாழ்க்கை நிலவ, இனி துணை புரிவான் உதயசூரியன். தோழர்களே இத்தகைய வார இதழ் எழிலுற்று விளங்க வேண்டாமா? இன எழுச்சிக்காகப் பாடுபடவேண்டாமா? செங்கதிரை செவ்வன பரப்பி, செழிக்க வேண்டுமென்றால் உங்கள் ஆதரவைக் காட்டுங்கள், அன்பரை திரட்டுங்கள். ஆங்காங்கு சந்தா தயாராயிருந்து ஆவன செய்யுங்கள். புரட்சி பொங்க, புதுமலர்ச்சி ஓங்க, கரைபுரண்ட தண்ணீர் போல் கருத்தை விருத்தியடைய காலதாமதமடையாதீர்கள். தென்குமரி வடவெங்கட திக்கெட்டும் முரசு கொட்ட தீண்டாமை, அண்டாமை, ஒண்டாமை, ஒளியாமை, பாராமை, பொறாமையெல்லாம் பறந்தோடி பாவம், புண்ணியம், மோட்சம், நரகம் முன் ஜென்மத்தில் செய்த கர்ம வினை, பின் ஜென்மத்தில் உழைக்கிறான் என்று பாசப்பு மொழி பேசும் பகற் கொள்ளைக்காரர்களை பகலவன் ஒளி வீச பச்சை மரங்களெல்லாம் பட்டுப் போவதைப் போல் பாழ்படுத்த உதித்தான் உதயசூரியன் என்பதை படித்தவர்கள் முதல் பாமரர் வரை பரவச் செய்து பத்தாண்டு என்ன? இவ்வாண்டிலேயே உணர்ச்சியோடு ஊக்கத்தோடு உற்சாகத்தோடு உதயசூரியன் பணிபுரிய ஊக்கமளியுங்கள் தாழ்த்தப்பட்டோரின் தனித்தாளென தீண்டாதவரின் தினசரியாகட்டும்.

வாழ்க உதயசூரியன்! வளரட்டும் தமிழ்க் கலை.

உதயசூரியனின் தலையங்கம்

உதயசூரியனின் ஒவ்வொரு இதழிலும் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. தலையங்கங்களில் முக்கியமான பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டுள்ளன. “சட்டமியற்றியும் ஜனங்கள் மறுப்பதேன்?” என்ற தலையங்கத்தில் கடை வைத்து வியாபாரம் செய்வதற்கு ஆதிதிராவிடர்களுக்கு அரசு லைசென்ஸ் கொடுத்தாலும் ஜாதி இந்துக்களும் முஸ்லிம்களும் கடை தருவதில்லை. துணிக் கடைகள் வைப்பதற்கு ஆதிதிராவிடர்களுக்குப் பல இடங்களில் அரசு லைசென்ஸ் கொடுத்திருக்கிறது. ஆனால், கடையின் உரிமையாளர்களாக இருக்கக்கூடிய ஜாதி இந்துக்களும் முஸ்லிம்களும் ஆதிதிராவிடர்களுக்குக் கடை வீதிகளில் கடை தர முன்வருவதில்லை என்றும் இந்துக்களும் முஸ்லிம்களும் மதரீதியாகச் சண்டை போட்டுக்கொண்டாலும், ஆதிதிராவிடர்களுக்கு இடமில்லை என்பதில் மட்டும் இருவரும் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள் என்கிறது தலையங்கம். மேலும் வடநாட்டு மார்வாடிகளுக்கு இடமுண்டு, பனியாக்களுக்கு இடமுண்டு, அரேபியருக்கு இடமுண்டு, யூதருக்கு இடமுண்டு, சைனாக்காரனுக்கு இடமுண்டு, வெள்ளையனுக்கு இடமுண்டு, ஆரியருக்கு இடமுண்டு திராவிட நாட்டில் திராவிடனுக்கு இடமில்லை என்று தனது ஆதங்கத்தைத் தெரிவிக்கிறது உதயசூரியன்.

