மலையுக சூரன்

- த.இராமலிங்கம்

புத்தகத்தின் நடுப்பக்கத்தைக் கிழித்து முக்கோணமாகக் கிரீடம் செய்து, சேவல் மயிர்களைப் பீத்தோட்டங்களிலும் சாணிக் குப்பைகளிலும் தேடி கிரீடத்தின் பக்கவாட்டில் சொருகி, காகிதக் கிரீடத்தின் கீழ்ப்பகுதியில் இரு பக்கங்களிலும் துளையிட்டு தாத்தாவின் சீலைத் துணியைக் கிழித்து துளையில் சொருகி, சூர வேசத்திற்கான கோழி மயிர்க் கிரீடத்தைத் தலையில் இறுகக் கட்டி, ஆள்சப்பாறை வெட்டி இரு கைகளிலும் புஜக் கட்டையாகக் கட்டி, குங்குமத்தையும் நல்லெண்ணெயையும் குழைத்து சிவப்பு வண்ணமாக முகத்தில் பூசி, அடுப்புக் கரியை அரைத்து மீசை எழுதி, தாத்தாவின் நாமக்கட்டியைக் குழைத்து புருவத்தின் ஓரங்களில் புள்ளி வரைந்து, உறிஞ்சி வீசிய நத்தை ஓட்டை எடுத்து அம்மாவின் புடவையை நாராகக் கிழித்து அதனுள் துளையிட்ட நத்தை ஓட்டைக் கோர்த்து கால் சலங்கையாகக் காலில் கட்டி, காட்டாமணிக் குச்சியை இரண்டு கத்திகளாகக் கையில் பிடித்து, திரையாகப் பிடித்து இருக்கும் அப்பாவின் சோமத்தை விலக்கிக் கரகரவெனச் சுத்தி ஓங்கி வலது காலால் பூமியில் உதைத்து ஒரே நேர்க்கோட்டில் நின்று பாட்டு எடுத்துப் பாடிய என் பால்ய காலத்தில் எங்க ஊரின் தெருக்கூத்து வாத்தியார் நாந்தாங்க…

பச்சவுட்டு மூல, கொளத்தாங்கர மூல, கோயிலு மூல, கொடமூட்டு மூல, மனக்கொல்லி என ஒட்டுமொத்த பேராவு+ரின் எல்லாப் பகுதிகளுக்கும் சின்னப்பசங்க திருவிழா என்றால், என்னோட கூத்துயில்லாமல் அந்தப் பொழுது வெடியாது. உதயகுமாரு, நொண்டி, வீரப்பன், சம்பத், என்னோட சேத்து ஐந்து பேரு எங்க சமா. பத்துப் பைசா கொடுத்து பாக்கு வைத்தால்… தெரு லைட்டு வெளிச்சத்தில் ஐந்து பேரும் சும்மா புகுந்து விளையாடி அமர்க்களப்படுத்திவிடுவோம். ஒரு நாடகமாக இருக்காது… வாய்க்கு வந்த பாட்டு… பாரதத்துல வருகின்ற அர்ஜுனன், வீமன், அபிமன்னன், துரியோதனன் என ஒட்டுமொத்தக் கதாபாத்திரமும் திடீர் திடீர் என்று வந்து செல்லும். அப்படி நாங்கள் ஆடும்போது ஒரு நாள் பார்த்துக்கொண்டிருந்த கடுவு+ட்டு பெருமாள், இவர் தங்கவேலுவோட நண்பர். தங்கவேல் திண்டிவனம் சுற்று வட்டாரத்திற்குப் பேர்போன தெருக்கூத்து வாத்தியார். தன் பங்கிற்குப் பிரித்துக் கொடுத்த ஆடு, மாடுகளை விற்று வேச சாமான்கள், மிருதங்கம், ஆர்மோனியப் பெட்டியெல்லாம் சொந்தமாக வாங்கி, “பேராவு+ர் ஸ்ரீமுத்தாலம்மன் நாடக சபா’ என்ற பெயரில் தெருக்கூத்து சமா நடத்தி வருகிறார். இவர் பிழைப்புக்காக தெருக்கூத்தை நடத்தவில்லை. தான் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு கணப்பொழுதையும் தெருக்கூத்திற்காகவே அர்த்தமாக்கிக் கொண்டவர். இவர்தான் என்னுடைய அப்பா. நாங்கள் ஆடிய கூத்தை பெருமாள் எங்கப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். என் நண்பன் நொண்டியோட அப்பாதான் பெருமாள். இவரும் அப்பாவோட கூத்து சமாவில் ஆண் வேசம் ஆடுபவர். இவர் மட்டுமில்லை… உதயகுமார், சம்பத், வீரப்பன் என மீதமுள்ள நண்பர்களோட அப்பாக்களும் என் அப்பாவிற்கு நண்பர்கள். அது மட்டுமில்லாமல், இவர்களும் அப்பாவோடு கூத்தாடுபவர்கள். அப்பாவைத் தவிர, மற்ற நான்கு பேரும் ஆண் வேசம் ஆடுபவர்கள். எங்கப்பா பெண் வேசம் கட்டுபவர். நாடகத்தில் வரும் பெண் வேடங்களில் முக்கியமான பாத்திரத்தை ஏற்று நடிப்பார். தெருக்கூத்தில் வாத்தியார் என்றால், இந்த மாதிரியான கதாபாத்திரங்களிலேயே பெரும்பான்மை-யானவர்கள் நடிப்பார்கள். என் நண்பர்களுடைய அப்பாக்களெல்லாம் ஆண் வேசம் ஆடுகிறார்கள் என்பதில் என் நண்பர்களுக்கு எப்பொழுதும் ஓர் அகந்தை இருக்கும்.

“டே பையா தங்கவேலு… நீ என்னாடா கூத்தாடுற… உம்பையங் ஆடுறாம்பார்ரா ஆட்டங்.. அட ட டா… சு+ரன்னா… சூரந்தாண்டா… சும்மா நின்ன எடத்துல பம்பரமாட்டங் சுத்தறாண்டா… பிரம்மிச்சி போயிட்டண்டா…’ பெருமாளு நாங்க ஆடிய கூத்தப் பத்திச் சொல்லிக்கொண்டிருந்தார்.

“ப்பதா பாத்தியாடா அவங் ஆட்றத.. சமாகாரமாரி வேச சாமல்லாங் செஞ்சி வச்சிங்கீறாண்டா அவங்.. வேசங்கட்டிக்கினு கால் கெச்சயைப் பையில பாத்தா கெச்ச இருக்காதுடா.. வேசப்பைய சாலு உள்ள மறச்சி வச்சகூடங் சலங்கையத் தூக்கிறாண்ட… வெத ஒண்ணு போட்டா சொர ஒண்ணா மொளைக்குங்.. உட்ரா பாத்துக்கலா அவன பெரிய கூத்தாடியா ஆக்கிடுவொங்…”

அப்பாவும் பெருமாளும் பேசிக்கொண்டுருப்பதைக் கேட்டுருந்த அம்மா காளி, “ஆக்கிடுத கூத்தாடிய அவன.. உன்னமேரியே ஊர் ஊரா… கூத்தியா வச்சிக்கினு குடும்பத்தப் பாக்காத, கட்டுத் தறில தங்கதா லோன் மாடுமேரி சுத்தி வருவாங்…’

“எங்கனா நாலு எழுத்த சொல்லிக்குட்தா வெய்யப்படாத அவங்காலத்த ஓட்டுவாங்… கூத்தாட உடப்போறாராங் கூத்தாட… இவுரு கூத்தாடி வாரியாந்து போட்டு எங்க வாய் வவுருல்லாங் ரம்பிப்போச்சி…’ என் தலையில் பேன் எடுத்துக் கொண்டுருந்த அம்மா, அப்பா நடத்தும் தெருக்கூத்தினால் அடுப்பு வேகவில்லை என்பதை அவருக்கு உரைக்கும் அர்த்தத்தில் கோவமாகப் பேசிக்கொண்டுருந்தார்.

“ஏண்டி நாளிக்கே கூத்தாட போயிறானா அவங்.. ஏந்துபோடி அப்பால… டே பெருமாளு நீ அபிடியே பொடி நடயா நடந்து சிவிரிய போயி வைத்திலிங்கத்த கூட்னு மரக்காணங் வந்துடு.. நா வில்லவனம் போயி இந்த கெட்டியங் ஆட்றவங் எங்க போனான்னு தெரியல.. சகலனுக்கு ஒடம்பு செரியாயில்லன்னு போன மொண்டாட்தன ஆளயெ காணாண்டா, நாலு ராத்திரி கூத்து கெட்டுப் போச்சி அவனாளா.. நா போயி அவன பாத்துட்டு, வந்துர்ந்தானா கூப்டுகின்னு அப்டியே வந்தறன்டா…” ராத்திரி கூத்துக்குக் கௌம்பிக் கொண்டுருந்தார் அப்பா. அவர் சென்றவுடன் எனுக்குப் பாக்கு வைத்திருந்த கோயில் தெருப் பசங்க என்னை அழைத்துக்கொண்டு போக வந்துவிட்டார்கள். அதன் பிறகு நானும் என்னோட சமா நண்பர்களோடு கூத்தாடக் கௌம்பிவிட்டேன். குங்குமத்தைக் குழைத்து வண்ணமாக முகத்தில் பூசி… அடுப்புக் கரித்துண்டால் மீசை வரைந்து….

சித்திரை மாதத்துக் கத்திரி வெய்யில் முதுவை பட்ட ஒரைக்க, பள்ளிக்கூடத்தின் ஆண்டு இறுதி விடுமுறை ஒரு மாதத்திற்கு விடப்பட்டது. திருட்டுப் பனைமரம் ஏறி, பனங்காவெட்டி வயிறுவலிக்கச் சாப்பிட்டு, காரப்பழம், ஈசம்பழம், மூக்குச்சளிப்பழம், கோவப்பழம், சப்பாத்திப் பழம், சொரட்டுப் பழம் எனக் காட்டுப் பழங்களையெல்லாம் ஏரிக்கரை ஓரத்திலும் எரங்காட்டிலும் மொன்னு முழிங்கி, குரிவி தழயைக் கில்லி வெத்தல போட்டு, ஈச்ச மரத்தின் ஓலையைப் புகையிலையாகக் கொதப்பித் துப்ப, வெய்யில் அனலை வாரி இறைக்க, வெப்பம் வியர்வையாக வழிய ஏரிக்கரை வேப்ப மரத்தில் ஆளுக்கொரு கிளையைப் பிடித்து அமருவோம். அடடா…. பனங்காத் தண்ணி மேலெல்லாம் வழிந்து பிசுபிசுவென்றிருக்கும். சட்டைபோடாத எங்கள் உடம்பை அந்தக் கானகக் காற்றுப் பூசி மொழுகிச் செல்லும்போது ஒரு பானை புதுக்குடத்தின் தண்ணீரை ஒரே மொடக்கில் குடித்தது போல இருக்கும்.

விடுமுறை நாள் ஒவ்வொன்றும் இப்படிக் கழிந்து கொண்டிருக்க, ஒருநாள் அந்தி மாலைப் பொழுதில் “வர்ற சித்தர இரவத்தொன்னாந் தேதி காளி கோயில் காப்பு கட்டி, கூழூத்தி, வேல்குத்தி திர்னா பண்ணப்போறாங்கோ… பெராத்தனகீரவங்க அம்மனுக்குக் கூழூத்தி, வேல் போட்டுக்கலாம்… ஊர் சார்பா தெரியப்படுத்துறோங்…..’ ஊருக்கான ஓடும்புள்ள ஒவ்வொரு தெருவாகப் பறை அடித்து வரப்போகின்ற காளியம்மன் கோயிலுக்கான திருவிழா செய்தியைக் கூறி வருகிறார். செய்தி கேட்ட எங்களுக்கோ மகிழ்ச்சியின் மடை உடைந்து கரை புரள… ஓடும்புள்ளையின் பறையிசைக்கேற்றவாறு ஆடிக்கொண்டே அவரைப் பின் தொடர்ந்து ஊர் முழுக்கச் சுற்றி வந்தோம்.

மூன்று மாட்டு வண்டிகள், ஒரு டிராக்டரில் சாமிக்குச் சாத்துபிடி செய்து அலங்கரித்து நின்று கொண்டிருக்க, பிரார்த்தனை உள்ள பக்தர்களுக்கெல்லாம் வேல் குத்திக்கொண்டிருந்தார்கள். பதினைந்து அடி உயரமுள்ள சடல் மரத்தின் கீழ் எட்டடி உயரத்திற்கு இரண்டு இரண்டு பெஞ்சியாக நான்கு அடுக்கு அமைத்து அலங்கரித்த சாமி வண்டிகளை இழுக்கப் போவாரை பெஞ்சியின் மீது கவிழ்ந்து படுக்க வைத்து நல்லாவு+ரிலிருந்து வந்துருந்த வேல் குத்தும் பூசாரி, கவிழ்ந்து படுத்திருப்பவரின் முதுகில் திருநீர் தெளிக்கிறார். பக்கத்தில் இருக்கும் சாமியாரின் உதவியாளர் அரோகரா என்று முதுகில் ஓங்கி அடித்து, முதுகுச் சதையை இழுத்து வாட்டமாகக் குடுக்க, பூசாரி கையிலிருந்த இரும்புக் கொக்கி படுத்திருந்த கீரசட்டி அண்ணனின் முதுகுச் சதையில் உள்ளே நுழைந்து வெளியே வருகிறது. அண்ணன் கீரசட்டி வலி தாங்க முடியாமல் அழ ஆரம்பிக்கிறார். தான் அழுவது ஊர் சனத்திற்குத் தெரியவந்தால், கடவுள் மீது பக்தியாக தான் இல்லை என்று சொல்லிவிடுவார்களோ என்று எண்ணி, முட்டிக்கொண்டு வந்த அழுகையைத் தன் கையில் வைத்திருந்த எலுமிச்சை பழத்தை வாயில் வைத்து அடைத்து கரகரவென மென்னு அழுகையை விழுங்குகிறார்.

அலங்கரித்த நான்கு சாமி வண்டிகளுக்கும் எட்டு நபர்களின் முதுகில் கொக்கிப்போட்டாகிவிட்டது. இப்பொழுது இவர்களுக்குக் குலுக்குப் பரிசோதனை நேரம். அதாவது, இவர்கள் வண்டிகளைத் தங்கள் முதுகில் குத்தப்பட்டிருக்கும் கொக்கியில் கயிறு கட்டி இழுக்கும் அளவுக்குப் பக்தியாக இருக்கிறார்களா என்று பார்க்கப் போகிறார்கள். அண்ணன் கீரசட்டி மீண்டும் கண் கலங்கிப் போனார். நட்டு வைத்துருக்கும் சடல் மரத்தில் இரண்டு பக்கங்களிலும் தொங்கும் கயிற்றால் இரண்டு இரண்டு நபர்களாக முதுகில் குத்தப்பட்டிருந்த கொக்கியில் கட்டிச் சுத்த விடுகிறார்கள். அரோகரா… அரோகரா என்ற கோசம் ஊர் எல்லையைக் கடந்து காற்றில் கரைந்தது.

வட்டமடித்தது சடல் மரம். பக்தி வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. பெண்களும், குழந்தைகளும் எலுமிச்சைப் பழங்களை உடல் முழுவதும் குத்திக்கொண்டு நடக்க, பூசாரி அக்கினிச் சட்டியைக் கையில் எடுக்க, வாலிபப் பெண்கள் பூசியிருந்த மஞ்சள் வாசனையும் மல்லிகைப்பூ, எலுமிச்சைப் பழம் வாசனையும் குழைந்து அக்கினிச் சட்டியிலிருந்து கனிந்து மேலெழும்பும் நெருப்பின் புகையோடு கலந்து சுர்ர் என்று உரைக்கும் மத்தியான வெய்யிலில் கடவுளை நாபகப்படுத்தியது. சாமி ஊர்வலம் கிளம்பிவிட்டது. நான்கு தெருக்களைச் சுற்றி சாமி கோயிலை வந்தடைவதற்குள் கையெழுத்து மறையும் நேரமாகிவிட்டது. டிராக்டரிலிருந்த சாமியை மட்டும் கூத்து நடக்கும் களத்துமேட்டுல நிறுத்திவிட்டு, மாட்டுவண்டியிலிருந்த சாமிகளை அவிழ்த்து கோயிலுக்குள் வைத்துக்கொண்டிருந்தார்கள் ஊர் நாட்டாண்மைக்காரர்கள்.

டே பையா… கூத்தாடிக்குச் சோறாக்கச் சொல்லியாச்சாடா…

ஆங்… அதெல்லா வேல நடக்குது.. நடக்குது..

கோழிக்கறி கேட்டானுகடா அவனுவ, நாலு கோழி வாங்கியாரச் சொல்லிருந்த.. வந்துருச்சா…

ஏயா நாட்டாமா, கோழிக்கறியில்லாத சோறு எறங்காத அவனுகளுக்கு..

ன்னாடா… கிண்டுலா பண்றீங்க.. வெளியூரு கூத்தாடின்னா கோழிக்கறி ஆக்கிப்போடுவீங்க, உள்ளூரு கூத்தாடின எளக்காரமாடா உங்களுக்கு… அவனுவ உட்ர ஓத்தாமட்ட எவன்டா வாங்கறது.. அதோட உட்டா போதாத.. அவனுவ எட்டு நாட்டாம பொண்டாட்டிய கேப்பானுவ.. அனுப்புங்கடா, யாம் பொண்டாட்டிக்கு வலுவில்லடா சாமி…

உம் பொண்டாட்டியா ஒன்னுங் அனுப்பத் தேவல, காலிலியே முட்டக்காரங்கிட்ட சொல்லி நாளி கோயி வாங்கிட்டோங்… வாய மூடிக்கினு சாமி மேல கீற தலப்பு கட்ட அவுரு..

