ஆரவாரம் இல்லாத கலக எழுத்து : இதயவேந்தன் சிறுகதைகள்

முனைவர் மு.ரமேஷ்

ருபதாண்டுகளுக்கு முன்னால் மயிலம் தமிழ்க் கல்லூரியில் மாணவனாக இருந்தபோது மாதந்தோறும் விழுப்புரத்தில் நடக்கும் அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம் கவியரங்கத்திற்குக் கல்லூரி நண்பர்களோடு சென்று கவிதை வாசித்திருக்கிறேன். அதனால் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பல கவிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரைச் சந்திக்கின்ற வாய்ப்புக் கிடைத்தது. இப்படியாகத்தான் தலித் கலையிலக்கியத்திற்குப் பெரும் பங்களிப்பைச் செய்துகொண்டிருக்கிற, செய்த கவிஞர், எழுத்தாளர் அன்பாதவன், விழி.பா.இதயவேந்தன் உள்ளிட்டோருடைய நட்பு கிடைத்தது.

‘நந்தனார் தெரு’, ‘வதைபடும் வாழ்வு’, ‘தாய்மண்’, ‘சிநேகிதன்’, ‘உயிரிழை’, ‘அம்மாவின் நிழல்’, ‘இருள் தீ’, ‘சகடை’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகள், ‘ஏஞ்சலின் மூன்று நண்பர்கள்’ என்ற குறுநாவல், ‘தலித் அழகியல்’, ‘தலித் கலை இலக்கியம்’ என்ற கட்டுரைத் தொகுப்பு, இவற்றோடு ‘கனவுகள் விரியும்’ எனும் கவிதைத் தொகுப்பையும் கொண்டுவந்தவர் இதயவேந்தன்.

2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதக் கவியரங்கில் கலந்துகொண்டபோது தன்னுடைய ‘தலித் அழகியல்’ நூலை விழி.பா.இதயவேந்தன் எங்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார். கல்வியாளருக்குரிய புலமையும் களப்பணியாளருக்குரிய அனுபவத் தெளிவும் ஆய்வாளருக்குரிய நேர்த்தியும் சிந்தனையாளருக்குரிய அக்கறையும் இந்நூலில் இருப்பதனை வாசித்து அறிந்துகொண்டேன். அதன்பிறகு அவருடைய ‘நந்தனார் தெரு’ சிறுகதையையும் வாசித்தேன். 2022 நவம்பர் 7 அன்று விழி.பா.இதயவேந்தன் காலமாகிவிட்டார் என்பதையறிந்த தவிப்பில் அவருடைய நூல்களை மீண்டும் வாசித்து நினைவுகளை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளலாம் என்று தேடியபோது இவ்விரு நூல்களும் எனது சேகரத்திலிருந்து காணாமல் போயிருப்பதனை அறிந்து அதிர்ச்சியுற்றேன். கவிஞரும் எழுத்தாளருமான அன்பாதவன், விழி.பா. அவர்களுக்குக் கட்டுரை வேண்டும் என்று தகவல் அனுப்பியபோது என்ன செய்வதென்று தெரியவில்லை. சில நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று அவரிடம் ஒத்துக்கொண்டேன். பிறகு, ‘கனவுகள் விரியும் வாழ்வு’ என்கிற கவிதையாவது இருக்கும் என்று தேடினேன் அதுவும் கிட்டவில்லை. கருப்புப் பிரதிகள் பதிப்பகத்தில் ‘நந்தனார் தெரு’ சிறுகதைத் தொகுப்பு கிடைக்கிறது என்பதை அன்பாதவன் மூலமாக அறிந்து, வாங்கி வாசித்துவிட்டு இக்கட்டுரையை எழுதுகிறேன்.

இதயவேந்தன் மரணம் குறித்து தினமணி உள்ளிட்ட ஊடகங்களில் செய்திகள் வந்திருந்தன. ஆனால், அவர் வாழும் காலத்தில் அவருடைய எழுத்துக் குறித்து யாராவது கவனப்படுத்தியுள்ளனரா என்று இணையப் பக்கங்களைத் தேடியபோது கவிஞரும் எழுத்தாளருமான புதிய மாதவி, இதயவேந்தனுடைய கவிதைக் குறித்து அறிமுகம் செய்திருந்தார். இது கீற்றில் வாசிக்கக் கிடைத்தது. இந்தப் பாராமுகமான போக்குதான் இதயவேந்தன் குறித்து எழுத வேண்டும் என்கிற உந்துதலை அளித்தது.

தமிழ்ச் சூழலில் தலித்திலக்கியம் அறிமுகமாகி முப்பதாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. கலக இலக்கியம், எதிரிலக்கியம், மாற்றிலக்கியம் என்றுதான் தலித்திலக்கியம் முன்னுக்கு வந்தது.

மூன்றாம் உலக இலக்கியம், விளிம்புநிலை இலக்கியம் என்ற வகைப்பாட்டிற்குள் வருவது தலித்திலக்கியம் என்றும் இவற்றிலிருந்து வேறுபட்டது, இவற்றிற்கு இணையானது, சிறப்புத் தன்மை கொண்டது என்றெல்லாம் பேசியும் எழுதியும் தலித்திலக்கியச் செயல்பாடுகள் தொடர்கின்றன. விளிம்புநிலை இலக்கியம் அல்லது விளிம்புநிலை வாழ்வு என்பது பொருளாதார ஏற்றத்தாழ்வை அடிப்படையாகக் கொண்டது. மூன்றாம் உலகம் என்கிற கருத்து கறுப்பர் நில வாழ்வை அடிப்படையாகக் கொண்டது. கறுப்பர்களுக்கென்று நிலம் இருக்கிறது. பொருளாதார வசதியோ நிலமோ ஏதுமில்லாதவர்கள் தலித்துகள் என்பது மட்டுமல்ல, சாதியென்பது ஒரு கருத்தல்ல அது மனநோய் என்று புரட்சியாளர் அம்பேத்கர் விளக்கிக் காட்டுகிறார்.