இந்தத் தலையங்கத்தின் மேலே, செல்லம் ஸ்டோர்ஸ், வாணியம்பாடி, புதிய ரக சேலம், காஞ்சிவரம் சேலைகளும் வேஷ்டி சரிகை துண்டுகள், மில் துணிகள் கன்ட்ரோல் விலையில் கிடைக்கும் என்ற விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்து ஒரு தலையங்கத்தில் “இந்தியாவில் பத்து கோடியுள்ள முஸ்லீம்களுக்கு பாகிஸ்தான் என்ற தனி ராஜ்ஜியமும், இருபது கோடியுள்ள ஜாதி இந்துக்களுக்கு இந்துஸ்தான் ஏற்பட்டும், பத்து கோடியுள்ள ஷெட்யூல்டு வகுப்பாருக்கு ஒரு ஸ்தான் ஏற்படவில்லையே? என்ன காரணமென்பதை உணர்ந்தாயா” என்று செட்யூல்ட் வகுப்பாருக்கு தனி நாடு கோரிக்கையை எழுப்பியுள்ளது உதயசூரியன்.

உணவு, உடைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து “உணவு, உடை பிரச்சினை” என்ற தலைப்பில் எழுதப்பட்ட தலையங்கத்தில் நாட்டில் உணவு, உடை தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முதலாளிகளின் பதுக்கல்களே காரணம். ஆகவே ரேஷன் முறையை அரசு ஒழுங்குபடுத்த வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளது.

அம்பேத்கரின் அறிக்கையைத் தலையங்கப் பகுதியில் வெளியிட்டுள்ளனர். இதில் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையில் பாகிஸ்தான் பகுதியிலுள்ள தாழ்த்தப்பட்ட வகுப்பார் பல இன்னலுக்கு உள்ளாகின்றனர் என்றும் அவர்கள் கட்டாய மதமாற்றம் செய்து வைக்கப்படுகின்றனர் என்றும், ஆகவே அவர்கள் இந்தியப் பகுதிக்கு வந்துவிடும்படி அம்பேத்கரின் அறிக்கை கேட்டுக்கொள்கிறது. அம்பேத்கரின் அறிக்கைகள் வெகுஜன பத்திரிகைகளில் வெளியிடப்பட்டாலும், பெரும்பாலும் ஆங்கிலப் பத்திரிகைகளிலே வெளியிடப்பட்டன. இந்தச் சூழலில் அம்பேத்கரின் அறிக்கையைத் தமிழில் வெளியிட்டிருப்பது அம்பேத்கரிய அரசியலோடு நேரடித் தொடர்பு தமிழக தலித்துகள் கொண்டிருந்தனர் என்பதைக் காட்டுகிறது.

சாதி எனும் விஷமும் வர்க்கம் எனும் ஆதிக்கமும்

உதயசூரியன் இதழின் ஆசிரியர் ஜெ.ஜெ.தாஸ் ஒரு தொழிற்சங்கவாதி என்பதால் சாதியை எதிர்த்த அளவுக்கு வர்க்க பேதத்தையும் எதிர்த்துள்ளார். தொழிலாளர் வர்க்கத்தை ஒன்றிணைக்கும் பல அறைகூவல்களை இதழெங்கும் காணமுடிகிறது.

உழைத்து களைத்த தோழர்களே!
விழித்து எழுந்து வாருங்கள்!
பசித்து வாடும் பாட்டாளிகளே!
பாங்குடன் போருக்கு எழுந்திருங்கள்
அல்லற்படும் மக்கள் அனைவரும்
ஐக்கியமாய் நிற்போம் வாருங்கள்!
அதேபோல சாதிக்கு எதிரான முழக்கங்களும் இருக்கின்றன.
எம்குலம் தழைக்க எதர்க்குமஞ்சோம்
புரட்சி தீ மூட்டினால் பொறாமையால் அணைப்பதா?
எங்குல எழுச்சிக்கு ஏந்தலாவோம்
எம்குல உயர்வுக்கு உயிரையும் விடுவோம்
எம்குல விடுதலைக்கு தியாகம் செய்வோம்
எம்குலம் வளம்பெற வள்ளல்களாவோம்
எம்குல பகுத்தறிவுக்கு பணத்தை பயன்படுத்துவோம்
எங்குல உரிமைப் போர் வீரன் உதயசூரியனை ஊரெங்கும்
பரப்புவோம்