அப்படிச் சொல்லாண்டா கம்மினாட்டி, கிண்டுலு பண்ற நேரமாடா இது…

வளர்பிறை நிலா வெளிச்சத்தில் நைனார் வீட்டுக் களத்து மேட்டுல தெருக்கூத்து ஆடுவதற்கு பெஞ்சி போடப்பட்டுருந்தது. மேளக்காரர், தாளக்காரர் அமர்ந்து வாசிப்பதற்குப் போடப்பட்டுருந்த அந்தப் பெஞ்சின் மீது எகிறிக் குதித்து நிலா வெளிச்சத்தில் நாங்கள் கூத்தாடிக் கொண்டிருந்தோம்.

சூரனை ஒழிக்கப் போறேன்.. சுடசுட காப்பி கொண்டா என்று நான் பாடிக்கொண்டிருக்கும்போதே..

நொண்டி இடைமறித்து..

காளி வேசம் போடுவேன், கத்தியால் வெட்டுவேன்.. காளிவு+ட்டுத் திண்ணையில பிய் பேண்டு ஓடுவேன் என்று பாடி எங்களைச் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தான்.

மூச்சு வாங்கி வேகமாக நடந்து வந்த நாளாங்கொத்து நாட்டாண்மைகாரர் ஆட்டுக்காரு கிழவன்.. கூத்திற்கு லைட்டுக் கட்டுவதற்காக நடப்பட்டிருந்த மரத்தில் லைட்டுக் கட்டாமல் இருப்பதைப் பார்க்கிறார்.

டே.. பசங்களா.. லைட்டுகாரங் வந்தானாட இங்க…

வர்ல கெழவா…

அந்த மொண்டாட்தன செத்த ஓடிக் கூட்டாங்கடா, கேட்டா பெரிய வக்கிலுமேரிப் பேசுவான்டா அவங்…

குண்டா நெறய கோயிகறி சோத்த மட்டுங் ஊருக்குமின்னே கொட்டிமுட்டாங்.. லைட்ட கொன்னாந்தானா பாரு உன்னுங்…

அந்தக் கிழவர் அவர்களைக் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கும்பொழுதே லைட்டுக்காரனும் அவன் மனைவியும் ஆளுக்கொரு பெட்ருமாசு லைட்டைத் தலையில் வைத்துக்கொண்டு மெதுவாக நடந்து வருகிறார்கள்.

யாண்டா… கம்மினாட்டி ஒர்த்த ஒர்த்தனு யிப்பிடி பொறுப்பில்லாத கடந்தா எப்டிதாண்டா, திர்னான்னா யாங் ஒர்த்தங் தலமேலியாடா நடக்குது, ஆம்டியா பொண்டாட்டியும் நேரமாவுறது தெரியாத சோடி போட்டுக்கினு வரிங்க…

யோவ்.. வாயமூட்னு கம்முனு கெடயா.. எரிச்சலக் கௌப்பாத..

மரான வாங்க காசி கேட்ன நோட்ட பத்த பத்தயா தூக்கிக் குட்திய அப்டியே சீக்கரமா வர்லன்னு கேக்கற…

வர்றவம் பூரா நோட்டுமேலியே வாங்கடா.. கேக்கறவனுக்கு பூரா கண்ணு மண்ணு தெரியாதா எடுத்துக் குடுத்துதாங் உண்டில ஒண்ணுல்லாதாக்கிட்டீங்க….

பொலம்பிக்கினே அந்தக் கெழவன் வேசங்கட்ர கொட்டாயிக்கிப் போய்ட்டாரு…

லைட்டுக்காரன் பெட்ருமாசு லைட்டுக்குக் காத்தடிக்க ஆரம்பித்தார். ஊரில் நடக்கும் அனைத்து நல்லது கெட்டதுக்கெல்லாம் இவரோட லைட்டுதான். இவர் லைட்டுக்குக் காத்தடிக்கும் தோரணையே அற்புதமாக இருக்கும். காற்று அடித்த இரண்டு லைட்டுகளையும் தூக்கி மரத்தில் கட்டினார் லைட்டுக்காரர். பால் மழை போலப் பொழிந்து கொண்டிருந்த நிலவின் ஒளியோடு பெட்ரோமாஸ் லைட்டின் இள மஞ்சள் நிறம் நீராக ஓடிப் பாய்ந்தவுடன் நையினார் வீட்டுக் களத்துமேட்டில் இரவில் வெய்யில் காய்வது போல் இருந்தது. பூக்காரர், முறுக்கு, சுண்டல் விற்பவர்கள், டீக்கடை போடுபவர்கள் என்று கிராமத்தில் கடை வைத்திருப்பவர்கள் எல்லோரும் களத்துமேட்டில் கடை விரித்துக் கொண்டிருந்தார்கள். ஊர் ஜனங்கள் அனைவரும் ஈசம்பாய், கோரப்பாய், சாக்கு, அம்மா புடவை, தாத்தா துப்பிட்டி, அப்பா சோமம் என்று இப்படி விதவிதமான படுக்கைகளை எடுத்துக்கொண்டு களத்துமேட்டில் இடம் பிடித்து அமருகிறார்கள். மிருதங்கம் தட்ட, கூத்து ஆரம்பமாகிறது.

கூத்தில் முதல் வேசமான தொப்பக்கூத்தாடி திரைக்குள் பாடி ஆடி வெளியில் வருகிறார். அவருக்குப் போடுவதற்காக நாங்கள் வைத்திருந்த சோத்து வத்தல் மாலையை நொண்டி தொப்பக்கூத்தாடிக்குப் போடுகிறான். சிரித்துக்கொண்டே மாலையை வாங்கிக்கொண்ட தொப்பக்கூத்தாடி எதிரில் அமர்ந்துருக்கும் ஊர் நாட்டாமைகாரர்களின் பாதத்தைத் தொட்டு வணங்கிவிட்டுப் பாட்டுப் பாடி ஆட ஆரம்பிக்கிறார்.

சபயாலக்காரன் வந்தேன்.. சந்திரவுதயம் போல…

சபயாலக்காரன் வந்தேன்

பாட்டுப் பாடி ஆடி முடித்து நாடகத்தின் பெயரைச் சொல்ல ஆரம்பிக்கிறார்…

சைலன்… சைலன்… சைலன்… அம்மாமார்களே, அக்காமார்களே, தங்கச்சிமார்களே உங்கள கொம்பவுட்டு, ச்சே.. கும்பிட்டுக் கேட்டுக் கொள்கிறே, அமதியா இருங்க.. நாடகத்துப் பேர் சொல்லப் போறங்… என்று நாடகத்தின் பெயரைக் கூறுவதற்குத் தொப்பக்கூத்தாடித் தயாராகிக்கொண்டிருக்கும்போது ஒரு ஆயா வெற்றிலை இடிக்கின்ற உரலில் வெற்றிலை பாக்கைப் போட்டு டங்… டங்… என்று இடித்துக் கொண்டுருக்க… வெற்றிலை இடிக்கும் சத்தம் கேட்ட தொப்பக்கூத்தாடிப் பேசுவதை நிறுத்திவிட்டு ஆயா பக்கம் திரும்பினார்.

ன்னா ஆயா…

தாத்தாவ ஊட்ல படுக்க வச்சிட்டு ஒர்ல தூக்கினு கூத்துக்கு வண்ட்டியா ஜோரா…

தாத்தா இடிஇடின்னு இடிச்சா…

இங்க வந்து ஒக்காந்திக்கினு வெத்தல இடிக்கமாட்ட,நீ

ஒரு மன்ச பவுட்ர போட்டுக்கினு வேசமாட்டுக்கினு வந்து ஆடிங்கீற… வெத்தலயா இடிக்கற, வெத்தல

அந்த மிசன கொஞ்சங் ஆப்பன்னு…

அய்ய்யோ சாமி… ஆடு… ஆடு…

ரவ இட்சி இத வாயில போட்டாதா… வெடிற வரைக்குங் ஊங்கூத்த பாக்க முடியுங்… சாமி ஆடு ஆடு…

இன்னிக்கு நடக்கக்கூடிய நாடகம்…

வர்ணசுந்தரன் சொர்ணசிகாமணி திருமணம்

மலயாள சூரன் சண்ட…

கூத்துல மேளக் குத்தங், தாளக் குத்தங், சொல் குத்தங், பொருள் குத்தங் எந்தக் குத்தங் இருந்தாலும் உங்க வீட்டுப் புள்ளய நெனச்சி எங்கள மன்னிக்குமாறு தங்களை வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம்.

இப்போது மலயாள தேசத்த ஆண்டு வரும் மலயாள சூரன் தர்பார்… ன்னு சொல்லி முடிக்க…

சூர வேசம் ஆடப் போகிறவர் நண்பன் வீரப்பனின் அப்பா கோதண்டம், திரைக்குள்ளாடும்போதே அடித்து ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார். திரை எடுத்தவுடன் பெஞ்சி மீதிருந்து எகிறிக் குதித்து கம்பீரமான நடை நடந்து சும்மா கரகரவென மின்னலாய்ச் சுத்துகிறார். அவர் ஆடிய ஆட்டத்தில் புழுதி பறந்து மண்ணெல்லாம் எங்க முகத்தில் அரிதாரமாக அப்பிக்கொண்டது.

சூர வேசத்திற்கான தர்பார் முடிந்து, அவர் யார், என்ன நாடு என்ற விளக்கங்களைக் கூறிவிட்டு, கொலுதருவின் பின்பக்கமாக அமர்ந்துகொண்டார்.

அடுத்த வேசம் வருவதற்கான திரை போடப்பட்டது.

இந்த விதமான மலையாள சூரன் கொலுவில் அமர்ந்திருக்க, வர்ணசுந்தரன் திரைக்கு வரும் விதம் காண்க..

வர்ணசுந்தரன் வேடமிட்டுருப்பவர் நொண்டியோட அப்பா பெருமாள். இவர்தான் நாடகத்தின் கதாநாயகன். தெருக்கூத்தின் பழமையான பாணியின் அடவுகளை மிக நேர்த்தியாக ஆடிக்கொண்டிருந்தார்.

பாத்தியா… எங்கப்பாவ.. எப்டி ஆட்றாரு பாரு. எங்கப்பாதா பயங்கரமா ஆடுவாரு.. என்று நொண்டி அவங்கப்பாவைப் பத்தியே பேசிக் கொண்டிருந்தான்.

நொண்டி அவனுடைய அப்பாவின் பெருமை பேசுவதைக் கேட்டு எரிச்சலடைந்தான் வீரப்பன்.

க்கண்டா.. இவுங்கப்பா ஆடுவாராண்டா பயங்கரமா..

எங்கப்பாதாண்டி பயங்கரமா ஆடுவாரு…

உங்கப்பன குச்சி முடி வேசங்க, எங்கப்பா சூர வேசங் எல்லாரயும் சாட்டியாலியெ அடிப்பாரு…

இவர்கள் இருவரும் தங்கள் அப்பாக்களின் பெருமைகளைப் பொறாமையோடு பேசிக்-கொண்டுருக்கும் போது….

சைலன்ஸ்… சைலன்ஸ்…

இந்த விதமான வர்ணசுந்தரன் கொலுவில் அமர்ந்துருக்க

சொர்ணசிகாமணி சபைனாடி வரும் விதம் காண்க.. என்று தொப்பக்கூத்தாடிச் சொல்லி முடித்தவுடன்..

இருளை விலக்கிக்கொண்டு வெண்கலச் சிலை போன்று தகதகவென மின்ன, அசைந்து வரும் நடையில் இசையாய் ஒலிக்கிறது கால் சலங்கை.

நாடகத்தின் கதாநாயகி சொர்ணசிகாமணி வேடமேற்று திரைக்கு வருபவர் எங்க அப்பா தங்கவேல். பெண் வேசம் போடும்பொழுதெல்லாம் அப்பாவின் தங்கை அத்தை மல்லிகாம்பாள் போலவே அஞ்சுருவும் அப்பிடியே இருப்பார்.

வற்றாது பொய்கை வளநாடு கண்டு – மலை மீது

நின்ற குமரா…

உற்றாரெனக்கு ஒருவேருமில்லை உமயாள் – தனக்கு மகனே

விஸ்தாரமான மயில் மீதிலேறி வர வேண்டும்- எந்தனருகே

முத்தாரம் கண்டு அடியேனைக் காக்கும் முருகேசன் – என்ற பொருளே

திரைக்குள் அப்பா பாட ஆரம்பித்தவுடன் நைனார் வீட்டின் களத்துமேட்டை விழுங்கிருந்த மொத்தச் சபையும் அமைதியாகிவிட்டது. திரை அகற்றியவுடன் சபைக்கு வருகிறார். எதிரில் அமர்ந்துருக்கும் ஊர் பெரியோர்களை வணங்கிவிட்டுத் தன் கையில் வைத்துருக்கும் பூக்களை வானத்தை நோக்கி இரைத்துவிட்டு மேள, தாளத்திற்கு ஏற்றவாறு குலுங்கி குலுங்கி நடந்து பெண் தன்மைக்குத் தன் உடல் வாகுவை மாற்றி அடவு போட்டுப் பாட ஆரம்பிக்கிறார்.

அரவமணி பூசணியே என்ன ஆதரிப்பதாரு யம்மா- என்ன ஆதரிப்பதாரு
யரும்பெற்ற பாவியானேன் பாதசெவ க்காரும்- யம்மா பாத செவக்காரும்
ஓம் என்ற பிரணவத்தில் உமயாள் அவள் பிறந்தாள் – உமயாள் அவள் பிறந்தாள்
ரீம் என்ற சத்தமாகிய நீயும் ஒரு பெண்ணா-யம்மா நீயும் ஒரு பெண்ணா
பாண்டவர்க்கு பாகம் கேக்க பகவானவர் சென்றாரம்மா-பகவானவர் சென்றார்
குருடன் மகன் சத்துராதி குடுக்க மறுத்தான்ம்மா- குடுக்க மறுத்தா
பாவையந்தன் பாஞ்சாலியை பாரா சபைமேல் நிறுத்தி-பாரா சபைமேல் நிறுத்தி
பாவையைத் துயில் கலைந்தான் பாவியவன் துச்சாதனன்-பாவியவன் துச்சாதனன்..
பாடி ஆடிக் கொண்டுருக்கும் எங்கப்பனின் பாதச் சுவடுகளுக்குள் புதைகிறது மனம்…

தினமும் பகலில் ஏரு மாடுகளோடு நிலத்தில் உழைக்கும் எங்கப்பனா இவன்…

எழுதுவதற்கு பல்பம் வாங்கித் தரக் கேட்டபொழுது காசில்லாமல் செட்டியார் கடையில் கடன் சொல்லி பல்பம் வாங்கித் தந்து பள்ளிக்கு அனுப்பி வைத்த அப்பனா இவன்…

தினமும் இரவில் கதை சொல்லித் தூங்கவைக்கும் எங்கப்பனா இவன்.

ஒட்டு மொத்த சபையையும் கட்டிப் போடக் கூடிய அசாத்திய ஆளுமை எங்கப்பன் என்பதை நினைத்து உடல் சிலிர்த்துப் போனேன்.

எங்களுக்குப் பக்கத்தில் அமர்ந்து கூத்து பார்த்துக்கொண்டிருந்த மச்சவள்ளி சின்னம்மா அஞ்சலை அத்தையிடம் பேசிக்கொண்டிருந்தார்.

அந்த மாமங் போட்டு ஆட்ற ஜாக்கிட்டு என்துதாந்தே..

யாண்டி பொண்ண செத்த திண்டிவனங் போய்வரங் ஜாக்கிட்டு குட்ரின்னா குடுக்கல…

ம்ம்… நடக்குட்டுங்.. நடக்குட்டுங்… ஊங்கூட்டுக்கார்னக்கு தெரிமா நீ ஜாக்கட்டு குட்த கத…

ன்னா உப்ப ஊர் ஒலகத்துக்குத் தெரியாத கத அவனுக்குத் தெரியப்போவுது, ஊட்டுக்காரனுக்குத் தெரிமான்ற..

இந்த இக்கு வச்சு… இனுக்கு வச்சி… பேசற கதையெல்லாங் யாங்கிட்ட வச்சிக்கிதா கூத்தப் பாரு..

எங்கப்பா தெருக்கூத்தில் இளவரசியாக நடித்தாலும் நெசத்தில் காதல் இளவரசன்… ஒரு ஊரில் இரண்டு முறைக்கு மேல் கூத்தாடுகிறார் என்றால், அந்த ஊரில் ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்த ஆரம்பித்துவிடுவார் என்று அம்மா தினமும் சண்டை போடுவார்.

ஆடி முடித்து மூச்சார நின்றுகொண்டிருக்கும் இடைவேளையில் பக்கத்து ஊர்களிலிருந்து கூத்துப் பார்க்க வந்திருந்தவர்களும், உள்ளூர்க்காரர்களும் அப்பாவிற்குப் பணம் குடுத்தார்கள்.

எந்நாடுக்கும் பொந்நாடாக விளங்கும்படியான தென்கோடிப்பாக்கத்தைச் சேர்ந்த மாமா வீரராகு,

ஐந்து இலட்சமாக நினைத்து அன்னார் அவரது குடும்பம் மயிலம் முருகனுடைய அருளைப் பெற்று நோய் நொடி இல்லாமல் நீடுடி வாழ வேண்டும் சுபே ஜெயம்.

