உடலில் ஒளித்துவைத்திருந்த
நிர்வாணத்தைத் திறந்து காண்பித்தேன்
சூரிய ஒளியைப் பிளக்கும்
கத்தியெனக் கண்ணைப் பிளக்கிறது
பெண்ணுடலைத் திறந்து பார்க்கும் விரல்கள்
சுத்தியலை எடுக்கும்போது
காமம் நசுங்குகிறது நகங்கள் பிய்கின்றன
இதிகாசத்தில் எந்த ஆண்மகனும் சுயநினைவோடில்லை
கைவிடப்பட்ட கடவுள்களோ கண்களைப் பொத்தியலைகின்றனர்
பெண்ணுடலைத் தனியே சந்திக்கும் வல்லமை
இங்கு எவருக்குமில்லை.
♦
உடலிலலையும் வனப்புலியின் அசைவைத்தான்
இங்கு எழுதிக்கொண்டிருக்கிறேன்
நகங்களிலொழுகும் நிணத்தைத்தான்
இங்கு எழுதிக்கொண்டிருக்கிறேன்
வாலசைவில் காட்டைக் கடக்கும் பாதங்களைத்தான்
இங்கு எழுதிக்கொண்டிருக்கிறேன்
புலி நிர்வாணமாக அலையும்போது
செம்மஞ்சள் கோடுகளசையக்
கவிதையொன்றைப் புலி எழுதுவதைத்தான்
இங்கு எழுதிக்கொண்டிருக்கிறேன்
மூச்சிறைப்பில் காடு வான் நோக்கி வாய் திறப்பதைத்தான்
இங்கு எழுதிக்கொண்டே இருக்கிறேன்
நிர்வாணமாக எழுதும்போது
அம்முவாய் இருக்கிறேன்
கருப்பையில் புலி சுருண்டு உறங்குகிறது
வாலென மிதக்கிறது தொப்புள்கொடி
♦
போதையில் ஒளவை வீசிய கள்குடுவை
என்னிடம் இருக்கிறது நெல்லிக்கனியும்
காரைக்காலம்மையின் வளர்ப்புப் பேய்களைப்
பெற்றவளும் யாமே
கரைந்து முடித்துக் கண்மூடித்துயிலும்
நச்செள்ளையின் காக்கையைத்தான்
வளர்த்தும் வருகிறேன்
சங்கெரியும் வெளிச்சத்தில்
என்னை அம்மணமாக்கிப் பார்த்தேன்
காளியின் தழல் நாவில் ததும்பிக் குதித்த குருதிச்சொட்டு
முலையில் விழுந்து நாபியில் வழிந்து யோனியை நனைக்கிறது
சொல்ல மறந்துவிட்டேன்
உடல்சுழியென நானழைக்கும் தொப்புளை மறைக்கும்
மேகலையுமில்லை
கன்னங்கால் கருப்பை ஒளிக்கும் சிலம்புமில்லை
இருப்பதெல்லாம் மேலே சொன்னவைதாம்
♦
உடலே துவாரமாய் இருக்கிறது
கருங்குழியொன்று விண்ணில் திறக்கிறது
தொலைத்த இடத்தில் ஆண் தேடியதே இல்லை
அஞ்ஞானத்தின் பௌதீகம் ஆணுடல்தான்
பெண் கண்டுபிடிக்கும்போது
ஆணின் அச்சம் வாயை அகலத் திறக்கிறது
யோனிச்சுழியிலென் மூன்றாவது கண்ணை
இப்படித்தான் திறந்து பார்த்தேன்