இதழின் செய்திகளில் சாதி, வர்க்க ஆதிக்கத்திற்கு எதிரான கருத்துகளே பிரதிபலிக்கின்றன. தொழிலாளர் வர்க்கத்தில் பெரும்பாலானவர்கள் சாதியால் ஒடுக்கப்பட்டவர்களே என்ற புரிதலும் இதழின் ஆசிரியருக்கு இருந்துள்ளது. ஆதிதிராவிடர்களை ஆதியர் என்றே இவ்விதழில் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது.

தோல் பதனிடும் தொழிலாளர்களின் பிரச்சினை மட்டுமல்லாமல் அனைத்துத் தொழிலாளர்களின் பிரச்சினைகளையும் உதயசூரியன் கவனப்படுத்திவந்தது. உதாரணமாக பீடி சுற்றும் தொழிலாளர், சுரங்கத் தொழிலாளர் போன்றவர்களின் பாடுகளையும் கோரிக்கைகளையும் கவனப்படுத்தியுள்ளது. தொழிலாளர் சம்பந்தமான சட்டங்கள், அரசின் அறிவிப்புகளையும் வெளியிட்டுவந்தனர். உதாரணமாக “தொழிற்சாலை கதவடைப்பு கூடாது” என்ற தலைப்பில் ‘தொழில் விசாரணை கோர்ட்டின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தினால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்பதால் தொழிற்சாலை நிர்வாகத்தினர் தொழிற்சாலைகளை மூடிவிடுவதாக பயமுறுத்தி வருகின்றனர். இதற்குக் காரணம் தொழில் விசாரணைக் கோர்ட்டின் தண்டனைகள் மிகவும் குறைவாக இருப்பதே காரணம். ஆகவே தொழில் விசாரணைக் கோர்ட்டின் தீர்ப்புகளை மீறுவதற்கான தண்டனையை உயர்த்தும் பொருட்டு தொழில் தகராறு சட்டத்தை திருத்தி அமைப்பதற்கு சர்க்கார் ஆலோசித்து வருகின்றனர்‘ என்ற செய்தியை வெளியிட்டுள்ளனர்.

காட்பாடி அருகில் கரசமங்கலம் கிராமத்தில் ஐந்து ஆதிதிராவிட குடும்பங்களை ஊரைவிட்டு விலக்கி வைத்தது குறித்த செய்தியில் (24-101947), “மனித வாழ்க்கை சீர்கேடாக போவதற்கு ஜாதி வேற்றுமை விஷமும், மதவெறியும், பணக்கார ஆதிக்கமுமே காரணமாகும். நாடு சுதந்திரமடைந்த பிறகு சமூகங்கள் சமத்துவமாய் வாழ்வதற்கு முயற்சிக்கும்போது, அதை தடை செய்யும் சுயநலக்காரர்களை தண்டிப்பது அறிவுள்ள பொது மக்கள், ஜனநாயக சர்க்கார் கடமையாகும். தீண்டாமையை மக்கள்மேல் திணித்து ஜாதி ஆதிக்க ஆட்சி நடத்திய செட்டி செலவாதிகள் நடத்திய அக்கிரமத்தை அடக்க தாழ்த்தப்பட்டோர்களின் சட்டசபை மெம்பர்கள் கடமையாகும். திரு. R.வீரைய்யன் காலத்தில் துரத்தியடிக்கப்பட்ட வெறியர்கள் திரும்பவும் தலைதூக்க ஆரம்பித்துவிட்டார்கள்“ என்று விரிகிறது கட்டுரை.

