“சாதி, பால்நிலை முரண்பாடுகளை உள்வாங்கிய ஜனநாயகமே அம்பேத்கரின் நிலைப்பாடு”

– வ.கீதா

இந்தியாவில் உள்ள பெண்ணியச் சிந்தனையாளர்களில் ஒருவர் வ.கீதா. வரலாற்றாளர், மொழிபெயர்ப்பாளர், கல்வியாளர், நாடகவியலாளர் எனப் பன்முகங்கொண்ட இவர், இவற்றையெல்லாம் பெண்ணிலைவாத நோக்கிலிருந்தும் அணுகியுள்ளார் என்பது இவரின் தனித்துவம்.

1980-களிலிருந்து இன்றுவரை தீவிரம் குன்றாமல் இயங்கி வரும் வ.கீதா தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். நவீனத் தமிழ்ச் சமூகத்தின் இரு நூற்றாண்டு அறிவியக்க வரலாற்றை எழுதுவதிலும் தேடுவதிலும் ஈடுபாடு கொண்டு பங்களித்துள்ளார். தமிழின் சமகாலச் சிந்தனையாளர்களில் ஒருவரான எஸ்.வி.ராஜதுரையோடு சேர்ந்து பல முக்கிய ஆக்கங்களைக் கொடுத்துள்ளார். பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் கட்சி எல்லைக்கு வெளியே சிந்தனையாளராக மீட்டு எழுதி, தமிழகத்தின் இன்றைய பெரியார் பற்றிய கவனத்திற்கு அடித்தளமிட்டவை இவர்களின் நூல்கள் என்றால் மிகையல்ல.

மேற்கின் மார்க்சிய, பின்னை மார்க்சிய, பெண்ணியச் சிந்தனை பள்ளிகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். தமிழுக்கு வெளியே கருத்தரங்குகளிலும் இதழ்களிலும் தமிழ்ச்சமூக அரசியல் வரலாறு பற்றி இன்றளவும் எழுதி வருகிறார். அவற்றுள் பெருமளவு தமிழில் மொழி பெயர்க்கப்படவோ நூலாகத் தொகுக்கப்படவோ இல்லை. தமிழிலிருந்து பல புனைவு மற்றும் புனைவல்லாத எழுத்துகள் ஆங்கிலத்திற்குச் செல்ல காரணமாக இருந்திருக்கிறார். பெருமாள்முருகனின் கூளமாதாரி, நிழல்முற்றம் ஆகிய நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

இவை தவிர காலக்கனவு உள்ளிட்ட ஆவண நாடகங்களின் ஆசிரியராக இருந்து நாடகவியலாளர் அ.மங்கையோடு சேர்ந்து அவற்றை மேடையேற்றியுள்ளார்.

அங்கீகாரங்களுக்கு வெளியே இயங்கி வந்த வ.கீதாவுக்கு அண்மையில் எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை சார்பில் தமுஎகச வழங்கும் ‘முற்போக்கு இலக்கிய இயக்கத்திற்கு வாழ்நாள் பங்களிப்பு செய்த ஆளுமைக்கான விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் பெறும் முதல் விருது இதுவாக இருக்கலாம்.

தமிழகத்திலும் தமிழகத்திற்கு வெளியிலும் இவர் நடத்திய அம்பேத்கர் வகுப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் தாக்கம் செலுத்திப் பலரையும் அம்பேத்கர் வாசிப்பின்பால் ஈர்த்தன. நண்பர்களோடு சேர்ந்து பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த ஏப்ரல் மாதத்தைச் சமூகநீதி மாதமாக அறிவித்து இவர் நடத்திய அரங்குகள் கவனம் பெற்றவை. தொடக்கத்திலிருந்தே மார்க்சியம், பெரியாரியம் ஆகியவற்றோடு அம்பேத்கர், அயோத்திதாசர், பௌத்தம் பற்றியும் இணைத்து யோசித்து வந்திருக்கும் வ.கீதா அண்மையில் அம்பேத்கர் பற்றிய ஆங்கில நூல் ஒன்றை எழுதி முடித்திருக்கிறார். தாயாரோடு சென்னையில் வசித்து வருபவரைச் சந்தித்து உரையாடினோம்.

 

தற்போது நீங்கள் செய்துகொண்டிருக்கும் வேலை பற்றிச் சொல்லுங்கள்.

தற்போது அம்பேத்கர் குறித்து ஒரு நூல் எழுதிக்கொண்டிருக்கிறேன். மார்க்ஸ், எங்கெல்ஸ், மார்க்சியம் என்கிற வரிசையில் சர்வதேச அளவில் புத்தகத் தொகுப்பைக் கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக பால்கிரேவ்-மேக்மில்லன் என்கின்ற பதிப்பகத்தார் வெளியிட்டு வருகிறார்கள். அந்த நூற்தொகுப்பின் பதிப்பாசிரியர் தமிழ்நாட்டில் நம் எல்லோருக்கும் அறிமுகமான மார்க்சிய ஆய்வாளர், அறிஞர், இத்தாலியைச் சேர்ந்த மார்சல்லோ முஸ்ட்டோதான். எஸ்.வி.ராஜதுரை (எஸ்.வி.ஆர்.) அவருடைய சில முக்கியமான நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். எஸ்.வி.ஆர். மூலமாக மார்சல்லோவின் அறிமுகம் கிடைத்தது.

2016-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு அவர் வந்திருந்தார். ஹைதராபாத் பல்கலைக்கழகம் முனைவர் பட்ட ஆய்வாளர் ரோகித் வெமுலாவின் மரணம், உனாவில் தலித்துகளின் எழுச்சிப் போராட்டம் ஆகியவை எல்லாம் அவரின் கவனத்தை ஈர்த்தன. சாதி, தலித்துகளின் எழுச்சி, அம்பேத்கர் குறித்துநிறையக் கேள்விகளை எங்களிடம் கேட்டார். நாங்கள் இவை குறித்தும், தமிழ்நாட்டின் சாதி எதிர்ப்பு மரபு பற்றியும் அவரிடம் சொன்னோம். பெரியார் பற்றிச் சொன்னோம். மார்க்சியம், சோசலிசம் குறித்து அம்பேத்கர் முன்வைத்த விமர்சனங்களைக் குறித்தும் பேசினோம்.

அவருடன் தொடர்பில் இருந்தேன். சோசலிசம் குறித்து அம்பேத்கர் எழுதியவற்றை அவரின் பல எழுத்துகளிலிருந்தும் தொகுத்து, உரிய விளக்கங்களுடன் முஸ்ட்டோவுக்கு அனுப்பி வைத்தேன். அவற்றைப் படித்துவிட்டு, “நீங்கள் ஏன் அம்பேத்கர் குறித்த நூல் ஒன்றை எங்களின் நூல்வரிசைக்காக எழுதக் கூடாது?” என்று கேட்டார். அவரின் வேண்டுகோளுக்கு இணங்கியே இந்த நூலை எழுதினேன். புத்தகத்தின் தலைப்பு ஆங்கிலத்தில், Bhimrao Ambedkar and the Question of Socialism in India.

சோசலிசம் குறித்து அம்பேத்கர் என்ன சொன்னார், எதைச் சொல்லவில்லை, அவர் மார்க்சியரா, இல்லையா என்பதற்குள் எல்லாம் நான் போகவில்லை. அம்பேத்கருடைய சிந்தனை உலகம் எப்படிப்பட்டது, அதை எவ்வாறு நாம் புரிந்துகொள்ளலாம், அந்தச் சிந்தனை உலகத்திலிருந்து நாம் சோசலிசத்தைப் பார்க்கும்போது அத்தத்துவம், அது சுட்டும் அரசியல் ஆகியன பற்றி நமக்கு எத்தகைய கேள்விகள் எழுகின்றன, சோசலிசத்தை மீள்கற்பனை செய்வதன் அவசியத்தை அம்பேத்கர் எவ்வாறு நமக்கு உணர்த்துகிறார் என்ற வகையில் இந்தப் புத்தகத்தின் வாதங்கள் அமைந்துள்ளன. ஏழு அலகுகளாக இந்நூலை எழுதியிருக்கிறேன். பவுத்தம் இதில் முக்கிய விஷயமாக இடம்பெறுகிறது. அவர் ஏன் பவுத்தத்தை முக்கியமான தத்துவமாக, அறமாகப் பார்க்கிறார், வரலாற்றுரீதியாக அதற்கென்று ஒரு வெகுமதி இருப்பதாக அவர் ஏன் கருதினார், சோசலிசத்திற்கும் பவுத்தத்துக்கும் உள்ள தொடர்பு குறித்துப் பேசுவதை அவர் ஏன் அவசியமானதாக நினைத்தார் என்ற விஷயங்களில் கவனம் செலுத்தியுள்ளேன்.

 

புத்தகத்தின் தலைப்பு ஆர்வமூட்டக்கூடியதாக இருக்கிறது. ஆங்கில இலக்கியம் படித்த நீங்கள் மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் சார்ந்த வாசிப்புகளுக்குள் எவ்வாறு நுழைந்தீர்கள்?

நான் சராசரி நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவள். வைணவப் பார்ப்பனக் குடும்பம். என் தாத்தா, அம்மாவுடைய அப்பா, தமிழ்ப் பத்திரிகை உலகில் முக்கியமான பங்கு வகித்திருக்கிறார். ஏறக்குறைய 40 ஆண்டுகள் – 1930-களில் தொடங்கி 1975 வரை – தினமணி பத்திரிகையின் துணையாசிரியராக வேலை செய்திருக்கிறார். அவர் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் இருந்தார். பெயர் ஏ.ஜி. வெங்கடாச்சாரி. காந்தியச் சிந்தனைக்கு ஆட்பட்டவர். சமூகக் கரிசனமும் ஏற்றத்தாழ்வுகளை அகற்ற வேண்டும் என்னும் அக்கறையும் அவருக்கு இருந்தன.

தாத்தா மகன்களையும் மகள்களையும் படிக்க வைத்திருந்தார். அம்மா அந்தக் காலத்தில் இளங்கலை சமஸ்கிருதம் படித்திருந்தார். மாகாணத்திலேயே முதல் மாணவியாக சமஸ்கிருதத்தில் தேர்ச்சி பெற்றவர். என்னுடைய வாழ்வில் அம்மாவுடைய பங்களிப்பை மிக முக்கியமாகப் பார்க்கிறேன். ஆறு வயதில் என்னை வீட்டுக்குப் பக்கத்திலுள்ள நூலகத்தில் கொண்டு போய்ச் சேர்த்தார். நான் மிகவும் அடம் பிடிக்கிற குழந்தை. என்னை அமைதிப்படுத்தப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

அப்பாவின் குடும்பம் வேறு மாதிரியானது. கீழத்தஞ்சையைச் சேர்ந்த குடும்பம். ஒரு காலத்தில் மிராசுதாரர்களாக இருந்திருப்பர். காலப்போக்கில் அந்தப் பகுதியில் வாழ்ந்த பார்ப்பனக் குடும்பங்கள் பலவற்றில் ஏற்பட்டது போன்று பங்காளிச் சண்டை ஏற்பட்டு, நிலம் கொஞ்சம் கொஞ்சமாகக் கைவிட்டுப் போய்விட்டிருக்கும்.

அப்பாவைப் பெற்ற அம்மா பரம சாது. ஆனால், அனைவரையும் அரவணைத்துப் போகும் மனநிலை. எனது ஒன்றுவிட்ட சகோதரர்கள் சாதி கடந்த, மதம் கடந்த திருமணங்களைச் செய்து கொண்டபோது அவர் முன்நின்று நடத்தி வைத்தார். அம்மாவைப் பெற்ற அம்மா அறிவாளி. குடும்ப வாழ்க்கை அவரின் அறிவை முடக்கிப் போட்டது. அவர் இக்காலத்தில் வாழ்ந்திருந்தால் பொது வாழ்க்கைக்குக் கண்டிப்பாக வந்திருப்பார்.

என்னுடைய அப்பா சட்டம் படித்தவர். ஆனால், வக்கீல் தொழிலைப் பின்பற்றவில்லை. அப்பா எதையும் வெளிப்படையாகப் பேசுபவர். அவருக்கு இயல்பாகவே நட்புணர்வும் நேசவுணர்வும் உண்டு. பேருந்தில் சென்றால் நடத்துநரோடு பேச ஆரம்பித்துவிடுவார். வீட்டிற்கு யாரேனும் வேலைக்கு வந்தால் அவருடைய தோள் மீது கைபோட்டு காபி கொடுப்பார். ஆனால், பிராமணர்கள் பலருக்கும் இருந்தது போல், பெரியார் மீது அவருக்கு வெறுப்பார்ந்த விமர்சனம் இருந்தது. நான் பெரியார் குறித்துப் பேசிய போதும், ஆய்வுகளைப் பகிர்ந்துகொண்ட போதும்தான் பெரியாரைப் பற்றித் தான் அதுவரை நினைத்திருந்தவை எவ்வளவு தவறானவை என்பதை வெளிப்படையாக அப்பா ஒப்புக்கொண்டார். நானும் எஸ்.வி.ஆரும் ஆங்கிலத்தில் எழுதிய Towards a Non-Brahmin Millennium: from Iyothee Thass to Periyar நூல் வந்தபோது பத்துப் பக்கத்திற்கு விமர்சனம் எழுதிக் கொடுத்தார். அவரின் கடைசி நாட்களில் பாபாசாகேபின் நூல்களை வாசிக்கத் தொடங்கியிருந்தார்.

இங்கு ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். நானும் அப்பாவும் வாழ்க்கையில் பெரிதாகச் சம்பாதிக்காவிட்டாலும், எங்களின் சாதி எங்களுக்கு மூலதனமாக அமைந்தது. பணம் இல்லை என்றாலும், இருக்க வீடு, படிக்கும் வாய்ப்பு, சமூகத்தில் ஏற்கெனவே இந்தச் சாதிக்குள்ள செல்வாக்கு என்று பல விஷயங்கள் நம்மை வெகு வசதியாக உயர்த்தி விடுகின்றன. சாதி என்பது ஒரு மனநிலை என்றாலும், அது மனநிலை மட்டுமல்ல என்று நமக்குத் தெரியும். அது பொருளாதாரத்தை, சமூக அந்தஸ்தைத் தீர்மானிக்கிறது. என் மனதிலிருந்து சாதி போய்விட்டது, பெரியார், அம்பேத்கர் குறித்துப் பேசுகிறேன் என்று நான் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், சாதி என்பது புறநிலைரீதியான கட்டுமானமுமாக உள்ளதால், நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அதன் தாக்கம், செல்வாக்கு செயல்படுகிறது. சுயசாதியை விமர்சிப்பது அவசியம், அதிலிருந்து கூடிய வரைக்கும் விலகி வாழ்தல் அவசியம் என்று நான் நினைத்தாலும், என் சாதியின் வரலாற்றை எளிதாகப் புறந்தள்ளிட முடியாது தானே? நான் நினைத்தாலும், அதன் நிழலை முற்றிலுமாகக் கடந்து விடவும் முடியாது. சலுகையாகக் கொண்டாலும் சுமையாக நினைத்தாலும் உயர்த்தப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்தவர்களுக்கு சாதி ஒரு வெகுமதிதான், மூலதனம்தான்.

 

தமிழகத்தில் இத்தகைய வாசிப்புகளை கல்விப் புலத்திற்கு வெளியே இயக்கரீதியாக பெற்றவர்களே அதிகம். இந்த நிலையில் இந்த வாசிப்புகளைப் பெற உங்களுக்குக் கல்விப்புலம் எந்த அளவிற்கு உதவியாக அமைந்தது?

என்னுடைய வாழ்க்கையில் கல்விப் புலங்கள் மிகப் பெரிய செயலாக்கத்தை நிகழ்த்தியிருப்பதாக நினைக்கிறேன். எனக்கு வரலாறு குறித்து ஆர்வம் ஏற்பட்டது ஆறாம் வகுப்பு ஆசிரியரால்தான். அவரின் பெயர் பத்மா. சங்கர் என்று ஒரு தமிழாசிரியர். தி.மு.க., பாணியில் பேசுவார். பாப்புலர் கல்ச்சரைப் பண்டையத் தமிழிலக்கியத்தில் இணைத்து இணைத்துச் சொல்லிக் கொடுப்பார். கம்பராமாயணம் குறித்துப் பேசும்போது கண்ணதாசனையும் பேசுவார். அவரின் வகுப்பில் இருப்பதே சந்தோஷமாக இருக்கும்.

சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியப் படிப்பில் சேர்ந்தேன். அக்கல்லூரியில் உயர் சாதியினர், உயர் வர்க்கத்தினர்தான் அதிகம் படித்து வந்தனர், குறிப்பாக, இலக்கியம் போன்ற துறைகளில். அந்தச் சு+ழல் எனக்கு நிறையக் கற்றுக் கொடுத்தது. “அப்பர் கிளாஸ்’ கல்ச்சரின் போதாமைகளைப் புரிந்துகொள்ள இந்த அனுபவம் வழிவகுத்தது.

கல்லூரியில் எங்கள் துறையில் சிறப்பான பேராசிரியர்கள் பலர் இருந்தனர். இப்பொழுதும் நான் அவர்களில் சிலருடன் தொடர்பில் இருக்கிறேன்.  ஜீன் ஃபர்னான்டஸ் (Jean Fernandes) என்பவரை நான் மறக்கவே மாட்டேன். அவர்தான் பெண்ணியம் குறித்த தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தினார். முதலாமாண்டில், 17-ஆம் நூற்றாண்டு ஆங்கிலக் கவிஞர் ஜான் மில்டனின் (John Milton)”பாரடைஸ் லாஸ்ட்’ (Paradise Lost) என்கிற நெடுங்கவிதை நூலின் ஒரு பகுதி எங்களுக்குப் பாடம். கடவுளுடைய தோட்டத்திலிருந்து ஆதாமும் ஏவாளும் வெளியே தள்ளப்படும் நிகழ்வைச் சித்திரிக்கும் பகுதி அது. அதில் ஆதாம் பற்றிய விவரணையை விளக்குகையில், மில்டன் எவ்வாறு ஆணாதிக்க நிலைப்பாட்டிலிருந்து சிந்தித்து எழுதியுள்ளார் என்பதை ஜீன் ஃபர்னான்டஸ் சுட்டிக் காட்டினார். முக்கியமான கவிஞரை இப்படி விமர்சனம் செய்ய முடியும் என்று அவர் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்.