இந்த உளவியல் சார்ந்த கருத்தியல் போராட்டத்தை நிகழ்த்தும் ஓர் இலக்கிய வகைமையாகத் தலித்திலக்கியத்தைக் கொள்ளமுடியும். தலித் – தலித்திலக்கியம் என்பது குறிப்பிட்ட சாதிக்கானதல்ல. அது அனைத்து வருண பாகுபாடுகளையும், வருண அடிப்படையிலான சாதிய அடுக்குகளையும் எதிர்க்கும் கருத்தியல் வகைமையாகும். உண்மையில் இத்தகைய புரிதலோடு தமிழில் தலித்திலக்கியம் வளர்ந்ததா என்றால் ஐயம்தான். தனிமனித புலம்பல், தன்னிரக்கம், அடையாளங்களை முன்னிலைப்படுத்துதல், மிதமிஞ்சிய கொண்டாட்டங்களை முன்னிலையாக்குதல், உடனடி புரட்சி போல புனைதல், ஒழுக்கம் கல்வி, இலட்சியம், அமைப்பு இவற்றிற்கு எதிரான கலகக்காரர்களாக நிகழ்ச்சிகளையும் கதை மாந்தர்களையும் கட்டுதல் என்பதாகத்தான் பெரும்பாலான தலித்திலக்கியங்கள் அமைந்துள்ளன. இத்தகைய போக்கிலிருந்து முற்றாக விலகி நிதானமும் சகிப்புத்தன்மையும் கூடிய ஜனநாயகப் பண்போடு இயங்கக் கூடியது விழி.பா.இதயவேந்தனின் எழுத்துலகம் என்பதற்குச் சான்றாக ‘நந்தனார் தெரு’ தொகுப்பு அமைந்துள்ளது.

‘நந்தனார் தெரு’ கதையின் மூலமாகத்தான் விழி.பா. ஆகச்சிறந்த தலித் கதைசொல்லியாக அறியவந்தார். அவரது இலக்கிய ஆகிருதி, கருத்தியல் அரசியலைப் புரிந்துகொள்வதற்குத் தலித் என்கிற சொல்லாடல் குறித்து அவருடைய கருத்து எத்தகையது என்பதை விளங்கிக்கொள்வது முக்கியம். அதனால் முதலில் தலித் என்பதன் ஆரம்பகால விவாதம் யாது? அப்புல அமைப்பின் அக்கால அரசியல் முக்கியத்துவம் என்ன? இப்போதும் அதே அரசியல் பொருளில்தான் தலித் என்கிற சொல்லாடல் தொடர்கிறதா, தொடர வேண்டுமா என்பதான ஓர்மையை விளங்கிக்கொள்வதற்கான வரலாற்றுத் தேவை இன்று உருவாக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறேன்.

தலித்தியமும் சாதியமும் எதிர்காலத்தை நோக்கி

இன்று தலித் என்பது வருணத்திற்குப் புறமாக நிறுத்தப்பட்டுள்ள அவர்ணரான பஞ்சமரைச் சுட்டக் கூடியதாக இருக்கிறது. வருணத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ள மக்களுக்கும் அடுக்குமுறையிலான சாதியக் கருத்தாக்கம், அதன் உள்ளார்ந்த உளவியல் ஆகியவை மிகவும் நேர்த்தியான வாழ்முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. என்றாலும் சாதிய நடைமுறையால் தீண்டாமைக்கு உட்பட்டு மிகவும் கடுமையாகப் பாதிப்புக்குள்ளானவர் என்கிற முறையில் சாதியொழிப்புக் களத்திற்குள் தங்களை ஒப்படைத்துக்கொண்டோர் தலித்துகளாவர். வெட்டியார்கள், பறையர், அருந்ததியர், தேவேந்திரர் போன்ற சேவைத் தொழிலில் ஈடுபடும் மக்கள் தொகுதியைக் குறிப்பதாக இருக்கிறது. இங்குள்ள அனைத்து மக்கள்தொகுப்பும் ஒன்றுசேர முடியாதவாறு, அண்ணல் அம்பேத்கர் சொல்வதைப்போல படிக்கட்டோ, லிஃப்ட்டோ இல்லாத அடுக்குமாடிகளாகச் சாதியக் கருத்தியல் கட்டமைக்கப்பட்டுள்ளது. தலித் சிந்தனையாளர்களும் அரசியல் தலைவர்களும் சாதி ஒழிப்புக் குறித்துப் பேசினால் முதலில் தலித்துகளிடம் உள்ள சாதிய அடுக்கைக் களையுங்கள் என்று சொல்கின்றனர். குறைந்தது சாதியம் என்பது அனைவருக்குமான பொதுப் பிரச்சினையென்றுகூட இங்கு புரிந்துகொள்ள யாருமே தயாராக இல்லை. இத்தகைய நிலையில் விழி.பா.வின் எழுத்து நினைவுகூரத்தக்கதாக இருக்கிறது.

இவருடைய செயல், ஏனைய தலித்தெழுத்தாளுமைகளைப் போல, வி.பி.சிங் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட புரட்சியாளர் அம்பேத்கரின் நூற்றாண்டோடு ஏற்பட்ட தலித்திய எழுச்சியுடன் தொடர்புடையது. இங்கு நான் எழுப்ப விரும்பும் ஒரு வினா, பறையர் முதல் பார்ப்பனர் வரையில் கடுமையான சாதிய மனநிலை இருக்க, தாழ்த்தப்பட்டோரை மட்டும் குறிக்க தலித்தென்ற சொல் பயன்பட வேண்டுமா? தாழ்த்தப்பட்டோரைக் குறிக்க பஞ்சமர், அவர்ணர், ஆதிதிராவிடர், தீண்டத்தகாதோர், ஹரிஜன் என்று பல பெயர்கள் இருக்க புரட்சியாளர் அம்பேத்கர், மஹாத்மா பூலே உள்ளிட்டோர் பாதிப்புக்குள்ளான மக்கள்தொகுப்பைத் தலித் என்று சுட்டுகின்றனர். அப்படியானால் தலித் என்கிற சொல்லின் பொருள்தான் யாது? இது மிகப் பழையக் கேள்வியென்றாலும் நமது கருத்தியல் சார்ந்த தெளிவினைத் திடப்படுத்திகொள்வதற்காகக் கேட்க வேண்டியிருக்கிறது.

