காதலின் நித்திய பூஜ்ஜியங்கள்
தோல்வியுற்ற காதல்
எல்லா வரவேற்பறைகளிலும் வைக்கப்
பொருத்தமான
ஓர் அலங்காரப் பொருள்.
அதன் தொன்மையும் சிதில வடிவும்
காதலின் வரலாற்றைத் தொடங்கிவைத்த
முதல் குரங்கின் கழுத்தில்
முடிச்சிட்டு அணிவிக்கப் பொருத்தமானது.
தோல்வியுற்ற காதல்
அர்த்தமற்று நீரில் வீசிக்கொண்டிருப்பதற்கான
வெதுவெதுப்பான கூழாங்கல்.
நீரில் அவை மூழ்கி
இடைவிடாது வரைகின்றன
காதலின் நித்திய பூஜ்ஜியங்களை.
தோல்வியுற்ற காதல்
சற்று நெடி கூடிய வாசனை திரவியம்.
யாரும் விரும்புவதில்லை அதைப் பூசிக்கொள்ள
ஆனாலும் அது
மெல்ல மெல்ல
தீர்ந்துகொண்டிருக்கிறது
இரகசியமாக.
தோல்வியுற்ற காதல்
முடிவுறாத
ஒரு கவிதையின் தொடக்க அட்சரம்
மற்றும் இறுதிச் சொல்.
உன்னுடனான இரவுகளில்
அது நாடகத் திரைச்சீலை
நினைவு என்பது
கசங்கிய படுக்கை விரிப்பு
அது உன் இன்மையால்
கொந்தளிக்கிறது கடல் போல
அப்பெரு அலைகளில் வளர்கிறது
காதலின் உவர்ப்பு
அதன் சுழிவுகளை நீவுகிறேன்
அமைதியற்ற வளர்ப்பு பிராணியைச்
சாந்தப்படுத்துவது போல.
நீ இல்லாத படுக்கை விரிப்பின்
ஒழுங்கும் வெண்மையும்
துயர்ப்பனி வீசும் நெடுநீளப் பாலை.
உன் மடியுறக்கத்தின்
கனவாழத்தில் வாழும் தாவரங்களின்
வண்ணமெடுத்து வந்து
தீட்டுவேன் படுக்கை விரிப்பில்
உன் வருகைக்கான கோலங்களை.
Illustration: Rose Jaffe
நானுன்னைக் கொல்ல விரும்புகிறேன்
நானுன் சொற்களில்
நம்பிக்கையான எழுத்துகளை மட்டும்
சேகரித்துக் கோக்கிறேன்.
நீயுன் சிகரெட் கங்குகளால்
பொசுங்குப் புள்ளியிட்டு
அதன் அர்த்தங்களைக் கலைத்து விளையாடுகிறாய்.
என் அகந்தையைக் கிள்ளி
ஒரு இலையைப் போல
உன் கோப்பையில் மிதக்கவிட்டு அருந்துகிறாய்.
நம் நாடகத்தில் இனி
சுவாரஸ்யமற்ற காட்சிகள் வேண்டாம்
நானுன்னைக் கொல்ல விரும்புகிறேன்
என் மடியில், என் கனவில், என் ஆழத்தில்
விஷமேறிய ஒரு காதல் கவிதையை
உனக்கெனவே
என் வலியின் வண்ணத்தில் எழுதுகிறேன்.
யுத்தக்களத்தில்
பிள்ளையின் தலை தேடித் திரியும் தாயெனக்
காமம் தோய்ந்தவுன் உரையாடல்களில்
ஒரு சிறு துளி நேசம் தேடிக் களைத்துப்போகிறேன்.
உன் வசீகரப் பொய்களின் பள்ளத்தாக்கில்
மீண்டும் மீண்டும் வீழ்த்தப்படுகிறேன்
மிக விருப்பத்தோடேதான்
உன் தாகத்துக்குக் கண்ணீர் தருகிறேன்.
நீ பொய்யன்
உன் காதல் யாருமே கேட்டிறாத கட்டுக்கதைகள்
நீ பசிக்காக மட்டும் எனைத் தேடிவரும் பூனை
ஆயினும்,
எல்லாம் அறிந்தும்
நேற்றைய நாளைய நம் முத்தங்களின் நினைவுகளை
நெஞ்சருகே அணைத்துக்கொண்டு
ஒரு பைத்தியம்போல
இன்றின் உச்சியிலிருந்து பாய்கிறேன்.
பெருமூச்சு விடும் கிழட்டுக்காலம்
அந்த விலங்கியல் தோட்டத்தில் இன்று
வழமைக்கு அதிகமாகப் பூத்திருக்கின்றன மலர்கள்
ஆர்கிட் பூக்களோடு விளையாடும்
அந்தச் சின்னஞ் சிறு குரங்கு
அவளுக்குத் தன் தேசத்தை, ஊரை,
வீட்டை நினைவூட்டுகிறது.
கைக்குழந்தையை நீங்கி
பிழைப்புக்காக அவள் இந்தத் தீவுக்கு வந்து
மூன்று அமாவாசைகள் கடந்துவிட்டன.
ஊட்டாத மார்புகளை
பிரிவின் சின்னமாய் பெரும் பாறைகளென
வலிக்கச் சுமந்துகொண்டிருப்பவள்,
பறவைகளுக்கும் விலங்குகளுக்கும்
வாஞ்சையோடு உணவூட்டுவதைப்
பணியாகச் செய்கிறாள்.
மலர் விளையாட்டுகளில் சலித்து
கிளைகள் தாவி ஏறி
அம்மைக் குரங்கின் மார்பைப் பற்றிக்கொண்டு
தாய்மையை அருந்தி மயங்குகிறது மந்தி,
காற்றாலாடித் தாலாட்டுகிறது அப்பெருவிருட்சம்.
ஆனந்தம் அவள் நெஞ்சை இசைக்கிறது,
ஆயிரமடி ஆழத்திலிருந்து
ஊற்றெடுக்கும் நீரைப்போல
உக்கிரமாய்ச் சுரக்கின்றன அவளின் துயர்முலைகள்.
பெருமூச்சு விடும் கிழட்டுக்காலம்
தன் வறண்ட நாவை ஈரப்படுத்திக்கொள்கிறது அதில்.
கடலுக்கப்பால்
ஆவேசமாய்ப் பெருவிரலைச் சப்புகிறது
தூளிச் சிசுவின் மலர்வாய்.