அடுத்து ‘நாட்டிற்கு நல்ல துரை வந்தாலும் உழைப்பாளிக்கு உண்ண உணவில்லை’ என்ற தலைப்பிலான கட்டுரையில் நாட்டிலே நல்ல துரை வந்தாலும் தோட்டிக்கு புல் சுமக்கும் வேலை போதாது என்ற பழமொழி உண்டு. அது போல் இந்நாட்டில் அத்தகைய நல்ல காலம், சுதந்திரம் வந்தாலும், நாம் அடைந்த சுதந்திரம் இந்தியாவில் ஜாதி வகுப்பு முறை இருந்து வரும்வரை ஆதிய மக்களுக்கு எத்தகைய நலனும் ஏற்படப்போவதில்லை நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்தும் ஆதிதிராவிடர்களுக்கு விடுதலை கிடைக்கவில்லை என்பதைக் குறிப்பிட்டுள்ளனர்.

‘வீரபாட்டாளிகளே விழியுங்கள்’ எனும் கட்டுரையில் மானத்தை இழந்து வாழ்வதைவிட மாண்டு போனாலும் தவறில்லை. ஆரிய வர்க்கத்திற்கு அடிகோலாக நின்று ஆர்வத்துடன் உழைக்கும் எம்குல தோழனே, உன் சமூகத்தைப் பார், உன் சமூக மக்கள் உண்ண உணவின்றி நிற்க வீடின்றி பாழடைந்த குடிசைகளில் பரிதவிப்பதைப் பார். கிராமங்களில் ஜாதி இந்துக்களால் கொடுமையில் ஆழ்த்தி நம் சமூகம் கூக்குரலிடுவதைப் பார். தீண்டாமைப் பேய் இன்னும் தலைவிரித்தாடுகிறது. நல்ல ஆடைகளை அணிந்து ஆடம்பர வாழ்க்கையில் தன் நண்பர்களுடன் சந்தோஷமாய் காலம் கழிக்கிறாய். உன் ஓய்வு நேரத்தில் உன் சமூக மக்கள் படும் இன்னல்களைப் பற்றி சிறிது யோசித்துப் பார். உன் ரத்தம் துடிக்கவில்லையா? நம் சமூகம் சீரழிந்து தாழ்வுற்றிருப்பதைக் கண்டு தொண்டாற்ற முன்வர வேண்டாமா? இனம் இனத்தைக் காக்கும், வேலி பயிரைக் காக்கும் என்பதை மனதில் வைஎன்று சமூகப் பற்றில்லாத ஆதிதிராவிடர்களை நோக்கிக் கேள்வி எழுப்புகிறது இந்தக் கட்டுரை. மேலும்மூடப்பழக்கவழக்கங்களை ஒழிக்கவும் தாழ்த்தப்பட்ட மக்கள் எல்லாத் துறைகளிலும் சமஉரிமை பெற வேண்டுமென்று நமது அண்ணல் அம்பேத்கார் செட்யூல்ட் காஸ்ட் பெடரேஷன் எனும் மாபெரும் கூட்டம் இயற்றியுள்ளார். ஆகவே என் அன்பின் மதிப்புக்குரிய எம்குல தோழனே இனியாகிலும்என் சமூகத்திற்கு சலியாது உழைத்து என் உயிரை தியாகம் செய்வேன்என்று உறுதிமொழி கொண்டு எங்களிடம் தஞ்சம் புகுவேயாகில் எங்கள் புரட்சியின் சிகரம், எங்கள் சமூகத் தந்தை அம்பேத்கார் இயற்றியுள்ள பெடரேஷனில் சேர்ந்து கொண்டு என் வாழ்த்துதலை செலுத்துவேன். வாழ்க அம்பேத்கர் என முடிகிறது இக்கட்டுரை.