கொண்டாடிய காசைத் தொப்பக்கூத்தாடியிடம் கொடுத்துவிட்டு, எரண்டு ரூபா மட்டும் எடுத்து வந்து எதிரில் அமர்ந்திருக்கும் என்னிடம் கொடுக்கிறார். நான் வெட்கப்பட்டுக் கொண்டு வாங்காமல் அவரை உற்றுப் பார்க்கிறேன்.

இந்தாட புடிடா வாங்கித் துன்றா… என்று என் கையில் திணித்துவிட்டுச் சென்றார். இரண்டு ரூபா எடுத்துக்கொண்டு ஓட்டமா ஓடி கம்பூரா ஆயா கடையில் முறுக்கு வாங்கிக்கொண்டு வந்து நண்பர்கள் எல்லோரும் சாப்பிட்டுக்கொண்டே கூத்துப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

உங்கப்பா சூப்பரா ஆட்றார்ரா..
.
அப்படியே பொண்ணுமேரியா கீறார்ரா..

நண்பர்கள் முறுக்கைச் சாப்பிட்டுக்கொண்டே அப்பாவைப் பத்திப் பேசிக் கொண்டுருந்தார்கள். அதில் நொண்டி மாத்திரம் மற்ற நண்பர்கள் பேசுவதைக் குரூரமாகப் பார்த்துக்கொண்டிருந்தான், முறுக்கை அவசரமாகச் சாப்பிட்டுக்கொண்டு..

பாத்தீங்களாட எங்கப்பாவ.. எப்பிடி ஆட்றார் பாரு…

உங்கப்பாவுக்கலா யார்னா காசு குடுத்தாங்களா… எங்கப்பாவுக்குத் தாண்டி எல்லோரும் காசு குடுத்தாங்க.

ஆமாண்டா.. ஆமாண்டா.. என்று நான் பேசுவதைப் போலித்தனமாகக் கேட்டுக்கொண்டிருந்த நொண்டி முறுக்குத் தின்று தீரும் வரையில் அமைதியாக இருந்தான்.

நொண்டியோட அப்பாவிற்குத்தான் எங்கப்பா ஜோடி வேசமாடிக் கொண்டிருக்கிறார்.

முறுக்குத் தீர்ந்தவுடன் பேச ஆரம்பித்தான் நொண்டி

தம்பி வீர உங்கப்பா தாண்டி எங்கப்பாவுக்குப் பொண்டாட்டி..

எங்கப்பா எப்டிக் கட்டி கட்டி புடிக்காறேரு பாத்தியா..

அது உங்கப்பால்லடா, உங்கம்மாடா.. போட ஏந்து ஓட்றா போயி பால் குட்சிட்டு ஓடியாடா .. ஓட்றா.. ஓட்றா..

நொண்டி அப்படிக் கூறியது அவனுடைய அப்பாவோடு என் அம்மாவைச் சேர்த்து வைத்துக் கூறியதாகவே உணர்ந்தேன். அதன் பிறகு, எங்கப்பா ஆடும் தெருக்கூத்தை ரசிக்க முடியாமல் பண்ணிவிட்டான் நொண்டி. என் அப்பா, அம்மாவின் பிம்பத்தை உளவியலாகச் சிதைத்துவிட்டான். அது முதல் என்னுடைய அப்பா பாடும் பாட்டும் பேசும் வசனமும் கேட்கும்போதெல்லாம் நெரிஞ்சு முள்ளால் நெய்யப்பட்ட போர்வையைக்கொண்டு என் மீது போர்த்துவதாக உணர்ந்தேன்.

அதற்குப் பிறகு அவரை என் தந்தையாகவே பார்க்க முடியவில்லை.

என்னோட அம்மா இன்னோர் ஆணுடன் ஆடிப் பாடுவதாகவே உணர்ந்தேன். அன்று இரவு முழுவதும் நொண்டியோட அப்பாவும் என்னுடைய அம்மாவும் சேர்ந்திருப்பதாக மனம் சிக்கலில் மாட்டிக் கொண்டது.

நொண்டி திரும்பத் திரும்ப என்ன வெறுப்பேத்திக் கொண்டுருந்தான்.

போடா.. டே.. பால் குட்றா..

அதன் பிறகு அங்கு அமர்ந்து கூத்துப் பார்க்கவே பிடிக்கவில்லை.

இர்ரா ஒண்ணுக்குருந்துட்டு வரன்னு சொல்லிட்டு.. எழுந்து தூரமாக வந்துவிட்டேன்..

அம்மாவிடம் சென்று அமர்ந்து கூத்துப் பார்க்கலாமென்றால், அம்மாவின் முகத்தைப் பார்க்கவே புடிக்கவில்லை. மெதுவாக குளத்தங்கரையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். பாடிக்கொண்டிருக்கும் அப்பாவின் குரல் மெல்ல மெல்லக் கரைந்து இருள்வெளியில் மறைகிறது. ஒரு காவல்காரனைப் போல் ஒற்றை ஆலமரம் நின்றுகொண்டிருக்க, அமைதியாய் உறங்கிக்கொண்டிருந்தது குளம். கரை மீது நின்று தண்ணீரை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன். அடர்கரிய நிறத்தில் ஆங்காங்கே மின்னும் மங்கிய ஒளி. அந்தப் படுபயங்கரமான தோற்றம் உடைந்து போன அப்பாவின் பிம்பமாகவே தெரிந்தது. என்னை விழுங்கிக் கொண்டிருக்கும் நண்பன் நொண்டியின் கடுஞ்-சொற்களாகவே தெரிந்தன.

மறு கரையிலிருக்கும் அம்பேத்கர் மன்றத்தின் திண்ணையில் சென்று அமர்ந்தேன். முண்ட கண்ணன் வீட்டு காக்கா கிழவன் படுத்துக்கொண்டிருந்தார். இவருக்கு ஆறு ஆண் பிள்ளைகள். சொத்துபத்தெல்லாம் பிரித்துக் கொடுத்தவுடன் இவரைப் பாய் தலையணை கொடுத்து அம்பேத்கர் மன்றத்திற்கு அனுப்பிவிட்டார்கள். மூன்று வருடமாக மன்றத்தின் திண்ணையில்தான் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார். வயிற்றுப் பிழைப்புக்கு இலை தைத்து காலத்தைக் கடத்துகிறார். தைத்து அடுக்கி வைத்திருக்கும் முருக்கம் இலைகளின் வாசம் மெலிதாய்ப் பரவுகிறது. அடி வயிறு அழுந்த கனத்த இருமல் இரும்புகிறார்.

இரவின் தனிமையில் மனச் சிக்கலோடிருந்த எனக்கு, பெரியவரின் இருமல் சத்தம் பெரும் படையே துணையாக இருப்பதாக உணர்ந்தேன்.

திண்ணையின் மண் தரையைச் சிறிது துடைத்துவிட்டு, பெரியவரின் கால்மாட்டில் படுத்துக்கொண்டேன். “உங்கப்பா இல்லடா அவுரு, உங்க அம்மாட அது, போட போயி பால் குடிடா..’ என்ற நண்பன் நொண்டியின் கேலிப் பேச்சு இரவு முழுக்க என் மன ஓட்டத்தில் பயணித்துக் கொண்டேயிருந்தது. இரை விழுங்கிய பாம்பாகப் புரண்டு கொண்டிருந்தேன் தூக்கம் வராமல்.

கூத்து முடிந்து விடியற்காலையில் எங்கள் வீட்டின் தாழ்வாரத்தில் கல்தூணில் கண்ணாடியைச் சாத்தி வைத்துச் சரியாத் துடைக்காமலிருந்த அரிதாரத்தைத் துடைப்பதற்காக சாணி மொழுகி ஈரம் காயாமலிருக்கும் தரையில் சாக்குக் கோணியை விரித்து அமர்கிறார்.

டே.. செவிடி ரவ எண்ணெ எடுத்துக்கினு வாடி..

எங்கம்மா எண்ணெய்யை எடுத்துக்கொண்டு வந்து பக்கத்தில் வைத்தார். கிழிந்த கந்தல் துணியால் காது ஓரமாகத் துடைக்காமல் இருந்த அரிதாரத்தைத் துடைத்துக் கொண்டிருந்தார்.

நான் மெதுவாகச் சென்று அவர் அருகில் அமர்ந்தேன்.

ன்னாட… ராத்திரி ரண்டுரூவா குட்தன… ன்னா பண்ண… என்று என்னைப் பார்க்காமல் அருதாரத்தைத் துடைத்துக்கொண்டே கேட்கிறார். அப்பாவின் கேள்விக்குப் பதிலிருந்தும் பேசாமல் அமைதியாக இருந்தேன்.

டே… உன்னதாண்டா…ஏந்துபோடா… பல்ல மூஞ்சிய தேச்சி கஞ்சி குட்ரா போயி…

எங்கப்பாவைப் பார்க்கும் போதெல்லாம் நொண்டியின் கேலி வார்த்தைகளே நினைவுக்குள் வந்து போகின்றன.

இதையெல்லாம் தாண்டி எங்கம்மாவிடம் முகம்குடுத்துப் பேச முடியவில்லை. அவரைப் பார்க்கும்போதெல்லாம் நொண்டியோட அப்பாதான் நினைவுக்கு வந்து போகிறார்.

பல யோசனைகளுக்கும் குழப்பங்களுக்கும் இடையில், அப்பாவிடம் பெண் வேசம் ஆடுவதை நிறுத்தச் சொல்ல வேண்டும்.. கூத்தாடுவதை எக்காரணத்திற்காகவும் நிறுத்த மாட்டார். ஆதலால், ஆண் வேசம் ஆடச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன்.

எப்பா.. நீ.. இனிமே.. பொம்பள வேசங் ஆடாத…. நொண்டி அவுங்க அப்பாமேரி ஆம்பள வேசந்தா ஆடுனுங்…

எங்கப்பா நா சொல்றத காதுலியே வாங்காம, வெய்ய ஏறதுக்குள்ள அந்த ஆட்டுக்குட்டிக்கு அஞ்சேரு தழ ஒட்சாந்து போட்ரா..

அருதாரத்தலாம் துடைத்துவிட்டு, கொஞ்சம் வளந்துருந்த மீசை முடியை இரவு வெளியூர் கூத்திற்கு முகத்தைத் தடவித் தடவி எதிர்ப்பக்கமாக மழித்துக் கொண்டிருந்தார்.

அவர் சொல்லும் வார்த்தைகள் எதுவும் காதில் விழவில்லை எனக்கு..

நீ பொம்பள வேசங் கட்ட மாட்டன்னு சொன்னாதாங்.. நா தழ ஒட்சார போவங்..

எங்கப்பா முகத்தில் பிளேடை வைத்துக்கொண்டே என்னை உற்றுப் பார்த்தார்.

பெண் வேசங் ஆட்றவதாண்டா வாத்தேரு..

ஆண் வேசங் கத்துக்குட்டிகூட சம்முனு ஆடுவாங்… பெஞ்ச கத்தியால நாலு குத்து குத்திட்டு.. தாயித்தோ.. தாயித்தோன்னு பத்துச் சுத்து சுத்திட்டுப் பூட்டான்னா.. அன்னிக்கு அவ வேல முடிஞ்சி போச்சி… பெண் வேசங் கட்றவங் போட்ற ஒரு அடவ போடச் சொல்ரா பாப்பங்.

பெண் வேசம் ஆடுபவர்களின்முக்கியத்துவத்தை எனக்கு விளக்க ஆரம்பித்தார். அவரின் விளக்கங்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலை எனக்கு இல்லை.
அவர் பெண் வேசம் ஆடக்கூடாது என்பதில் அழுத்தமாக இருந்தேன்.

அப்பா என் மனவெளியில் அம்மாவாக மாறிவிட்டார். அம்மா வேறு ஓர் ஆணுடன் இணைந்துவிட்டார். முதன்முதலாக எனக்கு ஏற்பட்டிருக்கும் பெரிய மனக் குழப்பத்தையும் உளவியல் சிக்கலையும் எப்படி அப்பாவிற்குப் புரியவைப்பதென்று தெரியவில்லை. தெளிவாகப் புரிய வைப்பதற்கு வார்த்தைகளைத் தேடிப் பிடித்தாலும் கிடைக்கவில்லை.

நான் பேசிக்கொண்டிருப்பதற்குப் பதிலேதும் சொல்லாமல் திரும்பவும் ஆட்டுக்குட்டிக்குத் தழை ஒடித்துக்கொண்டு வரச் சொன்னார். நீ இனிமே பொம்பள வேசங் கட்டமாட்டன்னு சொன்னாதாங்.. நா ஆட்டுக் குட்டிக்கு தழ ஒடிச்சாருவங்.. அப்படி என்று கோவமாகவும் ஒட்டாரமாகவும் குட்டிக்குத் தழை ஒடித்தாரப் போகாமல் அங்கேயே அமர்ந்து கொண்டுருந்தேன்.

ம்மே..ம்மே.. என்றுக் கத்திக்கொண்டிருக்கும் குட்டியின் அழுகுரல் கேட்டுக்கொண்டிருந்தது. ஆட்டுக்குட்டியின் பசியைப் பகடையாகப் பயன்படுத்தி என் மனச் சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கும் அப்பா, அம்மாவை அப்பாவின் மூலமாக மீட்க நினைக்கிறேன்.

ரொம்ப பரிதாபமாகக் கத்த ஆரம்பித்தது குட்டி… ம்மே… ம்மே…

செரிடா யப்பா… நாள்ளருந்து பெண் வேசங் ஆடமாட்டண்டா.. ஏந்தர்ரா.. ஏந்தர்ரா…குட்டிக் கத்திக் கடக்குது பார்ரா….

பெண் வேசம் இனிமேல் நான் ஆடமாட்டேனென்று எங்கப்பா சொன்னவுடன் என் தலையில் நாற்காலி போட்டு அமர்ந்து கிண்டல் பேசிக்கொண்டிருந்த நொண்டியும் மற்ற நண்பர்களும் கவிழ்ந்தடித்துக் கீழே வந்து விழுந்தார்கள். ஓட்டமாக ஓடி ஆட்டுக்குட்டிக்குத் தழை ஒடித்து வந்து போட்டுவிட்டு எரவானத்தின் கீழ் கூடையில் வைத்துருந்த அடுப்புக் கரியை எடுத்து நறநறவென மென்னு பல் துலக்கிச் சாக்கடையில் துப்பி… குடத்திலிருந்த தண்ணியில் முகம் கழுவி…. எங்கம்மா சில்வர் குண்டானில் பழைய கஞ்சி வார்த்து கருவாடும் சுட்டு வைத்துருந்தார். சாப்பிடுவதற்கு முன் உடை மாற்றிக்கொள்ள நினைத்தேன். இரண்டாக மடித்துக் கட்டியிருந்த தாத்தாவின் சோமனைக் கழற்றி எறிந்துவிட்டு பள்ளிக்கூடத்தில் கொடுத்த காக்கி டவுசரைச் சாக்குப் பையில் தேடி எடுத்தேன். போட்டுக்கொண்டு பட்டன் போடத் தேடினேன். டவுசரில் பட்டன் இல்லை. பிறகென்ன, அப்பிடியே முறுக்கிச் சொருகிக்கொண்டு அதன் சோடி வௌ;ளச் சட்டையைத் தேடி எடுத்தேன். போட்டதற்குப் பிறகுதான் சட்டையில் ஒரு பட்டன்கூட இல்லை என்று தெரிந்தது. எரவானத்தின் வடிம்பில் கட்டியிருக்கும் பனை நாரில் மக்காமலிருந்த நீட்டுக் கம்பி நாரை உருவிச் சட்டையின் நான்கு பொத்தல்களையும் இறுக்கக் கட்டிக்கொண்டு கஞ்சியைக் குடித்து முடித்தேன். அப்பா இனிமேல் பெண் வேசம் ஆடமாட்டார் என்பதை நினைத்து உள்ளம் மகிழ்ச்சியாக இருந்தது. இதை நொண்டியிடம் முதலில் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் முந்திக்கொண்டே இருந்தது.

அதற்குள் அம்மா நல்லெண்ண எடுத்துவந்து என் தலையில் தேய்த்துக்கொண்டிருந்தார்.

எண்ணன்னு தலையில தேக்க மாட்து பாரு எமராட்சதங்..கூட பெரிய தலய வச்சிக்கினு. இந்த முடிய செத்த வெட்டிவுடுதான்னா… கூத்தோ கூத்துன்னு ஓடிங்கடக்கறாங் இந்த ஆம்பள. எனுமோ புள்ளியுளகூடங் பாக்காத..

அம்மா அப்பாவை வசைந்து கொண்டிருக்கும்போது வண்ணாரின் மனைவி காலை உணவுக்குச் சாப்பாடு வாங்க வந்துவிட்டார்.

யம்மா.. ஏகாலி வந்துகீறம்மா…

இர்ரா யப்பா, வண்ணாம்மூடு வந்துட்டாங்க.. கூழள்ளிப் போட்டு வர்றங்..

அம்மா கூழை வலது கையில் அள்ளி எடுத்து, இடது கையால் கீழே தாங்கிப் பிடித்துக்கொண்டு வண்ணார் வீட்டு அம்மாவுக்குக் கூழ் போட வெளியே சென்றார்.

வயிசுக்கு வந்தவளுங் அப்படிதாங்கீறா.. வயிசுக்கு வராதவுளுங் அப்படிதாங்கீறா.. பாரு எக்கா… ரண்டுபேருங் எப்படி காலகெலப்பிக்குனு தூங்கறாலுவ பாரு.. ராத்திரி பூரா பொட்டுன்னு கண்ணமூட்லத.. அவுளுவ அப்பங் உள்ளூர்ல கூத்தாட்னாபோதுங் வேசகொட்டாயிக்க போயி விதவிதமா பூ வச்சிவுட்டு பொடவகட்டிவுட்டு எதிர்லியே போயி ஒக்காந்துக்கினு வெடிய வெடிய அவங்கப்பங் அழவ பாத்துட்டு ஒரு கை சாணி தெளிக்காதகூடங் படுத்துங் கடக்கறாளுவ பாருத.

யா எம்மா யாந்தம்பி அழவுக்குன்னா கொற..

ஒரு நாளு கஞ்சி அள்ளியாந்து போட்றபோற நாளு தவறாத கூழ கொன்னாந்து போடு

அய்யோ… இல்ல அண்ணி ரவ பரிக்கருந்து பையனுக்கு வாத்துகுடுத்தட்டங்

ங்கொன்னங் அழவுக்குதாங் ன்னோரெடத்த கட்டிப்போனவங்க ஓடியாந்து மூனுபுள்ளயப் பெத்துட்டு லோலுபட்டுங்கடக்கறங்

வண்ணார் வீட்டு அம்மாவுக்குக் கூழைப் போட்டுவிட்டு வருவதற்குள் மூலப்பானையிலிருந்த அரிசியை அள்ளி சோப்பிக்குள் திணித்திக்கொண்டு அப்பா செய்துகொடுத்த பனங்கா சக்கர வண்டியை ஓட்டிக்கொண்டு ஒரே சவாரியாக நடுத்தெருவுக்குச் சென்றேன். அங்கு நண்பர்கள் ஒருத்தரும் இல்லை. அப்பா பெண் வேசம் ஆடமாட்டார் என்பதை முதலில் நொண்டியிடம் சொல்ல வேண்டும். நொண்டியை நினைத்துக்கொண்டே வண்டியைத் திருப்பினேன். வேகமெடுத்தது பனங்கா வண்டி. சர்க்காரான் கிணறு இருக்கும் இடத்தருகே நின்றது வண்டி. அங்கு நொண்டி, வீரப்பன், சம்பத், குமார் மற்றும் ஊர்ப் பசங்கள் அனைவரும் பனங்கா வண்டி ஓட்டிக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

என்னுடைய சோப்பியில் அரிசியிருப்பதைப் பார்த்துவிட்டார்கள் சகாக்கள். நொண்டி என்னிடம் நைசாகப் பேச ஆரம்பித்தான்.

ஏரிக்கர மரத்துப் பனங்கா சக்கரண்டா இவன்து… மக்கு மக்கா கீது பார்ரா..

க்காண்டா சும்மா லாரி டயராட்டங் கீதுரா…

நொண்டி… எங்கப்பா இனிமே பொண்ணு வேசம் ஆடமாட்டார்ப்பா.. நான் பேசுவதைச் சட்ட செய்யாத நொண்டி, என்னிடம் அரிசி யாமாத்தி சாப்பிடுவதிலேயே குறியாக இருந்தான். நானும் அரிசியைப் பங்கிட்டுக் கொடுத்து எங்கப்பா பெண் வேசம் ஆடமாட்டார் என்பதைப் பற்றிப் பேசிக்கொண்டேயிருந்தேன்.
அரிசி தீர்ந்துபோனவுடன் வீரப்பன், குமாரிடமிருந்து கேலி பேசும் தோனியில் பேச்சு ஆரம்பமானது.

ஏரிக்கர பனங்கா சக்கரம் சோத்துமாடுடா.. வேகமாகவே போவாது.. எங்களுதுல்லாம் பாத்தியா கொட்ராசி.. செம்ம பீடா போகும்… என்னுடைய பனங்கா வண்டியை மட்டம் தட்டிக் கொண்டிருந்தார்கள்… நேற்று இரவு கூத்துப் பார்த்துக்கொண்டிருக்கும்போது அப்பாவைப் பத்திக் கேலி செய்த அதே தொனியில் பேச ஆரம்பித்தான் நொண்டி.

இங்க பார்ரா வீரப்பா… உங்கப்பாதானடா சூர வேசங் ஆடுவாரு… இவுங்கப்பா ஆடுவாராண்டா…

உங்கப்பா ஒரு வாட்டிக்கூட சூர வேசமே ஆடனதில்ல.. அப்பறங் எப்பிடி ஆடுவேரு…

உங்கப்பா பாலுக்கு ஜாக்கிட்டுல்ல ரண்டு கொட்டாங்கச்சி வப்பேரு… வேசங்கட்டும்போது நாங்கூடங் பாத்துகீற… சூரவேசல்லாங் ஆடத்தெரியாதுடா..

நொண்டியின் இந்த எளக்காரமான பேச்சால் அப்பா சொன்ன வார்த்தைகள் எனக்குள் வலுவிழந்து கொண்டிருந்தன. நொண்டியின் மீது உக்ரமான கோபம் உருவாகிக் கொண்டிருந்தது. எந்த வகையில் என் கோபத்தை அவனிடம் காட்டுவது என்று யோசித்து.. பனங்கா சண்டைக்குக் கூப்பிட்டேன்.

நொண்டி வரியாடா ஊ வண்டியுங் யா வண்டியுங் சண்ட உட்டுக்கலாமா…

நொண்டியை ஜெயிச்சே ஆக வேண்டுமென்று ஒட்டுமொத்த ஆத்திரத்தையும் கோபத்தையும் ஒன்றுசேர்த்து பனங்கா வண்டிச் சண்டைக்கு நான் தயாராகும் வேகத்தைப் பார்த்த நொண்டி எப்பிடியும் அவனுடைய வண்டி உடைந்துவிடும் என்று தெரிந்து…

யாவண்டிலா எதுக்குடா, வீரப்பங் வண்டியே அட்சிடுண்டா.. வீரப்பா போயி அட்ரா அவ வண்டிய..

யப்பா நா போவமாட்டண்டா, யா வண்டி புது வண்டி…

வீரப்பன் சொன்னதைக் கேட்டு ஆத்திரமடைந்த நொண்டி …

இவ ஒரு பயிந்தா கோலிடா.. சம்பத்து நீ.. போடா..

எப்பா நாங்கூட பயிந்தா கோலிடா.. அவ வண்டியால ஒரு அடி அட்ச்சானா யா வண்டி ரண்டா..புட்டுக்குங்… நா போவலடா சாமி…

நொண்டி, நீ ஆம்பளியாருந்தா வாடா ஊவண்டியுங் யாவண்டியுங் சண்ட உடுவோங்… ஒரு சாம்ராஜ்ஜியத்தை மீட்கப்போகும் போர் வீரனைப் போல நொண்டியின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

நொண்டி, போடா போடா, ஊ வண்டி அவன்த ஒர்ரே அடில அட்சிடுண்டா… வீரப்பனும் சம்பத்தும் நொண்டிய உசுப்பி உட்டானுங்க.

இவனுடைய மாந்திரிகச் சொல்லுக்கு மசியவில்லை வீரப்பனும் சம்பத்தும்.. வேறு வழியே இல்லாமல் சண்டைக்கு ரெடியானான் நொண்டி.

சைக்கிள் டியுபைக் கிழித்து துண்டுதுண்டாக கட் பண்ணி பனங்கா வண்டியின் எல்லாச் சக்கரங்களிலும் வேலிகாத்தான் முள்ளால குத்தி வைத்துருந்த டியுப் சத்தம் டப, டப, டபன்னு அடிக்க, சும்மா எங்க வீட்டு வண்டி மாடு மாதிரி உதும்பிப் பறக்க ஆரம்பித்தது என்னோட வண்டி. கண்களை அகலத் திறந்து குதிரைப் பாய்ச்சலாகப் பாய்ந்து செலுத்தினேன் வண்டியை. எதிரே நொண்டியும் பாய்ந்து வருகிறான். இன்னும் ஒரு தப்பிட்டி தூரமிருக்கும்போது கண்களை இறுக மூடி முழு வலிமையையும் திறந்துவிட்டு மதம் பிடித்த காளை புழுதியைக் குத்திக் கிளப்புவது போல் முட்டித் தள்ளினேன் நொண்டி வண்டியை. மடார் … என்ற சத்தம் கேட்டவுடன் திறந்தேன் கண்களை… நொண்டி வண்டி உடைந்து நாலா பக்கமும் செதறிக் கிடந்தது. அவன் கையில் பாதிக் குச்சி மாத்திரமே மீதி இருந்தது. என்னோட வண்டியின் ஏரிக்கரை கருப்பு பனங்கா சக்கரம் நொண்டியின் வண்டியை உடைத்துச் சின்னாபின்னமாக்கிவிட்டு, கம்பீரமாக, திமிராக நின்று கொண்டிருந்தது. ப்பா … அப்பிடியே எங்கப்பா சு+ரவேசம் ஆட்டின மாதிரியே இருந்துச்சு.

விடுமுறையெல்லாம் முடிந்து பள்ளிக்கூடம் திறந்து ஒரு வாரத்திற்கும் மேல் ஆகிவிட்டது.

முத்தாலம்மன் கோயில் திருவிழா…

கெங்கையம்மனுக்குக் காப்புக் கட்டி குறவன் குறத்தி ஆட்டம் ஊர் முழுக்க ஆடி, நெல்லு, கேழ்வரகு, கம்பு என்று தானியத்தைத் தண்டி திருவிழாவின் செலவிற்கு விற்றுவிடுவார்கள். மீதமுள்ள தானியத்தைக் கூத்தாடி, மேளக்காரர்கள் மற்றும் திருவிழாவிற்கு வேலை செய்பவர்களுக்குச் சாப்பாட்டிற்காக வைத்துக் கொள்வார்கள். மூன்று நாள் இந்தக் கொறவன், கொறத்தி ஆட்டம் ஆடுவார்கள். சாமிக்குப் பிராத்தனை இருப்பவர்கள் பெண் வேடமிட்டு ஆடி வருவார்கள். ஆனால், கொறவன் கொறத்தி மட்டும் தெருக்கூத்து நன்றாக ஆடக்கூடிய கைதேர்ந்த ஆட்டக்காரர்கள் மட்டுமே ஆடுவார்கள். கொறவன் கொறத்தி சமூகத்தைப் பற்றி, அவர்களின் வாழ்க்கை முறை பற்றின தகவல்களைப் பாடல்களாகப் பாடி ஆடுவார்கள். கொறவன் கொறத்தி ஆடுவதற்குப் பெரும் போட்டியே நடக்கும். ஏனென்றால், பேராவு+ரில் கூத்தாடிகள் அதிகம்.

ராத்திரி கெங்கையம்மனுக்குக் காப்புக் கட்டி விடிந்ததும் கொறவன் கொறத்தி ஆட்டத்திற்குத் தயாரானார்கள்.

ஊரில் எந்த நல்ல காரியங்கள் நடந்தாலும் ஊரின் நடுவே உள்ள தண்டு மாரியம்மனுக்குப் பொங்கல் வைத்துப் படயல் போட்டுவிட்டுத்தான் தொடங்குவது வழக்கம். வட்டமாக உள்ள உருண்டைக் கல். இதுதான் தண்டு மாரியம்மன் சாமி. மாரியம்மன் கோயிலுக்குப் பக்கத்திலிருந்த தோட்டியார் நாட்டாமையின் மாட்டுக் கொட்டகைக்குள் கொறவன் கொறத்தி வேசம் போட்டுக் கொண்டிருந்தார்கள். நொண்டி, வீரப்பன் மற்றும் சகாக்களோடு வேசம் போடுமிடத்திற்கு ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு ஓடினோம்.

கொட்டகையைச் சுத்தி ஒரே வசவசவென்று பொடியன்கள் சூழ்ந்துகொண்டிருந்தனர்.

பசங்களையெல்லாம் நெரிக்கித் தள்ளிவிட்டு உள்ளே நுழைந்தோம். தலையில் துண்டு, கையில் எம்.ஜி.ஆர். வாட்ச், கழுத்து முழுவதும் மணி, செவக்க செவக்க வெற்றிலை போட்டுக் கொண்டு, தென்னை மரம் போட்ட டால்டா டின்னை மாட்டிக்கொண்டு குறவனாக நின்றுருந்தார் வீரப்பனுடைய அப்பா சுப்ரமணி.

கொறத்தி வேடம்போடும் இடத்தில் மட்டும் எங்களோட படிக்கும் வயதில் சிறிய பெண்கள் நிறைய நின்றுகொண்டிருந்தார்கள்.

சுப்ரமணி மாட்டிருந்த டால்டா டின்னை நொண்டியுங் நானும் தட்டி தட்டிப் பாத்துக்கொண்டிருந்தோம்.

கைய வச்சிக்கினு சும்மாருக்க மாட்டிங்க, எட்டப் போங்கடா..

அதட்டியவுடன் பெண்களையெல்லாம் விலக்கிக்-கொண்டு கொறத்தி வேசம் போடும் இடத்தினுள்ளே நுழைந்தோம்.

பெரிய கொண்டை போட்டு, தல நிறையக் கனகாம்பரம், குண்டுமல்லிப் பூ வைத்து, கை நிறைய வளையல் போட்டு, கணுக்கால் மறையுமளவுக்குச் சிவப்பு கலரு பாவாடை, கை செத பிதுங்க உடம்பை இறுக்கிப் புடித்த நீல கலர் ஜாக்கெட்டு, கறுப்பு கலர் தாவணி… உதட்டிற்குச் சிவப்புச் சாயம் பூசி, மஞ்சள் நிற அருதாரத்தை முகத்தில் பூசி கொறத்தி வேசம் போட்டுக் கொண்டிருந்தார் எங்கப்பா.

பீடி புடித்துக்கொண்டு கொட்டாவின் ஓரமாக நின்று கொண்டிருக்கும் அப்பாவிற்கு என்னுடைய இரண்டு அக்காவும் சரியாகக் கட்டாமலிருந்த பாவாடை தாவணியைக் கட்டிவிட்டு கொண்டைக்குப் பூ பத்தவில்லையென்று சாமிக்குப் போட்டுருந்த பூவில் கிள்ளி எடுத்து வந்து தலையில் வைத்துவிட்டு அவரைத் திரும்பச் சொல்லிப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

மொத முறயா எங்கப்பா என்னை ஏமாத்திட்டாரு…

நொண்டி கண்டிப்பா வெறுப்பேத்துவாங்.. சாக்குபோக்கு எதனா சொல்றதுக்கு வார்த்தய மனசுக்குள்ளே தேடிக்கினுருக்கும் போதே… பக்கத்திலிருந்த நொண்டி ஒடனே ஆரம்பிச்சிட்டாங்…

ன்னடா.. ராஜி.. உங்கப்பா இனிமே பொம்பள வேசமே கட்ட மாட்டார்னு சொன்ன..

நொண்டி அடுத்துப் பேசறதுக்குள்ளே, அவங் பேசனது எதுவுங் காதுல கேக்காத மாரி கொட்டாயிலிருந்து வேகமா வெளிய கௌம்பனா.. பீடிய கீழ போட்டுக் குனிஞ்சி காலால நசிக்கிட்டு நிமிந்த ஒடனியே என்ன பாத்துட்டேரு எங்கப்பா…

டே.. ராஜி.. டேய்..

சத்தமா என்ன கூப்ட்டாரு.. அவரத் திரும்பிக்கூடப் பாக்காம பசங்கள வெலக்கிட்டு சுருக்கா நடந்தா..

டேய்ய்… ராஜீ… டேய்…

கொவமா அதட்டிக் கூப்பட… திடுக்குனு பயிந்து போயித் திரும்பிப் பாத்தங்…

நொண்டி தயாரா இருந்தாங் என்ன வெறுப்பேத்த..

பையா உங்கம்மா கூப்பறாங்க பார்ரா..

கொறவங் சுப்ரமணியும் கொறத்தி எங்கப்பாவும் நின்னு பேசிக்கினுருந்தாங்க…

எங்கம்மா சுப்ரமணிகூட நின்னு பேசறதா தெரிஞ்சிச்சி எனக்கு..

ரண்டாவது முறயா ரண்டாவது ஆளா சுப்ரமணிகூட சேத்து எங்கம்மாவப் பாக்கவச்சிட்டாங்.. நொண்டி..

எங்கப்பாவப் (எங்கம்மாவ) பாக்குறப்ப பனமரத்துக் கரிக்கமட்டயால ஒடம்பல்லாங் அருத்த மாரி இருந்துச்சி எனுக்கு…

மொத தடவியா எனுக்குப் புடிக்காத ஒரு ஆளா தெரிஞ்சாரு எங்கப்பா..

மெதுவா தயங்கி தயங்கி அவுரு கிட்டப் போயி நின்னங்…

கண்ணுல தள்ளிருந்த ஊலயத் தொடச்சி உட்டு…

பனம்பழத்த அதிகமாத் துன்னாதரான்னா … கேக்கிறியா… ரண்டு கண்ணுலியுங் ஊல தள்ளிக் கடக்கது பாரு…

கஞ்சி குட்சியா சாமி… தலயில கைய வச்சி முடிய தள்ளி உட்டுக்கினே கேட்டாரு..

நா.. தலயக் குனிஞ்சிகினே பேசாமிருந்த…

எங்கப்பா ஏதோ நாபகங் வந்தவரா எங்க பெரிய அக்கா வேல்விழியக் கூப்ட்டாரு…

ம்மா… வேலு பாப்பாவுத்து ஜிம்மி சட்ட ஓடி எட்தாம்மா.. தம்பிக்குப் போட்டுக் கூட்டுப்போவ

ஒண்ணூங் புரியாத முழிச்சிக்கினு ருக்கரத பாத்த எங்கப்பா…

போன வருசங் உனுக்கு மாரியாத்தா வாத்து இருந்துச்சிய.. அப்ப உங்கம்மா வேண்டிக்கினாடா.. கெங்கும்மாவுக்கு, உனக்கு வேசம் போட்றன்னு…

எங்கப்பா சொன்ன ஒட்னயே எனுக்கு அழயுங் ஆத்தரமும் அடக்க முடியல..

இந்தாளப் பொம்பள வேசம் போடாதயான்னு சொன்னா… நம்முளுக்கே பொம்பள வேசம் போட்டுடுறானே…

மனசுக்குள்ளே நெனச்சிக்கினு ஓ..ன்னு அழ ஆரம்பிச்சங்..

எப்பா எனுக்கு வானந்தே.. எனுக்கு வானந்தே.. கீழ உழுந்து பெரண்டு அழுவுறங்

என்னச் சமாதனப்படுத்த, அய்யா… அய்யா… அப்பிடிலா அழுவக் கூடாது சாமி, பெராத்தனிக்குப் பண்றது தப்பாயிடுங்… எப்பா அழக்கூடாது..

நீன்னா ஆடவா போற.. சும்மா அப்பாகூட நடந்து வாடா…

சாமி பேரச் சொல்லிப் பயங்காட்டி ஒரு வழியா அழய நிறுத்தி ஆயக்கட்டிட்டாரு..

ஏம்மா வேலு, எங்கம்மா ஜிம்மி சட்டய எட்தாரச் சொன்னனே..

தேனு பொண்ண அனுப்பிக்கீறந்த எப்பா…

பெரிய வாத்தியாராச்ச நீ… உன்ன வேலட்டா நீ ஒரு ஆளனுப்பிகீறியா..

தோ வந்துட்டா பார்தே.. ஏண்டி.. ம்மா நேரமா..ன்னாடி பண்ண.

சாலுஞ்சந்துல்ல கடந்துச்சி, கா வெலக்க கொலித்தி ன்னாரங் நானுங் அம்மாவுங் தேடிக்கடந்தோ…

உடு.. சட்டங் பேசதா லாகி ரண்டு பேருங்…

எங்கப்பா எங்க தேனக்கா கையிலிருந்த ஜிம்மி சட்டயப் புடிங்கி எனுக்குப் போட்டு உட்டு அவுரு பூசிருந்த அதே மஞ்ச நிற அருதாரத்த ஏங் மூஞ்சில பூசனாரு…

யப்பா… வேசல்லா பூசாத எனுக்கு… வானந்த… வானந்த…

அழுது கண்ணீருங் கம்பலிமா பெரண்டு பாத்தங்… எங்கப்பா உடவேல்ல. மூஞ்சில அவுரு பூசர மஞ்ச கலரு அருதாரத்தப் பூசி, கண்ணுல மை உட்டு, பொட்டு வச்சி பொம்பள வேசமே போட்டு உட்டாரு… நடக்கற எல்லாத்தயும் நொண்டி, வீரப்பங், உதயகுமாரு மூனி பேருங் பக்கத்தலியே நின்னு ஊமச் சிரிப்பு சிரிச்சிக்கினு வெறுப்பேத்தற மாரியே என்ன பாத்துக்குனுருந்தானுங்க…

வேசங்கட்ற எட்த வந்த தேவராஜி மாமா என்னப் பாத்துட்டு,

அய்ய அய்ய… ன்னா மச்சாங்

பொண்ணு குடுக்கலான்னு பாத்தா.. பொட்டாயிட்டுகீற… வேலக்கி ஆவமாட்ட போ… பையனுக்குதா கட்டிவக்கினு பொலக்குது…

கிண்டல் பண்ணிக்கினுருந்தாரு தேவராஜி மாமா.

யாரு, கால பரப்பி பரப்பி நெம்பிக்கினு நடக்கறாரே அந்த அழவு ஆம்பளியதாங் சொல்றியா… மாமா…

எங்க பெரிய அக்கா பதுலுக்குக் கிண்டல் பண்ண…

பார்ரா ஊட்டுக்கார சொல்ட்டாங்கன்னு கோவங் சுர்க்குன்னு வர்றத…

தேவராஜி மாமா எங்கக்காவ கிண்டல் பண்ண…

எங்க அக்கா … யப்பா பார்த…ன்னு அழற தொனில கூப்ட…

யோ மச்சாங்… ன்னாய பண்ற புள்ளியுள.. கம்னுருயா… செத்த அந்தத் துண்டக் குடுயா…

தேவராஜி மாமாகிட்டருந்த துண்ட வாங்கி எனுக்குத் தலயில மழுக்கக் கட்டி, கொண்ட போட்டுப் பூவ நெறய வச்சி உட்டாரு…

ன்னாடா பண்றீங்க… உன்னுமாடா வேசம் போட்றீங்க… ஊரே பெரிட்டிக்கினு புளியா கோயிலாண்ட நின்னுகீது… உன்னு செத்த நேரமாச்சினா பொம்பளிவோ பூரா இங்க சாச்சி வந்துடுவாளுவோ.. சட்டு புட்டுன்னு கௌம்பி வாங்கடா.

எட்டாங்கொத்து நாட்டாம மொசகெழவ கோவமாப் பேச..

போயா.. போயா..போய் மோளத்தத் தட்டச் சொல்லுயா… வேசங்கீசங் போட்றதில்ல அப்படியேன்னா ஏந்துவந்துர்ரங்….

சுப்ரமணி சின்னாப்பா மொசக்கெழவன கோவமாப் பேசி அனுப்பிட்ட ஒடனயே, வேசகொட்டாயிலிருந்து வெளிய கௌம்பிட்டாங்க…

வாடா ராஜி போலான்னு எங்கப்பா கையபுடிச்சிக் கூட்டிக்கினு வெளிய வர்றாரு…

புளியா கோயிலு எதுர ஜெனங் தேப்ப தேப்பயா நிக்குது கொறவங் கொறத்தி ஆட்டத்தப் பாக்க..

கோயிலு கிட்டப் போயி என்னத் தூக்கினு நடக்குறாரு. கால்ல கட்டிருக்குங் சலங்க சத்தங் ஜென சந்தடில செதற, ஒட்டு மொத்த ஊர்ஜெனமுங் திரும்பிப் பாக்குது..
கோயிலு எதுர இருந்த எல்லாருங் என்ன மட்டுங் பாக்கறமேரியே இருந்துச்சி. அங்கிருந்த ஆம்பள, பொம்பள, கொழந்த குட்டி யாரப் பாத்தாலுங் நொண்டி, வீரப்பனாவே தெரிஞ்சாங்க. நா குனிஞ்ச தல நிமிரவே இல்ல.

கூட்டத்த வெலக்கி நடக்கறார்..

இங்க பார்ரி அந்தன்ன மொவனுக்கு வேசங்கட்டிக் கூட்டாருத

பொட்ட அழவாகீற…

தே பொம்பள, வரியா சவுக்குத் தோப்புக்கா..

எனுக்கு மொறயான மாமங் அத்தைலா கிண்டல் பண்ண, சாமி எதுருக்க எறக்கனாரு என்ன.

ஊர் நடுவுல பெரிய மண்ணு மோடு, கீழ பலகமேரி போட்ட வட்டப் பாற மேல உருண்டக் கல்லு.. அதாங் பிள்ளையார், (எங்க ஊர் இள வட்டக் கல்லு காலப்போக்கில் பிள்ளையாரா மாறிப் போனது) பூசாரி கற்பூரத்த எடுத்து எங்கப்பா கிட்டக் குடுக்க, பாற மேல கற்பூரத்த வச்சி, கட்டிருக்குங் பாவடயத் தூக்கி டிரவுசர்ல இருந்த வத்திப்பொட்டிய எடுத்துக் கற்பூரத்தக் கொளுத்துறாரு… எல்லோருங் கையெடுத்து கும்பர்ராங்க.

எங்கடா மோளக்கார…ன்னு ஒரு நாட்டாம சத்தமா கொர்லுட பன ஓலயக் கொளுத்தி பறமோளத்தக் காச்சிகினுருந்த தலாரி ஊட்டு ஆளுங்க,

ஆச்சி… ஆச்சி..ன்னு சொல்லிக்கினே சட்டி அடிக்கிற ரண்டு பேரு இடுப்பல கட்டிக்கினு, பறயடிக்கற ரண்டு பேருங் பிசகையில பறய மாட்டிச் சுத்திவுட்டுக்கினே அவுசர பவுசரமா ஓடியாறாங்க….

ஜெனத்தோட நெஞ்சுக்குழி அதுர பற மோளங் அடிக்க மொத்தக் கூட்டமும் அமைதி…

மொதல்ல சாமிக்கான பறமோளங் அடி அடிச்சி முடிச்சி, இப்போ கொறவங் கொறத்தி ஆட்டத்துக்கான அடிய அடிச்ச ஒடனியே, கொறவனுங் கொறத்தியுங் பாட்டுப்பாடி ஆட ஆரம்பிச்சிட்டாங்க. நா எங்கப்பா பாவட பின்னாடி நின்னவங் நின்னவந்தா…

முந்தி முந்தி விநாயகனே முக்கண்ணனின் தன் மகனே

கந்தவர்க்கு முன்பிறந்த கணபதியே முன்னால் முன்னால் வா..

விநாயகம் துதி பாடி… கொறவனுங் கொறத்தியுங் பாடி ஆடறாங்க..

சந்திராருங் சு+ரியருங் சரியான்னனா வரும்பொழுது..

இந்திரனத்தாங் நா நோக்கி எடுத்தனோடி தெம்மாங்கு…

கொறவேசங் பாடி முடிச்சதுங்…

உச்சி நல்ல சடயிருக்க உள்ளங்கையில வேலிருக்க..

வேலத்தொட்டு வணங்க போரங் வேண்டி கொறத்தி வந்தேனடா…

எங்கப்பா அவரோட முழு கொரலயுங் எடுத்து உட… மொத்தக் கூட்டமும் கையித்தாலக் கட்டிப் போட்டமேரி ஆடாத அசையாத பாத்தாங்க..

இப்போ கொறவனுங் கொறத்தியுங் போட்டிப் பாட்டுப் பாட ஆரம்பிச்சாட்டாங்க..

புண்ணு புடிச்ச பையா புளிய மரங் காத்த பையா…

எனுக்குன்னுதா எங்கிருந்த எனுக்கு வந்து மாலயிட…

கொறத்தி கொறவனப் பாத்துக் கேக்க

உன்ன நானுங் தொட்டதக்கு உங்கப்பங் சாச்சி சொன்னதக்கு

மஞ்சங் குப்பங் ஜெயிலுக்குள்ள மாடா ஒழச்சி கடக்குறண்டி…

உன்ன கல்யாணங் பண்ணதுங் நா ஜெயிலுக்குள இருக்கறதுங் ஒண்ணுதாண்டின்னு பாடிட்டு…

காலுல போட்டதொரு காலாழி பீலாழி கழண்ட விதமென்னடி – நரிக்காரி

கழண்ட விதமென்னடி – குறிக்காரி…

கொறவங் சீதனமா போட்ட மெட்டி எங்கடின்னு கேக்க..

கல்லார கண்டு கலிக்கு நடக்கும்போது கழண்டு விழுந்ததடா – குறிக்காரா

கழண்டு விழுந்ததடா – நரிக்காரா.. திரடனப் பாத்து சுருக்கா நடந்து போவும்போது கயிட்டிகிச்சின்னு பதில் சொல்ல..

அரே சாமி… பாருங்க சாமி சாமி.. இவளுக்கு ஆச ஆசயா ஊசி மணி ஊர்ஊராப் போயி காலு தேயக் கூவி கூவி வித்து மெட்டி வாங்கிப் போட்டங். இப்பிடி ஒழிச்சி வாயில போட்டுகினு இன்னா கத சொல்றா பாருங்க சாமி…அது மட்டுங் இல்ல சாமி..

மூக்கல போட்டதொரு மூவாயிரங்கல்லு முறிந்த விதமென்னடி – நரிக்காரி

முறிந்த விதமென்னடி – குறிக்காரி

அரே சாமியோ.. இங்க பாருங்க சாமி.. காட்டுப் பூன, நரி, காட, கவுதேரி, குரிவி, கொக்குன்னு காடு மலைல்லா சுத்தி வேட்டையாடி குரிவி சேக்கறாமேரி ஒன்ன ரண்ட சேத்து மூக்குத்தி ஒன்னு எடுத்து போட்டங் சாமி..

மூனே முக்கா நாளுக்குள்ள ஒழிச்சிட்டு வந்து நிக்கறா சாமி.. அவ சொல்ற பதுல நீங்களே கேளுங்க சாமி…

மூத்தார கண்டு முறிக்கி நடக்கும்போது முறிஞ்சி விழுந்ததாட – நரிக்காரா

முறிஞ்சி விழுந்ததடா – குறிக்காரா…

அரே சாமி.. இந்தாளு நெனச்சப்பல்லா மேலயேற்ரா.. வருசத்துக்கு ஒரு புள்ள பெத்து போட்றங்… உப்ப கூடங் ரண்டு மாசங் முழுவாதகீராங் சாமி.. ஒரு தப்பு ஒப்புன்னா சும்ம உடமாட்றாங் சாமி..

எங்கப்பா கொரத்திமேரி பேச பேச எங்க ஊரு வயிசு பசங்கல்லாங் விசிலடிக்கறாங்க… என்னால மட்டுங் அத காது குடுத்துக் கேக்கவே முடியல.. வேலி காத்தாங் முள்ளுமேல நிக்கற மேரியே இருந்துச்சி…

நொண்டியுங் விரப்பனுங் வேற… தூரமா இருந்து சைகயிலே வெறுப்பேத்திக்கினே இருந்தானுங்க…

ஆடிக்கினே ஊர்தெருவ வந்துட்டாங்க.

பெரிய கம்பதங் வாசல்ல ஆட ஆரம்பிச்சாங்க..

அரே சாமி.. கம்பதங் சாமி.. வெளிய வாங்க சாமி… யா பொண்டாட்டி மாசமாகீரா சாமி… கருவாட்டு ரசங் வக்கினு சாமி… காசி பத்துரூவா குடுங்க சாமி.

புள்ள பெத்தா புள்ள கடத்த பொடவயில்ல.. சாமி பொடவ இருந்தா ஒன்னு குடுங்க சாமி.

கம்பத்து நைனாரு ஊட்டு உள்ளருந்து வெளிய வந்தாரு…

அரே சாமி கும்பறங் சாமி..

வாங்கடா… வாங்கடா.. வணக்கங்.. வணக்கங்..

சும்மா காசி வாங்கிபுல்லான்னு கீறிங்கிலாடா… ரண்டு பாட்ட வாசல்ல பாடனாத்தாண்டா காசி.. பொடவ..

நைனாருங் நைனாவு+ட்டு அம்மாவுங் தூரத்தல நிக்க..

கொறவனுங் கொறத்தியுங் பாட ஆரம்பிச்சாங்க..

நீயுங் நானு ஜோடிதாண்டி நீலக்கர மோடு தாண்டி.. கெண்டிக்கு

போனா பொழைக்கலாண்டி பொழுதுபோனா தங்கலாண்டி..

கொறவங் பாடி முடிச்சதுங்..

கெண்டி கெண்டின்னு பேசாதடா கெண்டி தேசங் போவாதடா..

கெண்டியில செத்தவங்க வண்டி வச்சி ஏத்துறாங்க..

பதுலுக்கு கொறத்தி பாடன ஒடனியே… அடடா பிரம்மாதண்டா தங்கவேலு. ன்னுமோ ஏதோன்னு நெனச்சண்டா… உன்ன பெரிய கூத்தாடின்னு சொல்லுவானுவுடா ஊர் தெருவுல நா நம்பமாட்டண்டா..

ஊங் கொரல பாத்தா தெரிதுடா வாதேர்தாண்டா நீ..

போமா.. பழம்பொடவ கடந்தா ஒண்ணு எட்தாம்மா.. நைனாரு பொண்டாட்டி பொடவய எட்தாந்து வாசல்ல போட்டாங்க. நைனாரு இரவது ரூபாவ பொடவ மேல வச்சிட்டுத் தூரப் போயி நின்னுக்கினாரு..

ஐயா சாமி மகராசனா இருக்குனு,, எங்கப்பா நைனார கையெடுத்துக் கும்புட்டு பொடவியுங் காசியுங் எடுதுக்குனு வந்து சுப்ரமணி சித்தப்பா கிட்ட குடுத்தாரு.
வேலு, காசி நா எட்துக்கறங் பொடவய நீ எட்துக்கோ.. பொடவியுங் காசியுங் பிரிச்சிக்கினாங்க.

ஊர் தெருவுல எங்கப்பா பங்குல வந்த பொடவைலாங் மொத்தமா கட்டி யாந்தல மேல வச்சிட்டாரு.

கோயிலுக்கு நெல்லு கேவுரு மட்டுங் ஒரு மூணு நாலு மூட்ட வந்துருக்குங் அன்னிக்கி. பொழுதுக்க வேசத்த கலச்சி உட்டாரு எங்கப்பா. ஒரே சவாரியா நடுத்தெருவுலகீற எங்காம்மாவ பெத்த ஆயா ஊட்டுக்கு ஓடிட்டங்.

வா சாமி வா.. வேசமா போட்டும் போன நீ. நா பாக்கலிய சாமி.. நாலு முச்சூடுங் எந்தர்த்தல ஒக்காந்தி கடந்துட்டங்.. கேவுரு அர்ச்சிக்கினு..

நா வேசம் போட்டத ஆசையா எங்காயா கேட்டது என்ன வெறுப்பேத்தற மாரியே இர்ந்துச்சி..

ங்கோத்தா சாவட்சடுவங்..

வெறுப்பா ஏத்ற என்ன… அழயுங் ஆத்தரத்தோட கேழி கேட்டுக்கினே எங்காயா மாராப்புத் துணியப் புடிச்சித் தொங்கிகினே சொயிட்டி சொயிட்டி குத்தனங்..

அய்யோ.. அய்யோ.. யாங் சாண்டா குட்ச பையா.. மாரப்புத் துணிய உட்ரா.. வலி வலின்னு வர்தே.. யாம் பரிப்பத் துன்ன பையா.. பொடவிய உட்ரா.

இதெல்லாங் சிரிச்சிக்கினே கேக்கறாங்க என்ன. என்ன எங்கூட்ல யார்னா அடிச்சாலோ கேழி கேட்டாலோ நேரா எங்காயவ வந்துதா அடிப்பங்.. ஒரு நால்கூடங் என்னத் திருப்பி அடிச்சதே இல்ல, நா அவுங்களா அடிக்கறப்பலாங் அசிங்கமா கேழி கேப்பாங்க. அந்தக் கேழி கேக்கும்போதுகூட அவுங்க ஒதட்டோரமா சின்ன சிரிப்புங் அசிங்கமா கேக்குற வார்தையில அன்புங் அரவணைப்புங் இருக்குங்.

எங்காயா ஊட்டு உள்ள போட்டிருந்த மல்லாட்ட மூட்ட மேல போயி படுத்துக்கன. கொறவங் கொறத்தி ஆட்டங் உன்னுங் ரண்டு நாளக்கி ஆடுவாங்க, மூனா நாளு கெங்கும்மாவுக்குக் கூழூத்தி திர்னா அன்னிக்கி ராத்திரி கூத்து எங்கப்பாவுங் ஆடுவேரு. எப்பிடியுங் பொண்ணு வேசந்தா கட்டுவேரு. இதெல்லாத்தியுங் மனசுல நெனச்சிக்கினு திருவிழா கூத்துலாங் முடிஞ்சிதா ஊட்டுக்குப் போவுனுங். எங்கப்பாகூட பேசவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டங். இந்த யோசனலியே ஊரல்லாங் சுத்தன அசதில சாப்படாமக்கூட மல்லாட்ட மூட்ட மேலயே தூங்கிட்டங்..

ஊடுப்பூரா தேடிங் கடக்கறங் மூட்ட மேல படுத்துக்கடக்கறாங் பாரு..

டே யெப்பா ஏந்துர்ரா.. உன்னத்தாண்டா… ஒரு வா சோறு துண்ட்டு படுத்துக்கடா..கயினி பயிரு போட்டு பண்ண கீர கடஞ்சி வச்சிகீறண்டா.. எந்துரு சாமி.. எந்துரு.. எந்துரு..

எங்காயா சாப்படச் சொல்லி எழுப்புனாங்க.. எனுக்குத் தூக்கங் தெளியவே இல்ல.

எங்காயா என்ன உட்றமேரில்ல, சோத்தப் பெவிஞ்சி அரதூக்கத்திலியே ஊட்டிவுட்டாங்க. சோத்த துண்ட்டு வாசல்ல படுத்திருந்த எங்க தாத்தாகூடப் படுத்துக்கினங்..

ங்கூத்தேர.. சீலத்துணில காசி முன்சி வச்சிங்கீறங்.. அவுத்துக்கினு கிவுத்துக்கினு போய்டப்போற..

பொழுது வெடிஞ்சி எங்க போறதுன்னு தெரியாமலே படுத்துருந்தங். அதுக்கப்பறங் ஏரிக்கர கயினிவில்லின்னு ஊட்டுக்குப் போவாம பகுலுக்கில்லாங் சுத்திக் கடந்துட்டு, ராத்ரில எங்காய ஊட்லியே படுத்துக்கீறது. ரண்டு நாலுங் இப்டியே போச்சு.. கொறவங் கொறத்தி ஆட்டங் முடிஞ்ச மூனா நாளு எங்கம்மா என்ன தேடிக்கினு வந்துட்டாங்க..

ராத்திரில ராத்திரில படுத்துருந்துட்டு வெடியாகாலங்க எங்கதாண்டா போவ பொறம்போக்கு. பெராத்தனகீதுன்னுதான வேசம் போட்டாங்க. அதுக்காடா ஆட்ட ஓட்டங் காட்டி ரண்டு நாளா பதங்க்கினு பள்ளிக்கொடங்கூட போவாத லோ லோன்னு சுத்திவர.. அத்தியுங் மாமனுங் குப்பத்திலிருந்து வந்துக்கீராங்க வாடா.
எங்கத்த வாங்கியாந்த மரவள்ளிக் கெழுங்க வெவிச்சிக் குடுத்தாங்க.. துன்னுக்கினே ஒக்காந்துருந்தே.

அண்ணங் கூத்தாட்றத பாத்து எவ்ளோ நாளாச்சி.. கல்யாணங் ஆவற்துக்கு மின்னப் பாத்தது..

போன வருசங் எங்கூரு திர்னாவுக்கு அண்ணங்கிட்டதாங் கூத்துக்குப் பாக்குவக்கிலான்னு எங்கூட்டுக்காரு நாட்டமகார்லா பேசி முடிவு பண்ணிட்டாங்க. கட்சியா மொட்டப் பசங்களா கூடிக்கினு ட்ராமாதாங் வக்கிணுன்னு ஒரே ராவிடி பண்ணி, வந்தவாசிலிருந்து வந்தானுவ… வெரிங் பொட்டமாரியுலா வந்து டங்கு டங்குன்னு எகிறிக் குச்சிட்டு ஏழாயிரத்த வாங்கிப் போய்ட்டானுவ. உப்புக்குப் பொராசனங் இல்லாத கூத்தாடிட்டு.

எங்கத்த எங்கம்மாகிட்டப் பேசிக்கினுருக்கும்போது எங்கப்பா அப்போதாங் வீட்டுக்கு வந்து உள்ள நொழயிறாரு.. தாழ்வா இருக்குற வீட்டுக்கூரையின் பன வாரை முதுகில் குத்த..

ப்பா.. மொண்டாட்தங் வரா…

பாத்து எண்ணா… நெல்லா குனிஞ்சி வரவேண்டிதான.

ப்பா.. எப்ப கொழந்த வந்த.. மழ கிழ வர்தா பாரு, மாமங் வந்துட்டுகிறாரு..

எங்க மாமா சிரிச்சிக்கினே.. மருமபுள்ளியப் பாத்து நாலச்சு.. என்னப் பாத்துக் கிண்டல் பண்ணிக்கினே பேசறாரு.

நீ கூத்தாடுறதப் பாத்து எம்மா நாளாச்சி.. கூத்துன்னு கேட்டனாழிக்கி அந்த மூச்சிக்கே கௌம்பிட்டங்.. நீ கூப்ட்ட அப்பவே வந்துருந்தா கூத்துல ன்னாரங் பெரிய வாத்யாரா ஆயிருப்பங்..

ஊங்தங்காச்சிகாரிதா, கூத்துக்கலாங் போனினா ஊங்கூட வாழவேமாட்டனிட்டாளே… புரிதி நோட்டல்லாங் தூக்கி அடுப்புல போட்டுட்டா..

கும்பல்லதாங் ஆட முடியல..முன்னமேரி ஊர்ல கத்துக்குனு ஆடலான்னு பாக்குறங், நீதா வந்து .. கல்பரங் கொழித்தி ஆரம்பிச்சி வச்சிட்டு வருணுங். அதுக்குதா முக்கியமாக் கௌம்பி வந்தங்..

எங்கத்திய கட்டிக்குடுத்த புதுசுல அந்த ஊர்ல கூத்துக் கத்துக்குனாங்க. எங்க மாமவுங் ஆடனாரு. எங்கப்பா எங்கூர்ல இருந்த கீலா சுப்ரமணி வாதியார கூட்டிம்போயி கத்துகுட்து, வேச சாம்னுக்கல்லாங் காசே வாங்காம கூத்து நடத்தி குட்துட்டு வந்துகீறாரு. அந்தக் கூத்துல கீலா வாதியாரு கெட்டியங் கட்னாரங்.

அத எங்கூருக்கு வரும்போதெல்லாங் பெருமயா சொல்லுவாரு மாமா. நா ஆட்ன கூத்துல அப்பேர்ப்பட்ட கீலா வாத்தியேர கெட்டியங் ஆட்னாரு. எங்க மச்சாங் இல்லினா இதல்லாங் நடந்துருக்குமா.

யாண்டி அந்தப் பூவ எடுத்து பாப்பாகிட்ட குடுடி. மாமா அத்தகிட்ட சொன்னாரு. அத்த பூவ எடுத்து எங்கம்மாகிட்ட குடுத்துச்சி. வௌ;ளத் துணியில பூ நனச்சி சுருட்டி வச்சிட்டு.

பூவு ஊட்டுக்குதா வாங்கியாந்துகீறன்னு நெனச்சா அண்ணனுக்குக் கூத்தாடுறதுக்கு வாங்கியாந்துகீற.

ஒரு வண்டி பூவ வச்சாகூடங் உங்கண்ணனுக்குக் கர காணாது.

மணி எட்டுக்கு மேல இருக்குங். கோயில்ல மோளங் அடிக்கற சத்தங்கேட்டுச்சி. எங்க அத்தயுங் அம்மாவுங் எங்க அக்காவுங்குளுக்குத் தல வாரிக்கினு இருந்தாங்க. எங்கப்பா ஒடஞ்சு ரசம்போன கண்ணாடிய வச்சிக்கினு ராத்திரி கூத்துக்கு மீசயயெடுத்துக்கினுருந்தாரு.. எப்பிடியாவது ராத்திரிக்கி எங்கப்பா கூத்தாட்றத நிறுத்துணுன்னு முடிவு பண்ண…

ஏப்பா…

ன்னடா.. ஓரமா ஒக்கார்ரா.. ஆட்டி கீட்டி உட்றபோற. பிளேடு மூஞ்சில பட்டுருங்.. லைபாய் சோப்ப போட்டு மூஞ்சி தேச்சி செரைக்க ஆரம்பிச்சாரு.

ராவிக்கி நீ கூத்தாடப் போவாத. நீ போனினா ஆம்பள வேசந்தா ஆடணுங். எங்கப்பா மூஞ்சப் பாத்து கோவமா சொன்னங்.

ன்னாதாண்டா ஆச்சி உனுக்கு. எப்ப பாரு பொம்பள வேசங் ஆடதா, பொம்பள வேசங் ஆடாதன்னு பொலம்பிக் கடக்குற.. ம்மாநாளா ஆடும்போதுலாங் ஒன்னுங் சொல்லல..ப்பன்னாடா புதுசா.

நா ஆட்றமேரி ஒரு பையங் ஆடமாட்டாண்டா பெண்வேசங்.

அதல்லா எனுக்குத் தெரியாது… நீ பொம்பள வேசங் ஆடாத..

யாந்தானு சொல்லாண்டா.. சொல்றா.. சொல்லப்போறியா இல்லியா.. கோவம்மா அதட்டனாரு.

நா பயிந்து போயி அழுதுக்கினே சொன்னங்.

எல்லா.. பசங்களுங் நீ வேசங்கட்டி ஆடும்போது… உங்க அம்மா வராங்க பார்ரா.. போயி பால் குடிடான்னு என்ன வெறுப்பேத்தறானுங்க… அழுதுக்கினே எங்கப்பாகிட்ட சொன்னங்.. மொகசவரங் பண்றத நிறுத்திவிட்டு என்னத் திரும்பி மொறச்சி நின்னு நிதானமாப் பாத்தாரு… அழாதடா யார்ராவங் உன்னக் கிண்ட பண்ணது… நா பொண்ணு வேசம் போடலின கூத்து நல்லாருக்காதுடா… யாங் சமாவுல என்ன வுட்டா வேற ஆளே இல்லடா. கதாநாயகி வேசங்கட்டறவங்..கூத்துக்கு வர கூட்டம்பூரா நா ஆட்ற பெண் வேசத்தப் பாக்கதாண்டா வருது.. பத்து வருசத்து முன்ன நா பெரிய சூர வேசக்கார. உனுக்கு மூணு வயசு ஆவற வரைக்கும் சூரந்தாண்டவ ஆடுவங். போயி சொல்றா அந்தப் பசங்ககிட்ட. நீ ராத்திரில மூணு மணிக்கி பொறந்த. அன்னிக்கி ராத்திர பாண்டி அரியாங்குப்பத்தல தக்கன் வேள்வி நாடகத்துல வீரபத்ரனா சூர வேசங்கட்டி ஆடிட்டு வெடியாகாலங் ஊட்டுக்கு வந்தா.. எங்கம்மா ஓடியாந்து சொன்னாங்க. யப்பா டே தங்கவேலு.. உனக்கு ஆம்பளப் புள்ள பொறந்துகீதுடா. அந்த சிவபெருமானே வரங்குடுத்து வீரபத்தரனே வந்து பொறந்ததா நெனச்சி உன்னத் தூக்கி முத்தங்குடுத்தங்… அப்போ ஒண்ணுங் பாதிமா தொடைக்காமருந்த வீரபத்திர வேசத்தோட அரிதாரம் உமூஞ்சிலயுங் பூசிக்கிச்சி. அன்னிலிருந்து அந்த வீரபத்திரனோட அருளாலதாங் நோய் நொடியில்லாம நெல்லாருக்குற. போய் சொல்றா.. அந்தப் பசங்ககிட்ட ஊம்பொறப்போட வரலாறே ஒரு சூர வேசத்துக்குள்ளதாங் இருக்குதுன்னு…

அப்ப ராவிக்கி சூர வேசங் ஆட்றியா…

இனிமே எங்கடா சூரங் ஆட்றது… சொன்னா புரிஞ்சிக்க மாட்ட.. போடா போயி சாப்ட்டு அம்மாகூடக் கௌம்பி கூத்துக்கு வா.. எரிச்சலாப் பேசிட்டு, குளிச்சிட்டு கூத்துக்குக் கௌம்பிட்டாரு.

எங்கப்பா பத்து வருசத்துக்கு முன்னே சூரவேசங் ஆடனாருன்னு சொன்னப்ப சந்தோசமாயிருந்துச்சி. அதேசமயம், இனிமே சூரவேசல்லாங் எங்கடா.. ஆட்றதுன்னு சொன்ன ஒட்னயே .. அம்மா, நொண்டியோட அப்பா, வீரப்பங், பொம்பள வேசத்தோட நொண்டியோட அப்பாவுக்கு பொண்டாட்டியா எங்கப்பா. நெனக்கும்போதே எரிச்சல், கோபம், இயலாமை ஒட்டுமொத்தமா சேர்ந்து மனம் இறுகி கண்ணுல தண்ணி வந்துடுச்சி.. எங்கியாவது ஓடில்லாமான்னு நெனச்சங். ராத்திரி நேரங், எங்க போறதுன்னு தெரியல. கூத்துக்குப் போவக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டங். ஆயா ஊட்டுக்குப் போலான்னு பாத்தாலுங் எங்கப்பா ஆட்றாருன்னா.. ஊருக்கு முன்ன பாயசுருட்டிக்கினு கௌம்பிடுவாங்க. இன்னா பண்றதுன்னு யோசிச்சி, கோயில்ல போயி படுத்துக்குலான்னு முடிவு பண்ணங். திருவிழாக்குப் போட்ட லைட்டு வெடிற வரைக்கும் எரிஞ்சிக்கினு இருக்குங். பயமாவுங் இருக்காது. எங்கம்மாவுத்து சுசேட்டுல குட்த பொடவய யெடுத்துக்குனு கோயிலுப் பக்கமா போனங். “அங்கலாம்மா.. எந்தன் கெங்காளம்மா, மங்கலம் பொங்கிட மனதில வந்திடு மாரியம்மா.. மாரியம்மன் பாட்டு எனக்கான அந்த இரவின் குரூரத்தைக் கலைத்து லகுவாக்கியது. சின்னப்பசங்கள்ளாங் குருக்கு பரி, திரி திரி பத்தங், கபடி, நொண்டி ஆட்டங், வச்சா வச்சா வழப்பழங், ஆளாளுக்கு ஒரு வௌ;ளாட்டா வௌரடிகினுருந்தாங்க. நா யாருக்காகப் பயிந்து கூத்துக்குப் போவம கோயிலு பக்கங் வந்தனோ, அவனுங்க அங்க இருந்தானுங்க. நொண்டி, வீரப்பங், உதயகுமாரு, சம்பத்து, நாலு பேருங் கபடி வௌ;ளாடிட்டுருந்தானுங்க. அவனுங்க பார்த்தா-னுங்கன்னா, வௌ;ளாடக் கூப்புடுவானுங்க.. அப்புறங் கூத்துக்குக் கூப்புடுவானுங்க, எங்கப்பா பொண்ணு வேசங்கட்டியாரும்போது, “அம்மா அம்மான்னு” வெறுப்பேத்துவானுங்க. இதெல்லாங் நெனச்சி அவனுங்களப் பாத்துப் பதங்கிக்கின.. எனக்கும் என் நண்பர்களுக்குமான பந்தயம், மனச் சிக்கலோடு சேர்ந்த எங்கம்மாவின் ஒழுக்கம் சார்ந்து எங்கப்பன் ஆடும் தெருக்கூத்தில் இருக்கிறது. என்னிடம் ஆயுதமிருந்தால், அவர்களை ஒரே வீச்சில் வீழ்த்தியிருப்பேன்… ஆயுதம்.. எங்கப்பாவிடம்தான் இருக்கிறது. என்னுடைய மனநிலை எங்கப்பாவுக்குப் புரிந்ததா என்று தெரியவில்லை. இயலாமையின் பிடியில் கோயிலின் புல்தரையில் மல்லாந்து படுத்து இரவை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். சாமி ஊர்கோல முடிந்து ஊரின் சத்தமடங்கியது. கண்ணை இறுக்கி மூடினாலும் தூக்கம் வரல. கோவத்துல சோறு கொஞ்சதாங் துன்னங். பசி மயக்கம் ஒடம்பு சோர்ந்து கொஞ்சங் கொஞ்சமா தூக்கம் வர ஆரம்பிச்சது. கண்ண மூடித் தூங்க ஆரம்பிச்சங். மிருதங்க ஓசயும் ஆர்மோனிய ஓசயும் சேர்ந்து தெருக்கூத்தின் இசையாக வடிவெடுத்து இரவைக் கிழித்து என் கன்னத்தை ஓங்கி அறைந்தது. திடுக்குனு எழுந்து ஒக்காந்தங்.. சுத்துங் முத்துங் பாத்தங், யாருமே இல்லை. கோயில்ல கட்டிருந்த டியுப் லைட் வெளிச்ச மட்டுங் என்ன சுத்தி.. தூரமா கேட்டுக்கினுருந்துச்சி தெருக்கூத்து மிருதங்க சத்தங்மட்டுங்.

உணர்வோடு கலந்திருந்த தெருக்கூத்து இசை இன்று வெறுப்பை நான் உமிழும் கலையாக மாறியிருந்தது. மனிதத்தின் உளவியல் சிக்கலில் மாட்டி எப்படித்தான் இந்தக் கலையை நான் வெறுத்தாலும் .. கலை அதன் இயல்பில் இருந்து மாறுவதே இல்லை என்பதை எனக்கு உணர்த்தியது. ஆமாங்க.. தெருக்கூத்தின் இசை நான் எவ்வளவோ வறட்டுத்தனமாக இருந்தும் கூத்து நடக்குங் எடத்துக்குத் தானாகவே என்னை நகர்த்திச் சென்றது.

கூத்தின் முதல் வேசமான தொப்புக்கூத்தாடி தெரையைவுட்டு வெளிய வந்து ஆடிக்கினுருந்தாரு. தங்கவேலு வாதியாரு ஆட்றதப் பாக்க (எங்கப்பாவப் பாக்க) உலகாபுரம், நல்லாவு+ர், கோடிப்பாக்கம் எனச் சுத்துப்பட்டு ஊர்லருந்து ஜனங்க தேப்ப தேப்பயா வந்துக்கினுருந்தாங்க. ஊரு ஒட்லுகாரமூட்டு ஆளு பஜன கோயிலு பக்கமா டீக்கடை போட்டுருந்தாரு, பக்கத்துலிருந்த கரண்ட்டு மரத்தாண்ட போட்டுருந்த பலக கல்லு மேல ஒக்காந்து கூத்துப் பாக்க வந்த கோடிபாத்து ஆளுங்க டீ குடிச்சிக்கினு பேசிக்கினுருந்தாங்க. நானு ஒரு பாஞ்சி வருசமா இந்தாளு ஆட்றத பாக்கறங்… சும்மா சூரங் ஆடனான எப்பிடித் தெரிமாடா ஆடுவாங்… அட டட டா… சாராசந்தங் சண்ட நாடகத்துல… சாராசந்தங் கட்டியாடுவாங் பாரு… தெரயவுட்டு வெளிய வந்து, நின்ன யெட்த்தியே சும்மா நூறு சுத்து சுத்துவான்டா… ஒரு நட ஒண்ணு நடப்பாங் பாரு… ஒருத்தங் நடக்கமுடியாதுடா பையா அதுமேரி.. பொம்பள வேசமும் அதேமேரிதான்டா… திரொபதை கட்டி வந்தானா அப்பிடியே அச்சில வாத்தமாரி இருப்பான்டா… பதிங்கிக்கினு ஒக்காந்துருந்த நானு எங்கப்பாவப் பத்தி தென்கோடிப்பாத்து ஆளுங்க பேசறதக் கேட்டுக்கினு அவுங்க நின்னுருந்த கரண்ட்டு மர லைட்டு வெளிச்சத்தில நானுங் அவங்களோட போயி நின்னுருந்தங்… டீ குடிக்கற பழக்கங் இருந்த எங்க தாத்தா டீக்கடப் பக்கங் வந்தத நா பாக்காத இருக்கும்போது.. வலது கைய நெத்தில மேல வச்சி கண்ண சுரிக்கி என்ன பாத்துட்டு… யாரது… பச்சயூட்டுப் பையனா அது.. ஊருபூரா தேடிங்கடக்குறங் இங்க வந்து நின்னுகீறத பாருய்யா.. ன்னா மண்டகருவங்ன்றது.. பேசிக்கீனே கையப் புடிச்சி டீக்கடப் பக்கம் கூட்டிக்கினு போனாரு.. டீக்கட தனபால் செட்டி, எங்க தாத்தா என்னக் கூட்னு வர்தப் பாத்து.. ன்னா சுப்ராயா… ஊங் பேரனா.. வெகுநேரமா இங்கத உக்காந்திருந்தாங்… அடப்போங்க செட்டியாரே… பெரிய மன்சமேரி எல்லாத்துக்குங் மொரச்சிக்குவாங்க.. சாதார்ண ஆளு கெடையாது இவுரு.. எங்க தாத்தா என்னப் பத்திச் சொல்லிக்கினே எனுக்கு ஒரு டீ வாங்கி நெல்லா ஆத்திக் குட்து குடிக்கச் சொல்லிட்டு… செட்டியாரே இவன கொஞ்சங் பாத்துக்கோ.. செத்த மூத்தரங் பேஞ்சிட்டு ஓடியாந்தரங்.. ங்கூத்தியாரே இங்கியே ஒக்காந்துருக்குனு.. மூத்தரங் பேஞ்சிட்டு வந்த எங்க தாத்தா ஒரு டீய வாங்கிக் குட்சிட்டு, யாங் கைய இறுகப் புடிச்சி எங்கம்மா ஒக்காந்துருக்குங் எடத்துக்குக் கூட்டுனு வந்தேரு.

எங்கம்மா எப்பக் கூத்துப் பாக்க ஒக்காந்தாலுங் லைட்டுக் கட்டற மரத்திலிருந்து பத்தடி தள்ளி பக்கத்திலியே பாயப் போட்டு ஒக்காந்திருவாங்க.. கூத்துன்னா எங்கம்மாவுக்குங் உயிரு எங்கப்பாமேரியே. ஒரு வகையில எங்கம்மா அப்பாவுக்கு வாதியாருன்னுகூடச் சொல்லலாங். படிக்கத் தெரியாத எங்கப்பாவுக்கு நாடக புரிதி எழுதி, பாடல், வசனம், ராகம் எல்லாமே சொல்லுக் குடுத்தது எங்கம்மாதாங். பெண் வேசப்பாட்டெல்லாங் பிரம்மாதமா பாடுவாங்க… தெருக்கூத்து மேலிருந்த காதலால.. தெருக்கூத்து ஆடன எங்கப்பாவ காதலிச்சிக் கல்யாணம் பண்ணிக்கினாங்க.

எங்கக்கா, ஆயா மட்டுந்தாங் ஒக்காந்திருந்தாங்க பாயில. எங்க தாத்தா என்னக் கூட்டார்த பார்த்த எங்க பெரியக்கா வேல்விழி.. ஆயா.. தோ பார்த தம்பிய தாத்தா கூட்னு வர்றத.. யதாடின்னு திரும்பிப் பார்த்த யங்காயா, தோ கெழவா.. பிடியே வா.. பிடியே வா.. தாத்தாவப் பாத்துக் கூப்பிட.. தாத்தா என்ன ஆயா கிட்டக் கூட்டியாந்து உட்டாரு… யாண்டா பையா.. கால்ல சக்கரங் வச்சிகினாடா சுத்துவ. இந்தப் பறச்சேரி பூரா தேடிங்கடக்கறாள.. ப்டிவந்து ஒக்கார்ரான்னு யாங் கையப் புடிச்சி ஒக்கார வக்க.. எங்க அக்க மடில வச்சிருந்த வெவிச்ச பயிர அள்ளி எனுக்குத் துன்ரான்னு குடுத்துச்சி.

நா ஒக்காந்துருக்கற எட்த்துக்கு கொஞ்ச தள்ளி.. வீரப்பங், சம்பத்து, நொண்டி, குமாரு, யாங்கூட படிக்கிற பசங்களாங் ஒக்காந்திருந்தானுங்க. நொண்டி நா யங்காயாகூட ஒக்காந்துருக்கறதப் பார்த்துட்டு..

ஓய்.. ராஜி.. இங்க வாடா.. உனுக்கு எடம் புடிச்சி வச்சிகீறன்டா. என்னக் கூட்டுட்டே இருந்தாங். அவுனுங்ககூட ஒக்காந்து கூத்துப் பாத்தா இன்னா நடக்கும்னு எனுக்குத் தெரியும். எங்கப்பா பொண்ணு வேசங் கட்டியாரும்போது , உங்கம்மா வராங்கடா, போயி பாலுகுடிடான்னு.. என்ன வெறுப்பேத்தி.. உங்கப்பா பொம்பள வேசண்டா, எங்க அப்பாலா ஆம்பள வேசங், சூர வேசன்னு சொல்லி அசிங்கப்படுத்துவானுங்க. போன கூத்துல இவனுங்ககூட ஒக்காந்ததால ஏற்பட்ட மன உளச்சலால, நா தனியா இருப்பதே எனக்குப் புடிச்ச தருணமாகிவிட்டது. எங்கப்பா மீதிருந்த மதிப்பீடு இவனுங்களோட கேலித்தனத்தால் கேள்விக்குறியாகிப் போனது. தெளிந்த ஓடை நீரின் மேல் காற்று அள்ளி வீசிய குப்பை கூளங்களின் படிமத்தைப் போல் எங்கம்மாவின் ஒழுக்கத்தின் மேல் மனக் குழப்பத்தையும் எனக்கு மன உளச்சலையும் உருவாக்கி, அவனுங்களப் பாத்தாலே நா பதங்கக் கூடிய ஆள இருக்கும்போது என்னால எப்படி அவனுங்களோட ஒக்காந்து கூத்துப் பாக்க முடியும். அவனுங்க கூப்பட கூப்பட.. நா திரிம்பியே பாக்காத ஒக்காந்திருந்தங். திரும்பத் திரும்ப என்னக் கூப்புடுறதப் பாத்த யங்கக்கா .. ன்னாடா.. நொண்டி… யாமாத்தி வாங்கித் துன்லான்னு கூப்டிறியா.. யங்கக்கா அவனப் பாத்துக் கேழி கேட்டதுக்கப்பறங் யாப்பக்கங்கூடத் திரும்பல.

என்னத் தேடிம் போன எங்கம்மாவ தாத்தா கூட்டிக்கினு வந்தாரு. ஊர்லருந்து வந்த அத்தயும் மாமாவும் பாயி தண்ணிலாங் எடுத்துக்குனு அம்மாகூட வந்தாங்க. எங்கம்மா யாம் மேல கோவமா வந்தாங்க. கேழி கேட்டுக்கினே அடிக்கிறதக்கு கைய நோங்கிகினு வந்தாங்க. பக்கத்தல நின்னுருந்த எங்கத்த பாய கீழப் போட்டுட்டு யங்கம்மா கையப் புடிச்சிகிச்சி. மாமா அம்மாவப் பாத்து, அட உடும்மா, மாப்ள எங்கனா வௌ;ளாட்டு வந்துருப்பாரு. சின்னப் புள்ளதான… அடப்போ எண்ணா.. இவங்கூட வௌ;ளாட்ற பசங்க பூரா இங்கத்தகீறனுவ. அவனுவுளப் பாத்துட்டுதா இவனத் தேட ஆரம்பிச்சங்.. நீயேதான பாத்த இந்த ஊரயே சுத்தி வந்தங்.. காலு கீலுலாங் உட்டுப்போவுது பாரு.. கெழவம் மட்டும் டீக்கடயாண்ட போவல.. கூத்தப் பாத்தாமேரிதா இருந்துருக்குங். தே எக்கா ஒக்காருத.. பின்னாடி ஒக்காந்துருக்கறவங்க சத்தம்போட… ஏற்கெனவே போட்டுருந்த பாயோடு நெருக்கிப் போட்டு ஒக்காந்தாங்க. இந்த ரண்டு எமராச்சிதத்தா காணம் பாரு. எங்க சின்னாக்காவயுங் பாப்பாவயுங் கேழி கேட்டுக்குனே ஒக்காந்தங்க. அவுங்க ரண்டு பேருங் என்னதாங் தேடியாரப் போயிருந்தாங்க. நா வந்துவிட்டது தெரிஞ்சி சின்ன அக்காவும் பாப்பாவும் ஊட்டிலிருந்து குடிக்க தண்ணி எடுத்துக்கினு வந்து குடுத்துட்டு ஒக்காந்துக்கினாங்க.. அத்தயும் மாமாவும் யாம் பக்கத்தல ஒக்காந்துருந்தாங்க.
சைலன்ஸ்.. சைலன்ஸ்… தொப்பக்கூத்தாடி சத்தமாக் கூவி எல்லோரையும் அமைதியாக்க.. சபயே நிசப்தமாகியது.. சபயில் அமர்ந்துருக்கும் பெரியோர்களுக்கும் ஊர் நாட்டாண்மைகாரர்களுக்கும் பஞ்சாயத்துத் தலைவர் அவர்களுக்கும் மற்றும் சபயை அலங்கரித்துருக்கும் தாய்மார்களுக்கும் கோடான கோடி வந்தனத்தையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொண்டு இன்றைக்கு நடத்தயிருக்கும் நாடகம்

“மலையுகாசூரன் மத வீமன் சண்டை என்னும் வீரப்பாஞ்சாலி ஆர்ப்பாட்டம்”

“மலையுகாசூரன் மத வீமன் சண்டை என்னும் வீரப்பாஞ்சாலி ஆர்ப்பாட்டம்”

இதில் மேளக் குத்தம், தாளக் குத்தம், சொல் குத்தம், பொருள் குத்தம் யாதொரு தவறு இருந்தாலும், உங்கள் வீட்டுப் பிள்ளை செய்த தவறாக நினைத்துப் பொறுமை காத்து மன்னிக்கும்படியாகக் கேட்டுக் கொள்கிறோம். … இப்படியாக இருக்க தருமர் சபக்கி வரும் விதம் காண்க.. தொப்பக்கூத்தாடி சொல்லி முடிச்சதுங் தெரயப் போட்டாங்க. தல வேசங் எப்பவுமே குமாரோட அப்பாதாங் கட்டியாருவேரு. எனக்காக எப்பிடியுங் ஆம்பள வேசந்தாங் எங்கப்பா கட்டினு வருவாருன்னு நெனச்சினுருந்தங். இப்பத் தெரைக்கு வர ஆண் வேசங் எங்கப்பாவா இருந்தடக் கூடாத.. ஏக்கத்தோட பார்த்துக்கினுருந்தங்.. என்னோட நினைப்பு உடைந்து நெஞ்சு கனத்தது. தருமராக குமாரோட அப்பா ஆடிக்கினுருந்தாரு.

குமாரு அவுங்க அப்பா ஆட்றத அவங்கூட ஒக்காந்து பாக்க சைகயாலியே கூட்டுக்கினிருந்தாங். அவனுங்க எதுப்பண்ணாலுங் என்ன வெறுப்பேத்தற மாதிரியே இருந்துச்சி. அதனால எங்க அத்த பின்னாடி மறஞ்சுக்கினு அவுனுங்களுக்குத் தெரியாம ஒக்காந்துக்கின. தருமர் ஆடி முடிச்சதுங்….பாண்டவர்களின் முந்தி மூத்தவரான தர்மராஜன் அவர்கள் கொலு நாடி வந்து அமர்ந்துருக்க, பதி அழைத்தாரென்று திரௌபதையை அழைக்க.. திரௌபதை சபை நாடிவரும் விதம் காண்க.. என்று தொப்பக்கூத்தாடி பேசி முடித்ததும், எப்படியுங் எங்கப்பாதாங் வருவாரு… பாயில கவுந்து படுத்துக்கினேங். திரௌபதை பெண் வேசங் ஆட்றவருடய கொரலப் படுத்துக்கினு கண்ண மூடிக்கினே உத்துக் கேட்டுக்கினுருந்தங். கொஞ்ச கொஞ்சமா மனம் லகுவாச்சி.. அப்பாடா.. அது எங்கப்பனோட குரல் இல்லை. பெருமாள் எங்கப்பாவோட நண்பர்… திரௌபதை ஆடிக்கினுருந்தாரு.. பெருமூச்சு நிம்மதியோடு எழுந்து ஒக்காந்து கூத்துப் பாக்க ஆரம்பிச்சங். கொஞ்ச நேரமான ஒடனே அடுத்த ஆண் வேசம் எங்கப்பனாருக்கணுமின்னு ஏக்கமும் எதிர்பார்ப்பும் அப்பிக் கொண்டது.

இடும்பா வனத்தில் தருமருங் திரௌபதியுங் பசியால் அமர்ந்துருக்க சாப்பிடுவதற்குக் காய் கனி கொண்டுவர வீமனை அழைக்க வீமசேனன் சபை நாடிவரும் விதம் காண்க… கெட்டியக்காரனின் குரல் அடங்குவதற்குள்.. வீமனின் சலங்கைச் சத்தம் எதிரொலிக்கிறது. முதுகெலும்பை நிமிர்த்தி விழியகல எதிர்பார்த்து அமர்ந்துருந்தேன். திரையகற்றிய உடன் ஆர்ப்பரித்து ஆடினான் வீமசேனன். யாமாந்து போனேன். மறுபடியும்… சம்பத்தோட அப்பா மண்ட. வீமனாக… காசர செடிய கண்ணுல அப்பியது போல இருந்தது. ஒரு நொடிபொழுதுகூட என்னால ஒக்காந்து கூத்துப் பாக்க முடியல..

எங்கப்பா என்ன வேசம் கட்டி வருவார்… எப்போ வருவார்… குழப்பமான மனநிலையோடுயிருந்த எனக்கு உறுதியாகிப் போனது எப்படியும் பெண்வேசந்தான் கட்டி வரப்போறார் என்று… தர்மன், வீமன்… இந்த வேசமே கட்டி வர்ல என்று நினைக்கும்போது… அடுத்து இருக்கும் ஆண் வேசம் சூரன்… உக்கரமாக ஆடக்கூடிய வேசம். அதை எப்டியும் இவர் ஆடப் போவதில்லை. சூரனுக்குப் பொண்டாட்டி வேசங்கட்டியாரப் போறாருன்னு தெரிஞ்சி போச்சி. அடுத்து வரப்போற வேசங் சூரன்.. சூர வேசத்த பாத்துட்டு.. எங்கப்பா வரும்போது ஏந்து போயிலாம்மின்னு நெனச்சிக்கினு ஒக்காந்துருந்தங்..

இந்த விதமா வீமன் இடும்பா வனத்தில் பசியால் இருக்கும் தர்மர், அர்ஜுனன், திரொபதை, தாய் குந்திமாதேவி ஆகியோருக்குக் காய் கனி கொண்டுவர வெகுதூரம் நடந்து நேத்தர கிரி மலைக்குச் சென்றுவிடுகிறான். அந்த மலைக்கு அரசனான மலையுகா சூரன் வரும் விதங் காண்க.. என்று தொப்பக்கூத்தாடிச் சொல்லி முடிக்க.. திரை போடப்பட்டு.. வேசம் வருவதற்கான விசில் அடிக்கிறார்கள். விசில் சத்தம் குழுமியிருக்கும் சபயை விலக்கிக்கொண்டு வேசதாரியின் காதில் ஒலிக்க..

ஒலியின் வேகத்தை மிஞ்சும் அளவுக்கு புயலாய் சுழன்று வருகிறார் திரைக்கு.. மலையுகா சூரன்..

என் சகாக்களினால் திரிந்து ஒளி மங்கிப் போன எங்கப்பாவின் ஆளுமையை மீட்டு எடுக்கக்கூடிய வேசம்..

அதேநேரம் எங்கம்மா தெருக்கூத்தில் ஏதோவோர் ஆண் வேசத்திற்கு மனைவியாக யிருப்பதைத் தடுக்கும் வேசம்.. ஆமாங்க… இந்த மலையுகா சூரன் எங்கப்பனாக இருந்தடக் கூடாத… எங்க அம்மாவப் பத்தின ஆழ் மன உளவியல் சிக்கல் தீர்ந்துடாதா.. சகாக்களின் கேலி கிண்டல் நின்று போய்விடாதா.. ஏக்கமும் எதிர்பார்ப்போடும்… ஒக்காந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்… மலையுகா சூரன் திரையில் பாடிக் கொண்டிருக்கிறார்.

அரோகரா ஓம் சரவண பவனே ஆறுமுகத்தனகா

அந்த அன்புடன் வள்ளியை இன்பதாகவே அணைத்திடும் மால் மருகா

ஓம் என்ற பேருக்கு ஒரு தர மாகிய ஏனென்று கேட்பவனாம்

உன் திருநாமம் உதிர்ப்பவர் நாவில் உண்மையாய் இருப்பவனாம்…

மேளமும் தாளமும் அதிர ஆர்ப்பாட்டமாகப் பாடிக் கொண்டிருக்கிறார் மலையுகா சூரன்.. சபை ஒரே நிசப்தமாக ஆகி விட்டது. அனைவரும் சு+ரனைக் காண்பதற்காக ஒட்டு மொத்தமாக மயான அமைதியானார்கள்.

மலையுகா சூரன் திரைப்பாட்டைப் பாடி முடிக்க.. பின்பாட்டு பாடுபவர்கள் ராகம் வைத்துக் கொண்டிருந்தார்கள். ததிரினா.. னானோ.. ததிரீ.. னானோ… சடாரென இடைமறித்து.. டாய்.. டாய் .. மந்திரிமார்களே .. என்று கொக்கரித்துப் பெஞ்சியைக் கடகடவெனத் தன் கையில் வைத்திருக்கும் கட்டக் கத்தியால் குத்தி.. பெஞ்சியின் மீது ஏறி எகிறிக் குதித்து அந்தக் கோழி மயிரு கிரீடத்தை வலம், இடம் என இரு பக்கமும் சிலுப்பி பெஞ்சி மேலிருந்தே நின்றுகொண்டு.. பின் பக்கமாகத் திரும்பி சபயைப் பார்த்து.. பின்புறமாகவே கீழே குதிக்கிறார்.

டாய்… டாய்… மந்திரிமார்களே… என்று சூரன் உச்சரித்த அந்த வார்த்தை மட்டும் சபையில் ஒக்காந்துருந்த என்னைச் சற்று அசைத்துப் பார்த்தது. ஏனென்றால், என் மீது எங்கப்பா கோபப்படும் போதெல்லாம் .. டாய்.. என்ற வார்த்தையைத்தான் முதலில் பயன்படுத்துவார். இது எங்கப்பாவாக இருந்தால் எப்படி இருக்கும்.. என்று என்னோட ஆசை, கனவுகளை எல்லாம் ஒரு மூட்டையாகக் கட்டிக்கொண்டு ஒக்காந்துருக்கிறேன்.

திரைக்குள் இருக்கும் சூர வேசத்தின் சலங்கை கட்டிய அடவுகளிடும் பாதம் மட்டும் கீழே தெரிகிறது. மேலே..

சூரன் எப்போ வெளியே வருவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டேயிருக்க…

ஆதி கைலாயத்தில் சிவனிடப் பாகத்தில் அருமரை சொரிந்தவள் நீயே

அருமை மகளாகப் பாஞ்சானுக்குப் பிறந்திட்டவளும் நீயே

வீரன் துச்சாதனன் படைகளை வென்றிட்டு நீராடியவள் நீயே

அருங்கிலி பாஞ்சாலி குங்கும சிலையே போற்றி..

என அம்பாள் மீது கவியைக் கடகடன்னு சொல்லி ஒடனியே பாட்டை எடுக்குறார்.

என் அம்பிகையாளே… உந்தனைக் கோரி…

நம்பினேனே… என்… தாயே… என்று அம்மன் மீது பாடல் பாடிக்கொண்டு தெரையிலேயே பதினைந்து நிமிடம் ஆடிக்கொண்டிருக்கிறார்.

வெளியில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்குத் திரைக்குள் ஆடிக்-கொண்டிருக்கும் சூர வேசத்தின் கோழி மயிரு கிரீடமும், சலங்கை கட்டிய பாதமும் உள்ளே ஆடிக் கொண்டிருப்பவரின் ஆட்டத்தின் உக்கரத்தைக் காட்ட… சபையோர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தையடைகிறது.

அலைகடலும் தத்தளிக்க மலைகல் சாய

ஆர்ப்பரித்து தோளைத்தட்டி குதித்தெழுந்து

சிலைவாளும் தொமரமும் ஈட்டி பாலா

சினந்து மிக ஆயுதங்கள் கரத்தில் தாங்கி

குலை நடுங் எதிர்பட்டோர் குருதி சிந்த

கொக்கரித்து இரு விழியும் பொறி பறக்க

கலை மானை வேங்கையது தாக்கினார் போல்

மலையுகா சூரன் வெளிப்பட்டேன் புறப்பட்டேன்..

மலையுகா சூரன் யார், அவனோட பலம் என்ன, பராக்கிரமம் என்ன என்பதை விளக்கிக் கூறும் வசனத்தைச் சிங்கத்தின் கர்ஜனையோடு கலந்த குயிலின் இசையோ என்று சபையோர் சிலிர்க்க, மலைக்க, அடித்து ஆர்ப்பரித்து… ஒரு பந்தைப் போலப் போடப்பட்டுருக்கும் பெஞ்சின் மீது எகிறிக் குதித்து இரு கால்களையும் அகல வைத்துத் தனது கையில் வைத்திருக்கும் இரண்டு கட்டக் கத்திகளை மேலே உயர்த்திப் பிடித்து, விழிகளை மிரட்டி.. திரை விலகும் அந்தக் கணப் பொழுதிற்குக் காத்துக்கொண்டிருக்க.. திரை அகற்றப்படுகிறது.

திரை கடல் உலகத்தில் வலுமிக்க வரம் பெற்ற

தீரன் கொலுவதாகினேன் மலையுகா சு+ரன் கொலுவதாகினேன்

என்று பெருங்குரலெடுத்துப் பாடி .. பெஞ்சிமீதுருந்து எகிறித் தரையில் குதித்து அசுர நட நடந்து .. புயலாய் கரகரவெனச் சுற்றி.. தீரன்.. கொலுவதாகினேன் .. மலையுகா சு+ரன் கொலுவதாகினேன்.. என்று பாட்டைப் பாடி முடித்துத் தன் கையில் வைத்திருக்கும் கட்டக் கத்தியால் ஓங்கி பெஞ்சி பலகையில் குத்துகிறார்.

ஆடிக்கொண்டிருப்பது எங்கப்பாவா என்ற சந்தேகத்தோடு விழியகலப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். புழுதி பறக்கும் அடவு.. பூமி அதரி நடக்கும் நடையில் காலில் கட்டியிருந்த சலங்கையின் ஒரு மணி அறுந்து தெறித்து வந்து என் மடியில் விழுகிறது. உடம்பு சிலிர்த்தது. உச்சி முடியப் புடிச்சிக் குலுக்கித் தூக்கி ஒக்கார வச்சமாரி ஓர் உணர்வு.

நெஞ்சுக்குழிக்குள் சுரந்த உணர்ச்சி அமிலங்கள் உடல் முழுவதும் பரவிக்கொண்டிருக்க..

அரக்கர்க்கும் அனைவருக்கும் சரிவுற்ற பலம் பெற்ற அரக்கன் கொலுவதாகினேன்

மலையுகா சூரன் கொலுவதாகினேன்… என்று சு+றக் காற்றாய் சுழன்று நின்று பாடும் மலையுகா சு+ரனின் குரல், நடுச்சாம இருளின் அடர்த்தியைக் கிழித்துக்கொண்டு சுற்று வட்டாரக் கிராமங்களின் தூக்கத்தைக் கலைக்கிறது.

ப்பா.. மொண்டாட்டிய ஓக்க… ஒர்த்தங் நிக்க முடியாதுடா எதிர.. ன்னா பாட்டு.. ன்னா ஆட்டங்.. சுத்தாடா அது… ஒரு பையங் சுத்த முடியாது.. சபையில் இருக்கும் ஊர்ப் பெரியவங்க பரவலாகப் பேசிக் கொண்டிருக்கும்போது… பக்கத்திலிருக்கும் அம்மா தூங்கிப்போன ரண்டு அக்காவையும் தட்டி எழுப்புறாங்க..

ஏந்துருங்கடி… ஏந்துருங்கடி… எங்கம்மா எழுப்ப, எழுப்ப.. எங்க அக்கா ரண்டு பேரும் தூங்கினே இருந்தாங்க.

எங்க பெரியக்காவ வேகமா அதட்டி எழுப்புனாங்க… ஏந்திரி உங்கப்பா பொண்ணு வேசம் ஆடனாதா பாப்பீங்க.. சூர வேசம் ஆடனா பாக்கமாட்டீங்களா.. என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே எங்க அக்காவ எழுப்பினாங்க..

எப்பாடி.. அப்பாதாண்டா சூரவேசங் ஆட்றது.. சூரவேசாடு.. சூரவேசாடுன்னு கேட்டுங்கடந்தியே இன்னிக்கு உனுக்காகதாண்டா ஆட்றாரு..

அம்மாவின் வார்த்தை திக் என்று என் ஈரக்கொலையைச் சூடாக்கியது. உடல் வெப்பமேறி காது மடலில் அனல் வீசியது. அசுர குலத் திலகனாகக் கொக்கரித்து, மலையுகா சு+ரனாகச் சபையை ஆர்ப்பரித்து, அலங்கரித்துக் கொண்டிருப்பது எங்கப்பன் தங்கவேல்தான் என்பதை… அம்மாவின் மூலமே அதை அறியும்போது … அம்மாவப் பற்றின மனக் கொழப்பம், அம்மாவிடமிருந்தே உடைபட்டு, மனமே காண முடியாத அகன்ற வெளியில் மறைந்து போகிறது.

உடல் விறைத்து முதுகுத் தண்டை நிமிர்த்தி விழியகல எங்கப்பனைப் பார்க்கிறேன்.. அவனி அம்பத்தாறு தேசத்து ராஜாக்களையும் அடக்கி ஆளக்கூடிய ஆயிரம் யானை பலம் பொருந்திய அசுரனாகவும் அஸ்த்தினாபுரி வேந்தன் துரியோதனின் படையும், இந்திரப்பிரசத்தை ஆண்டு வரும் பாண்டு புத்திரன் தர்மனின் படையும் சேர்ந்த பதினெட்டு அக்குரோனி சேனைகளையும் தனி ஒருவனாக நின்று எதிர்கொள்ளும் மாவீரன் மலையுகா சூரனாக ஓங்கார ஓலமிட்டு ஆடிக்கொண்டிருக்கிறார். காற்றுக்கூட நுழைய முடியாத அளவுக்குத் திரண்டு வந்த சபையோர்கள் மலைத்து, பிரமித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பத்து வருடத்திற்கு முன் ஆடிய சூர வேசத்தின் ஆட்ட அடவுகளை இன்று எனக்காக நிகழ்த்திக் காட்டுகிறார். கண்களில் நீர் முட்டித் தாரைதாரையாக வழிந்தோடுகிறது. முதன்முதலாகப் பெரும் ஆனந்தத்திலும் அழுகை வரும் என்பதை உணர்கிறேன்.

தலையில் கட்டி இருக்கும் கோழி மயிரு கிரீடம் அசைந்தாட, புஜக் கட்டையிலும், மார் பதாகையிலும் ஒட்டப்பட்டிருக்கும் கண்ணாடித் துண்டுகளிலிருந்து எழும் ஒளிக் கீற்று உடல் முழுவதும் பளபளவென மின்ன, சபையை விலக்கிக்கொண்டு கொலுதருவிலுருந்து நான் அமர்ந்து இருக்கும் இடத்தை நோக்கி வருகிறார். தன் மகனின் உணர்வுகளையும் ஆசைகளையும் புரிந்த அப்பனாக, மலையுகாசூரனாக..

என் எதிரே வந்து நிற்கிறார். நான் அண்ணாந்து பார்க்கிறேன். மனிதர்கள் யாரும் எட்ட முடியாத உயரத்தில் நிற்கிறார் எங்கப்பா. அவரைக் கீழே அமர்ந்துகொண்டு பார்க்கும் எனக்கு வானத்திலிருக்கும் நிலவை முட்டிக்கொண்டு நிற்பதாகத் தெரிகிறார். தலையிலிருக்கும் கிரீடத்தின் கோழி மயிர்கள் நிலவின் ஒளியை மறைக்கும் மேகத்தை அசைந்தாடித் துடைத்துக் கொண்டிருப்பது போலிருந்தது. மேகம் விலகி, நிலவு ஒளி மழையைப் பொழிந்துகொண்டிருக்க.. அம்மாவைப் பற்றின ஆழ்மனக் குழப்பங்கள் அழிந்து போகின்றன.

குனிந்து என்னைத் தூக்குகிறார். அவர் அணிந்திருக்கும் வேசத்தையும் தோற்றத்தையும் பார்த்து அச்சமுடன் பயப்படுகிறேன்.

என்னிடம் பேசும் இயல்பான மொழியில்.. டேய்.. அப்பாடா..

என்று என் அச்சம் அறுந்து விழப் பேசி, தூக்கி வாரி இறுக அணைத்து நிமிர்கிறார். மலையுகா சூரனின் நேத்ர கிரி மலையின் உச்சியில் அமர்ந்திருப்பதாக உணர்ந்தேன். கண்களில் கண்ணீர் வழிந்த தடத்தைத் துடைத்துவிட்டு, கீழே என்னை இறக்கி, களைந்து போன என் முடிகளைச் சரிசெய்துவிட்டு கொலுதருவை நோக்கி நடக்க.. மிருதங்கமும் தாளமும் இசை மூட்ட தடித்த கம்பீரக் குரலில் பாடுகிறார்…

அண்டங்கள் ரெண்டிலும் கண்டு நடுங்கிடும் வீரன்..

எண் திசையோர்களும் போற்றிப் புகழ்ந்திடும் சூரன்..

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!