ஒரு வகுப்பில், பெண் எழுத்தாளர் ஒருவரின் எழுத்தை விளக்குகையில் பிரெஞ்சுப் பெண்ணியச் சிந்தனையாளர் சிமோன் த பொவோரின் (Simone De Beauvoir) கருத்துகளை மேற்கோளிட்டு, “இவரைப் பற்றித் தெரியாமல் பல்கலைக்கழகப் படிப்பு படிக்க வந்துவிட்டீர்கள்!” என்று எங்களைக் கோபத்துடன் விமர்சித்தார்.

ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகு டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் செல்வதற்கு ஆசைப்பட்டேன். அப்பா அனுப்ப முடியாது என்று சொல்லிவிட்டார். சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் போய்ச் சேர்ந்தேன்.

நான் படிக்கும்போது தயானந்தன் சார் தாவரவியல் பேராசிரியராக இருந்தார். அவரின் தீவிர அரசியல் சிந்தனை பற்றி அப்போது நான் அறிந்திருக்கவில்லை. பிற்காலத்தில்தான் அவரின் சாதி எதிர்ப்பு அரசியல் குறித்துத் தெரிந்துகொண்டேன்.

எங்களுக்குப் பாடம் எடுத்தவர்கள் இடதுசாரிகள், முற்போக்காளர்கள் என்றெல்லாம் நான் சொல்லமாட்டேன். தங்களுக்குத் தெரிந்தவற்றை மாணவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும் என்ற அக்கறையும் வேகமும் அவர்களிடம் இருந்தன.

ராபர்ட் பர்ன்ஸ் (Robert Burns) என்கிற ஒரு ஆசிரியர். ஆங்கிலோ-இந்தியர். அவரின் அரசியல் கருத்துகளுடன் உடன்பட முடியாது. பெண்ணியத்தை விமர்சிப்பார். கத்தோலிக்கச் சமயத்தின் அருமைபெருமைகளைப் பேசுவார். ஆனால், மிகச் சிறந்த ஆசிரியர்.

நிர்மல் செல்வமணி – தமிழசை குறித்த ஆய்வுகளைச் செய்தவர் – மற்றொரு சிறந்த ஆசிரியர். அவர் ஒரு ஜாஸ் கிடாரிஸ்ட். நாங்கள் அவரை எங்களில் ஒருவராக, நண்பராகப் பார்த்தோம். அவர் வகுப்பு என்றாலே, “சார் வகுப்பு வேண்டாம், நாம் வெளியில் அமர்ந்து பேசுவோம்’ என்று சொல்லிவிடுவோம். அவர் மிக வித்தியாசமான பேராசிரியர். எங்களுக்கு நாங்கள் அறியாத சிந்தனை மரபுகளை அறிமுகப்படுத்தியவர், குறிப்பாக, சமயம் சார்ந்த பண்பாட்டு, தத்துவ மரபுகள். 
எங்கள் அனைவருக்கும் புகலிடமாக இருந்தவர் எங்கள் ரஜானி (Rajani) சார். கவிதைகளைப் புரிந்து கொள்ள, ரசிக்க அவரின் வகுப்புகள் உதவின. நாடகங்கள் இயக்குவார். அவரின் நாடகங்களில் நான் தொடர்ந்து தயாரிப்புப் பணிகளில் பங்கேற்றுள்ளேன். செட் டிசைன், நடிகர்களை ஆற்றுப்படுத்துதல் என்று பல வேலைகளைக் கற்றுக்கொண்டேன்.

கிறிஸ்துவக் கல்லூரியின் வரலாற்றிலேயே இரண்டு பெண்கள் மட்டும்தான் மாணவர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார்கள். அதில் நானும் ஒருத்தி. தேர்தலில் நின்று தோற்றுப் போனேன். நான் படித்த நாட்களில் இடதுசாரி அமைப்பு இல்லை. அன்றைய மாணவர் சங்கத் தலைவர் காங்கிரஸ் கட்சியை ஆதரித்தவராக இருந்தார். கல்லூரியில் அன்றைக்குக் கிறிஸ்துவ மாணவர் இயக்கத்துக்குச் செல்வாக்கு இருந்தது. அவர்களின் பிரதிநிதிகள்தான் மாணவர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றனர்.

நான் பயின்ற இரண்டு கல்லூரிகளிலும் வாசித்தல் என்பதன் நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. இலக்கியக் கல்வி கிடைத்தது. பின்னாட்களில் அரசியல் பனுவல்களைப் படிக்கும்போதும், பல விஷயங்களை ஆராய வரும்போதும் அந்தக் கல்வி எனக்கு மிகவும் உதவியது.

 

இந்நிலையில் உங்களுக்கு அரசியல் சிந்தனைகள் எவ்வாறு வந்தன?

எங்கள் தலைமுறையை – 1980-களில் தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களாக இருந்தவர்களை – இலங்கையில் நிகழ்ந்த கோர நிகழ்வுகள், குறிப்பாக வெளிக்கடை சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்ட நிகழ்வு தொடங்கி நிகழ்ந்த கறுப்பு ஜூலை நிகழ்வுகள் அரசியலில் ஈடுபடுத்தியது. அந்நிகழ்வைக் கண்டித்து மாணவர்கள் வீதிக்கு வந்தனர். பதினைந்து, இருபது நாட்கள் எல்லாக் கல்லூரிகளும் மூடப்பட்டன. நான் கலந்துகொண்ட முதல் அரசியல் போராட்டம் அதுதான்.

இளங்கலைப் படிப்புக்கும் முதுகலைப் படிப்புக்கும் இடையிலான காலகட்டத்தில் மார்க்சியம் பற்றிப் படிக்கத் தொடங்கியிருந்தேன். ஸ்டெல்லா மேரிஸில் கற்றுக் கொண்ட சில விஷயங்களும் எனது அரசியல் அறிவை வளர்த்திருந்தன. இந்தக் காலகட்டத்தில் பெண்ணியம், பெண் விடுதலை விஷயங்கள் குறித்து நிறையவே யோசிக்கத் தொடங்கியிருந்தேன்.

இந்த எல்லா விஷயங்களும் சேர்ந்து ஏதேதோ பரிசோதனைகளை மேற்கொள்ளத் தூண்டின. கிறிஸ்தவக் கல்லூரி மாணவர்கள் வீதி நாடகக் குழு ஒன்றை உருவாக்கினோம். மாணவர்கள் பிரதிநிதியாகக் கல்லூரியின் கரிகுலர் கமிட்டியிலும் செனட்டிலும் உறுப்பினராக இருந்தேன். நிறைய சண்டைகள் போட்டோம். பாடத்திட்டம் குறித்து, மாணவர்கள் நடத்தப்படுவது குறித்து…

பெண்ணியம் என்பது குறித்து யோசிக்கத் தொடங்கிய காலகட்டத்தில் ஆழமான பெண் தோழமைகளும் எனக்கு அமைந்தன. ஸ்மிருதியை (ளுஅசவைi) நான் அச்சமயம்தான் சந்தித்தேன். அவள் தோழி, வழிகாட்டி, உறவு எல்லாம். அமெரிக்காவில் மானுடவியல் பேராசிரியராக இருக்கிறாள். எனக்குப் பவுத்தத்தின் மீது நாட்டம் வளர்த்தவர்களில் அவளுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. கடவுள், சமயம் குறித்து அவளுக்கு ஒரு தீவிரமான பார்வை. நானும் அவளும் நிறைய விஷயங்களைச் சேர்ந்து யோசித்தோம். 60-களில் அமெரிக்காவில் நிகழ்ந்த மாபெரும் மாணவர் எழுச்சி, பெண்கள் தங்களுக்கென்று சுயாதீனமான வாழ்க்கையை அமைத்துக்கொண்ட விதம், ஆப்பிரிக்க-அமெரிக்க மக்களின் சிவில் உரிமைப் போராட்டங்கள் ஆகியன தூண்டிவிட்டிருந்த மாற்று வாழ்க்கை முறைகள், குறிப்பாக, 19-ஆம் நூற்றாண்டிலிருந்தே அந்த நாட்டில் ஏற்பட்டிருந்த கூட்டு வாழ்க்கை – கம்யூன் (உழஅஅரநெ) – முறை ஆகியன எங்கள் மீது தாக்கம் செலுத்தின.

நமக்குத் திருமணம் வேண்டாம், நாம் பெண்களாகச் சேர்ந்து கம்யூனாக வாழ வேண்டும், ஆண்கள் அதில் இடம் பெறுவது குறித்துப் பிறகு யோசிக்கலாம், அப்படியே அவர்கள் வந்தாலும், பெண்கள் தலைமையில்தான் கம்யூன் இருக்க வேண்டும் என்றெல்லாம் விவாதித்தோம்.

எங்களுக்கு ஸ்ரீதர் என்கிற நண்பர் இருந்தார். அவர் எங்கெல்ஸ் படித்துவிட்டு எங்களிடம் நிறையப் பேசுவார். தாயும் அவளுடைய குழந்தையும்தான் அடிப்படையான சமூக அலகு என்று அடிக்கடிச் சொல்வார். இந்த மாதிரியானக் கருத்துகள் எங்களை உற்சாகப்படுத்தின.

ஒவ்வொரு காலகட்டத்திலும் நிறையப் பெண் தோழிகள் எனக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். இத்தகைய பெண் தோழமைகளைப் பெண்ணியத்திற்கான அடித்தளமாக, பலமாகப் பார்க்கிறேன். பெண்களின் உலகம் என்பதை அரசியல்ரீதியான கட்டமைப்பாகப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. பெண் என்று சொல்லும்போது பிறப்பால் பெண்ணாக அடையாளப்படுத்தப்படுபவர்களை மாத்திரம் சொல்லவில்லை. பாலின வேறுபாடுகளையும் அவற்றின் அடிப்படையிலான அதிகாரங்களையும் கலைத்துப் போட்டு, வேறு வேறு வகைகளில் பாலின அடையாளங்களைக் கட்டமைத்து வாழும் குவியர் (ஞரநநச) அரசியலுக்கான உலகமாகவும் அதைக் கொள்ளலாம்.

 

மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற போது அரசியல்ரீதியாக நீங்களடைந்த தாக்கங்கள் எத்தகையவை?

நான் அங்கு மாணவியாக இருந்த காலகட்டம் குடியரசுக் கட்சியின்  (Republican Party) ஆட்சிக்காலம். அக்கட்சியின் அரசியல் ஆப்பிரிக்க-அமெரிக்க (கறுப்பின) மக்களின் உரிமைகளைப் பொருட்படுத்தாத, அவர்களின் போராட்டங்களை முக்கியமானவையாகக் கருதாத ஒன்று. கறுப்பின மக்களின் அடிமைத்தனம் வரலாற்றில் எவ்வாறு நிகழ்ந்தது, அதன் பாதிப்பு, அம்மக்களின் இன்றைய கதி என்பன போன்ற விஷயங்களை அறியாதவராக அந்நாட்டில் வளர்ந்திட முடியும். குறிப்பாக, இந்தக் காலகட்டத்தில் அது சாத்தியமானதாக இருந்தது. வலதுசாரிகளின் ஆட்சி அத்தகைய மறதியை ஏற்படுத்தவல்லதுதானே?

அந்தச் சூழலில் படித்துக்கொண்டே டீச்சிங் அசிஸ்டென்ட் ஆக இருந்தது நிறைய விஷயங்களைக் கவனிக்க, கற்றுக்கொள்ள உதவியது. குறிப்பாக, ஊடகங்களின் தாக்கத்தில் வளர்ந்த, வரலாறு மறந்த தலைமுறைக்குப் பாடம் நடத்தும்போது எத்தனை பொறுமையாக, நாசூக்குத்தனமாக இருக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டேன். எனது மாணவர்களில் ஏறக்குறைய அனைவரும் வௌ;ளை இனத்தவர் வேறு. கற்றுக்கொள்ளத் தயாராக இருந்தாலும், கறுப்பின மக்களின் வாழ்வியல் குறித்தோ, உலகின் பிற நாடுகளில் மக்கள் வாழும் விதம் குறித்தோ அவர்கள் ஏதும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால், அதே சமயம் வேற்றாளாக, வேறு நாட்டினராக இருந்த போதும், நாம் சொல்வதை உடனடியாக அவர்கள் புறந்தள்ளவும் இல்லை. குறைந்தபட்ச, அன்றாட ஜனநாயகம் ஏதோ ஒரு வகையில் அந்நாட்டில் உள்ளது. இப்போது நினைத்துப் பார்க்கிறேன், அம்பேத்கருக்கு அது எவ்வளவு வேறுபட்ட உலகமாக இருந்திருக்கும் என்று. 
நான் அங்குப் படித்த காலகட்டத்தில் மார்க்சியம் குறித்த மீளாய்வு அமெரிக்க அறிவு வட்டாரங்களில் நடந்துகொண்டிருந்தது. சோவியத் மார்க்சியத்தைக் கடந்து ஐரோப்பிய, தென் அமெரிக்க மார்க்சியங்கள் குறித்த விவாதங்கள் விறுவிறுப்பாக நடந்த காலகட்டம் அது. எனது ஆசிரியர்களில் ஒருவர் – தாமஸ் லூயிஸ் (Thomas Lewis) – இடதுசாரி அறிவாளர். தென் அமெரிக்காவில் உள்ள பல இடதுசாரி மக்கள் இயக்கங்களோடு அவருக்குத் தொடர்பு இருந்தது. மேற்கத்திய மார்க்சியமும் இலக்கிய விமர்சனமும் என்கிற பாடத்தை அவரிடம் பயின்றேன்.

பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வந்த பெண்ணிய அமைப்பில் என்னை இணைத்துக்கொண்டேன். பல நாடுகளிலிருந்து மாணவர்கள் வந்து படிக்கும் பல்கலைக்கழகமாக (ஐயோவா) இருந்ததால், வேறு நாட்டவர்களுடன், குறிப்பாக வௌ;ளை இனத்தவர்கள் அல்லாதவர்களுடன் தோழமையுடன் பழகும் வாய்ப்பும் இருந்தது. பாலஸ்தீனிய மாணவர்கள் இயக்கம், தென்னாப்பிரிக்க மாணவர்கள் இயக்கம் முக்கியமான இயக்கங்களாக இருந்தன.

நான் குடியிருந்த வீட்டின் ஒரு பகுதியில் ஆண்களும், பெண்களுமாகச் சீன மாணவர்கள் தங்கியிருந்தார்கள். அவர்கள் எல்லோருமே சீனப் பண்பாட்டுப் புரட்சியின் குழந்தைகள். சிறு வயதிலேயே குடும்பங்களில் வளராது, கம்யூன்களில் வளர்ந்தவர்கள். கூட்டு வாழ்க்கை என்பது அவர்களுக்கு இயல்பானதாக இருந்தது. சீன மாணவி ஒருவர் எனக்கு நல்ல தோழியானாள். அவள் மொழிபெயர்ப்பாளராக இருந்தவள். மேற்படிப்புக்காக அமெரிக்கா வந்திருந்தாள். மாவோவுடைய புரட்சி, அது சாதித்தது, சாதிக்க இயலாமல் போனது, தனது குடும்பத்தினருக்கு ஏற்பட்ட கதி என்று ஒரு மிகப் பெரிய உலகத்தை எனக்குக் காண்பித்தாள்.

ஈரான், ஈராக் நாடுகளிலிருந்து இரண்டு நல்ல நண்பர்கள் எனக்கு இருந்தார்கள். நாயிரெ தொகிதி (Nayereh Tohidi) என்னும் ஈரானியப் பேராசிரியர். பெண்ணியவாதி. எனது வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். ஈரானியப் புரட்சியின் அவலங்களை அனுபவரீதியாக அறிந்தவர். இடதுசாரிச் சிந்தனையுடைய அவர், மதம்சார் அரசியலின் தன்மை குறித்துப் பேசுவார், குறிப்பாக, அத்தகையவர் ஆட்சிக்கு வந்தால், அது சர்வாதிகாரத்திற்கும் ஊழலுக்கும் எவ்வாறு வழிவகுக்கும் என்பதைச் சுட்டிக்காட்டுவார். மதச் சர்வாதிகாரத்துக்கு எதிராகப் பெண்ணியம் பேசுவதைக் கொள்கையாகக் கொண்டிருந்தார்.

நானும் இவர்களும் மற்றுமொரு மாணவரும் சேர்ந்து ஏசியன் ரவுண்ட் டேபிள் என்ற அமைப்பை உருவாக்கி, மாதமிருமுறை கூட்டங்கள் நடத்துவோம். நாயிரெ பேசிய  பெண்ணியம் இஸ்லாத்திற்கு மாறிய கறுப்பின மக்களின், ஆண்களின் விமர்சனத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

பல்கலைக்கழகம் என்பதால் பல பேச்சாளர்கள் வந்து செல்வார்கள். கறுப்பினத் தலைவர் ஜெசி ஜாக்சன்  (Jesse Jackson), சிவில் உரிமைப் போராளி, அறிவாளர் நோம் சோம்ஸ்கி (Noam Chomsky), பாலஸ்தீனச் சிந்தனையாளர் எட்வர்ட் சையத் (Edward Said)போன்றோருடன் உரையாடும் வாய்ப்பு என்னைப் போன்றவர்களுக்கு வாய்த்தது. அவை மறக்க முடியாத அனுபவங்கள்.

 

இந்தியாவிற்கு திரும்பிய நீங்கள் இங்கு எத்தகைய வேலைகளில் ஈடுபட்டீர்கள்? உங்களுடைய தோழமைகள் யாராக இருந்தனர்?

தமிழ்நாட்டைச் சேர்ந்த செலின் (Celine) என்பவர் பெங்களூருவில் ஸ்த்ரீலேகா (Streelekha) என்கிற புத்தகக் கடை வைத்திருந்தார். இந்தியாவின் முதல் பெண்ணியப் புத்தகக் கடை அது. நான் இந்தியா திரும்பியதும் அவரைச் சந்தித்த போது, “மதுரையைச் சேர்ந்த ரீட்டம்மா டேவிட் என்பவரை நீ கட்டாயம் சந்திக்க வேண்டும்” என்றாள். ரீட்டம்மா அப்பொழுது சென்னையில் இருந்தார். ரீட்டம்மா, ஷரீபா ஆகியோரை 1988-இல் முதன்முதலில் சந்தித்தேன். ரீட்டம்மாவும் ஆங்கில இலக்கியம் படித்திருந்தார். அதில் முதுகலைப் பட்டம். மதுரை பெண்ணுரிமை இயக்கத்துடன் அவருக்குத் தொடர்பு இருந்தது. “தமிழ்நாட்டில் பெண்ணியம் பற்றி எதைச் செய்ய வேண்டுமானாலும் இவர்களை எல்லாம் நீ சந்தித்தாக வேண்டும்” என்று கூறி, “நீ உடனடியாகப் போய்ச் சந்திக்க வேண்டியவர்கள் இவர்கள்தான்” என்று கூறி, இருவரின் பெயர்கள், முகவரிகளை ரீட்டம்மா கொடுத்தார்.

அந்த இருவர் லல்லி, ஓவியா. லல்லி லேபர் இன்ஸ்பெக்டராக இருந்தார். அச்சமயம் திருநெல்வேலியில் இருந்தார். ஓவியா கன்னியாகுமரி மாவட்டத்தில்.

ஓவியா, படிப்பு வட்டம், பத்திரிகை (புதிய குரல்) என்று முக்கிய வேலைகளைச் செய்துகொண்டிருந்தார். பெரியாரியப் பெண்ணியக் கருத்துகளில் தீவிரமான பற்று. அவற்றைக் காலத்துக்கு உகந்த வகையில் விளக்கி, பேசி, எழுதி… அவரைப் பார்த்ததும் பிடித்துப் போய்விட்டது. முதல்முறையாகச் சந்தித்தவர் மாதிரி இல்லாமல், பல நாட்கள் பழகிய மாதிரி அப்படிப் பேசினோம். அன்று முதல் இன்று வரை அந்தத் தோழமையும் பாசமும் உள்ளபடியே உள்ளது.

தமிழ்நாட்டில் இருவர்தான் அப்பொழுது பெண் லேபர் இன்ஸ்பெக்டர்களாக இருந்தனர். ஒருவர் கண்ணகி பாக்கியநாதன், இன்னொருவர் லல்லி. பெண் பீடித் தொழிலாளர்கள் வேலை செய்த பகுதிகளில்தான் அவருக்கு ஆய்வாளர் வேலை. இரவு நேரத்தில் பெண்களுக்கு நேரம் இருக்கும்போது ஊர் ஊராகச் சென்று அவர்களைச் சந்திப்பார். அவர்களின் உரிமைகள், சட்டம் கூறும் விஷயங்கள், சொந்தப் பிரச்சனைகள் என்று பல விஷயங்களைப் பேசி வருவார். தனக்கான பணிகளின் எல்லையை, கடமையைக் கடந்து வேலை பார்த்தார். அந்தப் பகுதியில் பெண்களுக்குப் பேறுகால விடுப்பு போன்ற உரிமைகள் எல்லாம் கிடைத்தது என்றால், அதற்கு முக்கியக் காரணம் லல்லியின் உழைப்பு

செலின் எனக்கு அறிமுகப்படுத்திய மற்றொருவர், மா என்ற பெயரில் இன்று எழுதிவரும் பத்மாவதி. அவரின் மூலமாக வேறு சிலரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. குறிப்பாக, சென்னையில் இயங்கிய மண்டே சாரிட்டி கிளப்  (Monday Charity Club) என்ற அமைப்பு ஏற்பாடு செய்த கூட்டங்களில் கலந்துகொண்ட ஜனநாயக மாதர் சங்கம் உட்பட்ட பல பெண்ணிய அமைப்புகளைப் பற்றித் தெரிந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அப்படிப்பட்ட ஒரு கூட்டத்தில்தான் மைதிலி சிவராமனைச் சந்தித்தேன். நான் அதிகமாக நேசிக்கும், மதிக்கும் பெண்ணிய, மார்க்சியச் சிந்தனையாளர்களில் அவரும் ஒருவர். தன்னை முன்நிறுத்திக் கொள்ளாத, ஆனால், அழுத்தமாக, ஆழமாகச் சிந்தித்து வேலை பார்த்தவர். அவருடைய தலையீடு இல்லாதிருந்தால், வாச்சாத்தி வழக்கு நடந்த சுவடுகூட இல்லாமல் மறக்கடிக்கப்பட்டிருக்கும். 1960-களில் கம்யூனிச வட்டாரங்களில் சாதி, பெண்ணடிமைத்தனம் குறித்துப் பேசியவர். சாதி, வர்க்கம், பெண் ஒடுக்குமுறை ஆகிய மூன்றும் சந்திக்கும் புள்ளிகளை ஆரவாரமின்றி இனங்கண்டு செயல்பட்டவர்.

1988-இல் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பெண்ணியப் புத்தகங்களைக் காட்சிப்படுத்தினால் என்ன என்று தோன்றியது. எனது கிறிஸ்தவக் கல்லூரி ஆசிரியர்கள் மூலம் டி.ஆர்.பப்ளிகேஷன் என்ற நிறுவனத்தை அறிந்திருந்தேன். சென்னைப் புத்தகக் கண்காட்சியின் அமைப்புக் குழுவில் முக்கியப் பங்கு வகித்தனர். அவர்களைச் சந்தித்துப் பெண்ணிய நூல்களை வைக்க ஸ்டால் ஒன்றை இலவசமாக ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று கேட்டேன். அவர்கள் அதை எதிர்பார்க்கவில்லை. ஆனால், ஒத்துக்கொண்டார்கள்.

ஸ்டால் கேன்டீனுக்குப் பக்கத்தில். நிறையப் புத்தகங்கள் விற்கவில்லை என்றாலும், நிறையப் பெண்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. வந்து போனவர்கள் விருப்பப்பட்டால், அவர்கள் பெயர், முகவரிகளை எழுதிவிட்டுப் போகச் சொன்னோம். பெண்ணிய அமைப்பு உருவாக்கும் முயற்சியில் இருப்பதாகவும் விளக்கினோம்.

இவ்வாறு சுமார் 80 பேர், ஆண்களும் பெண்களுமாகப் பெயர்களை எழுதிக் கொடுத்தார்கள். முதல் கூட்டம் தி.நகரில் நடந்தது. ஏறக்குறைய 45 பேர் வந்தார்கள். ஆண்களும் இருந்தனர். கூட்டத்தின் முடிவில், ஆண்கள் வந்தாலுமே பெண்கள் மட்டும் உள்ள அமைப்பை உருவாக்கும் முயற்சியை மேற்கொள்ளப் போவதாக அறிவித்தோம்.

கூட்டத்துக்கு வந்தவர்களில் ஜெயந்தி, மீனா ஆகிய இரண்டு மாணவிகளும் இருந்தனர். அவர்கள் இன்றுவரை அன்புத் தோழிகளாக உள்ளது போக, பெண்ணிய அரசியல் சிந்தனையுடன் அவரவர் பணியிடங்களில் வேலை செய்து வருகின்றனர். பத்மாவதி, இவர்கள், நான், சென்னை ஐ.ஐ.டி.யில் அன்று பணிபுரிந்து வந்த எழுத்தாளர் வத்சலா, ஹேமா, நிஷா (இவர் மராத்திய மாநிலத்தைச் சேர்ந்தவர்), கேரளாவைச் சேர்ந்த சில மாணவிகள் என்று ஒரு சிறு குழு உருவானது. பத்மாவதி ஏற்பாடு செய்த ஓர் இடத்தில் வாராவாரம் சந்திக்கத் தொடங்கினோம். ஓரிரு கூட்டங்களுக்குப் பேராசிரியர் சரஸ்வதி வந்தார். அவர் பல தளங்களில் அன்று பிஸியாக வேலை பார்த்து வந்தார். ஈழப் பிரச்சனை, மாணவிகள் மத்தியில் பெண்ணியக் கருத்துகளைக் கொண்டு செல்லல்… நாம் தமிழகப் பெண்கள் அமைப்பாக உருவெடுக்க வேண்டும் என்றார். ஆனால், வேற்று மாநிலத்துப் பெண்களும் இருந்தார்களே! இருந்தாலும், அப்படியான ஓர் அமைப்பாக இருந்து பார்த்தோம். ஆனால், அது பொருத்தமாக இருக்கவில்லை. நிறையப் பேருக்கு “நாம் தமிழகப் பெண்கள் என்ற பெயரை ஏன் சுமக்க வேண்டும்?” என்ற கேள்வி இருந்தது. சரஸ்வதியும் வேறு வேலைகள் இருந்ததால், வாராந்தரக் கூட்டங்களுக்கு வருவதை நிறுத்திக் கொண்டார்.

1989-இன் இறுதியில் நாங்கள் “சிநேகிதி” என்ற பெயரை எங்கள் குழுவுக்கான பெயராகத் தேர்ந்தெடுத்தோம். எங்களுடன் அனு, கலைச்செல்வி ஆகியோர் இணைந்தனர். பிறகு கீதா நாராயணன், சகீனா, கீதா உல்ஃப், சாந்தினி, முருகவள்ளி, ரஞ்சனி என்று பலரும் சிநேகிதியுடன் இணைந்தனர். தலித் பெண்கள் உட்பட பல சாதிகள், வர்க்கங்கள் சேர்ந்த குழுவாக இது இருந்தது. ஆணாதிக்கச் சமுதாயத்தின் மீது எங்களுக்கிருந்த கேள்விகள், கோபம், ஆற்றாமை ஆகியன எங்களின் தோழமையை வளப்படுத்தின. சிநேகிதி அமைப்பு குடும்ப வன்முறை தொடர்பாகத் தமிழ்நாடு இலவசச் சட்ட உதவி மையத்துடன் இணைந்து ஏழு ஆண்டுகள் வேலை செய்தது.

இச்சமயம்தான் அகில இந்தியப் பெண்கள் மாநாடு தயாரிப்புக் கூட்டம் கோழிக்கோட்டில் நடந்தது. அதற்குச் சென்று வந்த அனுபவம் சுவையானது. இந்தியப் பெண்கள் அமைப்புகள், இயக்கங்கள் பற்றி ஓரளவுக்குத் தெரிந்துகொள்ள அது உதவியது.

தமிழ்நாட்டில் அன்று செயல்பட்டு வந்த பெண்ணிய ஆளுமைகளில் ஒரு சிலரை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 1981-இலிருந்து அரக்கோணம் பகுதியில் தலித் மக்கள் மத்தியிலும், குறிப்பாக, தலித் பெண்கள் மத்தியிலும் வேலை செய்து வந்த பர்னாட் ஃபாத்திமா அவரின் அமைப்பு மகளிர் குரல் என்ற இதழை வெளியிட்டு வந்தது. 1986-இல் பாரதி சுட்டும் விழிச்சுடர் என்ற பெண்ணிய இதழைத் தொடங்கியிருந்த சுபத்ரா, அவளுடன் அன்று வேலை பார்த்து வந்த சாலை செல்வம் திண்டுக்கல்லில் பல தீவிரப் பெண்ணிய முயற்சிகளை முன்னெடுத்த லூசி சேவியர் சென்னையில் உழைக்கும் பெண்கள் மத்தியில், குறிப்பாக, குடிசைவாழ் பெண்கள் மத்தியில் அவர்களின் வாழ்வுரிமைக்காகவும் குடியிருப்பு உரிமைக்காகவும் அவர்களுடன் இணைந்து செயல்பட்ட பெண்ணுரிமை இயக்கம், அதில் முக்கியச் செயல்பாட்டாளராக இருந்த லீலாவதி, ஆர்.கீதா 1990-களில் புதுக்கோட்டையில் பெண்கள் தொடர்பான பல பிரச்சினைகளை எடுத்து, அவற்றுக்காக கோர்ட், கேசு என்று அலைந்த ஷரிஃபா; மதுரையில் தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் பணிபுரிந்துகொண்டே தலித் பெண்கள், சாதி, மதம் தொடர்பான விவாதங்களை முன்வைத்துச் செயல்பட்ட கேப்ரியல் டீட்ரிச், நாகப்பட்டினத்தில் மீனவப் பெண்கள் மத்தியில் பெண்கள் அமைப்பு அமைத்திருந்த ஜேசுரத்தினம், திருவண்ணாமலையில் அமைதியாக, ஆனால், அழுத்தமாகத் தலித் பெண்கள் மத்தியில் வேலை பார்த்த ராஜம்மாள், இராமநாதபுரத்தில் மார்க்சிய-லெனினிய அமைப்பு ஒன்றுடன் இணைந்து செயல்பட்ட சந்தனமேரி, கிறிஸ்தவ அமைப்புகளில் இருந்த தோழிகள் – அனைவரும், அருட்சகோதரிகள் –  கிளேர், சாந்தி, கோன்ரட், கிளாரிபெல், அல்போன்ஸ், ஜோசபின், சந்தானம், பெண்சிசுக் கொலைப் பிரச்சினையை ஒட்டி அன்று வேலை பார்த்து வந்த காந்திமதி, பவளம் சென்னைக் குடிசைப் பகுதிகளில் தொடங்கி தமிழகமெங்கும் பல அமைப்புகளை நிறுவி, தலித் பெண்களுடன் தொடர்ந்து வேலை பார்த்து வரும் ஷீலு வேறு மாநிலத்திலிருந்து வந்து மதுரையில் மாணவிகள் மத்தியில் வேலை செய்யத் தொடங்கியிருந்த பிம்லா; இன்றைக்கு 30 ஆண்டுகளுக்கு முன் இளம் தலித் அட்வகேட்டாகத் தனது பணிகளைத் தொடங்கியிருந்த எப்சிபாய்……

கோழிக்கோடு பெண்கள் மாநாட்டுக்கான தயாரிப்புப் பணிகளைத் தமிழ்நாட்டில் செய்தபோது இவர்களையும் இன்னும் பலரையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. நாம் இன்று நினைப்பது போல் இல்லாமல், அன்று உயர்த்தப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்த பெண்கள் மட்டும் பெண்ணியம் பேசவில்லை. பல நிலைகளிலிருந்து பெண்கள் பேசினோம்.

1990-களில் தலித் பெண்கள் தனி அமைப்பாகத் திரள வேண்டியிருப்பதன் அவசியத்தை ரூத் மனோரமா போன்றவர்கள் முன்வைத்தபோது, சிலர் அதன் நியாயத்தை ஏற்றுக்கொண்டோம், சிலர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், எங்களுக்கு இடையிலான பெண்ணியத் தோழமையை அது குறைக்கவில்லை. சேர்ந்து வேலை பார்க்கும் பொழுதுகளை எல்லோரும் எதிர்பார்த்து இருந்தோம். எந்த முரண்பாடும் கருத்தளவில் தீர்க்கப்படுவது கிடையாது. காலமும், நாம் செய்யும் வேலையும்தான் இவற்றைத் தளர்த்துகின்றன.

தமிழக அளவில் நாங்கள் இணைந்து உருவாக்கிய தமிழகப் பெண்கள் ஒருங்கிணைப்பு இயக்கத்தில் இருவர் மட்டுமே பார்ப்பனப் பெண்கள். ஏனையோர் தலித், பார்ப்பனரல்லாத, குறிப்பாக பி.சி., எம்.பி.சி., சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களின் அனுபவங்கள், வாழ்வியல் தொடர்பான விஷயங்கள் ஆகியன எனக்கு நிறையவே சாதி குறித்தும், பார்ப்பனியம் குறித்தும் எனது அனுபவ, அறிவு வரம்புகளைப் பற்றியும் சொல்லிக் கொடுத்தன. வாயை மூடிக் கொண்டு அடக்கத்துடன் இருக்க, கற்றுக்கொள்ள ஒருங்கிணைப்பு உதவியது. எனது சாதி எதிர்ப்பு அரசியலை வலுப்படுத்த, ஆழப்படுத்த இந்தத் தோழமைகள் காரணமாக இருந்தன.

கருத்தளவில் சாதியை எதிர்ப்பது எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் சொந்தச் சாதியைக் கடந்த உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது என்று நான் நினைக்கிறேன். அவ்வுறவுகளை வீட்டுக்குள் கொண்டு செல்வது, சாதி-குடும்ப எல்லைகளைத் தொடர்ந்து கலைத்துப் போடுவது… எனக்கு வாய்த்துள்ள தலித் தோழமைகள், நண்பர்கள் இல்லாமல், உண்மையில் சாதி எதிர்ப்பு அரசியலையோ, அம்பேத்கரிய சிந்தனையையோ என்னால் வளர்த்துக்கொள்ள முடிந்திருக்குமா என்று தெரியவில்லை. பாபாசாகேப் சொன்னது போல, சகோதரத்துவம், ஒப்புரவின்றி மாற்று அரசியல் சாத்தியமில்லை.

 

இந்தப் பயணத்தில் எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்?

தமிழில் என்னை எழுதச் சொல்லி வற்புறுத்தியது எஸ்.வி.ஆர். தான். 1988-இல் நான் அவரைச் சந்தித்த போது, அவர் ரோசா லக்சம்பர்க் படிப்பு வட்டம் (Rosa Luxemburg Study Circle) என்ற ஒன்றைச் சென்னையில் நடத்தி வந்தார். எம்.எஸ்.எஸ். பாண்டியன்தான் அவரைச் சந்திக்க என்னை அழைத்துச் சென்றார்.

எஸ்.வி.ஆர்., படிப்பு வட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். தமிழ்ச் சு+ழல் விவாதித்துக் கொண்டிருந்த பின்காலனித்துவம், பின்நவீனத்துவம், பின்அமைப்பியல் போன்ற கோட்பாடுகள் குறித்து அவருக்கு அச்சமயம் நிறைய விமர்சனங்கள் இருந்தன. இவற்றின் சாரத்தை, இவை முன்மொழியும் அரசியலின் தன்மையை முழுமையாக உள்வாங்கிக் கொண்டுதான் தமிழகத்தில் விவாதங்கள் நடக்கின்றனவா என்ற கேள்வி அவரிடம் இருந்தது. அமெரிக்காவில் மிஷெல் ஃபூக்கோ (Michel Foucault)  குறித்து நான் படித்திருந்ததை அறிந்த அவர், அவரின் சிந்தனைகள் குறித்த கட்டுரை ஒன்றைப் படிப்பு வட்டத்தில் தமிழில் வாசிக்கச் சொன்னர். நான் எழுதி வாசித்தேன். பூக்கோ குறித்த கட்டுரை படித்த பிறகு, ஆல்பர்ட் காம்யூ  (Albert Camus) குறித்தும் ஒரு கூட்டத்தில் பேசினேன். அது அரசியல் பார்வைக்கும் படைப்பிலக்கியத்துக்கும் இடையிலான உறவைக் குறித்துப் பேசிய கட்டுரை.

 

இதில் எஸ்.வி.ராஜதுரையுடன் இணைந்து எழுத ஆரம்பித்தது எப்போது?

நான் அவரை 1988-இல் சந்தித்தபோது, தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருந்த ப்ளேஸ் பாஸ்கால் (Blaise Pascal) என்ற பிரெஞ்சு தத்துவவாதியின் கவித்துவமான தத்துவக் குறிப்புகளை (Pensees)அவர் திருத்திக்கொண்டிருந்தார். அவற்றைப் படித்துப் பார்த்துச் சரி செய்யும் பணியில் என்னையும் ஈடுபடுத்தினார். மொழியாக்கத்தின் நுணுக்கங்களை, அதற்குத் தேவையான உழைப்பை, அதை எவ்வாறு செய்ய வேண்டும் – எல்லாம் அவரிடமிருந்துதான் கற்றுக் கொண்டேன்.

எஸ்.வி.ஆரின் அறிவுச் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளத் தமிழ்நாட்டின் நவீனக் கால அரசியல் வரலாறுகளுடன் அவற்றை இணைத்துப் பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டும். அவர் பார்ப்பனரல்லாத விவசாயக் குடும்பத்தில் 1940-இல் பிறந்தவர். அவரின் தந்தை பள்ளி ஆசிரியர். காந்தியச் சிந்தனையின் தாக்கம், திராவிட இயக்கத்தின் வளர்முகப் பருவத்தில் இருந்த விறுவிறுப்பான அரசியல், சிந்தனைச் சு+ழல், மேற்குத் தமிழகத்தில் இருந்த இடதுசாரிகளின் தொழிற்சங்கச் செயல்பாடுகள் என்று பலவகையான மரபுகளுடன் வாழ்வியல்ரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் அவருக்குத் தொடர்பும், பரிச்சயமும் இருந்தன. அவர் இடதுசாரி அரசியலைத் தனக்கான அரசியலாகத் தேர்தெடுத்துக் கொண்ட போதும், பெரியாரின் சிந்தனை, ஆளுமை அவரின் தலைமுறையின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. பார்ப்பனிய எதிர்ப்பு, சாதி மறுப்பு ஆகியன ஆரம்ப நாட்களிலிருந்தே அவருடைய அரசியலின் முக்கியக் கூறுகளாக இருந்து வந்துள்ளன.

சாதி, மதம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாது வர்க்க அரசியலை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று அவர் என்றுமே நினைத்திருக்க வாய்ப்பில்லை. அதே சமயம், தனிமனிதச் சுதந்திரம், தேடல், இலக்கியம், கலை, இசை ஆகியவற்றுக்குரிய தனிப் பண்புக் கூறுகள் ஆகியவற்றையும் அவர் முக்கியமானவையாகக் கருதுவார். நான் அவரைச் சந்தித்த தருணம் சோவியத் யூனியனில் முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டு வந்த காலகட்டம். அவருக்குச் சோசலிசத்தின் மீது நம்பிக்கையும் அக்கறையும் இருந்தாலும், சோவியத் யூனியன் குறித்து எவ்விதமான ரொமான்டிக் பார்வையும் இருக்கவில்லை. பிற இந்திய இடதுசாரி அறிவாளர்களைப் போல் ஸ்டாலினின் தலைமை, வரலாற்றுப் பங்கு குறித்து எந்த மாயையும் அவரிடம் இருந்ததில்லை. அவரின் மார்க்சியம், செஞ்சீனம், கியூபாவில் நடந்த புரட்சி, ஐரோப்பிய, அமெரிக்கச் சோசலிச சிந்தனை மரபுகள் ஆகியவற்றின் வரலாற்றுத் தாக்கங்களாலும் கட்டமைக்கப்பட்டது.

அதே சமயம், தான் சார்ந்திருந்த இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர்களை, அறிவாளர்களை நன்றியுடன் நினைவுகொள்வார். அவருடைய மார்க்சியம் சிந்தனைத் தளத்தில் மட்டுமல்லாது, களச் செயல்பாடுகளாலும் செழுமைப்பட்டது. தொழிற்சங்கப் பணிகள், எம்.எல்.,அமைப்பில் இருக்கும்போது இயக்கம் கட்டும் வேலை… சிவில் லிபர்ட்டி மூவ்மென்ட்டில் அவர் ஆற்றிய ஆகப்பெரும் பங்கு…

1989-ஆம் ஆண்டு அவர் ரஷ்யப் புரட்சி:இலக்கிய சாட்சியம் என்ற நூலை எழுதி முடித்தார். அந்நூலுக்காக என்னை ஒரு முன்னுரை எழுதச் சொல்லிக் கேட்டார். இதற்கு முன் ஸ்டாலினின் கொடுங்கோன்மைக்குச் சாட்சியாக வாழ்ந்த பெண் கவிஞர் அன்னா அக்மத்தோவாவின் (Anna Akhmatova) முக்கியக் கவிதைகளில் சிலவற்றை நாங்கள் மொழியாக்கம் செய்தோம். அது நூலாகவும் வெளிவந்தது. அதற்கான முன்னுரையின் ஒரு பகுதியை, குறிப்பாகப் பெண் எழுத்து பற்றிய பகுதியை நான் எழுதினேன். அடுத்து நாங்கள் செய்த கவிதை மொழிபெயர்ப்புகள் மண்ணும் சொல்லும்: மூன்றாம் உலகக் கவிதைகள் என்ற தலைப்பில் வெளிவந்தது. இலக்கிய மொழியாக்கங்களை நாங்கள் தொடர்ந்து செய்ய எஸ்.வி.ஆர்.தான் கராணம். 
எஸ்.வி.ஆருக்கு இலங்கைத் தமிழர்களின் பல்வேறு அமைப்புகளுடன் தொடர்பு இருந்தது. அவர் மூலம் எனக்கும் சிலருடன் தொடர்புகள் ஏற்பட்டன. இச்சமயம் இங்கிலாந்தில் செயல்பட்டு வந்த தமிழ் அறிவாளர்கள் சிலர் மேற்கத்திய மார்க்சியம் குறித்து அறிமுக நூல்களை எழுதச் சொல்லிக் கேட்டனர். குறிப்பாக, பிரெஞ்சு மார்க்சியர் லூயி அல்த்தூசர் (Louis Althusser)பற்றி எழுதச் சொல்லிக் கேட்டனர். அதைச் செய்தோம். ஆனால், அது நிறைவளிக்கவில்லை. இதற்குப் பிறகுதான் பிராங்க்பர்ட் மார்க்சியம், அந்தோனியோ கிராம்சி ஆகியோர் குறித்தெல்லாம் நாங்களாகவே எழுதினோம். 1989-1991 ஆம் ஆண்டுகளில் இதைச் செய்து முடித்தோம்.

எனக்கு ஒரு வருத்தம் என்னவென்றால், எஸ்.வி.ஆர். ஆங்கிலத்தில் எழுதியிருந்தால், அவருக்கு வேறு வேறு வாசகர்கள் வாய்த்திருப்பார்கள். அவருக்கு ஆங்கிலம் நன்றாக எழுத வரும். ஆனால், பிடிவாதமாக அவர் தமிழில்தான் எழுதுவேன் என்று இருந்து வருகிறார். தமிழில் எழுதுவது என்பது மிகவும் ஜனநாயகமான விஷயம். ஏன் தமிழில் எழுத வேண்டும், யாருக்காக எழுத வேண்டும், எல்லோருக்கும் புரிகிற மாதிரி எப்படி எழுத வேண்டும் என்பதையெல்லாம் நான் எஸ்.வி.ஆரிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன்.

 

பெரியார் புத்தகத்தை எழுதியது பற்றி…

1992-இல் இங்கிலாந்திலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த பேராசிரியர் சத்தியமூர்த்தி என்பவர் சுதந்திரத்துக்குப் பிந்திய இந்தியாவில் நடந்த அரசியல் மாற்றங்கள் குறித்து நடத்தவிருந்த கருத்தரங்கில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பற்றிக் கட்டுரை ஒன்றை வழங்கச் சொல்லி எஸ்.வி.ஆரிடம் கேட்டார். நாங்கள் ஆங்கில ஆய்வேடான எக்கனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லியில் (Economic and Political Weekly [EPW]) தமிழ்நாடு பற்றிச் சில விஷயங்களை ஏற்கெனவே எழுதியிருந்ததால், அவர் எங்களை அணுகினார்.

எஸ்.வி.ஆருக்கு தி.மு.க.-வின் வளர்ச்சி, அரசியல் செயல்பாடுகள் பற்றிய விமர்சனங்கள் உண்டு. அதே சமயம், அதன் வரலாற்றுப் பங்களிப்பை முக்கியமானதாக அவர் கருதினார். இந்தக் கட்டுரை தி.மு.க.-வின் அரசியல் செல்வாக்குக்கு அடித்தளமிட்ட அவர்களின் பண்பாட்டுச் சொல்லாடல்களைப் பற்றிய விமர்சனமாக அமைந்தது. குறிப்பாக, புறநானூறு, சிலப்பதிகாரம் முதலியவற்றை அவர்கள் எவ்வாறு கையாண்டனர், அவை கூறும் விஷயங்களின் அடிப்படையில் எவ்வாறு தமது அரசியலுக்கான பண்பாட்டு நியாயங்களை வகுத்துக் கொண்டனர் என்பது குறித்து எழுதினோம். அதை எழுதும்போதுதான் பெரியாருக்கும் அவரின் சீடர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைப் பற்றி மேற்கொண்டு எழுத வேண்டும் என்று தோன்ற… அதுவே பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைப் பற்றி எழுத வைத்தது. 
எங்களுக்கு பெரியார் ஏன் அச்சமயம் முக்கியமாகப்பட்டார் என்றால், நாடெங்கிலும் மண்டல் கமிஷன் பற்றி விவாதங்களும் அதன் பரிந்துரைகளை எதிர்த்துப் போராட்டங்களும் நடந்து வந்தன. மண்டல் பிரச்சினை தமிழ்நாட்டில் பெரும் சிக்கலாக வரவில்லை. ஆனாலும், சாதி எதிர்ப்பு பற்றிய விவாதங்கள் நடந்து வந்தன. அப்போதுதான் பெரியாரின் சாதி எதிர்ப்புக் கருத்துநிலையை முன்வைத்து நிறப்பிரிகை சிறப்பு இதழை வெளியிட்டது. முக்கியமான பதிப்பு முயற்சியாக அதை நான் பார்க்கிறேன். பெரியாரின் கருத்துகளுக்கு உரிய கனத்தை, தீவிரத்தைத் திராவிடர் கழகத்தின் எல்லைகளுக்கு அப்பால் கொண்டு செல்ல அதுவே காரணமாக இருந்தது.

நிறப்பிரிகையின் தலையீடு பெரியார் குறித்த அறிவியல்பூர்மான ஆய்வின் தேவையை மேலும் உணர்த்தியது. இச்சமயம் எனது நண்பர் பிரதீப் தாமஸ் இவ்வேலையைச் செய்ய நிதி நல்கை செய்ய முன்வந்தார். அவரின் இந்த உதவி புத்தகங்கள் வாங்க, பிரதி எடுக்க, தட்டச்சு செய்ய என்பன போன்ற செலவுகளுக்கு உதவியது. அகில இந்திய அளவிலும் அன்று சாதி பற்றிய விவாதங்கள் நடந்தன. தில்லியில் செயல்பட்ட “லோக்காயன்” (Lokayan) என்ற அமைப்பைச் சேர்ந்த ரஜினி கோத்தாரி (Rajni Kothari) இ திருபாய் சேத் (Dhirubai Seth)போன்றோர் சாதியச் சங்கங்கள், சாதி எதிர்ப்பு இயக்கங்கள் பற்றிப் புதிய வகைகளில் எழுதி வந்தனர். அவர்களை எஸ்.வி.ஆருக்கு நன்றாகத் தெரியும். அவர்களும் இந்த வேலையைச் செய்ய எங்களை ஊக்கப்படுத்தினர். சாதி அமைப்புப் பற்றி இந்தியச் சோசலிஸ்டு இயக்கங்கள், குறிப்பாக ராம் மனோகர் லோகியா (Ram Manohar Lohia) போன்றவர்கள் எழுதியவற்றை எஸ்.வி.ஆர். முக்கியமானதாகக் கருதினார்.

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டுதான் இந்த நூலை எழுதுவதற்கான அவசியத்தை எங்களுக்கு நாங்களே விளக்கிக் கொண்டோம்.

வரலாற்றுரீதியாக பெரியாரைப் பற்றி எப்படி யோசிப்பது, அவரைப் படித்துப் புரிந்துகொள்ள, அவர் வாழ்ந்த காலத்தை மதிப்பிட எம்மாதிரியான வரலாற்று முறையியலைப் பயன்படுத்துவது, எங்களுக்கு முக்கியமானதாக இருந்த மார்க்சிய அளவுகோல்களை எப்படி அறிவான வகையில் கையாள்வது, பெரியார் குறித்த புகழாரங்கள், அவதூறுகள் ஆகியவற்றைக் கடந்து எழுதுவதற்குத் தேவையான வாசிப்பை எப்படி முறையாகச் செய்வது… இவை குறித்தும் யோசிக்க வேண்டியிருந்தது.

பெரியாரைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், பார்ப்பனரல்லாதார் என்ற சொல்லை அரசியல் உலகத்துக்கு அறிமுகப்படுத்திய நீதிக் கட்சி பற்றியும் அறிய வேண்டும். அக்காலகட்டத்தில் நிகழ்ந்த சமுதாயம், பண்பாடு குறித்த விவாதங்களை அறிய வேண்டும் என்பதால், எங்களின் ஆய்வின் பரப்பை விரிவாக்கிக் கொண்டோம். அச்சமயம், திருநாவுக்கரசு அவர்களின் திராவிட இயக்க வேர்கள் வெளி வந்தது. அதில் அவர் அயோத்திதாசர் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். பெ.சு.மணியும் அவரைப் பற்றி எழுதியிருந்தார். தமிழ்நாட்டில் அன்று தலித் விரோதச் செயல்பாடுகள் நடந்தவண்ணம் இருந்த சு+ழலில், தலித்துகளுக்கும் பார்ப்பனரல்லாதார் இயக்கங்களுக்கும் இடையிலான உறவை வரலாற்றுரீதியாகப் புரிந்துகொள்வதன் அவசியத்தை உணர்ந்தோம். இதுதான் அயோத்திதாசரை நோக்கி எங்களைப் பயணிக்க வைத்தது.

நான்கு நூலகங்களை நாங்கள் பயன்படுத்தினோம். சென்னை அடையாறிலுள்ள பிரம்மஞான சபை நூலகம். அன்னி பெசன்ட் நடத்திய நியு இந்தியா (New India) இதழ், இருபதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் தேசிய இயக்கம் தொடர்பாக வெளிவந்த பிரசுரங்கள் – இவற்றைப் படித்துப் பிரதி எடுத்துக்கொண்டோம். எனது சிநேகிதி தோழி ஜெயந்தி பிரதி எடுக்க, தட்டச்சு செய்ய உதவினாள். அடுத்து பெரியார் திடலில் உள்ள நூலகம். குடிஅரசு, புரட்சி, பகுத்தறிவு, சமதர்மம் ஆகிய இதழ்களை மாதக்கணக்கில் உட்கார்ந்து படித்தோம். தோழர் விடுதலை இராஜேந்திரன் மிகவும் உதவியாக இருந்தார். தமிழன் இதழின் சில பகுதிகளும் இங்கு இருந்தன. அவற்றையும் படித்தோம். படித்தவற்றைப் பிரதி எடுக்க சிநேகிதி தோழி கலைச்செல்வி உதவினார். அடுத்து தி.நகரில் உள்ள கார்ல் மார்க்ஸ் நூலகத்திலிருந்த ஸ்வதர்மா என்ற ஆரம்பகாலத் தேசிய, தொழிலாளர் நல இதழைப் பார்வையிட்டோம். 
அயோத்திதாசரின் எழுத்துகளைப் பெறச் சென்னை மெயில் பத்திரிகை அலுவலகத்தில் பணிபுரிந்த மெயில் முனுசாமியைச் சந்திக்க வேண்டும் என்று யாரோ சொல்ல, அவரைத் தேடிச் சென்னைச் சேத்துப்பட்டிலுள்ள அவரின் வீட்டுக்குச் சென்றோம். அவர் காலமாகிவிட்ட செய்தியை அறிந்தோம். வருத்தமாக இருந்தது. அவரின் மகள், மகன் அசோக் ஆகியோர் அவர் பற்றிப் பேசினர்.

அசோக் வீட்டில் எங்களுக்குப் பண்டிதர் அயோத்திதாசர் தொடர்புடைய பல அரிய தகவல்கள் கிடைத்தன. தமிழன் இதழ்கள் சில இருந்தன. அயோத்திதாசரின் சித்தார்த்தா பதிப்பகம் வெளியிட்ட பிரசுரங்கள் இருந்தன. அவரின் திரிக்குறள், யதார்த்த பிராமணர், வேஷ பிராமணர் விவரம், இந்திரர் தேச சரித்திரம், அம்பிகை அம்மன் வரலாறு, அரிச்சந்திர புராணம், கபாலிசுரர் பற்றிய ஆய்வு        ம.மாசிலாமணியின் சாதிபேத விளக்கம் (சென்னை லௌகீக சங்கத்தார் நடத்திய தத்துவ விவேசினியில் முதலில் கட்டுரையாக வெளிவந்த இதைப் பின்னாளில் சித்தார்த்தா பதிப்பகத்தார் நூலாக வெளியிட்டனர்); அ.ரத்தினசபாபதியின் ஏழை அழுத கண்ணீர் (இவர் அப்பாதுரையாரின் மகள் அன்னபூரணியைத் திருமணம் செய்து கொண்டார்) மதுரை பிள்ளையின் அக-புற சமயங்கள், கோபால் செட்டியின் ஆதி-திராவிடர் வரலாறு எல்லாம் அவரிடம் இருந்தன. எல்லாவற்றையும் நகல் எடுத்துக்கொண்டோம். நகலெடுத்ததையெல்லாம் பிறகு ரோஜா முத்தையா நூலகத்தில் கொடுத்துவிட்டோம்.

திராவிட இயக்கம் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த கமலநாதனைச் சந்தித்துப் பேட்டி எடுத்தோம். அது போல விமர்சனங்களைச் செய்த அய்யா அன்பு பொன்னோவியத்தின் நூல்களைத் தேடிப் படித்தோம். தமிழ்நாட்டின் முக்கிய நவீனக்கால வரலாற்றா-சிரியர்களில் ஒருவராக மதிக்கப்பட வேண்டிய, ஆனால், அத்தகைய மதிப்பை இன்று வரைக்குமே பெறாதிருக்கும் டாக்டர் சுந்தர்ராஜ் மாணிக்கம் அருமையான பேட்டி ஒன்றை வழங்கினார். தலித்துகளின் வாழ்க்கையில் ஆங்கில ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றிப் பேசினார்.

 

பெரியார் பற்றிய நூலை இருவரும் சேர்ந்து எழுதிய போது, உங்கள் பணிகளை எவ்வாறு பிரித்து அமைத்துக் கொண்டீர்கள்?

ஆங்கில நூலை நான் எழுதுவதென்றும் தமிழ் நூலை எஸ்.வி.ஆர். எழுதுவது என்றும் பிரித்துக்கொண்டோம். இரண்டு நூல்களும் ஒன்றல்ல. வேறு வேறு வாசகர்களை நோக்கி எழுதப்பட்டவை. தமிழ்ச் சூழலில் நடந்த விவாதங்களைக் கருத்தில்கொண்டு தமிழ் நூல் உருவெடுத்தது. ஆங்கில ஆய்வுலக விஷயங்கள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு ஆங்கில நூல் திட்டமிடப்பட்டது.

தரவுகளைச் சேகரித்துக்கொண்டிருக்கையிலேயே எஸ்.வி.ஆர். எழுத்து வேலையைத் தொடங்கினார், 1993-வாக்கில். 1994-நெடுக அவருக்கு உடல்நலம் சரியாக இருக்கவில்லை. போதாக்குறைக்கு நாட்டு நிலைமைகளும் எல்லோரையும் துன்பப்படுத்துவதாக இருந்தன. இந்துத்துவ சக்திகளின் வளர்ச்சி, ஜெயலலிதாவின் ஆட்சி, சிவில் உரிமை மீறல்கள் தொடர்பான பிரச்சினைகள் என்று பலவற்றுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழல். இந்தக் காலகட்டத்தில்தான் அவரின் இந்து-இந்தி-இந்தியா நூலும் வெளிவந்தது. அவரின் இதய அறுவைச் சிகிச்சையும் இந்தக் காலகட்டத்தில்தான் நடந்தது. உடல்நலம் ஓரளவுக்குச் சீராக உள்ளபோது எழுதி முடித்துவிட வேண்டும் என்று எழுதினார். நான் ஆங்கில நூலுக்கான வேலைகளைப் பார்த்து வந்தேன். ஈ.பி.டபிள்யு. (EPW) இதழுக்கு அயோத்திதாசர் கட்டுரை எழுதி அனுப்பினோம் (Dalits and Non-Brahmin Consciousness in Tamil Nadu 1993). அதைப் படித்துவிட்டுதான் ஞான.அலாய்சியஸ் எங்களைப் பார்க்க வந்தார். அதற்குப் பிறகே அவரின் ஆய்வுப் பயணம் தொடங்கியது. அடுத்து ஜர்னல் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் (Journal of Arts and Ideas, 1994) என்ற இதழுக்கும் அயோத்திதாசர் பற்றி இன்னமொரு கட்டுரையை எழுதினேன் – அவரின் வரலாற்று அணுகுமுறை பற்றியது அது.

சுயமரியாதை சமதர்மம் நூலை 1995-வாக்கில் எழுதி முடித்தோம். அது நீதிக்கட்சி வரலாற்றிலிருந்து துவங்கியது. வேண்டுமென்றே நாங்கள் அயோத்திதாசரைப் பற்றி எழுதவில்லை என்ற குற்றச்சாட்டு எங்கள் மீது பின்னாட்களில் வைக்கப்பட்டது. நான்தான் அந்தப் பகுதியை எழுதுவதாக இருந்தது. என்னால் உரிய நேரத்தில் எழுத இயலவில்லை. எஸ்.வி.ஆரின் உடல்நலம் மோசமாகிக் கொண்டே போனதால், எனது அந்தக் கட்டுரை இல்லாமலேயே நூலை வெளியிடுவது என்று முடிவு செய்து விட்டோம்.

ஆங்கில நூலுக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும், அது கல்விப் புலத்தில் பெரிதாகப் பேசப்படவில்லை. ஆனால், சாதி எதிர்ப்பு அரசியலில் அக்கறை இருந்தவர்களுக்கு அது முக்கியமான நூலானது.

இந்தக் காலகட்டத்தில் நான் மிகவும் ரசித்துப் படித்த எழுத்தாளர் ராஜ் கௌதமன். அவரின் தலித் பார்வையில் தமிழ் இலக்கியம், தலித் பண்பாடு, அ.மாதவய்யா பற்றிய நூல் அனைத்தையும் அவை வெளிவந்தவுடன் வாசித்து முடித்தேன். பின்னாட்களில் அவரின் அறம் அதிகாரம் நூல் குறித்து அகில இந்திய அளவில் 1999-ஆம் ஆண்டு நடந்த ஓர் ஆய்வரங்கில் ஒரு கட்டுரை வாசித்தேன். தமிழ்நாட்டில் தொடர்ச்சியாகப் பேசப்படுகிற சங்க இலக்கியத்தில் வெளிப்படும் பெண்களின் வாழ்வியல், பெண் அறம், அவற்றைப் பெண்ணியப் பார்வையினூடாகப் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் – கௌதமன் இதை அற்புதமாகச் செய்துள்ளார். சங்க நூல்கள் எவ்வாறு தமிழ்ச் சூழலில் அறம் வளர்த்தன, அத்தகைய அறமானது எதை முன்னிட்டு, எவற்றைத் தவிர்த்து, மடைமாற்றம் செய்து உருவாக்கப்பட்டது என்பன போன்ற விஷயங்களை அவரின் சங்க இலக்கியங்கள் பற்றிய நூல்கள் நுணுக்கமாகப் பேசுகின்றன.

1995-இல் அவர் எனக்கு அறிமுகமானார். அந்த ஆண்டு தி எக்கனாமிக் டைம்ஸ் (The Economic Times) நாளேட்டிற்காக அவரையும் இளையராஜாவையும் ஒப்பிட்டு ஒரு கட்டுரை எழுதியதற்குப் பதில் கடிதம் எழுதி இருந்தார். அதில், “உங்களுடைய கட்டுரையை வாசிக்கும்போது உயர்தர விஸ்கியைக் குடிப்பது போல உள்ளது” என்று எழுதியிருந்தார்.

 

அந்தக் கட்டுரையின் மையம் என்னவென்று சொல்ல முடியுமா?

இளையராஜாவும், ராஜ் கௌதமனும் அவர்களுக்கு மறுக்கப்பட்ட வரலாற்றுடன், மரபுகளுடன் உரையாடல் நிகழ்த்திக்கொண்டிருந்ததை அக்கட்டுரையில் சுட்டிக் காட்டினேன். தனக்கு இடமளிக்காத கர்னாடக இசை வரலாற்றை, தன்னை ஒதுக்கிவைத்த வரலாறாக அல்லாமல், தான் வெற்றிகொண்ட வரலாறாக ராஜா அணுகுகிறார் என்றும், கர்னாடக இசை மரபை அலட்சியமாக, ஆசையாக, நிபுணத்துவத்துடன் கையாண்டுள்ளார் என்றும் எழுதினேன். தளபதி படத்தில் உள்ள “ராக்கம்மா கையைத் தட்டுப்’ பாடலைக் கொண்டு எனது வாதத்தை விளக்கினேன்.

கௌதமனுடைய பார்வை வேறு விதமானதாக உள்ளதைச் சுட்டிக் காட்டினேன். தன்னை உருக்குலைக்கும் வரலாற்றை அவர் மறுக்கிறார். விமர்சிக்கிறார். தனக்கு இடமளிக்காத மரபுகளை நையாண்டி செய்கிறார். பின்னாளில் இந்த மரபுகளைத் தனக்கானவையாக அவர் மாற்றிக் கொள்வார். ஆனால், அந்தக் கட்டுரையில் நான் கவனப்படுத்தியது தலித் பண்பாடு, தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு நூல்கள் பேசியவற்றைத்தான். பெரிய புராணம் குறித்து அவர் எழுதிய கட்டுரையை மேற்கோளாகக் காட்டி எனது வாதங்களை முன்வைத்தேன்.

 

90-களில் உருவான தலித் அரசியல், தலித் அறிவு வரலாறு, தலித் இயக்கங்களில் திராவிட இயக்கம் பற்றிய உங்களுடைய எழுத்துகளின் தாக்கம் என்னவென்று நினைக்கிறீர்கள்? திராவிட இயக்கத்தை விமர்சனபூர்வமாக அணுக வேண்டும் என்று சொல்லியிருக்கிறீர்கள். 90-களில் உருவான தலித் எழுச்சியிலும் இந்த விமர்சனப் போக்கு இருக்கும். இரண்டுக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா?

1990-களில் எஸ்.வி.ஆரின் தலைமையில் செயல்பட்ட மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் சார்பாக உருவாக்கப்பட்ட உண்மை அறியும் குழுக்களின் அனுபவங்கள், அறிக்கைகள் மூலமாகவே தமிழக அரசியல் சு+ழலில் தலித் மக்களின் உரிமைகள், வாழ்வியலுக்கு ஏற்பட்டிருந்த சவால்களை என் போன்றவர்கள் அறிந்து கொண்டோம். எழுத்து அல்லது சிந்தனை என்பதைக் காட்டிலும், இக்குழுக்களில் இடம்பெற்றுக் களத்தில் காணும் பிரச்சினைகளில் தலையிட்ட போதுதான் தமிழ்நாட்டில் திராவிட அரசியலின் நிலை என்னவாக இருக்கிறது என்பதைப் புரிந்த கொள்ள முடிந்தது.

பொன்னூர், வாச்சாத்தி, கொடியங்குளம், தாமிரபரணிப் படுகொலை… இவை போகச் சிறியதும் பெரியதுமாகப் பல்வேறு விதமான வன்கொடுமைகள்…  கொடியங்குளம் பிரச்சினையை யாரால்தான் மறக்க முடியும்? எஸ்.வி.ஆர்., இன்குலாப் தலைமையில் ஒரு குழு கொடியங்குளத்துக்குச் சென்று தீவிர விசாரணையை மேற்கொண்டது… இந்தக் காலகட்டம் விடுதலைச் சிறுத்தைகள் வளர்ந்து வந்த காலகட்டமாகவும் இருந்ததால், தலித் இளைஞர்களை அரசு குறிவைத்தது. அந்த இயக்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் அரசியல்படுத்தப்பட்டதுடன், குண்டர் சட்டம் உட்பட ஏனையச் சட்டங்களின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த அனுபவங்கள் ஒருபுறம், எங்களின் வரலாற்று ஆய்வுகள் மறுபுறம். பெரியார் கால வரலாற்றுக்கும் தற்காலத்துக்கும் இடையிலான இடைவெளியை எப்படிப் புரிந்து கொள்வது? பெரியாரின் வரலாற்றுப் பங்கைச் சுட்டிக்காட்டி, அவரின் விசாலமான சாதி எதிர்ப்புக் கருத்துநிலை, சுயமரியாதை இயக்கத்தின் நவீனச் சிந்தனை உலகம் ஆகியவற்றின் தன்மையை விளக்கி, தற்கால அரசியல், சமுதாய நிலைமைகளை விமர்சனம் செய்ய நாங்கள் முன்வந்தோம் என்று சொல்லலாம்.

 

திராவிட இயக்கம் குறித்து எழுதினீர்கள். அதே நேரத்தில் விமர்சனபூர்வமாகவும் கட்டுரைகளையும் எழுதினீர்கள்.கட்சியினர் உங்களை எப்படிப் பார்த்தார்கள்?

எங்களின் விமர்சனக் கட்டுரைகளில் பெரும்பாலானவை ஆங்கில இதழ்களில்தான் வெளிவந்தன. பொதுக்கூட்டங்களில் இந்த விமர்சனங்களை நாங்கள் முன்வைத்த போதிலும், தமிழில் இவற்றைக் கட்டுரைகளாக எழுதவில்லை. ஆங்கிலக் கட்டுரைகளைப் பொருத்தமட்டில் திராவிட இயக்கத்தின் வரலாற்று நியாயத்தைப் பேசினோம். அந்த நியாயத்தைக் கடந்த அதன் அரசியல் செயல்பாடுகளை விமர்சித்தோம், திராவிட மறுமலர்ச்சி சாத்தியப்படும் என்று நினைத்தோம். ஏன், ராம்தாஸ் போன்றவர்களின் அரசியலில்கூட முற்போக்குக் கூறுகளை அடையாளம் காண முயற்சித்தோம். பெரியார் நூல்களுக்கான மேற்கொண்ட ஆய்வுகளின் போது நாங்கள் அம்பேத்கரையும் வாசிக்கத் தொடங்கியிருந்ததால், திராவிட இயக்கம் பற்றிய எங்களின் விமர்சனங்களில் அம்பேத்கரியப் பார்வையும் வெளிப்படத் தொடங்கியிருந்தது.

 

அப்போது பெரியார் குறித்து எழுதியவர்களில் உங்கள் இருவரைத் தவிர்த்து நிறப்பிரிகை குழுவும் பேசி வந்தது. கல்விப்புலம் சார்ந்த எம்.எஸ்.எஸ். பாண்டியன், ஆ.இரா.வேங்கடாசலபதி ஆகியோரும் எழுதத் தொடங்கியிருந்தார்கள். எல்லாவற்றையும் சேர்த்து எப்படி பார்க்கிறீர்கள்?

நான் ஏற்கெனவே கூறியது போல நிறப்பிரிகையின் பணி மிகவும் முக்கியமானது.  பெரியாரியம் குறித்துக் கோட்பாட்டுரீதியாக யோசிக்கவைத்தது நிறப்பிரிகைதான். குறிப்பாக, அ.மார்க்ஸுடைய பங்களிப்பை நாம் மறக்க முடியாது. மார்க்ஸ் நிறைய விஷயங்களைச் செய்திருக்கிறார். தமிழ்த் தேசியத்தைத் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாக்கியவர் அவர்தான். இங்கு இருக்கின்ற மதச் சிறுபான்மையினர் தொடர்பான பிரச்சினைகளில் தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்துள்ளார்.

 

பெரியார் குறித்த பார்வையில் அ.மார்க்ஸ் வேறுபட்டிருந்தார், பெரியாரையும் தமிழ்த் தேசியத்தையும் இணைப்பதை அவர் மறுத்திருந்தார். பிராமணர்களை அணுகுவது குறித்து எஸ்.வி.ஆருக்கும் மார்க்சுக்கும் இடையே தலித் முரசில் ஒரு விவாதம் கூட நடந்ததாக நினைவு.

ஆமாம். அவர்களின் காலகட்டமும் அவர்களைச் செதுக்கிய அரசியல் அனுபவங்கள், சேர்க்கைகள் அவர்களுக்கு இடையிலான வேறுபாடுகளைப் புரிந்து கொள்ள உதவும் என்று நினைக்கிறேன். நீங்கள் கேட்ட கேள்விக்கு மீண்டும் வருவோம்: கல்விப் புலத்தில் தொடர்ந்து தமிழ்நாடு குறித்து எம்.எஸ்.எஸ்.பாண்டியன், எஸ்.ஆனந்தி ஆகிய இருவரும் ஆங்கிலத்தில் எழுதியுள்ளனர். பாண்டியனைப் பொறுத்தவரை, அவர் திராவிட ஆளுமையை முக்கியமானதாகப் பார்த்திருக்கிறார் என்பது எனது கருத்து. அதற்கான தர்க்க நியாயங்களை நேர்த்தியாகத் தொடர்ந்து கட்டமைத்தார். ஆனால், அது ஒருதலைப்பட்சமான நிலைப்பாடல்ல. திராவிட இயக்கம் குறித்த விமர்சனமும் அவரிடத்தில் உண்டு. பெண்ணியம், பெண்களின் வாழ்வியல் என்று வரும் போது வழக்கம் போல அவருமே இவற்றைப் பொருட்டாகக் கொள்வதில்லை.

பெண்ணியம், சாதி தொடர்பாக ஆங்கிலத்தில் ஆனந்தி எழுதியுள்ளவை முக்கியமானவை. குறிப்பாக, அரக்கோணம் பகுதியில் பாத்திமா தலைமையில் நடைபெற்று வரும் பெண்கள் இயக்கம் பற்றிய அவரின் கட்டுரையும் அப்பகுதியில் வாழ்ந்து செயல்பட்டு வந்த “மாதம்மா” ஒருவர் இறந்தபோது அவர் எழுதிய கட்டுரையும் முக்கியமானவை.

ஆ.இரா.வேங்கடாசலபதி இருமொழிப் புலமையாளர். இரு மொழிகளிலும் எழுதி வருபவர். அவர் பெரியார் பற்றி ஆங்கில நூல் ஒன்றை எழுதி வருகிறார். அவரின் ஆங்கில எழுத்துகளில் சுயமரியதை இயக்கத்துக்கும் சைவர்களுக்கும் நடந்த தர்க்கம் தொடர்பான சில எழுத்துகளை மட்டும் நான் அறிவேன். திராவிட இயக்கம் குறித்து அவர் வேறு ஏதும் எழுதியதாகத் தெரியவில்லை.

பிரச்சினை என்னவெனில், ஆங்கிலத்தில் எழுதுகையில் ஆங்கில எழுத்துகள் வினையாற்றும் அறிவுலகம் தோற்றுவிக்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அக்கேள்விகள் தமிழ்ச் சு+ழலுக்குரிய, தமிழ்ச் சு+ழல் முக்கியமாகக் கருதும் கேள்விகளாக இருக்க வேண்டியதில்லை. தமிழ்நாடு குறித்த ஆங்கில எழுத்துகளை மட்டும் வாசிப்போர், அவை கூறும் விஷயங்களின் நியாயத்தையும் அவ்வெழுத்துகள் எழுப்பும் கேள்விகளைக் கொண்டு மட்டுமே தமிழ் நாட்டு விவரங்களை அறிய வருகின்றனர். இது சில விஷயங்களைப் புரிந்துகொள்ள உதவுகிறது, குறிப்பாக, பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாடு எவ்வாறு உள்ளது என்பது தொடர்பான விஷயங்களையும், அகில இந்திய நிலவரங்களிலிருந்து தமிழ்நாடு எங்கு வேறுபடுகிறது என்பதையும் புரிந்துகொள்ள உதவுகிறது.

ஆனால், தற்காலத் தமிழ்நாட்டில் காரசாரமாகப் பேசப்பட்டு வரும் பிரச்சினைகளை ஆங்கிலத்தில் எழுதத் திராவிட இயக்கம் பற்றி எழுதுவோருக்கு ஏதோ மனத்தடை இருப்பதாகத் தோன்றுகிறது. தலித்துகளும், பெண்ணியச் சிந்தனையுடையவர்களும் திராவிட இயக்கம் பற்றி முன்வைக்கும் விமர்சனங்களுக்கு முகங்கொடுக்கக் கூட அவர்கள் தயாராக இல்லை.

 

பெரியார், அம்பேத்கர் இருவரைப் பற்றிய உங்கள் ஆர்வம், படிப்பு, ஆய்வு, நீங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயங்களிலிருந்து காந்தி எதிர்மறையாக இருக்கிறார். பெரியாரிடத்திலும் அம்பேத்கரிடத்திலும் சில கருத்துகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளும்போது, அது ஒரு நிலைப்பாடு. அந்த நிலைப்பாடும் ஆய்வும் காந்தி விஷயத்தில் மோதல் போக்கை உருவாக்குமா? காந்தியை நீங்கள் எப்படிப் படிக்க ஆரம்பித்தீர்கள்?

பெரியார் காந்தியைத் தொடர்ந்து விமர்சிக்கிறார் என்பதால் காந்தியைப் படிக்க வேண்டிய தேவை இருந்தது. பெரியார் புத்தகத்துக்கான ஆய்வுகள் முடிந்தபோது காந்தியை நான் நிறையப் படித்தேன். காரணம், பெண்கள் குறித்த அவருடைய கருத்துகள், வித்தியாசமான, வினோதமான நிலைப்பாடு. அவருக்கு நிறையப் பெண் தோழமைகள் உண்டு. பெண்களின் கருத்துகளை அறிய விரும்புவராக, தான் கையாள நினைக்கும் அரசியல் வழிமுறைகள் குறித்து அவர்களுடன் விவாதிப்பவராக இருந்திருக்கிறார். இது வியப்பூட்டுவதாக உள்ளது.

அதேசமயம், அவர்களின் அகவாழ்க்கை, பாலியல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் குறித்தும் அவர்களுடன் பேசுகிறார். அவரின் “பரிசோதனை” குறித்து நாம் அனைவரும் அறிவோம்.

சாதி விஷயம் என்று வரும்போது அம்பேத்கரையும் பெரியாரையும் படித்த பிறகு காந்தியின் நிலைப்பாடு குறித்து நாம் சொல்வதற்கு ஏதுமில்லை. இருந்தாலும், சில விஷயங்களைக் குறிப்பிட விரும்பிகிறேன். காந்தி எப்பொழுதெல்லாம் மெட்ராஸ் மாகாணத்துக்கும் தக்காணத்துக்கும் வந்து செல்கிறாரோ, அப்பொழுதெல்லாம் சாதியைப் பற்றிய அவருடைய நிலைப்பாட்டில் மாற்றமிருக்கும். அதுவரை சாதியைப் பற்றிப் பேசியதிலிருந்து அவர் நிலைப்பாடு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். அவர் ஒரு நிலைப்பாடு எடுத்திருந்தாலும், தென்னாட்டிலும் தக்காணத்திலும் வேறுவிதமான நிலைப்பாடு இருக்கிறதை அவர் அங்கீகரித்துள்ளார் என்பதை அவரின் கடிதங்கள் வழி அறிய முடிகிறது.

அம்பேத்கர் மதம் மாறுவதாக அறிவித்தபோது, காந்திதான் முதன்முதலில் பதிலளிக்கிறார். வல்லப பாய் படேலுக்குத் தனிப்பட்ட முறையில் எழுதிய கடிதத்தில், “நாம் இதுவரைக்கும் கொஞ்சம்கூட மாறாமல் இருக்கிறோம். சமபந்தி உணவு போன்ற விஷயங்களில்கூட அலட்சியமாக நடந்துகொள்கிறோம். பின் அம்பேத்கர் ஏன் மதம் மாறமாட்டார்? அவர் மீது கோபங்கொள்ள நமக்கு என்ன உரிமை இருக்கிறது?’ என்ற ரீதியில் எழுதியிருப்பார்.

அடுத்து நாட்டுப் பிரிவினையின்போது இஸ்லாமியர்கள் நாடு விட்டு நாடு சென்றது பற்றியும் கொல்லப்பட்டது குறித்தும் பலர் அக்கறை காட்டாத சூழலில், அவர்களின் உரிமைகளை முன்நிறுத்தி, தனக்கு நெருக்கமான அரசியல் தலைவர்கள் அனைவருடனும் வாதம் புரிந்துள்ளார் – வல்லப பாய் படேல் உட்பட.

நான் கிருஷ்ணமூர்த்தி பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வரலாற்று ஆசிரியராக மூன்று ஆண்டுகள் பணியாற்றியபோது, 1857 முதல் 1947 வரையிலான காலகட்ட வரலாறு பத்தாம் வகுப்புப் பாடம். அப்பொழுது நான் மாணவர்களிடத்தில், “பாடப் புத்தகத்தை நீங்கள் படித்துக்கொள்ளுங்கள், நான் உங்களுக்கு அக்காலகட்டத்தில் நடந்தவற்றை, உங்கள் பாடப்புத்தகம் சொல்லாதவற்றைக் கதையாகச் சொல்கிறேன்’ என்று சொன்னேன். பூலே, பெரியார், அம்பேத்கர் பற்றி, பூனா ஒப்பந்தம் பற்றி நாங்கள் நிறையப் பேசினோம், விவாதித்தோம். எனக்கு இன்றைக்கும் ஞாபகம் இருக்கிறது. அந்த மாணவி பெயர் கீர்த்தனா. நாட்டுப் பிரிவினை நடந்தபோது ஏற்பட்ட வன்முறைகளை காந்தி எதிர்கொண்ட விதம் பற்றிப் பாடம் எடுத்து முடித்திருந்தேன். அந்த மாணவி, “நான் ஒண்ணு சொல்லட்டுமா? நீங்கள் கோபித்துக்கொள்ளக் கூடாது” என்றாள். நான் என்னவென்று கேட்டேன். “காந்தி மட்டும் அகதிகள் முகாமல் அவர் செய்த வேலைகளைச் செய்திருக்கவில்லை என்றால், பூனா ஒப்பந்தத்தில் காந்தி அம்பேத்கருக்குச் செய்த துரோகத்தை நான் மன்னித்திருக்கவே மாட்டேன்’ என்றாள்.

14 வயதுச் சிறுமி இப்படிச் சொன்னது எனக்கு அம்பேத்கரின் நியாயத்தையும் காந்தியின் மனப் போராட்டத்தையும் அங்கீகரிப்பதாக இருந்தது. வேறு இரு மாணவர்கள் காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தைப் பற்றிக் கட்டுரைகளை எழுதினர். இந்தக் குழந்தைகளிடமிருந்து காந்தியிடம் எது நம்மை ஈர்க்கிறது, எது ஈர்க்கவில்லை என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

நான் வேலை செய்து வரும் தாரா பதிப்பகத்தில் அமைதி, நல்லிணக்கம் குறித்து சில நூல்களை வெளியிட முடிவு செய்தோம். காந்தியின் எழுத்துகளைத் தொகுத்து வெளியிட்டால் என்ன என்று என் தோழி கீதா உல்ஃப் கேட்டார். அமைதி, வன்முறையற்ற சமுதாயம் ஆகியவற்றைப் பற்றி காந்தி கூறிய விஷயங்களை அவரின் பிற எழுத்துகளுடன் தொடர்புபடுத்தி, அவருடைய எழுத்துகளினூடான ஒரு பயணம் மாதிரி கட்டுரைகளை, கடிதங்களைத் தொகுத்தேன். எனது முன்னுரை, விளக்கக் குறிப்புகள் ஆகியவற்றை காந்தியின் கருத்துகளை விமர்சனபூர்வமாகப் புரிந்துகொள்ள உதவுமாறு அமைத்தேன்.

இன்றைய சூழலில் காந்தியை நான் மதிப்பதற்கு மிக முக்கியக் காரணம், இந்து சமுதாயத்தின் வன்மத்தைத் தணிக்கும் முயற்சியில் அவர் இறங்கியதுதான். இந்துக்களை வன்முறையாளராக இருக்கக் கூடாது என்று சொல்வது இன்றைக்கு எவ்வளவு அவசியம். இப்படிச் சொல்வதற்குக்குகூட அவர்களிடம் ஆள் இல்லை. தலித்துகளை நோக்கி, “நான் உங்களை ரட்சிக்கிறேன்” என்று காந்தி சொன்னதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், இந்துக்களை நோக்கி அவர் கூறியவற்றை, அவர்களின் வன்மத்தை அவர் விமர்சனப்படுத்தியதை நாம் பேசியாக வேண்டும் என்று நினைக்கிறேன்.

 

திராவிட இயக்கம் குறித்த கவனம் தமிழகத்தில் உருவாகியிருக்கிறது.அதில் உங்களிருவரின் எழுத்திற்கும் பங்கு இருக்கிறது. இந்நிலையில் இன்றைய இந்த கவனத்தை எப்படி பார்க்கிறீர்கள்? இந்த தலைமுறையினர் திராவிட இயக்கம் சார்ந்து முன்வைக்க வேண்டிய சொல்லாடல்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?  

89, 90-களில் மண்டல் கமிஷனும் பி.ஜே.பி.-யின் வளர்ச்சியும் நமது கடந்தகால வரலாற்றை நோக்கி நம்மை நகர்த்தின. அச்சமயம் நாம் நினைத்தோம், தமிழ்நாட்டில் வகுப்புரிமைக்கு எதிராக யாரும் பேசாததற்கும், இந்துத்துவ அரசியலுக்கு இங்கு பெரிதாக வரவேற்பு இல்லாததற்கும் திராவிட இயக்கங்கள்தான் காரணம் என்ற இந்தச் சூழ்நிலையில்தான் சுயமரியாதை சமதர்மம் வெளிவந்தது. திராவிட இயக்கத்தைப் பற்றி அறிவார்த்தமான, வரலாற்றுரீதியான ஆய்வுரையாகவும் அது இருந்ததால், அதை நிறையப் பேர் வரவேற்றனர்.  குறிப்பாக, இடதுசாரிகளைச் சிந்திக்கத் தூண்டிய நூலாக அது இருந்தது. தொடர்ந்து திராவிட இயக்கத்தை ஆங்கில அடிவருடியாக மட்டும் விமர்சித்து வந்த இடதுசாரிகள்,  வர்க்கம் மட்டும் பிரச்சினை இல்லை, வர்ணமும் மிக முக்கியமான பிரச்சினை என்பதை ஏற்க வேண்டிய வாதங்களை எங்கள் நூல் கொண்டிருந்தது.

அந்நூல் வெளிவந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. என்றாலும், அன்றிருந்த பெருமித உணர்வைக் கடந்து நாம் இன்னமுமே யோசிக்காமல் இருக்கிறோம். 2000-களின் தொடக்கத்தில் திராவிட இயக்கச் செயல்பாட்டை ஸ்டாலின் ராஜாங்கம் விமர்சனப் பார்வையோடு அணுகினார். பிறகு அதை விடுத்து வேறு ஆய்வுகளை அவர் மேற்கொள்ளலானார். அவரின் ஆய்வு சரியா, தவறா என்பதைக் கடந்து, அவர் முன்வைத்த விமர்சனங்களைக் கருத்தில் கொண்டு அடுத்த கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் ஆரோக்கியமான விவாதச் சூழல் உருவாகியிருக்கும்.

இன்று திராவிட இயக்கத்தை உயர்த்திப் பிடிக்கின்ற தலைமுறையை நான் எப்படிப் பார்க்கிறேன் என்றால், இந்தத் தலைமுறைக்கு “நான் தமிழன்” என்று சொல்வதும், “நான் பெரியாரின் பேரன்” என்று குரலெழுப்புவதும் முக்கியமாகப்படுகிறது அவசிய-மாகவும் இருக்கிறது. இன்றைக்குப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன், 2007-இல் சென்னை அரசியல் பள்ளி என்ற ஒன்றை நாங்கள் சிலர் நடத்தி வந்தோம். சாதி, வர்க்க நிலைப்பாட்டிலிருந்து தமிழக வரலாற்றை எவ்வாறு அணுகுவது, மார்க்சிய நிலைப்பாட்டிலிருந்து நமது சூழலை எவ்வாறு புரிந்து கொள்வது, தமிழ்த் தேசியத்தின் வரம்புகள், சாத்தியப்பாடுகள் யாவை, நமது அரசியல் சாசனம், ஜனநாயகத்தை எவ்வாறு மதிப்பிடுவது, இந்திய அரசு பற்றிய விமர்சனம், தலித் இயக்கங்களின் வளர்ச்சி, வரலாறு என்று பல நிலைகளில் வகுப்புகளையும் விவாதங்களையும் சுமார் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து மேற்கொண்டோம்.

கிராமங்கள், சிறு நகரங்கள் ஆகியவற்றிலிருந்து மேற்படிப்புப் படிக்கச் சென்ற ஒரு தலைமுறையினர், மென்பொருள் துறையில் வேலை பார்க்க சென்னைக்கு வந்தவர்கள், இடதுசாரி இயக்கங்களில் இணைந்து அவற்றுடன் உள்ளபடியே இயங்க இயலாதவர்கள், பெண்ணிய அக்கறைகளை உடையவர்கள் என்று பலதரப்பட்டவர்கள் பள்ளியில் இணைந்தனர். வரலாற்றில், சமுதாயத்தில் தங்களின் இடம், தங்களுக்கான அடையாளம், அரசியல் பற்றிப் புதிதாக யோசிக்க விரும்பிய தலைமுறையினராக அவர்கள் இருந்தனர். ஆனால், அரசியல் பள்ளி ஆழக் காலூன்றுவற்கு முயற்சி செய்து வந்த வேளையில், இலங்கையில் நடந்து முடிந்திருந்த கோரமான உள்நாட்டுப் போர் இவர்களின் கவனத்தை ஈர்த்தது. தமிழ், தமிழக வரலாறு, அரசியல் குறித்து மிகவும் வித்தியாசமாகச் சிந்திக்கத் துணிந்தவர்கள் வழமையான தமிழ்த் தேசியச் சொல்லாடல்களுக்கு ஆட்பட்டு, பழகிய பாதையைப் புதுப்பிக்கும் முயற்சியில் இறங்கிவிட்டனர். வேறு சிலர் புதிய இடதுசாரி அமைப்புகளை உருவாக்கினர். பெண்ணிய அமைப்புகளை அமைத்தனர். தமிழ்த் தேசியத்தையும் நவீனக் குடியரசு தொடர்பான நிலைப்பாட்டையும் இயைத்துச் செயல்படத் தொடங்கினர்.

அரசியல் பள்ளி பிரதிநிதித்துவப்படுத்திய தலைமுறைக்கு ஒரு தேடல் இருந்தது. அரசியலின் போதாமை குறித்த கவலை இருந்தது. இவர்களுக்குப் பின்னால் வந்த அடுத்த தலைமுறையினர் அரசியலைக் குறியீட்டுத் தன்மையுடன் மட்டும் அணுகுவதாகத் தோன்றுகிறது. கடந்த பதினைந்து ஆண்டுகளில் அறிவுத் தளத்தில் தலித் இளைஞர்கள், அம்பேத்கரியச் சிந்தனையுடையவர்கள் ஆகியோர் விடுத்த சவால்கள், திராவிட இயக்கம், தமிழ்த் தேசியம், வர்க்க அரசியல் பேசும் பலரைத் தங்களின் நிலைப்பாட்டைக் குறித்து யோசிக்க வைத்துள்ளது. ஆனால், அந்த யோசித்தல் என்பது ஆக்கப்பூர்வமான விவாதமாக வெளிப்படுவதற்குப் பதில், குதர்க்கமாகவும் எள்ளலாகவுமே தன்னை வெளிக்காட்டிக் கொள்கிறது; அல்லது திராவிட ஆட்சியின் சாதகங்களை மட்டும் பேசுவதாகப் போய்விடுகிறது. இந்தச் சு+ழலில் இன்றைய தலைமுறையினர் அவர்கள் தேர்வு செய்யும் நிலைப்பாட்டை விளக்கி, விவாதிப்பதற்குப் பதில், அதன் நியாயத்தை அறுதியிட்டுக் கூறுவதுடன் நிறுத்திக் கொள்கிறார்கள். தமக்குப் பிடிக்காத விஷயங்கள் குறித்து மௌனம் காக்கின்றனர் அல்லது விதண்டாவாதத்தில் இறங்கிவிடுகின்றனர்.

 

இந்தத் தலைமுறை என்னவாக மாறி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.

திராவிட இயக்கம் பரந்துபட்ட ஜனநாயகத் தன்மையோடு உருவாயிற்று. சாதி மறுப்பு, பார்ப்பனிய எதிர்ப்புப் பற்றி வெவ்வேறு நிலைகளில் பேசிக்கொண்டே இருந்தது. திராவிட இயக்கம் ஜனநாயகத் தன்மையுடன் இயங்கிய காலகட்டத்தில் தலித்துகளின் வாழ்க்கையிலும் ஜனநாயக வாழ்க்கை வாழ்வதற்கான சாத்தியப்பாடுகள் கூடின. பார்ப்பனரல்லாத சமுதாயங்களின் ஒப்பீட்டளவிலான ஜனநாயகத்தன்மை குறைய குறைய தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதைக் காணலாம். அம்பேத்கர் மிக அழகாகச் சொல்வார், “நாம் சிறுபான்மையினர். நம்மை நாம் மேம்படுத்திக் கொள்ளலாம், நமக்கான அரசியல் உரிமையைப் பெறலாம். ஆனால், பெரும்பான்மை மக்களின் சிந்தனை, செயல் ஆகியவற்றில் தாக்கம் ஏற்படுத்தும் அளவுக்குப் பிற சிறுபான்மையினருடன் நமக்கு அரசியல் இணக்கம் இருந்தால் ஒழிய, அத்தகைய சிறுபான்மை அரசியலுக்கு அரசியல் சட்டத்தில் பாதுகாப்பு வழங்கப்பட்டால் ஒழிய நம்மால் மாற்றங்களைக் கொண்டு வர இயலாது’ என்று. திராவிட இயக்கம் சிறுபான்மையினரின் நலன்களுக்கு ஓரளவேனும் ஒரு காலகட்டத்தில் இடம் வழங்கியது. ஆனால், இன்று அது அரசியல் பேரம் என்ற நிலையில் உள்ளது.

தலித் இயக்கங்கள் வலுவாக வளர்ந்த காலகட்டத்தில், அவற்றைத் தனிமைப்படுத்திவிட்டு, அவற்றுக்கு எதிராக அரசு இயந்திரங்களைப் பயன்படுத்திவிட்டு, அவை தேர்தல் ஜனநாயக அரசியலுக்கு வருகையில் பேரம் பேசும் அரசியலுக்குள் அவற்றை இணங்க வைக்கும் வேலையைத்தான் திராவிடக் கட்சிகள் செய்து வருகின்றன.

 

பெரியார், அம்பேத்கர், மார்க்சியம் என்று வந்த நீங்கள், பவுத்தம், குறிப்பாக அம்பேத்கர் பவுத்தம் நோக்கி நகர்ந்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அதற்கான அவசியம் இருக்கிறது என்று நம்புகிறீர்களா? ஏற்கெனவே மக்களோடு பண்பாடாக இருப்பதால், அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக, குறியீடாகப் பவுத்தத்தை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

2000-2001 வாக்கில், சர்வதேசியப் பவுத்தம் குறித்துப் படிக்க ஆரம்பித்தேன். அதே காலகட்டத்தில் அம்பேத்கரையும் தீவிரமாகப் படித்துக்கொண்டிருந்தேன். அயோத்திதாசரை ஏற்கெனவே படித்திருந்தேன்.

உள்ளூர் பவுத்தம் என்பது குறித்து ஸ்டாலின் செய்து வரும் வேலைகள் முக்கியமானவை. பௌத்தத்தின் எச்சங்களை ஆங்காங்கே அடையாளப்படுத்துதல் சுவாரசியமான வேலை; மறுப்பதற்கில்லை. ஆனால், வரலாற்றில் பவுத்தம் இங்கு என்னவாக இருந்தது, அன்றைக்கும் இன்றைக்கும் இடையிலுள்ள கால இடைவெளியை எப்படிப் புரிந்துகொள்ளப் போகிறோம் – இவற்றையும் நாம் சேர்த்து யோசிக்க வேண்டியுள்ளது.

அம்பேத்கருடைய பவுத்தம் பற்றி நிறைய யோசித்து வருகிறேன். பாலி, வடமொழியில் பவுத்தம் குறித்த பல மூலநூல்களைப் படித்து விட்டுதான் அவர் புத்தரும் அவருடைய தம்மமும் எழுதியுள்ளார். அவர் பவுத்த நூல்களைப் படித்து உள்வாங்கிக்கொண்ட அதே வேளை, சோசலிசம், சமூக உளவியல், முதலாளித்துவம் குறித்த விமர்சனங்கள் முதலியவற்றையும் இந்த நூலுக்குள் கொண்டு வந்துள்ளார். சமூக அநீதியை மட்டும் அவர் இதில் பேசவில்லை. பொருள் சேர்க்கும் அவாவைக் குறித்தும் விமர்சிக்கிறார். அந்த அவா உள்ளுந்துதலாக இருந்து நம்மை எவ்வாறு முதலாளித்துவம் நோக்கி நகர்த்துகிறது என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார். பாலி மொழியிலுள்ள நூல்களில் மிக முக்கியமான நூலான மஹாநிதனசுதத்தைப்  (Mahanidansutta) பல இடங்களில் மேற்கோளிடுகிறார். உலகில் நடக்கிற விஷயங்களுக்கான காரண காரியங்களைத் தத்துவார்த்தரீதியாக விளக்கும் நூல் அது. துக்க உற்பவத்துக்கான காரண காரியங்களைப் பேசும் நூலாக அதைக் கொள்கிறார்.

அவரின் விளக்கம் சுவாரசியமானது. “நமக்கே எல்லாமும் வேண்டுமென்று நினைக்கிறோம், பேராசைக்கு உட்படுகிறோம். இந்தப் பேராசையினால் பொருள் சேர்க்கிறோம். பிறகு அதைப் பாதுகாப்பதற்காகச் சட்ட, நீதி அமைப்பை உருவாக்குகிறோம். அமைப்பை உருவாக்குவதால் அதிகாரம் நிலைநிறுத்தப்படுகிறது. அதிகாரத்தின் மூலம் சண்டை சச்சரவு அதிகம் ஏற்படுகிறது. இதுவே வர்க்கப் போராட்டம் பற்றிய சரியான கணிப்பென்று நாம் ஏன் சொல்லக்கூடாது?”

அவர் சோசலிசத்தைப் பவுத்த அறவியலோடு இணைக்கிறார். பொருளாசையைச் சாடுகிறார். குறிப்பாக, தனிச்சொத்தைச் சாடுகிறார். நால்வழி உண்மைகள் குறித்துப் பேசுகையில், துக்கம் என்பது மனிதர்கள் மனிதர்களுக்கு இழைக்கும் துன்பத்தால்தான் உருவாகிறது என்று மாற்று விளக்கம் வழங்குகிறார். ஒவ்வொரு மனிதரும் தனக்குள்ளயே ஒரு போராட்டத்தை நிகழ்த்தித் தன்னை மாற்றிக்கொண்டு நல்ல விதமாக வாழ வேண்டும் என்று எட்டுவழிப் பாதையைச் சாதி அறத்துக்கு மாற்றாக முன்வைக்கிறார். துக்க நிவாரணம் என்பது மனசாந்தி அடைவதோ, நிப்பாணத்தைத் தேடிப் போவதோ மட்டுமல்ல. சமுதாய உறவுகளை மாற்றுவதிலும் நாம் வித்தியாசமாக வாழ்வதாலும் மட்டுமே உலகை மாற்றியமைக்க முடியும் என்கிறார்.

தான் முக்கியமாகக் கருதிய ஜனநாயக, சமுதாய மதிப்பீடுகளைப் பவுத்தம் மூலம் அம்பேத்கர் எடுத்துரைக்கிறார் என்று பலர் கூறுவர். ஆனால், அது அவ்வளவு சரியான வாசிப்பாக இல்லை. நியாயமான, நீதியான சமுதாயத்துக்கான ஆதாரங்களைப் பவுத்தம், சோசலிசம் ஆகிய இரு மரபுகளிலிருந்து அவர் பெறுகிறார். இந்த இரண்டையும் இணக்கமாகக் காணும் முயற்சிதான் புத்தரும் அவரது தம்மமும்.

புத்தரை மேற்கோள் காட்டி, மாற்றுலகை அமைக்க விரும்புவோரின் மைத்ரி (ஒப்புரவு) எல்லையில்லாததாக இருக்க வேண்டும் என்று வாதிடுகிறார். அது எல்லையில்லாததாக இருக்க வேண்டுமென்பதன் பொருள், ஒருவர் மீது கருணை காட்டுவது, அன்பு செலுத்துவது மட்டுமல்ல, இந்த உலகத்தில் உள்ள அத்தனை உயிரினங்களுடன் நல்லுறவு கொள்வது என்பதாகும். நீதியை நிலை நாட்டும்போதுகூட, வன்மத்தோடும் வெறுப்போடும் செய்யக் கூடாது என்று கூறுகிறார். ஒரு விஷயத்தை நாம் எதிர்த்துப் போராடும்போது ஒருவரை வீழ்த்துகிறோம். இந்த வினையாக்கத்தில் வன்மத்தோடோ, வக்கிரத்தோடோ ஒருவரை நடத்தக் கூடாது. சோவியத் யூனியனில் அந்த மாதிரிச் செய்ததால்தான், மக்கள் சோசலிசத்தை விரும்பி ஏற்காமல் திணிக்கப்பட வேண்டிய விஷயம் ஆகிவிடுகிறது என்கிறார். இவையெல்லாம் பவுத்தம், சோசலிசம் ஆகியவற்றுக்கு இடையிலான உரையாடலுக்கான புள்ளிகளாக அவரின் எழுத்துகளில் உள்ளன.

பவுத்தம் வெறும் அரசியல் உத்தியோ அல்லது இந்து மதத்தை எதிர்ப்பதற்கான விஷயமோ மட்டுமல்ல. பவுத்தம் தனிமனிதர்களின் மனவிடுதலையை குறித்து மட்டும் பேசவில்லை. அது வெறும் உளவியல் மாற்றம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. மற்றவர்களோடு நாம் எத்தகைய உறவுகளை வைத்திருக்க விரும்புகிறோம் என்ற பிரச்சினையை அது பேசுவதாக அயோத்திதாசரும் அம்பேத்கரும் கருதினர். அவரவருக்கு உரிய வகையில் இதைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அம்பேத்கர் பற்றி உங்களுக்குக் கிடைத்த புதிய புரிதல்கள் இருக்கின்றனவா?

நிறைய. அம்பேத்கருக்கு முன், அம்பேத்கருக்குப் பின் என்று தலித்துகளின் வரலாற்றைப் புரிந்துகொள்ள வேண்டியிருப்பதாக நான் பார்க்கிறேன். இன்றைக்குத் தமிழ்நாட்டில் தலித் அறிவு உலகமும் அரசியல் உலகமும் தன்னம்பிக்கையுடன் இருப்பதற்குக் காரணம் அம்பேத்கரின் கருத்துகள் தலித்துகளின் வாழ்வியலாக மாறியிருப்பதுதான் என்று எனக்குத் தோன்றுகிறது. கல்விக்கு அவர் கொடுத்த முக்கியத்துவத்தைத் தலித் மக்கள் கைக்கொண்டுள்ள விதம் – பட்டத்துக்கும் பதவிக்கும் என்று மட்டுமல்லாமல், மாற்று மனிதத்துக்கானதாகக் கல்வி அறியப்படுகிறது.

அம்பேத்கர் ஏன் ஜான் டூயியின்  (John Dewey) Democracy and Education நூலை அவ்வளவு கவனப்படுத்தினார் என்பது புரிகிறது. கல்வியின் பண்படுத்தும் தன்மை என்பதைக் கடந்து, கல்வி இல்லதவன் மனிதனே இல்லை எனத் திருக்குறள் சொல்வதைக் கடந்து, அதை வாழ்வியலுக்கானதாக அம்பேத்கர் விளக்குகிறார். தலித்துகளுடைய வரலாற்று உருவாக்கத்தில் கல்வி மிக முக்கியப் பங்கு வகித்துள்ளதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

அடுத்து, நவீன இந்திய வரலாற்றைத் திரும்பிப் பார்க்கையில் அம்பேத்கர் மட்டுமே வாழும் சிந்தனையாளராக, அரசியல் ஆளுமையாக உள்ளார். இன்றைய போராட்டங்களில் நாம் தெளிவு பெற உதவுபவராக, நம் அனைவருக்குமான சமுதாய விடுதலை வரலாற்றின் குறியீடாக அவர் உருவெடுத்துள்ளார். இதை நான் வகுப்பு எடுக்கச் சென்ற இடங்களில் பார்க்க முடிந்தது. தலித்துகள் மட்டுமல்ல, ஆதிகுடிகள், நாடோடிகள், தலித் அல்லாத சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள், பல மதங்களைச் சார்ந்தவர்கள் என்று அம்பேத்கரைப் பற்றி அறிவதில் பலருக்கு நாட்டமுள்ளது.

அம்பேத்கர் சமுதாய மாற்றத்தை நமது இருத்தல் நிலையில் ஏற்பட வேண்டிய மாற்றத்துடன் இணைக்கிறார். தலித்துகளின் இருத்தல் நிலையைச் சாதி காயப்படுத்தியதாக அவர் விளக்குவார். அதே சமயம், சாதி அமைப்பானது எவ்வாறு நம் அனைவரையும் அரைகுறை மனிதர்களாக வைத்துள்ளது என்பதையும் குறிப்பிடுவார். சாதியத் தீண்டாமைக்குக் காரணம், சாதியப் படிநிலைக்குக் காரணம் இந்துக்கள்தான் என்ற அவரின் குற்றச்சாட்டு, ஒரு வரலாற்றை, நாகரிகத்தை, பண்பாட்டைப் பற்றிய மிக முக்கியமான விமர்சனம். இதற்கு முகம் கொடுக்கக்கூட நாம் கூச்சப்பட வேண்டும். ஆனால், அத்தகைய கூச்சநாச்சம் எதுவும் இல்லாமல் இருக்கிறோம்.

தலித்துகள் இல்லை என்றால், அம்பேத்கர் இன்றைக்கு நமது நினைவில் இடம் பெற்றிருக்க மாட்டார்.  தலித்துகள் அவரைப் பத்திரப்படுத்தி வைத்திருக்காவிட்டால், சந்தோஷமாக இந்துமகா சமுத்திரத்தில் இந்துக்கள் கரைத்திருப்பார்கள். அல்லது வரலாற்றில் எங்காவது ஓர் இடத்தில் நிறுத்தி வைத்து, அவரைக் குறுகிய சட்டகத்துக்குள் அடைத்து வைத்திருப்பார்கள். அவரை ஆண்டவனுக்கு அடியாராக ஆக்கியிருப்பார்கள். தலித்துகள், “நீ சொல்லும் ஆள் இவரில்லை” எனச் சொல்லாமல் இருந்திருந்தால், அம்பேத்கர் இல்லாமல் போயிருப்பார்.

எனக்கு இந்தப் புத்தகம் எழுதியதில் கிடைத்த இன்னொரு பார்வை என்னவென்றால், அவரின் தனிமை. அவர் வாழ்ந்த காலகட்டத்தில் அவருக்கு ஈடு கொடுக்கக்கூடிய அறிவு ஆளுமைகளோ, அரசியல் ஆளுமைகளோ இல்லை. நண்பர்கள் உலகம் அவருக்கு இருந்திருக்கிறது. ஆனால், அவர் பேச, உரையாட, அவரின் பிரமிக்கத்தக்க கற்பனையை, அறிவை அறியவல்ல ஆளுமைகள் யாரேனும் இருந்தார்களா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும்.

 

வரலாற்று ஆய்வாளர்கள் பலர், “இன்று தலித்துகள் வீதியில் நடப்பதற்குக் காந்திதான் காரணம்’ என்கிறார்கள். வரலாற்றை மாற்றி எழுதுவதற்கு, காந்தியை உயர்த்திப் பேசுவதற்கு சாதி இந்துவுக்கு என்று ஒரு கடமை இருக்கிறது. இதையெல்லாம் எப்படிப் புரிந்துகொள்வது?

அம்பேத்கரைப் படித்தால் இப்படிப் பேச மாட்டார்கள். காந்தி-அம்பேத்கர் இடையிலான முரண்பாட்டினைச் சரிக்கட்டவும் முடியாது, இங்கு சமரசத்துக்கும் இடமில்லை. முக்கியமாக, வரலாறு சரிக்கட்டாத எந்த முரணையும் எழுத்தில் சரிக்கட்ட முடியாது. முரண்பாடுகளை நியாயமாக வரலாற்றின் பகுதிகளாக அறிந்து, புரிந்து கொள்வதுதான் நமக்கு விட்டு வைக்கப்பட்டுள்ளது. நமது அரசியல் நிலை, அடையாளம் பொறுத்து நாம் இந்த முரண்பாடுகள் குறித்துக் கவலைப்படக் கூடும். சாதி குறித்த காந்தியின் பார்வையை விளக்க வருபவர்களுக்கு இந்தக் கவலை உள்ளதாக நினைக்கிறேன். ஆனால், வரலாறு இவ்விஷயத்தில் அம்பேத்கர் பக்கம் இருந்துள்ளதை நாம் அங்கீகரிக்க வேண்டும். அம்பேத்கரைப் பின்பற்றி தலித்துகள் போராடிய அளவுக்கு காந்தியைப் பின்பற்றியவர்களோ, பின்பற்றுவதாகக் கூறுபவர்களோ சாதி இந்துக்களின் மனதை மாற்றும் வேலைகளைச் செய்து வருகிறார்களா என்று நாம் கேட்க வேண்டியுள்ளது.

 

மொழிபெயர்ப்புக்கு எப்படித் தேர்வு செய்கிறீர்கள்?

மொழி வெறும் ஒரு ஊடகம் மட்டுமல்ல. மொழிதான் அறிவு. மொழிதான் மனிதன், மனுஷி. அதனால் மொழிபெயர்ப்பு என்று வரும்போது மொழியின் துல்லியத்தை வாழ வைக்கும் களமாக நான் பார்க்கிறேன். உங்களுடைய கட்டுரை ஒன்றை மொழிபெயர்க்க நான் பொறுப்பு ஏற்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். இவர் எதை மனதில் வைத்துக்கொண்டு இந்தச் சொல்லை இந்த இடத்தில் பயன்படுத்த வந்தார் என்பதை ஊகித்துக்கொண்டுதான் மொழிபெயர்க்க முடியும். ஒருவரின் சொல் உலகத்துக்குள் ஊடுருவ வேண்டும், அந்த நபரின் தொனியை நமதாக்கிக்கொள்ள வேண்டும். 
அதனால் நமக்குப் பிடிக்காத விஷயங்களை மொழிபெயர்க்க முடியாது. உடன்பாடு இல்லாத விஷயங்களை மொழிபெயர்ப்பது மிகவும் கடினம்.

 

மொழிபெயர்ப்புக்கு எப்படி வந்தீர்கள்? அதில் உங்களின் திட்டம் என்னவாக இருந்தது?

நானும் எஸ்.வி.ஆரும் செய்த மொழிபெயர்ப்புகளில் ஒன்றான மண்ணும் சொல்லும் நூலை எடுத்துக் கொள்வோம். ஈழ தேசிய விடுதலைப் போராட்டக் காலத்தில் வெளிவந்த நூல் அது. அதனுடைய உள்ளடக்கம் காலத்தால் தீர்மானிக்கப்பட்டது என்று சொல்லலாம். சில வேளைகளில் குறிப்பிட்ட சு+ழலோ காலமோ முக்கியமாக இருப்பதில்லை. படித்த நல்ல கவிதைகளை, கதைகளை மொழி பெயர்க்க வேண்டும் என்று தோன்றும்.

தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு நான் செய்த மொழிபெயர்ப்புகள், குறிப்பாக பெருமாள் முருகனின் நிழல் முற்றம், கூளமாதாரி ஆகியன. தாரா பதிப்பகம் நடத்திய பட்டறை ஒன்றின்போது அவரைச் சந்தித்துப் பேசியதாலும் அவரின் எழுத்துகளை அச்சமயம் நான் ரசித்து வந்ததாலும் சாத்தியப்பட்டன. நான் மகிழ்ச்சியாகச் செய்த வேலைகளில் இம்மொழிபெயர்ப்புகள் அடங்கும்.

நான் மிகவும் உழைத்துச் செய்த வேலை ஜோடி குரூஸின் ஆழி சூழ் உலகு நாவலை மொழி-பெயர்த்ததுதான். ஒரு வருடம் எடுத்துக்கொண்டேன். மொழிபெயர்ப்பு முடிந்து புத்தகம் அச்சுக்குச் செல்லும் வேளையில், அவர் நரேந்திர மோடியின் அரசியலைப் பாராட்டிப் பேசியதும், அக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்ததும் என்னை மிகவும் சஞ்சலப்படுத்தியது. பிறகு பல நேரங்களில் நினைத்ததுண்டு, மொழிபெயர்ப்பை வெளியிட்டிருக்க வேண்டும் என்று. ஆனால், அந்த அரசியல், அதன் நாயகன்… இதை எல்லாம் நினைக்கும்போது அவற்றைக் கடந்து எதையும் யோசிக்க முடியாமல் போய்விடுகிறது. இந்துத்துவத்தை எந்த நிலையில் நினைத்தாலும் எனக்கு நிதானமாக இருக்க முடிவதில்லை. பிரேமா ரேவதியின் மைத்திரி வெளியீட்டில் கயர்லாஞ்சியின் காலத்தில் காதல் வெளிவந்தது. அதில் இடம்பெற்றுள்ள கவிதைகளை மொழிபெயர்ப்பது என்பது சுவாரசியமானதாக இருந்தது.

 

இந்நிலையில் நாடகம் நோக்கி உங்களின் கவனம் சென்றது ஏன்?

நாடகம் எனக்குப் பிடிக்கும். மங்கை அச்சமயம் இன்குலாபின் வாசிப்பில் வெளிவந்த சங்க இலக்கிய விஷயங்களை நாடகங்களாக இயக்கிக் கொண்டிருந்தார். “நீங்கள் சங்க இலக்கியத்தை விட்டு நவீன காலத்திற்கு வர மாட்டீர்களா?” என்று கேட்டேன். நீ எழுதிக் கொடு என்றார். அப்படித்தான் ஆரம்பித்தது எனது நாடகப் பயணம். காலக்கனவு ஓர் ஆவண நாடகம். 18-ஆம் நூற்றாண்டு தொடங்கி பல்வேறு வரலாற்று தாக்கங்களுக்கு உட்பட்டு பெண்கள் தங்களுக்கான வாழ்க்கையைப் பேச வந்த வரலாற்றை அவர்களின் சொற்களினூடாகப் பேசிய நாடகம்.

காலக்கனவு பேசிய பெண்ணியம் நடந்து முடிந்த ஒன்று. இப்படிப் பேசிய பெண்களுக்கு பிறகு என்னவாயிற்று என்று பொன்னி என்னை நச்சரித்துக் கொண்டே இருந்ததால், பெண்ணியத்தை விழுங்கிய “ஆண்மை’யைப் பற்றிய நாடகமாக, ஆண்மையோ ஆண்மை நாடகத்தை எழுதினேன். சாதி எதிர்ப்பு அரசியலானது எவ்வாறு ஆண் மையப்பட்ட, ஆண்களின் பண்புக்கூறுகளை அடிப்படையாகக் கொண்ட, பெண்களை விலக்கி வைத்த, அவர்களை அந்நியப்படுத்திய தமிழ்த் தேசிய அரசியலாக மாறியது, அந்த அரசியல் சொல்லாடல்கள் எவ்வாறு தமிழ் அரசியல் உலகில் செல்வாக்குப் பெற்றன என்பதைத் தமிழ் எழுத்தாளர்கள், அரசியல் தலைமைகள் ஆகியோரின் பேச்சைக் கொண்டு மேடையில் தமிழ் ஆண்மை குறித்து ஒரு விசாரணையைச் செய்து காட்டினோம். நகையுணர்வுடனும் எள்ளலுடனும் விமர்சனம் செய்தோம். பலருக்கு இது பிடிக்கவில்லை. பெரியார் பற்றி எழுதிய நீங்களா இதைச் செய்தீர்கள் என்று கேட்க ஆரம்பித்தனர்.

 

இது திராவிட இயக்கத்தின் மீதான பெண்ணியப் பார்வையில் ஒரு விமர்சனம் என்று சொல்லலாமா?

பெரிய விமர்சனம்தான். என்றாலும், அடிப்படையில் அது ஒரு படைப்பு. பல்வேறு குரல்களை உள்ளடக்கி நாங்கள் பொது விசாரணை ஒன்றை மேடையில் நடத்திக் காட்டினோம். நாங்கள் அரங்கேற்றிய விஷயங்கள் மட்டுமே திராவிட இயக்கத்தின் உள்ளீடு என்று எங்குமே நாங்கள் சொல்லவில்லை. நாடகம் பிரேமா ரேவதியின் பாட்டுடன் முடியும். அதில் எங்களின் அரசியல் தெளிவாக வெளிப்படும். அப்பாட்டை எங்களை விமர்சித்தவர்கள் முக்கியமானதாகக் கருதவில்லை.

 

நான் சந்தேகமாகவே ஒரு கேள்வி கேட்கிறேன். பெரியார் வரை நீங்கள் திராவிட இயக்கத்தை விமர்சிக்கவில்லை. அதற்குப் பிறகு நீங்கள் விமர்சிக்கிறீர்கள். பெரியாருடைய தொடர்ச்சி பின்னால் இல்லை என்று நினைக்கிறீர்களா?

பெரியாருக்கு முன், பெரியாருக்குப் பின் எனத் திராவிட இயக்கத்தைப் பார்க்க முடியுமா என எனக்குத் தெரியவில்லை. பெரியாரின் சிந்தனையிலும் மாற்றங்கள் இருந்தன. 1944 முதல், முதல் தேர்தல் வரை (1952) இடதுசாரிச் சிந்தனை, சாதி எதிர்ப்பு, பெண் விடுதலை என அனைத்தையும் ஒன்றிணைத்த செழுமையான அரசியல் சொல்லாடல்களைத் திராவிடர் கழகம் கையாண்டது. பிறகு இந்தியக் குடியரசுக்கு உட்பட்ட தேர்தல் அரசியல், ஜனநாயகம் என்று வரும் போது, பெரியார் அவற்றை ஒருபுறம் எதிர்த்தாலும், மறுபுறம் அரசதிகாரத்தைக் கைக்கொண்டு எதையாவது செய்ய முடியுமா என்ற தேடலில் காமராஜரை ஆதரிக்கிறார். இருந்தாலும், பண்பாட்டுத் தளத்தில் பார்ப்பன எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு ஆகியவற்றைக் கைவிடுவதில்லை. 1960-களில் தேவகோட்டையில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் நிகழ்த்தப்பட்டபோது, சாதி இந்துக்களைத் திராவிடர் கழகம் இடித்துரைக்கிறது. அவர்களில் முற்போக்காக உள்ளவர்களை அடையாளப்-படுத்துகிறது…

ஆனால், அவரின் அரசியல், இந்தியா என்ற அமைப்பை எதிர்ப்பதாகவும் திராவிடம் என்ற கொள்கைபாற்பட்ட சமுதாயத்தை நிறுவுவதாகவும் ஆனது. அவர் திராவிடம் என்ற சொல்லுக்குச் சாதி மறுப்பு என்ற உள்ளடக்கத்தை வழங்கினாலும், அச்சொல் தன்வழிப் பயணம் செய்யத் தொடங்குகிறது. தி.மு.க.-வினர் அதைக் குறிப்பிட்ட வகைகளில் கையாள்கின்றனர். எனவே, திராவிடம் என்று பேசும்போது பெரியார் அதை என்னதான் வித்தியாசமாக விளக்கினாலும், அது என்னவாக வெகு மக்களிடம் சென்று சேர்ந்திருக்கிறது, அது உள்ளுரரில் எவ்வாறு புரிந்து கொள்ளப்பட்டது, தமிழ் ஆர்வலர்கள், ஆதிக்கச் சாதிகள் அதை எப்படிப் புரிந்துகொண்டார்கள், திராவிடம் என்ற பொதுத் திணையை முன்னிட்டு எந்த அளவுக்குச் சாதி இந்துக்கள், தலித்துகள் தோழமையில் இணைந்தனர் என்பதையெல்லாம் பார்க்க வேண்டியிருக்கிறது.

திராவிடச் சொல்லாடல் நம்மை ஜனநாயகப்படுத்திய அதேவேளையில், சில முரண்பாடுகளை நாம் பேச முடியாதபடிக்கும் செய்துவிடுகிறது. குறிப்பாக, சாதி, பால்நிலை முரண்பாடுகள். எல்லா ஜனநாயக அரசியலுக்கும் அப்படிப்பட்ட தன்மை இருப்பதாகச் சொல்லலாம். அதற்காக ஜனநாயக அரசியல் கூடாது என்று சொல்லிவிட முடியாது. இதையெல்லாம் உள்வாங்கிக்கொண்டு ஒரு ஜனநாயகத்தைக் கட்டுவதுதான் அம்பேத்கருடைய நிலைப்பாடாக இருந்தது.

 

எந்த அரசியல் பிரச்சினை வந்தாலும் அதை எதிர்ப்பதைத் தாண்டி, அதன் இன்னொரு வழியை யோசிப்பது, வேறு நெறிமுறைகளைக் கைக்கொள்வது. உங்கள் பார்வையிலிருந்து சொல்லுங்கள், எதனுடைய தாக்கத்தால் நீங்கள் செயல்படுகிறீர்கள்?

பெண்ணியம்தான் இதற்கான காரணம் என்று சொல்ல முடியும். மறைந்த சிவில் உரிமைப் போராளி பாலகோபால் இடமிருந்து நான் கற்றுக்கொண்ட விஷயங்களையும் முக்கியமானவையாகக் கருதுகிறேன்.

பாலகோபால் மார்க்சியத்தில் அக்கறையாக இருந்த போதிலும், அவருக்கு மனிதர்களின் நடத்தை, மனநிலை குறித்து வர்க்க அரசியலைக் கடந்த பார்வை இருந்தது. போராடும் நேரத்தில் ஒன்றாக இணைந்து போராடிவிட்டு, வாழ்க்கை என்று வரும்போது ஏன் நமக்கு ஒன்றாக இருந்து வாழத் தெரியவில்லை என்கிற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார். நமக்குச் சாதிப் போராட்டம் தெரியும், சாதி எதிர்ப்புப் போராட்டம், வர்க்க அரசியல் தெரியும், வாழ்வது பற்றித்தான் தெரியவில்லை என்பார். அது என்னை மிகவும் யோசிக்க வைத்தது. நமக்கு ஒவ்வாத, நாம் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்களோடு வாழ்வது குறித்தும் பேசியிருக்கிறார்.

2002-இல் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த உயிர் வதைகளைப் பார்வையிட்டு வந்த பிறகு முக்கியமான கட்டுரை ஒன்றை எழுதினார். குஜராத்தில் நடந்தேறிய வன்முறையை நாம் எவ்வாறு புரிந்துகொள்வது? நேருக்கு நேர் சண்டை போடுவது என்பது நமக்குத் தெரியும். சமூகரீதியான காரணங்களுக்காகச் சண்டைபோட்டுக்கொள்வது குறித்தும் அறிவோம். ஆனால், இஸ்லாமியர்களின் மூதாதையர்கள் உறங்கும் கல்லறைகளைச் சிதைக்கும் வன்மத்தை என்னவென்று சொல்வது? இஸ்லாமியர்களின் தொப்பி நமக்குப் பிடிக்காமல் இருக்கலாம், உடை பிடிக்காமல் இருக்கலாம், அவர்களின் மதத்தை நாம் எதிர்க்கலாம், ஆனால், இவற்றைக் காரணங்களாகக் காட்டி, அவர்கள் வாழக் கூடாது, வாழ அருகதையற்றவர்கள் என்று நினைப்பது எந்த விதத்தில் நியாயம்? பிடிக்காத ஒரு விஷயத்தை அழிப்பது என்பது அறவியல் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினை என்கிறார். அத்தனை எளிதாக வெறுப்பை வளர்க்க முடிகிற அளவுக்கு ஏன் அன்பை நிலைநிறுத்த முடியாமல் போய்விடுகிறது என்று ஆதங்கப்படுகிறார்.

இந்தக் கேள்வியின் இன்றைய பொருத்தப்பாட்டை நினைத்துப் பாருங்கள். இந்துத்துவத்தின் மீது காட்டுகின்ற எதிர்ப்பைக் கடந்து நாம் தொடர்ந்து எப்படி வித்தியாசமாக, மாண்புடன், மரியாதையுடன், சமத்துவமாக, நீதியாக வாழப்போகிறோம்? நம்மிடம் வாழ்வதற்கான இலக்கணமே இல்லாமல் போய்விட்டது. எதிர்ப்பு இலக்கணம் மட்டுமே எஞ்சியுள்ளது.

இங்குதான் பெண்ணியம் நமக்கு கைகொடுக்கும் என்று தோன்றுகிறது. வீட்டைப் பராமரிக்கிறேன், வேலைக்குச் செல்கிறேன், குழந்தையைப் பார்த்துக் கொள்கிறேன், பெரியவர்களுக்குப் பணிவிடைகளும் செய்கிறேன். தொடர்ந்து இந்தச் சமுதாயம் உயிர் வாழப் பெண்கள் உழைக்கிறார்கள். வாழும் உயிர்களுக்குப் பொறுப்பாக இருத்தல் என்பது வரலாற்றுரீதியாகப் பெண்களின் வாழ்க்கைக் கடமையாக்கப்பட்டுள்ளது. பெண்களின் வாழ்க்கை எப்படி அமைந்தாலும், பிறரை வாழ வைப்பதை அவர்கள் மறுக்க முடியாதபடிக்குச் செய்து வருகின்றனர். வாழ வைத்தல் என்ற செயல்பாட்டுடன் பெண்களுக்குள்ள வரலாற்றுத் தொடர்பை பெண்ணியம் முக்கியமானதாக அங்கீகரிக்கிறது. பெண்களின் இந்த வரலாற்றுப் பணிக்கு உரிய மதிப்பு வழங்கப்படுவதில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.  வாழ்தல் என்பதைச் சமத்துவமான வாழ்க்கை, மாண்பான வாழ்க்கை, பெண்களைச் சாதி, குடும்ப எல்லைகளுக்கு உட்படுத்தாத வாழ்க்கையாக ஆக்க முடியுமா என்ற கேள்வியைப் பெண்ணியம் முன்வைக்கிறது.

வாழ்தலில் அக்கறை உள்ளதால், ஒரு விஷயத்தை எப்பொழுதும் விமர்சனம் செய்துகொண்டே இருப்பதில் எனக்கு ஆர்வமே இல்லை. நான் அம்பேத்கரிடமிருந்து முக்கியமாகக் கற்றுக்கொண்டது இதுதான். அவர் எதிர்வினை அரசியல் மட்டும் செய்யவில்லை. அரசியலை வேறுவிதமாக யோசியுங்கள், மதத்தை வேறுவிதமாக யோசியுங்கள் என்கிறார். எதிர்த்தல் மட்டுமே அரசியல் அல்ல. காரணம், வாழ்க்கை என்பது நகர்தல், உறவு கொள்ளுதல், சேர்ந்து செய்தல். தனியாக இருக்க வேண்டிய நேரத்தில் அவ்வாறு இருப்பதற்கான வெளியை, காலத்தை வென்றெடுத்தல்.

உங்களுடைய இளமைக் காலத்தில் கம்யூன் வாழ்க்கையை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தீர்கள். ஆனால், இப்போது சமூகச் செயல்பாடு சார்ந்த இந்த வாழ்க்கையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

என்னுடைய வாழ்க்கையில், என்னுடைய குடும்பம், நான் என்று இருந்தது கிடையாது. நம்மில் பலர் இப்படித்தான் வாழ்கிறோம். குடும்பத்தைக் கடந்த உறவுகள், நட்புகள், பயணங்கள், வாழ்க்கை முறைகள்… குடும்பம், குலம், சாதி – இது மூன்றும் இல்லாத வாழ்க்கை இருந்தால் நன்றாக இருக்கும்.

சந்திப்பு: ஸ்டாலின் ராஜாங்கம்
புகைப்படங்கள் – இளா
ஓலிதட்டச்சு : சந்துருமாயவன்

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!