இதழில் செட்யூல்ட் காஸ்ட் பெடரேஷனின் கூட்டங்கள், மாநாடு அறிவிப்புகள், தீர்மானங்கள் ஆகியவை தொடர்ச்சியாக வெளியிடப்பட்டுள்ளன. தீவிர அம்பேத்கரிய கொள்கைகளைத் தாங்கிய கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. உதாரணமாக ‘தீண்டாமைக்கு உண்ணாவிரதம் இருப்பாரா?’ எனும் தலைப்பில் காந்தியடிகளுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். இதில் தீண்டாமையை ஒழிப்பேன் எனக் கிளம்பிய காந்தியால் ஏன் இன்னும் தீண்டாமையை ஒழிக்க முடியவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இரட்டைமலை சீனிவாசன் குறித்து ‘மறைந்த மாவீரர்’ என்ற கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

இடதுசாரி சிந்தனையைப் பரப்பிய உதயசூரியன்

17.10.1947 இதழில் ‘மார்க்ஸ் யார்’ எனும் தலைப்பில் மார்க்சிய தத்துவம் குறித்த அறிமுகம் எழுதப்பட்டுள்ளது. அந்தக் கட்டுரை “ஜீவராசிகளின் பரிணாம விதிகளை டார்வின் கண்டுபிடித்தது போல, சமூக சரித்திரத்தின் இயக்க விதிகளை மார்க்ஸ் கண்டுபிடித்தார்” என்று தொடங்குகிறது.

மக்ஸிம் கார்க்கியின் ‘தாய்’ நாவல் ‘ருஷிய நாட்டுக் கவிஞர் மாக்ஸிம் கார்க்கி’ என்று தலைப்பிட்டுத் தொடராக 24.10.1947 இதழில் தொடங்கப்பட்டுள்ளது, இது 31.10.1947 இதழிலும் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டுள்ளது. தொடரை எழுதியவர் (மொழிபெயர்த்தவர்) செல்லம்மாள் என்று உள்ளது. இது புனைபெயராக இல்லாதபட்சத்தில் பெண்களும் இவ்விதழில் பங்களித்துள்ளனர் எனக் கொள்ள முடியும். தற்போது இது புகழ்பெற்ற நாவலாக இருந்தாலும் 1947இல் அதுவும் தமிழில் தொடராக வெளியிடப்பட்டது வியப்புக்குரியதாக உள்ளது. அடுத்து ‘கார்க்கி எப்படி பெரிய எழுத்தாளரானார்’ எனும் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தலித்துகள் மத்தியில் உலக இலக்கியங்களும் தத்துவங்களும் இதுபோன்ற இதழ்கள் மூலம் அறிமுகமாகியுள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

‘லெனின் கண்ட உண்மை’ என்ற கட்டுரையில், உலகில் பகுத்தறிவைப் பரவச் செய்தவன் லெனினே. புரட்சிக் கூட்டம் திரட்டி ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியை வீழ்த்தி குடியரசு ஆட்சியை நிறுவினான். நாட்டை தொழிலாளரின் பொதுவுடைமையாக்கி கல்வி, தொழில், மருத்துவம் போன்றவற்றை பெருகச் செய்தான். ஆகையால்தான் அந்நாட்டு மக்கள் லெனினை போற்றும் வாயால் நம் திலகத்தின் சுடர் ஒலி அண்ணல் அம்பேத்காரின் உண்மை மொழிகளைக் கண்டதும் மறைந்த மாவீரர் லெனின் என்ற ஜோதி உங்களிடத்தில் காண்கிறோம் என்று டாக்டர் பி.ஆர். அம்பேத்காரை வாழ்த்தினர் என்று பாபாசாகேப் அம்பேத்கரை லெனினுக்கு இணையாக வைத்து வாழ்த்துகின்றனர்.

திராவிடன், சாட்டை பத்திரிகைகளுக்கு மறுப்பு

திராவிடன் பத்திரிகையில் பாபாசாகேப் அம்பேத்கர் குறித்து மதிப்பு குறைவாக எழுதியமைக்கு மறுப்புக் கட்டுரையை கோலார் தங்கவயலைச் சேர்ந்த எம்.ஜி.கம்ஸன் உரிகம் என்பவர் எழுதியுள்ளார்.

கூத்தரசனென்றுலகும் திராவிடன் பத்திரிகை ஆசிரியரே! வணக்கம்,

 நீங்கள் 7-12-47 திராவிடனில் டாக்டர் பி.ஆர். அம்பேத்காரை குறித்து உங்கள் வாயில் வந்தவாறு, இல்லை! இல்லை! பேனாவை உங்கள் மனம் போக்கிற்கொப்ப தாராளமாய் ஓடவிட்டிருக்கிறீர்கள். அதைக் குறித்து தங்களை வைய வேண்டுமென்றல்ல, தேசியப் பத்திரிகைகளின் பித்தலாட்டங்களை நம்ப வேண்டாமென்று கூறி வந்த தாங்கள் அதையே முழுமனதோடு நம்பி இப்படி ஒரு அறிஞரை அவமானப்படுத்தியிருப்பதைக் குறித்து எம்போன்ற சிற்றறிவாளர்கள் வியக்காமல் இருக்க முடியுமா? ஆதிதிராவிட மக்களாகிய நாங்கள் திராவிடராகிய உங்களுக்கு மூத்த சகோதரர்கள் என்பதை அறிவாளிகளே ஒப்புக்கொள்கிறார்கள், விடுதலையே விபரம் கூறிவிட்டது. அந்தக் காரணத்தைக் கொண்டுதான் நாங்கள் உங்களின் நலனைக் கருதி உங்களுடைய பத்திரிகைகள் அத்தனையும் வாங்கிப் படிப்பதுமின்றி உங்களின் கொள்கைகளையும் ஆதரித்தும் வருகிறோம். ஆனால் நீங்கள் எங்களின் சார்பிலே வரும் ஒன்று இரண்டு பத்திரிகைகளை வாங்கி வாசித்து எங்களை ஆதரிக்கிறீர்களோ இல்லையோ திட்டமாய் கூற முடியாது. ஆனால் தன்னைப் பொறுத்த வரையில் கூறுகிறேன் எங்கள் பத்திரிகைகளை வாங்கிப் படிப்பதில்லை என்று, அப்படி வாங்கி உன் ஆபீஸ் டேபிலுக்கடியில் போட்டு விட்டால் கூட ஆபீஸ் பியூனாவது சங்கதிகளை படித்து அம்பேத்காரைப் பற்றி என்ன எழுதியிருக்கிறது என்று கூறியிருப்பான். அப்படி இல்லாத காரணத்தால்தான் நீர் உலகம் போற்றும் உத்தமர் டாக்டர் பி.ஆர். அம்பேத்காரை வாய்க்கூசாது வரைந்திருக்கின்றீர். டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் பதவி வேட்டைக்காரர் என்று எழுதினாயே அவருக்கு பணம் சம்பாதிக்க வேர் மார்க்கம் இல்லையா? சட்டப் புத்தகங்களை வரைந்து தள்ளினால் வாங்குகிறேன் என்று வலிய வருபவர்கள் எத்தனை லட்சம் பேர். அறிவில்லாதவரா? கட்சியைப் பலப்படுத்துக் கங்கணம் கட்டுபவரா? அல்லது நாட்டை ஆள வேண்டும் என்று நர்த்தனம் செய்பவரா? அகில இந்திய தாழ்த்தப்பட்ட சம்மேளனத்தைக் கலந்து யோசித்தப் பிறகும் சம்மேளனம் அனுமதித்து அனுப்பியதின் பேரில்தான் அவர் அரசியல் நிர்ணய சபையில் சட்ட மந்திரியாக அனுமதிக்கப்பட்டார். ஒரு ஆர்.கே. சண்முகம் செட்டியாரைப் போல் திராவிடக் கட்சியினின்றி நீங்கி பணத்திற்காகவும் பதவிக்காகவும் நேரு சர்க்காரையும் காங்கிரசையும் புகழ்ந்து பஜனை செய்து கொண்டிருக்கவில்லை என்பதை உமக்கு ஞாபகம் மூட்டுகின்றேன், தெரியாவிட்டால் தென்னாட்டுத் திலகம் பெரியார் .வே ராமசாமியை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

அடுத்து சாட்டை என்ற இதழில் கணபதி என்பவர் பாபாசாகேப் அம்பேத்கர் குறித்து அவதூறாக எழுதிய கட்டுரைக்கும் மறுப்பு எழுதப்பட்டுள்ளது.

பெற்ற மாதாவைப் போல் மனைவி வேண்டுமென்று மண்டை கிறுக்கு பிடித்து, புராணங்கள் புளுகுவது போல் சிவனாரின் செல்வப் பிள்ளையாக சிவலோகத்தில் சிந்தனையற்று தொந்தி பெருத்து பெரியார் .வே.ரா. கூறுவது போல் உடல் கூறு விஞ்ஞானிகளாகிய இந்துமத தாசர்களால் பாதி மனிதனாகவும், பாதி யானையாகவும் உருவாக்கப்பட்டு, மந்திபோல் குந்திக்கொண்டு ஹரோஹரா என்ற வாய்ப்பாட்டை அணுவளவு தவறாமல் உருப்போட்டு வந்த தொப்பைக் கணபதியாரின் வழிவந்த சாட்டை பத்திரிகை ஆசிரியரான கணபதியாரே உமக்கு ஒரு சாட்டை.

அறிவை அகல விரித்தாடுவதே அறிவாளிக்கழகு. அதை விடுத்து குறுகிய மனப்பான்மையில் தாங்கள் கும்மாளமடிப்பதை யார்தான் கண்டு வியக்காமலிருக்க முடியும். பாரத மாதாவின் முதல் புத்திரரான காந்தியார், மக்களையெல்லாம் இந்துக்கள் என்று மழுப்பி வருகையிலே அதே இந்துக்களாகிய பத்து கோடி தாழ்த்தப்பட்ட மக்களை பஞ்சமர் என்று பாதகம் செய்வது எதனால்? இந்து என்ற சொல் எல்லோருக்கும் என்றால் மேல் கீழ் என்ற ஜாதி வேற்றுமை ஏன்? ஒரு இந்துவை தொட்டால் தீட்டு என்று ஒப்பாரி வைக்கும் போது இந்து என்ற மதத்தை எந்த விதத்தில் ஏற்று பஜனை செய்வது? நாங்கள்தான் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், இந்து மதத்தையே தங்கள் தலை மேல் சுமந்து கொண்டு இந்து ஆட்சியில் தனக்கு ஏதாவது ஒரு சலுகை கிட்டுமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த கணம் ஜே.சிவசண்முகம் பிள்ளை, வி. முனுசாமிப் பிள்ளை போன்ற அனேக தாழ்த்தப்பட்ட தோழர்களுக்கு எஜமான் பதவியாவது கிடைத்ததா? மஞ்சள் பெட்டியில் சேர்ந்த முக்கால் பங்கு ஓட்டுகளை சேரிவாழ் தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்து பெற்றுக் கொண்டு மன்னர் ஆட்சியை ஒழித்து அந்த இந்துக்களின் கரங்கள் இன்று அதே தாழ்த்தப்பட்ட மக்களை ஒதுக்கி வைத்து இந்து மத தேசியத்தின் பெயரால் சம்பாதித்த பிளாக் மார்க்கெட் பணத்தை தங்கள் இரும்பு பெட்டியிலே இறுக்கிப்பூட்டும் போது எப்படி நாங்கள் காங்கிரஸில் சேர்ந்து இந்து மதத்தை கட்டி தழுவுவது?

மேற்கூறிய இழிவுகளையெல்லாம் ஒழிக்க மகாத்மாவும் காங்கிரசும் பாடுபடுகிறார்கள் என்று பாடி அழைக்கிறாயே அரைகுறைவான ஆலய பிரவேசமும், ஒன்றும் பாதியுமான ஓட்டல் நுழைவும் செய்துவிட்டால் மட்டும் போதுமா? ஆண்டவன் பெயரால் ஆலயத்தில் நடக்கும் அட்டகாசங்களும் ஓட்டல்களில் ஒன்றுக்கு ஒன்பதாம் காசு பறிக்கும் கண்றாவித் தனத்தையும் இந்து மதமான காங்கிரஸ் கண்டித்து இருக்கிறதா? இந்துவாகிய மனுநீதியில் தாழ்ந்தவனை உயர்ந்தவனாயினும் கேவலமாய் நடத்தும் படியும் மீறினால் மரண அவஸ்தை கொடுக்கும்படியும் எழுதி இருக்கும் போது எப்படி நாங்கள் அந்த இந்து மதமும் இந்து லாவும் நிறைந்திருக்கும் காங்கிரஸில் சேர்வது,

வர்ணாசிரமம் என்ற சாக்கடையில் உற்பத்தியான இந்து என்ற கொசுக்களால் பலமுறை கடிக்கப்பட்டு வியாதியடைந்து மரண அவஸ்தைப்பட்டு, கடைசியாக பகுத்தறிவு என்ற கத்தியினால் பாதுகாக்கப்பட்ட எம்குல அண்ணல் அறிவின் சுடர் அப்பன் டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் அவர்கள் எம்குல மக்களை இந்து மத கொசுக்களால் கடிக்கப்பட்ட அந்த காங்கிரஸ் என்ற கூட்டில் நுழைய வேண்டாம் என்று எச்சரித்ததால், ஊட்டுங்கையை கடிக்கிறார்கள் என்று ஊளையிடுகிறாயே, ஊட்டுகிறேன் என்று கல்லையும் மண்ணையும் வாரிக் கொண்டு வந்து வாயில் நுழைத்தால் அறிவாளிகள் கண்டிக்காமல் இருக்க முடியுமா?

தாழ்த்தப்பட்ட மக்களை மாக்களாகக் கருதும் இந்து மதத்தை விட்டு இஸ்லாத்தை தழுவினாலொழிய அல்லது வேறு மதத்தை தழுவினாலொழிய எங்கள் இழிவு நீங்க மார்க்கம் இல்லை என்று எம்குல அண்ணல் இன்றுவரையில்தான் கூப்பாடுபோடுகிறார். ஆனால் வலுக்கட்டாயமாக இன்னொருவன் தன்னுடைய மதத்தை தழுவும்படி வற்புறுத்தினால் இந்து மதமானாலும் சரி வேறு எந்த மதமானாலும் சரி எதிர்த்தே ஆக வேண்டும் என்று எடுத்தியம்பினால் உம்மைப் போன்ற முக்கண்ணன் மைந்தர்களுக்கும், இந்து மத தாசர்களுக்கும் வேம்பாகத்தானிருக்கலாம்.

தற்கால அரசியலில் அவருக்குப் பெருத்த பதவி கிடைத்திருக்கிறது என்று அளக்கிறாயே? காங்கிரஸ் இந்து ஆட்சியில் சட்டம் தெரிந்த சநாதனிகளில்லாமையாலும் அம்பேத்கர் தனித்திருந்தால் தாழ்த்தப்பட்ட சமூகமே போருக்குப் புறப்பட்டு விடும் என்றும் பயந்து காங்கிரஸானது எம்குல அண்ணலை பணிந்து வலுக்கட்டாயமாக பதவிக்கழைத்துக் கொண்டது. இப்போதாவது முந்தி, முந்தி விநாயகா என்றழைக்கும் கணபதியாரே உம்மைப் போன்ற பத்தாம் பசலிகளுக்கு எச்சரிக்கின்றேன், தன்னலம்கருதா தாழ்த்தப்பட்டோரின் தலைவர்களையும் சமூகத்தையும் புறங்கூறி பேசுவதில் வழி தவறி மாட்டிக்கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கின்றேன்.

எம்.ஜி. கம்ஸன்உரிகம், கே.ஜி.எப்.

l[email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger