மூக் நாயக் – குரலற்றவர்களின் தலைவன் – பகுதி 2

- கச்சாமி

 

நான் ஏன் இப்போது வெட்கப்பட வேண்டும்?
எந்தத் தடுமாற்றமுமில்லாமல் என் குரலைப் பயன்படுத்தினேன்
குரலற்றவரின் துயரங்களை யாரும் அறிய இயலாது
பேசுவதற்குத் தயங்கினால் முன்னேற்றம் சாத்தியமாகாது.
முதல் வருடம், பம்பாய், சனிக்கிழமை, பிப்ரவரி 28, 1920 (இதழ் எண்.3)

 

சுயராஜ்ஜியம், சுயராஜ்ஜியவாதிகள் மற்றும் சுதேசிப் பொருளாதாரம் 

இது சுயராஜ்ஜியம் இல்லை. இது நம் மீதான அவர்களின் ஆட்சி. கடந்த இதழில், இந்திய தேசிய காங்கிரஸ் என்று அழைக்கப்படுகின்ற தேசியக் கட்சியின் வளரும் அதிகாரப் பசி குறித்த விசயங்களை நாம் கணக்கிலெடுத்துக்கொண்டோம். அடிப்படையில், அக்கட்சி பிரிட்டிஷ் அரசாங்கத்தை நல்ல அரசாங்கமாக மாற்றுவதற்காக உருவானது. மாறிவரும் காலத்திற்கேற்ப அது தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. நல்லாட்சிக்குப் பதிலாகச் சுயாட்சியைக் கோரியது. தற்போது படிப்படியான சுயாட்சியைப் பெறுவதிலும் அது வெற்றி பெற்றுவிட்டது. அதைப் பெற்றது உண்மையிலேயே பாராட்டத்தக்கது. ஆனாலும்கூட, அதே அளவில் மக்களுக்குப் பெரும்பாலும் அதன் பயன் என்னவென்பதை ஆராய்வதும் தேவையானது. தான் கொடுத்த பரிசால் அடுத்தவர்கள் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல், தானே தொந்தரவுகளுக்கு ஆளாகாமல் எவ்வாறு பிரம்மாசுரனிடமிருந்து (பஸ்மாசுரர்) தப்பிக்க முடியவில்லையென்ற கடவுள் சிவனின் இக்கட்டான நிலையை அறிந்தவர்களுக்குப் பரிசின் தீய விளைவுகள் குறித்து விளக்குவது தேவையற்றது. ரகசியத்தைப் புரிந்துகொண்டவர்கள் எவரோ அவர்கள் சுயராஜ்ஜியத்தின் பின்னால் உள்ள நோக்கத்தை விளக்க வேண்டும். அது இல்லாமல், சுயராஜ்ஜியம் என்னும் பரிசு நன்மையானதா அல்லது தீமையானதா என்பதை முடிவு செய்வது கடினமாகும். இதை முடிவு செய்வதற்குப் பிரிட்டிஷ் ஆட்சி ஏன் தீமையானது என்பதை ஒருவர் முடிவு செய்ய வேண்டும். ஒருமுறை இது புரிந்துவிட்டால், சுயராஜ்ஜியத்தின் பின்னால் உள்ள நோக்கத்தை அறிந்துகொள்வது என்பது எளிதானதாகும். இந்தச் சிக்கலுக்கு முக்கியத்துவம் அளித்துச் சுருக்கமாக, இங்கு அது விளக்கப்பட்டுள்ளது.

இதுவரை, இந்தியாவில் பிரிட்டிஷாரால் அறிமுகப்படுத்தப்பட்டச் சீர்திருத்தங்கள் எல்லாம் பொருளற்றவை என்ற கருத்துகொண்டோர், விடாப்பிடியான சில பிடிவாதக்காரர்களைத் தவிர – இந்திய தேசியக் காங்கிரசில் கூட – எவருமில்லை என்பது நல்ல சகுணம். இந்தச் சீர்திருத்தங்களுக்காக, இந்தத் தேசிய அமைப்பு (காங்கிரஸ்) நன்றியுள்ளதாக இருக்கிறதா என்பது வேறு விசயம். ஆனால், இந்த அமைப்பு (காங்கிரஸ்) ஏன் இதுவரை வழங்கப்பட்ட சீர்திருத்தங்களின் மீது திருப்தியடையவில்லை என்பதை அதன் வருடாந்திர மாநாடுகளில் பிரிட்டிஷ் நிர்வாகத்திலுள்ள போதாமைகளைச் சுட்டிக்காட்டி இயற்றப்படும் தீர்மானங்களில் தெரிந்துகொள்ள முடியும். இந்திய மக்களிடையே  பெருகிவரும் வறுமையின் மீது பிரிட்டிஷ் நிர்வாகத்தின் அலட்சியப் போக்கே அதன் போதாமைகள் ஆகும். இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் அரசு நிர்வாகத்துடன் இந்திய தேசியக் காங்கிரசு ஏன் திருப்தியடையவில்லை என்பதற்கு இது முக்கியக் காரணமாகும். வளம் பெறுதல் உண்மையான முன்னேற்றம் என்பது சுயராஜ்ஜியவாதிகள் கருத்தாகும். குடிமக்கள் உள்ளத்திலும் ஒழுக்க நெறியிலும் மேம்படுதல் உண்மையான முன்னேற்றம் என்பது நம் கருத்தாகும். சுயராஜ்ஜியத்திற்கு மாற்று இல்லையென்றால், சுயராஜ்ஜியவாதிகளைக் கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என்று நாம் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஆனால், சுயராஜ்ஜியவாதிகளிடம் அவ்வளவு அவசரப்பட்டு நாம் அதைச் சொல்லப்போவதில்லை. ஏனென்றால், அவ்வாறு செய்வதற்கு இப்போதைய நிலைமை நமக்கு இடம் கொடுக்கவில்லை. தம்முடைய பக்தர்கள் எதையெல்லாம் விரும்புகிறார்களோ, கடவுள் சக்ரபாணி விஷ்ணு அவற்றை நிறைவேற்றுவார் என்பது துறவிகள் சொல்வதாகும். ஆனால், இந்திய விவகாரங்களைப் பொறுத்தவரைப் பல விசயங்கள் கடவுளின் கைகளில் இல்லை. அவை இடைத் தரகர்களின் கைகளில் உள்ளன. ஆதலால், இந்தக் கணத்தில் அதைப் பெற்றால் சுயராஜ்ஜியத்தின் உண்மையான விளைவுகள் என்னவாக இருக்க முடியும் என்பதே கேள்வி. அது ஆராயப்பட வேண்டும்.

இந்திய தேசம் மற்ற தேசங்களுடன் ஒப்பிடுகையில் ஏழ்மையானது என்பது உண்மை. அதில் எந்தச் சந்தேகமுமில்லை. தனிநபர் ஆண்டு வருமான விகிதத்தைக் கணக்கிலெடுக்கும் போது இந்தியர்களின் பொருளாதார நிலைமை உண்மையில் பரிதாபகரமானது. பெல்ஜியம், டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்வீடன், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் போருக்கு முன்பான (1914) தனிநபர் ஆண்டு வருமானம் முறையே 18, 32, 27, 31, 12, 22, 16, 19, 39 மற்றும் 40 பவுண்டுகள். ஆனால், இந்தியா போன்ற மக்கள் பெருக்கமுள்ள நாட்டில் தனிநபர் ஆண்டு வருமானம் இரண்டு பவுண்டுகள் மாத்திரமே ஆகும். இந்தக் காரணங்களின் அடிப்படையில் பார்த்தால், இந்தியர்களின் பொருளாதார நிலைமை மிகவும் பரிதாபகரமானது என்று சொல்லாமலேயே விளங்கும். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி ஏற்படுவதற்கு முன்பு, மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியர்களின் பொருளாதார வாழ்க்கைத்தரம் மிகவும் அதிகம். ஆனால், இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் தீங்கான வணிகக் கொள்கையால், உலக நாடுகளின் நடுவில் மிகவும் கீழ்நிலையில் வைத்து இந்தியா கணக்கிடப்படுகிறது. இதுதான் இந்தியாவிலுள்ள ஒரு தரப்பு மக்களின் பார்வையாகும். இந்தப் பார்வையை மறுப்பதில் எந்தப் பயனுமில்லை. இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கான அரசியல் தீர்வு குறித்து விவாதிப்பதற்கு இது இடமுமல்ல. சுயராஜ்ஜியவாதிகளின் சுயாட்சியில் சுயராஜ்ஜிய வழியில் வறுமையை ஒழிப்பதின் சாதக பாதகங்களை இங்கு விவாதிப்பது நம் நோக்கமாகும்.

