மனித மனங்களையும் உறவுகளுக்குள் இருக்கும் சிக்கலைப் பற்றியும் நுட்பமாக விவரிக்கும் அல்லது மாற்றுப்பார்வையை முன்வைக்கும் இலக்கியங்களுக்கான ஆயுள் நூறு வருடத்திற்கும் மேல். சமகாலப் பதிவுகளைக் காட்டிலும் நமக்குப் பரிட்சயப்படாத கடந்த கால எழுத்துகள் ஆர்வமூட்டுபவையாக இருக்கின்றன. வரலாற்றின் மீது தணியாத மோகம் நமக்குள் எப்போதும் உண்டு, அக்காலத்திய மனிதர்கள், அவர்களது பண்பாடு, மொழி எனத் தகவல் திரட்டாகவும் அவ்வெழுத்துகள் இருப்பது முக்கியக் காரணமாக இருக்கலாம். சமகாலப் படைப்பாளிகளைப் பாராட்ட மனமில்லாமல் வரலாற்றுக்குள் புதைந்து போகிற போக்கும் இங்குண்டு. ஓர் எழுத்தாளனை அவரது காலத்திற்குப் பின் கொண்டாடும் வழக்கமும் அதன் பொருட்டே இருக்கலாம். மனிதனின் பொதுவான பண்புகளைத் தத்துவ விசாரணைக்குட்படுத்தும் படைப்புகளிலிருந்து விலகி இலக்கியத்தில் ஒரு நவீனம் உட்புகுந்தது. வட்டார அளவிலான மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்வது, அம்மண்ணின் வட்டார மொழி, சொலவடைகள், பண்பாடு உள்ளிட்டவையைப் பேசும் புதினங்கள் கவனம் பெறுவதுண்டு. ஒரு படைப்பின் சுவாரசியத்தைக் கூட்டவும் கதைக்களத்தைத் தனித்துவமாகப் படைக்கவும் மேற்சொன்ன அம்சங்களைக் கொண்டவையே தனித்த அடையாளத்தைப் பெறுகின்றன அல்லது பாராட்டப்படுகின்றன. உலகமயமாக்கலுக்குப் பின்னாலான நம் நவீன வாழ்க்கைச் சூழலில் சமகால வாழ்க்கை முறையிலிருந்து விவாதிக்கவும் ஆவணச்செய்யவும் எதுவுமே இல்லையா என்கிற கேள்வியிலிருந்து முக்கியவத்தும் பெறுகிறது சிவகாமி அவர்களின் குறுக்குவெட்டு நாவல். தொண்ணூறுகளின் இடையில் வெளியான இந்நாவல் இன்றைய சூழலையும் பிரதிபலிக்கக்கூடியதாக இருக்கிறது. சமூக ரீதியாகப் பெரிய மாற்றத்தையொன்றும் நாம் சந்தித்திடவில்லை என்பதும் காரணமாக இருக்கலாம்.
நடுத்தர வர்கத்தைச் சேர்ந்த சரோ, ரவி, குமார் என்னும் மூன்று கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட நாவல். தீர்மானகரமாக நாயகப் பிம்பத்தை யாரொருவரின் மீதும் சுமத்தாமலும் கதையை அதன் போக்கிலேயே எழுதியிருக்கிறார் சிவகாமி. கடந்த நூறாண்டுகளில் உலகம் சந்தித்த மாற்றங்கள் அசாத்தியமானது, உரையாடல்களின் வழியே நவீனச் சிந்தனை முறைகள் உருவாகியிருக்கிறது, சமூகம் தொடங்கி ஓர் குடும்பத்தின் தனி நபர் வரை அம்மாற்றம் சென்றடையும் போது உருவாகிற தடுமாற்றங்கள் பாலின வேறுபாடுகளைக் கடந்தது மறுப்பதற்கில்லை, அவை ஒரு பெண்ணுக்கு வந்து சேரும்போது உருவாகும் குழப்பம்தான் இந்நாவலின் மையச்சரடு. முற்போக்குச் சமூகத்தில் பெண் விடுதலைக்கான பிரகடனங்களைச் சமூக வெளியில் முன்வைக்கும் வரை இங்கு யாருக்கும் எந்தச் சிக்கலுமில்லை, குடும்ப அமைப்பில் அதன் சாத்தியங்கள் குறித்துப் பேச வேண்டும், இந்நாவல் அதைச் செய்திருக்கிறது.
தினசரி குடும்ப வாழ்வில் சுழற்சியாய் இயங்கும் பெண்ணுக்குள் உருவாகும் சோர்வை பல நிலைகளில் இந்நாவல் பேசுகிறது. அது குற்றச்சாட்டாகவோ புலம்பலாகவோ அல்லாமல் ஒரு பெண்ணின் உளவியலிலிருந்து அணுகுவதாகவே இருக்கிறது. இக்கதையில் சரோ எதிர்பார்ப்பது என்ன? அவளது பிரச்சனை என்ன? என்பதை ஒரு மனநல மருத்துவருக்கு முன்னால் போடப்பட்ட இருக்கையில் அமர்ந்து அவரது கேள்விக்குப் பதில் சொல்வதைப்போல சொல்லிவிட முடியாது. சங்கிலித் தொடர் போல அவை வாழ்வின் கூட்டு அனுபவங்களிலிருந்து நிகழ்பவை. சரோவிடம் பேசும் ஒரு பெண் “நம்ம அந்தஸ்து என்னாவது?“ என்று ஓரிடத்தில் சொல்லும் போது “சமூகம் பெண்ணுக்கு என்ன அந்தஸ்து கொடுத்திருக்கிறது?” என்று சரோ சொல்லும் ஒரு வாக்கியம்தான் குறுக்குவெட்டு நாவலின் மையம்.
எழுத்தாளர் தமிழ்ப்பிரபா எழுதிய பேட்டை நாவலில் ரூபனுக்கும் இவாஞ்சிலனுக்கும் நடக்கும் காதல் சம்பாஷணையில் இவாஞ்சலின் சொல்வாள், தனக்கென்று தான் மட்டுமே குளிக்க பிரத்யேகமாக ஓர் அருவி வேண்டுமென்று. வானம் கடல் மலை என வழக்கமாகச் சொல்லப்படுகின்ற பிரமாண்ட ஆசைகளிலிருந்து இவாஞ்சலின் அதைச் சொல்லவில்லை, ஒரு ஆணைப் போலச் சுதந்திரமாக அரை நிர்வாணமாகாவோ முக்கால் நிர்வாணமாகவோ ஆடைகளைத் துறந்து ஒரு பெண்ணால் இங்குள்ள அருவியில் குளித்து விட முடியாது, கேளிக்கைப் பூங்காக்களில் இருக்கும் நீச்சல் குளங்களில் பெண்கள் புடவையணிந்தும் சுடிதார் அணிந்தும் குளிப்பதைப் பார்த்திருப்போம், எத்தனை அசௌகரியம்? பல நேரம் துப்பட்டாவை சரி செய்தபடியே. இதற்கென்று பிரத்யேக உடைகளிருந்தும் அவற்றை நம் பெண்களால் துணிச்சலோடும் சௌகரியத்தோடும் உடுத்த முடிவதில்லை. ஆண் மைய சமூகத்தை ஆதரிப்பவர்கள் ஆண் / பெண் உடல் சார்ந்த மெய்யியல் காரணங்களைப் பதிலாக அடுக்கினாலும் ஒரு ஆணுக்குக் கிடைத்திருக்கும் கட்டற்ற சுதந்திரம் ஏன் பெண்ணுக்குக் கிடைப்பதில்லை என்பது அடிப்படைக் கேள்வி, தர்க்கத்தில் வெல்ல இதற்கொரு துல்லியமான பதிலைச் சொல்ல முயன்றாலும் அவை சமூக ஏற்றத் தாழ்வுகளை யதார்த்தமாக்கி அதையே நடைமுறையென்று நிறுவுமேயொழிய நேரிடையான பதிலென்று நம்மிடம் எதுவுமில்லை.
இந்நாவலில் சரோ குமாருடன் காதல் வயப்பட்டு அவனுடன் பயணப்படும் பகுதியில் அவளது எதிர்பார்ப்புகளை, அகக்குமுறல்களை விசரணைக்குட்படுத்துகிறார் சிவகாமி. மிதமான வெயில், வெப்பம், குளிர், வண்ண வண்ண பறவைகள், காடு, மலை, தாமரை அல்லிக்குளங்கள், பாசியற்ற கூழாங்கற்கள் என்று இப்பிரபஞ்ச வெளியில் வாழ்தலை இனியமையாக்குவதற்கான எல்லா அதிசயங்களும் இருந்தாலும் அவற்றிற்கும் பெண்ணுக்குமான உறவை இந்தச் சமூகம் துண்டித்து வைத்திருப்பதை சரோவினூடே சிவகாமி கேள்விக்குட்படுத்துகிறார். பூ மாதிரி மெத்தென்று விழும் நீரில் பிறந்தமேனியாக நீர்வீழ்ச்சியில் குளிக்க வேண்டுமென்கிற வாக்கியம் வரும்போது குறுவெட்டு நாவலின் சரோவையும் பேட்டை இவாஞ்சலினையும் என்னால் பொருத்திப் பார்க்க முடிந்தது. நாவலின் போக்குக்கிடையே சரோ என்கிற பெண் வழியே இச்சமூகத்தைக் குறுக்குவெட்டு விசாரணை செய்கிறார்.
சரோ – ரவி இணையரின் கூட்டுப்பிரச்சனை, இருவரின் தனித் தனியான பிரச்சனை, குமார் அவர்தம் குடும்பச் சூழல் என்று நகரும் இக்கதை நான் மேலே குறிப்பிட்டதைப் போல யாரையும் குற்றவாளிக் கூண்டில் அடைக்கவில்லை. நம் தவறுகளிலிருந்தோ அல்லது சமூகம் கொடுக்கும் அழுத்தத்திலிருந்தோ என்று வாழ்வின் இடறல்கள் எதன் பொருட்டு வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும், அது இடறலா இல்லையா என்பதும் இங்கு விவாதமில்லை, இதையெல்லாம் உள்ளடக்கியதுதான் வாழ்க்கை. இதில் ஒரு சூழலிலிருந்து விடுபட்டுத் தற்காலிகமான ஒரு மன அமைதியைத் தேடிப் போகும்போது கூட ஒரு ஆணுக்கு இங்கிருக்கும் வாய்ப்புகள் பெண்ணுக்கு இருப்பதில்லை. நகரத்தின் இயந்திரக் கண்களிலிருந்து தப்பி முன் பின் தெரியாத கிராமங்களினூடே நடந்து போகும்போது கூட சரோவையும் குமாரையும் ஒரு கணம் பார்த்துவிட்டுப் போகும் கண்கள் இருக்கின்றன. தன்னைத் துருவிக்கொண்டே இருக்கும் சமூகத்திலிருந்து விடுபட்டுத் தன் போக்கில் ஓடும் ஓடையைக் கடந்து போவதைப் போல இந்தச் சமூகத்தை எது தடுக்கிறது? “ஒரு பெண்ணையும் ஆணையும் சதா பார்த்தபடியே கடக்கும் மனிதர்கள் சமூக ஒப்பந்தங்களின் மூலம் எத்தனை இறுகிப் போனவர்களாக இருக்கின்றனர்” என்கிற சிவகாமி அவர்களின் வரி அதற்கான பதில்.
உணர்வுக்கும் அறிவுக்குமிடையே நடக்கும் போராட்டமாகப் பெண்ணின் மொழியில் புனையப்பட்டுள்ள இந்நாவல் தமிழ்ச் சூழலில் மிக முக்கியமான பிரதி. தன் ஆதங்கத்தையும் லட்சியவாதத்தையும் கதாபாத்திரங்கள் மீது திணிக்காமல் கதைப்போக்கை அதன் மொழியிலேயே விட்டிருக்கிறார். மறைபொருளாக லட்சியவாதக் கதையாடல்கள் செயற்கையானது என்பதல்ல என் வாதம், தீர்வை முன்வைக்காமல், அபிலாஷைகளைப் புகுத்தாமல் அதை வாசகர்களிடம் கையளித்திருக்கிறார், அதுவே என்னை எழுதத் தூண்டியிருக்கிறது. தீர்ப்பளிக்கப்படாத ‘குறுக்குவெட்டு‘ விசாரணையில் குற்றவாளி, வழக்கறிஞர், பார்வையாளர்கள், நீதிபதி என அனைவருமே நீங்களும் நானும்தான், இதைத்தான் இந்நாவல் நிகழ்த்தியிருக்கிறது. ஆண் பெண் குடும்பச் சிக்கல் மற்றும் பாலின வேறுபாடுகளைக் குறித்து உளவியல் ரீதியான உரையாடலை முன்வைக்கும் நாவல் என்கிற அடிப்படையில் குறுக்குவெட்டு தமிழ்ச் சூழலில் முதல் நாவல்.
பழையன கழிதல், ஆனந்தாயி உள்ளிட்ட தமிழின் மிக முக்கியமான படைப்புகளை இயற்றிய சிவகாமி அவர்களின் இந்நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுப் பன்னாட்டுப் பல்கலைக்கழகங்களின் ஆய்வுப் பாடத்திட்டங்களில் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறுக்குவெட்டு
எழுத்தாளர்: சிவகாமி
விலை: ரூ.170
அணங்கு பதிப்பகம்