தலித் சொற்பொருள் விளக்கம்

 ‘தலித்’ என்ற மராத்திச் சொல்லுக்கு ‘உடைந்து போனவர்கள்’ என்று பொருள். எழுபதுகளில் மராட்டியத்தில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களும், இந்திய வரலாற்றில் சாதி முறையில் ஒடுக்கப்பட்ட இனங்களைச் சேர்ந்த மக்களில் சிலரும், தங்களைத் தலித் என்று அழைத்துக்கொள்ளத் தொடங்கினர். பின்னர், இந்தப் பெயர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிலைத்துவிட்டது என்று பிரிட்டானிக்கா கலைக் களஞ்சியம் கூறுகிறது. தலித் என்பவர் யார் என்ற கேள்விக்குக் கெய்ல் ஓம்வெத், ‘தாழ்த்தப்பட்டவர்கள், மலைவாழ் மக்கள், புதிய பௌத்தர்கள், உழைக்கும் மக்கள், நிலமற்றவர்கள், ஏழை விவசாயிகள், பெண்கள், அரசியல் ரீதியாகவும் மதத்தின் பெயராலும் பொருளாதார ரீதியாகவும் சுரண்டப்படும் அனைவருமே தலித்துகள்தாம்’ என்கிறார் (‘தலித்தியம்’, பக்.138, காவ்யா, 1996).

ஒடுக்கப்பட்டவர், நொறுக்கப்பட்டவர், பள்ளத்தில் வாழ விதிக்கப்பட்டவர் என்றெல்லாம் பொருள் தரும் இச்சொல், இன்று தலித்துகளினுடைய வேதனையின் குரலாகவும், எதிர்ப்பின் குறியீடாகவும் விளங்குகிறது.

சாதியைக் குறிக்கிற ஒன்றாக ‘தலித்’ என்கிற சொல்லைச் சுருக்கிவிடக்கூடாது. தலித் என்பது சுரண்டல், கொடுமை, அக்கிரமங்களை எதிர்க்கிற குறியீடாக மலர வேண்டும். அவமானம், பாதுகாப்பின்மை, எதிர்ப்பு ஆகிய பொருள்களைத் ‘தலித்’ என்ற சொல் தர வேண்டும் (சித்தலிங்கையா நேர்காணல், நிறப்பிரிகை) என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. இவர்கள், இந்து வர்ண, தத்துவ, சமய நோக்கில் ஒடுக்கப்பட்டவர்களாகவும், தீண்டத்தகாதவர்களாகவும், பொருளாதாரத்தில் தாழ்த்தப்பட்டும், அரசியல் அதிகார வலுவற்றவர்களாகவும், சமூகப் பண்பாட்டு நிலையில் மற்ற சமூகத்தால் வேறுபடுத்தப்பட்டவர்களாகவும் ஆக்கப்பட்டுள்ளனர். அப்படி ஆக்கப்படுகிற ஒவ்வொரு சாதியையும் தலித் என்றே அழைத்துவந்தனர். இவர்கள், தொடர்ச்சியான எதிர்ப்புப் போராட்டங்கள் ஊடாக நியாயமான வாய்ப்புகளைப் பெற, முன்னேற முயன்றுகொண்டிருக்கின்றார்கள்.

தலித் என்ற சொல் ‘தல்’ என்ற எபிரேய மூலச்சொல்லிலிருந்து பிறந்தது. பைபிளை இந்தியில் மொழியாக்கம் செய்தபோது எடுத்தாளப்பட்ட சொல். தமிழ் பைபிளில் இதை ‘ஏழைகள்’ என்றே மொழியாக்கம் செய்துள்ளனர். “தமிழகத்தில் திராவிட இயக்கங்களும் பொதுவுடைமை இயக்கங்களும் உருவான நேரத்தில் தென்னிந்தியாவில் வாழ்ந்த பண்டைய திராவிட இனத்தினரைக் குறிக்கும் பஞ்சமர் என்ற சொல் தலித் மக்களிடையே மிகவும் இழிவாகக் கருதப்பட்ட நேரத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர், அட்டவணை இனத்தவர் என்றும், ஆந்திராவில் ஆதி ஆந்திரர் என்றும், கர்நாடகாவில் ஆதி கர்நாடகர் என்றும், தமிழகத்தில் ஆதிதிராவிடர் என்றும் வழங்கலாயிற்று” (விழி.பா.இதயவேந்தன், 2009 : 10).

தலித் என்ற சொல் நொறுக்கப்பட்டோர், துயருற்றோர், பள்ளத்திலுள்ளோர் என்கிற பொருளில் பாதிக்கப்பட்ட அனைவரையும் குறிக்கும் பொதுச்சுட்டாக இருந்தாலும், ஒடுக்கப்பட்ட மக்களை மட்டும் குறிப்பதாக இன்றும் தொடர்கிறது. இந்தப் புரிதலை உருவாக்குவதன் மூலமே ஒடுக்கப்பட்டோர் அனைவரும் ஒரு கருத்தியல் அமைப்பாக மாற முடியும். அப்படி மாறுவதன் மூலமே விடுதலையை நோக்கி நகர முடியும் என்பதற்காகத்தான் வி.சி.க. தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் பார்ப்பனர் முதலாக அனைவரிடமும் உள்ள சாதிய நடைமுறையை வெளிப்படையாகப் பேசிவருகிறார். இதனையும் சேர்த்து விளங்கிக்கொள்வதற்காக இப்பழைய விவாதம் விழி.பா.வின் கருத்தோடும் நினைவுகூரப்பட்டுள்ளது.