அவர்களின் கருத்துப்படி, இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட தங்குதடையற்ற வர்த்தகம் என்னும் இந்தக் கொள்கையே இந்தியாவின் வறுமைக்கு மூலக் காரணமாகும். வர்த்தகத்தின் மீதான கட்டுப்பாடுகள் இந்தியாவில் வறுமையை ஒழிப்பதற்கான முக்கியத் தீர்வு என்ற கருத்துக்கு உண்மையில் மிகக் குறைந்த எதிர்ப்பே இருக்க வேண்டும். என்றாலும், இந்தத் தீர்வு பயனுள்ளதா என்பதைப் பொருளாதாரக் கோட்பாடுகளின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்பட வேண்டுமேயொழிய வேறு எதன் அடிப்படையிலும் கூடாது. எந்தப் பொருட்கள் குறைந்த செலவில் உற்பத்திச் செய்யப்படக் கூடியதோ அப்பொருட்களை மட்டுமே ஒவ்வொரு தேசமும் உற்பத்திச் செய்ய வேண்டும். குறைந்த உற்பத்திச் செலவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை விற்று, குறைந்த செலவில் உற்பத்தி செய்யப்பட முடியாத அத்தேசத்திற்குத் தேவையுள்ள மற்றப் பொருட்களை பிற தேசங்களிலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே ஏற்றுக்கொண்ட பொருளதாரக் கோட்பாடாகும். தேசங்களுக்கு இடையிலான வர்த்தகம் இந்த நடைமுறை விதியின் அடிப்படையில் மட்டுமே இயங்கும். ஒரு நாட்டால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் இன்னொரு நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. காரணம், ஏற்றுமதி செய்த அந்நாட்டில் பொருட்களின் உற்பத்திச் செலவு குறைவு என்பதாலேயே ஆகும். அதைப் போலவே, ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் இன்னொரு நாட்டால் இறக்குமதி செய்யப்படுகிறது. காரணம், இறக்குமதி செய்யும் நாடு அப்பொருட்களைக் குறைந்த செலவில் உற்பத்திச் செய்ய முடியாது. ஆதலால், குறைந்த செலவில் உற்பத்தி செய்யப்படக் கூடிய அப்பொருட்களை உற்பத்தி செய்வது மற்றும் குறைந்த உற்பத்திச் செலவில் உற்பத்தி செய்யப்பட முடியாத பொருட்களை அவ்வாறு செய்ய முடிந்த மற்றவர்களிடமிருந்து வாங்குவது தங்குதடையற்ற வர்த்தகம் என்பதைப் பொருளியலாளர்கள் ஏற்றுக்கொள்வார்கள். இதன் அடிப்படையில், குறைந்த செலவில் உற்பத்தி செய்யப்பட முடியாத பொருட்களையும்கூடக் குறைந்த செலவில் உற்பத்தி செய்யக் கூடிய மற்றவர்களிடமிருந்து வாங்குவதற்குப் பதிலாக உள்நாட்டிலேயே உற்பத்திச் செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தினால் நாம் நட்டம் அடைவது உறுதி. ஆனால், இந்தியாவிலுள்ள சுயராஜ்ஜியவாதிகளுக்கு இது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. அவர்களின் கருத்துப்படி, தன் வளத்தைப் பெருக்கிக்- கொள்வதற்கு மற்ற நாடுகளிடமிருந்து தற்போது இறக்குமதி செய்யப்படும் பொருட்களை இந்தியா உற்பத்தி செய்ய வேண்டும். அப்பொருட்களை உற்பத்தி செய்வதற்கான ஒரே வழியாக மீண்டும் மீண்டும் அவர்கள் சொல்வது இறக்குமதியைக் கட்டுப்படுத்துவது அல்லது இறக்குமதிக்கு வரி விதிப்பது என்பதுதான். இறக்குமதியைக் கட்டுப்படுத்துவது அல்லது இறக்குமதிக்கு வரி விதிப்பதன் மூலம் இங்கு நாம் பற்றாக்குறையை உருவாக்கலாம். உள்நாட்டிலேயே அப்பொருட்களை உற்பத்தி செய்வதால் அப்பற்றாக்குறையைச் சரிப்படுத்தலாம். இந்த நடைமுறை இந்தியத் தொழிற்சாலைகள் எளிதாக வளர்வதற்கும் மற்றும் நாட்டின் வளம் பெருகுவதற்கும் உதவி செய்யும்.

இந்தப் பார்வையை முன்வைக்கும் இந்தியப் பொருளியலாளர்கள் அநேகமாக, கட்டுப்படுத்தப்பட்ட வணிக அமைப்பின் உண்மைத்தன்மை குறித்துப் போதுமான அளவு அறியவில்லை. எனவே, கட்டுப்படுத்தப்பட்ட வணிக அமைப்புக்கு இங்கு விளக்கம் தேவைப்படுகிறது. குறைந்த விலையில் கிடைக்கும்போது வெளிநாட்டுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படும். அவ்வகையான பொருட்கள் உள்நாட்டில் உற்பத்திச் செய்யப்படுவதில்லை. காரணம், அவை மிகவும் விலை உயர்ந்தவை. ஆகையால், அவை வெளிநாட்டுப் பொருட்களுடன் போட்டிக்கு நிற்க முடியாது. அவற்றைப்  போட்டிக்கு நிற்க வைக்க, வெளிநாட்டுப் பொருட்களைக் கட்டுப்படுத்துவது அல்லது அவற்றுக்கு வரி விதிப்பது என்னும் மந்திரம் (சூத்திரம்) முன்வைக்கப்படுகிறது. வெளிநாட்டுப் பொருட்கள் உள்ளே வருவது தடுக்கப்பட்டால், உள்நாட்டுப் பொருட்களை மக்கள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். இது குறித்து யார் சிந்திப்பது? இறக்குமதி பொருட்களுக்குப் பதிலாக உள்நாட்டுப் பொருட்களைப் பயன்படுத்துவதால் இங்குள்ள வணிகமும் தொழிற்சாலைகளும் நிலைப்படுத்தப்படும். ஆனால், அது தேசத்திற்கு நன்மை பயக்காது. இது இங்குள்ள முதலாளித்துவவாதிகள் வளர்வதற்கு மட்டுமே உதவிசெய்யும். ஏனென்றால், திறந்த பொருளாதாரத்தில் குறைவான விலைக்குக் கிடைக்கும் பொருட்கள் கட்டுப்படுத்தப்பட்ட அமைப்பில் விலை உயர்வடையும். இந்த அமைப்பின்கீழ் ஏழை மக்கள்தான் உண்மையாகப் பாதிக்கப்படுவோர். ஆகையால், ஏழை மக்கள் ‘சுதேசி’  (உள்நாட்டுப் பொருட்கள்) என்னும் இனிய வார்த்தையோடு எப்போதும் நிறைவோடு இருப்பார்கள் என்பது சாத்தியமில்லை. தீண்டத்தகாதோரே பெரும்பான்மையாக ஏழைகளாக இருப்பதால், கட்டுப்படுத்தப்பட்ட வணிக அமைப்பின்கீழ் உண்மையாகப் பாதிக்கப்படுவோர் அவர்களே. இந்த அமைப்பின்கீழ் மற்றவர்களின் நலன்களுக்காக அவர்கள் சுரண்டப்படுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்த அமைப்புமுறை தேசத்திற்கு நன்மையானது என்ற தங்களின் பிரச்சாரத்தின் மூலம் தீண்டத்தகாதோரை ஏமாற்றலாம் என்று சுயராஜ்ஜியவாதிகள் நினைத்தால், அவர்கள் தவறு செய்கிறார்கள். சுயராஜ்ஜியவாதிகளின் தீர்வு தங்களின் வறுமையை முடிவு கட்டுமென்று நம்பி சுயாட்சிக் கோரும் அளவுக்குத் தீண்டத்தகாதோர் அவ்வளவு அப்பாவிகள் இல்லை. சுதேசி வழியிலான வளம் என்பது ஏழைகளைச் சிக்க வைக்கும் விளையாட்டு என்று அவர்கள் சந்தேகிக்கிறார்கள் என்பதே காரணமாகும்.

சுயராஜ்ஜியவாதிகளின் பொருளாதாரச் சிந்தனையின் விளைவு என்னவாக இருக்கும் என்பது இப்போதுவரைச் சிந்திக்கப்படவில்லை. இப்போது நாம் அவர்களின் சிந்தனையின் மற்ற அம்சங்களினுடைய விளைவுகள் குறித்துச் சிந்திக்க வேண்டும்.

சுயராஜ்ஜியத்தில் தீண்டத்தகாதாருக்கும் பங்கு வேண்டும்!

இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் நிர்வாகத்தின் குறைபாடுகளை விளக்கும்போது, எங்கெல்லாம் ஒரு வர்க்கம் அல்லது ஒரு தனிமனிதர் மற்ற வர்க்கங்களின் அல்லது மற்ற தனிமனிதர்களின் மீது தம்முடைய அல்லது தன்னுடைய மேலாதிக்கத்தை நிறுவுகிறாரோ, அங்கு அவர்கள் அடைந்த நிலைமைகள் இருவருக்கும் தீங்கானதாக அமையும் என்னும் உதாரணத்தை சுயராஜ்ஜியவாதிகள் சுட்டிக்காட்டுவர். எவர் மீது அத்தகைய மேலாதிக்கம் நிறுவப்பட்டதோ அம்மக்களுக்கிடையில் அத்தகைய மேலாதிக்கத்தை நிறுவியவர்கள் நடைமுறையில் ராஜே, லோக்பால், லோக்நியந்தே, பிரஜாபதி, பூதேவம், ஈஷ்வரானுஷ், ஈஷ்வரவதார், கல்காரன், நியாயமூர்த்தி, சத்குணாணிதன், கிருபசாகர் முதலான பெயர்களால் அறியப்படுகின்றனர். இதற்கெதிராக, யார் அத்தகைய மேலாதிக்கத்திற்குக் கீழ் வந்தார்களோ அவர்கள், ஹினா (வீழ்ந்தவர்), படிட், அத்நியதரக் (பணிவானவர்), சேவக் (ஊழியர்), கின்கர் முதலான பெயர்களால் தங்களைத் தாங்களே அழைத்துக்கொள்ளப் பழக்கப்பட்டனர். தம்முடைய சார்பு நிலையால், அவர்களின் ஆணைகளுக்குப் பணிந்து போவதே தம்முடைய மதக்கடமை என்று இந்த மக்கள் நம்புகின்றனர். இந்த வழியில் தலைமுறை தலைமுறையாக ஆட்சியாளர்களை வணங்கும் மரபின் விதைகள் ஆளப்படுபவர்களின் மனதில் மிக ஆழமாக வேரூன்றிவிடும். அது பொதுவாக, ஆட்சியாளர்கள் வழிதவறி விலகிச் செல்லும்போது அவர்களை நிராகரிப்பதற்கு அல்லது கண்டிப்பதற்கு அவ்வளவு எளிதாக ஆளப்படுபவர்களைத் தயார் செய்யாது. அதைப் போலவே, மற்றவர்களின் மீது மேலாதிக்கத்தைக்கொண்டவர்கள் மக்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்கின்றனர். அவர்கள் பாராட்டுக்குரியவர்கள் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்கின்றனர். அவர்கள் பாராட்டுக்கான தகுதியில்லாதவர்கள் என்று உணர்ந்து மக்கள் அவர்களைப் பாராட்டுவதை நிறுத்திய பிறகும், இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ளவே மறுக்கும் அளவுக்கு வலிமையாக இந்தச் சமூகப் போக்குத் தலைமுறை தலைமுறையாக வளர்ந்துகொண்டே போகிறது. அவர்கள் என்ன செய்வார்களென்றால், சமூகத்தில் தங்களின் மரபான இடத்தை அங்கீகரிப்பதற்காக மக்களைக் கட்டாயப்படுத்தக்கூட முயற்சிப்பார்கள். இந்தச் சூழலில், தங்களின் சுயமரியாதை உணர்ச்சியால் உயர் வர்க்கத்தினர் பிடிவாதக்காரர்களாக வளர்வார்கள். அதேவேளையில், கீழ் வர்க்கத்தினருக்குள் ஏறக்குறைய சுயமரியாதை உணர்ச்சியே இல்லாத நிலை வந்துவிடும். ஆகையால், மேல் வர்க்கத்தினர் கீழ் வர்க்கத்தினருக்கு ஆணைகள் பிறப்பிப்பது தமது பொறுப்பு என்று கருதுவார்கள். மேல் வர்க்க மக்கள் பிறப்பிக்கும் ஆணைகளுக்குப் பணிந்து நடப்பது தமது பொறுப்பு என்று கீழ் வர்க்கத்தினர் கருதுவார்கள். இந்த நிலைமையில், உயர் வர்க்கத்தினர் மனதளவில் ஆதிக்க எண்ணத்தை வளர்த்துக்கொள்கின்றனர். தங்களுக்குள்ளே முயற்சி செய்யும் மனநிலையில்லாததால் மனதளவில் கீழ் வர்க்கத்தினர் கீழ்படிபவர்களாக வளர்வார்கள். எப்போதெல்லாம் மனித சமுதாயம் மேல், கீழ் என்று பிரிக்கப்பட்டதோ, கீழ் வர்க்கத்தினரை அடிமைகளாக நடத்துவதே மேல் வர்க்கத்தினரின் சமூக உளவியலாக இருப்பதால், அங்குத் தனிமனித முன்னேற்றத்திற்குரிய எந்தச் சாத்தியத்தையும் கீழ் வர்க்கத்தினர் காண முடியாது.

இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவுகளைச் சுட்டிக்காட்டும்போது மறைந்த திரு.கோகலே தன்னுடைய கருத்தைத் தெளிவுபடுத்தியுள்ளார். அவரது கருத்துப்படி, “இந்தியா, அந்நிய ஆட்சியால் தான் சந்திக்கும் மன்னிக்க முடியாத பொருளாதார நட்டங்களைப் பொறுத்துக்கொள்ளலாம். ஆனால், அந்நிய ஆட்சியால் இந்தியாவில் நடந்துவரும் ஒழுக்கச் சீரழிவு சிறிதளவும் மன்னிக்க முடியாதது. அந்நிய ஆதிக்கத்தின் காரணத்தால் இந்தியர்கள் தங்களின் சுயமரியாதை உணர்ச்சியை வேகமாக இழந்து வருகின்றனர். மேலும், தாங்கள் தாழ்ந்தவர்கள் என்று சொல்ல வைக்கும் சூழலில் வாழ்கின்றனர். அவ்வாறு உருவாக்கப்பட்ட சூழலில், அவர்களுக்கிடையே திறமையுள்ள மனிதர்கள்கூட இந்தத் தாழ்ந்த நிலையை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த நிலையில், இந்தியர்களிடையே முழுமையான தனிமனித முன்னேற்றம் என்பது சாத்தியமில்லை. சுயராஜ்ஜியத்தின் கீழ் மக்கள் உணரும் சுயாட்சியின் வியப்புமிக்க வலிமையை உணர அவர்களுக்கு வாய்ப்பில்லை. நிர்வாகத்தில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் காரணத்தால் இந்தியர்கள் ஒடுக்கப்படுகின்றனர் என்னும் உண்மையை ஏற்றுக்கொள்ளக் கடினமாக இருக்கும். இந்த ஒடுக்குமுறைக்கு முடிவுகட்டவும் சுயமரியாதை உணர்வை அவர்களிடையே உண்டாக்கவும் அவர்களுக்குச் சுயராஜ்ஜியம் தேவைப்படுகிறது.”

மேலே விளக்கப்பட்டுள்ள சுயராஜ்ஜியத்தின் இரண்டு காரணங்களில் எங்கள் கருத்துப்படி இரண்டாவது காரணம் முக்கியத்துவம் வாய்ந்தது. தனிமனித முன்னேற்றத்திற்கான தீர்வாக சுயராஜ்ஜியம் வழங்கப்பட்டால் எங்களுக்கு ஆட்சேபனை ஏதுமில்லை. பிரிட்டிஷ்  ஆட்சிக்கெதிரான இந்த எதிர்ப்பு பார்ப்பனர்களின் குரலுக்குப் பொருந்துமானால், அதே எதிர்ப்பு பார்ப்பனர்களின் ஆட்சிக்கெதிராக எழும், தீண்டத்தகாதச் சமூகங்களின் குரலுக்கு ஆயிரம் மடங்கு மிகச் சரியாகப் பொருந்தும். மேலும், இதில் தீண்டத்தகாதார் தவறு என்று ஒருவரும் சொல்ல மாட்டார்கள். தனிமனித முன்னேற்றத்தின் மீது முனைப்பாகவுள்ள, அதற்காகச் சிறை வாழ்க்கையைக்கூட அனுபவித்த சுயராஜ்ஜிய- வாதிகள், இந்தியாவிலுள்ள ஆறு கோடி தீண்டத்தகாதாரின் தனிமனித முன்னேற்றத்திற்கான பாதையில் உண்டாக்கப்பட்ட தடைகளை நீக்குவதற்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்னும் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும். பிரிட்டிஷ் ஆட்சியால் இந்தியர்கள் அவமதிக்கப்படுவது (அது ஒப்பீட்டளவில் மென்மையானது எனினும்) குறித்துத் தன் அக்கறையைக் காட்டும் இந்தியத் தேசிய காங்கிரஸ், அதே வகையில் ஆதிக்கச் சாதி இந்துக்களின் ஆட்சியின்கீழ் தீண்டத்தகாதார் அவமதிக்கப்படுவதைக் காண ஏன் மறுக்கிறது? ஒருவேளை, தீண்டத்தகாதாரின் அவமதிப்பு பார்ப்பனர்களின் கண்களை மறைக்கும் அளவுக்கு மிகப் பெரியதாகவும் மற்றும் மிகத் தெளிவாகவும் வெட்ட வெளிச்சமாய் இருக்கிறது அல்லது அவர்கள் அதைப் பார்ப்பதற்கு எந்த விருப்பமும் இல்லாமல் இருக்கலாம். இந்த இரண்டு கருத்துகளில், அவர்கள் அதைப் பார்ப்பதற்கு எந்த விருப்பமும் இல்லாதவர்கள் என்ற இரண்டாவது கருத்தே உண்மையைப் பிரதிபலிக்கிறது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. அந்நிய ஆட்சியிடமிருந்து விடுதலை பெறுவதற்குப் போராடிக்கொண்டிருக்கிறது இந்தியத் தேசிய காங்கிரஸ். ஆதிக்கச் சாதி இந்துக்கள் செய்யும் அடிமைத்தனத்திலிருந்து தீண்டத்தகாதாரை விடுதலை பெறவைக்கும் போராட்டத்தில் அதன் பங்கை ஆய்வு செய்தால், அது அந்த அடிமைத்தனத்தை உறுதி செய்வதற்கு ஆதரவாகச் செல்லும் என்பதைக் காண முடியும். இந்தியத் தேசிய காங்கிரசின் தோற்றத்தின்போது, பிரிட்டிஷாரிடம் அரசியல் கோரிக்கைகளை வைப்பதா அல்லது நம்முடைய சொந்த சமூகத்தில் சமூக ரீதியாக அடிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களை விடுதலை பெற வைப்பதற்கான முற்சிகளை எடுப்பதா என்பதுபோல, சிக்கல்களின் மீதான விவாதங்கள் இந்தியத் தேசிய காங்கிரசின் கூட்டங்களில் பல ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால், காங்கிரஸ், இப்போதைக்கும் கூட, பார்ப்பனப் பெரும்பான்மையால் ஆதிக்கம் செய்யப்பட்டு வருகிறது. எனவே காங்கிரஸின் உண்மையான குணம், கீழ் வர்க்கத்தினரின் அடிமைத்தனத்தைத் தொடரச் செய்வதாகும். நம் நாட்டு மக்கள் சிலரின் அடிமைத்தனம் பார்ப்பனியத்தின் உருவாக்கம். கீழ் வர்க்கத்தினரின் அடிமைத்தனத்தைத் தொடரச் செய்வதற்கு இடையூறாக இருப்பதால் அவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்ப்பார்கள். சமூகச் சீர்திருத்தமும் முக்கியமானது என்று யாரெல்லாம் உணர்ந்தார்களோ, அவர்கள் ‘சமூக மாநாடு’ என்ற தனியொரு அமைப்பை மகாராஷ்டிராவில் அமைக்க வேண்டிவந்தது. உண்மையில், சமூக மாநாட்டின் குறிக்கோள்கள் குறுகியவை. குழந்தைத் திருமணம், விதவை மறுமணம், கடல்வழிப் பயணம் முதலானவை அவர்கள் விவாதிக்கும் முக்கியச் சிக்கல்கள். சமூகத்தில் நிறுவப்பட்டிருக்கிற பார்ப்பனர்களின் நிலையை எதிர்ப்பதற்கும் அந்தச் சிக்கல்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை. இதற்குப் பிறகும்கூட இந்தியத் தேசிய காங்கிரஸ் ‘சமூக மாநாடு’ அமைப்பை அவமரியாதையோடு பார்த்து வந்தது. இது மட்டுமில்ல. 1895-இல் இந்தியத் தேசிய காங்கிரஸ் தங்களுடைய ஆண்டு மாநாட்டுக்காக  பூனாவில் கூடியபோது, காங்கிரஸின் தூய்மைப் பேணப்பட வேண்டுமென்று பூனாவின் நாட்டுப்பற்றாளர்கள் கருதினர். காங்கிரசுக்காகப் போடப்பட்ட பந்தலில் சமூக மாநாடு அமைப்பினரின் அமர்வை நடத்த விடாமல் தடுக்கப்பட்டது என்பது முதல்முறையாகும். ஆதிக்கச் சாதி இந்துக்களின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்கு இடையூறாகப் பிரிட்டிஷாரின் அரசியல் மேலாதிக்கம் வருமென்றால், ஆதிக்கச் சாதி இந்துக்களின் ஆயிரம் மடங்குக்கும் மேலான சமூக மற்றும் சமய மேலாதிக்கம் ஆறுகோடி தீண்டத்தகாதாருக்கு இடையூறாக வரும். மேலும், சுயநலமிக்க ஆதிக்கச் சாதி இந்துக்களுக்கு மீண்டும் மீண்டும் இதைச் சொல்லத் தேவையில்லை.

ஆதிக்கச் சாதி இந்துக்களுக்குச் சாதகமாக உருவெடுத்த சமூகக் கட்டுப்பாடுகள், குடிமக்களுக்கான சாதாரணமான உரிமைகளைக்கூட அனுபவிக்கவே முடியாத அளவுக்குத் தீண்டத்தகாதார் பிரிவினருக்குப் பாதகமாக ஆயின. குடிமகன் என்று தன்னை அழைத்துக்கொள்கின்ற எந்தத் தனிமனிதனுக்கும் சில உரிமைகள் வேண்டும்.

      1. தனிமனிதச் சுதந்திரம்
      2. தனிமனிதப் பாதுகாப்பு
      3. தனிச் சொத்தை வைத்துக்கொள்வதற்கான உரிமை
      4. சட்டத்தின் முன் அனைவரும் சமம்
      5. தன் மனச்சான்றின்படிச் செயலாற்றுவதற்கான உரிமை
      6. பேச்சுச் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம்
      7. பொதுக்கூட்டத்தைக் கூட்டுவதற்கான உரிமை
      8. சட்டமன்றத்திற்குப் பிரதிநிதிகளை அனுப்பும் உரிமை
      9. அரசுப் பணியைப் பெறுவதற்கான உரிமை

உள்ளிட்டவை அந்த உரிமைகளாகும். ஆனால், சமூகக் கட்டுப்பாடுகளின் காரணத்தால் தீண்டத்தகாதார் இவற்றில் பல உரிமைகளை இழந்துள்ளனர். பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் மேற்கண்ட முதல் இரண்டு உரிமைகள் எல்லாவிடங்களிலும் அனுபவிக்கப்பட்டுவந்தாலும் ஆதிக்கச் சாதி இந்துக்கள் நிர்வாகம் செய்யும் பகுதிகளில் தீண்டத்தகாதார் அந்த உரிமைகளை அனுபவிப்பதிலிருந்து தடுக்கப்படும் உதாரணங்களைக் காட்ட முடியும். அதைப் போலவே, சட்ட விவகாரங்களிலும் தீண்டத்தகாதாருக்கும் மற்றவர்களுக்கும் இடையில் எல்லா வழக்குகளிலும் சமத்துவம் உள்ளது என்பதும் உண்மை கிடையாது. எண்.5, 6, 7 மற்றும் 8-இல் கொடுக்கப்பட்டுள்ள உரிமைகளில் குறைந்த அளவு இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கொடுக்கப்பட்டவற்றில் தீண்டத்தகாதாரின் பங்கைப் பார்த்தால் மிகக்குறைவே ஆகும். அரசாங்கத்தில் நிறுவப்பட்டிருக்கிற ஒழுங்குக்கு எதிராகப் போனால் கருத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், பொதுக்கூட்டத்தைக் கூட்டுவதற்கான உரிமை ஆகிய உரிமைகளை யாரும் அனுபவிக்க முடியாது. இது தீண்டத்தகாதாருக்கும் பொருந்தும். இதற்கெதிராக அவர்களுக்கு எந்தப் புகாருமில்லை. ஆதிக்கச் சாதிகளால் தாம் ஒடுக்கப்படுவதற்கு எதிராகப் போராடத் தீண்டத்தகாதார் இந்த உரிமைகளைப் பயன்படுத்த முயலும்போது, அவர்கள் அவ்வாறு செய்யவிடாமல் தடுக்கப்படுகின்றனர். ஆகையால், இந்த உரிமைகளைப் பயன்படுத்தத் தடுக்கப்படுவது தீண்டத்தகாதாருக்கு உண்மையான இழப்பை உண்டாக்குகிறது. அது மற்றவர்களுக்கு அவ்வளவாக இல்லை. தீண்டத்தகாதாருக்கான அரசுப் பணி பெறும் உரிமை வெறும் காகிதத்தில் மட்டுமே உள்ளது. தீண்டத்தகாதார் மீதான ஆதிக்கச் சாதி இந்துக்கள் கடைபிடிக்கும் தீண்டாமை, அவர்கள் அரசுப் பணியைப் பெற முடியாத அளவிற்குக் கொடுமையானது. இந்தத் தீண்டத்தகாதார் இராணுவத்தில் சேர்ந்து சண்டையிடும்போது தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர். பிரிட்டிஷாருக்காக இந்தியப் பேரரசை வென்று கொடுத்தனர். ஆனால், தற்போது பிரிட்டிஷ் அரசாங்கம் அவர்கள் இராணுவத்தில் சேர்வதற்குத் தடை விதித்தது ஏன் என்று தெரியும். தம் சாதியை மறைத்தாலொழிய அல்லது தம் மதத்தை மாற்றினாலொழிய படித்தவர்கள்கூட வேலை பெற முடியாது. ஆங்கிலச் சட்டத்தில் சொத்தை வைத்துக்கொள்ள இடம் இருக்கிறது. ஆனால், சொத்தை அடைவதிலிருந்து மனு அவர்களைத் தடுத்துவிட்ட பிறகு, அவர்கள் எதை வைத்துக்கொள்ள முடியும்? தொடர்ச்சியான வறுமை மட்டும்தான். நிலைமை இவ்வாறு இருக்கும்போது, ஆதிக்கச் சாதி இந்துக்கள் இதைக் கண்டுகொள்ள மாட்டார்கள் அல்லது அதில் எந்தத் தவறும் இல்லை என்று சொல்வார்கள். இவ்வாறு ஆதிக்கச் சாதி இந்துக்கள் அவர்களை அவமதிக்கும்போது, மாண்புமிகு போபாட்கர் பிரிட்டிஷாருக்கு எதிராகப் பரிந்துரைக்கும் முன்மாதிரியான ‘அடிக்கு அடி’ என்னும் நிலைப்பாட்டை ஆதிக்கச் சாதி இந்துக்களுக்கு எதிராக எடுப்பதில் எந்தத் தவறுமில்லை என்று தீண்டத்தாகாதார் கருதுவார்கள்.

ஆதிக்கச் சாதி இந்துக்களால் தீண்டத்தகாதார் மீது காட்டப்படும் அவமதிப்பானது சகித்துக்கொள்ள முடியாதது மற்றும் துன்பம் தரக் கூடியது. அதைப் போலவே பிரிட்டிஷ் நிர்வாகத்தின் போக்கும் தவறானதும் மோசமானதுமாகும். சாதி மற்றும் மரபு மீது சட்டம் இயற்றுபவர்கள் அவற்றைத் தொந்தரவுக்குள்ளாக்காத எல்லைக்குள் பணியாற்ற வேண்டும் என்பதை அரசாங்கம் தன் பொதுக்கொள்கையாக 1886-ஆம் ஆண்டு அக்டோபர் எட்டாம் நாள் ஒழுங்கு ஆணையில் பிரகடனப்படுத்தியது. அப்போதுதான் சமூக ஒழுங்கு பேணப்படும் எனக் கருதியது.

சமூக மற்றும் சமயரீதியிலான அநீதிகள் இழைக்கப்படும்போதும் அரசாங்கம் அந்த அநீதியான வழக்கங்களை அகற்றத் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தாது என்பது இதன் தெளிவான பொருளாகும். சில சமூகங்களின் மீது பன்னெடுங்காலமாக நடந்துவரும் சமூக அடக்குமுறைக்காக அரசாங்கத்திடமிருந்து தரப்பட்ட அனுமதி இது என்பது இதன் பொருளாகும். சில விவகாரங்களில் அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தாமல் சமூக அநீதிகளைக் களைய முடியாது. இங்கு, பிரிட்டிஷ் நிர்வாகம் இருக்கிறது. ஆனால், அது தீண்டத்தகாதாருக்குத் தடையாக இருக்கிறது. இந்த அதிகாரம் இல்லையென்றால் தீண்டத்தகாதார் இதே நிலையிலேயே இருந்திருப்பார்கள் என்பதும் உண்மைதான். அதற்கு மாறாக, ஒடுக்கப்பட்ட சாதிக்குத் தீங்கு விளைவிக்கும் தம் ஆதிக்கத்தைத் தகர்க்கவில்லை என்று கருதும் ஆதிக்கச் சாதி இந்துக்களுக்கு சுயராஜ்ஜியக் கொடையின் மூலம் பிரிட்டிஷார் தம் கைகளில் வைத்திருந்த அதிகாரத்தைக் கொடுத்துவிட்டனர். அதே நேரத்தில், தம் நலன்களுக்கு எதிரானது என்று கருதிய பிரிட்டிஷ் ஒற்றையாட்சி என்னும் முள்ளையும் அது அகற்றிவிட்டது. சுருக்கமாக, சுயராஜ்ஜியம் என்பது ஆதிக்கச் சாதிகள் ஒடுக்கப்பட்ட சாதிகளின் மீது ஆட்சி செலுத்துவதாகும். பிரிட்டிஷாரின் கீழ், ஆதிக்கச் சாதி இந்துக்களின் சொற்கள்கூட சகிக்க முடியாததாக இருந்தது. தற்போது சுயராஜ்ஜிய ஆட்சியின் கீழ் அவர்களின் உதைகளையும் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆகையால், சுயராஜ்ஜியம் என்ற ஒன்றைத் தருவதாக இருந்தால், எங்களுக்கும் சில பங்கு உள்ளது மாதிரியான சுயராஜ்ஜியத்தைத் தாருங்கள் என்பது எங்கள் வாதமாகும்.

பல சிந்தனைகள்

ஆண், பெண் பாகுபாடின்றி அனைவருக்கும் கல்வி!

இந்தக் கல் நெஞ்சக்கார மனிதர்கள் அன்பால் கரைவார்களா?

‘எது இலாபமில்லாததோ அது மோசமானது’ என்னும் பழமொழி. அரசியலில், சண்டையிட்டுக்கொள்கின்ற குழுக்கள் முன்னேறுவதற்கான ராஜபாட்டையாகிவிட்டது. எதையும் எதிர்க்கிற கட்சி எப்போதுமே வெறுப்புக்குரியது. அந்தப் பக்கத்தில் இருக்கும் கட்சித் தன் சொந்த செல்வாக்கைக் கூட்டிக்கொள்வதற்காக எதிர்க்கட்சிகளின் குறைகளைச் சுட்டிக்காட்டும். இது மட்டுமில்ல. மேலும் எதிர் வரிசையில் இருக்கும் கட்சி தன் எதிரிகளின் புகழைக் குலைப்பதற்காக அவர்கள் மீது தவறான குணங்களை இட்டுக்கட்டிக் கூறுவார்கள். உண்மையில், அதனால் அவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் நிர்வாக அமைப்புப் பல குறைபாடுகளால் சிக்கித் தவிக்கிறது என்று காட்டுவதற்காக எல்லா வழிகளிலும் முயலும்  நாட்டுப்பற்றாளர்களின் முன்னெடுப்புகள் ஓர் உதாரணமாகும். பொதுமக்களின் கல்வியைப் புறக்கணித்ததற்காக நாட்டுப்பற்றாளர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தை எவ்வளவு விமர்சித்தார்கள் என்பதை இன்னொருமுறை மீண்டும் சொல்லத் தேவையில்லை. எங்கெல்லாம் சுயராஜ்ஜிய அரசாங்கம் இருக்கிறதோ, அங்கு தொடக்கக் கல்வி கட்டாயம் ஆகும். ஆகையால், இந்திய மக்களின் விடுதலைக்குச் சுயராஜ்ஜியத்தைவிட வேறு மாற்று இல்லை என்று உறுதியாகக் கூறப்பட்டது. 1910-இல் தொடக்கக் கல்வியைக் கட்டாயமாக்குவதற்காகச் சட்டசபையில் ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதாவை அறிமுகப்படுத்திய மறைந்த கோகலேவின் உள்நோக்கம் நேர்மையாக இருந்தாலும், அந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்த தீவிரவாத நாட்டுப்பற்றாளர்களின் உள்நோக்கம் நேர்மையற்றது என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

தங்களின் நம்பிக்கைக்கு எதிராகத் தீவிரவாத நாட்டுப்பற்றாளர்கள் அந்த மசோதாவை ஆதரித்தார்கள். ஏனென்றால், மசோதாவுக்கு அரசாங்கத்தின் எதிர்ப்பு மக்களை ஏமாற்றமடைய செய்யும் மற்றும் சுயராஜ்ஜிய அரசில் மட்டுமே இது சாத்தியம் என்று சொல்லி சுயராஜ்ஜியத்தைக் கோரும் கோரிக்கையில் அவர்களின் நிலைப்பாட்டுக்கு வலுசேர்க்கும். தொடக்கக் கல்வியைக் கட்டாயமாக்குவதற்கான மசோதாவை ஆதரிக்கும் நாட்டுப்பற்றாளர்களின் நோக்கம் அவர்களின் உள்தூண்டுதலால் ஏற்பட்டது அல்ல. அதுவாக இருந்திருந்தால், ஆட்சிக்கு வந்தவுடன் சுயராஜ்ஜிய அரசில் அதை அவர்கள் நடைமுறைப்படுத்தியிருப்பார்கள். தொடக்கக் கல்வித் திட்டத்திற்கான அவர்களின் ஆதரவு வெளியுலகுக்கும் பெயரளவுக்கும் என்றாலும், பிரிட்டிஷ் அரசாங்கம் அதை நடைமுறைப்படுத்த மறுத்தபோது திட்டத்தின் மீது அவர்கள் காட்டிய மாற்றாந்தாய்ப் பாசத்தில் அரசு மீது புழுதி வாரித் தூற்றினார்கள். இப்போது அவர்கள் இதைச் செய்யவில்லையென்றால், மக்களின் நண்பர்களாய் ஆக மாட்டார்கள். மக்களின் எதிரிகளாக ஆவார்கள் என்பதை அவர்கள் மறக்கக் கூடாது. ‘இப்போது என்ன செய்வது?’ என்ற சோதனைக்குக் கடவுள் அவர்களை உட்படுத்தியுள்ளார். தம் மனதில் எதைச் செய்ய எதிர்த்தார்களோ அதையே அவர்கள்  செய்யுமாறு கடவுளால் கட்டாயப்படுத்தப்- பட்டுள்ளனர். இது அவ்வளவு எளிதில் புரிந்துகொள்ளப்பட முடியாத கடவுளின் செயல். இதில் அற்ப உயிர்களான நாம் என்ன செய்ய முடியும்? நன்றாக நினைவுபடுத்திப் பார்த்தால், நகராட்சிகள் தங்கள் பகுதிகளில் இலவச மற்றும் கட்டாயத் தொடக்கக் கல்வியை அளிக்கத் தொடங்க வேண்டுமென்று 1917-இல் பம்பாய் அரசு சட்டம் இயற்றியது. அதில் நகராட்சிகள் செய்ய வேண்டிய கூடுதல் செலவைப் பங்கிட்டுக்கொள்வதாகவும் அரசு ஒப்புக்கொண்டது. தொடக்கக் கல்வியை அளிக்காமல் அரசு புறக்கணித்தபோது அதை எதிர்த்து மக்கள் குரலெழுப்பினார்கள். தற்போது அரசாங்கம் இந்த வசதியை வழங்கியிருக்கிறது. ஆனால், ஆறு அல்லது ஏழு நகராட்சிகள் மட்டும்தான் இலவச மற்றும் கட்டாயத் தொடக்கக் கல்விக்கான அரசின் ஆணையை நடைமுறைப்படுத்த முடிவெடுத்திருக்கின்றன.

இது மக்களின் கல்வி மீது அவர்கள் காட்டும் பாசாங்குத்தனத்தின் வருத்தத்திற்குரிய பிரதிபலிப்பு. பிரிட்டிஷாரின் விமர்சகர்களுக்குள் முன்னணியில் இருக்கும் பூனேக்காரர்கள் இதில் பின்தங்கி இருக்கின்றனர் என்பதை நினைவுகூர்வது நல்லது. பெண் கல்வியை ஆண் கல்வியோடு இணைந்து வலியுறுத்துவதா அல்லது அதைப் பின்னுக்குத் தள்ளிவைப்பதா என்ற வீணான பணியில் இப்போதும் தங்களை அவர்கள் ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர். ஆரம்பத்தில், ‘கட்டாயக் கல்விக்கான தேவை எங்கே இருக்கிறது?’ ‘இருக்கிற பள்ளிக்கூடங்களின் தரத்தை உயர்த்துங்கள்’, ‘அவற்றை மேலும் வசதியுள்ளவையாக ஆக்குங்கள்’, ‘அவற்றிற்குத் தோட்டங்களையும் விளையாட்டு மைதானங்களையும் வழங்குங்கள்’ போன்றவைதான் அவர்களின் பார்வையாகும். ‘கேசரி’யால் அரசாங்கத்திற்குத் தரப்பட்ட இந்த ஆலோசனைகள் பூனே மரபுக்கு மிகவும் பொருத்தமானது என்பது உண்மைதான். பள்ளிக்கூடங்களுக்குச் செல்லும் குழந்தைகள் எல்லாரும் ஆதிக்கச் சாதி இந்துக்கள்தான். ஆகையால், அரசாங்கத்தின் பெருகும் வருமானம், (புதியப் பள்ளிக்கூடங்களைத் துவங்கி) பிற்படுத்தப்பட்டப் பிரிவு மற்றும் தீண்டத்தகாத சமூகங்களின் குழந்தைகளைக் கல்வியறிவுள்ளவர்களாக ஆக்குவதற்குச் செலவழிக்கப்படுவதைக் காட்டிலும், இருக்கிற பள்ளிக்கூடங்களுக்கு அதிக வசதிகளை வழங்கிடச் செலவழிக்கப்பட வேண்டுமென்று கேசரியின் ஆட்கள் சிந்தித்தால் அது வியப்புக்குரியதில்லை. ஆனால், மக்களிடமிருந்து தங்களின் முகத்தை மறைத்துக்கொள்ள கேசரியின் கும்பல் தம் பார்ப்பனியக் கொள்கையை மாற்றிவிட்டது. அவர்களின் தற்போதைய கொள்கையின்படி, ஆண் கல்வி மட்டுமே கட்டாயமாக்கப்பட வேண்டும். பெண் கல்வி என்னும் விசயத்தைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம். நிதிப் பற்றாக்குறையே தங்களின் வாதத்திற்கு அவர்கள் தந்த காரணமாகும். பெண்களுக்கான வாக்குரிமையைக் கோரும் அதேநேரத்தில் பெண்களுக்கான கட்டாயக் கல்வியை எதிர்காலத்திற்குத் தள்ளிப் போடச் சொல்லி வலியுறுத்தும் இந்த நாட்டுப்பற்றாளர்களிடத்தில் உள்ளது சிந்தனைத் தேக்கம் என்பதைவிட, அவர்களின் முரண்பாட்டைக் காட்டுகிறது. இந்த மாதிரியான சிந்தனையில் இவர்கள் மட்டுமே ஈடுபட முடியும். ‘வரிச்சுமை அதிகரித்துக்கொண்டே சென்ற மோசமான சூழலைத் தேசியக் கட்சிச் சுட்டிக்காட்டியபோது, பெண்களுக்கான கட்டாயக் கல்வி மசோதாவை ஆதரித்த மிதவாதிகளின் இதயங்கள் அதை எள்ளி நகையாடித் தங்களின் கல்லைப்போன்ற தடித்த கருணையற்ற இதயத்தை வெளிப்படுத்தின.’ இவை ‘லோக்சங்ரஹ’ என்னும் செய்தித்தாள் வேதனையோடு வெளிப்படுத்திய விமர்சனங்கள் ஆகும். தங்களுடைய விவகாரங்களைத் தாங்களாகவே கவனித்துக்கொள்வோமென உறுதியாகவும் துணிச்சலாகவும் சொல்லும் இந்த நபர்கள், பயந்தாங்கொள்ளியின் மொழியைப் பேசுவது வியப்புக்குரியதாக இருக்கிறது. அதிகாரம் என்பது சுகமானது மட்டுமில்ல, பொறுப்பின் சுமையும் ஆகும் என்பதை ‘லோக்சங்ரஹ’ மறந்துவிட்டது. வரியின் சுமையைத் தாங்கிக்கொள்ளும் துணிச்சல் பூனாக்காரர்களுக்கு இல்லையென்று லோக்சங்ரஹ ஆசிரியர் நினைத்தால், பிரிட்டிஷ் ராஜதந்திரிகளுக்கு அவர்களின் சொந்த ஆட்கள் வழங்கிய அறிவுரையை நாம் நினைவுபடுத்தலாம். அரசால் நிதிநிலையைக் கையாள முடியாவிடில், செலவினங்களின் முன்னுரிமையை மாற்றிக்கொள்ள வேண்டுமென்றும், வாய்ப்பிருக்கும் இடங்களிலெல்லாம் செலவுகளைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், சில முக்கியச் செலவுகளின் நிதியைக் குறைப்பதன் மூலமும் வரும் பணத்தைக் கல்விப் பரவலுக்காக மடைமாற்றலாம் என்பவை அவர்களின் அறிவுரையாகும். நிதி மட்டுமே பிரச்சினை என்ற அவர்களின் வாதம் ஏமாற்றும் தந்திரமாகும். ஆகையால், அவர்கள் பல சிக்கல்களைப் பற்றி விவாதிப்பதைக் கவனமாகத் தவிர்த்துவிட்டனர்.

பூனே நகராட்சிக் குழுவில் ஒட்டுமொத்தமாக 39 உறுப்பினர்கள் இருக்கின்றனர். அவர்களில், 26 பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள். 26 உறுப்பினர்களில், 22 பேர் கடந்த நகராட்சிக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அவர்களில் 16 பேர் பெண் கல்வி குறித்த நகர்வுக்கு எதிராக இருந்தனர். இதை ஒரு சாக்காக எடுத்துக்கொண்டு, “தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் கருத்து என்பது மக்களின் கருத்தாகும். ஆதலால், பூனே மக்கள் எல்லோரும் பெண் கல்வி குறித்த நகர்வுக்கு எதிராக உள்ளனர் என்ற உண்மையை இது உறுதி செய்கிறது. எனவே, அரசியல் என்பது பிரதிநிதிகள் வாக்காளர்களின் கருத்தைப் பிரதிபலிக்கவில்லை- யென்றால் அவர்களின் கருத்தைக் கேட்பதற்காக மீண்டும் வாக்காளர்களிடம் செல்ல வேண்டும்” என்று கேசரி கட்சியினர் மிகுந்த பெருமிதத்தோடு வலியுறுத்துகின்றனர். இந்த முக்கியமான, முதிர்ச்சியான அறிவுரை எவ்வாறு நடைமுறைக்கு உகந்ததாக இருக்கிறது என்று விளக்குவது தேவையாகிறது. செலவின் சுமை வாக்காளர்களால் செலுத்தப்படப் போவதில்லை. பூனேவில் நிறைய பேர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நகராட்சி வரி செலுத்துகின்றனர். ஆனால், வாக்கு செலுத்தும் உரிமையில்லை. பிறகு, எதற்கு வாக்காளர்களின் கருத்தை மட்டும் கேட்க வேண்டும்? இந்தப் பரிந்துரைக்குப் பின்னால் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. ஆண்களுக்கான கட்டாயக் கல்வி குறித்த நகர்வுக்கு ஆதரவளிக்க முன்வராத வாக்காளர்கள், பெண்களுக்கான கட்டாயக் கல்விக்கு ஆதரவாகத் தாங்களாகவே முன்வருவார்கள் என்பது சாத்தியமேயில்லாதது. பிற்படுத்தப்பட்ட மக்களும் தீண்டத்தகாதாரும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வரி செலுத்துகின்றனர். ஆனால், கல்வியைப் பெறும் மாணவர்களில் பெரும்பான்மையினர் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்கள். ஆகையால், மாண்புமிகு. கவடேஷாஸ்திரி “மற்றவர்களின் உழைப்பில் எங்கள் நலன்கள் பாதுகாப்பாக இருக்கின்றபோது, எதற்குக் கட்டாயம்? கல்வி விசயத்தில் மேலதிகமாக நாங்கள் பயனடைந்துவிட்டோம். இது இவ்வாறிருக்க, அதிக வரியைச் செலுத்திப் பிற்படுத்தப்பட்ட பிரிவு மற்றும் தீண்டத்தகாத மக்களைக் கல்வி பெறச் செய்ய வேண்டியத் தேவை எங்கிருந்து வந்தது?” என்று கேட்கிறார். அவர்களின் முற்றுரிமையாக இருந்துவரும் ஆயுதத்தைக் (கல்வியை) கொடுப்பதற்கு மனதளவில் தயாராக இல்லாதபோது அவர்கள் என்ன செய்வார்கள்? தங்களின் வஞ்சனையை மறைப்பதற்காகவும், ஆண் கல்வியின் நோக்கத்தை ஆதரிக்கும் மற்றவர்களுக்குக் காட்டுவதற்காகவும் அவர்கள் அதை ஆதரிக்கத் தயாராக இருக்கின்றனர். ஆனால், பெண் கல்வியின் நோக்கத்தை ஆதரிக்க வலியுறுத்தும் அறத்தையும் தகுதியையும் அவர்கள் கொண்டிருக்கவில்லை. ஆதிக்கச் சாதி இந்துக்களில், அவர்களின் பெண்கள் கூட்டம்தான் முழுக்கக் கண்மூடித்தனமான நம்பிக்கைகள் கொண்டதாகவும், சமயப் பழக்க வழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள், இழிவான பயன்பாடுகள் மற்றும் சிறுபிள்ளைத்தனமான, பொருளற்ற மரபுகளை வளர்ப்பவர்களாகவும் இருக்கின்றனர். இவ்வாறு, ஆதிக்கச் சாதி மேலாதிக்கத்தின் தூண்களாகப் பெண்கள் இருந்துவருகின்றனர். பெண்களுக்கான கட்டாயக் கல்வி நோக்கத்திற்கு ஆதரவளித்துத் தங்களின் சமய மேலாதிக்கத்தின் தூண்களை அழிக்க வாக்காளர்கள் (சொத்தைத் தகுதியாகக்கொண்டு வாக்கு செலுத்தும் உரிமை வந்ததிலிருந்து பெரும்பாலான வாக்காளர்கள் ஆதிக்கச் சாதி இந்துக்கள்தான்) தாங்களாகத் தயாராக மாட்டார்கள் என்பது நன்கு தெரியும். வாக்காளர்களின் கருத்தைக் கேட்கச் சொல்லி கேசரி (திலகர்) அறிவுறுத்தியிருக்கிறார். வாக்காளர்களில் பெரும்பாலானோர். அடிப்படையில் ஆண்களும், பெண்களும் சமமற்றவர்கள் என்று சிந்திப்பவர்கள் என்பது கெட்டிக்காரரான கேசரிக்கு நன்கு தெரியும்.

அவர்கள் எல்லோரும் பார்ப்பன வகுப்பைச் சார்ந்தவர்கள்:

கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் பார்ப்பனச் சாதியின் மீது பெரும் பேரிடர் விழுந்தது என்று சொல்லலாம். இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் ஆட்சி சுயநிர்ணயக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அண்மையில் இது விளக்கமாக எழுதப்பட்டது. பார்ப்பனர்களால் அல்ல; உலகிலுள்ள மக்களின் ரத்தத்தால் எழுதப்பட்டது. இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் ஆட்சிக்கெதிராக அவர்களின் ஆட்சி சட்டத்திற்கு விரோதமானது எனப் புகார் அளிக்க வேண்டுமெனப் பார்ப்பனர்கள் முடிவெடுத்துள்ளனர். நீதி, சமத்துவம், சுதந்திரம் மற்றும் சுயநிர்ணயக் கொள்கை முதலான லட்சியங்களுக்காகப் பெரும் தியாகங்கள் செய்த ஆங்கிலேயர்கள், அவற்றிற்கெதிராகச் செல்ல மாட்டார்கள் என்றே பார்ப்பனர்கள் நினைக்கின்றனர். ஆனால், சில நேரங்களில் பார்ப்பனர்களும் குற்றவுணர்ச்சி கொள்கின்றனர். ஏனென்றால், பல ஆண்டுகளாக இந்தியாவின் சமூக மற்றும் தேசிய வாழ்வில் பின்னிப் பிணைந்து தங்களை இந்துக்களாகக் கருதும் ஆறு கோடி தீண்டத்தகாதாரை உளவியல், சமய மற்றும் சமூக அடிமைத்தனத்தின் கீழ் வாழுமாறு செய்தது பார்ப்பனர்கள்தான். அது தீண்டத்தகாதாரின் முன்னேற்றத்திற்கான அனைத்து வழிகளையும் அடைத்துவிட்டது. இது மட்டுமில்ல. தீண்டத்தகாதார் உயர்வுக்காகச் சில முயற்சிகளை எடுத்த எல்லோரையும் ஆதிக்கச் சாதி இந்துக்கள் ஒட்டுமொத்தமாக எதிர்த்தனர். தீண்டத்தகாதாரின் வறுமையில் ஆதிக்கச் சாதி இந்துக்கள் செழித்தனர். ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்தது நல்லதாயிற்று. இல்லையென்றால், தீண்டத்தகாதாரின் துயரம் தொடர்கதையாகி இருக்கும். சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்கான புகாருடன் ஆதிக்கச் சாதி இந்துக்கள் ஆங்கிலேயர்களிடம் செல்வது என்பது, அகிம்சையே உன்னதமான லட்சியம் என்று கருதும் புத்தரிடம் திருடனால் களவாடப்பட்ட பசுக்களை மீட்டுக்கொடுக்கச் சொல்லிப் புகார் செய்யும் கசாப்புக் கடைக்காரனைப் போல உள்ளது. ஏனென்றால், நீங்கள் தீண்டத்தகாதாரைச் சுரண்டும் வழியில் குறுக்கிடுகிறதென்று பிரிட்டிஷ் அரசை எதிர்க்கிறீர்கள் என்று பிரிட்டிஷார் உங்களைக் கேட்டால் உங்களுடைய பதிலென்ன? ஒரு நாடு இன்னொரு நாட்டை ஆளக் கூடாதென்று பார்ப்பனர்கள் பிரிட்டிஷாரிடம் சொல்கின்றனர். ஒரு வகுப்பு இன்னொரு வகுப்பை ஏன் ஆள வேண்டுமென்று பிரிட்டிஷார் பார்ப்பனர்களைக் கேட்டால், முகத்தில் கரி பூசப்பட்ட பார்ப்பனர்களிடம் எந்தப் பதிலும் இருக்காது. தங்கள் மீது சுமத்தப்பட்ட பிரிட்டிஷ் ஆட்சியின் முடிவை வெளிப்படையாகக் கோர வேண்டுமென்பதற்காகக் கரி பூசப்பட்ட தங்கள் முகத்தைக் கழுவிவிட்டுக்கொண்டு 1917-ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற இந்தியத் தேசியக் காங்கிரஸில், தீண்டத்தகாதாருக்குச் செய்யப்பட்ட அநீதியைக் களைவதற்குத் தங்களுக்கு எந்த ஆட்சேபனையுமில்லை என்றொரு தீர்மானத்தை இயற்றினர். இவ்வாறு, தங்கள் முகங்களில் படிந்திருந்த கறையை அவர்கள் நீக்கிக்கொண்டனர். அதைப் போலவே, தீண்டாமையை ஒழிப்பது குறித்து விவாதிப்பதற்காக 1918-இல் ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. அதில், தீண்டத்தகாதாரின் முன்னேற்றத்திற்காகப் பார்ப்பனர்கள் கனிவுடன் தங்கள் ஆதரவைத் தருவார்கள் என்று திரு.கேசரி மற்றும் திரு.கபார்டே ஆகிய இரு தலைவர்களும் கூறினார்கள். இதே கூட்டத்தில், பூனேவில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் சமார் சாதியைச் சேர்ந்த செருப்புத் தைக்கும் தொழிலாளியின் கணபதி சிலையையும் தன்னுடைய வண்டியில் கொண்டு சென்றதாகச் சொல்லி திரு. திலகர் தன் விமர்சகர்களின் வாயை அடைத்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார். சூடாக இருக்கும்போதே இரும்புக்கு வடிவம் கொடுப்பது சிறந்தது என்றொரு பழமொழி சமஸ்கிருதத்தில் உண்டு. அதே வழியில், நாம் எல்லோரும் (அரசியல் உணர்வு பெற்று) சூடாக ஆகிவிட்டோம். ஆதலால், நாம் எல்லோரும் (இந்த முக்கியக் காலத்தில் அரசியல் காரணங்களுக்காக) ஒன்றுபடுவோம் என்று மாண்புமிகு. கபார்டே வலியுறுத்தினார். ஆனால், தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றிய அந்தக் கூட்டத்திற்குப் பிறகு, திலகர் தன்னுடைய பழைய நிலைக்கே திரும்பிவிட்டார். தீண்டாமைக்கெதிரான உறுதிமொழியில் கையெழுத்திட மறுத்துவிட்டார்.  சிந்தனைப் போக்கில் திலகரிடமிருந்து எந்த வகையிலும் வேறுபட்டிராத மாண்புமிகு. கபார்டே 17.01.1920 அன்று ஒரு சொற்பொழிவாற்றினார். “இங்கிலாந்திடமிருந்து சுயராஜ்ஜியம் பெறுவதற்குக் காங்கிரஸ் கட்சியால் எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து விளக்கினார்.  இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் ஆட்சியைச் சீர்திருத்தம் செய்யும் வகையில் காங்கிரஸ் கட்சி இங்கிலாந்திற்குத் தன்னுடைய பிரதிநிதிகள் குழுவை அனுப்பியபோது, தங்கள் கோரிக்கைகளை எடுத்துரைக்கத் தாங்களும் இங்கிலாந்துக்குச் செல்ல வேண்டுமென்று மற்றவர்களும் தன்னிச்சையாகக் கருதினார்கள் என்று அவர் கூறினார். மிதவாதிகளும் விரைந்தார்கள். குப்பனும் சுப்பனும் என்று எல்லோரும் விரைந்தார்கள். இந்தத் தொடர் ஓட்டத்தைப் பார்த்த பிறகு தீண்டத்தகாதாரும் (கீழ்ச் சாதியினரும்) வெறுமனே நிற்கவில்லை. இவ்வாறு, எல்லோரையும் ஒன்று சேர்த்து, அது பெரும் கூட்டத்தை இங்கிலாந்தில் உருவாக்கியது. கீழ்ச் சாதியினருக்கும் தங்கள் பங்கைக் கோரும் வாய்ப்பு இருந்தது. எப்படியாவது, தங்களின் முன்னேற்றத்திற்கான முக்கியத்துவத்தைப் பெற வேண்டுமென்று நினைக்கின்றனர். இன்று வேத மந்திரத்தால் கட்டமைக்கப்பட்டச் சதுர்வர்ண அமைப்பின் கடைசிப் பங்கைப் பெறும் கீழ்ச் சாதியினர், முதல் இடம் வரைக்கும் செல்ல, முயற்சிக்கின்றனர். சதுர்வர்ண அமைப்பில் தலையின் (தலைமை) இடத்தைப் பாதம் அடைய முயற்சிப்பது போல இது இருக்கிறது. வேத மந்திரத்தின்படி பார்ப்பனர்கள்தான் வாய் (வாயில் பிறக்கும் பார்ப்பனர்கள்தான் தலைமை). அது இல்லாமல் அவர்கள் எவ்வாறு முன்னேற்றம் அடைய முடியும்?” தீண்டாமையை ஒழிப்பதற்காகக் கூட்டப்பட்ட மாநாட்டில், ஆதிக்கச் சாதி இந்துக்களின் அரசியல் கோரிக்கையில் தீண்டத்தகாதார் அவர்களுடன் இருக்க வேண்டுமென்று தீண்டத்தகாதாருக்கு எதிராக எள்ளல் மொழியில் பேசியவர் கபார்டே ஒருவரே என்பதை யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால், திரு. கபார்டேவை உள்ளும் புறமும் அறிந்தவர்கள் இரண்டு நிகழ்வுகளிலும் அவர் வெளிப்படுத்திய சுய முரண்கள்கொண்ட கருத்துகளின் மீது ஆச்சரியம்கொள்ள மாட்டார்கள். சுயராஜ்ஜியத்தின் தவணையைக் கோருவதற்காக இங்கிலாந்துக்குச் செல்வதற்குச் சற்று முன்பு அபத் தர்மத்தைப் பின்பற்றும் (பேரிடரின் காலத்தில் பின்பற்றப்படும் மதம்) தாராளவாதியாக முகமூடி போட்டுக்கொள்வார். ஆனால், இங்கிலாந்திலிருந்து திரும்பிய பிறகு, சந்தர்ப்பச் சூழலின் நிர்ப்பந்தத்தால் அவர் அணிந்துகொண்ட தாராளவாதி என்னும் பொய்ப்பிம்பத்தைத் தூர எறிந்துவிடுவார். இந்த இரட்டை நிலைப்பாடு கொண்டவர்கள் எந்த வர்ணத்தைச் சேர்ந்தவர்கள் என்று தனியாக ஒருவர் சொல்லத் தேவையில்லை. தங்களின் சுயநலன்களை அடைவதற்காகப் புனிதத் துறவிகளைப் போல மாறுவேடம் போட்டுக்கொள்வார்கள். தங்களின் நோக்கம் நிறைவேறியவுடன் நன்மை செய்தவர்களைக்கூடத் துன்புறுத்துவதற்கு அவர்கள் தயங்க மாட்டார்கள். லோக்மான்ய பாப்டிஷ்டா (கபார்டே) எது வேண்டுமானாலும் சொல்லட்டும். பார்ப்பனர்கள் இங்கிலாந்துக்குச் சென்றாலும்கூட அவர்கள் மாற மாட்டார்கள். தம்முடைய நலனுக்கு மட்டுமே குறுகிப்போவார்கள் என்பதை நினைவுகூர வேண்டுமென்று நாம் தீண்டத்தகாதாரை எச்சரிக்க விரும்புகிறோம்.

பார்ப்பனர்கள் தொழிலாளர் கட்சியைத் தவறாக வழிநடத்தியிருக்கின்றனர். ஒரே நிலைமையில் துன்புறுகிறவர்கள் ஒருவருக்கொருவர் இரக்கம் காட்டிக்கொள்வது என்னும் உதாரணம் யாருக்கேனும் தேவைப்பட்டால், அதற்காகத் தன்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து தேட வேண்டும். ஆனால், ஒரு நாட்டின் மக்கள் இன்னொரு நாட்டில் தம்மைப் போலத் துன்புறும் மனிதர்களைக் கண்டு இரக்கம் கொள்வது என்னும் உதாரணம் அரிதாகக் காணப்படுகிறது. மொழி, நிறம் மற்றும் பண்பாட்டு வேறுபாடுகள் நாடுகளைப் பிரிவுகளாகப் பிரித்துவிட்டன. இந்த மூன்று காரணிகளும் ஒரு வேலியை உண்டாக்குகின்றன. ஒரு நாட்டை இன்னொரு நாட்டுக்கு அந்நியமாக்குகின்றன. இம்மாதிரியான வேறுபாடுகள் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதில் தடைகளை உண்டாக்குகின்றன. பண்பாட்டு மற்றும் நிற வேறுபாடுகளால் ஒரு நாட்டின் மக்கள் இன்னொரு நாட்டு மக்களோடு அரிதாகத் தொடர்பில் வந்தனர். நிலைமைகளின் அறியாமை மற்றும் தகவல்தொடர்புகள் இல்லாமை ஒரு நாட்டின் மக்களுள் இன்னொரு நாட்டு மக்களின் மீதான இரக்க உணர்வை உண்டாக்க வழிவிடுவதில்லை. ஆனால், 19-ஆம் நூற்றாண்டு முதல் இந்தத் திசையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. தேசங்களுக்கிடையில் பண்டங்களின் பரிமாற்றம் துவங்கியது. அது மற்றவர்களின் மொழி பற்றிய அறிவைச் சாத்தியமாக்கியது. அதிலிருந்து தேசங்களுக்கிடையில் சிந்தனைகளின் பரிமாற்றம் துவங்கியது. உலகத்தை ஒன்றாக இணைத்த கப்பல்கள், செய்தித்தாள்கள் போன்ற தகவல் தொடர்புக் காரணிகள் பல்வேறுபட்ட நாடுகளின் மக்களுக்கிடையில் நல்ல நம்பிக்கையையும் கூட்டுறவையும் உருவாக்கியது.

இந்த நல்ல நம்பிக்கையின் வாழும் உதாரணம்தான் இங்கிலாந்திடமிருந்து இந்தியாவிற்கு சுயராஜ்ஜியம் பெற்றுத் தருவதில் உதவி புரிந்த ஆங்கிலேயத் தொழிலாளர் கட்சியாகும். ஆங்கிலேயத் தொழிலாளர் கட்சியின் தலைவர்கள் பிரிட்டிஷ் பேரரசுக்குள்ள உத்தேசமான ஆபத்துகளைப் பற்றிக் கவலைப்படாமல் சுயநிர்ணயக் கொள்கையை வழக்கத்தில் பின்பற்றப்படக் கூடாதென்று சொல்லும் தங்கள் சொந்த நாட்டினரின் (ஆங்கிலேய ஆட்சியாளர்கள்) அதிகாரமிக்கக் கைகளிலிருந்து சுயராஜ்ஜியத்தைப் பறித்து இந்தியாவுக்கு அளித்தனர். அவர்களின் இந்தச் செயல் உயர்ந்த அற நடத்தைக்குத் தகுதியானதாக இருந்தாலும்கூட, அது நமக்கு வருத்தத்திற்குரிய ஆச்சரியமாகும். பேராசைப் பிடித்த ஆங்கிலேய முதலாளித்துவவாதிகளால் இழிவான மனிதர்களென ஒதுக்கப்பட்ட, வறுமையில் உழலுகின்ற ஆங்கிலேயத் தொழிலாளர்கள், ஆதிக்கச் சாதி மக்களால் சமூக, பொருளாதார மற்றும் சமய ரீதியில் ஒடுக்கப்படுகின்ற தங்களின் சகப் பாதிக்கப்பட்டோரான தீண்டத்தகாதாருக்கு உதவுவதற்குப் பதிலாக, தீண்டத்தகாதோரின்  எல்லா உரிமைகளையும் அழித்துவிட்டுப் பூமியின் மிகவும் துயருற்ற மக்கள் என்னும் நிலைக்கு அவர்களைத் தள்ளிய ஆதிக்கச் சாதி மக்களுக்கு உதவியுள்ளனர் என்பது பரிதாபகரமானது. ஆங்கிலேயத் தொழிலாளர் கட்சியின் மன்னிக்க முடியாத இந்தச் செயலுக்கு அக்கட்சி மட்டுமே பொறுப்பில்லை. தீண்டத்தகாதோர்தான் இதற்கு உண்மையில் பொறுப்பு. அவர்களின் பரிதாபகரமான நிலைமைகள் மற்றும் அதன் காரணங்கள் குறித்துத் தொழிலாளர் கட்சி அறிந்துகொள்ளத் தீண்டத்தகாதோர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதற்கெதிராக, தீண்டத்தகாதோரின் நிலைமைகளில் எந்தத் தவறுகளுமில்லை என்றும், அவர்களின் நிலைமைகள் இங்கிலாந்திலும் இருப்பதைப் போன்ற பொருளாதாரச் சமமின்மையின் ஒரு பகுதிதான் என்றும், ஆங்கிலேய அரசின் ஒடுக்குமுறையான ஆட்சிதான் உண்மையில் தவறுகள் நிறைந்தது என்றும் ஆதிக்கச் சாதி இந்துக்களின் பிரதிநிதிகள் குழு பொய்யான வாதங்களின் மூலம் ஆங்கிலேயத் தொழிலாளர் கட்சியைத் தவறாக வழிநடத்தியது.

“இந்த வழியில், அவர்கள் ஆங்கிலேயத் தொழிலாளர் வர்க்கத்தின் இரக்கத்தைச் சம்பாதித்துவிட்டனர். ஆனால், ஆதிக்கச் சாதி இந்துக்களின் எல்லா முயற்சிகளுக்குப் பிறகு, ஆங்கிலேயத் தொழிலாளர் கட்சியை முழுமையாக அவர்களால் வெல்ல முடியவில்லை. இல்லையென்றால், தொழிலாளர் கட்சி இந்தியாவிலுள்ள  பொருளாதாரரீதியாக ஒடுக்கப்படும் மக்களைக் கவனித்துக்கொள்ளச் சொல்லிப் பிரதிநிதிகளை ஏன் எச்சரிக்கப் போகிறது? தொழிலாளர் சங்கத்தை உருவாக்குவதற்காகக் கடந்த டிசம்பரில் காங்கிரஸ் இயற்றிய தீர்மானத்தின் பின்னணியை இந்த மாதிரியான எச்சரிக்கை மர்மம் இன்றிப் புரிந்துகொள்ள முடியாது. ஆங்கிலேயத் தொழிலாளர் கட்சியின் அழுத்தத்தால் மட்டுமே இந்தத் தீர்மானம் இயற்றப்பட்டிருக்க வேண்டும். இல்லையென்றால், இந்தியாவிலுள்ள சமூக மற்றும் பொருளாதார ரீதியில் சுரண்டப்பட்ட மக்களின் சிக்கல்கள் குறித்து விவாதிப்பதன் மூலம் தங்கள் வாயை மாசுபடுத்திக்கொள்ளாத ஓர் அமைப்பு (காங்கிரஸ்) கடந்த ஆண்டில் மட்டுமே இதைச் செய்திருக்கிறதென்றால் அதற்கான காரணங்கள் என்ன? பார்ப்பனர்களின் ஆதிக்கம் நிறைந்த இந்தியத் தேசியக் காங்கிரசை அழுத்தியதின் மூலம் இந்த நல்ல பணிகளைச் செய்ய வைத்ததற்காக இந்தியாவிலுள்ள தொழிலாளர்கள் சந்தேகத்திற்கிடமின்றி ஆங்கிலேயத் தொழிலாளர் கட்சிக்கு நன்றி சொல்ல வேண்டும். மேலும், சமூகச் சமத்துவமின்மை பொருளாதாரச் சமத்துவமின்மையிலிருந்து வேறுபட்டது என்றும் சமூகச் சமத்துவமின்மை மிகவும் இறுக்கமானது மற்றும் தீவிரமானது என்றும் ஆங்கிலேயத் தொழிலாளர் கட்சிக்குப் புரிய வைக்க நாம் முயற்சிகளை மேற்கொண்டிருந்தால், நம் மீதான அவர்களின் (ஆதிக்கச் சாதியினர்) ஆட்சியாக இருக்கப்போகிற தன்னாட்சியைத் (சுயராஜ்ஜியத்தை) தடுத்திருக்கலாம். குறைந்தபட்சம், சுயராஜ்ஜியத்தில் நம்முடைய பிரதிநிதித்துவத்திற்கான ஏற்பாட்டை உண்டாக்குவதற்குத் தொழிலாளர் கட்சி ஆதிக்கச் சாதித் தலைவர்களை வலியுறுத்தியிருக்கும். ஆனால், தீண்டத்தகாத வகுப்பினரின் பலவீனத்தின் காரணத்தால் அவர்களுக்கு நன்மை செய்ய வேண்டியவர்களை (ஆங்கிலேயத் தொழிலாளர் கட்சியை) அவர்களின் எதிரிகள் வென்றுவிட்டனர். இது மீண்டும் நடக்காமல் தீண்டத்தகாத வகுப்பினர் பார்த்துக்கொள்ள வேண்டும்.

 

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!