Illustration : Negizhan

தலித்தியமும் விழி.பா.வும்

தமிழகத்தில் தலித் அரசியல் 1986இல் நடந்த சாதி ஒழிப்பு மாநாட்டின் மூலம் தீவிரம் பெற்றது. பாரதிய தலித் பேந்தர்கள் இயக்கம் நடத்திய இம்மாநாட்டில் ‘தலித் விடுதலை’ என்ற மாத இதழும் வெளியிடப்பட்டது. 1990களில் பரவலாக இருந்த பஞ்சமன், சண்டாளன், ஹரிஜன், ஆதிதிராவிடன் என்ற பெயர்களைப் புறக்கணித்துவிட்டு ‘தலித்’ என்ற அடையாளத்தை ஏற்றுக்கொண்டனர். நடுத்தர வர்க்கத் தலித்துகள் தலித் அரசியல் அறிக்கையினையும் தயாரித்தனர். தலித் விடுதலைக்காகப் போராடும் போராளிகள் ‘தலித்’ என்ற பெயரினைப் பிறர் உச்சரிக்கும்படிச் செய்தனர். தலித்திய இயக்கத்தின் செயற்பாடுகள்:

  1. சாதியம் என்பது பார்ப்பனியத்தை மையமிட்ட உயர்சாதியினரின் ஏவல் வினை. அது, இந்துத்துவம் என்ற அடிப்படை மதவாதத்தோடு பிணைந்து கிடக்கிறது என்பதனைக் கொண்டு அதனை மறுதலிப்பதும், மாற்றுத் தேடுவதும் தலித்தியத்தின் முதன்மையான செயற்பாடாக இருக்கிறது.
  2. பண்பாட்டு அரசியலின் முக்கிய நிகழ்வாகிய தலித்தியம் ‘ஒடுக்கப்பட்ட மக்கள்’ என்னும் விரிப்பை உட்கிடையாகக் கொண்டிருந்தாலும் ‘தாழ்த்தப்பட்ட மக்கள்’ என்னும் வரையறையை முன்னெடுக்கிறது. இதன்மூலம் போராடுகிற குணம், கூர்மையான விவாதம் என்பதை முன்னெடுக்கிறது.
  3. தலித் (நாடக, இசை) அரங்கம், தலித் இலக்கியம், தலித் அரசியல் / சமூக எழுச்சிச் செயல்பாடுகளென்ற முனைகளில் தலித்தியம் வெளிப்படுகிறது.
  4. தலித் பெண் மீதான வன்முறை, பொருளாதார – சமூக வன்மங்களை அடிப்படையாகக் கொண்டது. காவல்துறை, நீதிபரிபாலனம் முதலிய அரசு நிறுவனங்களால் உதாசீனப்படுத்தப்படுவது; அதுமட்டுமல்ல, அவர்களால் மறைமுகமாக ஆதரிக்கப்படுவதாகும். தலித்தியம் இத்தகையதொரு சூழலை எதிர்கொள்கிறது.
  5. அடைப்பட்ட நிறுவனங்களைத் திறக்கிறது. கல்வி, வேலைவாய்ப்பு, சுயமரியாதை, ஒதுக்கீடு, மனித உரிமை போன்றவற்றில் விழிப்புணர்ச்சியை உண்டாக்குகிறது.
  6. வாக்கு வங்கிகள் என்று பரிகசிக்கப்படும் தலித்திய அரசியல் கட்சிகள், தங்களைத் தமிழ்ப் பண்பாட்டின் ஆணிவேர்கள் என்பதை நிரூபிப்பதைச் செயற்களமாகக் கொள்வது.
  7. “தலித் இலக்கியம் என்பது ஒரு குறிப்பிட்ட சாதியின் அடையாளமாய்க் குறுகிப் போகாமல் பரந்துபட்ட, ஒடுக்கப்படும் எல்லாத் தேசிய இன மக்களின் குரலாகவும் ஒலிக்க வேண்டும். தலித் படைப்புகள் என்பது ஏதோ ஏழ்மையை, வறுமையைச் சித்திரிக்கிற படைப்பாக மட்டுமே உள்ள பார்வை அகல வேண்டும். அடிமை வாழ்வைச் சித்திரிப்பதோடல்லாமல் அதன் விலங்குகளை நொறுக்குகிற முற்போக்கான அம்சமாக அதன் போக்கு அமைய வேண்டும்.” (இதயவேந்தன் விழி.பா., 2009, ‘தலித் எனும் கலகக்குரல்’, ருத்ரா பதிப்பகம், தஞ்சாவூர்).

இந்தியாவின் மாற்றரசியல் நந்தனார்

நந்தனார் என்கிற பெயர் தலித் விடுதலை அரசியலின் குறியீடாகப் பழங்காலம்தொட்டு இந்தியத் துணைக் கண்டத்தில் புழக்கத்தில் இருக்கிறது. இதன் தொடர்ச்சியாகத்தான் விழி.பா. இக்கதைக்கு அப்பெயரைச் சூட்டியுள்ளார். பராமரிக்கப்படாத கழிப்பறை, குடிநீர்த் தொட்டி இவற்றிற்காக வாழ்க்கையைப் பணயம் வைத்து அரசு நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கும் மக்கள், அவ்வப்போது அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் வந்து வந்து பார்வையிட்டுப் போவதை நூதன கலகத்தினால் தடுக்கும் இக்கதைக்கு அப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. நகராட்சி அலுவலகம், கழிப்பறைவாசல் யாவற்றிலும் அம்மக்கள் மலம் கழித்ததினால்தான் அதிகாரிகளும் மந்திரிகளும் பத்திரிகைகளும் இத்தீவிரத்தை உணர்ந்துகொண்டு தீர்வை ஏற்படுத்தினார்கள். தீர்வு ஏற்பட காரணமாக அமைக்கப்பட்ட காட்சியைத்தான் நூதன கலகம் என்கிறேன். ஏகாதிபத்தியத்திற்கு, சனாதனத்திற்கு, வைதீகத்திற்கு மாற்றான வரலாற்றுக் கருத்தாடலாகப் பாடலிபுரத்தில் கோலோச்சிய நந்தர்கள், மாற்றுவரலாற்றுப் புனைவுவெளிக்குள் ஊடாடுவதைக் காண முடிகிறது. அஸுவகோஷ் எழுதிய சவுந்திரியானந்தம் முதல் பெரியபுராணத்தில் வரும் திருநாளைப் போவார் என்பது பிற்காலத்தில் கோபாலகிருஷ்ண பாரதியின் ‘நந்தனார் சரித்திர கீர்த்தனை’யாக வடிவம் பெற்று நவீன புனைவு வெளியில் ‘புதிய நந்தன்’ என்னும் பெயரில் முதல்முதலாக புதுமைப்பித்தன் சிறுகதையெழுதினார். தலித்துகள் தங்களுடைய விடுதலைக்கான போராட்டத்தை நடத்துவதைவிட பிறருக்கு அடியாளாக இருப்பதைப் பெருமையாக நினைத்து இயங்குகிறார்கள் என்கிற நுட்பமான தலித் உளவியலை புதுமைப்பித்தன் முன்வைக்கிறார்.         

இதனை மிகமுக்கிய அவதானிப்பாகக் கருதலாம். இன்றும்கூட பெரும்பாலான தலித் இயக்கங்கள் இக்கருத்தியல் அடிப்படையில்தான் இயங்குகின்றனர் என்பதையும் மறுப்பதற்கில்லை. அண்மையில் எழுத்தாளர் பிரேம் எழுதிய ‘நந்தன் நடந்த நான்காம் பாதை’ என்கிற சிறுகதையை வாசித்தேன். சைவ வேதாந்தம் நந்தனைத் தீயிலிட்டு அழித்தாலும் இசையென்கிற நான்காம் பாதை வழி தலித் அல்லது மாற்று மரபின் பிரதிநிதியாக வரலாற்றுக்குள் உட்புகுவதை அக்கதை மிகச் சிறப்பாகப் பதிவுசெய்கிறது. இது தவிர நந்தன் தொடர்பான ஆய்வுகளை பண்டிதர் அயோத்திதாஸர் உள்ளிட்ட பலரும் செய்துள்ளனர். இது சிறுகதைக் குறித்த கட்டுரை என்பதால் இங்கு ஆய்வுகுறித்த குறிப்புகள் தவிர்க்கப்படுகிறது. ஆனால், தலித்துகள் தங்களுடைய விடுதலை கோரிக்கைகளைத் தாங்களாகவே அணிதிரண்டு போராடிப் பெறுவர் என்கிற நம்பிக்கையோடு ‘நந்தனார் தெரு’ கதையைப் புனைந்துள்ளார் விழி.பா.

நூலமைப்பு

கருப்புப் பிரதிகள் பதிப்பகத்தின் வழியாக வந்திருக்கும் இத்தொகுப்பு இருபது சிறுகதைகளைக் கொண்டிருக்கிறது. துணி வெளுப்போர், தூய்மைப் பணியாளர்கள், பிணந்தூக்குவோர், பறையடிப்போர், செருப்புத் தைப்போர் இவர்கள்தாம் இவ்வனைத்துக் கதைகளுக்குள்ளும் வருகின்றனர்.

அறியாமை, அன்பு, இல்லாமை, இயலாமை, கோபம், தாபம், தாகம், தியாகம், துயரம் துணிவு, வம்பு, கலவரம், கலகம், காவல்துறை உள்ளிட்ட அதிகாரப் பிடியில் சிக்கி உழலுதல் இவற்றை வாழ்வியலாகக் கொண்ட மிக எளிய மனிதர்களின் கதைத் தொகுப்பு ‘நந்தனார் தெரு’.

ஆசை – மீன்குழம்பு சாப்பிடும் ஆசை

துணிவெளுக்கும் தொழிலாளர் கற்பகம், முனுசாமி ஆகியோர்க்கு சுந்தரம், வள்ளி என இரு குழந்தைகள். அவர்களுக்கு மீன் குழம்பு ஆசை நிறைவேறுவதில்லை என்கிற உண்மையை எதார்த்தமாக விழி.பா. எடுத்துரைக்கிறார். கட்டியிருந்த பாவாடையைக் கொண்டு அடுப்பிலிருந்து மீன் குழம்பைச் சிறுமி வள்ளி எடுக்கும்போது, சூடு தாங்காமல் குழம்புச் சட்டியைக் கீழேவிட்டுவிட சட்டி உடைந்துவிடுகிறது. ஆசை நிராசையாகப் போய்விடுகிறது என இக்கதை இரக்கத்தையும் ஆற்றாமையையும் உண்டாக்குகிறது. தலித்துகள் என்றில்லை, எச்சாதியைச் சார்ந்தோராக இருந்தாலும் வள்ளியென்கிற சிறுமியின் அறியாமை என்றுதான் என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. அறியாமையை அப்படியே காட்டுவது கலையென்றால், பிறகு கலையின் பணிதான் யாது என்கிற கேள்வியும் ஒட்டுச் செடியாக வந்துவிடுகிறது.

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் இவற்றில் எதுவுமில்லாத குடிநிலைப் பெறாத அடிநிலைச் சமூகத்தைக் காவல்துறை தங்களுடைய வன்ம வலையத்திற்குள் நிறுத்தி எவ்வாறு கொடுமைப்படுத்துகிறது என்பதனை இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கதைகள் விவரிக்கின்றன.

காவல்துறையும் அடிநிலைச் சமூகமும்

‘நந்தனார் தெரு’, ‘நிறங்கள்’, ‘அவனும் அழுகியப் பிணமும்’, ‘சிதறல்கள்’, ‘முள்ளோடை’, ‘இருள் தீ’, ‘முள்’, ‘பறச்சித்தலைவி’ உள்ளிட்ட கதைகள் அடிநிலைச் சமூகங்களைக் காவல்துறை நடத்திய முறையை விவரிக்கின்றன.

‘நந்தனார் தெரு’ – சுத்தமின்மை, கழிப்பறையில்லாமை, அதற்காக மனு போடுதல், கொலை வழக்குகளைச் சுமத்தல், பஞ்சாயத்து நடத்தித் தொகை பெறுதல், மலக்கழிவுகளும் உணவு கடைகளும் அருகருகே இருத்தல் ஆகிய அம்சங்கள் இக்கதையில் கவனிக்கத்தக்கவை. இதில் கொலை வழக்கு சுமத்தி அடிநிலை மக்களைத் துன்புறுத்துவது காவல்துறைக்கு வாடிக்கையான ஒன்று. இவ்வாறாக அடிநிலைச் சமூகங்கள்மீது காவல்துறை செலுத்தும் வன்முறைகளைப் பலவாறு படம்பிடித்துக் காட்டுவதை விழி.பா.வின் கதைகளில் வாசிக்க முடிகிறது.

‘நிறங்கள்’ – தற்கொலைக்கு முயன்ற சுப்புலட்சுமியைக் காப்பாற்றிய ரிக்ஷாக்காரன் நரிவேலு காவல்துறையிடம் சிக்கி சின்னாபின்னமாகும் கதை. ஆளுக்கேற்ப காவலர்களின் செயல்கள் தொடர்வதை நிறங்கள் என்று விழி.பா. சுட்டுகிறார்.

முள்ளோடை – பட்டா இல்லாத முள்ளோடை

குடியிருக்க வீடற்ற மக்கள் ஊருக்கும் நகரத்திற்கும் ஒதுக்குப்புறமாக இருக்கும் இடங்களில் குடியேறுவது வாடிக்கை. அப்படித்தான் முட்களும் செடிகளும் புதர்களும் படர்ந்துள்ள இடத்தில் குடிசைபோட்டுத் தங்கினர். சிலகாலம் கழித்து அக்குடிசைகளை வீடாகக் கருதி வரிகளை வசூலிக்கின்றனர் நகராட்சி அதிகாரிகள். ஆனால், ஆட்சி மாறுகிறபோது காவல்துறையினரும் நகராட்சியதிகாரிகளும் அவர்களை அடித்துவிரட்டுகின்றனர். அதுவும் குறிப்பாக, பட்டா கேட்டால் போதும், இல்லாத பழிகளையெல்லாம் அம்மக்கள்மீது சுமத்தி அலைக்கழிக்கின்றன அதிகாரமைப்புகள். தங்கள் வாழ்நாளைப் பணயம் வைத்துச் சிறுகச் சிறுகச் சேமித்துவைத்த வீட்டு உபயோகப் பொருட்களையெல்லாம் சாதாரணமாக அடித்து நொறுக்கிவிடுகின்றனர் காவல்துறையினர். இதனை ஆராயி என்கிற வயதான மூதாட்டி எதிர்கொள்வதை இக்கதை விவரிக்கிறது.

மாட்டிற்கு லாடம் கட்டும் தொழிலாளியின் கதை ‘சிதறல்கள்’. இயந்திரமயமாக்கலின் விளைவினால் வண்டியிழுக்கும் மாட்டின் பயன்பாடு குறைந்துவிட்டதனையும் அதன் காரணமாகத் துணைத் தொழிலான லாடம் கட்டுதலும் தேவை இல்லாத ஒன்றாக ஆகிக்கொண்டிருந்த காலத்தில், இத்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை நினைவுகூருவதோடு, வழக்கம்போல் அதிகார அமைப்பின் கொடுமை எவ்வாறு இம்மக்களின் வாழ்வைச் சிதறடிக்கிறது என்பதனையும் எடுத்துக்காட்டுகிறது இக்கதை.

‘இருள் தீ’ = இருளர் சங்கத்தைக் கண்டிக்க நினைக்கும் காவல்துறை. அடிப்படை வசதிகளைப் பெறுவதற்கு ஒரு சங்கம் தேவையென்றுணர்ந்து இருளர் சங்கம் தொடங்கியபோது, அதில் அஞ்சலை தலைவியாகப் பொறுப்பேற்றதைத் தாங்கிக்கொள்ளாத அதிகார வர்க்கம், அவளைக் காவல்துறை மூலம் சித்திரவதை செய்தபோதிலும், எனக்குப் பின்னால் என் சங்கத்தார் இருக்கின்றனர் என்று நெருக்கடியிலும் அவள் நம்பிக்கையாகப் பேசுவது ‘இருள் தீ’யாகச் சொல்லப்படுகிறது. இத்தொகுப்பின் தலைப்புக் கதையான ‘நந்தனார் தெரு’, பலவகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. இதிலும் அதிகார வர்க்கம் அடிநிலைச் சமூகத்தை அப்படியே வைத்திருப்பதற்காக என்னென்ன செய்கிறது என்பது விளக்கப்படுகிறது. வளமோ சுகாதாரமோ, பிற வசதி வாய்ப்புகளோ இல்லாத பகுதியாக இருப்பதனைக் காட்டுகிறது.

உறவுகளின் மேன்மை

பொதுவாக, ஒருவர்மீது ஒருவர் கொண்டிருக்கும் அன்பினால் சகஜமாக மக்கள் உறவாடுவதனை அனைத்துக் கதைகளிலும் வாசிக்க முடிகிறது. ‘பரஸ்பர உறவு முறை’ என்கிற கதையில் தேவகி, மாயாண்டி ஆகியோர்க்கிடையிலான உறவினைச் சொல்ல முடியும். பறையிசைக் கலைஞனான மாயாண்டியும் தேவகியும் கணவன் மனைவியாக வாழ்க்கையைத் தொடங்கினாலும் தொழில் நிமித்தமாக நேரங்கெட்ட நேரத்தில் போவதும் வருவதும் தேவகிக்கு அவன் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதனால் அடிக்கடி சண்டை வரத் தொடங்கியது. இப்படியாக ஒருநாள் சண்டையிட்டுப் போன மாயாண்டி, திரும்ப வரவில்லை. எட்டாண்டுகளுக்குப் பிறகு அவ்வூருக்குச் சாப்பறை வாசிக்க வந்தபோது நடந்த நிகழ்வு கதையாக்கப்பட்டுள்ளது. சாவு என்றவுடன் அச்சாவீட்டைவிட்டுச் சிறிதும் நகரவில்லை தேவகி. பறையடிக்க மாயாண்டி வரப்போகிறான் என்பதனை முன்னுணர்ந்த அவள், அன்று வேலைக்கும் போகவில்லை. சப்பச்சி அவளை அனுப்ப ஏதேதோ பேசினாலும் அவ்விடத்தைவிட்டு நகரவில்லை. கடைசியாக டீ வாங்க அனுப்பி, சப்பச்சியும் தேவகியும் பகிர்ந்து குடிக்கின்றனர். மாயாண்டி பறையடிப்பதைப் பார்த்தபடி அவன் ஆடுவதையும் ரசித்துக்கொண்டு, பக்கத்தில் வந்து நின்றுகொண்டு அழுகிறாள். இதற்கிடையில் அவர்களுடைய குழந்தையான பொன்னியை “அவனிடம் போ! உங்கொப்பன போய்ப் பார்!” என்று அனுப்புகிறாள்.

“… ஏய் வுட்டாட வுட்டாட கம்பத்துல – மாமா
உட்டுட்டுப் போனயடா தும்பத்துல சகி சந்தைக்குப் போன மச்சான் நமச்சி.
சங்குமணியொண்ணு வாங்கிவாயேன்… ”

இதையெல்லாம் பறையடித்துக்கொண்டே பார்க்கிறான் மாயாண்டி. முடிந்தவுடன் குழந்தை கையில் ஐம்பது ரூபாயைக் கொடுத்துவிட்டுப் போகிறான். அதோடு இதயவேந்தன் கதையை முடிக்கவில்லை. தேவகி படுத்தபடி பரவசப்பட்டும், பழைய நினைவுகளை மனதில் ஓடவிட்டு அழுதுகொண்டும் தூங்கிப்போனாள் என்று முடிக்கிறார். இதனை, பிரிந்த மனதின் பிரியா இழையில் ஒழுகும் இசையும் இசைவின்மையும் என்று சொல்லத் தோன்றுகிறது. தேவகியும் மாயாண்டியும் பிரிந்து ஆளுக்கொரு திசையிலிருந்தாலும் வெறுப்பில்லாமல் பரஸ்பர இழையோடுவதை இக்கதையில் காண முடிகிறது. இக் கலை மனம் எல்லோருக்குமான பேரிலக்கியத்தைப் புனைவதற்குரியது.

‘சாமிக்கண்ணு என்ற ஒரு மனிதன்’ – மலமள்ளும் வேலையைத் துல்லியமாகவும் சுறுசுறுப்பாகவும் செய்து வாழ்க்கையைத் தொலைக்கும் சாமிக்கண்ணு என்று இக்கதையை மதிப்பிட முடிகிறது. உழைப்பு, நேர்மை இவற்றோடு பொதுமக்களின் சிக்கல்களுக்கும் தீர்வு சொல்லும் சாமிக்கண்ணு அந்திமகாலத்தில் தன் பிள்ளைகளாலும் கைவிடப்பட்டவராக மடிந்துபோவது எடுத்துரைக்கப்படுகிறது. என்றாலும் தனது கொழுந்தியாவின் மகனான சின்னத்துரையின் அணுசரணை ஆறுதலாக இருந்தது என்பதை இக்கதை சுட்டுகிறது. வட்டிக்கு விட்டுச் சேரி மக்களைக் கடன்காரர்களாகவும் குடிகாரர்களாகவும் மாற்றிய அஞ்சலை, சாமிக்கண்ணுவையும் தப்பவிடவில்லை. சாமிக்கண்ணு இறந்தபோது அவளுக்குள்ளும் ஈரம் இருந்ததனால்தான் நகராட்சி அலுவலகத்தில் வேலைபார்க்கும் சின்னத்துரைக்குச் செய்தியை அழுதபடி சொல்லிவிட்டுப் போகிறாள். சின்னத்துரைக்கும் அவனது பெரியப்பா சாமிக்கண்ணுக்கும் இருந்த பேரன்பை விவரிக்கிறது இக்கதை.

‘கரிசோறு’ – சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட அருந்ததியப் பெண்ணான சந்திராவை மையமாக வைத்துச் சொல்லப்படுகிற கதை.

“ஏண்டி விஷயம் தெரீமா, சந்திரா குடுத்தனக்காரன இழுத்துனு வந்துட்டாளாமே.”

“இழுத்துன்னு ஒண்ணும் வர்ல, கோயில்ல தாலி கட்டிக்கிட்டாடீ.”

என்று பேசுவதிலிருந்து திருமணமான ஆணோடு உறவை எற்படுத்திக்கொண்டவளாகச் சந்திரா இருக்கிறாள் என்பதுவும் தெரிகிறது. இப்படியான சந்தர்ப்ப சூழ்நிலைகளால் எற்படும் உறவுகள் குறித்து ஊரார், அதிலும் குறிப்பாகப் பெண்கள் பேசிக்கொள்வது அலாதிதான். பின்வரும் உரையாடலைக் கவனித்தாலே இது புரியும்.

“சரி நம்மள மாதிரி அவென் சாப்டுவானா”

“இன்னாது ”

“அதாண்டி கறி ?”

“இன்னா கறி ”

“மாட்டுக்கறி, பன்னிக்கறி… ”

“பாத்தா படிச்சவன் மாதிரி தெரீறான்”

“அட எவனாயிருந்தா இன்னாடி… கறிய சாப்டு, வொடம்பு நோவ சென்மத்த செருப்பால அடிச்ச மாதிரி வேல செஞ்சா

 தான்டி அறிவு கிறிவெல்லாம் கௌம்பும்…”

எவையெல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களின் பண்பாடாகவும் வாழ்க்கையாகவும் சுமத்தப்பட்டுள்ளதோ அவையெல்லாம் ஆதிக்கச் சாதியினரால் தீட்டாகப் பழிக்கப்பட்டுள்ளது என்கிற புரிதலை ஆதிக்கச் சாதியினரும் பெற்றுக்கொண்டு மண உறவின் மூலம் மனித நேசத்தை வளர்க்க வேண்டும் என்பதனை இக்கதை அறிவுறுத்துகிறது.

இதயவேந்தனின் கதை உலகம் பெரும்பாலும் மலமள்ளும் தொழிலாளர்களின் சிக்கல்கள், பேரிடர்கள் இவற்றைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. கையுறை, காலுறை, வார்க்கரண்டி, வார்க்குச்சி, மூக்குக் கவசம் போன்ற அடிப்படை தொழில்முறைக் கருவிகள் இல்லாமலேயே மலக்குழியில் இறங்கிச் சுத்தம் செய்து, டி.பி. வந்த பின் தொழிலைவிட்டு வாழ்வைத் தொலைத்து ஓய்வூதியத்திற்கு அலைவது ஆகியவை இதயவேந்தனின் எடுத்துரைப்புகளாக உள்ளன. மலம் அள்ளுவது, பறையடிப்பது, பிணங்களைப் புதைப்பது, தெருக்களைக் கூட்டுவது போன்ற தொழில்கள் இத்தொகுப்பில் கதையாக்கப்பட்டுள்ளன. மூன்றாண்டுகளுக்கு முன் பாக்கியம் சங்கர் எழுதிய ‘நான்காம் சுவர்’ வாசிக்கக் கிடைத்தது. அதிலும் மேற்கண்ட மனிதர்களின் நுட்பமான தகவல்கள் இருக்கின்றன. அனைத்துத் துறைகளிலும் நவீனம் வந்துவிட்டபோதிலும் மனிதக் கழிவை மனிதர்களே அகற்றும் இழிப்போக்குத் தொடர்ந்தவண்ணம் உள்ளது. மலக்குழியிலிறங்கி விஷவாயு தாக்கப்பெற்றுப் பல மரணங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. மலமள்ளும் தொழிலாளி மலக்குழிக்குள் இறங்குவதற்கு முன்னால் அக்குழியில் விஷக் காற்று எந்த அளவிற்கு இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதன்பின் இறங்க வேண்டும் என்கிற நுட்பமான தகவலை ‘நான்காம் சுவர்’ தருகிறது. மாவிலையைக் கயிற்றில் கட்டி அதனைக் குழிக்குள் விட்டால் அது முழுமையாகக் கருகியிருந்தால் அக்குழிக்குள் உடனடியாக மனிதரைக் கொல்லும் விஷக்காற்று நிறைந்துள்ளது என்று பொருள் என்கிற தகவலை வாசித்து, விஞ்ஞானம் உதவாத அவர்களுடைய அனுபவ ஞானத்தை வியந்தேன்.

சுமார் ஏழு மாதங்களுக்கு முன்னால் வந்த ‘விட்னஸ்’ திரைப்படமும் மலமள்ளும் தொழிலாளர்களின் சிக்கல்களை எடுத்துரைக்கிறது. இது இதயவேந்தன் கதைகளின் காட்சிப் படிமமாகத் தெரிகிறது.

மங்கல்யான், சந்தரயான் என்று ஒன்றிய அரசும், நிலவை ஆராய செயற்கைக் கோள்களை அனுப்பிக்கொண்டிருக்கிறது. என்றாலும் மனித மலத்தை மனிதனே அள்ளும் கொடுமைக்கு ஒரு தீர்வையும் நடைமுறைக்குக் கொண்டுவரவில்லை. விஷவாயு மரணங்கள் குறித்துப் பாடம் நாராயணன் வழக்காடினார். மலமள்ளும் தொழிலாளர்களை அரசாங்கம் கண்டுகொள்வதில்லை. டிஜிட்டல் இந்தியா என்கிற முழக்கம் ஊடகங்களில் பரப்பப்பட்டுவருகிறது. மலமள்ளுவதை இயந்திரமயமாக்காமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது அரசாங்கம். இதனைக் கண்டித்து கவிஞர் சுகிர்தராணி உள்ளிட்டோர் எழுதியும் வருகின்றனர். மலம் அள்ளுவதற்காகத் தனித்துவமான ரோபோவை வடிவமைத்துள்ளார் கெனித்ரா. ஆனாலும் இவையெதையும் அரசாங்கம் கண்டுகொள்வதில்லை.

இந்தியத் துணைக் கண்டம் சாதிய சிறப்புத் தன்மை வாய்ந்தது. இது பிரிவினையால் கட்டப்பட்டுள்ளது. ஆதிக்கச் சாதிகளுக்கும் பட்டியல் சாதிகளுக்கும் தீண்டாமை இருப்பதைப் போல ஆதிக்கச் சாதிகளுக்குள்ளேயும் பட்டியல் சாதிகளுக்குள்ளேயும் தீண்டாமை இருக்கிறது என்கிற நடப்பையறிந்து, ஜனநாயகம் என்கிற நவீனக் கோட்பாட்டின் மூலம் இத்தகைய உளவியலை மாற்றியமைக்க முடியும் என்று அண்ணல் அம்பேத்கர் ஜனநாயகத்தை முன்மொழிந்தார். அது இன்னும் பொதுச் சமூக உளவியலாகவும் நடத்தை முறையாகவும் மாறவில்லை. அவ்வாறு மாற வேண்டும் என்று விழிப்போடு எழுதிய சொற்ப எழுத்தாளர்களுள் இதயவேந்தனுக்குத் தனியிடம் உண்டு. பிற தலித் எழுத்தாளர்களைவிட இதயவேந்தன் ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டு கதை செய்தவர் என்பதனை ஒத்துக்கொள்ள வேண்டும். மலமள்ளும் தொழிலாளர்கள் குறித்து அவர் மிகுதியாகக் கதை செய்வதற்குக் காரணம், அவர்கள் கீழினும் கீழானவர்களாக நடத்தப்படுகின்றனர் என்பதே.

அருந்ததியர், பறையர், தேவேந்திரர் என்பதோடு மட்டுமல்லாமல் பழங்குடிகள், பிற ஆதிக்கச் சாதிகள் யாராயினும் அவர்களிடம் ஜனநாயகப் பண்பு சிறிது இருந்தாலும் அதனைப் போற்றுபவராகக் கதைசெய்கிறார். இதுதான் இதயவேந்தன் எழுத்துலகின் ஊற்று. இதுகுறித்து அவரே இரண்டாம் சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் சொல்லியிருக்கிறார்.

“‘நந்தனார் தெரு’ சிறுகதைத் தொகுப்பிற்குப் பிறகு, எனது இரண்டாவது தொகுதி இது. எத்தனை கதைகளை எழுதினாலும் சிறந்த கதைகளை எழுதிவிட்டோமா என்கிற கேள்வி எழுகிறது. ஒவ்வொரு முறையும் இதைவிட சிறந்த கதைகளை எழுத வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் மேலும் மேலும் வலுக்கிறது.

நம்மைச் சுற்றியுள்ள சமூக அவலத்திற்கு எதிராகப் புதிய சனநாயகப் பண்பாட்டுச் சூழல் நோக்கி எனது எழுத்துகள் தொடர்ந்துகொண்டிருக்கும்.”

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger